வண்டி டி. கல்லுப்பட்டியைக் கூட நெருங்கவில்லை, அதற்குள்ளாக கையிலிருக்கும் ஐம்பது ரூபாய் நோட்டுகள் எல்லாம் தீர்ந்து கடைசி நோட்டுத்தான் மிச்சமிருந்தது. இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டும். இன்னொரு ஐநூறு ரூபாய்க்கு ஐம்பது ரூபாய்கள் சில்லறை வாங்கினால்தான் சரிவரும். உருப்படிகளை வண்டியில் ஏற்றியதிலிருந்து ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் எல்லையில் நிற்கும் போலீஸ்காரர்களுக்கு ரூவாயை நீட்டினால்தான் வண்டி நகரும். பெரும்பாலும்ஐம்பதை வாங்கிக் கொள்வார்கள். சரியாய் வருமானம் பார்க்காத சிலருக்கு நூறாய்க் கொடுக்க வேண்டும். வெயில்சுண்டி அடித்துக் கொண்டிருந்தது… லாரியின் இஞ்சின் வெக்கையில் வடிவேலுவுக்கு உடல்கசகசத்தது. வழியெங்கும் பார்த்த ஊர்களில் அடுத்த நாள் பொங்கலுக்கான கொண்டாட்டங்கள். எப்படா வீட்டுக்குப் போவோம் என்று இருந்தது. டிரைவர் வழக்கத்தை விடவும் உற்சாகமாய் இருந்தான். இவன் ரெண்டு மூணு நாட்கள் தூக்கமில்லாமல் குளிரையும் வெயிலையும் உள்வாங்கின கறுத்த முகத்தோடு இருந்தான். அப்படிஒன்றும் வயசாகி இருக்க வில்லை. வீட்டில் கஷ்டம். பதினேழு வயதிலேயே அம்மா வண்டிக்கு அனுப்பிவிட்டாள். நாமக்கல்லைச் சுற்றி இவனை மாதிரி தெருவுக்கு இரண்டு வடிவேலு இருப்பார்கள். பதினேழு பதிணெட்டு வயதில் கிளீனராய் வண்டியில் ஏறி இருபது வயதைத் தாண்டும்போது டிரைவராகி தீப்பெட்டி ஏற்றியும், பட்டாசுகளை ஏற்றியும் கொஞ்சம் பேர் நாடு முழுக்க சுற்றிக் கொண்டிருப்பார்கள். இன்னும் கொஞ்சம் பேர் இந்த மாதிரி உருப்படிகளை ஏற்றவும், வைக்கோல் ஏற்றவும் போவார்கள். அதென்னவோ என்ன சமாச்சாரமென்றாலும் சரி, நாமக்கல் வண்டிக்கும் டிரைவருக்கும் இருக்கும் சாமர்த்தியம் வேறு எந்த ஊர்க்காரர்களுக்கும் வராது.
உருப்படிகளைக் கொண்டுபோய்கொல்லத்தில் இறக்கிவிட்டுவிட்டு நாளைக்கு மத்தியானத்துக்குள்ளாவது வீடு போய்ச் சேர வேண்டுமென்கிற எண்ணம் தான் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்த்து. வண்டியில் ஏறி இருபது நாட்கள் ஆகிவிட்டன. இது ரெண்டாவது நடை. வழக்கமான டாரஸ் வண்டியில் கூடுதலாக ஐந்தடி நீளத்திற்கு பாடி அடிக்கப்பட்ட வண்டியில் ஐம்பத்தைந்து உருப்படிகள் ஏற்றி இருந்தார்கள்.
