top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

ஐரிஸ் - 2
4

டியர் மனோ.

"You burn me"

- Sappho.


” முதல் முறையாக உன்னை நான் சந்தித்தபோது உன் பிரச்சனை மட்டுந்தான் எனக்குத் தெரியும், நீ யாரென்று தெரியாது. நாம் உரையாடினோம். உன்னால் உன் சிக்கல்களிலிருந்து எளிதாக மீண்டுவிட முடியெம நம்பினேன். பின் நடந்ததெல்லாம் நான் இப்போதும் நம்ப முடியாத ஆச்சர்யம். நீ சிகிச்சை முடிந்து திரும்பிச் செல்லும்போதே என்னிடம் வந்து தஞ்சமடையும் தவிப்பிலிருக்கிறாய் என்பதை என்னால் மிக நன்றாய்த் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அந்த நிபந்தனையற்ற அன்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மகியை நான் அத்தனைக் காதலிக்கிறேன், ஆம் இப்போதும்தான். உன் மின்னஞ்சல்களுக்கு நான் நினைத்ததை எழுத முடியாமல் போனதற்குக் காரணமும் அந்தக் காதல்தான். ஆழ்மனதில் காதல் ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் மட்டுமானதென்கிற பிடிப்பு எனக்குள்ளிருந்து வெகு விரைவிலேயே உடையத் துவங்கியது. மகியை நேசிப்பதைப் போலவே உன்னையும் நேசிக்கிறேன். ஒரு பெண் இரண்டு ஆண்களை நேசிப்பது பாவமென்றால் அந்தப் பாவத்தை நான் அடுத்த ஜென்மத்திலும் செய்ய சித்தமாய் இருக்கிறேன். உன்னைப் போலவும் மகியைப் போலவும் நேசத்திற்குரிய இரண்டு ஆண்கள் கிடைத்திருப்பதுதான் எனக்கு வரமும் சாபமும். இரண்டில் ஒருவரோடு அதிக நேரம் செலவு செய்யமுடியவில்லை என்கிற குற்றவுணர்வு வதைக்கிறது மனோ.


நீ ஊர் திரும்பியபின் சிலமுறை நாம் வீடியோ காலில் பேசியிருக்கிறோம். உன் கண்களை கவனிக்கக் கூடாது, உன் சிரிப்பைக் கவனிக்கக் கூடாதென எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஆனால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு முறை ஏதோ ஒரு உரையாடலின் நடுவில் நீ உன்னை மறந்து சிரித்தாய். அன்றிலிருந்து இன்று வரை எனக்கான அனைத்து நியாயங்களையும் அந்த ஒரு புன்னகை தான் ஈட்டித் தருகிறது. நீ என்னை நேசித்ததும் உனக்கு நான் இசைந்ததும் விளைவுகள். காரணமாய் அமைந்த அந்த முதல் புன்னகையைப் பிடித்துக் கொண்டுதான் இவ்வளவு நாட்களும் நான் மயங்கி மயங்கித் தெளிகிறேன், தெளிந்து மீண்டும் மயங்குகிறேன்.


நான் கூற விழையும் எல்லா சொற்களும் உணர்வுகளும் இவ்வரியின் விளக்கவுரையாகவே இருக்கப் போகின்றன, You burn me!!


உன்னுடன் முயங்கித் திளைத்துத் திரும்பிய நேரமெல்லாம் என் கால்கள் கூடடைந்ததில்லை என்பதை இதுவரை தெரியப்படுத்தியதில்லை நான். முதல் முறையும் அதற்கடுத்தடுத்த முறையும் கூட அப்படியேதான் நிகழ்ந்தது. நான் வீடு திரும்பியிருப்பேன் என்று நீ நினைத்திருக்கலாம் இனியும் அப்படியே நினைத்துக் கொள். ஆனால் நான் உன்னை எடுத்துக் கொண்டு சென்ற இடமெல்லாம் வெவ்வேறானவை. பொங்கியெழும்பிய பெண்மைக் கடலுக்கு மதகுத் தேடியேத் தீர வேண்டிய நிலை அது. அன்று சம்பவித்த யாவும் எனக்கான முதற்முறை, அதுவே இறுதி முறையும்கூட. இனியெப்பொழுதும் அதுபோன்றதொரு நிலைக்கு என்னால் என்னை ஆட்படுத்திக் கொள்ள இயலாது அது உன்னுடனேயே என்றிருந்தாலும். இதுவரை யாரும் உன்னிடம் கூறியிராத சொற்களைத் தேடியெடுத்து உன்னிடம் கூறிவிட வேண்டுமென்ற பிரயத்தனத்திலேயே என் எல்லா சொற்களையும் இழந்து விடுகிறேன். ஆனாலும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன். இதுவரை யாரும் கூறியிராத சொற்கோர்வையில் ஒரு மடல் உனக்கு எழுதிவிட வேண்டும். யாருமே கூறியிராத ஏன் நினைத்துக் கூடப் பார்த்திராத எண்ணங்களையெல்லாம் தொகுத்து உன்னிடம் அளித்துவிட்டு அன்றோடு என்னையும் மறந்துவிடும்படியான ஒரு மடல். அது சாத்தியமாக வேண்டும் என்ற ஆசையும் இப்பொழுது சாத்தியமாகிவிடக் கூடாது என்ற அச்சமும் இந்நேரம் என் மனதை ஒருசேர ஆக்கிரமிப்பதை என்னால் உணர முடிகிறது.


நான் விரகம் பூண்டிருந்த அந்நாளில் நீ என்னை உன் கைகளில் ஏந்தியிருந்தாய். நான் உனை வந்தடையக் காத்திருந்த பொழுது நீ வெளிப்படுத்தியத் தவிப்பின் எந்த சாயலும் உன் தீண்டலில் வெளிப்படவில்லை. நதியை விழுங்கக் காத்திருக்கும் கடலின் பெரும்பசிக்கு ஒப்பான செயல் அது. இப்பொழுதும் நீ எனக்கு அப்படித்தான் தெரிகிறாய். உன் உள்ளங்கையில் என் கன்னம் ஏந்தி முத்தமிடுகையில் நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீ கண்கள் மூடிக் கொண்டாய். என் உடலின் கண்கள் யாவும் விழித்துக் கொண்டன. உன்னை என் கண்களால் பருகினேன். என்னை உன்னிடம் அள்ளிக் கொடுத்துவிட்டு நீ என்னைப் புசித்த விதத்தைக் கண் திறந்து பார்த்திருந்தேன்.


உனது கழுத்துக்குக் கீழ், தோள்ப் பகுதியிலிருக்கும் தழும்பைத் தொட்டுப்பார்த்து வருடியபடிதான் படுத்திருந்தேன் அன்று முழுவதும். இப்போதும் என்னால அதை உணர முடிகிறது. உனது வாசம், சிரிப்பு, நான் என்ன யோசிக்கிறேனென நிதனைத்தபடி நீ இயங்கின விதம், என்னை உன்மேல் படர விட்ட தைரியம் எல்லாமே திரும்பத் திரும்ப கோடி முறை என் மனதில் காட்சியாய் பாத்தபடியிருக்கிறேன். நீதான் மனோ, நீ எனக்கு அதிகமுமில்லை, எனக்குக் குறைவுமில்லை. நீ என்னுடைய கச்சிதம். எல்லாமே துவங்கியது உனது அந்தச் சிரிப்பில் தான். நடுவில் நான் ஏதோ கேட்க நீ சிரித்தாய், அடிவயிற்றின் பிடி இளகி உருகிப் பெருக்கெடுத்த பெரு வெள்ளத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாமல்தான் உன்னிடம் வீழ்ந்தேன். இன்று வரை அப்படித்தான்.

காற்றின் வருடலுக்கு சிணுங்கிய இலைகள் போல் துவங்கிய அசைவுகள் பிரபஞ்ச நடனமாய் மாறியதெப்பொழுதெனத் தெளியவில்லை, தெளிந்து கொள்ளவும் விருப்பமில்லை.


நான் உன்னிடம் மட்டும்தான் நடனமாடினேன் என்பதை உன்னிடம் கூறியிருக்கிறேனா? அது உயிரின் நடனம். உன் இசைக்கு நான் இசைந்து நிகழ்த்திய நடனம் அது. மீண்டும் மீண்டும் ஆடித்திளைக்க விரும்பும் நடனம் அது. உன் கண்களுக்கு மட்டும் தெரியும்படி. ஒவ்வொரு முறையும் உனக்கு நான் என் காயங்களைத் தான் காட்சிப் படுத்தினேன். நீ அவற்றினூடே என்னுள் பிரவேசிக்கவே விழைந்தேன். நீ அந்த கலையினைப் பயின்றவன் என்பது தெரிந்ததால்தானோ என்னவோ உனக்கு முன் நிர்வாணப் படுதலில் குழப்பங்கள் தோன்றுவதில்லை. எனக்கு முன் என் காயத்தின் தழும்புகள் யாவும் நீ புசிக்க வேண்டி உயிர் பெற்று விடுகின்றன. நீதான்.

நீ சிரி


பிரியதர்ஷினி.டியர் பிரியா


“last night I dreamed about you, what happened in detail I can hardly remember, all I know is that we kept merging into one another. I was you, you were me. Finally you somehow got fire. Remembering that one extinguished fire with clothing, I took an old coat and beat you with it. But you were different from before, spectral, as though drawn with chalk against the dark, and you fell lifeless or perhaps having been saved, into my arms.

But here too uncertainty of trans mutability entered, perhaps it was I fell into someone’s arms.

From : franz kafka

To : milena jesenska


உன்னை வந்து சேரும் வரையில் நான் இத்தனை உறுதியானவன் என்பதை அறிந்திருக்கவில்லை. உன்னிடம் சொல்லியிருக்கிறனே நதியும் மலைகளும் சூழ்ந்த நிலப்பகுதியில் பிறந்தவன் நான். இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்னால் மனிதன் எப்போதும் அற்பமானவன் என்பதைத்தான் ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு அந்தியும் என் பால்யத்தில் எனக்கு புரியவைக்கும். ஆனாலும் மனிதன் பிரபஞ்சத்தில் அசாத்தியமானதொரு ஜீவன் என்பதை நீதான் உணர்த்தினாய். மலைகளின் பாடல்களுக்கு செவி சாய்க்கவும், நதியினடியில் துயில் கொள்ளும் கூழாங்கற்களின் அமைதியைக் கற்றுக்கொள்ளவும் உன்னிடமிருந்து பழகிக் கொண்டேன். நேத்ராவதி நதியின் கரையில் நாம் கால் நனைத்தபோது நீ கண்களை மூடி சூரிய உதயத்திற்காய்க் காத்திருந்தாய். உன் நெற்றியில் சூரியனின் முதல் வெளிச்சக் கதிர் விழுந்தபோது நீ இயற்கையின் இன்னொரு அம்சமாய்த் தெரிந்தாய் எனக்கு. உன்னோடு செல்லும் ஒவ்வொரு பயணத்திலும் நீ உலகை அறியக் கற்றுக் கொடுத்தவளாகத்தான் இருக்கிறாய்.


கணினித் திரைக்குள் நெளிந்த ஏராளமான உடல்களின் பிம்பங்களில் எத்தனை இரவுகளையும் பகல்களையும் தொலைத்திருப்பேன். அப்போதெல்லாம் இச்சை என்பது விலை கொடுத்து வாங்க முடிகிற பொருளாகவேத் தெரிந்தது. இணையம் இருக்கும் வரை காமத்தின் அத்தனை சாகசங்களையும் அதன் நிழலைப் பற்றி கடந்து செல்ல முடியுமென நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கை மனிதர்களின் மீதிருந்த அவநம்பிக்கையால் உருவானதென்பதை உன்னை முத்தமிட்டபின்பாகத்தான் தெரிந்து கொண்டேன். சிகிச்சையளிக்கும் நாட்களில் என்னிடம் சொல்வாயே நமக்கு எப்போதும் ஒரு கோட்டை மறக்க அதைவிடவும் சற்றே பெரிய கோடு தேவைப்படுகிறதென, நான் என் வாழ்வின் துயரங்கள் கடந்தகால அவநம்பிக்கைகளென எல்லாப் புள்ளியும் சேர்ந்தக் கோட்டை மறக்க கிழித்துக் கொண்ட பெரும் கோடு நீதான். அல்லது உன்னிடம் வந்து நீ சரணடைய வேண்டுமென்பதுதான் இயற்கையின் விதிபோல.


மனோ.


5


மகியின் வேலை நிமித்தமாய் பிரியாவும் அவனோடு புனேவுக்கு இடம்பெயர நேர்ந்தது. அந்த இடப்பெயர்ச்சியில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லாதபோதும் அப்போதைக்கு அவளுக்கு வேறு வழியில்லாமல் போனது. பெங்களூரில் இருந்த நாட்களில் மனோ தூரமாய் இருப்பதான உணர்வு அவளுக்கு எழுந்ததில்லை. அவனோடு சுற்றியலைந்த நினைவுகள் அந்த நகரின் ஏராளமான வீதிகளில் கடைகளில் உணவங்களில் கொட்டிக் கிடந்ததால் அவன் எப்போதும் அவளோடே இருந்தான். புனேவுக்கு இடம்பெயர்ந்த சில மாதங்கள் அவள் வேலைக்கும் போகாமல் வீட்டிலிருந்ததால் தனது உலகின் சந்தோசம் அவ்வளவும் காணாமல் போனதைப் போல் துயருற்றாள்.


