top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

எழுத்தாளன் என்ன வேலை செய்யலாம்?



ஒரு முழுநேர எழுத்தாளன் எழுதுவதைத் தவிர எந்த வேலைக்கும் செல்லகூடாதென்பதுதான் எனது முதன்மையான தீர்மானம். ஆனால் யாரெல்லாம் முழுநேர எழுத்தாளர்கள்? பெருநகராட்சியின் அபாயகரமான குப்பைவண்டிகளைப்போல் இலக்கியத்திற்கும் மொழிக்கும் பயனே இல்லாதவற்றை பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பவர்களும் முழுநேர எழுத்தாளர்களா? இணையத்தின் உதவியோடு உலகில் நடக்கிற செய்திகளை சுருக்கித் தமிழ்படுத்தித் தொகுத்துக் கொடுத்துப் புத்தகம் போடுவதும் முழுநேர எழுத்தா? இல்லை. நிச்சயமாக இல்லை. கூலிக்கு மாரடித்தல் வேண்டுமானால் இந்த வேலைகளைச் சொல்லலாம். சுயசிந்தனை சிறிதுமற்றவர்கள் இதுபோன்ற குப்பைகளை கொட்டிவிட்டு தங்களையும் முழுநேர எழுத்தாளர்களென கோரிக்கொள்வதால் அசலான முழுநேர எழுத்தாளன் உள்ளபடியே இகழப்படுகிறான்.


தமிழ் இலக்கிய மரபில் என்றில்லாமல் உலகம் முழுக்கவே ஏராளமான கலைஞர்கள் வறுமையைச் சுமந்தே வாழ்ந்திருக்கிறார்கள். காசநோயும் வறுமையும் புதுமைப்பித்தனை சிதைத்தது, இன்னும் கொஞ்சம் போதுமான பணமிருந்தால் நிறையவே எழுதமுடியுமென சொன்ன கோபிகிருஷ்ணன் இறந்தபோது ஐம்பது வயதைக்கூட கடந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் அதற்காக இந்த சமூகத்தின் மீது ஒருபோதும் குறைபட்டுக் கொண்டதில்லை. என்னை வஞ்சித்த மக்கள் ஒருபோதும் உருப்பட மாட்டார்களென சாபமிடவில்லை. இந்த மொழியில் எழுதுவதால் ஆகக்கூடியது இவ்வளவுதான் என்கிற தெளிவும் பக்குவமும் அவர்களுக்கு இருந்தது.

எல்லோரையும் போல் எழுத்தாளர்கள் வேலைக்குச் செல்லலாமே? செல்ல வேண்டும் தான். உழைக்க வேண்டும்தான். அவர்களது வியர்வையும் பிற உழைக்கும் மக்களைப் போன்றதுதான். ஆனால் சிந்தனை என்பது சற்று ஓய்வையும் ஆடம்பரத்தையும் கோரக்கூடியதொன்று. போதுமான ஓய்வும் அமைதியும் கிடைக்கிறபொழுதுதான் ஒரு கலைஞன் வாழ்வைக் குறித்தும் சமூகத்தைக் குறித்தும் சிந்திக்க முடிகிறது. ( பேப்பர் பண்டல்களை வீணடிக்கும் எழுத்தாளர்களுக்கு இது பொருந்தாது.) நல்ல படைப்புகளை உருவாக்க ஒருவனுக்கு அலைச்சலும் தேடலும் அவசியப்படுகிறது. அவன் சேமிப்பின் பெரும் பகுதி தேடியலைவதில் கழிகிறது. தனது புத்தக விற்பனையிலிருந்து வரும் பத்து சதவிகித ராயல்டி தொகையைக் கொண்டு ஒரு எழுத்தாளனால் ஒரு முழு மாதம் கூட நிறைவாக வாழ முடியாது. ஒரு நாவலை எழுதிமுடிக்க எடுத்துக்கொள்ளும் இரண்டு மூன்று வருடங்களில் அவன் பயணங்களை மேற்கொள்ளவும், புத்தகங்கள் வாங்கவும் செலவழிக்கும் தொகை அபரிமிதமானது. மற்ற துறைகளைப்போல் நாம் இவ்வளவு முதலீடு செய்திருக்கிறோம், இவ்வளவு திரும்பக் கிடைக்குமென்கிற லாபநட்ட கணக்குகளுக்குள் எழுத்தாளனின் உழைப்பை அடக்கிவிட இயலாது. ஆனால் இதற்கெல்லாம் பதிலீடாக அவனுக்குக் கிடைப்பதென்ன? அவனைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தின் எள்ளலும் உதாசினங்களும் தான். பொருட்படுத்தாமை ஒரு கலைஞனை பலவீனப்படுத்திவிடுமா என்று கேட்கலாம். இங்கு நிகழ்வது பொருட்படுத்துதலையும் தாண்டியதொன்று. கலைகளையும் கலைஞர்களையும் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு அந்தப் புரியாமை ஒரு வெறுப்பையும் அகங்காரத்தையும் தந்துவிடுகிறது.


