top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

”ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தையே கடவுள்” - புனித ஜான்

Updated: Sep 6, 2023
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களது படைப்புகளை முன்னிறுத்தி சில அவதானங்கள்.


எழுத்தாளன் அவன் வாழும் காலத்திலேயே வாசிக்கப்படவும் கொண்டாடப்படவும் வேண்டும். அது அந்த எழுத்தாளனுக்கு செய்யும் மரியாதை மட்டுமல்ல, ஒரு மொழியின் வளர்ச்சிக்குச் செய்யும் கடமையும் கூட. ஒவ்வொரு எழுத்தாளனும் தனது முன்னோடிகளிடமிருந்தே படைப்பூக்கத்தையும் தொடர்ந்து மொழியில் வேலை செய்வதற்கான உத்வேகத்தையும் பெறுகிறான். குறிப்பாக புனைவிலக்கியவாதிக்கு தான் தேர்வு செய்யும் கதையுலகம் மொழிப்பயிற்சி அவ்வளவும் தேர்ந்த வாசிப்பினால் மட்டுமே திரண்டு வரக்கூடும். தனது படைப்புச் செயல்பாடுகளுக்கு முன்னோடிகள் தரும் அளப்பரிய கொடைக்கு பதிலீடாக ஒரு இளம் தலைமுறை எழுத்தாளன் அந்த முன்னோடிகளின் எழுத்துகள் குறித்தும் மொழியில் அவர்களது பங்களிப்பு குறித்தும் நன்றியோடு பேசித்தான் ஆகவேண்டும். அந்த வகையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு நடைபெறும் இந்த முழுநாள் நிகழ்வில் கலந்துகொள்வதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.


சில மாதஙங்களுக்குமுன் ஒரு கல்லூரி விழாவில் உரையாற்றச் சென்றிருந்தேன், சினிமாவைக் குறித்த உரையாடல் அது. முதல் பத்து நிமிடங்கள் திரைப்பட வரலாறு, திரைப்படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என பேசிக் கொண்டிருந்தபோது பார்வையாளர் மத்தியில் கடுமையான அமைதி. எல்லோர் முகத்திலும் ஒரு சோர்வு…. இந்த உரையை எதற்காக நிகழ்த்த வேண்டுமெனகிற சலிப்பு எனக்குள்ளும். நான் பேசிக்கொண்டிருந்த எல்லாவற்றையுமே ஒருவர் இணையத்தின் வழியாய் கற்றுக்கொள்ள முடியும் என்றால் நான் அங்கு உரையாற்ற வேண்டியதன் நோக்கம் என்னவென்கிற கேள்வி எழுந்த நொடியில் எதற்காக சினிமா எடுக்க வேண்டும் என்கிற கேள்வியை நோக்கி உரையைத் திசைமாற்றினேன். அந்த உரை அன்றைய தினம் முக்கியமானதொன்றாக மாறியது? கலை வடிவங்கள் குறித்து உரையாடுவதன் தேவை இன்றைக்கு எப்படி செய்ய வேண்டும் என்பதில் அல்ல, மாறாக எதற்காகச் செய்ய வேண்டுமென்கிற தெளிவைச் சுற்றியே இருக்க வேண்டியிருக்கிறது.


ஒருவர் ஏன் எழுத வேண்டும்?


இலக்கியம் அதில் இயங்குகிறவனுக்கு என்ன கொடுக்கிறது?


ஒரு சமூகத்தில் எழுத்தாளனின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது? ஒரு நாவலையோ சிறுகதையையோ கவிதையையோ எழுதும்போது ஒரு எழுத்தாளன் என்ன நினைக்கிறான்? இந்தக் கதை சமூகத்தில் ஏதோவொரு சலசலப்பை உருவாக்கி விடும் என நம்புகிறானா? உண்மையிலேயே சலசலப்பையும் மாற்றத்தையும் உருவாக்குவதுதான் எழுத்தாளனின் நோக்கமா?


