( கடல் கிணறு – ( சிறுகதைகள் ) ரவிக்குமார். மணற்கேணி பதிப்பகம். )
தமிழில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மற்ற எல்லா வடிவங்களையும் விட சிறந்த சாதனைகள் நிகழ்ந்திருப்பது சிறுகதைகளில் தான். முக்கிய எழுத்தாளர்கள் அத்தனை பேரிடமும் மிகச் சிறந்த நான்கு ஐந்து நிறுகதைகளையாவது நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். தத்துவ ரீதியிலான உரையாடல்ள் அ-புனைவிற்கு இணையாக சிறுகதைகளிலும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. எண்பதுகளுக்குப்பின் தமிழில் பரவலான சிற்றிதழ் இயக்கங்கள் மிகச் சிறந்த பங்களிப்பை செய்துள்ளதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். புதிய வடிவங்களை முயன்று பார்க்கும் எழுத்தாளர்களுக்கான தளமென எதுவும் இல்லாமல் இருந்ததை மாற்றியவை இத்தகைய சிற்றிதழ்கள்தான்.
இன்றைக்கு வணிகப் பத்திரிக்கைக்கு வந்திருக்கும் பெரும்பாலான எழுத்தாளர்களும் சிற்றிதழ் தளத்திலிருந்து எழுத வந்தவர்கள்தான். இதன் தொடர்ச்சி நமது மரபான கதை சொல்லல் முறையிலிருந்து உண்மையில் வெகுதூரம் பயணப்பட்டு இரண்டாயிரத்தின் ஆரம்ப வருடங்கள் வரை சிறந்த கதைகளை ஏராளமாக நமக்குத் தந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகான வருடங்களில் தமிழில் சிறுகதைகள் மிகப்பெரிய அளவில் தேக்கம் அடைந்து இருக்கின்றன... பெரும்பாலான சிறுகதைகள் ஒரே மாதிரியான வாழ்வை பேசுகிறவைகளாகத்தான் இருக்கின்றன. இரண்டு மூன்று வகைமைகளுக்குள் இக்கதைகளை நம்மால் அடக்கிப் பார்த்துவிட முடியும். சமயங்களில் ஒருவித சுயதிருப்திக்காக மட்டுமே இக்கதைகள் எழுதப்படுகின்றனவொ என யோசிக்கும் படியாகவே பெரும்பாலான கதைகள் இருக்கின்றன.
கடந்த சில வருடங்களில் வந்த சிறுகதைத் தொகுப்புகளில் சிறந்தவை என மிகச் சில நூல்களைக் கூட சொல்ல முடியவில்லை. ஒரு சில நல்ல கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் கூட அவை காத்திரமானவையாய் இல்ல. கதைகளைப் பற்றி பேசுவதும் அபிப்பிராயம் சொல்வதும் அதிகமாகியிருக்கிறதே தவிர கதைகள் அல்ல...
2012 மார்ச்சில் தேனியில் கூட்டம் நடத்துவதற்கு முன்பாக ஒரு சிறுகதை நூல் வரிசை வேண்டும் என தொடர்ச்சியாக வாசிக்க நேர்ந்த போது பெரும் சோர்வே மிஞ்சியது... மிகச் சில தொகுப்புகள் மட்டுமே எடுத்துப் பேச பொருட்படுத்தக் கூடியவையாய் இருந்தன.... மிகவும் அடர்த்தியோடு எழுதப்படும் சிறுகதைகளைத் தேடிச் செல்லும் வாசகர்கள் குறைவாய் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் ஜனரஞசமாக எழுதப்படும் கதைகளுக்கான புதிய வாசகர்களை அனேகமாய்ப் பார்க்க முடிகிறது. ஜனரஞ்சக எழுத்தை நான் மறுக்கிறவன் இல்லை, ஆனால் அவை பழைய தன்மை கொண்டவையாய் இருப்பதால் வாசகன் ஆரம்ப கட்ட வாசகனாகவே எப்போதும் இருக்கக் கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
2000 த்தின் ஆரம்பங்களிலும் அதற்குப் பிறகான சில வருடங்கள் வரையிலும் சிறுகதைகளில் இருந்த வீர்யம் ஒட்டுமொத்தமாக சிதைந்து போயிருப்பது வருந்தத்தக்கதே... சிறுகதைகளை வாசிப்பதிலேயே ஒரு சோர்வு ஏற்ப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. அ-புனைவையும் நாவலையும் வாசிக்க வாசகர்கள் கொள்ளும் ஆர்வம் கணிசமான அளவில் உயர்ந்திருப்பது மகிழ்ச்சியே என்றாலும் சிறுகதைகளுக்கான தளம் என்று ஒன்று இல்லாமல் போவது வருந்தத் தக்கது. வாசிக்கும் மிகச் சில ஆட்களும் மேலோட்டமான கதைகளைத் தேர்வு செய்கிற போது இதழ்களும் பதிப்பகங்களும் அப்படியான கதைகளை பிரசுரிக்கவே விரும்புகின்றன.
