இந்தியாவில் சில மாநிலங்களில் பயணிக்கையில் நமக்கு இனம் புரியாத வெறுமையும் தனிமையுணர்வும் வரும், பழைய ஆறுகளை, வற்றிய குளங்களை, ஒடுங்கிப்போன மனிதர்களைக் கான்பதும் நகரங்களில் வலம் வருவதும் ஒன்றல்ல. நகரங்கள் மனிதர்களுக்கு வேறு முகங்களைத் தந்துவிடுகின்றன. இதனாலேயே கிராமங்கள் நிறைந்த மாநில மக்களின் வாழ்க்கை நம்மால் புரிந்துகொள்ள முடியாத எளிமையோடும் வறுமையோடும் இருக்கிறது. பெரும்பான்மையானவர்களின் பயணங்கள் கோட்டைகளையும் காடுகளையும் கடல்களையும் மையப்படுத்தி இருப்பதற்குக் காரணம் அவர்களது மனம் விரும்புவது அந்த மிகையான பிரம்மாண்டங்களைத்தான், எளிமையை அல்ல. எளிமையைக் காணவும் கண்டடையவும் பக்குவப்பட்டதொரு மனம் தேவையாய் இருக்கிறது. இருளை முழுமையாகப் பார்க்க அனுமதிக்காத நகரத்து மின்விளக்குகளின் ஒளிகள் இயற்கையுடனான நமது உறவை முற்றாகத் துண்டிக்கிறது. இந்த சின்னஞ்சிறிய வெளிச்சங்களுக்குக் கீழ் களிப்புறும் நாம் இரவில் வானின் பிரம்மாண்டத்தை அபூர்வத்திலும் அபூர்வமாகவே காண்கிறோம். ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்குச் செல்லும் பயணி ஒருபோதும் நெரிசல்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்வதில்லை.
2016 ம் வருடத்தில் முதல்முறையாக இலங்கைக்குச் சென்றபோது அங்கு நண்பர்களென எவரும் அறிமுகமில்லை. எல்லோருமே முகநூல் வழியாக அறிமுகமானவர்கள்தான். ஆனால் அந்தப் பயணத்தில் பெரும் உற்சாகம் இருந்தது. இத்தனை வருட இலங்கைப் பயணத்தில் அந்தப் பயணமும் கார்கியோடு இணைந்து சென்ற பயணமும்தான் மறக்கமுடியாதவையெனச் சொல்லலாம். அன்பு பாராட்டுதல், விவாதங்க, கசப்புகள், கோவங்கள், களிப்புகளென எல்லா உணர்வுகளையும் ஒரு பயணி கடந்து வருகையில் அந்த நாட்களில் அவன் தான் கற்றுக்கொண்டிருந்தவற்றில் தேவையில்லாதவற்றைக் கைவிடுகிறான்.
நாவல் எழுதுவதற்கெனத் துவங்கிய அந்த முதல் பயணத்தில் நான் சில அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முயன்றேன். முதலில் இலங்கையின் நிலவியலை, அடுத்ததாக வெவ்வேறு இனமக்களின் வாழ்க்கை முறைகளையும், நம்பிக்கைகளையும். இலக்கியங்களின் வழியாக ஒரு தேசத்தைப் புரிந்துகொள்ளலாம் என்பது மேலோட்டமான கண்ணோட்டமோ என்கிற சந்தேகம் எனக்கு அந்த பயணத்தில் தோன்றத் துவங்கியது. ஈழ இலக்கியத்தில் நமக்கு அதிகமும் வாசிக்கக் கிடைத்தது வடக்குப் பகுதியிலிருந்து எழுத வந்தவர்களின் படைப்புகள்தான். ஓட்டமாவடி அராஃபத், திசேரா, அனார், எஸ்.எல்.எம் ஹனீஃபா என கிழக்கிலிருந்தும் அனேக படைப்பாளிகள் உரையாடலுக்கு வந்திருந்தபோதும் பெரும்பான்மையாய் அந்த காலகட்டத்தில் அறிமுகமாகியிருந்தது வடக்கின் படைப்பாளிகள்தான். நான் முன்பே குறிப்பிட்டது போல் வெவ்வேறு வட்டார மக்களின் மனங்களும் நம்பிக்கைகளும் வெவ்வேறாக இருப்பதால் நாம் குறிப்பிட்ட நிலத்திலிருந்து எழுதப்படும் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இதுதான் அந்த தேசத்தின் மனநிலை என்கிற முடிவிற்கு வந்துவிடக் கூடாது. இந்தியாவின் ஏதாவதொரு மாநிலத்தின் வாழ்வைப் பின்னனியாகக் கொண்டு எழுதப்படும் ஒரு படைப்பைக் கொண்டு இதுதான் இந்திய மனம் என்று வரையறுப்பது எப்படி பிழையோ அதுவே இலங்கை போன்ற வெவ்வேறு இனங்கள் வசிக்கும் தேசத்தின் படைப்புகளுக்கும் பொருந்தும். இந்தப் புரிதல் வந்தபிறகு முன்னைவிடவும் கவனமாக வாசிக்கத் துவங்கியதோடு மலையகத்திலிருந்து எழுதப்பட்ட நூல்களையும் தேடி வாசிக்கத் துவங்கினேன்.
ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் பின்பும் இந்த வாசிப்பு புதிய புரிதல்களைத் தந்ததோடு நான் நினைத்ததுபோல் எளிதாக ஒரு நாவலை எழுதமுடியாதென்கிற கசப்பான உண்மையையும் புரிய வைத்தது. இருக்கிற தரவுகளைக் கொண்டு எனக்கிருக்கிற மொழியறிவைக் கொண்டு நினைத்தபடியே ஒரு நல்ல நாவலை எழுதிவிடலாம் தான், ஆனால் அது எனது இலக்கிய வாழ்க்கைக்கு நான் செய்யும் துரோகமாகிவிடும். ஒன்று இன்னும் கூடுதலான புரிதலோடு அந்த நாவலை எழுதுவது, அல்லது அதை எழுதாமல் கைவிடுவது இதுதான் சரியானது. யுத்தத்திற்கு முன்பிம் பின்புமான ஒரு தேசத்தின் அடக்கி வைக்கப்பட்ட கொந்தளிப்புகளை காண்கிறவன் என்பதன் அடிப்படையில் பிழையான ஒன்றைச் செய்யாதிருப்பது முக்கியம்.
ஏராளமான தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள், சொற்பொழிவாற்றுகிறார்கள் ஆனால் அவர்கள் திரும்பிவந்து இலங்கையைக் குறித்து என்ன எழுதுகிறார்கள் என்பதை உற்றுக் கவனித்தால் ஒரு நழுவும் போக்கை கவனிக்க முடியும். ஒரு சிலர் விதிவிலக்கு எனலாம், அவை சுவாரஸ்யமான பயணக்கட்டுரைகளாக இருக்கிறதாவென்றால் அதுவுமில்லை. அவை பயணம் மற்றும் இலக்கிய சந்திப்பு குறித்த பதிவுகள். அந்தப் பதிவுகளில் எந்த உற்றுநோக்குதலும் புரிதலும் இருப்பதில்லை. சில தினங்களுக்குமுன் ஒரு சந்திப்பில் வழி என்னும் இணைய இதழை நடத்திவரும் நண்பர் பரிதி ‘நீங்கள் ஏன் பயணக்கட்டுரைகள் எழுதுவதில்லை எனக் கேட்டார்.’ யோசித்துப் பார்த்தால் பயணக்கட்டுரைகள் எழுதுமளவிற்கு நான் இன்னும் பக்குவடப்படவில்லை என்பதுதான் எனது பதிலாக இருந்தது.
