top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

அ வெண்ணிலாவின் நீரதிகாரம்.”மேதமை என்பது கடந்தகாலம், எதிர்காலம் என எல்லா காலத்திற்கும் சாராம்சமானது. சமகாலத்தின் கலை சார்ந்த விதிகளை மீறி அந்த மேதமை வெளிப்படும். பின்வரும் காலங்களில் அந்த மேதமையின் இயல்புகளே கலையின் அடிப்படை விதிகளாக ஆகிவிடும். அந்த அளவுக்கு தன்னிச்சையாக வெளிப்படும் ஏதோவொன்றுதான் மேதமை.”

-       பி.கே.பாலகிருஷ்ணன்
 


நாவல் எழுதுவதென்பது பட்டுப் புழுவிலிருந்து பட்டுநூல் உருவாகி அது சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய உடையாக உறுமாறுவதைப்போல நிறையக் காத்திருப்புகளும் மெனக்கெடல்களும் கோரக்கூடியதொன்று. அதிலும்   நூற்றம்பைது வருடங்களுக்கு முந்தையை ஒரு பெருநிகழ்வை நாவலாக உருவாக்க அசாத்தியமான உழைப்பும் பொறுமையும் தேவையாய் இருக்கிறது.


வேறு எந்த இலக்கிய வகைமைகளை விடவும் நாவல் தனிச்சிறப்பானதாகவும் பரந்த வாசகர்களைக் கொண்டதாகவும் இருக்கக் காரணம் அது வாசகனுக்கு  நிகர்வாழ்வின் அனுபவத்தைத் தரக்கூடியதாய் இருபதனால்தான்.  நாவல் வாசிப்பு  மனிதர்களின் சலிப்பான அன்றாடங்களிலிருந்தும்  போதாமைகளிலிருந்தும் சிறிய விடுதலையை தருகிறது. எழுத்துக்கலைஞன் தனது நீண்ட தேடலின் பின்பாக உருவாக்கும் உலகத்தில் வாசிக்கிறவன் தனது வாழ்வின் நிறைகுறைகளையும் அதற்கான தீர்வுகளையும் கண்டுகொள்கிறான்.


மனித மனங்களைப் புரிந்துகொள்ள ஒருவன் நல்ல கதைகளை வாசிக்கிறவனாக இருக்க வேண்டும். ஃப்ராய்ட் தனது மிக முக்கியமான ஆதர்சமாக நிறைய இடங்களில் தஸ்தாவ்ஸ்கியைக் குறிப்பிடுகிறார். தல்ஸ்தாயை தனது ஆசான்களில் ஒருவராக குறிப்பிடவர் காந்தி. பெரும் அறிஞர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஏன் கலைஞன் முன்னோடியாக இருக்கிறான் என்றால் அவன் ஒரு சமூகத்தை வேறு எவரும் பார்க்க முடியாத கண்களின் வழியாக பார்க்கிறான். அதனால்தான்  இந்த இலக்கிய வடிவம் தோன்றிய நானூறு ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரும் அரசியல் தலைவர்களையும் தத்துவவதிகளையும்  நாவலாசிரியர்கள்  பாரிய அளவில் பாதித்துள்ளார்கள்.


நாவல்  நமக்கு இறக்குமதியாகி நூற்றம்பைது வருடங்களைக் கடந்திருக்கின்றன. நீண்டகாலமாகத் தமிழ்ச் சூழலில்  தொடர்கதைகளே நாவல்களாக பார்க்கப்பட்டன. இன்றைக்கும் பெரும் வாசகப்பரப்பை சென்றடைந்திருக்கிற நாவல்கள் தொடர்கதைகளாக வெளிவந்தவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தமிழில் சிறுகதை வடிவத்தில் நிகழ்ந்ததைப்போல் மகத்தான சாதனைகள் நாவல் 

வடிவத்தில் நிகழவில்லை என்றொரு குற்றச்சாட்டு பொதுவாகச் சொல்லப்படுவதை நான் முழுதாகவே மறுக்கிறேன்.


