நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நண்பர் இன்று அழைத்திருந்தார். கடைசியாக அவரைச் சந்தித்தது எட்டு வருடங்களுக்குமுன் என்று நினைவு. நடுவில் விடுபட்டப்போன காலங்கள் குறித்த கவலைகள் எதுவும் இல்லாமல் கடைசிச் சந்திப்பின் தொடர்ச்சியைப் போலவே அமைந்தது எங்கள் உரையாடல். ஏதோவொரு புள்ளியில் இப்படிக் கேட்டார். ‘நாம சந்திக்கத்தான் முடியாமப் போச்சுன்னா ஒரு ஃபோன் பண்ணி பேசவும் முடியாமப் போச்சே லஷ்மி… எழுத்தாளர்களுக்கு நண்பர்களா இருக்கறது ரொம்ப கஷ்டம்தான் போலயே…’ என அவர் கேட்டதற்கு சிரித்தபடியே ‘அப்பிடிலாம் இல்லங்க… பெரும்பாலான எழுத்தாளனுங்க நாடோடிங்க… அவனுக்குப் போற எடமெல்லாம் கூடுதான், அன்பைப் பகிர்ந்துக்கற எல்லாருமே நண்பர்கள்தான்’ எனப் பொதுவாகச் சொல்லிவிட்டேன். யோசித்துப் பார்த்தால் இது உண்மையா? எழுத்தாளனால் எல்லோரோடும் எளிதில் நட்பு பாராட்ட முடிகிறதா? அப்படியே நட்பு பாராட்டினாலும் அது நீண்டகாலத்திற்கானதாக இருக்கிறதா என்பது ஐயமே.
மனிதர்களை அறிந்துகொள்வதைத்தான் ஒரு எழுத்துக் கலைஞன் தன் வாழ்நாள் முழுக்க தேடலாய்க் கொண்டிருக்கிறான். அந்த அறிதல் அவனுக்குப் பல்வேறுவிதமான படிப்பினைகளைக் கொடுத்தாலும் அடிப்படையில் கலைஞன் குழப்பமானவன். எதையெல்லாம் ஒரு காலத்தில் நிஜமென்று நம்புகிறானோ பின்பொருநாள் அதனைக் கைவிடுகிறான். புதிதாக இன்னொரு நம்பிக்கையை கைக்கொள்கிறான். மனிதர்களின் மீதான நம்பிக்கையும் அபிமானமுமேகூட அப்படியாகத்தான் இருக்கிறது. ஒருவரை ஏற்பதென்றால் அதீதமாக ஏற்பதும் மறுப்பதென்றால் அதீதமாய் மறுப்பதும் பெரும்பாலான எழுத்தாளர்களின் அடிப்படைக் குணமாய் இருப்பதை கவனித்திருக்கிறேன். ( குறைந்தபட்சம் நான் பழகிய தமிழ் எழுத்தாளர்களிடம் இந்த பண்புண்டு.) மனிதர்களை அவர்களின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்ள வேண்டுமென என்னதான் மற்றவர்களுக்கு வகுப்பெடுத்தாலும் பல சமயங்களில் எழுத்தாளன் அதனைப் பின்பற்ற முடிவதில்லை.
எழுத்தாளர்களின் நண்பர்கள் என்பவர்கள் சுவாரஸ்யமானவர்கள். நான் எழுத வந்த இந்த பதினேழு வருடங்களில் வெவ்வேறு எழுத்தாளர்களின் நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன், உரையாடியிருக்கிறேன், ஊர் சுற்றியிருக்கிறேன். இலக்கிய நட்புகளின் பரிணாமம் ஒவ்வொரு காலத்தில்லும் வெவ்வேறு விதமாய் மாறிவந்தபடியே இருக்கிறது. 2008 ம் வருடத்தின் ஆரம்பத்திக் பத்திரிக்கையில் ஒரு கதையை வாசித்து எழுதியவனைத் தேடிச்சென்று பின்பு அவனோடு சில நாட்கள் ஊர்சுற்றி ஒன்றாக வாசித்து எழுதிக் கடந்த அந்த நாட்களை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். எழுத வந்த முதல் சில வருடங்கள் மறக்கவியாலதவை. எனக்கும் முந்தைய தலைமுறையினர் இந்த வகையில் அதிர்ஷ்டக்காரர்கள். அவர்கள் உரையாடவும் விவாதிக்கவும் இன்னுமே அதிகமான நேரமிருந்தது. அச்சு ஊடகங்களும் இணையமும் பரவலான பிறகான இலக்கிய நட்பில் அந்த பழைய நெருக்கமும் அசல்தன்மையும் இல்லையென்றுதான் தோன்றுகிறது. எழுத்தாளனைத் தேடிச் செல்லும் வாசகனுக்கும் வாசகனோடு நெருக்கம் காட்டும் பெரும்பகுதி எழுத்தாளர்களுக்கும் ஏதோவொருவித தேவை இருக்கிறது. ( சிலர் விதிவிலக்கு.)
