எழுத்தாளர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே வாசிக்கப்படவும் கொண்டாடப்படவும் வேண்டும். தமிழ் சூழலில் ஒரு திரைப்பட பிரபலத்துக்கோ இன்றைக்கு புற்றீசல்கள் போல் முளைத்திருக்கும் யூட்யூபர்களுக்கோ கொடுக்கப்படும் முக்கியத்துவங்களில் ஒரு சதவிகிதத்தைக்கூட எழுத்தாளர்களுக்கு எவரும் கொடுப்பதில்லை. மிகச் சமீபமாகத்தான் அந்த போக்கு மாறத் துவங்கியிருக்கிறது. அதுவும் மிகச்சிறிய அளவில். எழுத்தாளர்களை பொருட்படுத்தாத சமூகத்தில் கேள்விகள் கேட்கும் குணமும் சிந்திக்கும் திறனும் அறவே ஒழியும். அறிவை பெருமதியாய் நினைக்கக் கூடியவர்களால் மட்டுமே சிந்திக்கவும் செயல்படவும் முடியும்.
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் முப்பதும் வருடங்களுக்கும் மேலாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறார். அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி, தீர்த்தயாத்திரை, வேங்கைவனம் உள்ளிட்ட நாவல்களும் பிறிதொரு நதிக்கரை, முனிமேடு, சக்தியோகம், அமைதி என்பது உள்ளிட்ட சிறுகதை நூல்களும் இவற்றோடு கட்டுரைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்புகள் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். வெகுசனப் போக்கிலிருந்து முற்றிலும் துண்டித்துக்கொண்டு தனித்து இயங்கக்கூடிய கதையுலகு இவருடையது. அவருடைய எழுத்தைப்போலவே அவரும் பெரும் சலனங்களை விரும்பாத ஒரு நபர்.
நண்பர் அகரமுதல்வன் தொடர்ந்து தனது முன்னோடி படைப்பாளிகளை வாசிக்கச் செய்யும் விதமாக அவர்களின் படைப்புகளை முன்னிலைப்படுத்தி ஆய்வரங்குகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு நடத்தப்படும் இந்த முழுநாள் அரங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3 ம் தேதி நிவேதனம் அரங்கில் நடக்கும் இந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன். நண்பர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Hozzászólások