top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

“ஆச்சர்யங்களின் பூமியில் ஓர் அதிசயத் தமிழன்.”
யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' போன்ற தமிழிலக்கிய முதுமொழிகள் மூலமாக தமிழர்கள் காலங்காலமாக உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு கடல் வழியாகவும், தரைவழியாகவும் பயணித்துச் சென்று அப்பகுதி மக்களுடன் இயைந்து ஒப்புரவுடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பயணங்களும், புலம்பெயர்தலும் தமிழர் வாழ்வின் முக்கிய அம்சங்கள். ஆமைகளின் வழித்தடங்களைப் பின்பற்றி கடல் பயணங்களை தமிழர்கள் மேற்கொண்டனர் என்று தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. பர்மாவின் கடற்பகுதிகளில் மூழ்கிய தேக்குமரங்கள் தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துவிடுமாம். சிங்களம், கடாரம், சாவகம், என்று அழைக்கப்படும் தற்கால கிழக்காசியத் தீவுகளுக்கு சோழ பாண்டிய அரசகுல மக்கள் வணிக ரீதியாகவும், திருமண பந்தகள் மூலமாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் பயணித்தை நாம் வாசித்திருக்கிறோம்.

மேற்குலக நாடுகளால் முக்கியமாக ஹாலிவுட் திரைப்படங்களால் காட்டுமிராண்டிகளாகவும் நாகரீகமற்றவர்களாகவும் சித்தரிக்கப்பட்ட தேசங்களில் பப்புவா நியூகினியூம் ஒன்று. ஆஸ்திரேலியாவிற்கு அருகிலிருக்கும் பசிஃபிக் பெருங்கடல் தீவுகளில் ஒன்றான இந்நாடு இயற்கை வளங்கள் நிரம்பியது. 800க்கும் அதிகமான மொழிகளை பேசக்கூடிய பழங்குடி மக்கள் வாழும் இந்த தேசம் சில காலத்திற்கு முன்பு வரையிலும் வெளி உலகத்தால் அதிகம் தவறாக புரிந்ந்துகொள்ளப்பட்டிருந்தது. ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து மனித இனம் மேற்கொண்ட முதல் இடம்பெயர்தலில் பாப்புவா நியு கினிக்கு மனிதர்கள் சென்றடைந்தனர். இன்றளவும் தமது பழக்க வழக்கங்களையும் இன அடையாளங்களையும் துறக்காமல் அவர்கள் வாழந்து வருகின்றனர். குறிப்பாக தமிழர்களுக்கும் இவர்களுக்குமான அடையாள ஒற்றுமைகள் அனேகம். டி.என்.ஏ வின் அடிப்படையில் பார்த்தோமானால் கன்னியாகுமரி மக்களின் டி.என்.ஏ வகை இந்தத் தீவு மக்களின் டி.என்.ஏ வோடு பொருந்திப் போகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களின் மொழியிலும் அனேகம் தமிழ் சொற்களை நாம் காணமுடிகிறது. இங்கிருக்கும் ஒரு தீவைச் சேர்ந்த மக்கள் மாலை நேரங்களில் நெற்றியில் சுண்ணாம்பால் பொட்டு வைத்துக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்கிறார்கள். வெற்றிலை பாக்கு வைத்துதான் எல்லா சுபகாரியங்களையும் பேசுகிறார்கள். ஒருவிதத்தில் சத்தியம் செய்து கொடுப்பதுபோல் இதனை மதிக்கிறார்கள். தமிழர்களிடமிருக்கும் கூத்துக் கலையைப் போல் இவர்களிடமும் வேறொரு வடிவத்தில் இருக்கிறது. இப்படி தமிழ் மக்களின் வாழ்வோடு ஏராளமான ஒற்றுமைகள் இந்தத் தீவு மக்களுக்கு இருந்தாலும் இருபது வருடங்களுக்கு முன்புவரை இங்கு தமிழர்கள் யாரும் வாழ்ந்திருக்கவில்லை என்பது ஆச்சர்யம்.