“ஏன் சோர்வா இருக்க பிரியா, ரொம்ப போர் அடிச்சா நீ மட்டும் வேணும்னா ஒன் வீக் ட்ரிப் போயிட்டு வா…”


மகிதான் அந்த யோசனையைச் சொன்னான். அவளுக்கு மனம் பூத்தது. மனதிற்குள் அவனுக்குள் நன்றி சொன்னாலும் உடனடியாகச் செல்வதா வேண்டாமா என யோசித்தாள். ஏழு நாட்கள் மனோவோடு இருக்கப் போகிறோமென்கிற நினைப்பிலேயே கால்கள் தரையிலிருந்து மேலெழுந்து பறக்கத் துவங்கின. அவள் கேட்டதுமே மனோவும் சம்மதித்து விட்டான். அந்த வாரத்தின் இறுதியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மனோவும் பிரியாவும் கோழிக்கோட்டில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் விருப்பமான பஷீரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து வயநாட்டிற்குச் செல்வது அவர்களின் திட்டம். மகியிடம் கோழிக்கோட்டில் பஷீரின் வீட்டிற்குச் செல்வதாக அவள் சொன்னபோது


“என்னடி ஆச்சர்யமா இருக்கு, ரைட்டர்ஸ வாசிச்சா போதும். தேடிப்போய்க் கொண்டாடனும்னு அவசியம் இல்லன்னு சொல்லுவ. இப்ப என்னடான்னா பஷீர் வீட்டுக்குப் போறேங்கற”


என மகி ஆச்சர்யமாய்க் கேட்டான்.


“மகி பஷீரும் மத்த ரைட்டர்ஸும் ஒன்னா, அவர் சுல்தான் மகி. சுல்தானோட இடத்துக்கு நாமதான் தேடிப்போகனும்.”


என்று சிரித்தாள். அவன் சந்தோசமாய் வழியனுப்பி வைத்தான்.


அவள் கோழிக்கோடு வருவதற்கு ஒருநாள் முன்பாகவே மனோ அங்கு வந்துவிட்டிருந்தான். பிரியா பெங்களூரிலிருந்து இடம்பெயர்ந்த சில நாட்களிலேயே வேலையை விட்டுவிட்டு மனோ தென்காசிக்கு சென்றுவிட்டான். வாழ்வதற்காக சம்பாதிக்க வேண்டிய போராட்டங்களிலிருந்த விருப்பங்கள் யாவும் அவனிடமிருந்து காணாமல் போயிருந்தன. சேமித்திருந்த பணத்தில் ஊரிலிருந்த நிலத்தில் காய் கறி விவசாயம் செய்தவனுக்கு இப்போது பிரியாவுடன் பேசுவதற்கும் அவளை நினைத்துக் கொள்வதற்கும் அனேக நேரமிருந்ததோடு வாசிக்கவும் எழுதவும் செய்தான். எழுத்தில் வருமானம் இல்லாதபோதும் ஊரின் நதியையும் மலைகளையும் அதன் கதைகளையும் எழுத முடிந்ததில் இனம்புரியாததொரு ஆனந்தமிருந்தது.


பஷீரின் வீடு. நீண்ட சுற்றுச்சுவரும் அதனுள்ளே மரங்களுக்கு நடுவில் அமைதியாயிருந்த வீடும். பஷீர் அமர்ந்து கதைகள் எழுதிய மரத்தினடியில் அந்த நிழல் இப்போதும் அதே வசீகரத்துடனிருந்தது. கலைஞனின் ஆகிருதியைக் கண்டு உருகும் வசீகரம். பாத்துமாவின் ஆடும், பால்யக் கால சகியும், இன்னும் அவரின் பிரமாதமான பல்வேறு கதைகளும் நினைவிற்கு வந்தபோது இனம்புரியாததொரு ஆனந்தம் அவனுக்குள். அவரோடு நெருக்கமாய் அமர்ந்து உரையாடுவதைப் போல் பூரிப்பு. பிரியா அவனின் நகர்வுகளை, கண்களில் தெரிந்த ஆச்சர்யத்தை எல்லாம் தள்ளிநின்று ரசித்துக் கொண்டிருந்தாள். அவரின் அறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நூல்கள் அவரின் புகைப்படங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பியபோது அவன் வயநாடு சென்று சேரும் வரையிலும் பஷீரின் கதைகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு வந்தான். மனித உறவுகளில் ஒரே நேரத்தில் அவருக்கு அவநம்பிக்கையும் பற்றும் இருந்திருக்கிறது, பாத்துமாவின் ஆடு நாவலில் உறவுகள் ஒரு மனிதனிடமிருக்கும் வசதி வாய்ப்புகளின் அடிப்படையிலேயே அவனுக்கான மரியாதையைத் தருகிறார்கள் என்பதை எழுதும்போது அவநம்பிக்கை தெரிந்தாலும் அடியாழத்தில் ஒவ்வொருவரையும் நேசிக்கக் கூடியவராய் இருந்தார். கைவிடுதலையும், அலைந்து திரிதலையும், எதாவதொன்றைப் பற்றிக் கொண்டு வாழ்வை முன்னகர்த்தி செல்வதையும் தான் பஷீரின் கதைகள் பேசுகின்றன என்று அவன் சொன்னபோது பிரியாவிற்கு தன்னைப் பற்றி ஏதாவது சொல்லமாட்டானா என ஏக்கமாய் இருந்தது.


“டேய் எரும, உனக்கு பஷீர் வீட்டுக்குப் போறதுதான் முக்கியம்னா நீ மட்டும் போயிருக்கலாம் ல. நான் உங்கூட இருக்கனும் பேசனும்னு வந்தா நீ பஷீர் புராணத்த விட மாட்டேங்கற…”


என சலிப்பாய்ச் சொன்னாள்.


“அப்டி இல்ல பிரியா, எனக்குப் புடிச்ச நான் நேசிக்கிற எல்லா இடத்துக்கும் உன்னோட போகனும்னுதான் ஆசப்படறேன். ஏன்னா என் வாழ்க்கையோட கடைசி நாட்கள்ல எனக்கு மிஞ்சியிருக்கற நினைவுகள் எல்லாத்துலயும் நீ மட்டுந்தான் இருக்கனும். அதனாலதான் எனக்குப் புடிச்ச எல்லாத்துலயும் உங்கூட இருக்க நினைவுகள நிரப்பி வெச்சிட்டு இருக்கேன்.”


என்று சிரித்தான்.

மழைக்காலம் முடிந்திருந்தபோதும் வயநாட்டின் மலைகளில் இன்னும் ஈரம் விலகி வெய்யில் நிரம்பத் துவங்கவில்லை. சிறிய விடுதியொன்றில் அறையெடுத்துத் தங்கியவர்கள் இலக்கில்லாமல் சுற்றி அலைந்தார்கள். விடுதியிலிருந்தவன் செம்பரா மலைக்கு செல்ல அவர்களுக்கு ஒரு வாகனத்தையும் வழிகாட்டியையும் அனுப்பிவைத்தான். அதிகாலையின் தூறலில் உடல் வெடவெடக்க ஜீப்பிலிருந்து இறங்கி மலையுச்சியைப் பார்த்தபோது முகடைக் காணமுடியவில்லை. எங்கும் மேகக் கூட்டங்கள் நிரம்பியிருக்க, அவர்களைப் போலவே இன்னும் சிலரும் மலையேற வந்திருந்தனர். இரண்டாயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரம், கரடுமுரடான பாதை என்பதால் வழிகாட்டி எல்லோரையும் நிதானமாக ஏறிவர எச்சரித்திருந்தான். சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள், தேயிலையின் மணம் காற்றில் கலந்து நிரம்ப வழிகாட்டியைத் தொடர்ந்து மனோவும் பிரியாவும் ஏறினார்கள். முதல் சில நிமிடங்கள் சாதாரணமான காட்டுப்பாதையைப் போல் எளிதாகவிருந்த பயணம் அடுத்த சில நிமிடங்களுக்குப்பின் மூச்சடைக்கும் அளவிற்கு செங்குத்தானதாய் இருந்தது. செடிகளையும் குட்டை மரங்களையும் பற்றிக் கொண்டு அவர்கள் மலையேறத் துவங்கினபோது தூறல் நின்று மெல்ல சூரிய் வெளிச்சம் எட்டிப் பார்த்தது. அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களில் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள். நான்கு பேருமே முந்தைய இரவு மதுவருந்தியிருக்க வேண்டும். சுவாசிக்க முடியாதளவிற்கு சிரமப்பட்டவர்கள் பாதி வழியில் திரும்பிவிட நினைத்தார்கள். சிறுத்தை உலவும் இடமென வழிகாட்டி எச்சரித்து தொடர்ந்து ஏறச் செய்தார். பிரியா நிறைய பயணித்திருக்கிறாள், ஆனால் இந்த மலையேற்ற அனுபவம் முற்றிலும் புதிதாய் இருந்தது. சாகசக்காரர்களுக்கான பயணமொன்றில் வழி தவறி மாட்டிக்கொண்டமோவென அச்சமும் உயரத்தை எப்போது அடையப்போகிறோமோ என்கிற கவலையும் அவளைச் சூழ்ந்துகொண்டது.


“மனோ என்னால முடியலடா..”


அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். சிறுத்தைக்குப் பயந்து மேலேறுவதை விடவும் இப்படியே உட்கார்ந்து விடலாமெனத் தோன்றியது அவளுக்கு. கரடு முரடான பாதை. பள்ளங்களும் மேடுகளும் பாறைகளுமாய் இருந்ததோடு மழையில் நனைந்து வழுக்கவும் செய்தது. ஓரிரு முறை கீழே விழுந்தவளின் ஜீன்ஸில் செம்மண் ஒட்டி அழுக்காகிப்போனது.


“இன்னும் கொஞ்சந்தான் பிரியா. பல்லக்கடிச்சுட்டு ஏறிடு.”


என மனோ அவள் வியர்வையைத் துடைத்துவிட்டு கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்கச் செய்தான். நடப்பதும் மூச்சு வாங்கி ஓய்வுக்கு நிற்பதுமாய் மூன்று மணிநேரங்கள் கடந்தபிறகு பாதை சற்றே தெளிவாய் எளிதாக நடக்கும்படி இருக்க அவர்கள் சற்றேறக்குறைய முகடிற்கு வந்திருந்தார்கள். சூரிய வெளிச்சம் முழுமையாய் ஆக்ரமித்திருந்த அம்முகட்டில் ஆளுயரப் புற்கள் வளர்ந்திருந்தன. பறவைகள் கீழிருந்து மேல் நோக்கிப் பறந்து சென்றன. தூரத்தில் தெரிந்த ஒற்றை மரத்தைக் காட்டிய வழிகாட்டி அங்கொரு குளம் இருக்கிறதென்றான். இத்தனை உயரத்தில் குளமா என பிரியாவிற்கு ஆச்சர்யம். நடந்து வந்த களைப்பு காணாமல்போய் மலையுச்சியைப் பார்த்துவிட்டு பிரமிப்பு அவளிடம். வேகமாய் மரத்தை நோக்கி நடந்தார்கள். வழிகாட்டி சொன்ன அந்த குளம் ஆட்டின் வடிவத்தில் தெளிந்த நீரோடு அற்புதமாய் இருந்தது. இயற்கையின் வினோதங்களை ரகசியங்களை மனிதனால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாதுபோல. ‘இந்த இடம் ஒரு தமிழ்ப் படத்துல வரும், நீங்கள் லாம் பாத்திருப்பீங்க’ என வழிகாட்டி சொன்னது அவர்களின் செவிகளில் விழவில்லை. இயற்கையின் ஒரு சிறு துண்டைக்கூட காட்சித் துண்டுகளில் காட்டிவிடமுடியாதெனபது அவர்களின் நம்பிக்கை. குளத்தை ஒட்டியிருந்த மரத்தினடியில் அமர்ந்து அமைதியாய் குளத்தைப் பார்த்தார்கள். படமெடுத்துக் கொண்டார்கள். முகட்டிலிருந்து பள்ளத்தாக்கைப் பார்த்தார்கள்.


“எனக்குப் புடிச்ச எல்லா இடத்துலயும் உன்னோட நினைவுகள் நிரம்பியிருக்கனும் பிரியா..”


