top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

இனவரைவியல் நோக்கில் லக்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் நாவல்

-ம. சசிகலா




இனவரைவியல் என்பது குறிப்பிட்ட ஓர் இனத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும் துறையாகும். இது பண்பாட்டு மானுடவியலின் ஒரு பிரிவாக இருந்து, பின்னர் தனித்தன்மை கொண்ட புலமாக வளர்ந்துள்ளது. மானுடவியல் அறிஞரான மாலினோஸ்கி (Bronisław Malinowski) “குறிப்பிட்ட இன மக்களின் உறவு நிலைகள், அவர்களுடைய வாழ்க்கை, அவர்களின் சிந்தனை உலகம் ஆகியவற்றை அவ்வினத்தாரின் உணர்வோடு வெளிப்படுத்துவதே இனவரைவியல்” என்கிறார். தமிழ் மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி “ஒரு தனித்த சமூகத்தின் பண்பாட்டைப் பற்றி மானுடவியலாளர்கள் அச்சமூகத்தாரோடு நீண்டகாலம் ஒன்றி வாழ்ந்து ஆய்வு செய்து அதனை எழுத்தில் எழுதியளிக்கும் தனிவரைவு நூலே இனவரைவியல்” என்று விளக்கமளிப்பார்.


சமகாலத்தில் பலவிதமான கலைக் கோட்பாடுகளும் அறிவியல் சிந்தனைகளும் இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுவதுபோலவே இனவரைவியலும் இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இத்தகைய இருதுறை ஒப்பீட்டு ஆய்வுகள் வாசகருக்கு ஒரே நேரத்தில் இரண்டு புலங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்த வல்லவை. மேலும் இலக்கியம், இனவரைவியல் இரண்டுமே மானுட வாழ்வியல், பண்பாட்டுக்கூறுகளைப் பேசுபொருளாகக் கொண்டுதான் இயங்குகின்றன. இந்த வகையில் இவை இரண்டும் தமக்குள் நெருக்கம் கூடிய துறைகளாகும். அதேசமயம் தற்காலத் தமிழிலக்கியத்தில் இனவரைவியல் நாவல்களின் பங்களிப்பும் கணிசமான அளவில் இருந்துவருகிறது.


இக்கட்டுரையில் இனவரைவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கானகன் நாவலை எழுதிய லக்ஷ்மி சரவணக்குமார் நீலநதி, வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவை, யாக்கை, மச்சம் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் மோக்லியைத் தொலைத்த சிறுத்தை என்னும் ஒரு கவிதைத் தொகுப்பையும் உப்புநாய்கள், கானகன் என்னும் இரண்டு நாவல்களையும் எழுதிய எழுத்தாளராவார். இதுவன்றி, 2012ஆம் ஆண்டு வெளிவந்த அரவான் மற்றும் தற்போது வெளிவரவிருக்கிற காவியத்தலைவன் ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

மிகச் சமீபத்தில் வெளிவந்த லக்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் நாவல் கதைப்போக்கில் பளியர் என்னும் இனத்தைப் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது. அந்நாவலின் முன்னுரையில் பளியர் இன மக்களுடனான சந்திப்புகள் மற்றும் தகவல் சேகரிப்புகள் மூலமே பளியர் சமூகம் பற்றிய விவரணைகளைப் பதிவு செய்திருப்பதாக நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்தக் கூற்று தன்னளவில் இந்த நாவலை இனவரைவியல் நாவல் என நாவலாசிரியர் உரிமை கோரிக்கொள்ளும் கூற்றாக அமைகிறது. இந்நிலையில் இந்த நாவல் உண்மையிலேயே இனவரைவியல் நாவல்தானா என்பதைக் கண்டறிய முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது. ஏற்கனவே கள ஆய்வின் மூலம் பளியர் சமூகம் பற்றிய தரவுகளைத் திரட்டிய பிற அறிஞர்களின் கருத்துக்களை இந்நாவலில் பயின்றுவரும் பளியர் பற்றிய குறிப்புகளுடன் ஒப்பிடுவதன்மூலம் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.


