top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

இருள் மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டு கெளபீகத் துணி...

- சிறுகதை





நகரின் பிரதான வீதியை ஒட்டியிருந்த முட்டுச் சந்தினுள் பழைய பாழடைந்த கட்டிடம் ஒன்றில் ஆடைகள் களைந்தபடி காற்றாட உறங்கிக் கொண்டிருந்த அன்னத்திற்கு இரவு, பகலென எதிலும் அவ்வளவான நாட்டமில்லை. எவர் விருப்பத்தையும் எதிர்பார்த்திராமல் காலம் கடந்து கொண்டே இருப்பதால் அன்றைய காலை வேளையின் புற உலகினைப் பற்றிய அவதானிப்புகள் அவசியமாகப் படுகின்றன. மிக நெருக்கமாக அவளை நுகர வந்த ஈக்கள், கொசுக்கள் காட்டமாக வெளிப்பட்ட மானிட்டரின் வாடையினைப் பொறுக்க முடியாமல் சற்றுத் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றன. நுன்புள்ளி ஒன்றிலிருந்து பெருகி வழியும் வெளிச்சத்தின் வேகமாய் அன்றைய காலை நேரம் முழுக்க சலனமின்றி கடந்து கொண்டிருந்தது அந்தச் சந்தின் சுவர்களுனூடாக.


அன்னம் உறங்குகிறாள். அவளுடல் தனிமையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. நெடிய சுவாசத்தையும் மனதில் புதைந்து கலந்து போய்விட்டிருந்த ஓராயிரம் வேதனைகளையும் வெளிக்காட்டி விடாதபடி, முரட்டுத்தனமாய் களைத்துப் போட்ட எத்தனையோ கரங்களின் நகக்கீறல் காயத்தில் உதிர்ந்த உதிரத்தை உறிஞ்சி அனுபவித்துவிட்டு தூக்கி எறியப்பட்டிருந்த அதே உடல். அவளைச் சுற்றிக் கிடக்கிற, நடக்கிற உயிர்கள் அனைத்திலும் காண முடியாத ஒன்றை அவளிடம் மற்றவர்கள் உணர்ந்ததைப் போலவே அவளும் உணர்திருந்தாள். இவ்வளவிற்கும் அவளை அழகானவள் என்றோ, அங்க லட்சணங்கள் சர்வமும் பொருந்தியவள் என்றோ சொல்ல முடியாது. இருந்தும் கனத்த இடையும், பெருத்த மார்புகளும் அவளைக் கவனிக்கும் படியாய்ச் செய்து விட்டிருந்தன. மிகக் குறிப்பாய் அவளுடைய உருண்டு திரண்ட பின்புறத்திற்காகவே அனேக வாடிக்கையாளர்கள் உண்டு. கண்களுக்குக் கீழ் இருக்கிற சுருக்கத்தைக் கொண்டு தோராயமாக நாற்பது வயது நெருங்கிவிட்டிருப்பதை உணர முடிந்தாலும் இறுக்கம் குறையாத அவளுடல் அதனை நம்பும்படி செய்யவில்லை.


