தமிழ் புனைவுலகில் காலத்தால் அழிக்கவியலாத பங்களிப்பை செய்தவர்களில் முக்கியமானவர் எம்.வி. வெங்கட்ராம். ஒரு படைப்பாளன் தன் காலத்தில் தொடர்ந்து எழுதுவதற்கும் ஒரு இயக்கமாகச் செயல்படுவதற்கும் வேறுபாடுள்ளது. எம்.வி.வி தன் காலத்தில் ஓர் இயக்கமாய்ச் செயல்பட்டவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளோடு சிற்றிதழும் நடத்தியவர், தன் சிற்றிதழில் எழுதியவர்களுக்கு அந்தக் காலத்திலேயே அவரவர் எழுத்திற்கான சன்மானத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இந்த வகையில் ஒரு வருடத்தில் முப்பதாயிரம் ரூபாயை சிற்றிதழுக்காக செலவு செய்திருக்கிறார். இன்றைக்கு அதன் மதிப்பை யோசித்துப் பார்த்தால் மலைப்பாய் இருக்கிறது. சக எழுத்தாளர்களோடு அவர் கொண்டிருந்த நட்பும் அதன் வழியாய் அவர்கள் மேற்கொண்ட உரையாடலும்தான் அவரை ஒரு இயக்கமாக பார்க்கச் சொல்கிறது. தமிழில் எழுதிய எல்லோரின் மீதும் அவருக்கு கரிசனமிருந்தது, ஆனால் அவர் தன் சக எழுத்துலக ஜாமபவான்களைக் கொண்டாடிய அளவிற்கு தமிழ் இலக்கிய உலகம் அவரைக் கொண்டாடியதா என்றால் இல்லையென்பதுதான் நிஜம்.
வேறு இந்திய மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழில் சிறுகதைகள் வளமானவை.
சிறுகதை என்கிற வடிவத்தில் நாம் இயங்கத் துவங்கிய நாளில் இருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித்துவமான சிறுகதையாளர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இப்போதுமிருக்கிறார்கள். சொற்சிக்கனமும் கச்சிதமும் முக்கியம் என்கிற விதி கவிதைகளுக்கு மட்டுமல்ல, சிறுகதைக்கும் பொருந்தும். நல்ல சிறுகதையாளன் சொற்களைச் செலவு செய்வதில் கஞ்சனாய் இருக்க வேண்டும், ஒரு கதையில் சொற்களை ஊதாரியைப்போல் செலவு செய்கிறவர்களை காலம் வெகு சீக்கிரம் மறந்துபோகும். தஞ்சை & கும்பகோணத்து எழுத்தாளர்களின் கதைமொழிக்கென்று ஒரு வசீகரமுள்ளது. ஒழுங்கும் ரசனையும் மிகுந்த அம்மொழி மனிதர்களின் மனங்களை ஆழமாய் அணுகி எழுதியதால்தான் இன்றைக்கும் அந்தக் கதைகள் மீள் வாசிப்பு செய்யப்படுகின்றன. இவர்களின் கதைகள் உருவாக்கிய தஞ்சை மற்றும் கும்பகோணம் குறித்த சித்திரங்களை அத்தன எளிதில் நாம் மறந்துவிட முடியாது.
200 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எம்.வி.வி எழுதியிருக்கிறார். அவர் கதைகளில் வெளிப்படும் மனிதர்களின் மீதான அவதானமென்பது ஒருவரின் மீதான குற்றங்களைப் பிரதானப்படுத்தாமல் இயல்பை ஆராய்வதாக இருக்கிறது. மனிதர்களின் சிக்கல்களுக்கான தீர்வுகளை ஆராய்ந்து கண்டடைவது ஒரு எழுத்தாளனின் வேலையல்ல, ஆனால் அவன் அந்த சிக்கல்களால் தனிமனிதன் அடையும் நெருக்கடிகளைப் புரிந்து கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். கைவிடப்பட்ட மனிதர்களின் பசிக்காக தனிமைக்காக வருந்தாத ஒருவனுக்கு கலை எங்கனம் கைகூடும்? எம்.வி.வியின் கதைகளில் அதிகமும் நாம் காணமுடிவது இப்படி கைவிடப்பட்ட மனிதர்களின் மீதான கரிசனம் தான்.