‘கனவுகளற்றுப் பரிதவிக்கும் இந்த சமூகத்திற்கான கனவுகளை விதைப்பதே எழுத்தாளனின் பணி’ என ஓரிடத்தில் சி.மோகன் குறிப்பிடுகிறார். எந்தக் கனவுகளை ஒரு எழுத்தாளன் சமூகத்தில் விதைக்க முடியும்? இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை என்ற மனநிலை வலுத்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் தேவைகளே இல்லையென்றானபின் புத்தகங்களுக்கான தேவைகள் என்னவாய் இருக்கின்றன? யார் எனது வாசகன்? அவனோடு நான் என்ன பரிமாறிக் கொள்ளப் போகிறேன். நான் முன்பே குறிப்பிட்டதைப் போல் கனவுகளைத்தான்.
தனிமனிதனின் கனவுகள் எனப்படுபவை அவனது விருப்பு வெறுப்புகள் சார்ந்தவை. தனக்கு என்ன வேண்டும்? தனது தேவைகள் என்னவென்பதைச் சுற்றியே அமையக்கூடியவை. ஆனால் ஒரு சமூகத்தின் கனவுகள் அதன் வரலாற்று எச்சங்களிலிருந்து உருவாகக் கூடியவை. தனது பழைய நினைவுகளிலிருந்து துண்டித்துக் கொண்டு புதிய வாழ்விற்கான பாதையைக் கனவு காண்பதுதான் எழுத்தாளர்கள் செய்யக்கூடியதாக இருக்கிறதெனச் சொல்லலாம்.


கதை எனபது மறதிக்கும் நினைவிற்கும் இடையில் ஏற்படும் ஊடாட்டம் என்று 'மிலன் குந்தேரா' கூறுகிறார் . மறதி என்பது தனி நபர் சம்பந்தபட்ட ஒன்றில்லை. காலம் நிறைய செய்திகளை நம்மிடமிருந்து மறந்துபோகச் செய்கிறது. ஒரு நிகழ்வுக்கும் இன்னொரு நிகழ்வுக்குமான இடைவெளியில் எந்தத் தருணத்தையும் நினைவுகொள்ளமுடியாதபடி சூழல் இரைச்சல் மிகுந்து கிடக்கிறது. பெருந்துயரை, வன்முறைகளை, இழப்புகளை மனிதன் என்றோ கேட்ட செய்தியென வேகமாக மறக்கிறான். கடந்த காலத்தை பிரக்ஞையின்றி மறத்தலென்பது உங்கள் உடலின் உறுப்புகளை உங்களுக்கேத் தெரியாமல் தியாகம் செய்வதற்கு ஒப்பானது. இந்த மறதிக்கு எதிரான நினைவுபடுத்தலைத்தான் ஒரு எழுத்தாளன் பிரதான வேலையாக செய்துகொண்டிருக்கிறான். நினைவுபடுத்துதல் என்பது ஒரு முனைப்பான செயல். அது அதிகாரத்திற்கு எதிரானதொரு போராட்டம். சாதாரண மனிதர்கள் வாழ்ந்ததற்கான எந்தச் சுவடுகளும் இல்லாதபடிதான் மீண்டும் மீண்டும் வரலாறுகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்றைய எழுத்தாளன் வரலாறு பதிவு செய்ய மறந்த அந்த சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப்பாடுகளை அடையாளம் கண்டு நினைவுபடுத்துகிறான். மறக்கடிக்கப்பட்ட சமூகத்தின் மீது புதிய வெளிச்சமிட்டு காட்டுகிறான்.


எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் முப்பதாண்டுகால இலக்கியச் செயல்பாடுகளை கவனித்து வாசிக்கையில் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து நகரங்களில் குடியேறிய இரண்டு தலைமுறை மனிதர்களின் மனங்கள் என்னவாக மாறியிருக்கின்றன என்பதைத் தொடர்ந்து எழுதக் கூடியவராகவும், நாம் வியந்துபார்க்கும் தொழில்நுட்ப வளர்ச்சி நகர்மயமாதல் எல்லாமே மனிதனை பண்படுத்துவதற்குப் பதிலாக அவனுக்குப் புதிய சிக்கல்களைக் கொடுத்திருப்பதையும் எழுதுகிறவராகவும் இருக்கிறார்.
மனித வாழ்க்கையின் அதீத பரிணாமங்களும் மாற்றங்களும் இந்த நூற்றம்பைது வருடங்களுக்குள் உருவானவை. இந்த மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக தொழில்நுட்ப வளர்ச்சி, இடப்பெயர்ச்சி, பணம் என்பவற்றை நாம் குறிப்பிட முடியும். இந்த மூன்றும்தான் சிறு சிறு நகரங்களை மிக வேகமாக பெருநகரங்களாக மாற்றின. பெருநகர உருவாக்கங்களுக்குப் பின்னால் அந்நகரின் புறவயமான தோற்றம் மட்டுமில்லாமல் அகவயமானவையும் பெரிதளவில் மாறிவிடுகின்றன. ஒரு சிறுநகரைச் சுற்றியிருக்கும் கிராமங்கள், அங்கு வாழும் உயிரினங்கள், மக்கள், செடி கொடிகள், பேச்சுவழக்கு எல்லாவற்றிலும் பாரிய மாற்றம் நிகழ்கிறது.


