1
ஒற்றை தினக்காதல் …
பின்னங்கழுத்தில் அவளுக்கொரு மச்சமிருந்தது
பருத்து மருவைப்போன்றதொரு
தோற்றத்திலிருந்ததை
அவளை நெருக்கியணைக்கும் வரை
அறிந்திருக்கவில்லை
களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மையொன்றையும்
சில வாழ்த்துஅட்டைகளையும்
இந்தப் பிறந்ததினத்திற்கு பரிசளித்திருந்ததில்
பொம்மை அவளின் மருவினையும்
வாழ்த்துச்சொற்கள்
பகிர்ந்துகொண்ட முத்தங்களையும் நினைவுபடுத்தின
மதுவிடுதியின் இரைச்சலில்
அக்காதலைக் கொண்டாடவென
ஒரு பாடலை உருவாக்கினேன்
குடிகாரர்கள், மதுக்குப்பிகள், ஈக்களென
அதனைக் கொண்டாடிக் களித்தவர்கள்
அனேகம்பேர்
பின்மதியமொன்றில்
திரையரங்கின் இருளில் அவளை
வருடிக்கொண்டிருக்கையில்
கைப்படும் இடங்கள்தோறும்
வளரத்துவங்கியிருந்தது மரு
சற்றேறக்குறைய நிகழ்ந்த புணர்தலுக்குப் பின்
அவரவர் அறைக்குத் திரும்பினோம்
மறுநாளில் துவங்கப்போகும்
புதியகாதலுக்கு வாழ்த்துச் சொன்னபடி……
( 2007 )
2
உண்மையைக் கொல்லும் சூத்திரம்....
என்னிடமிருக்கிறது நூற்றாண்டுகளைக் கடந்ததொரு பொய்
எனக்கும் முன்பாக பாதுகாக்கப்பட்ட அதனை
என்னைப் போலவே
இன்னும் சிலர் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்
நேசத்தின் கொடுகரங்களில்
ஸர்ப்பம் நக்கி அழிந்துபோன ரேகைகள்
பின் சாமத்தின் குறிகாரனொருவன்
துர்மரணம் நிகழுமென சொல்லிப்போய்
கடந்திருக்கும் மூன்றாம் பனிக்காலமிது
என் பொய்களைப் பற்றி தெரிந்திருக்க
வாய்ப்பில்லாத அவனிடம்
முறையிடுவதற்கென சில கோரிக்கைகளிருந்தன என்னிடம்
காகங்களின் குரலெழுப்பும் அதிகாலைகளில்
அன்றைய தினங்களுக்கான பொய்களும்
என்னோடு விழித்துக் கொள்கின்றன
எல்லாவற்றையும்விட அதிகமாய் நேசிக்கும் நான்
அவற்றையே வழிபட விரும்புகிறேன்
உண்மைகளைக் கொல்லும் எளிய சூத்திரமொன்றை
கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது
இப்பொழுது
மழையைப் பற்றி
கடலைப் பற்றி
குழந்தைகளைப் பற்றியென
பெரும் புனைவுகளை உருவாக்கும்
காலாவதியாகிப்போன நபர்களிடம்
ஏமாற்றங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்ததால்
இரவுகளை வார்த்தைகளுக்குள்
களவாடி வைத்திருக்கும் குறிகாரர்களின்
துணை வேண்டினேன்
சதுரமாய் செவ்வகமாய் வட்டமாய்
தனித்துப் பார்க்கமுடியாததொரு முகங்களாய்
அவர்களின் முகங்கள்
வெக்கையில் மரங்கள் விறைத்துக் கொண்டு நிற்க
நாட்டுச் சாராயம் அருந்தக் குடுத்த அவர்களிடமிருந்து
பிசினின் வாசனை
கேளும் சகோதரனே...என்ன வேண்டும்
சாராயமும் பிசினும் சேர்ந்த நெடியில்
நான் உண்மைகளைக் கொலைசெய்ய வேண்டும்
ஒருவரும் சிரிக்கவில்லை
பதிலுக்கான கேள்வியென்ற கவனிப்பில்லை
இன்னும் இன்னுமென குவளைகள் வந்தன
கண்களில் செவ்வரியோட
போதையின் எதுக்களிப்பில் தடுமாறி நின்றேன்
எத்தனை சாமம் கடந்ததென்றும்
இன்னும் எத்தனை சாமம் கடக்குமென்றும் தெரியாத போதை
உண்மையின் முகம் தெரியுமா?
எனக்கு கேட்டவனின் முகம்கூட தெரிந்திருக்கவில்லை
பொய்களைத் தெரியுமென்றேன்
உண்மைகளைக் கொல்லும் சூத்திரம் கேட்டேன்
தொழில் ரகசியமென்றும்
வேண்டாத வேலையென்றும்
மெளனித்துக் கிடந்தவர்கள்
எப்பொழுது உறங்கினேனென நினைவில்லாத என்னிடம்
கடைசியாய்ச் சொன்னது
உண்மையென ஒரு மயிரும் இல்லை.
( 2007 )
Kommentare