மனோ சொன்னதன் அர்த்தம் புரிந்தது. அவள் எவ்வளவோ இடங்களுக்குப் பயணித்திருக்கிறாள். ஆனால் இந்த உணர்வு இதற்குமுன் இருந்ததில்லை. இந்த மலையின் உயரம், குளிர், குளிரை மிஞ்சி உடலை கசகசப்பாக்கிய வியர்வை இதுவெல்லாம் பயணமல்ல, ஒவ்வொரு அடியைக் கடக்கும்போது தன்னைக் காதலோடு கவனித்துக் கொண்ட மனோவின் அன்புதான் பயணத்தின் ஆதாரம். இரண்டாயிரமடி உயரத்தைக் கடக்க முடிந்தது அவனுடைய அன்பால் என்கிற நிஜம் புரிந்தபோது அவனை இறுக அணைத்துக் கொண்டாள். முகடின் ஒரு பக்கத்தில் வெயில் மறைந்து நிழல் சரிய, இன்னொரு பக்கத்தில் ஓய்ந்திருந்த தூறல் மீண்டும் விழத் துவங்கியது.6


டியர் மனோ :


கடலன்ன காமம் உழந்தும் மடலேறா பெண்ணின் பெருந்தக்கத்து இல்

-திருக்குறள்.


கடலளவுதான் எனது வேட்கையும். எவரிடமும் வெளிப்பட்டிராத ஒரு மூர்க்க வேட்கை. கடலில் மூழ்கி முத்தெடுப்பதைப் போன்ற வேட்கை. மரணத்தின் வாயில் வரை சென்று புத்துயிர் பெற்று திரும்பும்படியானதொரு வேட்கை. அதனால்தானோ என்னவோ என்னால் காமத்தை அருகில் வைத்துக் கொண்டாட முடிந்ததில்லை.ஆனால் என்னளவுக்குக் காமத்தையும் கலவியையும் அனுபவித்துத் துய்ப்பவர் வெகு சிலரே இருக்கக் கூடும். அது ஒருவித சமர்ப்பணம், அடைக்கலம், பேராறுதல், உயிரியக்க சக்தி என எல்லாமாய் இருப்பதும் அதுவே. குழப்பங்களும் சங்கடங்களும் சவால்களும் என்னை நெருக்கும்போதெல்லாம் எனக்குக் காமம்தான் முக்தியளித்துள்ளது. ஒரு பரவச பெருங்கூச்சலில் என் அனைத்து வலிகளும் மாயமாய் மறைந்து விடுவதை உணர்ந்திருக்கிறேன்.

நான் காமம் பழகியது புத்தகங்களிலிருந்துதான். ஞானம் பெற்றேன் என்றும் பகரலாம். அது ஒரு தத்துவப் புத்தகம். அரும்பெரும் தத்துவங்களின் நடுவே ஓரிடத்தில் ஒரு பெண் தன்னுடலை முதன் முறையாக ஸ்பரிச்சித்து உணர்வது போன்ற விளக்கம். ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வார்த்தையும் இன்றளவும் என் நினைவில் உள்ளன. உணர்ச்சி நரம்புகள் ஒவ்வொன்றாய் மீட்டெடுத்தேன் முதன்முறையாக. கதையின் நாயகி எனக்கு வழிக்காட்ட நான் என்னுடலை அவள் கூறிய முறையில் அணுகினேன். அப்பொழுது எனக்கு பதிமூன்று வயது. என்னுடல் என் தீண்டலுக்கெல்லாம் எதிர்வினையாற்றுவதை உணர முடிந்தது. அதுவரை எத்தனையோ முறைகள் தொட்டுப் பார்த்த எனது முலைகள் அன்று முதன்முறையாக இறுகித் திமிர்ந்ததை உணர்ந்தேன். உதடுகள் உலர்ந்தன. இனம்புரியாததொரு வெப்பமானது உடல் முழுதும் பரவி என் பெண்மையின் நீர்மையை உணர முடிந்தது. அவ்வளவுதான் அதற்கு மேல் எனக்கு வழிக்காட்டுதல் தேவையிருக்கவில்லை. என்னுள் சுருட்டிப் படுத்திருந்த பசித்த சர்ப்பமொன்று தண்டுவடத்தினூடே ஊர்ந்தெழும்பி மூளை வரைச் சென்று சில வானங்களின் தரிசனத்தைப் பெற்றுத் தந்தது. முதன்முறையாக என்னை விடுவித்துக் கொண்டேன் என்னிடமிருந்து. இவ்வுலகின் பாவங்களையெல்லாம் மன்னிக்கும் திராணி அப்பொழுது எனக்கு வாய்த்தது. இப்பொழுதும் மன்னிப்பின் சுவை மறக்கும் போதெல்லாம் காமத்தின் வாயிலாகத்தான் அதை மீட்டெடுத்துக் கொள்கிறேன்.


தேவகிரிக் கோட்டைக்கு சென்றிருந்த பொழுது எனக்கு ஒரு அனுபவம் அமைந்தது. அக்கோட்டை மிகப்பிரம்மாண்டமானது ஆனால் உள்ளே திசை வழிகாட்டும் பலகைகள் ஒன்றுகூட இருக்காது. அவரவர் தத்தமது பாதையை தாமே தேர்வு செய்து கொண்டு அக்கோட்டையை கண்டு இரசிக்கலாம். நாங்கள் அனைவரும் எங்கள் வழிகளில் பிரிந்து விட்டோம். அக்கோட்டையின் கட்டுமான அமைப்பு முக்கோண வடிவிலானது. முக்கோண வடிவம் எத்தனை அசெளகரியமானது என்பது உனக்கு புரிகிறதல்லவா? நினைக்கும்போதே மூச்சுத்திணறுகிறது எனக்கு. ஆனால் பிரம்மாண்ட முக்கோணம் என்பதால் அவ்விடம் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தவில்லை. ஆனால் அந்த நினைப்பே எனக்கு சுவாசிப்பதை அசெளகரியமாக்கியது. பராமரிப்பின் நிழல் கூட படியாத அந்த பிரம்மாண்ட கோட்டையின் உட்புறம் இருள் நிரம்பியிருந்தது. வெளவால்களின் கூடாரமாக அக்கோட்டை இருந்தது. இருளின் அரவணைப்பில் அவை கொண்டாட்டமாய் பறந்து திரிந்தன. முக்கோணத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு நிலவறை இருந்தது. அதற்குள் பிரவேசித்த யாரும் அச்சத்தில் அலறியபடி யாரையேனும் துணைக்கழைப்பதைக் கேட்க முடிந்தது. நிலவறை இன்னும் அதிக இருட்டாய் இருந்தது.முக்கோணத்தின் உச்சத்தில் சிறு துவாரம் ஒன்றிருந்தது. பகைவர்கள் யாரேனும் நிலவறைக்குள் பிரவேசித்து விட்டால் அத்துவாரத்திலிருந்து கொதிக்கும் எண்ணெய் அவர்கள் மேல் ஊற்றப்பட்டு அவர்களை கொல்வது வழக்கமாயிருந்தது. ஆனால் அது இறுதி கட்டத்தில் நிகழ்ந்தது. உள்ளே பிரவேசித்தவர்கள் பெரும்பாலும் மூச்சடைத்து காற்றில்லாமல் பரிதவித்து இறந்து விடுவராம். இது ஒரு பக்கம். ஆனால் அதே நிலவறையில்தான் படை வீரர்கள் தமது காதலிகளை அழைத்து வந்து மறைத்து வைத்து விடுவர். காமம் முற்றிய அப்பெண்களும் தமது காதலர்களின் வரவுக்காக அங்கேயே காத்திருப்பதுண்டு. அப்படி காத்திருக்கையில் சிலர் மடிந்து போவதுமுண்டு. ஆனால் ஒருத்தி மட்டும் மரித்துப் போகாமல் அவள் காதலன் வரும் வரை காத்திருந்தாள். பின்னிரவு வேளையில் அவன் வந்தான். அவள் வியர்வையில் குளித்திருந்தாள். அவன் எஃகு கவசத்தை கழற்றுவதற்குக் கூட அவகாசமில்லாத தவிப்பு அவனுக்கு. அவ்வுடையைத் தரித்தபடியே அவன் அவளுடளை கிழித்துப் புணர்ந்தான். அவளுக்கும் அது தேவையாயிருந்தது. நீ வருவாய் உன்னைப் புணர வேண்டி இந்த உயிரைப் பிடித்து வைத்திருக்கிறேன் என்று அவனிடம் கூறியபடியே காற்றுப் புகவியலாத அந்நிலவறையில் இருவரும் ஒருவொருக்குள் ஒருவர் புகுந்துத் திளைத்தனர். சுவாசத்தை விட அங்கு காமம் தேவையாயிருந்தது. உயிர் பிழைத்திருக்கவும் அதுவே காரணமாயிருந்தது. எத்தனை முறை என்று அவர்களுக்கேத் தெரியவில்லை. நிச்சயம் ஓராயிரம் புணர்தல் நிகழ்ந்திருந்தாலும் அது குறைவான எண்ணிக்கையாகத்தான் இருக்குமென்பேன். அதிகாலையில் காவல் பணிக்கு வந்த வீரர்கள் அவ்விருவரின் உயிரற்ற உடல்களைக் கண்டுத் திகைத்தனர். அவன் நிரந்தரமாய் அவளை புணர்ந்திருந்தான். அவளுக்குள் அவன் நிறைந்தபடியே இருவரும் மரணித்திருந்தார்கள். உடல்கள் விரைத்துப் போனதால் அவ்விருவரின் பிடியும் இறுகிப் போயிருந்தன. அவன் என்றென்றைக்குமாய் அவளுக்குள் புதைந்து விட்டான். அவனது இடையைச் சுற்றிப் பின்னியிருந்த அவளது கால்களும் இறுகிப் போயிருந்தன. நிரந்தரமாய் அவனை அவளோடு பிணைத்துக் கொண்டாள் அவள். முழுமையாய் மரித்துப் போன அவர்களை அதே நிலையில் அவர்களைப் புதைத்து விட்டனராம். இன்றும் அவர்களின் ஆன்மா அவ்விடத்தில் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

உன்னுடன் அங்கு செல்ல வேண்டும். உனக்காக அந்த நிலவறையில் நான் காத்திருப்பேன். நீ வரும் நேரம் வரை உயிர் மூச்சைத் தேக்கி வைத்திருப்பேன். அத்தனை அழுத்தம் வேண்டும் எனக்கு. வியர்வையில் குளித்தபடி, மரணத்தோடு விளையாடியபடி உன்னைக் கூடிக் கலந்து அதற்குப் பின் எனக்கு என்ன நிகழ்ந்தாலும் அது சுபமானதொரு முடிவாகவே இருக்கும். என் காமத்தின் வெப்பம் முழுவதையும் உன்னுள் கடத்திவிட்டு ஓய்ந்து விடுவேன் அன்று.


பிரியதர்ஷினி.
டியர் ப்ரியா,


உன்னை மீண்டும் நான் சந்திக்கும் நாளில் வானில் சில நட்சத்திரங்கள் தன் சுழற்சிப் பாதையை மறந்து இடமாறி விடக்கூடும். அற்புதங்கள் நிகழ்கையில் இத்தகு சமிக்ஞைகள் மூலம் இயற்கை அதனை தெரிவிக்குமாம். அதீதமான கற்பனை போன்று தோன்றுகிறதா உனக்கு? ஆம் அதீதம் தான் ஏனென்றால் உன்னில் மயங்கித் தொலைந்த இவளும் அதீதத்தின் பிள்ளையல்லவா?

அதனால்தானோ என்னவோ புறக்கணிக்கப் படுதல் எனக்குப் பழகிவிட்டது. என்னை யாருமே நேசித்ததில்லை இதுவரை ஏனென்றால் நான் அதீதம். அதீதத்தின் வலி, அதீதத்தின் குறை, அதீதத்தின் விளைவு என அதீதத்தின் இழப்பில் விளைந்த உயிர் நான்.

என்னை யாருமே தன்னுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்புவதில்லை. அது ஏன் என்று இன்று வரை எனக்குப் புரியவேயில்லை. விட்டுச் செல்லும் கைகள் வெவ்வேறாக இருக்கின்றன விட்டுக் கொடுத்துவிடும் கை மட்டும் என்றுமே என்னுடையதாக இருந்திருக்கிறது.


இனம்புரியாததொரு மகத்தான வலிதான் அனைத்து நேசங்களையும் ஆசைகளையும் அதன் ஆழங்கள் கண்டடையச் செய்கிறது.

மனிதக் கூட்டில் இன்னல்களையும் ஆனந்தத்தையும் தோற்றுவிக்கின்றது.

அதே வலிதான் கவிஞனின் மனதில் கவிதையை உருகிப் பாய்ந்தோடச் செய்கிறது.

- கீதாஞ்சலி.


மனிதர்களை அனுபவங்களாகக் காணப் பழகியதும் இப்படித்தான். நான் கடந்து வந்த ஒவ்வொரு மனிதனும் நாளடைவில் அனுபவமாய் மாறி நிரந்தரமாய் என்னுள்ளேயே தங்கி விடுகின்றனர். அனுபவங்களின் நிறம் வெவ்வேறான போதிலும் அவற்றின் வாயிலாக நான் பெற்ற பாடங்கள் அனைத்துமே விலை மதிப்பில்லாதவை.