இருப்பதிலேயேரொம்பவும் கொடுமையான வேலை இந்த மாடுகளை ஏற்றிக் கொண்டு இறைச்சிக்காக இறக்கி வருவதுதான். போதாக்குறைக்கு திரும்பி வரும் போது வண்டியை எம்ப்ட்டியாக கொண்டு வர முடியாது. வெட்டிய மாடுகளின் எலும்புகளைத்தான் ஏற்றி வர வேண்டும்… புழுவும் பூச்சியும் நாற்றமும் கூடவே மாட்டின் எலும்புகளுமாய் நிறைந்த அந்த டிரிப்புக்கு ரெண்டு நடை மாடு ஏற்றிச் செல்லும் வருமானம்… அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டுவார்கள். ஒரு டிரிப் முடித்து மூன்று நாளைக்கு அந்த மாட்டு எலும்பின் வீச்சம் அவர்களின் உடம்பில் இருக்கும். எலும்பை ஏற்றிவரும் சாலை எங்கும் வீச்சம் இருக்கும். நல்ல வேளையாக நாளைக்கு ரிட்டர்ன் லோட் எதுவும் இல்லை. டிரைவர் உற்சாகமாய் இருந்தான்.
“வடிவேலு இந்த டிரிப் முடிஞ்சதும் பேசாம மெட்றாஸ் வண்டிக்கு மாறிடலாம்னு இருக்கண்டா… சாகப்போற மாட்ட பாத்து பாத்து வாங்குன சாபம் போதும்டா…”
வடிவேலுக்கும் இதில்விருப்பமில்லைதான்…
“நானும் இதையேதாண்ணே நெனச்சிட்டு இருந்தேன்…. பேசாம நீங்க போற வண்டிக்கே என்னையும் கூட்டிட்டுப் போயிருங்கண்ணே..”
வடிவேலுவும்அந்த டிரைவரும் நாலைந்து வருடமாக ஒரே வண்டியில் ஓடுகிறார்கள். ஓரளவு வண்டியைக் கையாளவும் ஹைவேயில் ஓட்டவும் இந்த டிரைவர் தான் பழக்கினான்… இன்னும் ஒரு வருடம் போனால் இவனே டிரைவர் தான்… அதனால் வடிவேலு கேட்டதும் சந்தோசமாக அவன் ஒத்துக் கொண்டான்..
வெயில்தாங்காமல் மாடுகள் அலறிக் கொண்டிருந்தன. டி. கல்லுப்பட்டியை நெருங்கின நேரத்தில் டீசலடிக்க வேண்டி வண்டியை நிறுத்தின டிரைவர் சிவப்பு நிறத்தில் மிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் அடைக்கப்பட்ட வாட்டர் பாட்டிலை அவன் கையில் கொடுத்தான்…
“டே வடிவேலு…. மாடுக பூரம் திமிறிட்டு இருக்கு…. எடுத்துட்டுப் போயி ஊத்து… கண்ணுலதான் ஊத்தனும்… மாட அடிக்கக் கூடாது…. எந்த மாட்டையும் அடிக்காத…. உருப்படிகள அமட்டுறாப்ல வண்டியோட பாடில மட்டுந்தான் அடிக்கனும்….”
வடிவேலுடிரைவர் சொன்ன எல்லாத்துக்கும் சரிண்ணே என்று தலையாட்டினான். சைட் டோரைத் திறந்து இறங்கியவனுக்கு மாடுகளின் சத்தமும் திணறலும் ஒருவகையில் எரிச்சலூட்டவே செய்தது. சீட்டுக்குப் பின்னாலிருந்து நீண்ட தார்க்குச்சியை எடுத்துக் கொண்டவன் முன் வரிசை சக்கரத்தில் மிதித்து வண்டியில் ஏறினான். குச்சியால் முதலில் லாரியின் கட்டையில் அடித்தான்… மாடுகள் திணறியபடியே அவன் உள்ளே இறங்க வழிவிட்டன. பாதிக்கும் மேல் மாடுகள் சாகும்தருவாயிலிருந்ததால்சலனமே இல்லாமல் நின்றன. அடிபட்ட சில மாடுகளும் கத்தத் தெம்பு இருந்த சில மாடுகளும் திமிறுவதும் கத்துவதுமாய் இருந்தன.