அகங்காரம் மனிதர்களுக்கு இடையில் பெரும் சுவராய் விழுந்துகொண்டிருப்பதைக் கண்கூட காணமுடிகிறது. எழுத்து முதலில் ஒருவனுக்கு அடையாளமாகவும் பின்பு அவனது வாழ்க்கைமுறையாகவும் இருப்பது மறைந்து இன்று பிரபலத்தன்மைக்கு எளிய சந்திப்பு அட்டையாக பயன்படுத்திக் கொள்ளும் ஒன்றாக மாறியிருப்பது கசப்பான நிஜம். அன்பும் உரையாடலும் புன்னகையும் தற்காலிகமாகியிருக்கிறது, நட்பு சடாரென முளைத்து சடாரெனத் துண்டித்துக்கொள்ளும் வினோத பழக்கமாகியிருக்கிறது. இலக்கிய வாசிப்பு துரோகத்தை மன்னிக்கவும் ஏற்கவும் கற்றுக்கொடுப்பதால் இங்கு துரோகங்கள் சர்வசாதாரணமானவையாய் மாறிக்கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் துண்டித்துக்கொண்டு மனிதர்களைக் கைவிடுதலை இலக்கியவாதிகள் இந்தச் சமூகத்திற்கு ஒரு கொடையென வழங்கிக் கொண்டிருக்கிறார்களோ என ஐயமாய் உள்ளது. முன்பே குறிப்பிட்டதுபோல் எங்கெல்லாம் கண்கூசும் வெளிச்சம் பரவுகிறதோ அங்கெல்லாம் கலையின் ஒளி மங்கி தனி மனிதர்களின் துதிபாடல்களும், இன்னொருவரின் பிரபலத்தன்மையில் தனக்கான ஆதாயங்களைத் தேடிக்கொள்கிறவர்களின் நயவஞ்சகமிக்க சிரிப்புச் சத்தங்களும் அதிகமாகியிருக்கின்றன. சந்தர்ப்பவாதத்தை சுட்டிக் காட்டுகிறவர்களை அவர்களோடு இருப்பவர்கள் உடனடியாக கைவிடுகிறார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கென கடிகார முட்களைப்போல் ஒரு சுற்றுவட்டத்தில் பெரும் வேட்கையோடு மனிதர்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க ஆயாசமாக இருக்கிறது..
இத்தனை வேட்கை எதற்காக?
இத்தனை ஓட்டம் எதற்காக?
இன்று எதுவெல்லாம் பெருமதியாகத் தோன்றுகிறதோ அதுவெல்லாம் மிக விரைவிலேயே சலிக்கும். மனிதர்களே சலித்துப் போகும்போது ஆசைகளுக்கு என்ன ஆயுள் இருக்கிறது. எல்லா ஆசைகளுக்குமான ஒரு எக்ஸ்பையரி டேட் உண்டு. நாம் நமது ஆசைகள் மட்டுமே நிரந்தரமானவையென நினைப்பது மடமை. நமது ஆசைகளுக்காகவும் விருப்பங்களுக்காகவும் தேவைகளுக்காகவும் மட்டுமே இன்னொருவரின் நிழல் அண்டுகிறோமென்றால் அது அவருக்கு மட்டுமல்ல நமக்கு நாமே செய்துகொள்ளும் துரோகம். து. மற்றவர்களிடம் தன்னை தொடர்ந்து நிரூபிக்க வேண்டுமென்கிற போராடத் துவங்குகிற நாளில் ஒரு எழுத்தாளன் தோல்வியை நோக்கி நகரத் துவங்குகிறான். அபூர்வமாக சிலர் எழுத்தாளர்களின் அத்தனைக் கிறுக்குத்தனங்களையும் சகித்துக்கொண்டு முழுமனதோடு அவனோடு நட்பு பாராட்டுகிறவர்களாய் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களுக்கு அவனது நட்பையும் எழுத்தையும் வாசிப்பதைத் தவிர்த்து அவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. இன்றைக்கு எழுத்தாளன் எழுதுவதோடு தனக்கான பிரபலத்தன்மையை தக்கவைத்துக் கொள்வதையும் தனக்கான ஆட்களைத் தக்கவைத்துக் கொள்வதையும் ஒரு வேலையாக செய்யவேண்டியிருக்கிறது. இலக்கியம் ஒரு பொதுச்செயல்பாடாக அல்லாமல் குழுக்களாக மாறிவருகிறது. எந்தக் குழுக்களிலும் இல்லாதவர்கள் வேகமாக மறக்கப்படுவார்கள், அல்லது புறக்கணிக்கப்படுவார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களும் கூச்சலும் தான் கலைச்செயல்பாடென நம்புவதற்கு ஒரு இளம் தலைமுறை உருவாகி வருவதைக் கண்கூடாக பார்க்கமுடிகிறது. அரிதாக சில எழுத்தாளர்கள் தன்னை நோக்கி வரும் வாசகனையும் அடுத்த தலைமுறை எழுத்தாளனையும் சரியான திசைநோக்கி அழைத்துச் செல்கிறார்கள். மற்றவர்கள் அப்படியில்லை. நோக்கமற்ற உரையாடலும் வேடிக்கைகளை பிரதானப்படுத்தும் சகவாசமும் இலக்கிய நண்பர்களுக்கானதல்ல. எழுதுவதைப் போலவே சேர்ந்து செயல்படுவதும் ஒரு மொழியில் முக்கியமான இலக்கியப்பணிதான். அகங்காரத்தை கிரீடமாக அணிந்துகொண்டிருக்கும்வரை அது யாரையும் அருகே நெருங்கவிடுவதில்லை. அந்த கிரீடத்தை துறப்பதற்கான போராட்டத்தில் பலர் நண்பர்களைத் தோற்றுவிடுகிறார்கள்.
Comments