தமிழில் நமது பெரும் சாதனைகள் எல்லாம் சிறுகதைகளில்தான் நிகழ்ந்திருக்கின்றன. நமது மகத்தான எழுத்தாளர்கள் சிறுகதைகளில் இருந்து வந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கி.ரா, மெளனி, பிரமிள், வண்ணதாசன், வண்ணநிலவன், கோணங்கி, எஸ்.ரா, தஞ்சை பிரகாஷ், நாஞ்சில் நாடன், ராஜேந்திரச் சோழன் என மிக நீண்ட வரிசை அது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுகதைகளில் நிகழ்ந்திருக்கிற மாற்றம் முக்கியமானதொன்று. தொடர்ந்து சிறுகதைளை வாசிக்கிறவன் என்பதன் அடிப்படையில் தமிழின் மொழி ரீதியான அல்லது அரசியல் சார்ந்த எழுத்துக்கள் பெரும்பாலும் சிறுகதைகளில் நிகழ்ந்தவைதான். மற்ற இந்திய மொழிகள் நாவல்களைப் பிரதானமாய்க் கொண்டாடியதும் தமிழில் சிறுகதைகளுக்கான இடம் அப்படி நிகழ்ந்ததும் கொஞ்சம் ஆச்சர்யமான முரண். அதனாலேயே மகத்தான இந்திய நாவல்களின் வரிசையில் தமிழ் நாவல்களுக்கான இடம் பெரிய அளவில் இருப்பதில்லை. ஆனால் மகத்தான இந்திய சிறுகதைகளுக்கான ஒரு வரிசையை யாராவது உருவாக்கினால் அதன் பெரும்பாலான சாதனைகள் நம்முடையதாகத்தான் இருக்கும்.
இந்தத் தேக்க நிலை உருவானதற்கான வெவ்வேறான காரணங்களை
யோசிக்கையில் சிறுகதைகளின் மீதான விருப்பமின்மை உருவானதற்கு யார் காரணம் என்பது கொஞ்சம் விளங்கிக் கொள்ள முடியாததாகத்தான் இருக்கிறது. பெரும் பங்கு எழுத்தாளனைச் சார்ந்ததுதான். வாசகனைச் சோர்வடையச் செய்ததில் அவர்களுக்க்கு மாபெரும் பங்குண்டு. மிக முக்கியமாக நகர்மயமாதலும் இணையமும் அதிகமான கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை எல்லை ரொம்பவுமே குறுகிப் போனதால் அவர்கள் எழுதுகிற கதைகளின் எல்லையும் சுருங்கிப் போய்விட்டது. ஜெயமோகன் ஒரு முறை உரையாடும் போது சொன்னதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்... “அலைக்கழிக்கப்பட்ட பால்யம் என்பதோ, அல்லது மகத்தான லட்சியங்களோ எதுவும் இவர்களுக்கு எல்லை.