“ஹைய்ய்ய்… ஹைய்ய்ய்ய்…. தா… வெலகு… வெலகு… சனியனே… எதுக்கு குதிக்கிற..”
பொதுவாகஎல்லா மாடுகளுடன் பேசியபடியும் தனிப்பட்ட முறையில் சில மாடுகளை குச்சியால் குத்தியபடியும் ஒழுங்குபடுத்தி வரிசை படுத்தினான். வண்டிக்கு டீசல் அடிக்கச் சொல்லிவிட்டு டிரைவர் மூத்திரம் பெய்யப் போயிருந்தான். டீசலடிப்பவன் லாரியிலிருந்து வந்த மாட்டு மூத்திர வீச்சம் தாங்காமல் நெளிந்தான்…
“கண்டக்டர் அண்ணே… என்ன இப்பிடி நாறுது… உருப்படிகள ஏத்தும்போதே மருந்து கிருந்து அடிச்சிருக்க வேண்டியதான….”
வடிவேல்சிரித்தான்… “ஏம்ப்பா இதென்ன வயல உழுவுறதுக்கா போகுது.. போய் எறக்கினா நாளைக்கு இன்னியாரம் வெட்டப் போறாய்ங்க….”
டீசலடித்தவன்டீசல் முடிந்ததால் டியூப்பை எடுத்து அடுத்த வண்டிக்கு நகர்ந்தான். டிரைவர் வண்டியை நகர்த்தி பெட்ரோல் பம்ப்பிற்கு வெளியில் சற்றுத் தள்ளி நிறுத்தினான்… வண்டி நகர்ந்த இடைவெளியில் அதிர்ந்த மாடுகள் திமிறின… இவனுக்கு முன்னாலிருந்த ஒரு மாடு நங்கென இவன் தொடையில் ஒரு உதை விட்டது….
வலுவில்லாத மாடுதான்.. ஆனாலும் இவன் பலவீனமாய் இருந்தான்… வலி உயிர் போக துடித்தான்… ஆத்திரத்தில் கத்தியபடி பல்லைக் கடித்துக் கொண்டவன் கையிலிருந்த குச்சியால் அந்த மாட்டை சொத் சொத்தென அடித்தான்… அடி தாங்காமல் மாடு திமிறிக் குதித்தது. குதித்த மாட்டை விடாமல் அடித்தான். மாடு கத்தின சத்தம் கேட்டு டிரைவர் வண்டியை அவசரமாய் பிரேக் அடித்து நிறுத்தினான். பிரேக் அடித்த வேகத்தில் ஏற்கனவே அடிவாங்கி திமிறிக் கொண்டிருந்த மாடு வண்டியின் பின் அடைப்பைத் தாண்டி எகிறிக் குதித்தது… மாட்டின் பாதி உடல் வண்டிக்கு வெளியிலும் பாதி உடல் வண்டிக்குள்ளுமாய் கிடந்தது… டிரைவர் அவசரமாய் ஓடிவந்து பார்த்தான்… மாட்டின் நிலையைப் பார்த்த்தும் அவனுக்கு கொலைநடுங்கியது… மாட்டுக்கு எதாவது ஒன்னு ஆகிவிட்டால் இவர்கள் ரெண்டு பேரின் சம்பளத்தில் தான் ஏஜெண்ட் பிடிப்பான்…
“சனியம் பிடிச்சவனே முதல்ல வண்டியில இருந்து எறங்குடா… எறங்குடா…”
வடிவேலுமாடு திமிறியதில் முன்பே கலங்கிப் போய் நின்றிருந்தான். இப்பொழுது டிரைவரின் முகத்தில் இருக்கும் ரெளத்ரத்தைப் பார்க்க உயிரே நடுங்கியது. மாடு உதைத்த தனது வீங்கிப் போன தொடையோடு கவனமாக அருகிலிருந்த மாடுகளை விலக்கிவிட்டு லாரியின் வலது பக்கமாக இறங்கி குதித்தான். கீழே இறங்கின வேகத்தில் சொத் சொத்தென டிரைவர் வடிவேலின் கன்னத்தில் அறைந்தான்.