எல்லா வர்க்கப் பின்னனியிலிருந்தும் எழுத்தாளர்கள் வரவேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட வாழ்வை மட்டுமே தொடர்ந்து பிரதிபலிக்கும் கதைகள் இன்றைக்கு காலாவதியாகிவிட்டன. அகல் விளக்கின் வெளிச்சத்தின் அளவிற்கு மட்டுமே கவனிக்கப்பட்ட மீச்சிறு உலகங்களின் வாழ்வைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகிறது. வெளியிலிருந்து ஒருவர் அதனை எழுதுவதற்கும் அந்த வாழ்விலிருந்து ஒருவர் எழுதுவதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. இப்படி வெவ்வேறு விதமான வாழ்வும் கதைகளும் ஒரு மொழியில் ஏராளமாய் பெருகும்போதுதான் எழுத்துக் கலையின் அடர்த்தி கூடும். கலைமனம் இவர்களுக்குத்தான் வாய்க்கும், பிறருக்கு வாய்க்காது, இந்தப் பின்னனியிலிருந்து வருகிறவர்கள் எல்லாம் எழுத லாயக்கற்றவர்களென யாரும் யாரையும் புறக்கணித்துவிட முடியாது. இலக்கியம் எல்லோருக்கும் பொதுவானது. தீவிரமான வாசிப்பும், ரசனையும் ஒருவரை நல்ல எழுத்தாளனாக உருவாக்கக் கூடும்.


தமிழ் இலக்கிய உலகில் இன்னும் எழுதப்படாத வாழ்வும் தொழில்களும் எவ்வளவோ உள்ளன. ஆசிரியப் பணியிலும் அல்லது வேறு பணியிலும் இருந்தபடி ஒருவன் ஒரு புதியத் துறையைத் தேடிச்சென்று கற்றுக்கொண்டு எழுதுவதை விடவும் அந்தத் துறையிலிருந்தே ஒருவர் எழுத்தாளனாக வருவது சாலச்சிறந்தது. இது எழுத்தில் மட்டுமல்ல, சினிமாவிலும் நடக்க வேண்டும். மலையாள திரைப்பட உலகை எடுத்துக்கொண்டால் நல்ல கதையோடு கேரளத்தின் சிறிய நகரங்களிலிருந்து கூட ஏராளமான புதியவர்கள் கிளம்பிச் சென்று ஓரிரு வருடங்களில் நல்ல திரைப்படங்களை உருவாக்கிவிடுவதை நாம் பார்க்கமுடிகிறது. இதனால்தான் அங்கு திரைப்படங்கள் பரந்துபட்டதொரு வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. மலையாள இலக்கிய உலகிலும் அப்படித்தான். மாறாக தமிழ்ச்சூழலில் இலக்கியமும் திரைப்படமும் பெரும்பான்மையாக குறிப்பிட்ட சில நகரங்களை மையப்படுத்தியதாக மட்டுமே இருக்கின்றன. அதனாலேயேதான் ஒரே போன்றதான கதைகள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு சலிப்படையச் செய்கின்றன.


தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலனவர்கள் ஆசிரியர்களாக இருப்பதைக் கவனிக்க முடிகிறது. சிலர் பேராசியர்களாகவும், இன்னும் சிலர் பெரிய அரசுப் பதவிகளில் இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் நிலக்கிழார்களின் குடும்பங்களிலிருந்து தங்களது ஓய்வைக் கழிக்கவும், எழுத்தின் வழி கிடைக்கும் சிறியதொரு பிரபலத்தன்மையைத் தேடியும் வருகிறார்கள். இன்னும் சிலர் இன்றைக்கு வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிறவர்களாகவும் சிலர் வங்கிகளில் வேலை செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். எழுத்தை மட்டுமே பிழைப்பாகக் கொண்டு வாழமுடியாதென்கிற உறுதி இவர்களிடம் இருப்பதை நாம் விமர்சனங்களின்றி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சில எழுத்தாளப் பெருந்தகைகள வட்டிக்குவிடும் தொழிலைக்கூட செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாரின் மீதும் வைக்கப்படாத குற்றச்சாட்டு சினிமாவில் வேலை செய்யும் எழுத்தாளர்களின் மீது வைக்கப்படுகிறது. ஒரு பக்கம் சினிமாவில் வேலை செய்யும் எழுத்தாளர்களை சினிமாவுக்குப் போன சித்தாளு என கேலி செய்கிறார்கள், இன்னொரு புறம் தனிப்பட்ட உரையாடல்களில் பாடல் எழுதவும் வசனம் எழுதவும் வாய்ப்புக் கேட்கிறார்கள். இந்தக் குழப்பத்தை விளங்கிக் கொள்ளமுடியவில்லை.

ஒரு மனிதன் தனது தேவைகளுக்காக உவப்பானதொரு வேலையைத் தேர்வு செய்துகொள்வது அவனது அடிப்படை உரிமை. அதற்காக விளக்கம் சொல்ல வேண்டியதோ வெட்கப்பட வேண்டியதோ இல்லை.


முழுநேரமாக எழுத்தை நம்பி வாழ்கிற ஒருவனுக்கு அதற்காக செலவிடும் உழைப்பிற்குப் போதுமான வருமானம் எழுத்திலிருந்தே கிடைக்குமானால் அவன் உற்சாகமாக இயங்க முடியும். சூழல் அப்படியில்லை என்கிறபோது அவன் தனக்கு ஏதுவான வழிகளைத் தேடிக் கொள்கிறான். உலகம் முழுக்கவே ஏராளமான எழுத்தாளர்கள் திரைப்படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றியதுண்டு. இதில் வெட்கப்படவோ வருத்தப்படவோ என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. நீங்கள் ஆசிரியராக இருப்பதைப்பொல், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வது போல், மருத்துவராக இருப்பதைப்போல் சினிமாவில் இருப்பதும் மரியாதைக்குரிய தொழில்தான். ஆனால் சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒரு வசதி உண்டு, அவர்கள் அங்கும் தங்களை கிரியேட்டிவான வேலைகளில் தான் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.


