top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

ஆகவே எப்போதும் நாம் சிலரை வேட்டையாடக் கூடும்.
நாம் நம் குழந்தைகள் குறித்து கொள்ளும் அக்கறைகள் பெரும்பாலும் அவர்களின் கற்பனைகளுக்குள்ளோ அல்லது கனவுகளுக்குள்ளோ ஒருபோதும் நுழைந்து செல்வதாகவோ அல்லது நிஜத்தை ஒட்டிய அவர்களின் கற்பனைகள் எத்தனை தூரம் நமது அன்றாட வாழ்வின் பிரதிபலிப்பின் காரணமாகவே நிகழ்கின்றன என்பதையோ கவனிக்க மறந்தவர்களாகவே இருக்கிறோம். குழந்தைகளோடு அதிகம் தங்களின் நேரத்தை செலவிடுகிற மனிதர்கள் நிதானமானவர்களாகவும் கொஞ்சம் குழந்தைத்தனங்களின் மிச்சங்களைக் கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள். எப்படி சராசரி மனிதர்கள் குழந்தைகளையும் அவர்களின் நடிவடிக்கைகளையும் புரிந்து கொள்ள முயல்வதில்லையோ அப்படியே அவர்களோடு நெருக்கமாக இருப்பவர்களையும் புரிந்து கொள்வதில்லை. தாமஸ் விண்டர்ஸ்பர்க்கின் ( Thomas vintersberg – the hunt ) ஒரு குழந்தையின் விபரீத கற்பனையால் சிதைவுக்குள்ளாகும் ஒரு தனிமனிதனின் கதையைப் பேசுகிறது. ஒருவரியில் இப்படி நான் சொல்லிவிட்டாலும் இந்தப் படத்தின் காட்சிகளை இத்தனை குறுக்கி நாம் புரிந்து கொள்ள முடியாது. படத்தின் துவக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை எங்குமே பிண்ணனி இசை பயன்படுத்தப்படவில்லை. படம் முழுக்க ஒரு பெரும் அமைதியும் மெளனமும் இழையோடி இருக்கிறது. வாக்குமூலம் அளிக்கும் குழந்தையுடன் அதற்கு கவுன்சிலிங் குடுக்கும் ஆள் பேசுவதற்கும் நடுவிலும் பெரும் மெளனம் மட்டுமே அந்தக் காட்சியை நிரப்பிச் செல்கிறது. மொத்தமாக இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கையில் படம் பார்த்ததற்கு மேலும் ஒரு சம்பவத்தை அதற்கு வெகு அருகில் நின்று கவனித்த பார்வையாளனாய் நம்மை குற்ற உணர்வுக்கு உள்ளாக்கிவிடுகிறது.


நார்வேயின் ஒரு சிறிய கிராமப்புற நர்சரி பள்ளியில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பாதுகாவலன் லூகாஸ். குளிர்காலம் துவங்குவதற்கு முன்பான சிலநாட்களில் இந்தக் கதை துவங்குகிறது. ( காலம் எப்போதும் ஒரு கதையின் ஆதார உணர்ச்சிகளில் முக்கிய பங்கு கொண்டதென நம்புகிறேன்.) அந்தப் பள்ளியில் இருக்கும் குழந்தை கிளாரா லூகாஸின் நெருங்கிய