“உருப்படியள அடிக்காதன்னு படிச்சுப் படிச்சு சொன்னேன்லடா… வெங்காயம்… நிக்காத இங்க இருந்தா உன்னய அடிச்சேகொன்னுடுவேன்… ஓட்றா…ஓடு…”
வடிவேல்தயங்கியபடியே வீங்கிய தொடையைக் காட்டினான்.
“மாடு உதஞ்சிருச்சுண்ணே அதான் அடிச்சேன்…. தெரியாம்மண்ணே… உருப்படிய எப்படியும் பத்துநிமிசத்துல ஏத்திடறண்ணே…”
அழாதகுறையாக கெஞ்சினான்… டிரைவருக்கு பதட்டத்தில் முகம் வெடித்தது. இவனைத் துரத்திவிடவும் முடியாது. இன்னும் இரநூறு கிலோமீட்டர் வரைப் போகவேண்டும்/. கண்டக்டர் இல்லாமல் போவது சாத்தியமில்லை. புதிய கண்டக்டர் மற்ற லாரிகள் போல இந்த வண்டியில் வந்து வேலை பழகிவிட முடியாது. மாடுகளிடம் நெளிவு சுளிவாக இருக்க வேண்டும். கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும் இப்போது வடிவேல் செய்ததை விடவும் பெரிய சிக்கலில் போய் விட்டுவிடுவார்கள். வடிவேலைத் திட்டியும் பிரயோஜனமில்லை. மாடுகளுக்குள் அந்த நாத்தத்திற்குள் நிற்பதற்கே கொஞ்சம் அதிகமான திராணி வேண்டும். டிரைவர் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தான்…
“ங்கொக்காலி… நான் போயி நாலு பரோட்டாவத் திண்ணுட்டு வர்றேன்… அதுக்குள்ள மாட்ட வண்டிக்குள்ள ஏத்தல… உனக்கு சாவு என் கைலதாண்டா…”
ஆத்திரத்தில்வெந்த அவன் முகம் வியர்த்திருந்தது. வாயிலிருந்து இடைவிடாமல் பீடிப்புகை. வரிசையாக நிறையக் கடைகள் அடைத்திருந்தன. தள்ளியிருந்த ஒரு தாபாவுக்குள் டிரைவர் சாப்பிட நுழைந்தான். விடிந்தால் தைப் பொங்கல்… இன்று இரவு உருப்படிகளை கொல்லத்தில் சேர்த்துவிட்டு இரவோடு இரவாக எவ்வளவு தாமதமானாலும் நாமக்கல் போய்ச் சேர வேண்டும்…. எகிறிக் குதித்த மாடு கத்தின கத்தில் சுற்றிலும் இருந்த சில வண்டிக்கார்ர்களும் உள்ளூர் ஆட்களும் சேர்ந்துவிட்டார்கள். சிலருக்கு இந்த வண்டியைப் பார்த்து அருவருப்பு…
“ சாமி மாதிரி இருக்க கோமாதாவ திங்கிறதுக்கு வெட்டனும்னு எடுத்துட்டுப் போனா சாமி சும்மா உடுமா?...”
