top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

இரண்டு கதைகள்
எஸ்.ராவின் தளத்தில் எனக்குப் பிடித்த கதைகள் என்ற பிரிவில் இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளை அடுத்தடுத்து வாசித்தேன். ஒன்று இதாலோ கால்வினோவின் கருப்பு ஆடு, இன்னொன்று ஜப்பானிய எழுத்தாளர் ஜினிசிரோ தனிஜிகியின் திருடன். இரண்டும் அற்புதமான சிறுகதைகள். நல்ல சிறுகதைகள் அந்தக் கதையின் வலுவான முரண்களாலேயே உருவாகின்றன.


கால்வினோவின் கருப்பு ஆடு என்ற சிறுகதை இப்படித் துவங்குகிறது. ‘திருடர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம் ஒன்றிருந்தது. ஒவ்வொரு இரவும் அவர்கள் அனைவரும் கள்ளச்சாவிகளையும் லாந்தர் விளக்குகளையும் ஏந்திக்கொண்டு அக்கம் பக்கத்தில் ஏதாவதொரு வீட்டிற்குத் திருடச் செல்வார்கள்.’ இப்படித் துவங்கும் கதையில் அந்த தேசத்தின் பெயரோ கதாப்பாத்திரங்களின் பெயர்களோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அந்த தேசத்தில் மக்களைப் போலவே அரசும் இருக்கிறது. திருடுவதையும் ஏமாற்றுவதையும் மக்கள் ஏகபோகமாய்ச் செய்து கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஒருவன் வருகிறான். மற்றவர்களைப் போலில்லாமல் அவன் திருடச் செல்வதில்லை. இரவில் அவன் வீட்டிற்கு திருட வருகிறவர்கள் வீட்டில் ஆள் இருப்பது கண்டு திருடாமல் செல்கிறார்கள். இதனால் அவர்கள் வீட்டிற்குத் திருட வந்தவனும் திருட முடியாமல் போகிறது. அவன் அந்த தேசத்தின் ஒழுங்கை குலைப்பவனாக கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்குகிறான். திருடர்களின் ஒழுங்கு குறைவதைத் தெரிந்து அவன் இரவில் வீடு தங்காமல் கடற்கரைக்குச் சென்றுவிடுகிறான். அவன் வீட்டில் பொருட்கள் வேகமாக களவு போய்விட மீண்டும் அந்த ஒழுங்கு குறைகிறது. இப்பொழுது இரண்டு வர்க்கங்களாக அந்த தேசம் உருவாகத் துவங்குகிறது. ஆள் வைத்து களவு செய்து பணக்காரர்களாகிறவர்கள் ஒரு வர்க்கம், பொருட்களை களவு கொடுத்து பசியால் இறப்பவர்கள் இன்னொரு வர்க்கம்.


அளவில் மிகச் சிறிய இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நமக்கு சமூகத்தின் அடிப்படையான இயக்கம் குறித்த பெரும் புரிதல் ஒன்று கிடைக்கிறது. கதாப்பாத்திரங்களின் ஊரோ பெயரோ சொல்லாமல் விட்டிருப்பதால் இந்தக் கதை எல்லா நிலத்திற்குமானதாய் மாறுவதோடு கருப்பு ஆடு என்று குறிப்பிடப்படும் அந்தக் கதாப்பாத்திரம் ஒருவன் தன்னியல்பில் இருப்பதன் விளைவுகள் ஒரு சமூகத்தில் எத்தனை தீவிரமானதென்பதை நமக்குப் புரியச் செய்கிறது. நேரடியான மொழியில் சொல்லப்பட்டிருந்தாலும் இந்தக் கதையின் பேசுபொருள் பல்வேறு மடிப்புகளைக் கொண்டதாய் விரிகிறது. இந்தக் கதையை ராஜ்மோகன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.


https://www.sramakrishnan.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-33/


இரண்டாவது கதையான திருடன் மடிப்புகளோ சிக்கல்களோ இல்லாத எளிமையான கதை. ஒரு கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருக்கும் நான்கு நண்பர்கள். வெவ்வேறு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்த விடுதியில் அடிக்கடி பொருட்கள் காணாமல் போகின்றன. இந்த நான்கு பேரில் ஒருவனான கதையைச் சொல்கிறவனின் மீதுதான் எல்லோருக்கும் சந்தேகம், அவனது அறை நண்பனான ஹிராட்டாவும் இவனைத்தான் சந்தேகிக்கிறான். ஆனால் மற்ற நண்பர்கள் இவனை முழுமையாக நம்புகிறார்கள். திருட்டு குறித்து வதந்திகளும் அச்சங்களும் விடுதியில் வேகமாய் பரவுகின்றன. ஹிராட்டா குற்றவாளியை கையும் களவுமாகப் பிடிப்பதாக உறுதியெடுக்கிறான். கதையின் இறுதிப் பகுதி வரை நமக்கு திருடன் யாரென்பதில் எந்த யூகங்களும் கிடைப்பதில்லை. இறுதியில் எல்லோரும் சந்தேகித்தபடி கதையை வழிநடத்துகிறவன் தனது நண்பனின் மணியார்டரைத் திருடுவதை ஹிராட்டா கையும் களவுமாகப் பிடிக்கிறான். அவனுக்கு அவ்வளவு காலமும் ஆதரவாக இருந்த நண்பர்கள் அதிர்ச்சியாகிக் கேட்க ‘நாந்தான் திருடன் என்பதை நான் எப்போதும் மறுத்ததில்லை என திருடன் சொல்கிறான்.’ பல சமயங்களில் நன்மையும் தீமையும் நமக்கு தெளிவாகவே தெரிந்தாலும் நாம் இனம் கண்டுகொள்ள முடியாமல் இருந்துவிடுகிறோம். இந்தக் கதையின் சிறப்பம்சம் அந்தக் கதாப்பாத்திரம் எழுதப்பட்ட விதம். ஒரு வலுவான கதாப்பாத்திரம் வலுவான முரணை உருவாக்குகிறது. வலுவான முரண் வலுவான கதைக்கான விதையாகிறது. இந்தக் கதையை இரா. மீனா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.


https://www.sramakrishnan.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-36/

31 views

Comments


bottom of page