லட்சுமி சரவணகுமாரை நான் தொடர்ந்தும், ஈடுபாட்டோடும், மிகுந்த அக்கறையோடும் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். வசுந்தரா என்னும் நீலவண்ணப் பறவை தவிர மற்ற மூன்றும் இந்த ‘உப்பு நாய்கள்’ நாவலும் என்னிடம் இப்போதும் இருகின்றன. ஜி.நாகராஜன், சுரேஷ்குமார இந்திரஜித், லட்சுமி சரவணகுமார் என்று ஒரு தற்செயலான வரிசையில் என் புத்தகங்களின் சிறிய அடுக்கில் அவற்றை வைத்திருக்கிறேன். அது தற்செயலானது அல்ல என்று தோன்றுகிறது. உலகில் எதுவும் தற்செயலானது அல்ல என்பதும் தெரியும். குறைந்த வாசிப்புடைய என் மனம் ஏதோ ஒரு இழையில் ஜி.நாகராஜனை, சுரேஷ்குமாரை, லட்சுமியை எல்லாம் ஒன்றாகக் கோர்த்திருக்கிறது. என் வரையில் என் கோர்ப்பு என்னுடைய உணர்வுகள் மட்டும் சார்ந்தது. அதன் பின் எந்த கோட்பாட்டு அளவுகோல்களும் தர்க்க நிரூபணங்களும் இல்லை. ஒரு வாதாங்கொட்டை போல இரவுப் பறவையால் வீசப்பட்டு என் தெருவில் அது கிடக்கிறது. தெற்குப் புறவழிச் சாலையில் நசுங்கித் தகடாகக் கிடக்கிற ஒரு தீங்கற்ற மைனா போல என் ஒரு அதிகாலையைப் பதற்றமுறுத்துகிறது.
யோசேப்பு தெரு முனையில் போடப்பட்டிருக்கும் சனிக்கிழமை மீன் கடையின் பக்கம் சுற்றிக்கொண்டிருந்த சாம்பல் பூனையை, காலை ஏழுமணி ஞாயிற்றுக்கிழமை ஆராதனை துவங்குகிற வெயிலற்ற பொழுதில், வாசல் கதவில் பிறையும் நட்சத்திரமும் இடப்பட்டிருக்கும் மாஜி பட்டாளத்துக்காரர் வீட்டுப் பக்கவாட்டுக் குப்பையில் உயிரற்றுப் பார்க்கநேர்கிறது. அது எப்படி மனிதனைத் தவிர, ஒரு பறவையோ, ஒரு மீனோ, ஒரு பூனைக்குட்டியோ மரணத்தில் விகாரமடைவதில்லை? கண்களில், வாயின் இதழ்க்கடையில் வாழ்வின் ஒரு விடாப்பிடிச் சிரிப்பை அவை தேக்கிவைத்திருப்பது போலவே அவற்றின் மரணத்திற்குப் பிந்திய முகங்களும் இருக்கின்றன?
லட்சுமி சரவணகுமாரின் இதுவரை வெளியாகியிருக்கும் ஐந்து புத்தகங்களின் எந்த ஒன்றின் அன்பும் நன்றியும் பட்டியல்களின் நீண்ட வரிசையில் என் பெயர் இல்லவே இல்லை. தவிர, அவற்றில் இருக்கும் பெயரினர் எவர்க்கும் எனக்கும் கூட ஒரு தொலைதூரம் இருக்கிறது. என்னுடைய பெயரை உச்சரித்தால் கூட உடனே வாய்கொப்பளிக்க நினைக்கிறவர்கள் சிலர் கூட அவர்களில் இருந்திருக்கலாம். ’இவன் எல்லாம்’ என்ற உதட்டோரக் கேலிப்புன்னகையுடன் முகச் சதை ஒதுங்கப் பார்க்கிறவர்களும் ஒன்றிரண்டு பேர் இருக்கக் கூடும். இவ்வளவு பாரதூர இடைவெளிக்கு அப்பால் இருக்கிற லட்சுமி சரவணகுமாரின் எழுத்துகளை நான் தவறவிடாமல் தொடர்ந்து வந்தேன் என்பதும், ‘உப்பு நாய்கள்’ வெளியானதும் வாசித்துவிட்டு, என்னைவிடக் கூர்மையான வாசிப்பு உடைய சாம்ராஜ் போன்ற ஒன்றிரண்டு நண்பர்களின் உடனடிக் கவனத்திற்கு இதைக் கொண்டுபோனேன் என்பது எப்படி உண்மையோ, அதே போலத்தான் திடீரென்று ஒரு நாள் லட்சுமி சரவணகுமார் தொலைபேசியில் வந்து, ‘உப்பு நாய்கள்’ இரண்டாம் பதிப்பிற்கு நான் முன்னுரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும்.