பயணங்கள் விரும்பும் அனைவருக்கும் இக்கருத்துப் பொருந்தும். நான் சென்றுத் திரும்பிய அனைத்து இடங்களுக்கும் உன்னுடன் மீண்டும் செல்ல விரும்புகிறேன். இரயில் பயணங்கள் மீது கொள்ளைப் பிரியம் எனக்கு. நெடுந்தூர இரயில் பயணம் என்பது ஒரு சிறு வாழ்க்கை, அதை உன்னுடன் வாழ்ந்து பார்க்க ஆவல் கொள்கிறேன். வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் உன்னோடு. இரவுப் பகல் பாராது கதைத்துக் கொண்டும் குலவிக் கலந்தும் ஒவ்வொரு இடத்தையும் உனது கண்களால் மீண்டும் காண விழைகிறேன். வேகமாக மாறும் காட்சிகள் ஒரு புறம், அவற்றைக் காணும் நாம் என்றும் மாறாத நினைவுகளோடு மறுபுறம் என்று உன்னுடன் நெடுந்தூர தேசங்களுக்குப் பயணிக்க ஆவல் கொள்கிறேன்.


என்னை மனிதர்கள் யாருமே எளிதில் நம்பிவிடுவதில்லை. நான் எத்தகைய அதிர்வுகளை மனிதர்களின் மனதில் ஏற்படுத்துகிறேன் என்று இன்று வரை புரியவில்லை. குற்றம் சுமத்தப்பட்டுப் பழிக்கப்படுதலும் புதிதல்ல எனக்கு. சிறுபிராயந் தொட்டே இப்படித்தான் இருந்திருக்கிறது. இது எதுவும் என்னை மாற்றும் வீரியம் பெற்று வரவில்லை என்பது மட்டும்தான் எனக்கான ஒரே ஆறுதல்.

நீ நீயாகவே இருந்துக் கொண்டு என்னை நானாக இருக்க வைத்ததுதான் நான் விரும்பிய நம்பிக்கையின் பரிமாணம். ஒரு வேளை உனக்கு முன் வேறு யாரேனும் இதை எனக்கு உணர்த்தியிருந்தால் இந்தக் கடிதம் நிச்சயம் அவர் முகவரிக்கு எழுதப்பட்டிருக்கும் ஆனால் வேறு யாருமில்லாது நீதான் அவ்விடத்தில் இருக்கிறாய். இதில் என் பிழையொன்றுமில்லை.


ஒரு நாணயத்தின் ஒரு பக்கக் கதையை நீ சுமந்திருப்பது போல் மறுபக்கக் கதையை நான் சுமந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இருவரின் கடந்த காலங்களும் ஒரே நூலில் நெய்த ஆடைகள் போல் சாயல் கொண்டிருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எதற்காகவோ எழுதத் துவங்கி இப்பொழுது இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன். உடல்கள் நமக்கு புதிதல்ல புதிருமல்ல ஆனால் நான் கொண்ட புரிதல் புதிது. அதன் விளைவாக நான் அடைந்த நிறைவும் நிரந்தரமானது.


மனோ.

7


டியர் மனோ,


மழை பொழியும் இந்த காலம்

தான் நிலமெனும் பெண் தன் முழு செழுமையில் கருத்தரித்து பூமியெங்கும் புத்துயிர்களை பிரசவிக்கிறாள் என்ற நம்பிக்கை தழைத்தோங்கும் ஓரிடம் உண்டு. அங்கு ஓரிரு முறைகள் நான் சென்றிருக்கேன். அசாம் மாநிலத்தின் நீலாச்சல் (காமகிரி) மலைகளில் வீற்றிருக்கும் காமக்யா தேவியின் கோவில் அது. பெண்மையின் யோனி வடிவம்தான் அங்கு வழிபாட்டுத் தெய்வமாக இருக்கிறது. வற்றாத இதமான வெப்பத்தில் சிறிய சுனையொன்று அந்த யோனியிலிருந்து பெருக்கெடுத்துக்கொண்டிருக்கும். வற்றாத அந்த ஜீவ நீர்தான் உலகில் உயிர்கள் ஜனிக்கும் ஆதி யோனியெனக் கூறுகின்றனர். அதனாலேயே அவ்விடம் பெண்மையின் சக்தி உறைவிடமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. The goddess of desire(காமம்), The bleeding goddess என்றழைக்கப்படும் காமக்யா தேவி ஆண்டில் ஒரு முறைதான் உதிரம் போக்கித் தன்னை சுத்திகரித்துக் கொள்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் இதே நேரத்தில் அதாவது ஜுன் இறுதியிலிருந்து ஜூலை முதல் தேதி வரை மூன்று நாட்களுக்கு மட்டும் கோவில் அடைக்கப்படும். அப்பொழுது பிரம்மபுத்திரா நதியின் ஒரு சிறு கிளை சிவப்பில் தோய்ந்திருக்குமாம். அம்மூன்று நாட்களும் யாரும் நிலத்தை உழுது விதைப்பதில்லை, படைப்பாளிகள் தம் படைப்பு வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி விடுவர். அவள் தன்னை சுத்திகரிக்கிறாள், அவளது யோனியின் சுனை மீண்டும் சுரக்கத் துவங்கும்போது தான் படைத்தல் காரியங்களும் விதைத்தல் வேலைகளும் மீண்டும் துவங்கும்.


நம் மண்ணின் எண்ணற்ற கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று என்பது போல் தோன்றவே செய்யும். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அவ்விடத்தின் அதிர்வலைகளே வேறு. அது அங்கு சென்றால்தான் புரியும். எதையுமே புனிதப் படுத்தினால்தான் மக்களின் கவனம் பெற முடியும் என்ற கூற்று இவ்விடத்திற்கு அவ்வளவாக பொருந்தாது ஏனென்றால் இவ்விடத்தின் காற்றில்கூட காமம் வீசும். குருதியின் மயக்க வாசம் காற்றிலும் மலையிலும் வீசும். கோவிலின் சிலைகள் ஒவ்வொரு தூணிலும் தன் யோனியை முழுமையாய் விரித்து அமர்ந்திருப்பாள் காமாக்யா. ஆண்கள் பெண்கள் அனைவரும் அவளது யோனியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்வது, இன்னும் சிலர் அதில் முகம் புதைத்து பிரார்த்திப்பதையும் முதன்முதலில் கண்ட பொழுது என்னுள் தோன்றிய அசெளகரியத்தை வார்த்தைகளால் விளக்க இயலாது. ஆங்காங்கே பலியிட வேண்டி நேர்ந்து விடப்பட்ட மிருகங்கள். அவற்றின் கண்களில் அச்சத்தின் எந்த ரேகையுமில்லை. தன்னை அவளிடம் ஒப்படைத்துவிட துடித்தபடி இருந்தன. ஒரு விதத்தில் மனிதர்களே கூட அங்கு அப்படியொரு மனநிலையில்தான் இருந்தனர்.


கருவறை அமைந்திருப்பது எங்கோ ஒரு பள்ளத்தில். நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்தனர். யோசித்துப்பார் அங்கிருப்பது சிலையோ உருவமோ அல்ல அது யோனியின் வடிவம். அதைக் கண்டு தரிசிக்க மக்கள் வெள்ளம். இந்த எண்ணமே என்னுள் ஒருவித மெய்சிலிர்ப்பை அளித்தது. பெண்மை அதன் நிஜமாய் எந்த போலி வடிவமுமின்றி அதன் நிஜ ரூபத்தில் அங்கிருப்பதே எனக்கு பேரானந்தத்தைக் கொடுத்தது. கருவறையைக் காணும் நீண்ட வரிசையில் நானும் நின்றுக் கொண்டேன். ஒரு கோவில் எனும் எந்த பிம்பமும் இல்லாமல், இயற்கையில் அமைந்த வண்ணமும் மணமும் என அவ்விடம் உண்மையை தரித்திருந்தது. கருவறையை நெருங்குகையில் ஒரு காட்சி. அனைவரும் யோனி வடிவத்திலிருந்து பெருகிய நீரை தமது தலையில் தெளித்துக் கொண்டனர், இன்னும் சிலர் அந்நீரை அருந்தினர். எனது கற்பனையில் நான் அக்காட்சியை ஒரு பெண்ணாய் அங்கு யாரோ அமர்ந்திருப்பதாகவும் அவளைத்தீண்டிய விரல்களின் சிலிர்ப்பால் பெண்மையின் சுனை மேலும் சுரந்து அவள் பரவசமாய் ஆனந்தமாய் பூமியில் உயிர்களை பிரசவிப்பதுபோல் நினைத்துப் பார்த்தேன். நிஜம் இன்னும் மெருகேறியது. நானறிந்த அறியாத அனைத்துப் பெண்களின் முகங்களையும் அந்த யோனியுடன் பொருத்திப் பார்த்து கற்பனை செய்து கொண்டே வரிசையில் முன்னேறினேன். அற்புதமான புரிதல் ஒன்று அப்பொழுது நிகழ்ந்தது. ஒரு வழியாக நான் அந்த யோனியினருகே சென்றடைந்தேன். உடல் வியர்த்து விட்டது. இப்பொழுது யார் முகத்தைப் பொருத்திப் பார்க்கலாம் என்ற யோசனையில் யோனியின் சுனை நீரை உள்ளங்கையில் அள்ளியெடுத்தேன். அங்கிருந்த பண்டிதர் எனைத் தடுத்தார். தொட்டுத் தெளித்துக் கொள்ள மட்டுமே அனுமதி என்றார். அள்ளியெடுத்தல் ஆகாது என்றார். எனக்கோ அந்தக் காட்சிக்கு முகம் பொருத்த வேண்டிய அவசரம். அள்ளியெடுத்த நீரை தலையில் தெளித்துக் கொள்ள நிமிர்ந்தேன். விளக்கொளியில் ஒரு முகம். அது எனது பிரதிபிம்பம். இவ்வளவு நேரம் இது தோன்றவில்லையே. உலகின் பெண்மையின் ஒரு துகள் தானே நானும்?


இந்த அனுபவம் நிகழ்ந்தேறி சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அதே போன்றதொரு நிறைவான பகிர்தலொன்று நிகழ்ந்தது எனக்கு. அது என்னவென்று நீ ஒருவாறு கணித்திருக்கக் கூடும். ஆம், எந்த முன்னேற்பாடுகளுமின்றிதான் அங்கும் சென்றேன், உன்னிடமும் வந்தேன். ஆனால் இரண்டு நேரங்களிலும் நான் வேறு மனிதியாகவே வெளிவந்தேன்.


யார் வந்து நிறைய வேண்டி அவள் நீர்மை பூண்டிருந்தாளோ அதில் ஒரு துகளின் நிறைவில் அவளும் நிறைந்திருப்பாள் என்று நினைத்துக் கொள்கிறேன்.

காரணம் நீ.


பிரியதர்ஷினி.இத்தனை வருடங்களில் இல்லாத உற்சாகமும் சந்தோசமும் பிரியாவின் முகத்தில் நிறைந்து வழிவதை மகி கவனிக்காமல் இல்லை. பிரியாவின் மகன் கூட ஒருமுறைக் சொன்னான்


“ம்மா, இப்பல்லாம் நீ சிரிக்கிறப்போ ரொம்ப அழகா இருக்கற…”


மகன் கவனித்ததை மகியும் கவனித்திருப்பான் என்கிற பிரக்ஞை பிரியாவிற்கு இருந்தபோதும் அந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அவள் மறைக்க விரும்பவில்லை. அவள் மனதில் கிளையில் எந்தப் பறவை அமர்ந்தாலும் அதில் மகிக்கு வருத்தமில்லை. அவளின் எப்போதும் தானேதான் என்கிற புரிதல் மிக நன்றாய் உண்டு. அவளின் சிரிப்பிற்கும் சந்தோசத்திற்கும் காரணமாக இன்னொரு மனிதன் இருக்கக் கூடுமென்றால் அதுவொன்றும் அத்தனை வருத்தமான விஷயமில்லையென நினைத்துக் கொண்டாலும் அவளை இத்தனை பூரிக்கச் செய்யும் அந்த மனிதன் யாரென்பதைத் தெரிந்து கொள்ளவேண்டுமென்கிற ஆர்வமும் இருந்தது. அவளை மிக நன்றாய்த் தெரிந்திருந்த இத்தனை காலத்தில் யாருடைய சொற்களுக்கும் சிரிப்பிற்கும் அன்பிற்கும் அத்தனை எளிதில் தன்னை ஒப்புக் கொடுக்கிறவள் இல்லை என்பதை மிக நன்றாய் அறிவான். அப்படி இருந்தவள் ஒருவனிடம் முழுதாய் தன்னை ஒப்புக் கொடுக்கிறாளென்பதுதான் அவனைத் தெரிந்து கொள்ளத் தூண்டியது.