பெரும்பாலும் சுயதிருப்திக்காகவே எழுதுகிறார்கள்.” ஒருவகையில் இதில் உண்மையிருந்தாலும் சுயதிருப்திக்காக மட்டுமே ஒருவன் எழுத்தாளனாய் இருக்க மாட்டான் என நம்புகிறேன். இரண்டாவதாக தமிழில் நிறைந்து கிடக்கும் குழுவாதம். இது எல்லா மொழிகளிலும் இருப்பதுதான், ஆனால் அங்கே சரியான படைப்புகள் வரும்போது அவை மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுபவைகளாகவும் வெவ்வேறு மொழிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறவைகளாகவும் இருக்கின்றன. ஆனால் தமிழில் தன் கதைகள் குறித்து எழுத்தாளன் லேகிய வியாபாரி போல் தானே பேசிக்கொள்ளும் படியாகத்தான் இருக்கிறது. சரியான தொகுப்புகளை ஒருவரும் அடையாளப்படுத்துவதற்கில்லை. சிற்றிதழ்களையும், வணிக இதழ்களையும் ஒரு சில ஆட்கள் ஆக்கிரமித்திருப்பதால் அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களின் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள். பெரிய அளவில் கதைகளுக்கான வீழ்ச்சிக்கு இதனை ஒரு முக்கியமான காரணமாக சொல்ல முடியும். ஏனெனில் இன்றைய தேதியில் ஹிந்து தமிழ் பதிப்பு வரை இதுதான் தொடர்கிறது. சுமாரான கதைகள் கொண்டாடப்படுவதன் மூலம் தீவிர எழுத்துக்கான இடம் மறுக்கப்படுவது கடந்த சில வருடங்களில் தொடர்ந்து நடந்தபடியேதான் இருக்கின்றன. இங்கே சக எழுத்தாளனுக்கு சாராயம் வாங்கிக் கொடுக்காத எழுத்தாளனின் புத்தகம் ஒருநாளும் விமர்சனத்திற்கோ உரையாடலுக்கோ எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அல்லது பத்திரிக்கை சேனல்களில் வேலை செய்கிறவர்களாய் இருக்க வேண்டும். இது ஒருவிதமான எக்ஸ்சேஞ்ச் சிஸ்டமாகத்தான் இருக்கிறது. உன்னை நானும் என்னை நீயும் மாறி மாறி எழுத்தாளன் எனக் கொண்டாடிக் கொள்வோம் என்றுதான் இருக்கிறார்கள்.
மேலும் எழுத வருகிறவன் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்கிற ரகசியத்தை இங்கு ஒவ்வொருவரும் அந்தரங்கமாக தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஏதாவதொரு சாதிய அடையாளம் இருக்கும் பட்சத்தில் அந்த எழுத்தாளன் மிக விரைவில் கவனிக்கப்பட்டவனாகிறேன். அவன் சார்ந்த ஆட்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாங்கிப் பிடிக்கிறார்கள். . இதைக் குற்றச்சாட்டாக எடுத்துக் கொண்டாலுமே கூட இது ஒருவிதமான கசப்பான உண்மை.
நிர்ப்பந்தங்களுக்கு அப்பால் வாழ்வை அதன் மங்கலான பிம்பங்களில் இருந்து பதிவு செய்வதாய் எழுதப்பட்டிருக்கும் ஒன்பது கதைகளைக் கொண்டிருக்கும் ரவிக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கடல் கிணறு’ இந்தக் காலகட்டத்தில் வாசிப்பதோடு விவாதிக்கப்படவும் வேண்டிய புத்தகம். தலித் அரசியலைப் பிரதானப்படுத்துவதாய் பாவனை செய்யும் எழுத்துக்களுக்கு மத்தியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக அதன் அரசியலை வலுவாக உரத்துப் பேசியதில் ரவிக்குமாரின் பங்கு தமிழ்ச் சூழலில் முக்கியமானது. நவீனத்துவம் பரவலாக்கம் பெற்ற காலகட்டத்தில் அதனைக் குறித்து காத்திரமான உரையாடல்களை ‘நிறப்பிரிகை’ இதழின் வழியாய் கொண்டு வந்தவர்களில் இவரும் முக்கியமான ஒருவர்.
மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் முக்கியமான ஆக்கங்களைத் தந்துள்ள ரவிக்குமாரின் இந்த கதைகள் பெரும்பாலும் குடும்பத்திற்கு வெளியே இயங்குவதாகத்தான் இருக்கின்றன. கதைகளின் வழியாய் வாழ்வின் புரிந்துகொள்ள முடியாத தருணங்களை கேள்விக்குட்படுத்தும் தர்க்கங்களை உருவாக்குவதோடு மரபாக சொல்லப்பட்ட கதை மொழியிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்வதாகவும் இருக்கின்றன. இந்த மாறுபட்ட கதைமொழியே புதிய தளத்திலான கதைகளை சாத்தியப்படுத்துவதாகவும் இருக்கின்றன. முழுக்க முழுக்க கதை சொல்லியின் பார்வையிலேயே கதைகள் சொல்லப்பட்டிருப்பதால் உரையாடல்கள் குறைந்து விவரணைகளின் வழியாகவே கதைகள் பயணிக்கின்றன.
முதல் கதையான தம்பி தவிர்க்க முடியாத சின்னதொரு துரோகத்தை சொல்கின்ற கதையாக இருந்தாலும் அந்த துரோகத்திற்கு ஏமாற்றப்பட்டவனை விடவும் ஏமாற்றியவனின் மேல் கரிசனம் கொள்ள வைக்கும் ஒரு வினோத தன்மை இருக்கிறது. அந்தக் கதையின் துவக்கமும் நிலவியல் சூழலும் ஒரு லத்தீன் அமெரிக்க கதையை வாசிக்கும் மனநிலையை உருவாக்குவதோடு யுவான் ரூல்ஃபோவின் எரியும் சமவெளியை நினைவுபடுத்துகிற ஒரு பயணத்தை உள்ளடக்கியதாய் இருக்கிறது. தமிழ்க் கதைகள் நாடோடித் தனங்களுக்கு வெளியிலேயே பெரும்பாலும் இயங்குகிற சூழலில் இந்தக் கதை இரண்டு நாடோடிகளை மையப்படுத்திய கதை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம்.
காலத்தை முன்னும் பின்னுமாக வைத்து மொழியால் விளையாட்டு காட்டும் அ-காலம் கதை இருப்பு குறித்தான புதிரான சில நம்பிக்கைகளை நமக்கள் உருவாக்கிப்பின் மெல்ல அதை கரைத்துவிடுவதாய் இருக்கிறது. இரண்டு கதாப்பாத்திரங்கள் குறித்த ஒரு தனிதனின் மனவெளிப் பதிவாகவே மொத்த கதையும் நீள்வதில் வாசிக்கும் போதே ஆழமானதொரு தனிமையை நமக்குள் உருவாக்கிவிடுகிறது. திரும்பவே முடியாத கனவு வெளிகளுக்குள் நம்மை இழுத்துக் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்துவிடுவதால் நாமும் காலத்தின் வினோத முடிச்சுகளில் சுழல்கிறவர்களாய் ஆகிவிடுகிறோம். ‘செத்துப் போன சிட்டுக்குருவிகள் ஆகாயத்திலிருந்து மழை பெய்வது போல் கொட்டுகின்றன’ இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த வாக்கியத்தைக் கொண்ட கடல் கிணறு கதை கவனமான வாசிப்பைக் கோரும் கதை. தன்னிடமிருந்து சட்டென விலகிச் செல்லும் தாயின் இருப்பைத் தேடியலையும் ஒருவனின் மனநிலையையும் தற்கொலைக்கு முந்தின கனத்தில் நிகழும் ஆச்சர்யகரமான ஒரு சந்திப்பையும் முடிச்சுகளாக்கி நீளும் கதை எந்த நொடியிலும் நம்மை சிதறடிக்கத் தயாராக இருக்கும் கூர்மையோடு எழுதப்பட்டிருக்கிறது. துருவேறிய இரும்பின் பிசிறுகள் கையில் குத்தும் போது ஏற்படும் வலியைப் போல் ஒரு மெல்லிய வலி இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நமக்குள் எழுந்து அடங்குகிறது.