”பாருய்யா டிரைவர் கண்டக்டர விட்டுட்டு எனக்கென்னன்னு போயிட்டான்… இந்தப் பய தனியா என்னண்டுய்யா இந்த மாட்ட ஏத்துவான்…”
எல்லோரும்தங்களுக்குள் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தனர். யாரும் உதவி செய்ய முதல் அடியை எடுத்து வைக்கவில்லை. வடிவேலுக்கும் தயக்கமாய் இருந்தது. யாரை உதவிக்குக் கூப்பிடுவது. பாதிக்கப்பட்ட மாடு கத்துவதைக் கேட்டு பொறுக்கமுடியாமல் எல்லா மாடுகளும் கத்தின. சில மாடுகள் கடுமையாக எகிறின../.. இந்த மாட்டை மேலே ஏற்றுவதை விடவும் மற்ற மாடுகளை பாதுகாப்பது இப்பொழுது ,முக்கியம். மாட்டின் பின் பகுதி வண்டிக்குள் கிடந்த்ததால் மாடு தனது காலால் பின்னாலிருந்த மாடுகளை எகிறி எகிறி உதைத்தது. அந்த மாட்டின் உதை தாங்காமல் கதறிய சில மாடுகளுக்கு காலில் காயம் பட்டது. காயம் பட்ட மாடுகள் தங்களைக் காத்துக்கொள்ள கொம்பால் இந்த மாட்டையும் பக்கத்திலிருந்த மற்ற மாடுகளையும் மாறி மாறி முட்டின. இந்த மாடு கீழே விழவும் முடியாமல் மேலே ஏறவும் முடியாமல் கழுத்து பின் டோரில் இருக்கும் கம்பியில் மாட்டித் திணறிக் கொண்டிருந்தது.
தள்ளிநின்றிருந்த வண்டியிலிருந்த கிளீனர்கள் ரெண்டு பேர் உதவிக்கு வந்தார்கள்.
“என்னப்பா மாட்ட வெறிச்சு வெறிச்சுப் பாத்தா எப்பிடி?... ஆளுக்கொரு கையாப் பிடிச்சம்னா ஏத்திடலாம்ல…..”
வடிவேலுக்குஇப்போதுதான் பாதி உயிர் வந்தது.
“அதில்லண்ணே மாட்டோட கழுத்து மாட்டி இருக்கு, அத சரிபண்ணனும்… அந்தப் பக்கம் மத்த மாடுக எல்லாம் திமிறிக்கிருக்கு… எத முதல்ல சரி பண்றதுன்னு தெரியல..”
உதவிசெய்ய வந்த ரெண்டு பேரில் ஒருவன் நிதானமாக வண்டியின் நிலமையை யோசித்தான். இந்த மாதிரி நிறையப் பிரச்சனைகளை முன்பே பார்த்திருக்கிறார்கள்தான்… ஆனால் இந்த மாடுகளில் பாதிக்கும் மேல் இப்பொழுது கொலைபட்டினியிலும் கொலை வெறியிலும் திமிறிக் கொண்டிருக்கின்றன. சீக்கிரமாக வெட்டப் போகிற மாடுகள் தான், ஆனால் வெட்டுகிற வரை உயிரோடிருக்க வேண்டும்.
“எத்தன மாடுய்யா கழிஞ்சிருக்கு?..”
வடிவேலுக்குசரியாக ஒன்றும் தெரியாது.. ஆனாலும் குத்து மதிப்பாய்ச் சொன்னான்.