அவள் மின்னஞ்சல்களைத் தேடியபோது மனோவைக் கண்டுபிடிக்க மகிக்கு நீண்ட நேரம் எடுக்கவில்லை. பிரியாவின் மின்னஞ்சல் பெட்டியில் நிறைந்து கிடந்த அவனின் கடிதங்களை ஒவ்வொன்றாய்ப் படித்துப் பார்த்தான். மனோ என்கிற முகம் தெரியாத மனிதன் தனது மொத்த உலகையும் பிரியாவின் நினைவுகளை மட்டுமே சுற்றி உருவாக்கி இருக்கிறான் அந்த உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டபோது வியப்பாகவும் பொறாமையாகவும் இருந்தது. ஒரு மனிதனால் இத்தனை உக்கிரமாக ஒரு பெண்ணை நேசிக்க முடியுமா? பிரியாவின் மீதிருந்த பித்தையும் இச்சையையும் அவர்கள் உறவு கொண்டதையும் தான் பல நூறு கடிதங்களாய் எழுதி இருக்கிறான். ஆனால் அவன் மீது ஒரு துளியும் வெறுப்பு வரவில்லை. யாரிவன்? ஏன் இத்தனை தீவிரத்தோடு பிரியாவை நேசிக்கிறான்? இவளும் அதே தீவிரத்தில் அவனை நேசிக்கிறள் என்பதை இவளின் கடிதங்களில் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஒருபோதும் பிரியா மகியிடம் சின்ன விலகலைக்கூட காட்டியதில்லை என்பதை நினைத்தபோது அவளொரு தேவதையாய்த் தெரிந்தாள். மனோவைக் குறித்துது ஏதோவொரு தருணத்தில் மகி தன்னிடம் விசாரிக்கக் கூடுமென பிரியா எதிர்பார்த்திருந்தாள், அவனோ அவளது இந்த சந்தோசத்தை எந்தவிதத்திலும் கேள்விக்குள்ளாக்கிவிடக் கூடாதென்கிற உறுதியோடு இருந்தான்.


8


டியர் மனோ,


நான் ஒரு மழைக் காளான் மீது மோகம் கொண்டேன். மோகம் என்றால் அளப்பறியா மோகம். என் இருப்பின் நிலையையே மாற்றப் பார்த்தது அந்தக் காளான் மீது நான் கொண்ட மோகம். அவ்வளவு வேட்கையை என்னுள் தூண்டிய அந்தக் காளான் என் மனதில் விதைத்த மோகத்தை என்னவென்று சொல்வது. அந்தக் காளானை என்னுடையதாக்கிக் கொள்ள வேண்டி ஒரு பெரும் யுத்தத்தை நிகழ்த்தவும் மனம் தயாராகிவிட்டிருந்தது. அந்தக் காளானின் குடை இளமஞ்சள் நிற உடல் முழுதும் வானவில்லின் அனைத்து நிறங்களும் விரவியிருந்தன. அதன் உட்புறமோ குருதிச் சிவப்பில் ஊறியிருந்தது. தேவதைக் கதைகளில் வருவது போல் யாரேனும் ஒரு இளவரசன் அதனுள் ஒளிந்துக் கொண்டு என் ஸ்பரிசத்தால் விடுபட காத்திருக்கிறானோ என்று கூட தோன்றியது. மோகம் முற்றிவிட்டது எனக்கு. இலைகளின் நுனியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒரு மழைத்துளி என்னையும் முந்திக் கொண்டு அந்த வானவில் காளானை ஸ்பரிசித்து அதன் சிரத்தில் விழுந்துத் தெறித்தது. அக்காட்சி என் சப்த நாடியையும் ஒரு நொடி துடித்தெழச் செய்தது. மோகம்!


அதன் இருப்பே என்னை கொன்றுவிடும் போலொரு வேதனை." என்னோடு வந்துவிடு வசீகரமே, உன்னை உலகின் கண்களிலிருந்து மறைத்து வைத்துக் கொள்கிறேன். உன்னை பார்த்திருந்தாலே நான் முக்தி அடைந்துவிடுவேன் விரைவில், என்னோடு வந்து விடுவாயா என் மோகத்தின் உறைவிடமே?" என்றேன்.

மழைக்காளான் தன் வண்ணங்களை மட்டுமே மொழியாக்கி என்னை வசீகரித்துக் கொண்டிருந்தது. இனி பொறுத்திருக்கவியலாது. உன்னை வேரோடு அகழ்ந்து எடுத்துக் கொள்கிறேன் என்று நினைத்து அதை அணுகினேன். அப்பொழுதுதான் தெரிந்தது அந்தகாளான் முளைத்திருந்தது ஒரு கல்லறை மேட்டிலிருந்து. சிறிது இடைவெளி விட்டு அடுத்தடுத்து சவங்களை புதைத்துக் கொண்டு புடைத்துப்போன மணல் மேடுகள். களிமண்ணோ குருதி மண்ணோ என்று யூகிக்க முடியாத அளவிற்கு நிலம் சிவந்திருந்தது.இவ்வளவும் தெரிந்திருந்தும் மனதின் மோகம் அடங்கிவிடுமா என்ன? என்னை இவ்வளவு அசைத்தது அந்தக் காளானின் வினை, மோகம் எனது எதிர்வினை. அனைத்தும் சரி என்று தோன்றியது. அந்தக் காளான் என்னை வென்றுவிட்டது. இனி அதனை என்னருகில் வைத்துக் கொண்டாடுவதே சரி என்ற முடிவில் அதனருகே சென்றேன். துளித்துளியாக எனது மோகம் அதன் தலையில் மழைத்துளியாய் இறங்கியது. வண்ணங்கள் இடமாறி வெவ்வேறு வடிவங்களில் மாயமொன்று நிகழ்ந்தது. ஒவ்வொரு துளிக்கும் ஒரு புதிய வண்ணக் கோர்வை. சூரியன் மேற்கில் மறையும் தன் இறுதி செந்தூர கிரணங்களை வானம் முழுதும் பரவச் செய்திருந்தான். நான் மழைக்காளானோடு மோகித்திருந்தேன். அவ்வுயிரும் என்னுடன் கலந்து விட்டிருந்தது அதன் வர்ண ஜாலத்திலிருந்து புரிந்தது. சொல்லொண்ணா மரண வேதனையொன்று என் மனதை ஆக்கிரமித்திருந்தது அப்பொழுது. மழைக்காளானின் கால்களைப் பிடித்துக் கதறி "எப்படியாவது என் மோகம் தீர வழிவிடு. என்னுடன் வந்துவிடு என் உயிரியக்கமே, நீ மட்டும் போதும், உன்னிடம் மட்டும் பேசிக் கொள்கிறேன், உன்னை மட்டும் சுவாசித்துக் கொள்கிறேன், உன்னோடிருந்தால் போதும் இந்த உலகம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல" என்று அதனிடம் மன்றாடினேன். இப்பொழுது வலியில் துளிர்த்த எனது கண்ணீர் அதன் குடையில் வீழ்ந்தன. மீண்டும் வர்ணக் கோர்வையின் வடிவங்கள் மாறின. இப்பொழுது நிறங்களின் அடர்த்தி மெல்ல குறையத் துவங்கியது. என் மனதின் மோகம் தணியத் தணிய நிறங்களின் இறுக்கமும் தணிந்தன. அவை ஒன்றோடு ஒன்று கலந்து இளகி உருகி தீவிரம் கரைந்து இறுதியில் முற்றிலும் நிறமற்றுப் போனது. இப்பொழுது நான் முதலில் கண்ட அந்த கடுமையான வசீகர வடிவம் அங்கில்லை.மாறாக எல்லா வண்ணத் தீவிரத்தையும் தன்னுள் நிறைத்து தெளிந்ததொரு முழுமை அது.


நானும் மழைக்காளானும் ஒரே நேரத்தில் போராடித் தவித்து ஒருவரிலொருவர் நிறைந்து பூரணத்துவம் அடைந்தது போன்றதொரு ஆழ்கடல் நிறைவினை அடைந்தோம்.


மோகம் கிளர்ந்தெழாத காமம் சாத்தியமில்லை. காமத்தில் துவங்கி காமத்தில் முற்றுப்பெறாத எதுவும் காதலே இல்லை என் அகராதியில். உடல் வழி உயிர் தொடுதல் மட்டுமே நிஜம்.அதுவே இறைமை.


பிரியதர்ஷினி.டியர் பிரியா


இச்சையை பாவமென்று சொல்லி வளர்க்கும் சமூகத்தில் வளர்ந்த நான் அது எத்தனை ஆற்றல்மிக்கதெனக் கண்டுகொண்டது உன்னிடம்தான். உனக்கு எழுதும் கடிதங்களின் வழியாகவும் நீ எனக்கு எழுதும் கடிதங்களின் வழியாகவும்தான் எனது அகத்தை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. சிகிச்சையளிக்கும் நீ சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ‘பெண்கள் கிட்ட ஏதோ ஒருவகைல பழகனுங்கற ஆசை இருக்கு, ஆனா பயமும் இருக்கு. அதனாலதான் ஃபேம் டம்ல அப்யூஸ் பண்ணப்படற ஆணா உங்கள நெனச்சுக்கறீங்க.’ இந்த வார்த்தைகளை மீளவும் யோசிக்கையில் பெண்களிடம் இயல்பாய் நெருங்கவிடாமல் என்னை விலக்கி வைத்தது எது என்கிற ரகசியத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. கடந்து செல்லும் அனேகப் பெண்களை கற்பனையில் துகிலுரித்து கலவி கொண்டுவிடுகிற ஒருவனுக்கு பெண்களின் இயல்பைப் புரிந்து கொள்வது எளிதான காரியமில்லைதானே. உன்னை வந்து சேரும் வரை பெண்களின் உடலோடு எனக்கிருந்த உச்சபட்ச மோகம் அத்தனையும் கற்பனைகளால் நிரம்பியது. ஒரு பெண்ணின் வாசனையை, தகிப்பை உன்னிடம்தான் தெரிந்துகொண்டேன்.


லோனாவாலாவில் நாம் தங்கியிருந்தபோது நீ முலையூட்டியது இன்னும் நினைவிருக்கிறது. பல மணி நேரங்கள் நாம் அதே நிலையிலிருந்தோம். நீ கேட்டிருந்தாயே மூச்சடைக்கப் புணர்ந்து அப்படியே மரித்துப் போக வேண்டுமென. எனக்கு லோனாவின் அந்தக் கணம் அப்படி யோசிக்க வைத்தது. உன் முலையூட்டலில் திளைத்து அதேநிலையில் அப்படியே மரித்துப் போய்விடவேண்டுமென. oவ்வொரு முறையும் உன்னைச் சந்தித்துவிட்டு ஊர் திரும்புகையில் நீ தொலைவிலிருப்பதான எண்ணம் ஏற்படுவதில்லை. இங்கு தென்காசியிலிருந்து அச்சன்கோவில் செல்லும் வழியில் கேரள எல்லையைக் கடந்ததும் சிற்றாறுகளும் சிறு அருவிகளும் அனேகமுண்டு. ஆறுகளில் கிடக்கும் உடைமரங்களை வெயில் ஆறத் தழுவிக் கிடந்திருக்கிறேன். நீரில் கிடக்கும் அந்த மரத்தின் தகிப்பில் உன்னுடலின் அருகாமையைத்தான் உணர்வேன். ஆற்றோர மரங்களின் தூரில் ஓர் வாசனை நிரம்பியிருக்கும். அது மரத்தின் வாசனையல்ல, மண்ணோடு கலந்த வேரின் வாசம். மரத்தினடியில் விரவியிருக்கும் ஈர வாசனையை நுகர்ந்தபடி படுத்திருக்கும் போது உன் யோனியைச் சுவைக்கையிலிருந்த நறுமணமே நினைவிற்கு வரும். என்னைச் சூழ்ந்த எல்லாவற்றிலும் உன்னை நினைவுபடுத்திக் கொள்ள ஏதோவொரு அம்சம் பிரதிபலிக்கவே செய்கிறது.

வயநாட்டின் சன் ரைஸ் வேலியில் பார்த்தோமே ஒரு பள்ளத்தாக்கு. அந்த பள்ளத்தாக்கில் வசிக்கும் ஒற்றைக் குடும்பம். ஆறும் மலைகளும் சூழ, உலகின் கண்களுக்குப் படாத அப்படியொரு வாழ்வை என் அந்திமக் காலத்தில் உன்னோடு கழிக்க வேண்டுமென்பது மட்டுந்தான் என் இப்போதைய விருப்பமெல்லாம்.