நண்பனான தியோவின் மகள். லூகாஸ் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்கிறவன். தியோவும் அவன் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறவர்களென்பதால் கிளாரா எப்போதும் தனியானவளாகவே இருக்கிறாள். வீட்டிலிருந்து கால் போன போக்கில் நடந்து சூப்பர் மார்க்கெட் வரும் கிளாராவுக்கு திரும்பவும் வீட்டிற்குப் போவதற்கான வழி தெரியாமல் போகிறது. அங்கு வரும் லூகாஸ் அவளைப் பத்திரமாக வீட்டிற்கு கூட்டிச் செல்கிறான். லூகாஸின் நாய்க்குட்டியான fanny யுடன் நடப்பது கிளாராவுக்கு விருப்பமான ஒன்றென்பதால் சந்தோசமாக செல்கிறாள். அடுத்த நாள் அவளை நர்சரிக்கு கூட்டிச் செல்வதும் லூகாஸ்தான். இந்த முதல் பத்து நிமிடங்களில் கதையின் அத்தனை முடிச்சுகளையும் நம்முன் தூக்கிப் போட்டுவிடும் தாமஸ் கூடுதலாக சில விசயங்களை வைக்கிறார். வீட்டில் தனியாக கிளாரா இருக்கும் போது அவளது அண்ணனும் அவனது நண்பனுன் ஐபேடில் ஆபாச படங்களைப் பார்த்தபடியே ஆண்குறிகளைப் பற்றி பேசுவதும், அதனை அவளுக்குக் காட்டுவதுமாய் இருக்கிறார்கள். பின்பு நர்சரியில் குழந்தைகளோடு விளையாடும் லூகாசுக்கு கிளாரா அவனது இதழ்களில் முத்தம் தருகிறாள். அவனது கோட் பாக்கெட்டில் சின்னதாய் இதய வடிவிலான வாழ்த்து அட்டை வைக்கிறாள். லூகாஸ் அவளிடம் ‘இதை உன் வயது பையன்கள் கிட்ட குடுக்கனும்’ என அவனுக்கே திருப்பிக் கொடுக்கிறான். இதற்கும் முன்பாகவே நடந்து வரும் போது ‘நீ பெரிய வீட்டில் தனியா இருக்கறதாலதான் உனக்கு ஏதோ பிரச்சனைன்னு வீட்ல அப்பாவும் அம்மாவும் பேசிக்கிட்டாங்க’ என லூகாசிடம் கிளாரா சொல்வது ஒரு கட்டத்திற்கு மேல் அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டதோ என நினைக்க வைக்கிறது. லூகாஸ் தன்னை காயப்படுத்திவிட்டதாக நினைத்துக் கொள்ளும் கிளாரா அந்த நர்சரியின் பொறுப்பாளரிடம் அவனை வெறுப்பதாக கூறுகிறாள். தன் அண்ணனும் அவன் நண்பனும் பயன்படுத்திய ஆண்குறிக்கான வார்த்தையைப் பிரயோகித்து லூகாஸ் அவளிடம் தன் குறியை நீட்டியதாக சொல்லிவிடுகிறாள். குழந்தைக்கான இயல்பான பழிவாங்கல் கோபத்துடனும் விளையாட்டாகவும் சொல்வதை முக்கியமானதாய் எடுத்துக் கொள்வதோடு அடுத்த நாளே அவளோடு உரையாட ஒரு கவுன்சிலரையும் அந்த பொறுப்பாளர் வரவைக்கிறாள்.