எழுத்தாளர்கள் அரசியலுக்குச் செல்வது சேவையாகவும் சினிமாவிற்குச் செல்வது கலாச்சார சீர்கேடாகவும் பார்க்கப்படுவதுதான் வேடிக்கை. சினிமா ஏன் கலாச்சார சீர்கேடாக பார்க்கப்படுகிறது? முக்கியமான காரணம், உடனடியான கவனமும், பிரபலத்தன்மையும். இதனாலேயே தான் ஐந்து வருடங்களில் தனது புத்தகத்தின் நூறு பிரதிகளை விற்கப் போராடும் பகுதி நேர எழுத்தாளர்களுக்கு சினிமாவில் வேலை செய்யும் எழுத்தாளர்களின் மீது ஒவ்வாமை வருகிறது. இன்றைக்கு சமூக ஊடகங்கள் உருவாக்கிய இன்னொரு கேடு, எல்லா குரலுக்கும் தலையாட்ட ஒரு கூட்டம். இவனை அவன் குறை சொல்வதும் அவனை இவன் குறை சொல்வதும் இவர்களுக்குப் பின்னால் ஒரு கூட்டம் மாறி மாறி சேற்றை வாரி இரைத்துக் கொள்வதுமாக இருப்பதில் ஒரு சிறு புல்லின் அளவிற்கும் பிரயோஜனமில்லை. பத்துகோடிக்கும் அதிகமானவர்கள் பேசக்கூடிய ஒரு மொழியில் எழுதும் நமது நூல்கள் ஐநூறு அல்லது ஆயிரம் பிரதிகள் விற்பனையாக எத்தனை குட்டிக்கரணங்கள் அடிக்க வேண்டியிருக்கிறது. எனில் பெரும் செலவு செய்து எடுக்கப்படுகிற ஒரு திரைப்படத்தின் வியாபாரத்திற்காக சில விளம்பரங்களும் சமரசங்களும் செய்யப்படத்தான் வேண்டும். வட்டிக்கு விடுவதை விடவா சினிமா தீமை செய்துவிடப் போகிறது?


ஒரு எழுத்துக் கலைஞன் எந்த நிலையிலும் தன்னை முதன்மையாக எழுத்தாளனாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்கிறான். எனது இருபத்தைந்தாவது வயதில் நான் ஆற்று மணல் சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்துவந்தேன். எனது கட்டுப்பாட்டில் முப்பதிற்கும் அதிகமான லாரிகள். மதுரை, கரூர், சென்னை என மாறி மாறி பயணித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தொழிலைத் தொடர்ந்திருந்தால் நானே சொந்தமாக நிறைய லாரிகளை வாங்கிப்போட்டு இன்று கோடிகளில் சம்பாதித்திருக்க முடியும். ஆடம்பரங்கள் தான் தேவையென்றால் ஒருவனுக்கு சம்பாதிப்பதற்கு வழிகளா இல்லை. மாதத்திற்கு இரண்டு முறை மலேசியா சிங்கப்பூருக்குக் குருவியாகச் சென்றுவந்தால் கூட இருக்கும் தொடர்புகளுக்கு பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியும். பணமோ ஆடம்பரமோ பிரதானமல்ல. நமக்கு வாய்த்திருக்கும் இந்த படைப்புமனம் ஒருபோதும் சிதைந்துவிடக் கூடாதென்கிற கவனம். படைப்பைத் தொழிலாகக் கொண்டவன் அதேபோலொரு துறையில் இயங்கும்போது கூடுதலாக சிலவற்றைக் கற்றுக் கொள்ள முடிகிறது. சில இடங்களில் சமரசமும் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த சமரசங்கள் சூழலையும் மற்றவரையும் பாதிக்காதவை.


வாழ்விற்கான தேவைகள் விரிவடைந்தபடியேதான் இருக்கின்றன. ஆனால் எழுத்தாளர்கள் தொடர்ந்து சுருக்கமாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். உங்களது வேலை உங்களது வாழ்வாதரத்திற்கு மட்டுமில்லாமல் கூடுதலான சில அனுகூலங்களைத் தருமானால் அதனைச் செய்து பார்ப்பதற்கு என்ன? மேலும் சினிமாவில் மற்ற துறைகளைப்போல் யாரும் எழுத்தாளர்களை அதிகாரம் செய்வதில்லை. உவப்பில்லாத நொடியில் உறவை முறித்துக்கொண்டு வெளியேற போதுமான சுதந்திரங்களும் இருக்கின்றன. பகுதி நேர ஆசிரியனாகவும் பகுதி நேர எழுத்தாளனாகவும், பகுதி நேர தொழிலதிபராகவும் பகுதிநேர எழுத்தாளராகவும் பகுதிநேர அரசியல்வாதியாகவும் பகுதி நேர எழுத்தாளராகவும் இருப்பதைப் போல் பகுதிநேர சினிமாக்காரனாகவும் பகுதிநேர எழுத்தாளனாகவும் இருப்பது மோசமானதில்லை தானே.


273 views

Comments


bottom of page