சிவகாசியில் எளிய குடும்பத்தில் ஒரு தம்பி தங்கையோடு பிறந்த சசிந்திரனின் அப்பா பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்தார். சிவகாசியில் பள்ளிக் கல்வியை படித்தபின் 1996 ம் வருடம் பெரியகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் பி.எஸ்.ஸி அக்ரி முடித்த நேரத்தில் அவரது தந்தையார் தவறிவிடுகிறார். நெருக்கடியிலிருக்கும் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு அவர்மீது விழ, பட்டம் முடித்த சான்றிதழைக்கூட வாங்காமல் வேலை தேடத் துவங்குகிறார். மலேசியாவில் கே.எஃப்.சி உணவகத்தில் ரீடைல் மேனஜராக அவருக்கு வேலை கிடைக்கிறது. ஒரு வருட காலம் அங்கு வேலை செய்து வந்த நிலையில் எதிர்பாராதவிதமாய் உலகம் முழுவதிலும் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைகிறது. பெருமரங்கள் விழும்போது அம்மரத்தில் கூடுகட்டி வாழும் பறவைகளும் இடம்பெயர நேர்கிறது. இந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வேலையிழந்த பல்லாயிரக்கணக்கானோரில் சசிந்திரனும் ஒருவர்.

மலேசியாவிலிருந்தபடியே அருகிலிருக்கும் சிங்கப்பூரில் வேலை தேடத் துவங்குகிறார். வெள்ளிக்கிழமை இரவு கோலாலம்பூரிலிருந்து பேருந்தில் சிங்கப்பூர் செல்பவர் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் வேலை தேடிவிட்டு மீண்டும் கோலாலம்பூர் திரும்பிவிடுவார். நிறைய முறை அலைந்தும் வேலை கிடைப்பதாக இல்லை. கிடைத்த வேலையெல்லாம் மனம் தளராமல் செய்தார். அச்சமயம் அவருக்குப் பழக்கமான ஒரு துணிக்கடைக்காரர் புதிய சட்டைகளைக் கொடுத்து விற்கச் சொல்கிறார். அதனை விற்றால், சிறிய தொகை கமிஷனாக கிடைக்குமென்பதால் தயங்காமல் அந்த வேலையைச் செய்து தனது பயணச் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார். இப்படியானதொரு சூழலில்தான் தூரத்திலிருக்கும் ஒரு புதிய நாட்டில் வேலை வாயுப்பு குறித்த ஒரு விளம்பரம் அவர் கண்ணில் படுகிறது.
1999ம் வருடம் பப்புவா நியூகினியின் நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்திலிருந்த பல்பொருள் அங்காடியில் மாதம் 900 கினா சம்பளத்தில் மேலாளராக வேலைக்குச் சேர்கிறார். இந்தியர்களை அரிதாகவே பார்க்க சாத்தியமுள்ள அந்நாட்டில் அவர் எதிர்கொண்ட இடர்கள் ஏராளம். கிறிஸ்தவ நாடான அங்கு அசவைமே பிரதானமான உணவு. சசிந்திரன் சைவ உணவுப்பழக்கத்தை கடைபிக்கும் சசிந்திரனுக்கு சசிந்திரனுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. அதைவிடவும் பிரச்சனையாக இருந்தது மொழி. ஆங்கிலமும் ஜெர்மனும் கலந்த அந்த நாட்டின் தேசிய மொழியான பிஜினை வேகமாகக் கற்றுக் கொள்ளத் துவங்குகிறார். மிகுந்த போராட்டங்களுக்கு நடுவே ஆறேழு மாதங்களில் அந்த வாழ்க்கைக்கு அவர் தன்னை தகவமைத்துக் கொள்ளத் துவங்கிய நேரத்தில் எதிர்பாராத விதமாக முதலாளி கடையை விற்க போவதாகச் சொல்கிறார். சசிந்திரன் அதிர்ச்சியடைந்தபோதும் மனம் தளராமல் வேறு வேலைகளுக்கு முயற்சி செய்யத் துவங்குகிறார். இரண்டு மூன்று மாதங்கள் அலைந்து நாற்பதுக்கும் மேற்பட்ட வேலைகளுக்கான நேர்முகத் தேர்விற்குச் சென்றுவந்தவருக்கு எங்குமே சாதகமான பதில் கிடைத்திருக்கவில்லை. கடையின் முதலாளி மலேசியாவைச் சேர்ந்தவர், கடையை அவர் சொன்ன விலைக்கு வாங்கிக் கொள்ள ஒருவருமில்லாத சூழலில் அந்நிறுவனத்தை குத்தகைக்கு எடுத்து நடத்துமாறு சசிந்திரனிடம் கேட்கிறார். கையில் எந்த முதலீடும் இல்லாத நிலையிலும் ஒரு சவாலாக சசீந்திரன் அதனை ஏற்றுக் கொள்கிறார்.

முதலாளியோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு மாதமும் ஐந்து லட்சரூபாய் அவருக்குக் கொடுக்க வேண்டும், கூடுதலாக ஐந்து லட்ச ரூபாய் இருந்தால்தான் கடையை நடத்த முடியும். தன் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய உறுதியில் தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறார். கல்லூரி காலத்தில் அறிமுகமாகி காதலித்த சுபாவை 2000ம் வருடத்தில் திருமணம் செய்துகொள்வதாக முன்பே பேசியிருந்தார்கள். அப்போதைய சூழலில் தொழிலை ஸ்திரப்படுத்த வேண்டிய தேவையிருந்ததால் திருமணத்திற்கு கூடுதலாக ஒரு வருடம் அவகாசம் கேட்பவர், கொஞ்சம் பணத்தைத் திரட்டிக் கொண்டு பப்புவா நியூகினிக்குத் திரும்புகிறார். முதல் சில மாதங்கள் கடையில் அவர் எதிர்பார்த்த வியாபாரம் இருக்கவில்லை, அவர் சோர்ந்துவிடவில்லை. அவரது நம்பிக்கைக்கும் கடின உழைப்பிற்கும் பலனாய் வியாபாரத்தில் மாற்றம் தெரிகிறது.

ஒரு வருடத்திற்குள் முதலாளிக்குத் தரவேண்டிய கடன் தொகையை முழுமையாகக் கொடுத்துவிட்டு கடையை தனதாக்கிக் கொள்கிறார். 2001 ம் வருடம் நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்குத் திரும்பி வாக்களித்தபடியெ திருமணம் செய்துகொண்டு தன் மனைவி சுபாவையும் பப்புவா நியூகினிக்கு அழைத்துச் செல்கிறார். தமிழ்மொழியின் மீது தீவிர பற்றுக் கொண்டவரும், ஏராளமான ஆய்வுகளைச செய்துவருபவருமான சுபாவுக்கு அங்கு சென்ற முதல் சில மாதங்களில் தாய்மொழியை மறந்துவிடுவமோ என்கிற அளவிற்கு ஆகிவிட்டது. அவரது தோழிகள் அனேகம் பேர் அமெரிக்கா ஐரோப்பாவில் வசித்திருக்கிறார்கள். அவர்களிடம் அலைபேசி வழியாக தொடர்புகொள்ளவும் முடியாது, அந்தக் காலகட்டத்தில் அந்நாட்டில் மொபைல் பரவலாகியிருக்கவில்லை. உலகின் மற்ற நாடுகளிலிருந்து பத்துப் பதினைந்து வருடங்கள் பின்னோக்கி இருக்கும் இங்கு எப்படி சமாளிக்கப் போகிறோமென அவர் அச்சப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்குப்பின் அவரும் உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்ளத் துவங்கி கணவருக்கு உதவியாக வேலைகளையும் பார்க்கிறார்.