மனோ


9


குளியலறைக் கண்ணாடியின் முன்னால் நின்ற பிரியாவின் கண்களைச் சுற்றி ஆழ்ந்த கருமை வளையம். மங்கலான வெளிச்சத்தில் பாதி உடலை பிரதிபலித்த உடலைப் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக்கொண்டாள். சோர்வும் களைப்பும் உடலில் நிரந்தரமாய்க் குடிகொண்டதைப் போலிருந்தது. இந்தக் குளியலறையில் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எத்தனை பலவீனப்படுகிறோமென்பது அவளுக்குத் தெரிந்தாலும் இந்த சுயவதையிலிருந்து தப்பவோ தன்னை மீட்டுக்கொள்ளவோ முடியவில்லை. எத்தனை உறுதியான உடலையும் நலமோடு வைத்திருப்பது ஒரு மனிதனின் மனம்தான், அதனை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருப்பதுதான் முக்கியம் என்பதைக் கற்றுத் தேர்ந்ததோடு மற்றவர்களையும் அதற்குப் பழக்கியவளின் மனம் இப்போது தன் வலுவை இழந்திருந்தது. தனக்கு எதிராக தானே போர் செய்யும் நிலையிலிருந்தவளுக்கு உலகின் மீதான வெறுப்பு அதிகரித்துவிட்டிருந்தது. நீண்டநேரமாய் குளியலறையிலிருந்து வெளிவராமலிருந்ததால் மகி கதவைத் தட்டி அழைத்தான்.


“பிரியா ஆர் யூ ஓகே?”


“ம்ம்ம்… இதோ வந்துடறேன் மகி.”


மாற்று உடையை அணிந்து கொண்டபோது தலையில் நறுக்கப்பட்ட புற்களைப்போல் கொஞ்சமாய் மிஞ்சியிருந்த முடிகள் தொலைந்துபோன எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்களை நினைக்க வைத்தது.


‘அலையலையான அந்தக் கூந்தல் கடலில் புகுந்து வெளிவரும் போதெல்லாம் என்னை சாகச்காரனாய் உணர்கிறேன்…’ என்று ஒரு கடிதத்தில் எழுதியிருப்பானே. அந்தக் கூந்தலை எத்தனை ரசித்தான். அதை தன் முகத்தில் சுற்றிக்கொண்டு உறங்கிப் போயிருக்கிறான். ‘மூச்சடச்சு சாகப் போறடா’ என்று கூட ஒருமுறை கேலி செய்திருக்கிறாள். அவன் அப்படித்தான், எல்லாவற்றிலும் அதீதம். நேசிப்பதில் மோகிப்பதில் ஆராதிப்பதில் எல்லாவற்றிலும் நிகரில்லாதவன். உடலின் ஒவ்வொரு மயிரையும் தனித்தெடுத்து முத்தமிடும் அளவிற்கு பொறுமைசாலியாகவும், அவளோடு மோகிப்பதை விடவும் இந்த உலகில் முக்கியமான செயல் எதுவுமில்லை என நினைக்குமளவிற்கு காதலுற்றவனாகவும் இருப்பான். முதல் முறையில் மட்டுமல்ல, அவளோடு கூடும் ஒவ்வொரு முறையும் அவன் அதீதமானவனாகத்தான் இருந்திருக்கிறான். மனோவைப் பிரிந்திருக்கும் இந்தத் துயரை அவளால் சகித்துக் கொள்ளமுடியவில்லை, ஆனால் தனது இந்த நிலையை, உடலுக்குள் நிகழும் போரின் வலியை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாதென்பதால் அவன் நிழல் படாத எல்லையிலேயே இருக்க விரும்பினாள்.


மகி அவள் படுக்கையில் படுக்க உதவினான். வறண்ட இதழ்களில் தாகம் நிரந்தரமாய்க் குடிகொண்டதைப்போல் தெரிய,


“குடிக்க எதாச்சும் குடுக்கவா?”

என்று கேட்டவனிடம்


“கொஞ்சம் தண்ணி மட்டும் போதும் மகி.”

சோர்வாய்ச் சொன்னாள்.


நீருந்தும்போது தொண்டைக்குழியில் சின்னதொரு வலியிருந்தது. தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் உணவுக்குழாயையும் சுவாசக் குழாயையும் புண்படுத்தியிருந்தது. எதையாவது அருந்தும் போதோ உண்ணும்போது வலி பிரிக்கமுடியாதவொன்றாய் மாறிப்போயிருந்தது. கையிலிருந்த குவளையை அவனிடம் கொடுத்தாள். வாங்கி மேஜையில் வைத்தவன், அவள் சாய்ந்து படுக்க வசதியாக படுக்கையை சரி செய்துவிட்டு


“நாளைக்கு கீமோ போகனும் பிரியா”


என்று அவளுக்கு நினைவுபடுத்தினான்.


“ம்ம்ம்..”


உணர்ச்சி இல்லாமல் பதிலளித்தவளின் கண்கள் எங்கோ வெறித்திருந்தன.


“கீமோ முடிஞ்சதும் நீ புனே கெளம்பிப் போ மகி. இங்க அம்மா அப்பா இருக்காங்கள்ல… பாத்துப்பாங்க.”


“இல்ல ப்ரியா இன்னும் ஒரு மாசம் நான் உங்கூட இருக்கேன். நீ ரெகவர் ஆகறதப் பாத்துட்டுப் போகலைன்னா என்னால அங்க எதும் செய்ய முடியாது.”


“இல்ல மகி, ஏற்கனவே நிறைய கடன் வாங்கிட்டோம், லாஸ் ஆஃப் பே லீவ் ல எவ்ளோ நாளைக்கு சமாளிக்க முடியும். நீ போய் வேலைல ஜாய்ன் பண்ணு பாத்துக்கலாம். “


“பணத்தப் பத்தி யோசிக்காத பிரியா, இப்போ நீ கம்ப்ளீட்டா ரெகவர் ஆகறது மட்டுந்தான் எனக்கு முக்கியம்.”

அவள் தலையை வருடிக் கொடுத்தான். அரும்பிய மயிர்கள் கையில் மென்மையாய் குறுகுறுத்தது. அவன் கண்களை ஊடுருவி மென்மையாய்ச் சிரித்தாள்.


“கொஞ்ச நேரம் தூங்கலாம் ல”


“முடியல மகி. தூங்கறப்போ லாம் மனசு ரொம்ப பாரமாகிடுது. சாவப் பக்கத்துல பாத்துட்ட மாதிரி ஒரு பயம். இவ்ளோ பில்ஸ் எடுத்தும் கூட தூக்கத்த பயம் ஜெயிச்சுடுது மகி…”


வறண்ட கண்கள் சடாரென குளமாகின.


“பயப்படாத பிரியா, இனிமே உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இந்த கீமோ முடிஞ்சுட்டா அடுத்த சில மாசங்கள்லயே உன்னால மறுபடியும் நார்மல் லைஃபுக்குத் திரும்பிட முடியும்.”


”நார்மல் லைஃப்? அது எப்டி முடியும் மகி?”


கண்ணீர் இப்போது பெருக்கெடுத்து ஓட, துவண்டுபோன உடலில் விசும்பி அழக்கூட தெம்பில்லாதவளாய்க் கிடந்தவளுக்கு பதில் சொல்ல முடியாமல் மகி அமைதியாய் நின்றான். சற்றைக்கு முன்னர் கண்ணாடியில் பார்த்த பிரியதர்ஷினி உண்மையில் அவள் தானா? அவளால் இந்த சிதைவைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. மருத்துவம் தெரிந்தாலும், வீழ்த்தப்படும் மனிதர்களின் மன உளைச்சல்களைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் யாரும் ஆறுதல் சொல்லித் தேற்றுமிடத்தில் அவள் இல்லை. ஆசையாய் வளர்க்கும் பறவையின் சிறகுகளை முறித்துவிட்டு இப்போதும் நீ அழகாய்த்தான் இருக்கிறாய் என்று சொல்வது அதை நேசிக்கிறவனை ஆறுதல்படுத்த வேண்டுமானால் உதவலாம், தனது உலகம் சிறகுகளால் அர்த்தப்படுகிறதென்கிற யதார்த்தம் பறவைக்கு மட்டுமே புரியும்.


“நீ எப்பவுமே என்னோட முழுமை பிரியா. நீ திரும்பவும் பழைய பிரியாவ வருன்னு எனக்கு நம்பிக்க இருக்கு. அந்த நம்பிக்கைய நீயும் கைவிட்றாத..”


அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டவன் ஆறுதலாய் நெற்றியில் முத்தமிட்டான்.
10


ஐந்து மாதங்களுக்கு முன் பிரியாவிற்கு தொடர்ந்து சிலநாட்கள் உடல்நலமில்லாமல் போனது. முகத்திலிருந்த சந்தோசம் உடலில் வெளிப்படவில்லை. மனோவுடனான அன்பும் களிப்பும் உலகை மட்டுமல்லாமல் உடலையும் மறக்கச் செய்திருந்தது. பெருங்காற்றைத் தாங்கிப் பிடிக்கும் மரத்தினுடைய வேர்களின் வலியைத் தெரிந்து கொள்ளாமலேயே பரவசத்தோடு அசைந்தாடும் இலைகளுக்கு காற்று வலுத்து மரம் வீழும் நிலையில்தான் நிலமையின் தீவிரம் புரியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பிரியாவிற்கு சில நாட்களாக வலது மார்பிலிருந்த வலிக்கு வேறு காரணங்கள் இருக்கலாமென்கிற சந்தேகம் வந்தது. பரிசோதித்துப் பார்த்ததில் இரண்டாம் நிலை கேன்சர் என்பது உறுதியானபோது அவளிடம் தேங்கியிருந்த சந்தோசங்கள் அவ்வளவும் நொறுங்கிக் கரைந்து போயின. சொல்லொண்ணா குற்றவுணர்வுக்கு ஆட்பட்டவள் மகியிடம் மனோவோடு தனக்கிருக்கும் உறவைக் குறித்து நேரடியாய்ப் பகிர்ந்து கொள்ள துணிவில்லாமல் புழுங்கினாள். மகிக்கு அவள் இருப்பு மட்டுமே ஆதாரமென்பதால், எந்த நிலையிலும் பலவீனமாகி தன் கவலை அவளது நலனை பாதித்துவிடக் கூடாதென்பதில் உறுதியாய் இருந்தான். உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மார்பை நீக்கிவிட்டால் புற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி குணப்படுத்திவிடலாமென மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவனுக்கு சிகிச்சையிலும் கடவுளிடமும் அனேக நம்பிக்கையிருந்தது. அவளை இத்தனை சீக்கிரத்தில் தன்னிடமிருந்து யாரும் எடுத்துக்கொண்டு சென்றுவிடமுடியாதென உறுதியாய் இருந்தான்.


அறுவை சிகிச்சை முடிந்து பெங்களூர் திரும்பியபிறகு பிரியாவிற்கு உலகின் மீதான அவநம்பிக்கைகள் அதிகரித்திருந்தன. மகி எவ்வளவுதான் அவளைத் தேற்றினாலும் உள்ளுக்குள் அவள் தன்னைத் தானே சிதைத்துக் கொள்கிறவளாய் இருந்தாள். அச்சத்தை மீறிய குற்றவுணர்ச்சி அவளுடலை ஒவ்வொரு நாளும் வதைத்தது. எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் நீண்ட நேரம் தூங்கச் செய்வதால் உடல் சுரணையே இல்லாததுபோல் மரத்துப் போனது. ஒவ்வொரு முறையும் மருத்துவமனை சென்று வரும்போது எதிர்கொள்ளும் வலியில் வாழ்வின் மீதான சலிப்பு அதிகமானது. இது போன்ற தருணங்களில் மகி அவளிடம் தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுக்கிறபோது சலிப்போடு குற்றவுணர்வும் சேர்ந்து கொள்ளும். எல்லாம் தெரிந்தும் இவன் ஏன் இத்தனை காதலிக்கிறான்? இந்தக் காதலுக்கு நான் அருகதையானவளா? என்கிற கேள்விகள் மனதை அரித்துக் கொண்டிருக்கும், ஒவ்வொரு நாளும் மனோவிடமிருந்து வரும் மின்னஞ்சல்களும் ஓய்ந்திருக்கவில்லை. பாதிக்கும் மேலான மின்னஞ்சல்களை அவள் வாசிக்கவில்லை. சொல்லப்போனால் அவற்றைத் திறந்து பார்க்கும் துணிச்சல்கூட அவளுக்கில்லை. அவன் அழைப்புகளைத் தவிர்த்தாள். இந்தப் புறக்கணிப்பின் ஏதாவதொரு தருணத்தில் தன்னை வெறுத்து அவன் ஒதுங்கிவிடுவானென நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னைத்தேடி புனேவிலிருக்கும் தன் அலுவலகத்திற்குச் சென்றான் என்கிற செய்தி கிடைத்தபோது அதை வரமாகவும் சாபமாகவும் நினைத்தாள். நிபந்தனையற்ற அன்பென்பது தீரா சாபம். மனோவின் மீது வெறுப்பு துளிர்த்தது. இவனுக்கு என்ன செய்துவிட்டோம்? சில காலக் காதலுக்காக ஏன் இப்படித் துரத்தி வந்துகொண்டிருக்கிறான்? அவனை அழைத்துப் பேசவும் மனம் விழைந்திருக்கவில்லை. எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சிரித்தபடி தன்னைப் பராமரிக்கும் மகியையும் அவளால் குற்றவுணர்வில்லாமல் எதிர்கொள்ள முடியவில்லை. அவன் எப்போது உறங்குகிறான், எப்போது விழிக்கிறான் அவனது அன்றாட நடவடிக்கைகள் என்னவானது? மகி அவளின் நிழலைப்போல் எப்போதும் ஒன்றாய் இருந்தான்.