கானகன் நாவல் ஒரு வருடத்திற்குள்ளாக நிகழ்ந்துமுடியும் சில வேட்டைகளைப் பற்றிய நாவல். இந்நாவலில் மூன்று கூறுகள் முக்கியத்துவம் பெறுவனவாக அமைகின்றன. அதில் ஒன்று: தங்கப்பன். இரண்டாவது: வாசி, மூன்றாவது: அரசியல், வாழ்நிலை மற்றும் சூழலியல் மாற்றத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பளியக்குடி. வேட்டையாடியான தங்கப்பனுக்கும் தன்னை வனம் காக்கும் குடியிலிருந்து வந்தவன் என நம்பிக்கொண்டிருக்கும் பளியனான வாசிக்கும் இடையிலான போராட்டம்தான் இந்தக் கதை.


காடு பற்றிய கதைக் களம் கொண்ட நாவல்களுக்குத் தமிழில் முன்னுதாரணங்கள் உண்டு என்றபோதும் பளிகர் இனம் பற்றிய கவனத்தைக் கோரும் கானகன் நாவல் தனக்கென தனித்துவமான சில வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டதாக இருக்கிறது. பட்டாம்பூச்சிகளைத் துர்ச்சகுனத்தின் குறியீடாகப் பார்ப்பது, பளியக்குடிப் பெண்கள் மருத்துவச்சியின் துணையை விரும்பாது தமக்குத் தாமே பிரசவம் பார்த்துக்கொள்வது, புலி வழிபாடு, பளிச்சி வழிபாடு, பிரத்யேகமான உணவுப் பழக்கவழக்கங்கள் போன்ற பல வழக்காறுகளையும் இந்நாவல் தன் கதைப் போக்கினூடாகப் பதிவு செய்கிறது.


பளியர் தமிழ்நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் ஆவார். தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமூகங்களில் பளியர் சமூகமும் ஒன்று. இவர்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். பளியர் வாழிடத்தின் ஒவ்வொரு குடியிலும் 40 முதல் 50 குடும்பங்கள் வசிப்பதான குறிப்புகளை ஆய்வாளர்கள் தருகின்றனர். லக்ஷ்மி சரவணக்குமார் தன் சொந்த ஊரான மதுரைக்குப் பக்கத்தில் உள்ள தேனி அகமலைப் பளியக்குடியை, அதிலும் குறிப்பாக அப்பகுதியில் வாழும் மொக்கநிலைப் பளியக்குடியைத் தன் நாவலின் களமாகக் கொள்கிறார். அதைச் சுற்றியுள்ள தேனி, அகமலை, கொடுவிலார்பட்டி, தவளைநாடு, மேல்நாயக்கன் பட்டி, கீழ்நாயக்கன்பட்டி போன்ற பிற பளியக் குடிகள் பற்றிய குறிப்புகளைத் தருவதோடு அவற்றிடையே நிலவும் சமூகவியல் தொடர்புகளையும் சில குறிப்புகள் மூலம் உணர்த்திச் செல்கிறார். உதாரணமாக, பளியர் தம்முடைய தெய்வமாக வழிபடும் புலியைத் தங்கப்பன் வேட்டையாடியதான செய்தியை மொக்கைநிலை பளியக்குடியிலிருந்து எல்லா பளியக்குடிக்கும் தகவல் சொல்லிவிடும் பகுதியைக் குறிப்பிடலாம். அப்பகுதி பின்வருமாறு:

“மொக்கநிலை பளியக்குடிதான் அகமலை வட்டத்தில் பெரிய பளியக்குடி. இன்னய தேதியில் நாப்பத்திரண்டு குடும்பங்கள் வாழும் அந்தக் குடி ஆட்கள் இந்தக் குளிர்காலத்தில் நிகழ்ந்த முதல்பெரும் வேட்டையை முந்தையப் பின்னிரவில் தெரிந்து கொண்டதிலிருந்து கலக்கத்துடனிருந்தனர். அகமலை, நவமலை, நாகமலை, வெள்ளி மலை என தவளைநாடு முழுக்க இருக்கும் பளியக்குடிக்கு தகவல் அனுப்ப அதிகாலையிலேயே மூத்த பளியன் பூசணியின் பேரன் கட்டையன் கிளம்பி போய்விட்டான்.” (ப.30)

கானகன் நாவல் இவ்வினத்தாரைப் பளியர் என்றே குறிப்பிடுகிறது என்றபோதும் நாவலின் முன்னுரையில் நாவலாசிரியர் இவ்வினத்தைப் பளிகர் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். ஆனாலும் பளியர் என்னும் உச்சரிப்பே சரியானதாகும். இந்தப் பளியர் என்னும் சொல் பழையர் என்னும் சொல்லிலிருந்து வந்ததாகவும் பழனியர் என்னும் சொல்லிலிருந்து வந்ததாகவும் வெவ்வேறு குறிப்புகள் கிடைக்கின்றன.