மந்திரமே உலக நாகரீகத்தில் தொடக்க காலத்தில் கலைகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் மூலமாக இருந்தது என்பதனை சமூகவியல் அறிஞர்கள் ஜார்ஜ் தாம்சன், ப்ரேசர் போன்றோர் குறிப்பிடுகிறார்கள். தொன்மங்கள் கதைகளாகவும் பாடல்களாகவும் உருவாக்கப்பட்டதை இதன் நீட்சியாய் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்திய தொன்மத்தில் பெண்களின் கற்பையும் ஒழுங்கையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ஏராளமான கதாப்பாத்திரங்களில் அகலிகை தனித்துவமானவள். அகலிகையை மையப்படுத்தி கதைகளும், நாடகங்களும், பாடல்களும் ஏராளமாய் எழுதப்பட்டுள்ளன. தொன்மங்களை மறு உருவாக்கம் செய்யும்போது அதை உருவாக்குகிறவன் எடுக்கும் நிலைப்பாடு என்னவென்பது முக்கியமானது. ஒரு கதையை, நிகழ்வை எந்த விசாரணைகளுமின்றி அப்படியே பதிவு செய்வது கலைஞனின் பணியல்ல, மறுக்கப்பட்டவைகளின் குரலாய் அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்தான் மறு உருவாக்கம் செய்வதற்கான நியாயம் பிறக்கிறது. மாறுவேடமிட்டு தன் கணவரைப்போல் வரும் இந்திரனுடன் கலவி கொண்ட அகலிகையை கல்லாய்ப் போ என சாபமிடுகிறார் முனி. பிறகு அவள் பக்கத்து நியாயங்களைப் புரிந்து கொண்டு ராமனின் பாதம் பட்டும் சாபம் நீங்குமென தீர்வும் சொல்லிவிடுகிறார். இங்கு அகலிகையின் தொன்மம் ஒரு பெருங்கதையாடலின் சிறு துண்டாக மாறிவிடுகிறது. கல்லாய் மாறிப்போன அகலிகை ராமனின் பாதம் படும்வரை காத்திருக்கிறாள் என்பதைத்தாண்டி அகலிகையின் மனம் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. கெளத முனிவரால் மன்னிக்கப்பட்ட பிறகும்கூட அகலிகையின் இச்சை பாவமாகவேதான் பார்க்கப்படுகிறது. பெண்கள் எந்த விருப்பங்களுக்கும் அனுமதிக்கப்படக் கூடாதவர்கள் என்பதற்கு அடையாளமாய் அகலிகை திகழ்கிறாள். ஆனால் எம்.வி.வி. எழுதி கலைமகள் இதழில் வெளியான ‘கோடரி’ என்னும் கதை இதை உளப்பூர்வமான விசாரணைக்குட்படுத்துகிறது.
கெளதம முனிக்கும் அகலிகைக்குமிடையில் முக்கியப்பாத்திரமாக அவர்களின் மகன் சிரகாரி வருகிறான். சம்பவத்தைப் பார்த்த அதிர்ச்சியில் கெளதம முனி உறங்கும் மகனை எழுப்பி ஆத்திரத்தோடு தன் மனைவியின் தலையைக் கொய்யச் சொல்லி கட்டளையிடுவதோடு ஒரு கோடரியையும் கொடுத்துவிட்டுப் போகிறார். உறக்க கலக்கத்தில் அவர் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் மகன் தூங்கிவிடுகிறான். பிறகு அகலிகை வந்து மகனை எழுப்பும்போது தந்தை தன்னிடம் சொன்னது கனவாய் இருக்கக் கூடுமென்னும் சந்தேகத்திலிருக்கும் சிரகாரியிடம் அகலிகை தந்தை சொன்னபடியே செய்யச் சொல்கிறாள். தந்தை சொன்னதைச் செய்ய வேண்டியது தன் கடமையென்றாலும் காரணம் தெரியாமல் செய்ய முடியாதெனச் சொல்லிவிட்டு, ஆற்றுக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டுவரக் கிளம்புகிறான். தந்தையிடமிருக்கும் ஆத்திரம் சிரகாரியிடமில்லை. அடிப்படையில் மனிதன் மந்தையுணர்ச்சி உடையவன், இதனால்தான் தனிமை அவனுக்குள் அச்சத்தையும் வக்கிர உணர்வையும் ஊட்டுகிறது. இங்கு சமூகத்திலிருந்து தனித்து வாழும் கெளதம முனிக்கு வரும் ஆத்திரத்தின் பின்னாலிருப்பது ஒரு வகையான அச்சம். கதையின் துவக்கத்தில் தன் நற்பெயருக்கும் அறநெறிகளுக்கும் களங்கம் விளைந்ததாகவே ரெளத்திரமடைகிறார். பல்லாண்டு காலம் தவம் செய்த முனிவரின் கெளரவம் அவரின் ஞானத்தில் அல்லாமல் மனைவியின் கற்பில் இருப்பதாக நம்புவது மந்தையுணர்ச்சியிலிருந்து விடுபட முடியாத அவரின் ஆதி குணத்தை உணர்த்துகிறது.