”தோராயமா ஏழெட்டு மாடு இருக்குமப்பா…”
”ம்ம்ம்… சரி நீ வண்டில ஏறு… ஏப்பா கீழ நின்னுக்க… நான் இந்தப் பக்கமா மேல ஏறி மாட்டோட கழுத்த மீக்குறேன்…”
வடிவேலுவேகமாக வண்டியின் முன் சக்கரத்தில் மிதித்து முன்பு ஏறியதைப் போலவே ஏறினான். மாடுகளை விலக்கி கத்திக் கொண்டிருந்த கொஞ்சம் மாடுகளை திசை மாற்றி நிற்க வைத்து அதைக் கத்தாமல் இருக்கும்படி தடவிக் கொடுத்தான்… சுனங்கி நின்ற சில மாடுகளின் கண்களில் மிளகாப் பொடிக் கலந்த தண்ணீரைத் தெளித்தான்… மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் அந்த மாடுகள் தற்காலிகமாக தங்களின் உயிரை தக்கவைத்துக் கொண்டன… பின் பக்கமாக ஏறிய இன்னொரு கண்டக்டர் மாட்டிக் கொண்டிருந்த மாட்டின் கழுத்தை லாவகமாக நீண்ட கயிறால் இழுத்து தூக்கிப் பார்த்தான். வலி தாங்க முடியாமல் மாடு அலறியதுடன் பின்னங்காலால் பக்கத்திலிருக்கும் மாடுகளைக் கடுமையாக உதைத்து. முன்னாலிருந்த பாதி மாடுகளை வேறு பக்கமாகத் திருப்பி விட்ட வடிவேலுக்கு மாடு உதைத்த இடம் இளநீரைப் போல வீங்கிப் போயிருந்தது.
சாப்பிட்டுமுடித்துத் திரும்பிய டிரைவர் மூன்று பேராய் மாட்டை மீட்க போராடுவதைப் பார்த்து வடிவேலின் மீதிருந்த கோபம் போய் வேக வேகமாக உதவிக்கு வந்தான்…. கழுத்து வசமாக மாட்டியிருந்த்தால் மாடு திமிறுவதைத் தடுக்க வேண்டியிருந்தது. டிரைவர் ஏறப் போவதைப் பார்த்த இன்னொரு வண்டி கண்டக்டர்
“அண்ணே வண்டில வேற கொச்சக் கயறு எதும் இருக்கா?...”
“இருக்குப்பா…”
டிரைவர் சொல்லியபடியே ஓடிப்போய் எடுக்கப்போனான்… அவன் திரும்பி வரும் போது வடிவேல் திமிறிக் கொண்டிருந்த இந்த மாட்டை நெருங்கி வந்துவிட்டான்…
“அண்ணே நீங்க அந்தக் கயத்தோட ஏறி உங்க கிளீனர் பக்கமா வந்துடுங்க… நான் கழுத்தப் புடிச்சு இழுக்கறதுக்கு முன்னால நீங்க ரெண்டு பேருமா சேந்து மாட்டோட பின்னங்கால சேத்துக் கட்டிடுங்க… கீழ நிக்கிறவர் கிட்ட மிச்சக் கயறப் போட்டீங்கன்னா அவர முன்னங்கால்ல ஒரு சுருக்குப் போட்றுவாரு…”
அவன்சொல்லிக் கொண்டிருக்கும் போதே வடிவேலு கண் இமைக்கும் நொடியில் கயிற்றை வாங்கி திமிறிய மாட்டின் காலில் கயிற்றைத் தூக்கிப் போட்டு அதன் இன்னொரு முனையை டிரைவரிடம் தந்தான், அவரும் முடிச்சுப்போட மிச்சக்கயிற்றை வாங்கி கீழே போட்டான்…
“அண்ணே கயிறப் பிடிச்சுக்கோங்க…”
கீழேநின்றிருந்த இன்னொரு ஆள் கயிற்றை லாவகமாகப் பிடித்து மாட்டின் முன்னங்கால் திமிறாதபடி ஒரு சுருக்கை மட்டும் போட்டார். மாட்டின் கழுத்திற்கு அருகில் நின்றிருந்தவர் அலறிக் கொண்டிருந்த மாட்டின் கழுத்தில் வலுவில்லாமல் கயிற்றைப் போட்டு அதை மெல்ல தடவிக் கொடுத்து பின்னோக்கி கயிறை ஒரு சுண்டு சுண்டினார்…. அதே நேரத்திற்கு பின்னாலிருந்து வடிவேலும் டிரைவரும் பின்னங்காலைப் பிடித்து இழுத்தனர். கழுத்து மீண்டு மாடு ஒரு மாதிரியாக வண்டிக்குள் விழுந்தது… மூன்று பேரும் உடனடியாக சுதாரித்து கயிற்றை விலக்கி விட்டு மாட்டை நேராக நிற்க வைத்துவிட்டு விலகி பாதி இறங்கி டயரில் நின்று கொண்டனர்… காயம் பட்ட மாடு கொஞ்சம் விடுவிக்கப்பட்டதில் ஆசுவாசமானது. அதுவாக திணறி திணறி எழுந்து நின்றபோது பக்கத்திலிருந்த மாடுகள் காயம்பட்ட மாட்டின் உடலெங்கும் நக்கிக் கொடுத்தது. உடலில் ஜீவனே இல்லாத போதும் தன்னோடு இருக்கும் இன்னொரு உயிருக்கு ஒன்றென ஆனதும் அந்த மாடுகள் கொண்ட தவிப்பும் இப்பொழுது கொள்ளும் கரிசனமும் பார்த்து வடிவேலுக்கு கண்ணீர் முட்டியது.