இன்றைய சென்னையின் வட்டார வழக்கு கடந்த நூறு வருடங்களுக்கு முன்னால் திருவண்னாமலை, திண்டிவனம் பகுதியிலிருந்து சென்னைக்குப் புலம்பெயர்ந்தவர்களாலும் வியாபார நிமித்தமாக இங்கு வாழ்ந்து வந்த இஸ்லாமிய மக்களாலும் உருவானது. நண்பர் விநாயக முருகன் தனது வலம் நாவலில் நூறு வருடங்களுக்கு முன்னால் சென்னையில் பிரிட்டிஷ்காரர்கள் நரி வேட்டையாடியது குறித்து எழுதுகிறார். இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே அருகிப்போன மிருகமாக நரி இருக்கிறது. எம் கோபாலகிருஷண்னின் படைப்புகளில் வரும் திருப்பூர் என்ற நகரையும் நாம் இந்தப் பார்வையிலிருந்துதான் அணுக வேண்டியுள்ளது.


கடந்த நூறு வருடங்களில் மதுரை என்ற நகரம் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதை ரெண்டாம் ஆட்டம் தொடர் எழுதியக் காலத்தில் தேடித் தெரிந்துகொண்டேன். மதுரை என்பது எப்படி 200 கிராமங்களுக்கான தலைநகரமோ அதேபோல் தான் பெரும் தொழில் நகரமாக வளர்ந்திருக்கிறபோதும் திருப்பூர் என்ற ஊருக்குள் கிராம வாழ்வின் மிச்சங்கள் இன்னும் இருக்கிறதென்பதை கவனிக்க வேண்டும். நான் அவரது நாவல்களின் வழியாகவே அவரை வாசிக்கத் துவங்கினேன் என்பதால் அவரது நாவல்களை மையப்படுத்தியே உரையாடவும் விரும்புகிறேன்.


வேறு எந்த இலக்கிய வகைமைகளை விடவும் நாவல் தனிச்சிறப்பானதாகவும் பரந்த வாசகர்களைக் கொண்டதாகவும் இருப்பதற்குக் காரணம் அது வாசிக்கிறவனுக்கு ஒரு நிகர்வாழ்வின் அனுபவத்தைத் தரக்கூடியதாய் இருக்கிறது. நாவல் வாசிப்பு ஒரு மனிதனின் அன்றாடங்களிலிருந்தும் அதன் சலிப்புகள் மற்றும் போதாமைகளிலிருந்தும் சிறிய விடுதலையை தரக்கூடியதாய் இருக்கிறது. நாவல் என்னும் வடிவம் தோன்றிய இந்த நானூறு ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரும் அரசியல் தலைவர்களையும் தத்துவவாதிகளையும் நாவல்களும் நாவலாசிரியர்களும் பாரிய அளவில் பாதித்துள்ளார்கள். நீட்ஷேவும், ஃப்ராய்டும் தங்களது முதன்மையான ஆசிரியர்களாக தஸ்தாவ்ஸ்கியை பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள்.


எம்.கோபாலகிருஷ்ணன் ஒரு நேர்காணலில் இப்படிக் குறிப்பிடுகிறார். ஜெயமோகன் தன்னைச் சந்திக்கும் எழுதும் ஆர்வம் உள்ளவர்களை நாவல் எழுதச் சொல்லுவார். – ஏன் ஏராளமாக நாவல்கள் வரவேண்டும் ?


