top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

இரண்டு கவிதைகள் - லஷ்மி சரவணகுமார்


கல்வீட்டில் துவங்கும் இசை…





கனவுகள் கொலையுண்டதொரு தினத்தில்

செழித்த பூனையின்

வாளிப்பான குரலில் பாடத்துவங்கினாய்

மதுவின் வீரியத்துடனும்

பூக்களின் வசீகரத்துடனும்

கசிந்த குரலில்

சிலிர்ப்புறுகின்றன மரங்கள்

யாரிடமும் சொல்லப்படாத

ஈரமிக்கப் பக்கங்களில்

உன் சொற்களை எழுதிச்செல்கிறது காற்று

இயல்பாய் உடைந்து நொறுங்குகிற

குடுவையொன்றிற்கான அவகாசமுமின்றி

துரத்தியபடியிருக்கும் கண்களில்

மூர்க்கமான விருப்பத்துடன் நிழலாடிக்கொண்டிருக்கும்

உன்னுடல்

இவ்வீட்டுப்பெண்களின் உடல்களில்

முத்தங்களின் சடங்குகளைத் தவிர

வேறொன்றும் மிச்சமில்லை

ரோம்நகர தேவதைகளின் சாயலையொத்த

உன் அம்மாவிற்கு

பசும் இலைகள் விரிந்த நெகிழும் வீதியில்

சிறியதொரு மரவீடும்

கொஞ்சம் மதுவின் போதையுடன்

கிதார் இசைக்கத் தெரிந்த கணவனும்

நிறைவேற்றிக்கொள்ளப்படாத ஆசைகள்தான்

விடுபடுதலை மட்டுமே கொண்டாடிய

உன்னிசை

யாவர்க்கும் பிடித்தமாகையில் நீ

பெருங்கனவின் நீட்சியானாய்

தெளிந்த சாரல்பெய்த இம்மாலையில்

கட்டிமுடிக்கப்பட்ட

அரக்குவர்ண கல்வீட்டில்

விருப்பத்துடன் கிதார் இசைக்குமொருவன்

உனக்காகவென்றே ஓரிசையைத் துவக்குகிறான்.



silence of the palace என்னும் துனிசிய படத்தில் வரும் ALIA பாத்திரத்திற்கு.


( 2009 ம் வருடம் வெளியானது )



இன்னும் துவங்காத கதை....





எல்லாக் காட்டிலிருக்கிற புலிகளும் இப்பொழுது உறங்கப்போயிருக்கின்றன

எனக்கு புலிகளை வைத்து கதை சொன்னவள்

இப்பொழுது தானுமொரு காட்டில் ஒளிந்திருக்கிறாள்

ஒரு கதை சொல்வதற்கு

எனக்குத் தேவையாயிருந்த அவள் சொற்களை

புலிகள் எப்பொழுதோ திருடியிருக்கின்றன

நான் இப்பொழுது ஒரு கதை சொல்லியே ஆகவேண்டும்

அல்லது கேட்க வேண்டும்

சொல்லவும் கேட்கவுமிருக்கும் ஓராயிரம் கதைகளை

இனி யார் எமக்கு சொல்லக்கூடும்

சூடான ஒரு குவளைத் தேநீரில்

கிடைத்து விடுகிற சந்தோசம்

ஒரு பொய் ஏற்படுத்தும் சில நிமிடங்களுக்கான சந்தோசம்

எல்லாமும் காலம் தன் கதைகளால் எனக்குச் சொன்னதுதான்

மெளனத்தின் விரல் பிடித்து கதை சொல்கிற கன்னிமார்கள்

இன்னும் இந்நிலத்தில் கதையாயிருக்கிறார்கள்

இப்பொழுது

அவர்களின் ஆத்மா எழும்பத் தவிக்கிறது பேரதிர்வுடன்

நீங்களோ நானோ

புலிகளை எழுப்ப வேண்டும்

அல்லது யாரோவொருவன் சொல்லப்படாத இன்னுமொரு கதையை

சொல்லத் துணியட்டும்....


( 2009 ம் வருடம் வெளியானது. )

30 views

Comments


bottom of page