
தமிழ் எழுத்தாளர்கள் எழுதி சலித்துப்போன பல விடயங்களில் ஒன்று, ஆனாலும் திரும்ப திரும்ப எழுதும்படியான துரதிர்ஸ்டம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆம்... எழுத்தாளர்களிடம் புத்தகம் கேட்டல்... ஒரு துணிக்கடை வியாபாரி உங்களுக்கு நண்பராக இருக்கும்பட்சத்தில் நீங்கள் ‘நாலு டீ ஷர்ட் குடுங்களேன்..’ என இலவசமாகக் கேட்பதில்லை, ஒரு உணவகம் நடத்துபவர் உங்களுக்கு நண்பராக இருக்கும்பட்சத்தில் ‘நாங்க நாலு பேரு பத்து நாளைக்கு ஃப்ரீயா சாப்ட்டுக்கறோம்...’ என கேட்பதில்லை.... ஆனால் எழுத்தாளன் ஒருவன் உங்களுக்கு அறிமுகமென்றால் மட்டும் ஏன் புத்தகங்களை இலவசமாகக் கேட்கிறீர்கள்.
எனது நண்பர் அவர். கிழக்குக் கடற்கரை சாலையில் கடந்த வருடம் பலமாடிகள் கொண்ட அடுக்ககத்தில் பதினாறாவது மாடியில் வீடொன்றை வாங்கினார். வீட்டிற்கு ஓரிரு முறை அழைத்தபோது என்னால் செல்ல முடியவில்லை. வேலை நிமித்தமாக மஹாபலிபுரம் செல்லும்போது சில நிமிடங்கள் அவரது வீட்டில் தங்கிச் செல்லும்படியாக அமைந்தது. அருமையான வீடு... லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள இருக்கைகள், அதைவிடவும் விலை கூடிய தொலைக்காட்சி, இதர வீட்டு உபகரணப் பொருட்களும் அப்படித்தான். லிவிங் ரூமிலேயே பெரிய ஃபுக்ஷெல்ஃப் ஒன்றை வைத்திருக்கிறார். ஆனால் குறைவான புத்தகங்கள். ’ஸார்... உங்க வீட்லதான் இருந்துதான் மொத்தமா புஸ்தகத்த அள்ளிட்டு வரனும்...’ என சிரித்தார்... எனக்கு அடங்கொம்மால என்றுதான் கடுப்பாகியது.... இரண்டு கோடி ரூபாய்க்கு வீடும் அதில் பாதித் தொகைக்கு வீட்டு உபகரணப் பொருட்களும் வாங்க முடிகிறது... பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்க ஏன் கசக்கிறது?.... எத்தனை சம்பாதித்தாலும் புத்தகம் மட்டும் எப்படி இவர்களுக்கு ஆடம்பரமானதாகத் தோன்றுகிறது... எழுத்தாளனிடம் புத்தகம் ஓசியாகக் கேட்க உண்மையில் கூச வேண்டாமா?
புத்தகங்களை சேகரிப்பதை கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் எழுத்தாளர்கள் மேற்கொள்கிறார்கள். அதற்காக பெரும் பணம் செலவழிப்பது ஒரு புறம், இன்னொருபுறம் சென்னை போன்ற நகரங்களில் வாழும் ஒருவனுக்கு சேகரித்தப் புத்தகங்களை பாதுகாப்பதில் உள்ள சிரமம் சொல்லொண்ணாதது... நான் இதனாலேயே இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வாசித்தப் பழைய புத்தகங்களைப் பிரித்து எனது உதவியாளர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ தந்துவிடுவதுண்டு. அவையெல்லாம் எனக்குத் தேவையில்லாதப் புத்தகங்கள் என்றில்லை.... வீட்டில் இடமில்லை. இதற்குமேல் பெரிய வீட்டிற்கு மாறுவதற்கு போதுமான வருமானமில்லை. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு பழைய புத்தகக் கடைகளில் தேடியலைந்து புத்தகம் வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்... ஒரு வருடத்தில் வாசிக்கிற புத்தகங்களை விடவும் வாங்குகிற புத்தகங்கள் பன்மடங்கு அதிகம். வாசிக்க வேண்டிய நூல்களின் வரிசை நீளமானதுதான். ஆனால் அதற்காக புத்தகம் வாங்குவதை நிறுத்த முடியாது. நூல்கள் மட்டுந்தான் நான் சேர்க்க விரும்பும் சொத்து. சில நல்ல புத்தகங்கள் மறுபதிப்பு வராமல் போகும்போது மற்றவர்களுக்கு வாசிக்கத் தரவேனும் சேர்த்து வைக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
