கடலும் பிணமும்
சும்மா கிடந்த கடலில்
அலைகளின் அருட்டல் தொடங்குகிறது
காலின்
கணுவிடைகளிலும் பாதங்களிலும்
தொங்கும் விறுவிறுப்பு.
மூடிக் கிடந்த சவப் பெட்டியைத்
திறப்பதற்கு ஆயத்தம்
பிணத்தைப் பார்ப்பதற்கும் தைரியம் இப்போது
எனது பிணத்தை
நான் பார்க்கும் தைரியம்.
பிணமான பிறகும்,
சவப்பெட்டிக்குள்
தலை காலாய்
நீட்டி நிமிர்ந்த பிறகும்
நினைவைத் தெருவில் நிழலாட விடுகின்ற
அற்பத் தனம்.
அடியடா ஆணி அதற்கும்
அடி, அடி,
சவப்பெட்டியில் ஆணி அடி.
பதனிடப்பட்ட பிணம்
இனியும் அரளும் என்று எதிர்பாராதே,
அடி, அடி
சவப்பெட்டியில் ஆணி அடி.
காலின் கணுவிடைகளிலும் பாதங்களிலும்
பரவிய விறுவிறுப்பு
இப்போது உடல் முழுதும்!
பொங்கி எழுகிறது கடல்
எல்லாமே புதைகிறது,
சவப்பெட்டியும் கூட.
தீ – ரா – மை
நீ என்னை அழைக்கின்றாய்
தாடகை போல்
இராவணின் தங்கை போல்
நீ என்னை அழைக்கின்றாய்
வானமே உன் முகமாக
மலைகளே உன் தனமாக
கடல்
அலைகளே உன் விழியாக
கதறும் புயலே உன் குரலாக
நீ என்னை அழைக்கின்றாய்
நீ என்னை அழைக்கின்றாய்
மத்தகஜங்களே உன் பிருஷ்டமாய்
வாரி விழும் அருவிகளே உன் கூந்தலாய்
மாமேருவை பாற்கடலில்
சுற்றிய அனந்தமகா
சேடனே உனது தொடைகளாய்
நீ என்னை அழைக்கின்றாய்
நீ என்னை அழைக்கின்றாய்
நான் எழுவேன்
நான் எழுவேன்
நாகாசுரனாய்
என் நாகாஸ்திரத்துடன்
ஏழு கடலும்
ஏழு வானமும் தாண்டி
உன்னோடு இணைவதற்கே
நான் எழுவேன்
நான் எழுவேன்
Comments