இக்குடி வெளியுலகத் தொடர்புகளை அறுத்துக்கொண்டு அடர்ந்த மலைவனங்களில் வாழ்ந்து வந்ததற்கான ஆய்வாளர்களின் குறிப்புகள் உண்டு. ஆனாலும் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலான அரசியல் மற்றும் சூழலியல் மாற்றங்கள் இவர்களை வெளியுலகத் தொடர்பு கொண்டவர்களாகவும் தம்முடைய வாழ்வாதார அடையாளங்களை இழந்துவிட்டவர்களாகவும் மாற்றியிருக்கிறது. அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் அவர்களுக்கென சில குடியிருப்புகளை அமைத்துத் தந்திருக்கின்றன. இந்தச் சூழலில் வெளியுலகோடும் ஒட்ட இயலாமல் தமது பூர்வ அடையாளத்தையும் காத்துக்கொள்ள முடியாமல் திண்டாடும் இனமாக இக்குடி தத்தளித்துக் கொண்டிருப்பதை ‘நாம் பளியர்’ என்னும் ஆவணப்படம் விளக்குகிறது. இத்தகைய வாழ்நிலை மற்றும் புவிச் சூழலியல் மாற்றம், அதன் பின்னணி அரசியல் ஆகியவற்றை இந்நாவல் தன் புனைவினூடாகப் பதிவு செய்துள்ளது.

ஜே.இ.டிராசி பளியர்களுக்கு வேட்டை பற்றியும் பயிர்த்தொழில் பற்றியும் ஏதும் தெரியாது என்று பதிவு செய்கிறார். ஆனாலும் அவர்களுக்கு வேட்டைத் தொழில் தெரியாது என்பது நம்பும் தன்மையதாக இல்லை. ஆயிரமாயிரமாண்டுகளாய் வனத்திற்குள்ளேயே வாழ்ந்த இனத்துக்கு வேட்டையாடுதலைக் குறித்துத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இவருடைய கருத்துக்கு மாறாக ஜெனரல் பார்டன் பளியர்கள் வேட்டை விலங்குகளைத் தேடிக் காண்பதில் திறமை படைத்தவர்கள் என்கிறார். மேலும் அவர் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே பளியர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாகப் பதிவு செய்கிறார். ஆனாலும் நாவலில் வேட்டைக்காரனான தங்கப்பனிடம் துப்பாக்கி இருப்பததாகவும் அவனுடன் வந்து சேர்வதற்கு முன்பு பளியக்குடியில் இருந்த காலம்வரை அவனுடைய மனைவியான செல்லாயியேகூட துப்பாக்கியை அறியாதவளாக வில் அம்பு வைத்துக்கொண்டு தான் வேட்டைக்குப் போனாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்நாவல் அத்யாவசியத் தேவை ஏற்பட்டாலன்றி வேறு எதற்காகவும் வேட்டையை மேற்கொள்ளாதவர்களாக, இயல்பில் வேட்டைக்கு எதிரானவர்களாக, வனக் காவலர்களாகப் பளியர்களைச் சித்திரிக்கிறது. வேட்டையாடுதல் குறித்த பளியர்களின் இத்தகைய நடவடிக்கைகளைப் புவனராஜன் என்பவரும் உறுதி செய்கிறார்.