நான் ஒருவிதமாக வாழ்கிறேன், ஒரு விதமாக எழுதுகிறேன். அவர் ஒருவிதமாக வாழ்கிறார். ஒருவிதமாக எழுதுகிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இந்த அதேவிதமாக இல்லாத தன்மையில்தான் எல்லாக் காதலும் எல்லாக் காமமும் எல்லா யுத்தமும் கூடத் துவங்குகின்றன. ஒரு வீட்டில் இருக்கிற ஐந்து நபர்களுக்கும் வீடு ஐந்து வெவ்வேறு விதமாக இருக்கிறது. இந்த ஐந்தும் சாராத ஒரு ஆறாவது விதத்தில் வாழவும் சாகவுமே, வீட்டுக்குள் அந்த ஐந்துபேரும் அடித்துப் பிடித்து முயல்கிறார்கள். ஒருவரிடமிருந்து ஒருவரை ஒளித்து, ஒருவரிடமிருந்து ஒருவர் தப்பித்து அதே வீட்டின், அதே தெருவின் பகலிரவுக்குள் பதுங்கிப் பதுங்கித் திரிகிறார்கள். ஒரு வீட்டிற்கே ஒரு தெருவுக்கே இந்தப் பாடு எனில் ஒரு மாநகருக்குக் கேட்பானேன்? கேட்பானேன் என்று சௌகரியமாக ஒதுங்கிக்கொள்ளாமல், ‘நீ என்ன கேட்பது அல்லது கேட்காது போவது?’ என லட்சுமி சரவணகுமார் அவருடைய இருட்டில் வடிகட்டிய ஒரு மாநகரத்தை நம் முன் வீசுகிறார். இவர்களில் ஒருவரைக்கூட என்னுடைய மேற்கு மாம்பல நாட்களில், நான் யூகமாக்க் கூடவேனும், கண்டதும் அனுமானித்ததும் இல்லை. அப்படி நான் காணாத ஒன்றாகவும் அனுமானம் தாண்டியதாகவும் அந்த உலகமும் மனிதர்களும் இருப்பதால்தான் எனக்கு அது ஈர்ப்புடையதாக ஆயிற்று.
நான் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலை எவ்வளவு நம்புகிறேனோ, அவ்வளவு நாய்க்கறி விற்கும் திருவொற்றியூர் கோபாலையும் பாஸ்கரையும் சுந்தரையும் மணியையும் சோஃபியையும் முத்துலட்சுமியையும் செல்வியையும் ஷிவானியையும் நம்புகிறேன். இந்த உலகத்தில் யாரையும் நம்பத்தான் வேண்டியதிருக்கிறது. எந்த ஒருவரையும் எந்த ஒரு சம்பவத்தையும் சந்தேகிக்கக் கட்டுபடி ஆகாததாகவே இந்த வாழ்வு இருக்கிறது. சந்தேகத்தின் பதற்றத்துடன் வாழ்ந்து சாவதை விட, சந்தேகப்படாமையின் அசட்டு நிம்மதியில் ஒவ்வொரு கட்டமாக்க கடந்துபோய்விடுவது நல்லது, குறைந்தபட்சம் எனக்கு.
