விகடன். காமில் இருபத்தைந்து வாரங்கள் நான் எழுதி வெற்றிகரமாக வாசிக்கப்பட்ட தொடர், இவர்கள். புனைவுகள் அ-புனைவுகள் என ஏராளமாக எழுதியிருந்தாலும் இந்தத் தொடரை எழுதியது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. மனிதர்களின் கதையை அவர்களின் சொற்களின் வழியாகவே கேட்டு எழுதவேண்டும், அதேசமயம் அது நேர்காணலாகவும் இருந்துவிடக் கூடாதென யோசித்தபோது ஒரு புதிய வடிவம் கிடைத்தது. இந்தத் தொடரில் எழுதிய இருபத்தைந்து பேரில் சிலர் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள் என்றாலும் எழுதுவதற்காக அவர்களோடு உரையாடிய தருணத்தில் அவர்களின் இன்னொரு பரிணாமத்தை என்னால் உணரமுடிந்தது. சரியானவற்றையும் சரியான நபர்களையும் தொடர்ந்து கவனப்படுத்த வேண்டியது அவசியம். ஒரு சமூகத்தில் வேறு எவரும் பொருட்படுத்தாத, செய்யத் துணியாததை ஒருவன் பொருட்படுத்தி செய்யும்போது அவனுக்கான பதில் மரியாதையைச் செய்யவேண்டியது எழுத்தாளனின் கடமை. அவர்களின் பணிகளையும் உழைப்பையும் ஆவணப்படுத்தும் ஓர் எளிய முயற்சிதான் இவர்கள். இந்தத் தொடரில் இன்னும் ஏராளமான மனிதர்கள் குறித்து கதைகளுண்டு. திரைப்பட வேலைகளின் நெருக்கடி காரணமாகவே இருபத்தைந்து பேரோடு நிறுத்திக் கொண்டோம். அதிலும் இரண்டு கட்டுரைகள் எனக்கு முழுமையான திருப்தியில்லாமல் போனதால் அவற்றை நீக்கிவிட்டு மிச்சமிருந்த இருபத்திமூன்று கட்டுரைகளோடு இந்நூல் வெளிவந்திருக்கிறது. இதுபோன்ற நூல்கள் சமூகவெளியில் அதிகம் வாசிக்கப்பட்டு உரையாடப்பட வேண்டும். இதில் சில கட்டுரைகளில் வரும் மனிதர்கள் வாழ்வதற்கான பெரும் நம்பிக்கையைத் தரக்கூடியவர்களாய் இருப்பார்கள். இன்னும் சிலர் எந்த நிலையிலும் தனது இயல்பை இழக்காத சமூகத்திற்கென சிந்திக்க வேண்டிய மனவலிமையை தரக்கூடியவர்களாய் இருப்பார்கள். வாழ்வதற்கான நோக்கம் சமூக மாற்றத்திற்கான தேடலில்தான் முழுமையடைகிறது என்பது எனது அசாத்தியமான நம்பிக்கை. அந்த வகையில் இந்தக் கட்டுரையில் வரும் மனிதர்களில் சிலர் எனக்குமே வழிகாட்டியாய் இருக்கக் கூடியவர்கள்.
இந்த புதிய நூலை காமன்ஃபோக்ஸ் இணையதளத்திலும் பனுவல் மற்றும் பி ஃபார் புக்ஸ் கடைகளிலும் நண்பர்கள் வாங்கலாம்.
நூலின் பின்னட்டைக் குறிப்பு.
”மனிதர்கள்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளனாக சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்க வேண்டிய கடப்பாடு கொண்டிருப்பதால் என்னைப்போலவே மனிதர்களின் மீது பெருங்காதல் கொண்டவர்களை தேடிச்சென்று சந்திப்பதையும் உரையாடுவதையும் நீண்டகால வழக்கமாகக் கொண்டிருப்பவன் நான். அவ்வாறு கடந்த சில வருடங்களில் பண்பாட்டு தளத்திலும் சமூகத்தளத்திலும் பெரும் பங்காற்றி வருகிறவர்களைக் குறித்து கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.”
Comments