நட்சத்திரங்கள் தொலைது போன வெம்மை மிகுந்த இரவில் சில ஆண்டுகளுக்கு முன்பு காய்கறி ஏற்றி வந்த லாரி ஒன்றில் ஊரை விட்டு, உறவை விட்டு அவள் இங்கு வந்து சேர்ந்தது ஒரு கஞ்சா வியாபாரியோடு. அவளைப் பற்றி மற்றவர்கள் விசாரித்துப் பார்த்ததில் தேனிக்குப் பக்கத்தில் சொந்த ஊரெனவும், திருமணமாகி விட்டவள் என்பதும் தெரிய வந்தது. கொஞ்சமும் எதிர்பார்த்திராத சூன்யம் ஒன்று பரவ மிகச் சில நாட்களிலேயே அவளைக் கூட்டிக் கொண்டு வந்தவன் தலைமறைவாகிப் போனான். துவக்கத்தில் பொட்டலம் மட்டுமே விற்றுக் கொண்டிருந்தவளுக்கு அதைவிடவும் இது சவுகரியமாகத் தோன்ற, யாரும் கொடுக்காமலேயே பதவி உயர்வு பெற்றுக் கொண்டு இந்தத் தொழிலுக்கு வந்தாள். தொழில் நிமித்தமாய் அவள் வந்து சேர்ந்திருந்த இடம் முற்றிலும் கருவேல மரங்கள் சூழ்ந்திருந்த சர்வ ஜீவராசிகளின் மலவாசனையும் கலந்தடிக்கும் அதி அற்புதமான பீக்காடு. அவளுக்குத் துணையாக இன்னும் மூன்று பேர் முன்பே பதவி உயர்வு பெற்றவர்கள் அங்கிருந்தனர். மற்றபடி அவள் இன்ன சாதியென்றோ, மதமொன்றோ தெரிந்து கொள்ள விரும்பாத திறந்த மனதுக்காரர்களாகவே அவளின் வாடிக்கையாளர்கள் இருந்தனர். பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட ஓவியமாய் அவள் இந்த ஊருக்குப் பழக்கப்பட்டுப் போனாள். இந்த ஊரும் அவளுக்குப் பழக்கப்பட்டிருந்ததைப் போல். எவ்வளவு தூரத்திற்கென்றால்? முழுமையாய் காசு கொடுக்கமாட்டாமல் முப்பது நாற்பது ரூபாயைக் கூட கடன் சொல்கிறவர்கள், ஏதேனுமொரு அதிகார அடையாளத்தில் அவ்வப்பொழுது வந்துபோகிற ஓசிக்காட்சிகள், தயக்கமின்றி அவளுக்கும் கடன் கொடுக்கிற டீக்கடைக்காரர்கள் என மற்றவர்களிடம் பழகிக் கொள்கிற அளவிற்குப் பழக்கப்பட்டுப் போயிருந்தாள்.


முந்தைய நாள் இரவின் வாடிக்கையாளன் ஒருவன் மிச்சம் வைத்து விட்டுப்போன மானிட்டரை பின்னிரவில் அவள் குடித்தபோது பெரும் அயர்ச்சி குறைந்து உடல் லேசாகி விட்டிருந்தது. விடிந்து பிற்பகலைத் தாண்டிய பின்னும் விழிக்காதவளுக்கு தெரிந்திருக்காது இன்று என்ன கிழமை என்பது கூட.


காற்றும் வெளிச்சமும் மிகக் குறைவாய் இருந்த அந்த அறையின் அதீத வெம்மையில் வியர்வை பிசுபிசுத்த அவளுடலில் உப்பேறிப் போய்விட்டிருந்தது, போதை குறைந்து அவள் விழிக்க எத்தனிக்கிற நேரம் என்பதற்கு அறிகுறியாய் இரண்டு, மூன்று முறை தலையை மட்டும் தூக்கி எச்சிலைத் துப்பிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். சில மணி நேரங்களுக்கு முன்பு சற்றுத் தள்ளி இருந்த சுவரில் சாய்ந்து இவள் கழித்த சிறுநீர் இவள் பாதத்திற்கு மிக அருகாமை வரை ஊர்ந்து வந்து உலர்ந்து போயிருந்தது, வாசனையை மட்டும் விட்டுவிட்டு. அவளை நுகர்ந்து பார்க்க வந்த ஈ, கொசுக்கள் அங்குமிங்குமாய் ஓடிய ஒலியுடன் அதனைத் துரத்திய பூனைகளையும் சேத்து இன்னும் சில ஜீவராசிகள் மூத்திர வாடையில் லயித்தபடி அங்கிருந்தன. இந்தப் பக்கமாய் வந்த பிச்சைக்காரன் ஒருவன் ஆடைகள் களைந்து தொடை வரை ஏறிக் கிடந்த அவளின் வளவளப்பான கால்களை ரசித்தான், சற்றுப் புரண்டு படுத்தாள் அந்தப் பின்புறத்தையும் பார்த்துவிடலாம் என ஆவலோடு காத்திருந்தான். சில நிமிடங்களளிலேயே வயிற்றுக்குள் வைத்திருந்த அலாரம் வேகமாய் அடிக்கத் துவங்கிவிட, அங்கிருந்து நகர்ந்துவிட்டான். இவ்வளவையும் உணர்ந்தவளாகவோ, முடியாதவளாகவோ அன்னம் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்.