இப்படியெல்லாம் இருப்பார்களா என்று சம்பத், சுந்தர், பாஸ்கர், மணி, கோபால், ஜாஃபர், செல்வி, தவுடு, முத்துலட்சுமி, இவாஞ்சலின், சோஃபி, ஷிவானி, அந்த பாம்புப் பாப்பா ஆதம்மா என்று யாரைப் பார்த்தும் எனக்குச் சந்தேகிக்கும் கேள்விகள் இல்லை. இருப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் இருப்பதைத் துளியும் அறியாமல், நான் தினந்தோறும் மாம்பலம் கடற்கரை மின்ரயிலில் போய்வந்துகொண்டும், இருக்கிறார்கள் என நான் என் வாழ்வின் வழி அறிந்த சிலரைப் பற்றிய கதைகளை அவ்வப்போது எழுதிக்கொண்டும் இருந்திருக்கிறேன், என்னுடைய அந்த மூன்று வருடங்களுக்கும் குறைவான சென்னை வாழ்வில். இருப்பில் என்பதையும் உணர்கிறேன்.
இந்த மனிதர்களை ஏற்கனவே நான் சந்தித்து இருப்பதாகவும், இந்த இந்த இடங்களில் புழங்கியிருப்பதாகவும் நினைக்கிறேன். யாக்கை டயானாவும், ஸ்பானியத் தோழி மரியாவும், உமாசித்தியும், ராமுத்தாயியும், அன்னமும், நாகு என்கிற நாகுலட்சுமியும், சுங்குவும் சப்பட்டையும் சொரிமுத்துவும், மகேஷுவும், தாமுவும் தானே வேறு வேறு ஊர்களில் திரிந்து கூத்துகட்டப் போகிறார்கள் என்று ஒரு புள்ளியில் புரிந்துவிடுகிறது. புரிந்த பிறகு, இருளின் மூத்திரத்தில், மானிட்டரின், பொட்டலத்தின் வாடையில் யாரையும் சந்திக்க நான் தயாராகிவிடுகிறேன்.இப்படித் தயாராக இருக்கிற மனநிலை எனக்கும் என்னை இப்படித் தயார்படுத்திவிடமுடிகிறபடி எழுதிவிடுவது லட்சுமி சரவணகுமாருக்கும் முக்கியமானது.
வருடத்திற்குப் பத்து கதைகள் எழுதுவது அவருக்கு ஒரு வகைப் பிணியெனப்படுவது எனில், அவருடைய கதைகளைத் தேடி வாசிப்பதும் என் போன்றோர்க்கு வேறு ஒரு வகைப் பிணியாகவே இருக்கக் கூடும். மருத்துவ மனை ஒன்றில் நான் இருந்த இரண்டு வாரங்களில், அந்த நகரத்தின் சாக்கடைக் கழிவு நீரை உந்தும் நிலையத்திலிருந்து நள்ளிரவுக்கு மேல் பெருகும் துர்வாடை முதல் நான்கைந்து தினங்களில் தந்த தொந்தரவு மறைந்து, குணமடைந்தபின் துல்லியமாக ஞாபகப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு அந்தக் கும்பிய வாடை மனதில் நிரந்தரப்பட்டுவிட்ட்து. ஒரு அரூபமான வாடைக்குச் சற்றும் குறைந்ததாகாது ரூபத்துடன் குரைத்தும் வெறிகொண்டும் கல்லடிபட்டும் வன்மங்களின் வாகனங்களில் நசுக்குண்டும் போகிற மாநகர நிழலுயிர்களின் பதுங்கும் நடமாட்டங்கள்.