2004 வருடம் செப்டம்பர் 17ம் தேதி இரவு, அவரது மனைவியும் குழந்தையும் வீட்டிலிருக்க, வேலைமுடிந்து சசீந்திரன் திரும்பி வருகிறார், காரிலிருந்து இறங்கிய அதேநேரம், வீட்டைச் சுற்றிப் பதுங்கியிருந்த பத்து இருபதுபேர் அடங்கிய கும்பல் திமுதிமுவென அவரைச் சூழ்ந்து தாக்கத் துவங்குகிறார்கள். அந்த அசாதாரண சூழலில் சுபா தன் குழந்தையக் காக்கும் பொருட்டு விரைந்து எல்லாக் கதவுகளையும் சாத்திவிட்டு காவல்துறைக்கு ஃபோன் செய்கிறார். காவல்துறை அங்கு வந்து சேர்ந்தபோது வெட்டுப்பட்டு சசிந்திரன் ரத்தவெள்ளத்தில் கிடந்திருக்கிறார். வலதுகை மணிக்கட்டில் மூன்று நரம்புகளில் ஆழமான வெட்டு. அங்கு சரியான மருத்துவ வசதிகள் இல்லை, அந்தக் காலகட்டத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள்தான் விமான சேவை. சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டுமென்றால்கூட நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டும். அப்படியே விட்டால் கையை இழக்க நேரிடும் என்ற சூழலில் அங்கிருந்த ஒரு ராணுவ மருத்துவர் அவரது கைக்கு சிகிச்சை அளித்து சரி செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவிட்டது. தொடர்ந்து அந்த நாட்டில் இருப்பதற்கான விருப்பமில்லாமல் ஆஸ்திரேலியா செல்வதற்கான விசாவுக்கு முயற்சிக்கிறார்கள்.

2005ம் வருடத்தில் ஆஸ்திரேலியாவிற்கான விசா கிடைத்துவிட, அதற்கான தயாரிப்பு வேலைகளுக்காக குடும்பத்தோடு தமிழ்நாட்டிற்கு வருகிறார். அச்சமயத்தில் அவருக்கு சிறுநீரகத்தில் சிறிய அறுவை சிகிச்சை ஒன்று நடக்கிறது. எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்கையில் எதிர்பாராதவிதமாய் சிங்கப்பூர் விமானநிலையத்தில் சிறுநீரக சிகிச்சைக்காக மருத்துவர் கொடுத்தனுப்பிய மருந்து காணாமல் போகிறது. மருந்து காணாமல் போனதைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தபோது எல்லோருக்குமே ஆச்சர்யம். சிங்கப்பூரில் அப்படி நடக்க சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். இப்போது ஆஸ்திரேலியாவிற்குள் செல்ல முடியாத சூழல் உருவாக, பப்புவா நியூகினிக்கே திரும்புகிறார்கள். ஆஸ்திரேலியா அவர்களுக்கு அருகாமையிலிருந்த நாடு என்பதால் சிகிச்சைக்கு இந்தியா வருவதை விடவும் அங்கு செல்வதுதான் எளிது, ஆனால் இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு எளிதில் அங்கு செல்ல முடியாது, ஆனால் பப்புவா நியூகினி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆன் அரைவல் விசா என்ற நடைமுறை இருந்ததால் சசிந்திரன் தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு அந்நாட்டு பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்கிறார். தற்செயலோ இயற்கையின் விருப்பமோ அவர்களுக்கும் அந்த தேசத்திற்குமான பிணைப்பு முடியவில்லை.

அந்நாட்டில் அவர்களது புதிய அத்யாயம் துவங்கியது. மக்களிடம் அவர்களுக்கு இருந்த நன்மதிப்பின் காரணமாய் அவர்களது வியாபாரம் முன்னிலும் சிறப்பாக நடக்க, வெவ்வேறு ஊர்களில் புதிய கிளைகளைத் துவங்குகிறார்கள். 2007 ம் வருடத்திற்குப்பின் சொந்தமாக நிலம் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதால் அவர்களால் தொழிலை சிரமமின்றி நடத்த முடிந்தது. இதற்கு நடுவே சிங்கப்பூரில் தலைமைத்துவ வகுப்புகளில் கலந்துகொண்டு தன்னை வளர்த்துக் கொண்ட சசிந்திரன் பப்புவா நியூகினியில் உள்ள இளைஞர்களுக்கு அந்த திறன் சார்ந்த வகுப்பை எடுக்கிறார். ஒரு தொழிலதிபர் என்பதையும் மீறி அவர் மீதான பார்வை மக்களிடம் மாறத் துவங்குகிறது. உள்ளூர் மொழியையும் மக்களையும் புரிந்துகொள்ளத் துவங்கியபின் போக்குவரத்து வசதிகள் இல்லாத தொலைதூர கிராமங்களுக்கு இவர்களே வாகனங்களின் மூலமாய் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகிக்கத் துவங்குகிறார்கள். அம்மாதிரியான தருணங்களில் அந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழும் மக்களின் வறுமை அவர்களைத் தொந்தரவுச் செய்கிறது. இயற்கை வளமும் கனிம வளமும் நிறைந்த அந்நாட்டு மக்கள் கல்வி மற்றும் தொழில் நுட்பத்தில் பின்தங்கியிருப்பதையறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்கான விதைகளை விதைக்க முடிவு செய்கிறார்.