அம்மன் நெசவு என்ற அவரது முதல் நாவலை சில வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன். முதலில் அந்த நாவல் என்னை ஈர்க்கக் காரணம், அது கைத்தறி நெசவாளர்களின் வாழ்வை மையப்படுத்தியதாக இருந்தது. நான் இரண்டு வருட காலம் விசைத்தறி ஓட்டியவன். தறிக்கூடத்தில் வேலை செய்தவர்களுக்கு வினோதமான சில பழக்கங்கள் வந்துவிடும். தறிகளின் சத்தத்தில் காதுகள் எப்போதும் இரைச்சலையே கேட்டுப் பழக்கப்பட்டுவிடுவதால் காதுக்குள் தறி ஓடும் சத்தம் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். தறிக்கூடத்தில் சத்தமாகப் பேசிப் பேசி அதுவே இயல்பாகிவிடும். மதுரை நகரில் செளராஷ்ட்ரா இனமக்கள் அதிகம். இருபது வருடங்களுக்குமுன் இன்றைய செல்லூர் மற்றும் வில்லாபுரம் பகுதிகளில் இரவு பகலென ஓயாத தறிச்சத்தம் கேட்டபடியே இருக்கும். அதன்பிறகு அந்த மக்கள் வெவ்வேறு தொழில்களை நோக்கி நகர்ந்துவிட கைத்தறிகள் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து இப்பொழுது விசைத்தறிகளே ஆக்ரமித்திருக்கின்றன. கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் சேலைகள் தனித்துவமானவை. இந்த நாவலில் தேவாங்கு செட்டியார் இனமக்கள் கலைநுணுக்கமிக்க கைத்தறிச் சேலைகளை உருவாக்கிய காலகட்டத்தை விவரிக்கிறார். அளவில் சிறியதான இந்த நாவல் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழக்கூடிய சம்பவங்களை கச்சிதமாக இணைக்கிறது. எம் கோபாலகிருஷ்ணனின் நாவல்களில் ஒரு சம்பவம் நடக்கும் காலகட்டத்திலிருந்து இன்னொரு சம்பவம் நடக்கும் காலகட்டத்திற்கு நகரும் இடங்கள் கச்சிதமானவை. எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் எழுதக் கூடிய சாத்தியம் அவரது முதல் நாவலில் இருந்தே அவருக்கு வாய்த்திருக்கிறது.


ஒரு குறிப்பிட்டத் தொழிலைச் செய்யும் மக்களின் கதையை எழுதும்போது அவர்களின் வாழ்க்கைமுறை, வழிபாடு, நம்பிக்கைகள், தொன்மங்கள் எல்லாவற்றையும் கச்சிதமாய் எழுதவேண்டியது அவசியம். இந்த நாவலில் தேவாங்கச் செட்டியார்களுடன் அவர்களது குலதெய்வமான சௌடேஸ்வரியை வெவ்வேறு காலகட்டங்களில் அந்த மக்கள் வெவ்வேறு நிலங்களுக்கு எவ்வாறெல்லாம் சுமந்து அலைந்தார்கள் என்கிற பகுதிகள் மிகச்சிறப்பாக எழுதப்பட்டவை.


தமிழ்நாட்டில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் இலக்கிய பங்களிப்பு அனேகமுண்டு. ஆனால் அவையெல்லாமே நிலாச்சுவான்தார்களாகவும் பன்னையார்களாகவும் இருந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வைப் பேசும் கதைகள். மாறாக அதே தெலுங்கு மொழியைப் பேசக்கூடிய சிறுபான்மையினர் சமூகத்தை அடையாளப்படுத்தும் இலக்கியப் படைப்புகள் வெகு சொற்பம். சொல்லப் போனால் இல்லவே இல்லை. அந்தவகையில் அம்மன் நெசவு மிக முக்கியமான இனவரைவியல் நாவல். ஒரு இனவரைவியல் நாவலுக்குத் தேவையான எல்லா அடிப்படைகளும் இந்த நாவலில் இருப்பதோடு எந்தவிதமான மிகையுணர்ச்சிகளும் இல்லாமல் வாசிக்கிறவனுக்கு அசாத்தியமானதொரு வாழ்வனுபவத்தைத் தரக்கூடியது.

ஒரு நல்ல நாவல் அதை வாசிக்கிறவர்களுக்கு தமது வாழ்வுக்கு நிகரான இன்னொரு வாழ்வை வாழ்ந்த அனுபவத்தைத் தரவேண்டும். தனக்குப் பரிட்சயமில்லாத புதிய வாழ்வைத் தெரிந்துகொள்வதைத்தான் வாசகன் விரும்புகிறான். இதனாலேயே நல்ல நாவல்களுக்கு கதை சொல்லும் நுட்பங்களும் கதாப்பாத்திரங்களை சுவாரஸ்யமாகவும் வலுவாகவும் உருவாக்க வேண்டிய படைப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது. கோபாலகிருஷ்ணனின் தனித்தன்மையாக இவ்விடத்தில் நான் குறிப்பிட விரும்புவது அவரது நாவல்களில் நிரம்பியிருக்கும் இரைச்சலற்ற கலையமைதியைத்தான்.


தொண்ணூறுகளுக்குப் பிறகான உலகமாய்க்கல் கொள்கை இந்தியாவில் ஏராளமான சிறுநகரங்களின் முகங்களை மாற்றியது. அதில் முக்கியமான நகரம் திருப்பூர். தொழில் நகரமாய் மாற்றம் கண்ட திருப்பூரின் பொருளாதாரம் கலாச்சாரம் மற்றும் தனி மனித உறவுகளெனன பண்பாட்டு மாற்றத்தை பதிவு செய்த மணல் கடிகை நாவலுக்கு தமிழ் யதார்த்தவாத நாவல்களின் வரிசையில் முதன்மையானதொரு இடம் எப்போதுமுண்டு


சில வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிகை நேர்காணலில் அவரிடம்

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டிக்குப் பிறகானதிருப்பூர் தன்அடையாளத்தை இழந்துவருவதுகுறித்து என்னநினைக்கிறீர்கள்? என்று கேட்கப்படும் கேள்விக்கு பின் வருமாறு பதில் அளிக்கிறார்.