இதற்கிடையில் லூகாஸ் நண்பர்களுடன் வேட்டைக்குச் செல்கிறான். மதுவருந்துகிறான். அவனுக்குப் புதிய காதலியை நள்ளிரவில் தன் வீட்டிற்கு அழைத்து அவளோடு உறங்குகிறான். மனைவியுடன் வளரும் மகன் தன்னோடு வந்து இருக்கப் போவதாக சொல்வதைக் கேட்டு சந்தோசம் கொள்கிறான். தனியாக இருக்கிறோமென்கிற மனநிலை மாறி அவன் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லோருடனும் இணக்கமாகிற நிலையில் அடுத்த நாள் கிளாராவுடன் அந்த கவுன்சிலர் உரையாடுகிறார். அமைதியாய் இருக்கும் கிளாராவிடம் உளவியலாளரே ஒவ்வொரு கேள்வியாக வீசி இதுவெல்லாம் நடந்திருக்க சாத்தியமுள்ளதென தனது அதீத கற்பனைகளிலிருந்து கேட்டு ஒரு கட்டத்திற்கு மேல் அது எல்லாமே நடந்ததாக அவளையும் நம்பச் செய்துவிடுகிறார். தான் கற்ற வழிமுறைகளின் படிதான் குழந்தைகளின் உளவியல் இருக்கக்கூடுமென உறுதியான நம்பிக்கை அவருக்கு. லூகாஸ் ஆண் குறியைக் காட்டினான் என்பதை அடுத்த நாள் கிளாரா மறுக்கிறாள். அவன் ஒன்றுமே செய்யவில்லை என்கிறாள். ஆனால் உளவியலாளர் பயப்படாத, ஒன்னும் ஆகாது, நாங்க உனக்காகத்தான் பேசறோமென அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் நம்பும் ஒன்றை அவளையும் நம்ப வைத்துவிடுகிறான். இந்தக் காட்சியில் கிளாராவின் நடிப்பும் உணர்ச்சி வெளிப்பாடும் அபாரமானது. ( குழந்தைகளை வைத்து படமெடுப்பவர்கள் ப்ளீஸ் குழந்தைகள் நடிப்பதென்றால் என்னவென்று கொஞ்சம் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்…. நீங்கள் எக்ஸண்ட்ரிக் என்பதற்காக குழந்தைகளையும் அப்படியே இருக்க வைக்காதீர்கள்.) லூகாஸ் அந்த நர்சரியிலிருந்து நீக்கப்படுகிறான். கிளாராவின் அம்மாவை வரவழைத்து நர்சரி பொறுப்பாளர் கிளாரா பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டதை சொல்லிவிடுகிறாள். அதோடு நிற்காமல் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களையும் வரவைத்து உங்கள் குழந்தைகளிடம் இதற்கான அறிகுறிகள் தெரிகிறதாவெனப் பார்த்துச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறாள். சொல்லி வைத்தாற்போல் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான அறிகுறிகளை சொல்கிறார்கள். லூகாஸின் மீது போலிஸில் புகார் செய்யப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊர்லிருந்து எல்லோரும் அவனை விலக்கி வைக்கிறார்கள். தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் லூகாஸ் தான் செய்யாத ஒரு தவறு தன்னை இத்தனை தூரம் வதைப்பதை செரித்துக் கொள்ள முடியாதவனாய் இருக்கிறான். லூகாசின் மனைவி அவன் மகனை அவனோடு போய் இருக்க மறுத்துவிட்டதாக ஃபோனில் மகன் கூப்பிட்டுச் சொல்கிறான். வேதனையோடு இருக்கும் லூகாஸை அவன் தோழியுமே சந்தேகத்தோடு கேட்க லூகாஸ் அவளை வீட்டிலிருந்து வெளியே அனுப்புகிறான். எல்லோராலும் கைவிடப்பட்ட லூகாஸுடன் அவன் நாய்க்குட்டி மட்டும் இருக்கிறது. நிஜமாகவே அப்படியானதொன்று நடக்கவில்லை என லூகாஸ் நர்சரி பொறுப்பாளர், தியோ என எல்லோரிடமும் சொல்லிப் பார்க்கிறான். தியோ ‘என் குழந்த இதுவரைக்கும் பொய் சொன்னதே இல்ல… இப்போ ஏன் பொய் சொல்லனும்…’ என்கிறான். அந்தக் காட்சியில் கிளாராவின் படுக்கையறையில் கிளாரா அம்மாவிடம் ‘நான் முட்டாள்த்தனமா சொன்னது உணம இல்ல… லூகாஸ் ஒன்னுமே செய்யல’ என தெளிவாகவே சொல்கிறாள். எல்லோரும் ஏன் லூகாஸை வெறுக்கிறார்களென்பது அவளுக்குப் புரியவில்லை. இயல்பில் அவள் அவனை அதிகம் நேசிக்கிறாள். கிளாராவின் அம்மா ‘நீ குழந்த நிஜமாவே உனக்கு என்ன நடந்திச்சின்னு மறந்து போயிருக்கலாம்’ என குழந்தைக்கு மறுமொழி சொல்லிவிட்டு அவளை உறங்கவைக்கிறாள்.