கொட்டைகள், வேர்கள், மலைச்சரிவுகளின்மேலே திரட்டும் பிசின் ஆகியவற்றைச் சேகரித்தல் பளியர்களின் தொழிலாக ஆய்வாளர்களின் குறிப்புகளில் காணக்கிடைக்கின்றன. தேனெடுத்தல் அவர்களின் பிரதானத் தொழிலாக இருக்கிறது. இத்தகைய குறிப்புகளை நாவலிலும் காணமுடிகிறது. அதேசமயம் எட்கர் தர்ஸ்டனின் நூலில் பளியர்கள் பயிர்த் தொழில் செய்வதில்லை என்பதான குறிப்பு உண்டு. இதற்கு மாறாக விக்கிபீடியா தகவல் களஞ்சியம் மிகச் சமீப காலத்தில் பளியர்கள் மற்றவர்களைப் போலவே மாறி வனப்பொருட்களை விற்றும் விவசாயம் செய்தும், தேனீக்கள் வளர்த்தும் வாழ்ந்து வருவதான குறிப்பைத் தருகிறது. நாவலில் அவர்கள் தினை முதலான சிறு பயிர்களைப் பயிரிடுபவர்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். மேலும் கஞ்சாத் தோட்டங்களுக்கு வேலைக்குப் போக ஆரம்பித்த காலச் சூழல் நாவலில் பதிவு செய்யப்படுகிறது. ஆய்வாளர்கள் பளியர்கள் மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்றனர். நாவல் பளியக்குடியில் பெண்கள் மட்டும் மீன்பிடிப்பதான குறிப்பைப் பதிவுசெய்கிறது.

பளியர்கள் காலநிலை மற்றும் சூழ்நிலைக்கேற்ப குடிசைகளிலும் பொடவுகளிலும் வாழ்வதாக நாவல் பதிவு செய்கிறது. மழை வரும்போது பொடவுக்கு ஓடுவதும் மழை இல்லாத நாட்களில் குடிசையில் படுத்துக் கொள்வதுமாய் அவர்களின் இரவுகள் கழிந்து கொண்டிருந்தன.”(ப.226) என்னும் குறிப்பை நாவலில் காணமுடிகிறது. மேலும் பொடவுகளில் ஓவியம் வரையப்பட்டிருப்பதான குறிப்புகளையும் அது முன்வைக்கிறது. பொடவு என்பது தங்குவதற்கு ஏதுவான குகை போன்ற வளைந்த அமைப்பை உடைய பாறைப் பகுதி ஆகும்.

இந்தப் பொடவு என்பதை ஆய்வாளர்கள் புடவு என்னும் சொல்லால் குறிக்கின்றனர். புவனராஜன் பளியர்களின் குடியிருப்பில் குகைப் பாறை ஓவியங்கள் இருப்பதை உறுதி செய்கிறார். இத்தகைய குகைப்பாறை ஓவியங்கள் உள்ள புடவு சிற்பக்கல் புடவு என்னும் பெயரால் அழைக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

பளியர்கள் தினை மாவு, தேன், வாழைப்பழம், கிழங்கு, கஞ்சி முதலானவற்றை உணவாக உட்கொள்வதாக நாவல் பதிவுசெய்கிறது. அதிலும் குறிப்பாகத் தேன் உணவு அவர்களுக்கு விருப்பமான ஒன்று என்னும் குறிப்பு நாவலில் உண்டு. காட்டு வள்ளிக்கிழங்கு, இலை, தேன் முதலானவற்றைப் பளியர்கள் உணவாக உட்கொள்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தேன் பளியர்களின் பெருவிருப்பிற்குரிய உணவு என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். …….. ”மரப்பொந்து ஒன்றில் தேன் கூட்டினைக் காண நேர்ந்தால் அது இவர்களுக்குச் சிறந்த சுவை விருந்தாகும். புகையூட்டித் தேனீக்களை ஓட்டிய உடனே அவர்கள் வெறி கொண்டவர்களாகத் தேன் கூட்டினைப் பறித்து அவ்விடத்திலேயே மெழுகு முதலியவற்றோடு கூட விழுங்கத் தொடங்குவர்.”(ப.468) என்று குறிப்பிடுகிறார். மேலும் இறைச்சியைப் பொருத்தவரை மிளா, மான் ஆகியனவற்றைப் பளியர்கள் புசிப்பதை நாவல் பதிவு செய்கிறது. பளியர்கள் மாட்டுக் கறியை உண்பதில்லை என்னும் குறிப்பை ஆய்வாளர்களின் தரவுகளின்மூலம் அறியமுடிகிறது. பளியக்குடி பெண்ணான செல்லாயியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டதுபோலவே தங்கப்பன் சேர்த்துக் கொண்ட இன்னொரு மனைவியான சகாயமேரி மாட்டுக் கறி உண்பதான குறிப்பு நாவலில் உண்டு என்றபோதும் பளியர்கள் மாட்டுக்கறி உண்ணுதல் அல்லது உண்ணாமை குறித்த தெளிவான குறிப்பேதும் நாவலில் இல்லை.