‘மணல்கடிகை’ நாவலில்உள்ள திருப்பூர் இன்றுள்ள திருப்பூர் அல்ல. 2004-ல் அந்த நாவல் வெளிவந்தபோது திருப்பூர்தன் செழிப்பின் செல்வாக்கின் உச்சத்தில்இருந்தது. இன்று திருப்பூர் கலவையான ஒரு கலாச்சார நிலம். தொழிலாளர்கள் பலரும்பீகாரிலிருந்தும் ஜார்கண்டிலிருந்தும்வந்திறங்கியுள்ள வடக்கத்தியர்கள். ஒவ்வொரு நாளும் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலையில்வந்துசேரும் ரயில்களிலிருந்துநூற்றுக்கணக்கானவர்கள் இறங்குகிறார்கள். நைஜீரியர்கள் பெருமளவுகுடிபுகுந்துள்ளனர்.

இதனால்ஏற்பட்டுள்ள நுட்பமானகலாச்சாரச் சிக்கல்கள் திருப்பூரின் சட்டஒழுங்கைக் கணிசமாகப் பாதித்துள்ளன. இதற்கிடையில்அரசின் பொருளாதார நடவடிக்கைகளோ பனியன்தொழிலுக்குச் சாதகமானதாகஇல்லை. திருப்பூர் பனியன் உற்பத்தி என்பது ஏராளமான உபதொழில்களைச் சார்ந்தது. ஒரு பருத்தி ஆடையை உற்பத்தி செய்வதற்கான கண்ணியில்எண்ணற்ற கைகளின் பங்குள்ளது.

இந்தச்சிறு, குறுந்தொழில்கள் பலவும்சமீபகாலமாய் நசிந்துபோயுள்ளன. நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமானபகுதியை ஈட்டித்தரும் தொழிலுக்குஉகந்த நடைமுறைகளையும் ஊக்கத்தையும்அளிப்பதன் வழியாகவே திருப்பூரை மீட்டெடுக்க முடியும். திருப்பூரில் இன்றுபழைய முதலாளிகளும் இல்லை. பழைய தொழிலாளிகளும் இல்லை. பழைய திருப்பூரும் இல்லை.”


அவரது இந்தப் பதில் நமக்கு முக்கியமான சில செய்திகளைச் சொல்கிறது. ஒரு எழுத்தாளன், தன் நிலத்தை தொடர்ந்து கவனிப்பது முக்கியமானது. ஏனெனில் திடீரென உருவாகும் வளர்ச்சிக்கு தன்னை தவகவமைத்துக் கொள்ள முடியாமல் போகையில் ஒரு நகரம் கலாச்சார ரீதியிலும் சூழலியல் ரீதியிலும் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேர்கிறது.


அந்த வகையில் திருப்பூர் நகரம் குறித்து உருவாக்கப்பட்ட சூழலியல் எச்சரிக்கைகள் காரணமாக அங்கிருந்த நிறைய ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் பங்களாதேஷிற்கும் இலங்கைக்கும் இடம் மாறிவிட்டன. அந்தத் தொழிற்சாலைகளை நம்பி வெவ்வேறு காலகட்டங்களில் வேலைக்கு வந்தவர்களின் நிலை என்னவாகும்? இன்னொரு புறம் மிக அதிகமாக நடக்கும் உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு. நீண்ட காலம் வேலை செய்தவர்கள் வேலையிலிருந்து அனுப்பப்பட்டு அவர்களுக்குப் பதிலாக குறைந்த ஊதியத்தில் வட இந்தியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஒரு புறம் புதிதாக வருகிறவனின் மீது உழைப்புச் சுரண்டல் நடத்தப்படுவதோடு இன்னொருபுறம் மத்திம வயதில் வேறு தொழில் எதும் கற்றுக்கொள்ளாமல் போனவர்கள் பெரும் எண்ணிக்கையில் வேலை இழக்கும் அபாயம் உருவாகிறது. இதனால் வட்டிக்கு கடன் வாங்குவதும், அந்தக் கடனைக் கட்டமுடியாத தற்கொலைகளும் நடக்கின்றன. இதை அரசியல் இயக்கங்களோ சமூக ஆர்வலர்களோ உணர்ந்து சொல்வதற்கு முன்னால் ஒரு கலைஞன் தான் முதலாவதாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.