“எனக்கு இது எதுமே புடிக்கல மகி… என்னயக் கேர் பண்ணாத… ப்ளீஸ்..”


“ஏன் பிரியா? இத நான் செய்யாம யார் செய்வாங்க? என்னோட எல்லா சந்தோசத்துலயும் கஷ்டத்துலயும் நீ இருந்திருக்க. இப்ப நான் உன்கூட இருக்கேன். எனக்கு இது எதும் கஷ்டமா தெரியல.”


”ஐயோ மகி.. உனக்கு என்ன சொல்லிப் புரியவைக்கிறது. நீ இப்பிடி பாத்துக்கறதால ரொம்ப கில்ட்டியாகறேன். உனக்கு எல்லா உண்மையும் தெரியும். ஆனா அதப் பத்தி ஒரு வார்த்த கேக்கவும் மாட்ற… உன்ன மாதிரி என்னால இயல்பா இருக்க முடியல மகி…”


“இதுல கில்ட்டியாகறதுக்கு எதுவுமில்ல பிரியா. நீ ஏன் வீணா மனசப் போட்டுக் குழப்பிக்கிற?”


“இல்ல மகி… வெளிப்படையா சொல்லனும்னா மனோவோட இருக்க ரிலேஷன்சிப்பாலதான் இப்பிடி ஆகிடுச்சோன்னு இப்பல்லாம் நெனைக்கிறேன். அத உனக்கு செஞ்ச துரோகமா பாக்கறப்போ அந்த வலியா தாங்கவே முடியல.”


கட்டுப்படுத்த முடியாமல் கரைந்தாள். சலனமின்றி அவளைப் பார்த்தவனுக்கு அவள் மனதின் போராட்டத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.


”உன்னோட ரிலேஷன்சிப் எனக்குத் தெரியும் பிரியா. உங்க ரெண்டுபேரோட சில லெட்டர்ஸ் கூட நான் படிச்சேன். அதுகூட ஒரு க்யூரியாசிட்டியாலதான். உங்களோட ரிலேஷன்சிப் ல எந்த இடத்துலயும் மூணாவதா இன்னொரு மனுஷன் மேல உங்களுக்குப் புகார் இல்ல. உன்னோட இடத்துல இருந்து நீ வெளில வந்துடனும்னு மனோவும் எங்கியும் க்ளைம் பண்ல. மனோவோட உனக்கு இருக்க காதல் வற்றாத அருவின்னா எங்கூட இருக்கற காதல் கடல்னு எனக்கு அப்பவே புரிஞ்சது. உங்களோட ரிலேஷன்சிப்ப ரொம்ப மதிக்கிறேன் பிரியா. ஒரு பொண்ணு ரெண்டு ஆண்கள நேசிக்கிறதும் அதுல நேர்மையா இருக்கறதும் பாவகாரியம் இல்ல. நீ எங்க ரெண்டு பேத்துல யாரையும் ஏமாத்தல. நீ கில்ட்டியாக வேணாம் ப்ளீஸ்.”


ஆதரவாக அவளின் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னபோது அவளுக்கு மனம் இலகுவாகி கண்ணீர் பெருக்கெடுத்தது. வேதனை மறைந்த ஆசுவாசம். தன்னிடம் ரகசியங்களே இல்லையென்றானபோது இனம்புரியாத ஆறுதலை உணர்ந்தாள்.


“நீ இப்போ மனோவ அவாய்ட் பன்றதையும் நான் கவனிச்சுட்டேன் பிரியா. அவனால இதத் தாங்கிக்கவே முடியாது. என்னயவிட உனக்கு அது நல்லாத் தெரியும். அட்லீஸ்ட் கூப்ட்டு பேசி, விஷயத்தச் சொல்லிடு.”


“எனக்கு அவ்ளோ தைரியம் இல்ல மகி. அவன் எல்லாத்துலயும் அதீதமா இருந்தாலும் இன்னும் ஒரு குழந்த மாதிரிதான். நொறுங்கிப் போயிடுவான். நான் அவன் வாழ்க்கையில இருந்து காணாமப் போனவளாவே இருந்துட்டா குறைந்தபட்சம் கடந்த காலத்தோட சந்தோசமான நினைவுகளா இருப்பேன்.”


“இல்ல பிரியா. அவனுக்கு உண்மை தெரியாமப் போனா அவன் வாழ்க்கை முழுக்க உன்னத் தேடிக்கிட்டு இருப்பான். அந்த வலிதான் ரொம்ப கொடூரமா இருக்கும். உனக்கு நான் சொல்லித் தெரியனும்னு இல்ல. டைம் எடுத்துக்கோ. ஆனா அவங்கிட்ட பேசு. இல்லன்னா இந்தப் பிரிவு உன்னய நீயே தண்டிச்சுக்கற மாதிரி ஆகிடும்.”

மகி சொன்னதிலிருந்த யதார்த்தைப் புரிந்துகொண்டவள் மனோவோடு பேசுவதற்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடிவுசெய்தாள். அவனுடான இந்த உறவைத் தொடரமுடியாது, இந்த நிலையிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும்போது மிச்சமிருகும் வாழ்வில் செய்வதற்கு என்னவிருக்கும்? முழுமையாய் தன்னை சரிப்படுத்திக் கொள்ளாமல் அவளால் மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது. மனித மனங்களோடு உரையாடிப் பழகியவளுக்கு இந்த நோய்மைக் காலத்தின் தனிமையில்தான் கைவிடப்பட்டவர்களின் வலி ரத்தமும் சதையுமாய்ப் புரிந்தது. ஒவ்வொரு நாளும் தன் வாழ்வின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கலாமென்பதை அருகிலிருந்து கவனித்து மீள்வதால் உயிர் வாழ்தலின் மீது முன்னை விடவும் கூடுதலான பற்று வந்தது. மனோ அவளது வாழ்வில் முக்கியமானவன், அவனை நினைக்காமல் ஒரு நாளையும் அவளால் கடத்திவிட முடியாது. ஆனால் அவனது அருகாமை இப்போது அச்சத்தையும் தயக்கத்தையும் கொடுத்தது. அவன் அதீதத்தில் கரையும் வலு அவளுக்கில்லை. ஆனால் இன்னொரு முறை அவனை சந்திக்க வேண்டும், சாகும்வரையிலும் எனக்கானவனாக மட்டுமே இருந்து சாகவேண்டுமென அவனிடம் கேட்டுக்கொள்ள வேண்டுமென மனம் யோசித்தாலும் அந்த சந்திப்பிற்கான நாளை உறுதிப்படுத்துவதில் மட்டும் அவளால் தீர்மானமானதொரு முடிவிற்கு வரமுடியவில்லை.

11


”நரகம் என்பது என்ன? அது நேசிக்க இயலாமையின் வாதைதான் என்று இன்னமும் சொல்கிறேன்.”


- தஸ்தாவ்ஸ்கி


சென்று சேரும் திசைதெரியாமல் அலையும் காற்றென அவள் நினைவைச் சுமந்த இடங்களிலெல்லாம் மீண்டும் அலைந்து திரிந்தான். அவள் குரல் கேட்காமல், முகம் பார்க்காமல், என்னவானாளென்கிற மர்மம் விலகாமல் தான் இப்போது சாம்பலாய் அல்லது எலும்புகளாக மட்டும் மிஞ்சிப்போயிருப்பதாய் உணர்ந்தான். வாழ்வதற்கும் சாவதற்கும் இடையில் அவனது ஒவ்வொரு நாட்களும் கடந்தன. அவளில்லாத வெறுமையில் மரணித்து, அவளை நினைத்துக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தில் மீண்டும் பிறப்பெடுத்தான். ஒவ்வொரு நாளும் ஜீவிதம், ஒவ்வொரு நாளும் மரணம். ஏதோவொன்றாக மாறி எந்தச் சுவடுமில்லாமல் கரைந்து போய்விடும் வரம் கிடைத்தால் எத்தனை நன்மை.


பிரியா


நீ எனக்கான வெளிச்சம். எனக்கான பாதை. நீ இல்லாத வெற்றிடத்தில் எனக்கான வெளிச்சமும் இல்லை பாதையுமில்லை. சிறுவர்களால் கைவிடப்பட்டு அனாதையான பனையோலை காற்றாடியைப் போல் ஒவ்வொரு நாளும் நான் மக்கி உதிர்ந்து கொண்டிருக்கிறேன். துகள்களாகி மண்ணோடு கலந்து காணாமல் போவதற்கு முன்பாக உன்னைப் பார்த்துவிட வேண்டும். உன்னிடம் யாதொரு வார்த்தையையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன், உன் முத்தங்களுக்காக யாசகம் கேட்க மாட்டேன். ஆழ்ந்து கவனிக்கும் உன் கண்களைப் பார்க்க வேண்டும், உன் பாதத்தில் இதழ் படாமல் ஒருமுறை முத்தமிட வேண்டும். விடைதெரியாத விலகலின் அவஸ்தையை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. அது கில்லட்டினில் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் தன் மரணத்தைக் கண்டு குறிப்பெழுதி வைத்துவிட்டுச் செல்வதைப் போல் துயர்மிக்கது. வயநாட்டின் செம்பரா முகட்டிலும், லோனாவாலாவிலும், தேவகிரி கோட்டையிலும் இன்னும் நீயும் நானும் சுற்றித் திரிந்த அத்தனை இடங்களிலும் என் மரணக்குறிப்புகளைத்தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். தேவகிரி கோட்டையின் இடுங்கிய சுற்றுப்பாதைக்குள் வெளிச்சமும் காற்றுமில்லாத அந்த ரகசியப் பாதையில் காதலனுக்காக காத்திருந்து மூச்சுவிட முடியாது தவித்த காதலியின் ரத்த சாட்சியாய் இப்போது நானிருக்கிறேன். இது விரகத்திற்கான அழைப்பில்லை பிரியா. இந்த எலும்பும் சதையும் அதைத் தாண்டிய மனமும் உனது அருகாமைக்காக எத்தனை துடிக்கிறதென்பதற்கான சாட்சியங்கள். அவளாவது தன் காதலனைக் கண்டடைந்து ஆவி தீரப் புணர்ந்து அவ்விடத்திலேயே அவனோடு உயிர்விட்டாள். நான் இந்தத் தனிமையில் எங்கோ புழுங்கி சாவதற்குப் பதிலாய் உன் நினைவைச் சுமந்து கொண்டு சூரியனின் வெளிச்சம் படாத சுற்றுப்பாதைக்குள் செத்துவிடத் துடிக்கிறேன். மரணத்திற்குப் பின்பு எனக்கான பாதை சொர்க்கமா நரகமா என்பது தெரியாது, புழுவாய் பூச்சியாய் இன்னொரு மனிதனாய் பிறப்பெடுப்பனோ தெரியாது. ஆனால் இந்த ஜீவன் உனக்கானது. எல்லா மறுமையிலும் உன் காதலை மட்டுமே தேடக் கூடியது. எதுவாக மாறுகிறேனோ அதுவெல்லாம் நீயே…


காமாக்யா தேவியின் தரிசனத்தில் உருகி நின்றவனுக்கு பிரியாவின் கடிதம் நினைவிற்கு வந்தது. அந்த இடத்தின் ஒவ்வொரு அதிர்விலும் இப்போது அவளின் முழுமையை உணர்ந்தான். நினைவில் வந்து செல்லும் உருவமோ சிரிப்போ அல்ல, அசாத்தியமான முழுமை. தன்னுடலின் அத்தனை ரகசியங்களுக்குள்ளும் அவனை விரல் பிடித்து அழைத்துச் சென்று அவன் அதீதத்தின் அகந்தையை அழித்து பெண்மையின் விஸ்தாரத்திற்கு முன்னால் மண்டியிடச் செய்யும் முழுமை. உடல் சிலிர்த்து தீர்த்த நீரள்ளி தலையில் தெளித்துக் கொண்டபோது தன்னையும் மீறி அழுதான். காமாக்யதேவியின் பாதத்தில் கண்ணீர் சிந்தும் ஒரு ஆணை முதல் முறையாய்ப் பார்த்த பெண்கள் வியப்போடு கடந்து சென்றனர்.