புற உலகினை உணர முடிகிற அளவிற்கு மிக நெருக்கமான உறக்கத்தில் இருந்தவளுக்கு ஏதோ ஒருவிதமான அசைவு அவளின் மீது நிகழ்ந்து கொண்டிருப்பதைப் போலிருந்தது. பூனை பிராண்டுவதைப் போன்றோ, எலி குடைவதைப் போன்றோ ஒரு புதுவிதமான அசைவு. எரிச்சல் பொங்கிய கண்களை சிரமத்தோடு கசக்கியபடியே திறந்து பார்த்தபோது எவனோ ஒருவன் அவளைப் புணர வேண்டிய மூர்க்கத்தில் மிக அவசரமாய் அவள் கால்களை விலக்க முயன்று சேலையைத் தூக்கினான். இடது காலுக்கு வாகாக இருந்தவனை மனம் ஒப்பிப் பார்க்க விரும்பாதவளாய் மூர்க்கத்துடன் எட்டி உதைத்தாள். கல்லடிபட்ட நாயாய் கதறி விழுந்தவனின் மூஞ்சியில் ஒட்டியது அவள் இருந்து ஈரம் உலர்ந்திருந்த மூத்திரத்தின் மெல்லிய வீச்சம். கோபத்தில் கொதித்துப் போனவனாய்

”என்னை யாரென நினைத்தாய்?” என கர்ஜித்தபடியே அவளை இறுக்க முயன்றான். நெஞ்சில் இருந்து எழுந்து வந்த சளியை காறி அவன் முகத்தில் துப்பியவள்

“”எந்த மயிராண்டியா இருந்தா என்ன? தூங்கறவள வந்து நோண்டுறியே நீயெல்லாம் மனுஷனா?” என்றாள். கோபத்தில் எதிரில் இருந்தவனுக்கு நிலை கொள்ளவில்லை. அவள் துப்பினாள் என்பதை விடவும் அதிலிருந்த மானிட்டரின் வாசனையே அவனை அதிகமாய் துன்புறுத்தி இருக்க வேண்டும்.

“மனுஷனாவது மண்ணாங்கட்டியாவது, நான் கடவுள் என்பதைத் தெரிந்து கொள்.” என ஆத்திரம் நிறைந்த குரலில் உறுமியவனை சற்று பரிகாசத்தோடு பார்த்தவள்

“அடங்கொய்யால மூஞ்சியப் பாரு…எத்தன பேருடா இப்பிடிக் கெளம்பி இருக்கீங்க?” என தன் இடுப்புச் சேலையை சரி செய்தபடியே அவனை சட்டை செய்யாமல் முகம் கழுவத் துவங்கினாள்.

“என்னை நம்பவில்லையா? இதோ பார்..” என தனக்கிருந்த நான்கைந்து கைகளையும் தலைகளையும் அடுக்கடுக்கான கால்களையும் காட்டி தன் சொரூபம் உணர்த்த, முகம் கழுவிக் கொண்டிருந்தவள் பாதியிலேயே விட்டுவிட்டு

“அடப்பாவி நெசந்தானா? உனக்கேன்யா இந்த நெலம? சரி சரி கை காலெல்லாம் இத்தன வெச்சிருக்கியே அது ஒண்னுதானா? இல்ல ரெண்டு மூணா?” எனக் கேட்க, வெட்கத்தில் தலையைக் குனிந்து கொண்டார். “எல்லாம் சரி, கைல எவ்ளோ துட்டு வெச்சிருக்க?” எனக் கேட்டதுதான் தாமதம், பொங்கி எழுந்தவராய் “அதாவது தட்சணை, பேதையா நீ? என்னுடன் சல்லாபிப்பதை புண்ணியமாகக் கருதுவதை விடுத்து இதென்ன அசட்டுத்தனம்?” என்று படபடத்தார்.