தென் தமிழகத்தின் கிராமங்களிலிருந்து பிழைப்புத் தேடி வந்தவர்களை திருப்பூரில் அதிகம் காண முடியும். குறுகிய காலத்தில் நிகழ்ந்த இந்த அதீத இடப்பெயர்வு திருப்பூரின் புறத்தை மட்டுமில்லாமல் அகத்தையும் பாரிய அளவில் மாற்றியுள்ளன. மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஒவ்வொரு வருடமும் நிறைய இளம்பெண்கள் சுமங்கலித் திட்டத்தில் மூன்றாண்டு ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் வேலைக்கு வருவார்கள். எனது உறவினர்களில் நிறைய பெண்கள் இதுபோல் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றதுண்டு. தொடர் வறட்சி, வேலையின்மை, ஏழ்மையென சுருங்கிப்போன வாழ்விலிருந்து அந்தப் பெண்கள் தப்பித்தது இந்த வேலை வாய்ப்பினால் தான். மூன்று நான்கு வருடங்கள் வேலை செய்துவிட்டு வருகையில் அவர்கள் திருமணத்திற்கான ஒரு பவுன் தாலியை அவர்கள் வேலைசெய்த கம்பெனி நிர்வாகமே தரும்.


ஒரு புறம் இதைக் கேட்பதற்கு நல்லவிதமாகத் தோன்றினாலும் இன்னொரு புறம் அந்தப் பெண்களிடம் நிகழ்ந்த உழைப்புச் சுரண்டலையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். சொந்த ஊரில் ஒரே வீதியிலிருந்தாலும் சாதிய படிநிலைகள் காரணமாய் முகம் கொடுத்துப் பேசிக்கொள்ள வாய்ப்பில்லாமலிருந்த நிறைய பேர் இந்த இடப்பெயர்வில் ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்யக் கூடிய சூழல் உருவானபோது புதிய நட்புகளும் காதல்களும் உருவாகின. இந்த முக்கியமானதொரு மாற்றத்தை இந்த நாவல் அடையாளப்படுத்துகிறது. வெவ்வேறு நிலங்களைச் சேர்ந்த, சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வந்து சேர்ந்து வாழத் துவங்கியபோது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பன்மைத்துவம் அந்நகரில் உருவானது, இந்தப் பன்மைத்துவம் மணல்கடிகை நாவலிலும் வெளிப்பட்டிருப்பதால் தான் இந்த நாவல் ஒரு க்ளாசிக் தன்மையை அடைகிறது.


பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஏற்படுத்தின விளைவுகள். ஏராளமான பணம் அதை வைத்திருப்பவர்களைக் கொண்டாட்டத்தை தேடச் சொல்கிறது. இன்னொருபுறம் அவர்களுக்காக உழைக்கக் கூடிய இந்த புலம்பெயர் மக்கள். வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆண் பெண்கள் ஒரே இடத்தில் வேலை செய்யக் கூடிய இந்தச் சூழலில் உழைக்கும் வர்க்கத்தினரிடமிருந்து சாதிய வேறுபாடுகளைக் களையச் செய்து எல்லோரும் ஒன்றென நினைக்கச் செய்ய வைத்திருக்கிறது. மாறாக பணம் சம்பாதிக்கும் பெரும் முதலாளிகளுக்கு மத்தியில் சாதிய இறுக்கம் முன்னிலும் அதிமாகக் கூடிய சூழலை உருவாக்கி விட்டிருக்கிறது. திருப்பூர் என்ற நகரின் அகமும் புறமுமான பண்பாட்டு மாற்றங்களைச் சித்திரமாக்கியிருக்கும் இந்த நாவல் மிக முக்கியமான இலக்கியச் சாட்சியம்.

சிறப்பானவையென மதிப்பிடும்படியான நூறு தமிழ் நாவல்களை எடுத்துக் கொண்டோமானால் அவற்றில் எண்பது நாவல்கள் குடும்பத்தைச் சுற்றி நிகழ்வதாக இருக்கின்றன. பெருங்கதையாடல்களை கதைக்களங்களாகக் கொண்ட நாவல்கள் நம்மிடையே வெகு சொற்பமே… நாவல்களின் களமும் கட்டுமானமும் பழக்கப்பட்டவையாக இருப்பதோடு இந்த எல்லா நாவல்களிலும் இருக்கக் கூடிய பொதுவான தன்மையாக அது வெற்றிபெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு மட்டுமே எழுதப்பட்டதாக இருக்கிறது. கலை வடிவங்களில் வெற்றி தோல்வி என்பது வாசக எண்ணிக்கையிலோ விற்பனையிலோ அல்ல, ஒரு படைப்பின் முழுமையில் மட்டுமே அடங்கியிருக்கிறது.


எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி வெவ்வேறு குடும்பங்களில் உள்ள தம்பதியரின் வாழ்வைக் காட்சிப்படுத்துவதைக் கொண்டு வெறுமனே இதனை குடும்ப நாவலாக குறிப்பிடமுடியாது. அசோகமித்திரனின் நாவல்களில் கதை சொல்லுமுறை ஒரு நீரோட்டத்தை எந்தச் சலனமுமில்லாமல் அமைதியாகக் கவனிக்கும் அனுபவத்திற்கு ஒப்பானது. எந்தவிதமான அலங்காரச் சொற்களோ திடீர் திருப்பங்களோ இல்லாமல் வாழ்க்கை எத்தனை சலிப்பானதோ மெதுவானதோ அத்தனை மெதுவாக நகரக்கூடியது. அந்த மொழிநடையில் அந்த வாழ்வை எழுதுவதென்பது மொழியில் தேர்ந்த ஒருவனுக்கு மட்டுமே சாத்தியம். அசோகமித்திரனுக்குப் பிறகு தமிழில் அந்த கலை கைவந்த ஒரு எழுத்தாளராக எம்.கோபாலகிருஷ்ணனச் சொல்லலாம்.


வழமையான குடும்ப நாவல்கள் அன்பையும் ஏக்கத்தையும் பிரிவையும் ரொமாண்டிசைஸ் செய்து எழுதப்படுபவை. போலியான உணர்வுக்குவியல்களை முன்னிறுத்தி எழுதப்படும் இந்த நாவல்களிருந்து மனைமாட்சி முற்றிலும் துண்டித்துக் கொண்டு அன்பு காலாவதியாகிப்போன தருணத்திலிருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் நிகழும் மாற்றங்களை முன்னிறுத்திப் பேசுகிறது. மனித மனதிற்கு தோல்வியின் மீது ஒரு அடங்காத வசீகரம் உண்டு. அது இடிபாடுகள் மீதான வசீகரம். கலைஞன் இந்த வசீகரத்தினை யாழில் நரம்பிசைத்துப் பாடுவதைப்போல் பாடியபடியே இருப்பதில் பிரயோஜனமில்லை. மிகையான எல்லாமும் கலைக்கு பொருந்தாத கிரீடங்களே.. மனைமாட்சி இந்த கிரீடங்களை முற்றாக மறுத்து நிற்கிறது.

‘எறும்புப் புற்றுக்கு உணவிடுவதுதான் லௌகீகம்’. என எறும்புக்கு உணவிட்டுக் கொண்டே அது கடிக்கிறது என்று ஏன் புகார் சொல்ல வேண்டுமென நகுலனின் நவீனனது பார்வைக்கு முற்றிலும் நேரெதிரான வாழ்வைக் கொண்டது மனைமாட்சியில் வரும் மனிதர்களின் வாழ்வு. ஒவொவொருவரும் தமது வாழ்வை சற்றே விலகி நின்று பார்த்தால் அங்கு வெண்மையுமில்லாமல் கருப்புமில்லாமல் எல்லோரது தலைக்குமேலும் ஒரு சாம்பல் நிறமே திட்டுத்திட்டாய் பரவியிருப்பதை புரிந்துகொள்ள முடியும்.


வாழ்க்கை அன்றாட நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல, நிராசைகளின் தோற்றுப்போன கனவுகளின் ஏமாற்றங்களின் எச்சங்கள்தான். எதையும் யாரையும் புனிதப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே சொலவ்துதற்குத்தான் ஒரு கலைஞனுக்கு நிதானமும் ஞானமும் தேவைப்படுகிறது.


யதார்த்தவாதம் இலக்கியத்தில் காலாவதியாகிப் போனது என்ற குரல் ஒலித்துக் கொண்டிருந்த, ஒலித்துக் கொண்டிருக்கிற காலத்தில் இவரது படைப்புகள் யதார்த்த உலகையெ அதிகம் பிரதிபலிக்கிறது.

ஒரு இடத்தில் அவரே குறிப்பிடுகிறார்.