ஒரு தேசத்திற்கு முதல்முறையாக செல்வதை புதிய நிலத்தை தெரிந்துகொள்வதற்கான ஆர்வமாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் மீண்டும் மீண்டும் செல்வதென்பது அந்த தேசத்தின் மக்களைப் புரிந்துகொள்வதற்கான ஆர்வத்தினால் மட்டுமே விழையும். இலங்கைக்கு மீண்டும் மீண்டும் செல்லும் எனது பயணங்கள் நண்பர்களுக்கானவை, உரையாடலுக்கானவை. நான்கு வருட இடைவெளிக்குப்பின் நடந்த இந்த பயணத்தில் இதற்குமுன் இல்லாத ஒரு முக்கியமான மாற்றத்தைக் கவனித்தேன். இதற்கு முன் பார்க்காத அழுத்தம் நிறைந்த முகங்கள். பேருந்துகளில் சாலைகளில் சிரிப்பை மறந்துபோன மக்களைக் காண்பது என்னளவில் துயரமானது. புதிய மனிதர்களைப் பார்த்து புன்னகைக்கவும், பேருந்துகளில் இடம் கொடுக்கவுமான மனங்களை இந்தமுறைப் பார்க்க முடியவில்லை. முக்கியமாக பொருட்களின் விலைவாசி. வெளிநாட்டு பயணிகளுக்கு உற்சாகமான காலகட்டம் என யூ ட்யூபர்கள் சொல்வதைக் கேட்கையில் கடும் ஆத்திரமே வருகிறது. ஒரு நாட்டின் நிலையற்ற பொருளாதாரச் சூழல் எப்படி அங்கு செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கொண்டாட்டமாக இருக்க முடியும்? நூறு ரூபாய் கொடுத்து ஒரு நாட்டின் குடிமகன் வாங்கமுடியாத பிரட் பாக்கெட்டை சுற்றுலாப்பயணி வீணாக்கிச் செல்வதையும், கடும் பசியோடு எதிர்ப்படும் மனிதர்களைப் பொருட்படுத்தாமல் ஆடம்பரமாக சுற்றியலைவதையுமா கொண்டாட்டம் என்று சொல்வது. இலங்கைக்கு சுற்றுலா அத்யாவசியம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏராளமான பயணிகள் செல்ல வேண்டுமென்பதிலும் உடன்படுகிறேன். ஆனால் சமநிலையற்ற விலைவாசி ஒன்றைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாதாரண மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் அமையவேண்டும். இந்த அகோர விலைவாசிதான் இலங்கை மக்களின் இன்றைய துயரமாக மாறியிருக்கிறது. தீர்வுகளைக் கண்டடையும் இடத்திலோ, அல்லது பிழைவிட்டவர்களை குறைசொல்லும் இடத்திலோ நான் இல்லை. ஆனால் எல்லோருக்குமாக அக்கறைப்பட முடியும். ஒரு தேசமென்பதில் அதன் மக்களே முதன்மை. அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளே முதன்மை. அவர்களுக்கான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதையும் இந்த நிலையிலிருந்து விடுபட்டு புதிய தீர்வுகளைக் கண்டடைய வேண்டடையும் என்பதையும் சுட்டிக்காட்டுவது ஒரு எழுத்தாளனின் கடமை.
தீவு நாடுகளுக்கென்ற பிரத்யேகமான கொண்டாட்டமும் இல்லை. அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலால் விளைந்த அழுத்தத்தை மக்களின் முகங்களில் காண முடிந்தது. இதைவிடவும் முக்கியமாக பயணித்தப் பகுதிகளில் நண்பர்கள் கவலையோடு பகிர்ந்துகொண்டு இன்னுமொரு பிரச்சனை இளம் வயதினரிடம் மிகுந்து வரும் போதைப் பழக்கம். போதைப் பழக்கம் வேறு நாடுகளில் இல்லையா? ஏன் இந்தியாவில் இல்லையா? அது சமூகத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்காதா? உண்டாக்கும்தான். ஒப்பீட்டளவில் நெருக்கடி மிகுந்த ஒரு சமூகத்தில் இளவயதினரிடம் போதைப்பழக்கும் மிகும் போது அது ஒரு தனிநபரையோ குடும்பத்தையோ அல்லாமல் சமூகத்தையே சிதைக்கக் கூடியதாக மாறும். இலங்கையில் போதைக்கென பாவிக்கப்படும் மாத்திரைகளில் முக்கியமானது வலிப்பு நோயாளிகளின் நரம்புகளைத் தளர்வாக்கக் கொடுக்கப்படும் ஒரு மாத்திரையும், மனநலம் பிறழ்ந்தவர்களை சமன் செய்யக் கொடுக்கும் இன்னொரு மாத்திரையும்தான். எதிர்காலக் கனவுகளோடு வளரவேண்டியவர்களின் கைகளில் இந்த போதை தரப்படுமானால் அவர்களைத் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளும் வல்லூறுகளின் எண்ணிக்கைகளும் பெருகும்.