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வியாபாரியிலிருந்து சசிந்திரன் மாதிரியானவர்கள் வேறுபட்டவர்கள். தனது லாபத்தில் ஒரு பங்கை மக்களுக்கேத் திருப்பித் தரும் நோக்கத்தோடு கிராமங்களில் கல்விக்கூடங்களைக் கட்டிக் கொடுக்கிறார். ஏராளமான கிராமங்களில் இருந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கும் உதவிகள் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்க, யாருக்கும் முகம் சுளிக்காமல் உதவிகளை செய்யத் துவங்குகிறார். மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு உயர அச்சமயத்தில் அங்கிருக்கும் ஒரு பழங்குடி கிராமத்து மக்கள் அவரை தங்கள் இனக்குழுவில் ஒருவராக தத்தெடுத்துக் கொள்கிறார்கள். ஒரு பழங்குடி சமூகத்தில் இப்படியானதொரு நிகழ்வு அசாதாரணமானது.

2012 ம் வருட தேர்தலின் போது, உள்ளூர் மக்களின் வேண்டுகோளை ஏற்று நியூவெஸ்ட் பிரிட்டன் கவர்னர் பதவிக்குப் போட்டியிட்டவர் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் அங்கு கவர்னர் ஆவது அதுதான் முதல்முறை. ‘நன்மை செய்வதே என் மதம்’ என்கிற கொள்கையை உறுதியாக நம்பும் சசிந்திரன் கவர்னரானபின் ஐநூறுக்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டிக் கொடுத்திருப்பதோடு ஏராளமான பள்ளிக்கூடங்களையும் கட்டிக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த வளர்ச்சியைக் கண்டு எரிச்சலுற்ற உள்ளூர் அரசியல்வாதிகளில் சிலர் அவருக்கு எதிராக விஷமமான செய்திகளை பரப்பி சதி செயல்களை செய்த நிகழ்வுகளும் உண்டு. ஆனால் மக்கள் அவரைத் தங்களில் ஒருவராக மதிக்கிறார்கள். இதன் காரணமாகவே 2017 ம் வருட தேர்தலிலும் வென்றதோடு அந்நாட்டின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராகவும் இருந்துவருகிறார்.

’எந்த நிலையிலும் மனிதன் தன் வாழ்வை முழுமையாய் வாழ்வதுதான் பிரதானமானது’ என ஆல்ஃபெர் காம்யூ குறிப்பிடுவார். ஒரு மனிதனின் வாழ்வு தனக்காகவன்றி தான் வாழும் சமூகத்திற்கானதாய் பரிணாமம் பெறும்போதுதான் முழுமையடைகிறது. பிழைக்கச் சென்ற தேசத்தில் தன் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தால் சசிந்திரன் ஒரு தொழிலதிபராக யாருக்கும் தெரியாமல் போயிருப்பார். பப்புவா நியூகினி மக்களிடம் அவர் கொண்ட அன்பின் காரணமாய் இப்போது அவர் மட்டுமல்ல, அவரது நிலத்தைச் சேர்ந்த நாமும் அநாட்டு மக்களால் மதிக்கப்படுகிறவர்களாகிறோம். வறட்சியும் வறுமையும் நிரம்பிய தென் மாவட்டங்களில் பிறந்து வளரும் இளைஞர்களுக்கு இயல்பிலேயே போராட்ட குணங்கள் அதிகம். நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டும் சுமந்துகொண்டு உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று அவர்களால் எதிர்நீச்சல் போட்டு வெற்றிகாண முடியும். திரு சசீந்திரன் அவர்களின் வாழ்க்கைப் பயணமும் இதுபோல் சவால்களும் சாதனைகளும் நிறைந்ததுதான்.


26 views

댓글


bottom of page