அம்மா சொன்னதையும் மீறி லூகாஸின் மகன் லூகாஸிடமே வந்துவிடுகிறான். யாரும் நம்பாத தன் அப்பாவை மகன் நம்புகிறான். அந்த ஊரில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு பொருள் வாங்கச் செல்லும் மகனை இனிமேல் இங்கு வரக்கூடாதென துரத்திவிடுகிறார்கள். லூகாஸ் வளர்க்கும் நாய்க்குட்டியை கொன்று அதன் உடலை வீட்டின் முன்னால் போட்டுவிட்டுப் போகிறார்கள். அத்தனை நாட்களும் எல்லோருக்கும் நெருக்கமானவனாய் இருந்த ஒருவன் சடாரென அவர்கள் அருவருத்து ஒதுக்கும் ஒருவனாக மாறிப் போகிறான். போலீஸ் இந்த வழக்கில் லூகாசை கைது செய்து அழைத்துச் செல்கிறது. லூகாசுக்கு ஆதரவாக ஒன்றிரண்டு பேர் மட்டும் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே அவனை நம்புகிறார்கள். விசாரணையில் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியாக லூகாஸ் தன் வீட்டில் பேஸ்மண்ட்டில் சோபாவில் வைத்துதான் தங்களிடம் அத்துமீறியதாக சொல்கிறார்கள். லூகாஸின் வீட்டில் அப்படி ஒரு பேஸ்மண்டே இல்லை என்பதை போலிஸ்காரர்கள் உறுதி செய்து அவன் மீது குற்றமில்லை என அனுப்பி வைக்கிறார்கள். ஆனாலும் ஊர்க்காரர்கள் அதனை ஒப்புக் கொள்வதில்லை. லூகாஸ் இப்போது அதே சூப்பர் மார்க்கெட்டுக்குப் போக, அங்கிருப்பவர்கள் அவனை அடித்துத் துரத்துகிறார்கள். கிறிஸ்துமஸ் அன்று மாலை பிரார்த்தனைக்கு லூகாஸ் சர்ச்சுக்குப் போகிறான். எல்லோரும் அவனை ஒருமாதிரியாகப் பார்க்க தியோ அவன் ஏதோவொரு திட்டத்துடன் வந்திருக்ககூடுமென மனைவியிடம் சொல்கிறான். தியோவை தீர்க்கமாக சிலமுறை பார்க்கும் லூகாஸ் பொறுக்கமுடியாமல் எழுந்து போய் அடிக்கிறான். ‘என் கண்ணப் பார்… என்ன தெரியுது… ஒன்னும் இல்ல…. என்னய வாழ விடு,…. மொத்த ஊரும் என்னய கேவலமா பாக்குது…’ என ஆவேசமாய் பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறான். தியோ வீட்டிற்கு வந்தபின் கிளாராவின் அறைக்குள் போகிறான். கிளாராவுக்கு அவன் வருவது லூகாஸை நினைவுபடுத்த லூகாசின் பெயரைச் சொல்கிறாள். இன்பு தியோ என்று தெரிந்ததும் மீண்டும் அம்மாவிடம் சொன்னதைச் சொல்கிறாள். லூகாஸ் எதுவும் செய்யவில்லை என்று சொன்னதும் தியோ கண்ணீருடன் லூகாசுக்கு கொஞ்சம் மதுவையும் உணவையும் எடுத்துக் கொண்டு செல்கிறான்.