வண்டியிலிருந்து இறங்கியமூன்று பேரின் உடல் முழுக்க மாட்டு சாணத்தின் வீச்சமும், மூத்திர வீச்சமும். பெட்ரோல் பங்க்கின் பின்னாலிருந்த தொட்டியில் போய் கை கால் கழுவிக் கொண்டு வந்தனர். உதவி செய்த ரெண்டு பேரின் கையையும் கண்ணீரோடு வடிவேல் பிடித்துக் கொண்டான்.. அவர்கள் மூன்று பேருமாய் போய்ச் சாப்பிட்டு வரும்வரை சுனங்கிக் கிடந்த மாடுகளின் மேல் வாளி வாளியாய் டிரைவர் தண்ணீர் அள்ளி வந்து ஊற்றினான். அந்த வெயிலுக்கும் உடலில் பட்ட காயத்திற்கும் தண்ணீர் பட்டதில் மாடுகளுக்கு இதமாய் இருந்தது. அவை தண்ணீருக்கு ஏற்றாற்போல் உடலை நெளித்துக் கொடுத்தன. லாரியிலிருந்து தண்ணீரோடு மாட்டுக் கழிவுகளும் வழிந்து ஓடியது… மொத்தமாய் ஐம்பத்தைந்து மாடுகள், இவை அத்தனையையும் பத்திரமாக இன்று இரவுக்குள் சேர்த்துவிட்டால் பெரிய நிம்மதி… சாப்பிட்டு வந்த வடிவேலு கெந்தி கெந்தி நடந்தான்… தொடையில் ரத்தம் கட்டிப் போயிருந்தது. டிரைவர் வாளியை அவனிடம் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறினான். எஞ்சினை ஆன் செய்து வண்டியின் கண்டிஷனைப் பார்த்தான். வாளியை எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு ஏறமுடியாமல் சைட் டோரைப் பிடித்து ஏறினான். வண்டி மெதுவாக நகர்ந்தபோது உடலில் தண்ணீர் பட்டதில் குஷியாய் இருந்த மாடுகள் அமைதியாய் வந்தன. காயம்பட்ட மாடு பக்கத்திலிருந்த மாடுகளின் மேல் சாய்ந்து கொண்டது. டேப் ரிக்கார்டுக்குப் பக்கத்திலிருந்து தேடிப்பிடித்து டிரைவர் ஒரு களிம்பை எடுத்துக் கொடுத்தான்.
“இதப் போட்டுக்கடா… வலிக்காது…”
வடிவேல்அதை வாங்க வில்லை… வெளியில் தூரத்தில் இருட்டத் துவங்கியிருக்கும் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
”பரவா இல்லண்ணே ஒரேயடியா நாளைக்கு ஊருக்குப் போயி ஆஸ்பத்திரில பாத்துக்கறேன்….”
மாடுகளைப் போலவே அவர்களும் சுனங்கிப் போய்க் கிடந்தனர்.
Comments