இதற்கு முன்பும் உலகில் வெவ்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. பெரும் வேகத்தோடு உழைத்து அந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டும் வந்துள்ளன. அந்த மீட்சிக்கு அடிப்படையானது, பெரும் கனவுகளோடும் நம்பிக்கையோடும் உழைக்கக் கூடிய தலைவரும் ஒரு தலைமுறையும்தான். விடுதலைக்குப் பிறகான சிங்கப்பூரின் நிலையையும் அங்கிருந்து இன்று வந்து சேர்ந்திருக்கும் இடத்தையும் எடுத்துக்கொள்வோம். லீக்வான்யூ பேசிய காணொளிகள் ஏராளமாய் இன்றும் இணையத்தில் கிடைக்கின்றன. தனது தேசத்தைக் குறித்து அவருக்கிருந்த கனவுகளும் தொலைநோக்குப் பார்வைகளும் அவரால் மட்டுமே சாத்தியப்பட்டதல்ல. அவருக்குப் பக்கபலமாய் இருந்த சிங்கப்பூர் மக்களின் பங்களிப்பையும் நாம் குறிப்பிட வேண்டும். ஒழுங்கு சில சமயங்களில் கசப்பானதுதான், ஆனால் மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் அதனைத் தவிர்க்காமல் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இத்தனை வளங்களும் திறமைசாலிகளும் நிரம்பிய இலங்கை பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டதை போரின் விளைவாக மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒரு பயணியாக மட்டுமே அல்லாமல் ஒரு எழுத்தாளனாகவும் எனது பயணங்களை நான் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. எங்கெல்லாம் செல்கிறோம், என்னவெல்லாம் செய்கிறோம் என்பதில் வேடிக்கையைத் தாண்டி அக்கறையுடனும் இருக்க வேண்டியுள்ளது. கொண்டாட்டங்களோடு சேர்ந்த பொறுப்புணர்ச்சிதான் ஆரோக்கியமான மனதையும் எழுத்தையும் உருவாக்கும். இந்தமுறை பயணத்தில் ஏற்கனவே செனற இடங்களுக்கும் சில புதிய இடங்களுக்கும் செல்ல முடிந்தது. ஆனால் ஏற்கனவே பார்த்த மனிதர்கள் யாரும் அவர்களாக இருந்தார்கள் என்பதுதான் கேள்வி. அரசாங்க வேலைகளிலிருப்பவர்கள் இருக்கும் நெருக்கடிகளைச் சமாளித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வியாபாரம் செய்து நல்ல நிலையிலிருந்து நிறைய நண்பர்கள் கடன்களை சமாளிக்க முடியாமல் தொழில்களை விட்டுவிட்டு பிழைப்புதேடி வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள். இதில் எல்லா சமூகமும் அடங்கும். இலங்கை அளவிற்கு பொருளாதாரா நெருக்கடி இல்லாதபோதும் இந்தியாவிலிருந்தும் சமீபத்திய வருடங்களில் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது அதிகரித்துதான் இருக்கிறது. ஆனால் நூற்றி நாற்பதுகோடி சனத்தொகை கொண்ட தேசத்தில் இந்த இடப்பெயர்ச்சி பெரிய விழைவுகளை உருவாக்கப் போவதில்லை. இலங்கையைப் போன்ற ஒரு சிறிய தேசத்தில் நிகழும் பெரும் இடப்பெயர்வு ஆரோக்கியமானதாகத் தோன்றவில்லை.