ஜெ.இ.டிராசி பளியர்கள் வீட்டு விலங்குகளை வளர்ப்பதில்லை என்னும் குறிப்பைத் தருகிறார். இதற்கு மாறாக, ஜி.எஃப்.டிபென்ஹ என்னும் ஆய்வறிஞர் ஓரிரு தெரு நாய்களைத் தவிர வேறு விலங்குகள் எதையும் பளியர்கள் வளர்ப்பதில்லை என்பதாகப் பதிவு செய்கிறார். இதற்கு மாறாகக் கானகன் நாவல் பளியக்குடி மக்கள் நாய், ஆடு முதலான வீட்டு விலங்குகளை வளர்ப்பதான செய்தியைப் பதிவு செய்கிறது.

பளியர்களின் முருக வழிபாடு, கறுப்புசாமி வழிபாடு முதலான ஆண் தெய்வ வழிபாடுகளை ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். இவை பற்றி நாவலில் குறிப்புகள் ஏதுமில்லை. இடத்திற்கு இடம் இத்தகைய வழிபாடுகள் மாறும் தன்மையனவாய் இருப்பது இதற்கான காரணமாயிருக்கிறது எனத் துணியலாம். அதேசமயம் புவனராஜன் பளிச்சியம்மன் என்னும் பெண் தெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் பளியர்களிடம் இருப்பதைப் பதிவு செய்கிறார். மேலுமவர் சித்திரை மாதத்தில் நடக்கும் பளிச்சியம்மன் திருவிழா பற்றியும் பதிவு செய்கிறார். இத்தகைய பளிச்சியம்மன் வழிபாடு மற்றும் திருவிழா பற்றி நாவல் பின்வருமாறு பதிவு செய்கிறது:

“தவளை நாட்டுப் பளியக் குடியின் கட்டுப்பாட்டிலிருக்கும் முப்பது பளியக்குடிக்கும் குலசாமி கோயில் கம்பத்திற்கு மேலாகக் காட்டுக்குள்ளிருக்கிறது, பளிச்சியின் வீடு. கண்ணகியை வணங்க வரும் அத்தனை பேரும் பளிச்சியைத் தாண்டித்தான் போக வேண்டும். எங்கும் ஆதரவன்றி திக்கற்றுப் போனவளை வனமகள் பளிச்சி அரவணைத்துக் கொண்டாளென பளியர்களின் கதைகள் சொல்கின்றன. கண்ணகி அவளுக்குத் தத்துப் பிள்ளை. சித்திரை மாதத்தில் பளிச்சிக்கும் வழிபாடு நடக்கும். கொலசாமியைக் கும்பிடக் கூடும்போதுதான் பெரும்பாலும் அவர்கள் சமூகத்து முக்கிய சமாசாரங்கள் குறித்து முடிவெடுப்பார்கள்.”

இதன்மூலம் பளிச்சியம்மன் திருவிழா பளியக்குடியின் பண்பாட்டுக் கூறாக மட்டுமின்றி பல்வேறு இடங்களில் வாழும் பளியக் குடிகளின் சமூக உறவை நீட்டித்துக் கொள்வதற்கான கண்ணியாகவும் விளங்குவதை நாவல் பதிவுசெய்கிறது. இதுவன்றி, பளியர்களின் முன்னோர் வழிபாடு குறித்தும் நாவல் பதிவு செய்வதாயுள்ளது.