துர்சொப்பனங்களை ஆசிர்வாதங்களாய் வலிய பெறும் பாதிக்கப்பட்ட மனிதர்களின் பிரச்சனைகளை பதிவு செய்யும் உண்மை அறியும் குழுக்கள் பெரும்பாலும் சாதிப்பவை எதுவும் இல்லை என்பதை நாவைக் கீறி உப்புத் தூவிய அடர்த்தியுடன் சொல்லும் கதை உண்மை அறிதல். நாம் நமக்கு விருப்பமான உண்மைகளை மட்டுமே கேட்கப் பிரியபப்டுகிறோம் என்பது வரலாறு எல்லாக் காலங்களிலும் நமக்கு உணர்த்தியிருக்கும் மகத்தான பாடம். இந்தக் கதை அதை இன்னும் ஆழமாய் நமக்குச் சொல்வதோடு எளிய மனிதர்களின் மீது காட்டப்படும் பாவனையான சமூக அக்கறைகளை முன்னைவிடவும் அதீதமான சந்தேகத்தோடு அணுகக் கற்றுக் கொடுக்கிறது. அதிகாரத்தில் கொல்லப்பட்டவர்களை அவர்களுக்க்குப் பாத்தியப்பட்டவர்கள் சொல்வது கேட்பவர்களுக்குப் பதிவு, நியாயம் வேண்டி பல காலமாய்க் காத்திருப்பவர்களுக்கு? எத்தனையோ பேரிடம் எத்தனையோ முறை கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் எந்தவிதமான கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வதாய் இல்லை.
அதைத் தொடர்ந்து வரும் எட்டாம் துக்கம் கதையும் அதே மாதிரியானதொரு பிரச்சனையையே பிரதானப்படுத்திப் பேசுகிறது. வழக்கொழிந்த போனதாய் வெகுஜனம் நம்பிக்கொண்டிருக்கும் ஜாதி இன்னும் கிராமங்களில் காட்டிக் கொண்டிருக்கும் கோரமுகத்தைச் சொல்லும் போது வெண்மனி சம்பவம் நமக்கு கடந்தகாலம் மட்டுமேயல்ல என்கிற நிஜம் கசப்பான உண்மையென தொந்தரவு செய்கிறது. ஒரு படி நெல் கூலி அதிகமாய்க் கேட்டதற்காக கொடுமைப்படுத்தப்பட்ட மக்களைப் போல் முதலாளிகளை எதிர்த்துப் பேசியதற்காகவே மொத்தக் குடும்பத்தையும் வதை செய்யும் கட்டற்ற அதிகாரத்தைக் கொப்பளிக்கும் முதலாளிகள் ஜனநாயகம் குறித்த நமது பொய்யான நம்பிக்கைகளின் மீது தொடர்ந்து காறி உமிழ்ந்தபடியே இருக்கிறார்கள். எல்லாமும் எப்பொழுதும் அதிகாரங்களில் இருப்பவர்களுக்கானதாய் இருப்பதை இந்திய முழுக்க நிகழும் ஜாதிய வன்முறையும் அதற்கு கிடைக்காத நியாயங்களும் நாம் வாழ்நாள் சாட்சியாய் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