இங்கு சிறுகதைக்கு இணையாக சிறந்த நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் நான் குறையாகப் பார்ப்பது இந்த நாவல்களின் உள்ளடக்கத்தைதான். சிறப்பானவையென மதிப்பிடும்படியான நூறு தமிழ் நாவல்களை எடுத்துக் கொண்டோமானால் அவற்றில் எண்பது நாவல்கள் குடும்பத்தைச் சுற்றி நிகழ்வதாக இருக்கின்றன. பெருநிகழ்வுகளை கதைக்களங்களாகக் கொண்ட நாவல்கள் நம்மிடையே வெகு சொற்பமே…  ஒரு சமூகத்தின் அடிப்படையான பிரச்சனைகளைக் குறித்த விவாதங்களையும் அதற்கான தீர்வுகளையும், தேடிய நாவல்களின் வரிசையை எடுத்துக் கொண்டால் அதில்  மிக முக்கியமான இடம் அ.வெண்ணிலாவின் நீரதிகாரத்திற்கு உண்டு. கடந்த காலத்தில் எழுதப்பட்ட ஏராளமான வரலாற்று நாவல்களிலிருந்து உள்ளடக்கத்திலும் கதைசொல்லல் முறையிலும் இந்த நாவல் தனித்து நிற்கிறது. 

ஒரு நாவலாசிரியனின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் எடுத்துக் கொண்ட கதைக்களத்தையும் கதைமாந்தர்களையும்  மிகையின்றி வாசிக்கிறவர்கள் உணரும்படியாக எழுதுவதுதான். எல்லோருக்கும் தெரிந்த கதை ஆனால் யாராலும்  முழுமையாக சொல்லப்படாத கதையென பெரியாறு அணையின் கதையைச் சொல்லலாம். மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு பெரியாறு அணையோடு  நெருங்கிய உறவு  என்றென்றைக்கும் இருக்கும். மதுரையின் தாதுவருடப் பஞ்சத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மடிந்த துயரை விவரிக்கும் காட்சிகளில் துவங்கி  அந்த வறட்சிக்குத் தீர்வாக பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டு வைகையில் நீர் வருவதில் இந்த கதை முடிகிறது. காலத்தை முன்பின்னாக அசைத்துப் பார்க்கும் இந்த நீண்ட கதையில் வறட்சியில் மடிந்தவர்களின் துயர் மட்டுமில்லாமல், இனி ஒருபோதும் அம்மக்கள் துயருறக்கூடாதென்கிற உறுதியோடு அவர்களுக்காக போராடியவர்களையும், அவர்களுக்கு இடையூறாய் இருந்தவர்களையும்  அவர்களோடு சேர்ந்து தாங்கள் ஒரு மகத்தான செயலில் இருக்கிறோம் என்பதை அறியாமலேயே பேருழைப்பைத் தந்த ஏராளமான மனிதர்களின் வாழ்வையும் நீரதிகாரம் விவரிக்கிறது. அன்றைய மதறாஸ் ராஜதானி மற்றும் திருவிதாங்கூர் மாகானத்தைப் பற்றிய மிக முக்கியமான சித்திரங்களும் நிகழ்வுகளும் இந்த நாவலில் பதிவாகியுள்ளன. இன்றளவிலும் இருமாநில மக்களின்  எல்லையில் முக்கியப் பிரச்சனையாக இருக்கிற பெரியாறு அணை மேல் மலையில் ஏன் கட்டப்பட்டது? என்கிற  கேள்விக்கு ஒரு எழுத்தாளராக  ஏராளமான புரிதல்களை வெண்ணிலா நமக்குத் தந்திருக்கிறார். 


மதுரை ராமநாதபுரம் மாவட்டங்கள் எதிர்கொண்ட பெரும் பஞ்சங்களின் காரணமாய் ஆயிரக்கணக்கான மக்கள் பசியில் மடிந்தனர். மிச்சம் மீதியிருந்தவர்களின் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு கடல் கடந்து கூலிகளாய்ச் சென்றவர்களே அதிகம். உலகின் மிகப்பழமையான நகர நாகரீகத்தைக் கொண்ட மதுரை நகரின் இன்னொரு முகம் வறட்சி.  பெரியாறு அணைத்திட்டம் என்கிற இந்த மாபெரும் கனவை முதலில் விதைத்தது ராமநாதபுர ராஜா என்றாலும் அந்தத் திட்டம்  கும்பெனி அரசாங்கத்தின் கீழ் தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக விவாதத்திலேயே இருந்தது. காலனிய நாடுகளில் வியாபாரத்தையும் லாபத்தையும் மட்டுமே பிரதானமாகக் கருதிய கும்பெனி அரசு இந்தத் திட்டத்திற்காக பெருந்தொகையைச் செலவழிக்க விரும்பவில்லை. இந்தியாவில் நடந்த சிப்பாய்க் கலகத்திற்குப்பின் இங்கிலாந்து ராணியின் நேரடியான ஆளுகைக்குக் கீழ் இந்தியா வந்தபோது கும்பெனியின் அதிகாரம் குறைந்து  பிரிட்டிஷாரின் முறையான ஆட்சியமைப்பு துவங்கியது. அந்த மாற்றம்தான் பெரியாறு அணைத் திட்டம் சாத்தியமாகவும் காரணமாக இருந்தது.  வெவ்வேறு அதிகாரிகள் இந்த அணைத் திட்டத்தை முன்வைத்தாலும் எப்படியும் நடத்தியே தீருவதென்கிற உறுதியோடு கடைசிவரை நின்றவர் ஜான் பென்னி குக். தனது வாழ்நாளில் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக இந்த அணையைக் கட்டி முடிப்பதற்காக மட்டுமே செலவழித்திருக்கிறார்.


