இலங்கைக்குச் சென்றது இது முதல்முறைப் பயணமல்ல. ஆனால் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகான பயணம். கொரோனா காலகட்டத்திலும் அதன்பிறகு எனது வேலைகள் காரணமாகவும் நிறைய பயணங்களைத் தவிர்க்க வேண்டிய சூழலில் இருந்தேன். இடைப்பட்ட காலத்தில் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் எல்லாமுமே இந்தப் பயணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக சில தனிப்பட்ட குழப்பங்கள் காரணமாக இடைவெளி எடுத்துக்கொண்டு பயணிக்கத் தோன்றியதால்தான் முதலில் கடந்தமாதம் சிங்கப்பூருக்குச் சென்றுவந்தேன். இரண்டாவதாக எனது திட்டமாயிருந்தது மணிப்பூர் மற்றும் சிக்கிம் மாநிலங்கள்தான். வடகிழக்கு மாநிலங்களில் இந்த இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் நான் இன்னும் பயணித்திருக்கவில்லை. அதனால் மே மாதம் முதலே வடகிழக்கு மாநிலப் பயணத்தினைதான் மனதில் நினைத்திருந்தேன். மணிப்பூரின் அரசியல் சூழல் காரணமாக அதனைத் தவிர்க்க வேண்டியதாகிப் போனது. இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்று பயணத்திற்கு முதல்நாள் வரை எனக்குத் தோன்றவில்லை. கடைசிநேரத்தில் தீர்மானித்து பயணச்சீட்டுகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டேன். ( சில ஸ்டாக்குகளை விற்று வந்த பணம் பயணத்திற்கு உதவியாய் இருந்தது. இனி ஒழுங்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்.)
பயணங்களை விரும்பாத மனிதர்கள் இருக்க முடியாது. அதிலும் ஒரு எழுத்தாளன் எப்பொழுதும் எல்லைகளுக்குள் அடங்காதவனாக இருக்கவேண்டும். புதிய நிலங்களின் விடியலும் அந்தியும் அவனுக்குள் புதிய தரிசனங்களையும் தேடல்களையும் தரக்கூடியதாய் இருக்கின்றன. பயணத்தில் எதிர்கொள்ளும் புதிய மனிதர்கள் நமக்கு நம்மைப் புரிந்துகொள்ள உதவியாய் இருக்கிறார்கள். சுருக்கமான செலவில் வாழவும், கூட்டத்தில் ஒருவராக இருப்பதற்கு பழகிக் கொள்வதற்கும் பயணங்களே வழிகாட்டி. மொத்த பூமியையும் நடந்து கடக்கும் தாபம் இன்னும் எனக்கு மனதிற்குள் கனன்று கொண்டிருக்கிறது. அந்த தாபத்திற்கு ஒரே காரணம் அங்கே நான் என்னை முழுமையாய் உணர்கிறேன். எனக்கு உண்மையாய் இருக்க முடிகிறது. கஞ்சனாய் இருக்க வேண்டிய இடத்தில் கஞ்சனாகவும், பராரியாக இருக்க வேண்டிய இடத்தில் பராரியாகவும் உண்மையாகவே அச்சம் ஏற்படும் இடங்களில் அச்சப்படக்கூடியவனாகவும் இருக்கும் தருணங்கள் பயணங்கள்தான்.
வீட்டிற்கும் எனக்குமான தூரம் பால்யகாலத்திலிருந்தே துவங்கிவிட்டது. திருமணத்திற்கு முன்பு வரையிலும் வீடு என்கிற சொல் எனக்கு உவப்பானதாக இருந்ததில்லை. எனக்கான உலகை, நண்பர்களை நான் பயணங்களில் மட்டுமே கண்டடைந்திருந்தேன். அதனாலேயே எப்போதும் அழுக்கு உடைகளோடு புதிய இடங்களுக்குப் பயணிப்பதில் அலாதியானதொரு நிம்மதியுணர்வு கிடைக்கும். பிழைப்பிற்காக வட இந்தியாவில் சில மாதங்கள் இருந்திருந்தாலும் அவை பயணத்தில் சேரக்கூடியவை அல்ல, சம்பாத்யாம், சேமிப்பு, இவை எல்லாமே பெரும் அச்சுறுத்தலாய் மாறிய நாளில் துவங்கிய பயணங்கள்தான் எழுத்தை எனக்கான பயணமாக தகவமைத்துக்கொள்ள உதவியாய் இருந்தன. பயணங்களில் நூற்றில் ஒருவரை நாம் நம்மைப் போன்ற குணநலன்களோடு பார்க்க முடியும். எல்லாப் பயணத்திலும் அந்த ஒரு மனிதனை நீங்கள் எதிர்கொள்ளும் தருணம்தான் முக்கியமானது. அவனோடு நீங்கள் உரையாட வேண்டியதில்லை, அவன் உங்கள் நிலத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் அவன் உங்களைப் பிரதிபலிப்பான். நீங்கள் கண்டுகொள்ளாமல் போனால் அது உங்களது இழப்புதான். இந்த சுவாரஸ்யம்தான் தொடர்ந்து சாலைகளை நோக்கி மனதை நகர்த்தியபடி இருக்கிறது.