குல்ஃபி உடல் சமயங்களில் உறவுகளின் எல்லா வரையறைகளையும் தாண்டித் திமிறுவதைப் பேசுகின்ற கதை. குல்ஃபி சாப்பிடுவது என்பது எதன் குறியீடு என அந்தக் கதை வாசித்து முடிக்கிற போது நம் எல்லோருக்குமே தெரிய வந்தாலும் அப்படித் தெரிந்து கொள்ள முடிவதில் சகிக்கவியலாத ஒரு குற்றவுணர்ச்சி நமக்குள் படிகிறது. கந்தகத்தின் காட்டமான அடர்த்தியைப்போல் இந்தக் கதை நமக்குள் உருவாக்கும் இருவேறான சந்தேகங்கள் கதையில் வரும் எல்லோரையும் சந்தேகிக்கச் செய்வதோடு வாசிக்கிற நம்மையும் சேர்த்து சந்தேகம் கொள்ள வைக்கிறது. விருப்பங்களின் மீது நிகழும் புறக்கணிப்புகள் எதிர்பாராத கணத்தில் நமக்குள் உருவாக்கி வைத்திருக்கும் எல்லா பிம்பங்களையும் துண்டித்துக் கொள்ள நேர்ந்தால் உறவுகள் குறித்த மரபான எல்லாமும் அப்பொழுது நொறுங்கிப் போகும்படி ஆகிறது. நாம் பேசுகிற எழுதுகிற நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் நமது வாழ்க்கைக்குள் இன்னும் நுழைந்திருக்கவில்லை. நாம் அதனைக் கண்டு அருவெறுப்பு கொள்கிறவர்களாகவோ பிரம்மிக்கிறவர்களாகவோ இருக்கிறோமே ஒழிய தத்துவம் என்பதைத் தாண்டி அதுவொரு விதமான வாழ்க்கை முறை என்பதை ஏற்றுக் கொள்ள தயாராய் இல்லை. நமது மரபிலிருந்து கற்றுக் கொண்ட வாழ்க்க்கை முறை ஒருவகையில் ஆகப்பெரும் பாதுகப்பாய் இருப்பதால் அந்தரங்கமாய் எல்லோரும் அது அப்படியே இருக்கவே விரும்புகிறோம். இதில் யாரும் விதிவிலக்கானவர்கள் இல்லை.
பார்ப்பனியத்தின் அதிகாரங்களை மறைமுகமாக ஆனால் வலுவாக பேசும் ழ இந்தத் தொகுப்பின் தனித்துவமிக்க கதை. ழ வுக்கு மாற்றாக ஷவை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் விதிக்கும் சட்டம் வெறுமனே கற்பனை என்று நினைக்க முடியவில்லை. சமஸ்கிருதத்தை நமது தேசிய மொழியாக்க வேண்டும் என்கிற கோஷம் எதிரொலித்தபடியே இருக்க, கோட்சேவுக்குக் கோவில் கட்டுகிற தீவிரத்துடன் அரசாங்கமே வேலை செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எதுவும் நடக்க சாத்தியம்தான்.
வார்த்தைகள் கதை நமக்கு வேறுவிதமான வாசிப்பனுவத்தைத் தருவதாய் இருக்கிறது. ஏனெனில் நமக்கு கற்பிக்கப்பட்ட எல்லாமும் வார்த்தைகளால் ஆனவையே. கற்பிதங்களுக்கு வெளியே வாழ்வை அணுகிப் பார்க்க முடியாதளவிற்கு சொற்கள் எப்பொழுதும் மனித சமூகத்தை ஆட்கொள்ளும் சக்தி கொண்டதாய் இருக்கிறது. பழக்கப்படுத்தப்பட்ட சொற்கள் ஒரு சமூகத்தை மிக எளிதாக வசியம் செய்யக்கூடியவை. அரசியல் கதை என்பதை பெரும்பாலும் தழுவுதலாகவோ அல்லது பிரதியெடுத்தலாகவோ செய்து கொண்டிருக்கும் சக தமிழ் எழுத்தாளர்களுக்கு மத்தியில் ரவிக்குமாரின் இந்தக் கதை தனித்துத் தெரிவதாய் இருக்கிறது.