1995-க்குப் பிறகு வந்ததுதான் நவீனத்துவம், பின்நவீனத்துவம் எல்லாம். இப்படியான பரிசோதனைகளில், கதைகளை கலைத்துப் போட்டு, மேற்கத்திய பாணியில் விளையாடுவது, வழக்கமான வடிவத்தை விடுத்து, வேறு வடிவத்தை மாற்றி எழுதுவது போன்ற விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை. கதைக்கு தகுந்த வடிவம்தான் வர வேண்டுமென தவிர, வடிவத்துக்காக ஒரு கதையை எழுத்தாளன் எழுதுவதில்லை. வாசகனும் அதை விரும்புவதில்லை.
அவரது சமீபத்திய நாவலான வேங்கை வனத்தை சற்றேறக்குறைய வாசித்து முடிக்கப்போகிறேன். அவரின் வழக்கமான கதையுலகிலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்ட புத்தம் புதிய களம். வேட்டை தான் களம் என்றதும் எனக்கு தனித்த ஆர்வம் உண்டானது. கானகன் நாவலுக்குப் பிறக்கு வேட்டை குறித்து தொடர்ந்து தேடிக் கற்கிறவனாக இருப்பதால் தமிழில் வேட்டை குறித்து எழுதப்படுகிற படைப்புகளைத் தேடி வாசிக்கிறேன். கானகன் நாவலின் முதல் பகுதியில் நிகழ்வும் வேட்டை நான் கேட்ட கதைகளிலிருந்து நான் உருவாக்கிய கற்பனையான ஒரு வேட்டை. சொல்லப்போனால் அது எனது உலகம் அங்கு புலியும் நானே, வேட்டைக்காரனும் நானே. அதனாலேயேதான் அதில் எல்லாமே சற்று மிகுதியாக இருக்கும். இயல்பிலேயே அதீதத்தை விரும்பக் கூடியவன் நான்.


மாறாக இந்த நாவலில் வேட்டை மட்டுமல்ல, போர்க் காட்சிகள் கூட தேவைக்கதிகமாக ஒரு வரி கூட எழுதப்படவில்லை. வேட்டை யுத்தம் வரலாற்றுப் பின்னனி இவை எல்லாமே ஒரு புனைவெழுத்தாளனுக்கு பெரும் கிளர்ச்சியைத் தரக்கூடியவை. முடிந்தவரை அதனை விஸ்தரித்து எழுதவே விரும்புவார்கள். மாறாக இங்கு எல்லாமே இயல்பில் அடங்குகிறது. இந்த நாவலிலும் வெவ்வேறு காலகட்டத்தின் கதையை எந்தவிதக் குழப்பமுமின்றி கச்சிதமாகப் பின்னியிருக்கிறார். முதல் சில பக்கங்களில் எனக்கு உரையாடல் பகுதிகள் ஈர்ப்பில்லாமலிருந்தது, ஆனால் முகலாயக் கதை துவங்கியபின் நூர்ஜஹான் ஜஹாங்கிருக்கும் மும்தாஜ் ஷாஜகானுகுமான உறவுகள் எழுதப்பட்ட விதமும், உரையாடலும் அந்தப் பெண் கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்ட விதமும் மகத்தான வாசிப்பனுவத்தைத் தரக்கூடியவை.


நாவல் எழுதுவதென்பது பட்டுப் புழுவிலிருந்து பட்டுநூல் உருவாகி அந்த நூல் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய உடையாக உறுமாறுவதைப்போல நிறையக் காத்திருப்புகளும் மெனக்கெடல்களும் கோரக்கூடியதொன்று. நல்ல நாவலை எழுதவெண்டுமென விரும்புகிற எல்லோருமே அதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொளவது அவசியம். கல்விப்புலங்களில் இலக்கிய வகுப்புகளில் நாவல்கள் குறித்து கற்பிக்கப்படாமல் இல்லை, ஆனால் அங்கிருந்து நல்ல நாவல்கள் உருவாகமல் போனதற்கு முக்கியக் காரணம், கல்விப் புலங்களில் பாடங்களாக இன்னும் பழமையான குடும்ப நாவல்களே கோலோச்சுகின்றன. புனைவை விடவும் யதார்த்த வாழ்க்கை மிக வேகமாக பரிமாற்றம் அடைந்தபடியே இருக்கிறது, வாழ்வின் அபூர்வதருணங்களை இந்த சமூகத்தின் பெரும் நிகழ்வுகளை மிகக் குறைவாகவே தமிழ் நாவல்கள் பேசியிருக்கின்றன. அந்தவகையில் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் நாவல்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் சிறப்பானவை.நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருப்பதோடு என்னையும் உரையாற்ற அழைத்த ஆகுதி பதிப்பகத்திற்கும் நண்பர் அகரமுதல்வனுக்கும் எனது நன்றிகள்.


135 views

Comments


bottom of page