எனது சிறுவயதில் விவசாயக் கூலிகளாக எங்கள் கிராமங்களிலிருந்து தஞ்சாவூர் பகுதிக்குச் செல்வார்கள். மாதக் கணக்கில் தங்கி வேலைசெய்துவிட்டுத் திரும்புகையில் அடுத்த சில மாதங்களுக்கான உணவுத் தேவைகளோடும், அதைவிடவும் அதிகமான கதைகளோடும் திரும்பி வருவார்கள். காட்டுக் காவலுக்குச் செல்லும் இரவுகளிலும் தறிக் கம்பெனிகளில் வேலைக்குச் சென்றுத் திரும்பும் பயணங்களிலும் சலிக்க சலிக்க இதுபோன்ற கதைகளைக் கேட்டதுண்டு. அதேபோல் ஆன்மீக யாத்திரை சென்று திரும்பும் பெரியவர்கள் சொல்லும் கதைகளும் எனக்கு மறக்க முடியாதவை. பயணங்களின் மீதான விருப்பங்கள் பிறந்ததற்கு கதைகள்தான் முக்கியமான காரணமாய் இருந்தன. சாலையோர மரங்களும் மலை முகடுகளும் கடலின் பேரலைகளும் சில சமயங்களில் பெரு நகரங்களின் மூர்க்கமான கட்டிடங்களும்கூட நம்மிடையை கதைகளைப் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றன.
கடந்த மாதம் சிங்கப்பூர் பயணத்தில் உட்லட்ண்ட்ஸ் நூலகத்திற்கு முன்னாலிருந்த வெளியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன். அருகிலேயே சாலை அடுத்தாற்போல் உயரமான இரண்டு கட்டிடங்கள். இரண்டு கட்டிடங்களுக்கும் நடுவில் மெல்ல மெல்ல அஸ்தமனமாகும் சூரியன். செந்நிற வெளிச்சத்தின் கடைசித் துகள்கள் திட்டுத்திட்டாய் படர்ந்திருந்த வானத்தை அந்தக் கட்டிடங்களுக்கு நடுவே பார்க்க வினோதமாய் இருந்தது. எந்த உயரத்தைக் கண்டு வியப்பது? எந்த நிறத்தைக் கண்டு வியப்பது?
எனது பெரும்பாலான பயணங்களைப்போலவே இந்தப் பயணத்தையும் திட்டமிடவில்லை. திட்டமிடப்படாத பயணம் சில வகைகளில் அனுகூலமாய் இருந்தாலும் சில சமயங்களில் ஏமாற்றமாகவும் அமையக்கூடுவதுண்டு. ஒரு பயணத்தில் சில நல்ல தருணங்கள் அமைந்துவிடும். அது போதுமானதென்று நினைப்பவர்களுக்குப் பிரச்சனையில்லை, ஆனால் ஒவ்வொரு நொடியும் களிப்புகளோடு இருக்கவேண்டுமென எதிர்பார்த்தல் சரியல்ல. எதிர்பார்ப்புகள் நமக்குக் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்களை நாம் கடந்த அபூர்வ தருணங்களை அழித்துவிடக் கூடுமென்பதால் ஒவ்வொரு நாளையும் அதனதன் இயல்பில் எதிர்கொள்ளுதலே நலம்.