மறைத்திரு எஃப். டஹ்மன் அவர்கள் பளியர்களின் சேவல் பலியிடும் சடங்கு குறித்துக் கூறுகிறார். அத்தகைய சடங்கு நாவலில் பதிவு செய்யப்படுகிறது. அதனை, டஹ்மன் கூறுவது போலவே அறிவாளால் வெட்டி நிகழ்த்தப்படுவதாக இல்லையென்றாலும் பளிச்சியேறிய வாசி அதன் குரல்வளையைக் கடித்து பலியை நிகழ்த்துவதாக நாவல் பதிவு செய்கிறது. மறைத்திரு எஃப். டஹ்மனின் கருத்தை ஒப்புநோக்கும்போது இந்நாவல் பளியர்களின் சேவல் பலியிடும் சடங்கை நேர்மையாகப் பதிவு செய்யும் அதேநேரம் சேவலின் குரல்வளையைக் கடிப்பதான நிகழ்வு பளியர்களின் நடைமுறையாக அன்றி நாவலின் சுவாரஸ்யம் கருதி இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு. பளியர்கள் பில்லி, சூன்யம், மாந்திரீகம் ஆகியவற்றில் தேர்ந்தவர்கள் என்பதாகச் சுற்றியுள்ள குடிகள் நம்புவதாக ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். அதுபற்றிய குறிப்புகள் ஏதும் நாவலில் இல்லையெனினும் பளியர்களின் குறி சொல்லும் வழக்காறு பற்றி இது பதிவு செய்கிறது. பளியர்கள் தனித்துவமான மூலிகை மருத்துவத்தைக் கைக்கொண்டிருப்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். நாவலுக்குள் வனமிருகமொன்று அடித்துக் காயப்படுத்திய வேட்டையாடியைப் பளியர் இனத் தலைவர் மூலிகைச் சாறு போட்டு வைத்தியம் பார்ப்பதான குறிப்பு காணப்படுகிறதேயன்றி மூலிகை மருத்துவம் குறித்து தெளிவான விவரணைகள் ஏதுமில்லை. அம்மூலிகை பளிச்சி மரத்தின் இலை என்பதாகச் சொல்லி இந்நாவல் அந்த வைத்திய நிகழ்வைக் கடந்துவிடுகிறது.


வனத்திலுள்ள புலி, யானை முதலான விலங்குகள் பளியர்கள் செல்லும் பாதையிலேயே வந்தாலும் கூட அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதான குறிப்பு நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புவனராஜன் தன் கட்டுரையில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் தாண்டிக்குடி மலையில் வசிக்கும் வேறு குடிமக்கள் செய்துவரும் வெள்ளாமைகள் விலங்குகளால் அழிவைச் சந்திக்கும். அதற்காக, தாண்டிக்குடி மக்கள் தனித்த திறன்மிக்க பளியர்களை அழைத்து காவலிற்கு நியமிக்கும்போது எந்த விலங்கினாலும் வெள்ளாமைச் சேதம் ஏற்படுவதில்லை என்பதாகப் பதிவு செய்யப்படும் செய்தி இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது.

பளியக்குடியினர் எதிர்ப்பு குணம் குறைந்த இனமாக அடிமையாக இருக்கும் மனோபாவம் கொண்ட இனமாகக் காலம் காலமாக இருந்துவந்ததை நாவல் பதிவு செய்கிறது. ஆய்வாளர்களும் பளியர்கள் பிற இனத்தாருக்கு அடிமையாகவே இருந்து பழகிப் போனவர்கள் என்பதைப் பதிவு செய்கின்றனர். பளியர்களின் திருமணம் பெரிய அளவிலான திருமணச் சடங்குகள் ஏதுமின்றி உறவினர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்து மணமக்கள் இணையப் போவதைத் தெரிவிக்கும் எளிய நிகழ்வாக நிகழக்கூடியது. வாசியின் திருமண முன்னேற்பாடுகள் குறித்த பகுதியில் இத்தகைய பளியர் திருமண நிகழ்வின் எளிய வழக்கை நாவலாசிரியர் பதிவு செய்கிறார்.