ஒரு நாவலின் அடிப்படையான கேள்வியும் அந்தக் கேள்விக்கான பதிலை நோக்கிய தேடுதலும் முக்கியமானது. இந்தக் கேள்விகள் தான் வலுவான கதாப்பாத்திரங்களை உருவாக்கும்.  புனைவென்பதையும் மீறி இந்தக் கதையின் பெரும்பாலான கதாப்பாத்திரங்கள்  வாழ்ந்து மறைந்தவரகள். ஒரு அளவிற்குமேல் அவர்களது வாழ்க்கை சம்பவங்களைச் சொல்வதில் படைப்பாளர் சுதந்திரம் எடுத்துகொள்ள முடியாதென்கிற நெருக்கடியும் இருக்கிறது. இந்தச் சவாலும் நெருக்கடியும்தான் பென்னியின் பாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறது. பென்னி, ஹானிங்டன், குருவாயி, ஜார்ஜியானா, டெய்லர், டர்னர், சந்தனத் தேவன், முங்கிலி, திருவாங்கூர் சமஸ்தான அரசர், பூஞ்சாறு அரசர், எஸ்தர், ராமய்யங்கார், தேவங்கி  என ஏராளமான கதாப்பாத்திரங்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரமுமே அதற்கான முழுமையோடு சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கதாப்பாத்திரங்களின் தனித்துவங்கள் வாசிக்கிறவர்களுக்குக் காட்சிகளாய் விரிவதால் அந்த காலகட்டத்தின் மிக உயிர்ப்பான சித்திரமொன்றை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடிகிறது.  கதையில் நிகழும் வாழ்வை பல இடங்களில் நம்மால் நெருக்கமாக உணரமுடிகிறது. ஒரு படைப்பாளர் உருவாக்கும் கதையுலகையும், கதாப்பாத்திரங்களையும்  அவர் என்ன மனநிலையில் என்ன நோக்கத்திற்காக உருவாக்குகிறாரோ அதே நோக்கத்தோடு வாசிக்கிறவரும் புரிந்துகொள்ள முடிவது புனைவில் அசாத்தியமான தருணம். நீரதிகாரத்தில் அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.