2016 ம் வருடத்தின் துவக்கத்தில் முதல்முறையாக இலங்கைக்குப் பயணித்தேன், அதன்பிறகு அந்த வருடத்தில் மட்டும் மூன்றுமுறை பயணம் செய்ய நேர்ந்தது. ஒரு நிலத்தைக் குறித்தப் புத்தக அறிவை மட்டுமே வைத்துக்கொண்டு நாவல் எழுதவேண்டுமென நான் நினைத்திருந்த அந்த நாட்களை இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது. மற்ற எழுத்தாளர்கள் ஒருவேளை அப்படி எழுதலாம். சில எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதுகிறார்கள். உலகின் எந்தப் பகுதிக்கும் நேரில் செல்லாமல் அந்த நிலத்து மனிதர்களோடு உரையாடாமல் இணையத்தின் வழியாகவும் புத்தகங்களின் வழியாகவும் மட்டுமே அந்த நாட்டு அரசியலைப் பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்கள் புத்தகங்கள் எழுதுவதையெல்லாம் நினைக்கையில் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
புத்தகம் வாசகனுக்கு எழுத்தாளன் சொல்லும் தகவல் சேகரிப்பு அல்ல, அனுபவத்தின் விளைச்சல். எழுத்தாளன் எதிர்கொள்ளாத அனுபவத்தின் எந்தவொரு துளியையும் எழுதும்போது அது போலியாகவே அமையக்கூடும். தொடர்ந்து இலங்கைக்குப் பயணிக்கையில் நான் எழுத நினைத்த நாவல் குறித்து நிறைய கேள்விகள் எனக்கு எழுந்தன. இப்பொழுதும் எழுகின்றன. எதுசரி எது தவறு என்கிற கேள்விகளை எல்லாம் தாண்டி யாருடையை கதையைச் சொல்லப் போகிறோம் என்கிற முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகப் படுகிறது. அந்த நாவலை நான் எழுதுவேனா? கைவிடுவேனா என்பதையெல்லாம் தாண்டி இலங்கையைக் குறித்து இன்று எழுத வேண்டியதன் தேவை அதன் கடந்த காலத்தை விடவும் நிகழ்கால அரசியலுக்கு அதிகமுண்டு எனத் தோன்றுகிறது. பிராந்திய ரீதியிலும் சரி, இந்தியாவின் அண்டை நாடு என்கிற அடிப்படையிலும் ஒரே மொழியைப் பேசக்கூடிய பெரும் மக்கள் கூட்டம் அங்கு வாழ்கிறார்கள் என்பதால் அவர்களின் வாழ்வையும் அரசியல் பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமானது.
கொரோனா காலத்திற்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியில் பெரும் சரிவுகளை சந்தித்திருந்தபோதும் இலங்கை எதிர்கொண்டு பிரச்சனைகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் மற்ற நாடுகளை விடவும் தீவிரமானவை. இயற்கை விவசாயம் குறித்து போதிய தெளிவின்றி எடுக்கப்பட்ட முடிவுகள் இலங்கையின் பிரதான வருவாயக இருக்கக்கூடிய தேயிலை உற்பத்தியை பெருமளவு பாதிக்க, இன்னொருபுறம் ஈஸ்டர் தாக்குதலின் விளைவாக இலங்கையின் இன்னொரு முக்கிய வருவாயான சுற்றுலாத்துறை முற்றாக பாதிக்கப்பட்டது. இதையெல்லாம் கடந்து சிறிதும் பெரிதுமாய் இலங்கைக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள். அது முதலில் தமிழ் மக்களை நோக்கி இருந்தது போல் கடந்த சில வருடங்களாக தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகங்களை நோக்கித் தீவிரமாய் திரும்பியிருக்கிறது. தமிழர், தமிழ் இஸ்லாமியர், சிங்களர் என மூன்று சமூகங்களிலும் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்குமே தமது நாடு எதிர்கொள்ளும் இனவாத பிரச்சனைகளில் இருந்து முழு முற்றான தீர்வு வேண்டுமென்கிற விருப்பமும் நோக்கமும் இருக்கிறது. ஆனால் இப்படி மாற்றத்தை யோசிக்கக் கூடிய சமூகம் மிகக் குறைவாக இருப்பதுதான் கவலையளிக்கிறது.
இந்த இடத்தில் ஒரு இடைச்செறுகலாக ஒரு பயணிக்கு தான் செல்லும் நிலத்தின் அரசியலைக் குறித்தெல்லாம் அக்கறை இருக்க வேண்டுமா? என்றொரு கேள்வி உங்களுக்கு எழலாம். இருக்க வேண்டும் என்பதுதான் எனது பதில். இன்பச் சுற்றுலாவும் ஓய்வும் தான் உங்கள் நோக்கம் என்றால் உங்களிடம் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இன்பமாய் இருக்கவும், ஓய்வாய் இருக்கவும் நீங்கள் ஒரு புதிய நிலத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. இருக்கும் இடத்திலேயே அதைச் செய்யலாம். ஒன்றைத் தேடிச் செல்ல வேண்டுமென்கிற எண்ணமும் அதற்காக உங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கக் கூடிய மனமும் உங்களை மற்றவர்களிடமிருந்து எந்தவிதத்தில் வேறுபடுத்துகிறது என்றால் நீங்கள் புதிதாக ஒன்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் அதற்காக உங்களால் மெனக்கெட முடியும். உல்லாசப் பயணியாகவே இருந்தாலும் நீங்கள் உலகைக் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டியது அவசியம். புதிய மனிதர்களோடு பழக வேண்டியது அவசியம். யாத்ரீகர்களின் குறிப்புகளும் கதைகளும் வரலாற்றில் காலம் கடந்து நின்றுகொண்டிருக்கக் காரணம் அவர்கள் இந்த உலகோடு தொடர்ந்து உரையாடியபடியே இருந்தார்கள். எந்த வகையான பயணியாக இருந்தாலும் அவருக்கு அடிப்படையில் சில பொறுப்புணர்வுகள் இருக்க வேண்டுமென்பதையே நான் வலியுறுத்துகிறேன்.
Comments