நான் குறிப்பிட்ட நண்பர் சிறிய உதாரணம் தான்... அவரைப் போல நிறைய விதமான இலக்கிய ஆர்வலர்களை அடிக்கடி சந்திக்க நேர்கிறது. அடிக்கடி என்றால் வாரத்தில் இருவராவது.... சில வாரங்களுக்குமுன் ஒரு இலக்கிய அமைப்பிலிருந்து அழைத்த ஒருவர் எங்களது அமைப்பில் இணைய வழியில் உரையாற்ற வேண்டுமென அழைத்தார். நானும் சம்மதித்தேன்... இரண்டு நாட்களுக்குப்பின் அழைத்தவர் ஒருவரின் முகவரியை அனுப்பி ‘இந்த முகவரிக்கு உங்க புத்தகங்களை எல்லாம் அனுப்பிடுங்க...’ எனச் சொன்னார். அவர் சொன்னது விளங்காமல் ‘எதுக்குங்க?’ எனக் கேட்டேன்... ‘இல்ல அவங்கதான் நிகழ்ச்சிய வழி நடத்தப் போறாங்க..’ என்றார். எனக்கு குழப்பமாகிவிட்டது... நான் 2007 ம் வருடத்தில் எழுத வந்தேன்... அதற்கும் முன்பாகவே இலக்கிய செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறென்... ஏராளமான நிகழ்வுகளையும் இதுவரை நடத்தியிருக்கிறேன்... ஒரு எழுத்தாளரைக் குறித்து நிகழ்ச்சி நடத்துகிறோமென்றால் அரங்க வாடகை, மற்ற செலவுகள், அதோடு பேச வருகிறவர்களுக்கு அவர்கள் பேச வேண்டிய நூல் எல்லாவற்றையும் அனுப்பி வைத்து நிகழ்ச்சி நடத்திதான் எனக்கு பழக்கம்... ஆனால் இந்தப் புது வகையான கார்ப்ரேட் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலிருக்கும் இலக்கிய பேரார்வம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. முதல் முறையாக இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துகிறீர்களா என ஒரு ஐயத்தில் கேட்டேன்... இல்லை இதுவரை நூற்றுக்கணக்கான இணைய உரையாடலை நடத்தியிருக்கிறோம் என்றார்... தமிழ் வாழ்க.... பிறகு என்ன நினைத்தாரோ இன்னொரு இரண்டு நாட்களுக்குப்பின் அழைத்து நிகழ்வை தற்காலிகமாக நடத்தவில்லை ஒத்திவைத்துள்ளோம் என்றார்.... இந்தமுறை தமிழும் வாழ்க... நானும் வாழ்க என நினைத்துக் கொண்டேன்...
எழுத்தாளனிடம் புத்தகம் கேட்பது அத்தனை பெரிய பாவமா என நீங்கள் கேட்கலாம்... ஆம் பாவம் தான்... முழு நேரமும் எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிறவனிடம் நீங்கள் ஓசியில் புத்தகம் கேட்பது பாவம் தான்... ஆனால் என்ன ஆச்சர்யமென்றால் இந்த ஓசியில் புத்தகம் கேட்பவர்கள் எல்லாம் முழுநேர எழுத்தாளனாக அன்னக்காவடியாக இருப்பவனிடம்தான் ஓசி கேட்கிறார்கள். அவர்களைப் போலவே கார்ப்ரேட் எழுத்தாளர்கள், விக்கிபீடியாவிலிருந்து டவுன்லோட் செய்து 1000 பக்கங்களில் புத்தகம் போடுகிறவர்களிடமெல்லாம் கையைக் கட்டி முன்பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இந்தப் போக்கு இன்று நேற்றல்ல பல வருடங்களாகவே மாறவில்லை. இது ஒருவகையில் அன்னக்காவடியாய் பராரியாய் அலையும் முழுநேர எழுத்தாளனை சிரித்துப்பேசியபடி குதப்புணர்ச்சி செய்யும் வேலை.... யோசித்துப் பார்த்தால் இவர்களுக்குப் புத்தகம் வாசிப்பது மட்டும் பொழுதுபோக்கல்ல, இதுபோல் அவ்வப்போது எழுத்தாளர்களை குதப்புணர்ச்சி செய்வதும் ஒரு பொழுதுபோக்காகவே இருந்து வருகிறது....
தமிழ் வாழ்க.