”ம், இன்னிக்கு ஓசியா நீ வருவ, நாளைக்கி உம் புள்ள, அப்பறம் உன் கோயில்ல மணியடிக்கிற பூசாரி… எல்லாம் ஓசில வந்து உழுதுட்டுப் போவீங்க கஞ்சிக்கு நாங்க எங்க போறதாம்?” எனச் சொல்ல சமாதானம் அடையாதவராய் அவளுக்கு இன்னபிற ஆசை வார்த்தைகளைக் கொட்டினார். ”இந்தா பாரு சாமி, உங்கூட படுக்கறதுக்க்கு ஊருபட்ட பொம்பளைக இருக்கலாம்… ஆனா நம்மகிட்ட ஓசியா ஓட்டிப் பாக்கறதெல்லாம் வேலக்கி ஆகாது..” எனத் தீர்மானமாய்ச் சொன்னதும் நிலைமையைச் சமாளிக்கிற வழியை யோசித்தவர், ஏதேனும் தென்படுகிறதாவென தேடியபடியே யோசனையில் மூழ்கிப் போனார். அலுப்பு தீர குளிக்க நினைத்தவள் அப்போதைக்கு முகத்தை மட்டும் கழுவித் தயாரானாள். இரவில் பணி நிமித்தமாய் கழட்டிப் போட்டிருந்த பிராவை எடுத்து மாட்டிக் கொள்ள முயன்ற போது, எவ்வளவு முயன்றும் முடியாமல் உதவிக்கு அவரை அழைத்தாள். அவள் கூப்பிட்ட பிறகுதான் அவ்வளவு நேரமும் அவளுடலில் கரைந்து போயிருந்த தன் பார்வையை விலக்கி இயல்பு நிலைக்கு வந்தார். நெருங்கி வந்து கொக்கியைப் போட்டுவிட்டதும் ஏதோ செய்வதற்கரிய காரியத்தை செய்துவிட்டதைப் போல அவள் முலைகளைப் பிடித்துக் கசக்க முயல, திரும்பின வாக்கில் பளாரென அறைந்தாள். இந்த திடீர்த் தாக்குதலால் நிலைகுலைந்து போனவர் என்ன ஆனாலும் அவளைப் புணர்ந்து விடுவதென முடிவு செய்தார்.

“உனக்கு தட்சணை தானே வேண்டும், எவ்வளவு?” எனக் கேட்க, ”ம்…அப்பிடி வா வழிக்கி. பாத்தா காஞ்சு போனவனாட்டம் இருக்க, கடவுள்னு வேற சொல்ற. ஒரு நூறு ரூபாக் கொண்டா போதும்!.” என ஆடி மாதத் தள்ளுபடிக்கு சொல்வதைப் போல் சொன்னவளை அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு பட்டென மறைந்துவிட்டார். தன் சன்னிதானம் ஒன்றில் யாரும் பார்த்துவிடாதபடி நுழைந்தவர், அவசரமாய் உண்டியல் நாணயங்களைத் திருடி எடுத்துவிட்டு எண்ணிப் பார்க்கவும் நேரம் அற்றவராய் அடுத்த நிமிடமே அன்னத்தின் முன் தோன்றினார். “அதுக்குள்ள எங்கய்யா போயி திருடின?” எனக் கேட்டது சற்று அவமானமாய் இருந்தாலும் வெளிக்காட்டாமல் அவளைப் புணர்வது மட்டுமே அப்போதைக்குக் காரியமெனக் கருதி அதற்கு ஆயத்தமானார்.


ஏதேதோ வீச்சம் கமழ்ந்து வர, காற்றுமில்லாத வெளிச்சமற்ற அந்த அறையில் திட்டுத் திட்டான கருமை வெறுப்பேற்படுத்தியும் அவளுடல் மீதான மோகப் பாய்ச்சலுக்கு முன் எதையும் பொருட்படுத்தத் தோன்றவில்லை. இதற்கு முன் அவர் புணர்ந்திருந்த தேவலோகப் பெண்கள் யாவரும் இவளுக்குமுன் அற்பமெனப் பட்டார்கள். செயற்கைத்தனங்கள் அற்று இது போன்ற பரந்து விரிந்த ஸ்தனங்களை முன்னெப்போதும் அவர் பார்த்ததில்லை. சிவந்து வெளிறிய அவள் கண்களில் சுரந்த அசாத்தியமான உயிர்ப்பை ரசிக்க முடியாதவராய் அடிவயிற்றின் சிசேரியன் தழும்புகளைத் தடவிக் கொடுத்தார். ஒருவிதமான உந்துதலுக்கு ஆட்பட்டு ஆவேசமாய் அவளை அணைத்து முத்தமிடத் துவங்கியவருக்கு அவள் உடலில் இருந்து கசிந்த அதீதமான பெண்மையின் வாசனை சற்றே மூத்திர நாற்றத்தினை மறக்கச் செய்திருந்தது. முத்தமிடும் மூர்க்கமும், தழுவல்களும் இறுகியதே ஒழிய அதைத் தாண்டிய படிநிலைக்கு அவரால் செல்ல முடியவில்லை. பொறுமையற்றவளாய் வந்த சிரிப்பையும் அடக்கியபடி அவள் படர்ந்து கிடக்க, ஏதேதோ பயங்கள் எழுந்தபடி அவர் சுக்கு நூறாகிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் யாரையாவது உதவிக்குக் கூப்பிட முடியுமா என்ன? பரிதாபமான அவரின் நிலையைக் கண்டு மனம் இறங்கியவள் அவரைத் தயார்படுத்த எல்லா வழிகளையும் கையாண்ட பின்னும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் போகவே இப்போது சிரித்து விட்டாள். அந்த சிரிப்பிற்கான ஆயிரம் கேள்விகளில் ஒன்றைக்கூட தன்னால் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு சிறிதும் இல்லை. உண்மையில் அந்தச் சிரிப்பையும் தாண்டி அவர் மீது பரிதாபமே ஏற்பட்டது அவளுக்கு.