ஒரு வருடத்திற்குப் பின் லூகாஸின் மகனுக்கு துப்பாக்கி வைத்து வேட்டையாட லைசென்ஸ் கிடைத்ததை கொண்டாடும் சின்ன கெட் டுகெதர் நடக்கிறது. நிக்ழச்சியின் முடிவில் எல்லோரும் வேட்டையாடச் செல்கிறார்கள். லூகாஸ் மகன் வேட்டையாடுவதை அமைதியாகப் பார்த்தபடியே வருகிறான். எதிர்பாராதவிதமாய் ஒரு துப்பாக்கி அவனுக்குப் பக்கத்திலிருக்கும் மரத்தில் பட்டு வெடிக்கிறது… தெளிவற்ற ஒரு சிறுவனின் முகம் லூகாஸின் முன்னால் இருந்து பின் மறைவதுடன் படம் முடிகிறது. இந்தக் கடைசிக் காட்சியிலிருந்து இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஒருவேளை இதுவரை பார்த்துக் கொண்டிருந்த கதைக்கு வெளியே இன்னொரு கதையை நாம் புரிந்து கொள்ள முடியும்.


இந்தப்படத்தின் வழியாய் ஒரு குழந்தையின் உலகிற்குள்ளும், எந்த சமூகக் குற்றங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாத ஒரு சராசரி மனிதனின் உலகிற்குள்ளும் நாம் தீவிரமாக நுழைந்து பயணம் செய்ய முடியும். குழந்தைகள் மனம் எத்தனை வேகமாய் ஆவேசப்படக் கூடியதென்பதற்கு இத எதார்த்தமான உதாரணம். ஆனால் அடுத்த கனமே கோபத்தை மீறி தான் சொன்னது பொய் என ஒத்துக் கொள்ளும் நேர்மையும் அவர்களிடமே இருக்கிறது. எல்லோரும் லூகாஸை வெறுத்து ஒதுக்கும் போதும் கிளாரா தொடர்ந்து லூகாஸைத் தேடி வருகிறவளாகவே இருக்கிறாள். லூகாஸ் கைது செய்யப்படுவதற்கு முன்னால் வீட்டிற்கு வரும் கிளாரா அவன் நாய்க்குட்டியுடம் வாக்கிங் போக வேண்டுமெனக் கேட்கிறாள். லூகாஸ் அப்போதும் இனிமேல் இங்கு வருவதானால் அம்மாவிடம் சொல்லிவிட்டு வா என சொல்லிவிட்டு இன்னொரு நாள் வாக்கிங் போகலாமென அனுப்பி வைக்கிறான். கடைசிக் காட்சியில் விழா நடக்கும் வீட்டில் தனியாக மாடிப்படியேறி வரும் கிளாரா நிறைய கட்டங்களாக இருக்கும் தரையைப் பார்த்து குழம்பிப் போய் நிற்க எதிரில் வரும் லூகாஸ் “நிறைய கோடுகள் இருக்குல்ல நமக்கு நடுவுல … எனக்கும் குழப்பமாத்தான் இருக்கு…” என சொல்லிவிட்டு போய் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து அறையின் மையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அப்பாவிடம் போகச் சொல்கிறான். அப்போதும் சிரித்தபடியே அவனுக்கு பை சொல்லிவிட்டுப் போகிறாள். அவளுக்கு அதீத கற்பனைகள் இருப்பதை நர்சரி பொறுப்பாளரும் முன்பே ஒத்துக் கொள்கிறாள். ஆனால் இந்த விசயத்தில் குழந்தை பொய் சொல்லாது என்பதை தீவிரமாக நம்புகிறாள். யாரிடமும் லூகாஸ் பேசுவதற்கு யாரும் அனுமதிப்பதில்லை. இன்னொரு பக்கம் லூகாஸ் தான் குற்றமற்றவன் என ஒவ்வொரு முறையும் எல்லோரிடமும் புரியவைக்க முயன்று தோற்று நிற்கும் இடங்கள் ஒரு சராசரி மனிதனின் காயங்களை அழுத்தமாக நமக்கு உணர்த்துகிறது. லூகாஸ் சிறைக்குச் சென்றபின் தியோவின் வீட்டிற்கு வரும் அவன் மகன் கிளாராவிடம் பேச வேண்டுமெனச் சொல்கிறான். தியோ மறுக்க அந்தப் பையன் பலவந்தமாக ஓடிப்போய் கிளாராவிடம் ‘ஏன் பொய் சொன்ன’ எனக் கத்துகிறான். அவனையும் அடித்துத் துரத்துகிறாள். ( அவனும் அப்போது அடல்ட் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. அப்பாவிடம் போகிறேன் என்று சொல்லும் மகனிடம் ‘உன் அப்பா உங்கிட்டயும் மிஸ்பிகேவ் பண்ணலாமென அம்மா எச்சரிக்கிறாள்.) சமூகம் ஒரு மனிதனை எத்தனை எளிதாக வேட்டையாடக் காத்திருக்கிறது என்பதை இந்தப் படம் வலுவாக நமக்கு புரியவைக்கிறது. கிளாராவின் மனநிலையிலிருந்து பார்க்கையில் தனித்து விடப்படும் குழந்தைகள் எத்தனை ஆபத்தானவர்கள் அல்லது பரிதாபத்துக்குரியவர்கள் என்பது இன்னொரு முக்கியமான விசயம்… உலகம் முழுக்கவே குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனது பதிமூன்று வயதிற்கு முன்பாக நிறைய முறை நானும் பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதற்குப் பிறகான குழந்தையின் மனநிலை எத்தனை வேதனைமிக்கது என்பதை அந்தரங்கமாகவே அறிவேன். எல்லாவற்றையும் தாண்டி அம்மா சிறையிலிருந்த போது என்னிடம் அத்துமீறியவர் யாரென்பதும் அந்த வலி எத்தனை தீவிரமென்பதும் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் உடல் முழுக்க ஓடிக்கொண்டிருந்த நடுக்கத்திற்கு இன்னொரு காரணம். முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இப்போது வரையிலும் அந்த வலியின் பாதிப்பை நான் உணர்கிறேன். வாழ்க்கை முழுக்க எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பாதுகாப்பில்லாத உனர்விற்கு இதுவும் காரணமோ என பல சமயங்களில் நான் நினைத்ததுண்டு. பதினைந்து வயது வரை தாய்மையின் அருகாமை கிடைக்கப் பெறாத குழந்தைகள் பெரும்பாலும் எளிதில் இப்படியான பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது பெரும்பாலும் ஆய்வறிக்கை சொல்லும் நிஜமாக இருக்கிறது. முடிந்தவரை நம் குழந்தைகளுடம் நாம் இருப்பது மட்டுமே அவர்களுக்கு நம்மால் தரமுடிந்த ஆகச் சிறந்த பரிசு. பல சமயங்களில் குற்றவாளிகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு எப்போதும் போல் மரியாதையுடன் வாழ்கிறார்கள். எதிர்பாரதவிதமாய் சில சமயங்களில் நிராபராதிகள் ஒரு தவறான புரிதலின் மூலம் மொத்த வாழ்வும் சிதையும்படி ஆகிவிடுகிறார்கள். எல்லா சமூகமும் சக மனிதனை வேட்டையாடுவதற்கு ஒரு காரணத்தை மட்டுமே தேடிக் கொண்டிருக்கிறது. நிஜங்களை அல்ல.


நார்வேயின் முக்கிய இயக்குநரான தாமஸ் விண்டர்ஸ்பர்க் லார்ஸ் வான் ட்ரையருடன் இணைந்து முக்கியமான திரைப்பட மாற்றங்களுக்காக இயங்கி வருகிறவர். இவரது முந்தைய படங்களான the celebration, its all about love இரண்டும் முக்கியமானவை. இந்தப் படத்தின் ஒளிப்பதிவும் லூகாஸாக நடித்திருக்கும் mads mikkilson ன் நடிப்பும் அபாரமான ஒன்று….


63 views

Comments


bottom of page