உரித்துக்காட்டாத எழுத்தும்,என் எண்ணங்களின் குரலும் : கொமோரா
- லக்ஷ்மி சரவணகுமார்

- 4 days ago
- 2 min read

முழுமைக்கான மனித உணர்வில் வன்முறையும் நம்மோடு பயணித்து கொண்டிருக்கையில்,அதன் நீட்சி எப்படி முழுதாய் இருள் சூழ்ந்து இருக்கமாய் இருக்கிறது என்பதே தணல் அணையாத கொமோரா.
பிரதான மையமான Character-இன் (பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை) பார்வையில் நம்மை இழுத்து அவனின் உணர்வுகளை பிரதிபலிக்க செய்த இடத்தில் இந்த புத்தகம் நிமிர்கிறது.
குரூரம்,வன்முறையை தனக்கான பாதையாய் கையில் எடுத்து,திசை இரண்டைப் பிணைத்து (கம்போடியா,மதுரை) அதன் விஷயங்களை உடைக்கும் இடம் பிரமாதம்.
நிரம்பிவிடாத வாழ்க்கைத் துளிகளை உறவின் உருவாய் நிஜம் கொடுத்து,அதன் சிக்கல்களையும்,வன்மத்தையும் காட்டி,இதன் ஆழங்களின் அடைநிலை வேர்கள் இருள் பிடித்து பலி கேட்பது,யதார்த்த நிலைகள்.
அவனின் அப்பா சேர்த்த “சொத்தில்” பங்கு இருப்பதும்,வதைமுகாம்களின் கொடூரங்களும் ஒரு வெறுப்புணர்ச்சியை உன்(ண்)டாக்கி,அதிலிருந்து திரிபிடிக்கும் வன்முறை என அந்த உலத்தில் நம் பிரதி பதிக்க அழுத்தமாய் உதவுகிறது கதையோட்டம்.
அவன் நண்பன் அவனைக் காதல் செய்ய அதை வெளிப்படுத்தி நீளும் இடங்கள் சற்று குறைத்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.காரணம் அந்த பாத்திர வடிவமைப்பு அப்படி அதற்கான அழுத்தத்தை எதற்காக கொடுத்தது என சுற்று யோசித்தால்,காரணமோ (அ) எதுவும் இல்லாததே ஒரு காரணமாக இருக்குமோ என்று வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன் (மீண்டும் படித்தால் இன்னும் தெளிவாகலாம்).
இது எழுத்தாளரின் சொந்தக்கதை என்பதால்,அந்த வலிகளின் அலைவரிசை பக்கங்கள் முழுவதும் வெப்பப் பகுதிகளாய் மேட்டில் ஏறிக்கொண்டிருக்க.
உமிழும் வெறுப்பை,ஒட்டாத அன்பை யாரிடத்திலும் உண்மையாய் காட்டாமல் அவனின் போக்கில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவனின் மனநிலையைத் தாண்டி,பெண்கள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் விதம்,பாத்திர வடிவமைப்பு அழகாய் செதுக்கி,இடர்பாடுகளுக்கு இடையே அந்த வாழ்க்கையில் அர்த்தங்கள் எத்தனைப் புரிதலைக் கொடுக்கிறது என காட்டப்பட்டிருக்கிறது.
ஆசிரியரின் பிடித்துக்கொண்ட “வாசனைகள்” இதிலும் உண்டு,அவரின் புத்தகங்கள் தொடர்ந்து படிப்போருக்கு தெரியும்.
அது இதில் பசை பிடித்து நன்றாக தங்கி இருக்கிறது.
எந்த சித்தாந்த விஷயங்களும் தெரியாத,புரியாத,ஒரு ஆளாய் பாவம் தாங்கிக்கொண்டு,பாவம் செய்து கொண்டு எதிர்மறை எண்ணங்களைச் சுமந்து,
பயணப்படும் பாதை முழுவதும் உமிழ்ந்து கொண்டிருக்கும் பாவத்தின் சின்னமாக ஒரு குறியீடாய் காட்டுவது அற்புதம்.
சின்ன சின்ன விஷயங்களில் அது அழுத்தமாய் அங்காங்கே முத்திரையாக நிலைத்து,”தியாக” உள்ளங்கள் இருக்காத்தான் செய்கிறது என ஒரு பாத்திர வடிவமைப்பு அழுத்துவது அத்தனை யதார்த்தம்.
இரு திசைகளின் ஒரு மையப்புள்ளி,
இரு நட்பின் ஒரு சுழி,
இரு காதலின் ஒரு சுமை,
இரு உணர்வின் ஒரு முடிவு என இணைத்து இணைத்து எழுதியிருக்கும் இடங்கள்,
அதற்கான காரணங்கள் என அனைத்து விதமான பிரமாணமும் இரண்டாய் உடையும் கானல் நீர்கள்,
அது சிறிதாய் மட்டுமே விழுங்கியவனுக்கு சமூகத்தின் ஒரு முக அடையாளம் என்பது “அழிக்கப்பட்ட மேடு” “எரிக்கப்பட்ட அனைத்தும்”
என்கையில் Empathise ஆக பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது நமக்கு,அதுவே இந்த நாவலின் அபார வெற்றி.
முடிவில் அவன் யாரும் பார்க்கிறார்களா என பார்த்துவிட்டு,அவன் செய்யும் காரியம்,இன்னும் அவன் எப்படி இருக்கிறான் (அ) இந்த சமூகத்தின் நிலை இன்னும் இப்படித்தான் இருக்கிறதா….என கேள்விகளுடன் நிறைவடைகிறது.
அதுவே இரு நிலையின் ஒரு அழுத்தம்.
கொமோரா :
நரவெளித்தீயில் மொய்த்த
நகர ஈசல் ஒலியும்
நரக உறுமல்களும்,எண்ணங்களுமே
நிஜ ரேகை மனிதனுக்கு.!
-தகிலாயமுடன்
ரத்தீஷ்.ர
ஜூன் 9 - 2021