ஆற்றுக்குச் செல்லும் வழியில் சிரகாரியை சந்திக்கும் இந்திரன் – உடலெங்கும் கண்களாய் மாறிப்போகும் சாபம் பெற்ற இந்திரன் சிரகாரியிடம் நடந்ததை விளக்குகிறான். எம்.வி.வியின் மேதைமை இங்குதான் வெளிப்படுகிறது. தொன்மத்தில் சொல்லாமல் விட்டுப்போன ரகசியங்களை சிரகாரி இந்திரனின் உரையாடல் மூலமாய்க் கண்டடைய முயல்கிறார். தந்தை தன் தாயின் மீது கொண்ட ஆத்திரத்திற்கான காரணத்தையும், தாயின் செயலுக்குப் பின்னாலிருந்த நியாயத்தையும் தெரிந்துகொள்வதோடு ‘கிடைக்காத பொருளுக்காக ஏங்குவதும் பிறகு அதற்காகத் துன்பப்படுவதும் தானே உன் சரித்திரம்.’ என்று இந்திரனின் இயல்பையும் அவனால் புரிந்து கொள்ள முடிகிறது. தந்தை தந்துவிட்டுப் போன கோடரி அவ்வளவு நேரமும் இல்லாமல் ஒரு பூதம் போல் இப்போது கனக்கத் துவங்குகிறது. ‘நஞ்சை விழுங்கிய நீலகண்டனைப்போல் தன் தொண்டைக்குள் வலியை அடக்கிக் கொண்டதாக சிரகாரியை எம்.வி.வி இவ்விடத்தில் குறிப்பிடுகிறார். ’நீ ஒரு புழு, புழுக்கடியால் பரவுகிற விஷத்தை இறக்குவதற்குப் பதிலாக ஓடிவிட்டப் புழுவை யாராவது தேடிப்போவார்களா? நீ போ, உன்னைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பு தர்மத்தைச் சேர்ந்தது. உனக்காக நான் என் தந்தையிடம் மன்னிப்புக் கோருகிறேன்’ என இந்திரனை மன்னித்து அனுப்பும் மனம் சிரகாரிக்கு இயல்பாய் வருகிறது.
கோடரியை ஆயுதமாகக் கொண்ட பரசுராமன் தந்தையின் ஆணைப்படி தாயைக் கொலை செய்தான் என்கிற கதை இனக்குழு வளர்ச்சியில் தாய்வழிச் சமூக மரபிலிருந்து விலகி தந்தை வழிச் சமூக அமைப்பாக மாறியபோதுதான் உருவாகி இருக்கவேண்டும். . இந்நிலையில் வயது வந்த மகன் தன் தந்தையை ஒத்தவனாகவே இருப்பதோடு அவரையே தன் முன் மாதிரியாக ஏற்றுக் கொள்கிறான். இதனால் தான் நடைமுறைக்கு ஒவ்வாத கற்பு பத்தினித்தன்மை என்தன் பெயரால் பெண்களின் சுதந்திரத்திற்குத் தடையாய் இருக்கிறான். இந்த பத்தினித்தன்மை ஒருபோதும் ஆணுக்கான எல்லைகளை வரையறுப்பதில்லை. ‘எல்லா மகன்களும் வளரும்போது தன் தந்தையையே பிரதிபலிக்கிறார்கள்’ என்கிற சொல் வழக்கையும் நாம் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். தொன்மங்களும் கதைகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித இனக்குழுக்களுக்குள் நிகழ்ந்த மாற்றங்களை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன .
ஆற்றுக்குச் செல்லும் சிரகாரி உடனடியாகத் திரும்பவில்லை. தாயின் செயலுக்கான நியாயங்களை உருவாக்குவதற்குப் பதிலாக தண்டனைகள் தரும் தீராத வலியையே அதிகம் யோசிக்கிறான். தாயைக் கொல்வதை மறை அனுமதிக்கிறதா? அப்படி அனுமதித்தால் அது மறையாகுமா? என தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறான். அறிவின் ஆழத்தையும் நிறைவையும் சோதிக்கும் சதி சிரித்தபோதும் ஆற்றில் குளித்து வெளியேறுகையில் அவன் புத்தம் புதிய மனிதனாய் மாறிவிடுகிறான். இன்னொரு புறம் கெளதம முனியும் தான் ஆத்திரத்தில் எடுத்த முடிவு தவறானதென்பதைப் புரிந்து கொள்கிறார். அகலிகையின் தொன்மத்தை மறு உருவாக்கம் செய்கையில் எம்.வி.வி இங்கு கண்டடைவது தண்டனையை அல்ல, மன்னிப்பை. ராமன் என்னும் பெருங்கதையாடலோடு இணையும் அகலிகையின் தொன்மத்தில் அகலிகைக்கான மன்னிப்பிற்கு அவள் பல்லாண்டு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் இங்கு அடுத்தநாள் குடிலுக்கு தன் மகனோடு திரும்பி வரும் கெளதம முனி அகலிகையின் பக்கமிருக்கும் நியாயத்தைப் புரிந்து கொள்வதால் அவள் கல்லாக வேண்டிய நிர்ப்பந்தமில்லாமல் போகிறது. துவக்க காலத்தில் மனிதன் தெய்வம் என்பதை ஒரு ஆற்றலாகவே பார்த்து வந்தான். காலப்போக்கில் இனக்குழுக்கள் அரசுகளாக உருவாகும்போது அங்கு படிநிலையாக்கம் வருகிறது. இந்த படிநிலையாக்கம் தான் அதுவரை ஆற்றலாக பார்க்கப்பட்ட கடவுளர்களுக்கு மனித உருவைத் தந்திருக்க வேண்டும். அகலிகையின் சாபத்தை நீக்க ராமன் என்னும் மனித உரு கொண்ட கடவுள் தொன்மத்தில் தேவைப்பட்டிருக்கிறது. எம்.வி.வியின் இந்தக் கதையில் அந்த உரு தேவையாய் இருந்திருக்கவில்லை. சிறுகதைகளில் அவருக்கிருந்த பிரத்யேகமானதொரு மொழியாளுமையை இந்தக் கதையிலும் நம்மால் பார்க்க முடியும். ஒரு சம்பவத்தை விவரிக்கையில் ஒவ்வொரு சொல்லின் வழியாகவும் கதையின் ஆழத்தை நோக்கி வாசகனை இழுத்துச் செல்வதை நாம் உணரமுடியும். கதையின் முடிவை நோக்கி வாசகனை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்வது எழுத்தாளனின் வேலையல்ல, ஒரு கதையின் ஒவ்வொரு நிகழ்விற்குள்ளும் வாசிக்கிறவனுக்கு ஏதேனுமொரு படிப்பினையை உருவாக்கித்தர வேண்டும். ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் இருக்கும் முடிச்சுகளை எழுதுகிறவனே அவிழ்க்காமல் வாசிக்கிறவனுக்கான வெளியை விட்டுத்தரவேண்டியது முக்கியமானது.
ஒரு எழுத்துக்காரனை அவன் வாழும் காலத்திலும் அவன் வாழ்க்கைக்குப் பிறகும் எழுத்துச் செயல்பாட்டின் வழியாக அந்தச் சமூகம் அடையாளப்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் கலைஞர்களிடம் காலமும் சமூகமும் கருணையோடு நடந்துகொள்வதில்லை. ஒரு எழுத்தாளன் அங்கீகரிக்கப்படாதபோது அவனை நிராகரிக்கும் சமூகம் தன் வளத்தையும் கனவையும் இழக்கிறது. கதை சொல்லிகள்தான் ஒரு சமூகத்தில் ஆரோக்கியமான கனவுகளை விதைக்கிறார்களென்றால் அவர்களை எப்போதும் நிராகரித்து வரும் தமிழ்ச் சமூகம் கனவுகளே இல்லாத சமூகமாகத்தான் சீரழியும். எம்.வி.வியின் நித்தியக்கன்னி நாவலை வாசித்தபின் தி.ஜா இப்படி எழுதுகிறார், ”இலக்கிய கர்த்தாக்களுக்கு மாடம் கட்டிப்போற்றும் விமர்சனக் கொத்தனார்களுக்கு இவருடைய நினைவு வராதது வியப்பான செய்தி.”
Comments