”எல்லாம் நாலஞ்சு வச்சுக்கிட்டா மட்டும் பத்தாது… ஒன்னு மட்டுமாச்சும் உருப்படியா இருக்கனும்ல…” என அவள் கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பதென்கிற தயக்கத்திலேயே மெல்ல தன்னில் இருந்து அவளை விலக்கியவர், முகத்தில் இருந்த கலவரத்தை எல்லாம் மறைத்துக் கொண்டபடி அவளின் கைகளில் முத்தமிட்டார்.

“இன்று கிருத்திகை, பூலோக கலவிக்கு உகந்த நாளில்லை. தேவி வேறு காத்துக் கொண்டிருப்பாள். ஆகையால் நாம் இன்னொரு நாள் பார்க்கலாம்..” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து அவசரமாய் மறைந்துவிட்டார். அவர் சென்றுவிட்டப் பிறகான தனிமையில் ‘இவனுகளுக்கெல்லாம் எப்பிடித்தான் புள்ள குட்டிக பொறந்திச்சோ? என ஓராயிரம் சந்தேகத்தோடு பாதி பிடித்துப் போட்டிருந்த பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்து இழுத்தாள். காட்டமான அந்தப் புகையினூடாக கடவுள் சென்ற தடமெதுவும் தெரிகிறதாவெனத் துழாவியவள் கடைசி இழுப்போடு அதைத் தூக்கி எறிந்தாள். சற்றும் எதிர்பாராத அன்றைய முற்பகல் நிகழ்வுகள் யாவும் ஒரே சமயத்தில் வெறுப்பேற்படுத்தியும் ஆச்சர்யங் கொள்ளவும் செய்தன. அவசரத்தில் கடவுள் விட்டுப்போன கெளபீகத்துணி பளபளத்துக் கொண்டிருக்க அழுத்தமாக அதன் மீது காறித்துப்ப வேண்டுமெனத் தோன்றியது. போகட்டுமென நினைத்தபடியே அதைத் தூக்கி எறிந்தபோது மூலையில் இருந்த மூத்திரக் குழிக்குள் விழுந்து மிதந்தது. அங்கிருந்து வெளியே வந்தபோது காத்திரமான வெயிலின் பிரகாசத்தில் கண்கள் கூச, மெல்ல மெல்ல நடந்து மாநகராட்சி கட்டணக் கழிப்பறைக்கு வந்தாள். அரக்க பரக்க ஆய் போய்விட்டு செழும்ப மஞ்சள் தேய்த்துக் குளித்தபின் பளபளவென வெளியேறினாள். மஞ்சளின் நெடியோடு சேர்ந்த குளோரின் மணம் ஊரையே திரும்பிப் பார்க்க வைத்தது. கடவுள் இவளுக்குக் கொடுத்துவிட்டுப் போன காணிக்கையைப் பார்த்து ஆத்திரம் கிளம்பினாலும் பூ வாங்கியதும், சாப்பிட்டதும் போக மிச்சத்தை எல்லாம் கோயிலில் இருந்த பிச்சைக்காரர்களுக்கே போட்டுவிட்டு வந்தாள்.