மாநகரை விடுங்கள். இங்கென்ன வாழ்கிறது? இரண்டு தினங்களுக்கு முன் ஒரு அதிகாலை, புறநகரின் பெரும் விஸ்தீரணமுள்ள, இதுவரை புதரும் புல்லும் முளைத்துக் கிடந்த மனை ஒன்று, ஒரு புல்நுனி கூட விடப்படாமல், இரவோடு இரவாகக் கருகிக் கிடந்தது. தீ ஒருபோதும் இவ்வளவு கருணையற்றது அல்ல. ஏதோ ரசாயனத் தெளிப்பான்களை உபயோகித்தால் அன்றி, கடைசிப் புல்வரை இப்படிக் கருகிப் போகாது. நான் பார்க்க நேர்ந்த பொழுதில், குச்சி போன்ற நீண்ட கால்களை உடைய மூன்று களங்கமற்ற புதர்ப்பறவைகள், அதன் பழுப்பு நிறச் சிறகுகளை உடலோடு உடலாக ஒடுக்கிக்கொண்டு, பைத்தியம் பிடித்தது போலப் பதறிப் பதறி அந்தக் கருகின சாம்பல் தரையில் ஓடிக்கொண்டு இருந்தன. எனக்கு அந்தப் பறவைகளின் பெயர் தெரியாது. அந்தப் பதற்றமான நகர்வை அசோகமித்திரனின் புலிக்கலைஞன் போல என்னால் என்னையறியாமல் நிகழ்த்திக்காட்டிவிட முடியும். லட்சுமி சரவணகுமாருக்கு அந்தப் பறவைகளின் பதற்றமும் தெரிந்து பெயரும் தெரிந்திருக்கிறது.
அதனால்தான் அவருக்கு இந்த ஐந்து வருடங்களில் நீல நதியிலிருந்து நீலத் திரைக்கு நகர முடிந்திருக்கிறது. யாக்கையில் இருந்து உப்பு நாய்களுக்கு நகரமுடிகிறது. ஏற்கனவே எழுத உத்தேசித்திருந்த ஆதம்மாவின் கதையை விட்டு விலகி சம்பத்தின் கதைக்குள் அகப்பட்டுவிட நேர்கிறது. அப்படித்தான் ஆகவும் ஆகும். சரவணகுமாருக்கு முப்பது வயது நிறையவில்லை. அல்லது இப்போதுதான் நிறைகிறது. இதுவரையிலான வாழ்வின் நேரடியும், சமீபத்திய அவருடைய திரைப்படத் துறை செயல்பாடுகளின் வழியாக அவர் தொடர்ந்து கண்டுவரும் அயல்திரைப்படங்களின் வழி அறிந்துகொண்ட பிறிதொரு வாழ்வும், எல்லா வாதையையும் வன்மத்தையும் காமத்தையும் அவரை ஒரே இடத்தில் அம்பாரமாகக் குவிக்கச் சொல்கிறது. இன்னும் பத்து வருடங்களில் அவர், வாழ்வின் ஏதோ ஒரு இன்னொரு புள்ளியில், விருப்பத்தின் பேரில் அல்லது தவிர்க்கமுடியாமல் நிலைகொள்ளும் போது, இதே சம்பத்தின் இதே ஷிவானியின் வேறு ஒரு சாயலைச் சொல்வார். அப்போது எல்லாம் ஒரே இடத்தில் குவிந்திராது. இருளை நேரடியாக அறிந்தவன் வெளிச்சத்தையும் நேரடியாக அறிகிறவனாக அப்போது இருப்பான். எதையும் நேரடியாக அறியத் தேவையில்லை அப்படியொன்றும் என்றும்.
வெளிச்சத்திற்குப் பரிச்சயமானவர்களின் அந்த சிறிது வெளிச்சக் கதையை லட்சுமி சரவணகுமார் எழுதும்போது, ஒருவேளை நான் இருக்கமாட்டேன். இருப்பேன் எனில், எழுதுவதை நிறுத்தியிருப்பேன். எழுதுவதை நான் நிறுத்தியிருப்பேன் ஆயினும், லட்சுமி சரவணகுமாரை வாசிக்கிறவர்களில் ஒருவனாகவே இருப்பேன்.
கல்யாணி.சி.
23-05.2013.
Yorumlar