பளியக்குடிப் பெண்கள் பிற இரண்டாம் மனிதரை உடன் சேர்க்காமல் தம்முடைய பிரசவத்தைத் தாமே பார்த்துக் கொள்வதான வழக்கை நாவல் பதிவு செய்கிறது. மேலும் பிள்ளை பிறப்பதற்கு மூன்று நாளும் பிள்ளை பிறந்ததற்குப் பிறகு மூன்று நாளும் பளியக் குடிப் பெண்கள் தம்முடைய உடலை இரண்டாம் மனிதர் தொட அனுமதிப்பதில்லை என்பதாகவும் நாவலுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுகுறித்து ஆய்வாளர்களின் தரவுகளில் ஏதும் குறிப்புகளில்லை. அதேசமயம் பளியக்குடி பெண்கள் பிரசவத்திற்கென எந்த மருத்துவமனைக்கும் செல்வதில்லை என்பதான குறிப்பை நாம் பளியர் என்னும் ஆவணப்படத்தின்மூலம் அறியமுடிகிறது.

நாவலில் வேட்டையாடியான தங்கப்பனின் மூன்று மனைவிகள் குறித்து விலாவாரியான குறிப்புகள் தரப்பட்டுள்ளபோதும் பளியர் தலைவனின் மனைவி பற்றித் தெளிவான குறிப்புகளேதுமில்லை. அதேசமயம் ஆய்வாளர்கள் பளியர் இனத்தில் தலைவர் மட்டும் இரண்டு மனைவியரைத் துணையாகக் கொள்ளும் வழக்காறு உண்டு என்பதைப் பதிவுசெய்கின்றனர். இதுவன்றி, இரவு நேரங்களில் பளியர் குடியில் விலங்குகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டி நெருப்பு மூட்டி இரவு முழுக்க அது அணையாமல் ஒருவர் மாற்றி ஒருவராக அதைக் கவனித்துக்கொள்ளும் வழக்காறும் உண்டு என்பதையும் ஆய்வாளர்களின் தரவுகளிலிருந்து அறியமுடிகிறது. இதுவும் நாவலில் காணக் கிடைக்கவில்லை.

இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. இவ்வாய்வின் துணைமை ஆதாரமாக அமைந்த தர்ஸ்டனின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் நூல் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஆய்வு செய்த ஆய்வறிஞர்களின் கருத்துக்களைத் தொகுப்பதாக அது அமைந்துள்ளது. அவற்றுக்கு நேர்மாறாக, புவனராஜனின் கட்டுரையோ சென்ற ஆண்டு பதிவிடப்பட்டதாக இருக்கிறது. மேத்யூ மேக்லெனின் நாம் பளியர் ஆவணப்படமேகூட 2009 ஆம் ஆண்டு ஆவணப்படுத்தப்பட்டதாகத்தான் இருக்கிறது. அதை விடவும் முக்கியமாக நாவலாசிரியர் பளியர்கள் வாழும் களத்திற்குச் சென்றது 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு. ஆனால் இந்நாவலின் கதை நிகழும் காலம் 1980களின் முற்பகுதி. இத்தகைய காலம்சார் கூறுகளைக் கருத்தில் கொண்டுதான் நாவலில் சித்திரிக்கப்படும் செய்திகளின் தன்மையை நம்மால் உணர முடியும்.

ஒரு குறிப்பிட்ட இனத்தின் வழக்காறுகளைப் பதிவுசெய்ய முற்படும் நாவல் அவ்வினத்தின் எல்லா வழக்காறுகளையும் ஒன்று விடாமல் பதிவு செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. ஒரு நாவல் தன்னளவில் பேச எடுத்துக்கொண்ட வழக்காறுகளை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறதா என்பது இவ்விடத்தில் நமக்கு முக்கியமாகிறது. அதன்படி, பெரும்பகுதி நேர்மையாகவே கானகன் நாவலாசிரியர் பளியக் குடியின் வழக்காறுகளைப் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது. மேற்குறித்த கருத்துக்களைக் கவனத்தில் கொண்டு நோக்கினோமானால் கானகன் நாவல் ஓர் இனவரைவியல் நாவலாகக் கருதத்தக்க தகுதியை உடையது என்னும் முடிவுக்கு வரலாம்.

*****

வல்லமை இணைய இதழில் வெளியான கட்டுரை

கட்டுரையாளர்

முனைவர் பட்ட ஆய்வாளர்

சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்

புதுவைப் பல்கலைக்கழகம்

7 views

Comments


bottom of page