வழக்கமாக அவள் கிராக்கி பிடிக்கிற நேரம், மாமூலாகிவிட்ட இதனை ஓர் சலிப்பாக அவள் உணர்ந்தபோதும் ஒருவிதமான சுழற்சிக்கு ஆட்பட்டவளாய் பரபரப்பான அந்தச் சாலையைக் கடந்து கருவேலங்காட்டுப் பக்கமாய் ஒதுங்கினாள். திட்டுத் திட்டாக தெறித்திருந்த இருள் மெல்ல கவிழ்ந்து படர்ந்தபோது முதலில் வந்த ஒன்றிரண்டு பார்ட்டிகளைப் பார்த்தவள் “கடங்காரத் தாயோளிக, வந்ததும் இவய்ங்க மூஞ்சியிலதானா முளிக்கனும்?” எனப் புலம்பியபடியே ஒதுங்கிவிட்டாள். நேரம் கடந்து இருள் அடர்த்தியாய் அப்பத் துவங்கிவிட்டிருக்க, ரோட்டோர பரோட்டாக் கடையில் இருந்து எழுந்த மசால் வாசனையும் சப்தமும் சிறிது நேரம் மலவாசனையை மறக்கடித்தது.





சற்றுத் தள்ளி இருந்த சோடியம் விளக்கில் இருந்து கசிந்து வந்த மெல்லிய வெளிச்சத்திலும்கூட நடந்து வந்தவனின் உருவத்தை அவளால் ஓரளவு உணர முடிந்தது. பதற்றமின்றி நிதானமாக நெருங்கி வந்தவனுக்கு சுமாராக முப்பது வயதிற்குள்தான் இருக்கும். மிக மெலிந்தவனாகவும், முகத்தை பாதி மறைத்தத் தாடியுடனும் பார்ப்பதற்கே வினோதமானவனாய் இருந்தான். நன்கு கறுத்த முகத்தில் சற்றே விரிந்த கண்களும், நீள நாசியும் ஒருவிதமான கவர்ச்சியை அவனுக்குக் கொடுக்கவே செய்தது. மெல்லிய புன்னகை பரிமாற்றத்திற்குப்பின் அவள் முன்னால் நடக்க, அவளைத் தொடர்ந்து நடந்தான். தகுந்த இடம் தேடி அவர்கள் படுத்தபோது, சற்றுத் தள்ளி சுயமைதுனம் செய்து கொண்டிருந்த இளைஞனொருவன் அவசரமாய் எழுந்து லுங்கியை சரிசெய்தபடி நடந்தான். இவனில் இருந்து கசிந்த நறுமணத்தை ரசித்தவள் அவன் இறுக்கி அணைத்தபோதுதான் மெலிந்தவனாய் இருப்பினும் அசாத்தியமான வலு இருப்பதை உணர்ந்தாள். பல நாட்களுக்குப் பிறகு அவளுடைய முதல் புணர்ச்சியை நினைவு படுத்த அவனின் இதழ்களைப் பற்றி அழுத்தமாக ருசித்தவள்,

“இதுக்கு முன்னால உங்களப் பாத்தது இல்லியே புதுசா?” எனக் கேட்டாள். அவன் புன்னகைத்தபடியே “ம்…ஏன் பிடிக்கலையா?” எனக் கேட்டான். மறுத்துத் தலையாட்டியவள் இன்னும் இறுக்கமாய் அணைத்து அவன் உடலில் கரைந்து போகத் துவங்கினாள். கருவேலங் காட்டின் அத்தனை பெரிய துர்நாற்றத்தையும் மீறி உடல்களின் வாசனை எழுந்து நிரம்பியது. எல்லாம் முடிந்த பின்னுங்கூட, அவனை இன்னும் சில நிமிடங்கள் அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. இவள் உடலைப் பிரிந்து எழுந்தவன் சகஜமானபின், அவள் தலைமாட்டில் ரூபாய்த்தாள்களை வைத்துவிட்டு நிதானமாய்க் குனிந்து அவளை முத்தமிட்டான். விலக்கியபோது, உளறலின் ஊடாக ‘உங்க பேரென்ன?” என அவள் கேட்க, நிதானமாய் சொல்லிவிட்டுப் போனான் ‘சாத்தான்’ என….”

153 views

Recent Posts

See All

Fake

Comments


bottom of page