சொற்களைக் குறித்து எல்லா எழுத்தாளர்களுக்கும் எழுதுவதற்கு ஏதோவொன்று புதிதாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் ரவிக்குமாரின் இந்தக் கதை வலிந்து திணிக்கப்படும் எதையும் சொல்வதற்குப் பதிலாக சொற்களின் பின்னால் இருக்கும் அரசியலை பகடி செய்கிறது. இதற்கு முன்பு சொற்களைக் கொண்டு எழுதப்பட்டவற்றில் கோணங்கியின் நாற்பத்தி எட்டு கோடி வார்த்தைகளின் மரணம் முக்கியமான ஒன்று. ஆனால் அக்கதை முழுக்க முழுக்க இலக்கிய அரசியலை மட்டுமே பகடி செய்வதாய் இருக்கிறது. வாசிக்க சுவாரஸ்யம் கொண்டதாய் இருந்தாலும் அந்தக் கதையில் சுவாரஸ்யத்தைத் தாண்டி எதுவுமில்லை. ஆனால் ரவிக்குமாரின் கதையில் சொற்களுக்குப் பின்னால் அதைப் பயன்படுத்துகிறவர்களின் அரசியலும் சேர்ந்து பகடி செய்யப்படுவதால் தனித்துவமான ஒன்றாகிவிடுகிறது.
வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாய்ச் சொல்லப்படும் இந்தக் கதைகள் இப்பொழுது வாசிக்கும் போதும் புதிதான ஒரு வாசிப்பனுவத்தைத் தருகின்றவையாய்த்தான் இருக்கின்றன. ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் சமீபமாய் வந்திருக்கும் மாமிசம் என்னும் சிறுகதைத் தொகுப்பையும் கடல் கிணறையும் ஒரே நேரத்தில் தான் வாசித்தேன். அந்தத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மூன்றாம் உலக எழுத்தாளர்களின் கதைகளில் கையாளப்பட்டிருக்கும் அரசியலுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல ரவிக்குமாரின் இந்தக் கதைகள். அரசியல் நிலைப்பாடு என்பது ஒரு எழுத்தாளனுக்கு அவனது உரைகளில் மட்டுமே வெளிப்படுவதல்ல. வாழ்க்கை முறையாகவே மாறிவிடும் போதுதான் அவனது படைப்புகள் காத்திரமானவையாய் வெளிப்படுகின்றன.
மொழியின் நுட்பமான பாதைகளெங்கும் கவனமாய் பயணிக்கும் இந்தத் தொகுப்பின் கதைகள் ஒரு வாசகனுக்குள் ஏராளமான கேள்விகளை எழுப்புவதோடு அங்கதம் என்பது வெறுமனே வாசிக்கையில் சிரிக்கச் செய்வதல்ல, வலிமையான விமர்சன வடிவம் என்பதைப் புரிய வைக்கிறது. நிகழ் காலத்தின் சாட்சியங்களய் எழுதப்படும் கதைகளை வாசிக்கும் போது ஒரு வாசகன் அந்தக் கதைகளின் வழியாய் தான் கவனிக்க மறந்து போன எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்ளத் துவங்குகிறான். இதற்கு எப்போதும் சாத்தியங்களுண்டு, எழுத்தின் வழி ஒரு தனிமனிதனை அவனோடு உரையாடச் செய்ய வைப்பது முக்கியமானது. எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் அசலான மனத்தைப் புரிந்து கொள்ள முடிவதும், பிசிறுகளில் இருந்து திருத்திக் கொள்ள முடிவதும் அவர்களால் மட்டுமே சாத்தியம். பிரிதொறுவர் தனது கருத்துக்களின் வழி அந்தரங்கமாக உரையாட முடியுமே ஒழியே யாரையும் ஒட்டுமொத்தமாக மாற்றிவிட முடியாது. ரவிக்குமாரின் இந்தக் கதைகள் நம்மை அந்தரங்கமான ஒரு உரையாடலுக்கு அழைப்பதாகத்தான் இருக்கிறது.
Comments