            ஒரு சிறந்த கதையில் சமூகத்தைச் சித்தரிக்க எளிய வழி அந்தக் கதையின் முக்கியக் கதாப்பாத்திரத்தினை  அசலாகவும் நம்பகத்தன்மையுடனும் உருவாக்குவதுதான். வாசகன் ஒரு கதாப்பாத்திரத்தை முழுமையாக நம்பத் துவங்கும்போது அந்தக் கதாப்பாத்திரம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அது எழுப்பும் அடிப்படையான கேள்விகளையும் வாசிக்கிறவனால் எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும். நீரதிகாரத்தில் பெரும் பலம் கதாப்பாத்திர சித்தரிப்புகள் என்று சொல்லலாம். ‘ஆன்மாவின் விடுதலை என்பது ஞானிகளுக்கு வாழ்வைத் துறத்தல் என்றிருக்கலாம், நம்மை போன்றவர்களுக்கு நாம் செய்யும் செயல்கள்தான் ஆன்மாவின் விடுதலை’ என ஓரிடத்தில் ஜானிங்டன் பென்னியிடம் குறிப்பிடுகிறார்.  பென்னி செயலூக்கமிக்க மனிதராக இருப்பதாலேயே அவரைச் சார்ந்திருப்பவர்களும் அவரை பிரதிபலிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.  மூன்று தலைமுறைகளாக பேச்சுவார்த்தையில் மட்டுமே இருந்த ஒரு திட்டம் முழுமையடைவதற்குப் பின்னால் ஒரு தனிமனிதனின் பெருங்கனவைப் புரிந்துகொண்ட அத்தனை மனிதர்களும் காரணமாக இருக்கிறார்கள்.  ஒரு கதாப்பாத்திரத்தை தனித்துவமாக உருவாக்க மற்ற கதாப்பாத்திரங்களிடம் இல்லாத ஒரு சிறப்பியல்பை அதற்குத் தரவேண்டும். தனிச்சிறப்போடு உருவாக்கப்படும் கதாப்பாத்திரங்களால்தான் புனைவில் வலிமையான முரண்கள் சாத்தியமாகும். முரண்களும் அதைத் தேடிய பயணமுமே அழுத்தமான கதைகளாக உருவாகின்றன. இந்த அணையை ஒருபோதும் கட்ட முடியாதென எல்லோரும் ஒதுக்கிய ஒரு திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்கிற பென்னியின் பிடிவாதமும் உறுதியும்தான் அவரது  தனித்துவம். தனக்குப் பரிட்சயமில்லாத புதிய வாழ்வைத் தெரிந்துகொள்வதைத்தான் வாசகன் விரம்புகிறான். இதனாலேயே நல்ல நாவல்களுக்கு கதை சொல்லும் நுட்பங்களும் கதாப்பாத்திரங்களை சுவாரஸ்யமாகவும் வலுவாகவும் உருவாக்க வேண்டிய படைப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது. பெருநிகழ்வை மையப்படுத்திய கதை என்பதையும் தாண்டி வெவ்வேறு நோக்கில் இந்த நாவலை நாம் அணுக வேண்டியிருக்கிறது.  மதறாஸ் ராஜதானியிலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் அன்றைக்கிருந்த கடுமையான சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிறைய இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.  திருவிதாங்கூர் அரண்மனையை ஒரு குறிப்பிட்ட சாதியினர் எவ்வாறு கட்டுக்குள் வைத்திருந்தனர், அதன் காரணமாய்  அந்த சமஸ்தானத்தில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதை வாசிக்கிறபோது பெரும் அதிர்ச்சியும் துயரமும் நிரம்புகிறது. அதற்கு சற்றும் குறையாமல்  அணை கட்டும் வேலைகள் நடக்கும் இடத்தில்  வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்த  தொழிலாளர்களுக்கு இடையிலிருந்த சாதிய முரண்கள் அதனால் உருவாகும் மோதல்கள் எல்லாம்  வறுமையையும் மீறி  சாதி ஏன் மனிதர்களுக்கு இத்தனை முக்கியமானதாய் இருக்கிறதென்கிற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  


இலக்கியம் சாத்தியங்களின் பிரவாகம் எனவே அது நேற்று இன்று என அறுபடாததாகும் என குரு நித்ய சைதன்யா ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.  நீரதிகாரத்தின் மிகமுக்கியமான சிறப்பென்பது அதன் அறம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சிறிய அங்கமான பூஞ்சாறு குறுநில மன்னர் தங்கள் உரிமைகள் எவ்வாறு பறிக்கப்படுகின்றன என்கிற இடத்தில் முதலில் குமுறுவதும் பின்பு இந்த அணை கட்டப்படுவதால் மதுரை மக்கள் பயனடைவார்களெனத் தெரிந்துகொண்ட விட்டுக் கொடுக்கிற இடமும் முக்கியமானது. திருவிதாங்கர் அரசர் நிலத்தைக் கொடுப்பதில் ஏராளமான கடுமை காட்டுகிற வேளையில் பெரும் மழையையும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் பென்னியும் அவரது மனைவி ஜார்ஜியானாவும் அவரைப் போய் சந்திக்கும் காட்சியை  நாவலில் உச்சமான இடமாகக் குறிப்பிட வேண்டும். துவங்குவதற்கு முன்பாகவே பெரும் போராட்டங்களைக் கண்ட இந்த அணை கட்டிமுடிக்கப்பட்ட காலத்தில் எத்தனை இழப்புகள் எத்தனை மரணங்கள்?


கடுமையான குளிர், யூகிக்க முடியாத பெருமழையென இயற்கை பெரும் சோதனைகளைக் கொடுத்த போதும் பென்னியோ அவருடன் இருந்தவர்களோ பின்வாங்கவில்லை.  முதல் பருவத்தில் வேலைகள் முடியும் முன்பாகவே பெரும்ழை பெய்து எல்லாம் நீரில் அடித்துப் போகிறது. திட்டமிட்ட கால அளவைத் தாண்டி, செலவுத் தொகைகளையும் தாண்டி ஒரு கட்டத்தில்  டெய்லரும் இறந்தபிறகு எல்லோரும் சோர்வுற்ற நிலையில் இந்த வேலையைக் கைவிடக்கூடாதென்கிற உறுதியை பென்னிக்குக் கொடுப்பது இன்னொருமுறை மக்கள் பஞ்சத்தால் மரணிக்கக் கூடாதென்கிற அறம். வரலாறு தங்களை நினைவு வைத்துக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பின்றி காலராவிலும் குளிரிலும் மரணித்த மக்களின் தியாகத்தையும் நாம் மறுக்க முடியாது.


இரண்டு விதங்களில் ஒரு  பிரதி ஒருவனுக்கு அந்தரங்கமானதாக இருக்கும், ஒன்று வாசிக்கிறவனின் நினைவுகளைக் கிளறக்கூடியது இன்னொன்று அவனது முன்னோர்களின் நினைவைக் கிளறக்கூடியது.  எனக்கு இந்த நாவல் இரண்டாவது வகை. மானூத்தில் பிறந்த என் தாயின் பஞ்சகாலக் கதைகளை சிறுவயதில் கேட்டு வளர்ந்தவன் நான். நாலாம் மைலுக்கும் ஏழாம் மைலுக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதிகளில் அந்தக் காலகட்டத்தில் தலையில் பாத்திரங்களோடும் கொஞ்சம் துணிமூட்டைகளோடும் பஞ்ச பொழைக்கப் போறோம் சாமி கஞ்சி ஊத்துங்க என காட்டு வழியாய் எஸ்டேட்டுக்கு வேலைக்குச் சென்றவர் என் தாய். அவருக்கும் முன்பாகவே அதே ஊரிலிருந்து மேல் மலையில் பெரியாறு அணைக்கு வேலைக்குச் சென்றவர்களின் கதைகளும் இன்றளவும் ஊருக்குள் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.


ஒரு எழுத்தாளன் தனக்கான இலக்கிய வடிவத்தைக் கண்டடைவது தற்செயலாக நிகழ்வதில்லை. அது நீண்டகால வாசிப்பு மற்றும் தேடலோடு அவனது  வாழ்க்கை முறையிலிருந்தும் தீர்மானிக்கப்படுவதாக இருக்கிறது.   அடிப்படையில் கவிஞராக தனது இலக்கிய வாழ்கைத் துவங்கிய  அ.வெண்ணிலா இன்று நாவல்கலையில் தனது உச்சமான படைப்புத் திறன்களை வெளிப்படுத்தியிருப்பதற்குப் பின்னால் அவரது நீண்டகால தேடலும் உழைப்பும் இருப்பக் காட்டுகிறது.  ஒருவர் தொடர்ந்து எழுதுவதன் வழியாக மட்டுமே சிறந்த படைப்புகளைத் தரமுடியும். அந்த வகையில் நீராதிகாரம் என்னும் இந்த மாபெரும் படைப்பை உருவாக்குவதற்கு முன்னால் அவர் எழுதிய கங்காபுரம்,  சாலம்புரி படைப்புகளையும் இவ்விடத்தில் நாம் உற்றுநோக்க வேண்டியது அவசியம்.


”வேண்டியதைப் பெறும்வரை செய்வதை நிறுத்தக்கூடாது, அதைத்தான் காடு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது…”


நீரதிகாரம் கதையின் முக்கியமானதொரு பகுதியில் இந்த வரிகள் வருகின்றன. இந்த பெருங்கதையினை வாசித்து முடிக்கையில் கதையில் ஜான் பென்னி குக்கிற்காக எழுதப்பட்ட இந்த வரிகளை எழுத்தாளர் அ.வெண்ணிலாவிற்குமானதாக நான் நினைத்துக் கொண்டேன்.

 

-       லஷ்மி சரவணகுமார்

-       சென்னை

 

317 views

Comments


bottom of page