இனி எங்கு செல்வதெனத் தெரியாமல் குழம்பி நின்றவனிடம் அந்த செய்தி வந்து சேர்ந்தது. ”உன்னப் பாக்கனும் மனோ. பெங்களூர் வா. இப்ப எந்த விளக்கமும் எங்கிட்ட கேக்காத. எல்லாத்தையும் நேர்ல பேசிக்கலாம். நாம முதல் தடவ மீட் பண்ணின அதே சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் தான். சீக்கிரம் வா. நான் காத்துட்டு இருப்பேன்.” தனக்கான திசை கிடைத்துவிட்டதற்காக மனோ இயற்கைக்கு நன்றி சொன்னான். இந்த வாழ்வை இன்னும் சில காலம் நிறைவோடு வாழ்வதற்கான எல்லா காரணங்களும் இப்போது அவனிடமிருக்கின்றன. நீண்ட நாட்களாய் வெவ்வேறு ஊர்களின் வெயிலையும் மழையையும் கடந்து சுற்றியவனுக்கு அவளுடனான சந்திப்பு கூடுதிரும்புதலை நினைவூட்டியது.

12


“ I will cover you with love when next I see you, with caresses, with ecstasy, I want to gorge you with all the joys of the flesh, so that you faint and die. I want you to be amazed by me..”

- Gustave Flaubert

வெகு உயரத்திலிருந்து இறங்கி தாழப் பறந்த பறவை ஆளற்ற வீதியில் அலைந்து மீண்டும் உயர எழுகிறது. இதுவரைப் பார்த்திராத பிரம்மாண்டம். அதன் உடலில் பூமியை ஊடுருவிச் சென்றுவிடும் வேகம், மீண்டும் உயரப் பறக்கத் துவங்கியபோது முன்னை விடவும் அதீத உயரத்தில். எதைத் தேடி வந்திருக்கும்? ஏன் இத்தனை விலகிச் செல்கிறது? நின்ற இடத்திலிருந்து மேகக் கூட்டங்களுக்குள் ஒரு புள்ளியாய் அலைந்த பறவையையே கவனித்துக் கொண்டிருந்தான். பறவை அவன் கண்ணெட்டும் தூரத்திலிருந்து விலகிவிடாமல் வட்டமடித்துக் கொண்டிருந்தது. பெங்களூரின் பரபரப்பான அதிகாலை சற்றைக்கு முன்னர் துவங்கியிருந்ததால் சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. விமான நிலையத்திலிருந்து அறைக்குச் செல்லும் வழியில் தேநீர் அருந்தவென நின்றிருந்தவனுக்கு இத்தனை நாட்கள் காத்திருப்பை விடவும் அவளிடம் சென்று சேர்வதற்கான இந்த சின்னஞ்சிறிய தொலைவைக் கடப்பது கடும் சிரமமாய் இருந்தது. தேநீரை அவசரமாக அருந்துவிட்டு வாடகை ஊர்தியில் ஏறி பெங்களூர் நகரத்தை நோக்கி விரைந்தவனை எட்டாத உயரத்திலிருந்து பறவையும் தொடர்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது தன்னைத்தான் தொடர்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வண்டியின் கண்ணாடியை இறக்கிப் பார்த்தவனை பொறுமையிழந்த வாகன ஓட்டி ‘ஸார் ஏ.சி போட்றுக்கு விண்டோ க்ளோஸ் பண்ணியே வைங்க’ என அறிவுறுத்த பறவையின் மீதிருந்த இறுதியாய் கவனத்தைக் கலைத்தான்.


பதிலே வராதபோதும் அவளுக்கு எழுதியவை, எழுதி அனுப்பாமல் சேமித்து வைத்தவையென அவனது கணிணியில் குவிந்து கிடக்கும் கடிதங்களில் எத்தனை ஆற்றல். செடியின் அசைவை, ஆற்று நீரின் சிறு அலையோசையை, ஊரின் நள்ளிரவுச் சாரலையென அவளுக்கு எதைத்தான் எழுதவில்லை. ஒவ்வொன்றையும் அவளுக்காக சொல்ல வேண்டுமென நினைக்கும்போதுதான் எழுதுவதற்கான ஆற்றலும் எழுதுவதில் ஒரு வசீகரமும் கூடிவரும். அவனே இல்லாமல் போகுமொரு நாளில் அவள் செவிகள் இவன் குரலைக் கேட்கட்டும், அவள் கண்கள் இவன் சொற்களை வாசிக்கட்டுமென்கிற முனைப்பில் எழுதப்பட்டவை அவ்வளவும். உன்னிடம் சொல்லாத ரகசியமொன்றுமில்லை பிரியா என்கிற கர்வம் அவனுக்குப் போதுமானது. அவன் வாழ்வின் தனித்துவமான ரகசியம் அவள். நரம்புகளுக்கும் குருதிக்கும் உள்ள ரகசிய பிணைப்பைப் போல், காற்றுக்கும் மரத்திற்குமுள்ள ரகசியப் பிணைப்போல், மழைக்கும் கடலுக்குமுள்ள ரகசிய பிணைப்பபோலொரு ரகசியம் அவள்.


அறையில் அவள் வருகைக்காக காத்திருந்தவனுக்கு எங்கிருந்து உரையாடலைத் துவங்குவதென்கிற குழப்பம்? என்னை ஏன் ஒதுக்கினாய் எனக் கேட்பதா? இந்த அலைச்சலை பரிதவிப்பைத் தந்ததற்காக அவளைத் தண்டிப்பதா? குறைந்தபட்சம் அவள் கண் இமைகளிலிருந்து ஒரேயொரு மயிரை எடுத்துத் தரச்சொல்லலாம். அல்லது தனக்குத் தெரிந்த எல்லாக் கெட்ட வார்த்தைகளாலும் அவளைத் திட்டுவதா? விலகிச் செல்ல என்ன காரணம் சொன்னாலும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாது, மரணம் ஒன்றைத் தவிர வேறெந்த நிலையிலும் அவளுடனான தற்காலிக விலகலுக்குக் கூட உடன்படுகிறவனில்லை அவன். அறையில் அவளின் வாசனையை உணர்ந்தான், அவள் அருகாமையின் சூடு விரல்களில் விரவிக் கிடந்தது. ஏன் இத்தனை பித்தேறுகிறது? இதோ இன்னும் சில நிமிடங்களில் திறந்திருக்கும் இந்தக் கதவின் வழியாய் வரத்தான் போகிறாள், ஆனாலும் ஏன் இத்தனை பரபரப்பு. முதல் முறையாய் அக்னியில் விரலைச் சுட்டுக் கொண்டதைப் போலத் துடிப்பும், ஆழ்கடலுக்குள் அமுக்கி வைத்ததைப் போல மூச்சடைப்பும் கலந்து இத்தனை அவஸ்தைக்குள்ளாக்குவது எது? அவள் மீதான மோகமா? எத்தனை தந்திருக்கிறாள். அந்த உடலின் ஒவ்வொரு செல்லிலும் சேமித்திருந்த பெண்மையை பருகத் தந்தவளாயிற்றே. இரவு பகல் பாராமல் அள்ளிப் பருகியுமா அந்தப் பசி தீரவில்லை. அல்லது வயிற்றிலும் அதன் கீழிருப்பதிலும் இல்லாத கொதிப்பு தலையில் விரல்களில் கண்களில் நாசியிலிருக்கிறதே ஏன்? மோகத்தையும் மீறின இந்த தவிப்பின் பெயரென்ன? கண்கள் திறந்திருந்தபோதும் என்னால் ஏன் எதையும் பார்க்க முடியவில்லை? எவ்வளவு நீரருந்தியும் ஏன் நா வறண்டு கிடக்கிறது? பிரியா. நீ வரும் நொடிக்கு முன்பான ஒவ்வொரு நொடியுமே எனக்கு கில்லட்டினின் அவஸ்தைதான். அறைக்குள்ளேயே சுற்றினான். பாதங்களுக்குக் கீழிருந்த நிலம் அத்தனை வலுவானதாய் இல்லாமல் தடுமாறுவதைப் போலிருந்தது, நிலமா? அவனா? தடுமாறுவது யார்? ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டு வீதியைப் பார்த்து நின்றான்.


”மனோ..”


அவள் தான். அந்தக் குரல் தான். உயிரின் அத்தனை கதவுகளையும் திறந்து ஆழச் செல்லும் குரல். அவன் சிந்தையிலிருந்த அத்தனை எண்ணங்களும் சடுதியில் தொலைந்து கண்ணீர் மட்டுமே மிஞ்சியது. வேகமாய்த் திரும்பி அவளை நெருங்கியபோது அங்கு பிரியா இல்லை. இது அவள் தானா? நீ என் பிரியதர்ஷினிதானா? சில நொடிகள்தான் அப்படி தயங்கி கலங்கி நின்றான். அந்தக் கண்கள், எவர் மனதையும் ஆழமாய்ப் பார்க்கும் அந்தக் கண்கள். அவளுக்குள் விழுந்து அவன் தொலைந்துபோன கண்கள். அவளுக்கு மட்டுமேயான அந்த தெய்வீக ஒளி. கொந்தளிப்போடு அவளை அணைத்துக் கொள்ளச் சென்றவனிடமிருந்து மெல்ல விலகி நின்றாள்.


“பேசனும் மனோ.”


அவன் கால்கள் இப்போது தடுமாறவில்லை. அவளைக் கவனித்தான். என்ன இது? தலையில் கூந்தலை மறைத்துச் சுற்றிய ஸ்கார்ஃப், பாதியாய் மெலிந்த உருவம், களையிழந்த முகம், கண்ணைச் சுற்றி அழுத்தமான கருவளையம், என்னவாயிற்று இவளுக்கு? என்னவாயிற்று என் ஜீவநதிக்கு?


“என்னாச்சு பிரியா? ஏன் இப்பிடி ஆகிட்ட?”


அவள் தோள்களை மென்மையை அணைத்து இருக்கையில் அமரவைத்தான். அறையின் குளிரை அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்பதை அவளுடலின் நடுக்கம் பிரதிபலிக்க, குளிர்சாதனத்தை அணைத்தான். அவளுக்கு அருகில் அமர்ந்தான்.


“பிரியா…”


மெளனமாயிருந்தாள். அவனுக்கான சேமித்த சொற்கள் பியோனாவின் கருப்பு வெள்ளைக் கட்டைகளாய் தனக்கான ஸ்வரத்தைத் தேடிக் கொண்டிருந்தது. இங்குதான் இதேபோலொரு நாளில் அவனிடம் முழுமையாய் தன்னை ஒப்புக்கொடுத்தாள். அந்த ஸ்வரத்தை மீட்டெடுத்துவிட்டால் இதோ இத்தனை நாட்கள் விலகியிருந்ததின் அத்தனை காரணத்தையும் அவனிடம் சொல்லிவிடலாம். முக்கியமாய் இது நமக்கான இறுதி சந்திப்பு என்பதை சொல்லிவிட வேண்டும். இரண்டடி தள்ளி அமர்ந்திருந்தபோதிலும் அவனுடலின் வெக்கையை அவளால் இப்போது உணரமுடிகிறது. அவளுக்குத் தெரியும், அவளை நெருங்கும்போது அவன் நெருப்புத் துண்டல்ல, நெருப்பாறு. அவளைத் தவிர வேறு யாராலும் ஆற்றுப்படுத்த முடியாத நெருப்பாறு.


“மனோ… எனக்குத் தெரியும் உன் வாழ்க்கைல நான் எவ்ளோ முக்கியம்னு, ஆனா என்னால பழைய பிரியாவா உங்கிட்ட வரமுடியாது. சொல்லப்போனா நீ எங்கிட்ட இருந்து முழுமையா விலகிப் போயிடறதுதான் என்மேல வெச்சிருக்க அன்புக்கு உபகாரம். செய்வியா மனோ?


”அதத்தவிர வேற என்ன வேணாலும் செய்றேன் பிரியா…”


யோசிக்காமல் பதில் சொன்னான்.


“இந்த சில மாதங்கள கடந்து வர்றதுக்குள்ளயே நான் பைத்தியமாகிட்டேன். நிரந்தரமா பிரிய என்னால முடியாது.”


“டேய் எதுக்காக சொல்றேன்னு புரிஞ்சுக்கோடா… என்னய நல்லாப் பாரு…”


தலையைச் சுற்றியிருந்த ஸ்கார்ஃபை விலக்கினாள். அவன் மனதிலிருந்த பிரியதர்ஷினியின் சித்திரம் இந்த பிரியாவை சடாரென ஏற்றுக் கொள்ள மறுத்தது. வலியில் நா எழாமல் தவித்தான். வார்த்தைகள் தடுமாறின.


“என்ன பிரியா இது? ஏன் இப்டி?”


“செத்துப் பொழச்சு வந்திருக்கேன். ப்ரஸ்ட் கேன்சர் செகேண்ட் ஸ்டேஜ். கீமோ பண்ணதால இப்டி…”


தன்னிடம் எதை மறைத்திருக்கிறாள்? நான் அவளோடு இன்பத்தை மட்டும் பகிர்ந்துகொள்வதற்கான மனிதனா? அவள் வலியில், உயிர்ப் போராட்டத்தில் உடனிருக்க வேண்டிய நேரங்களில் ஏன் முற்றாய் விலக்கினாள்? அவள் மீது எப்போதுமில்லாத ஆத்திரம் பொங்கியது. ஆத்திரத்தில் அவளை பழிக்க முடியாமல் உடைந்து அழுதான். வார்த்தைகள் திரண்டு வராமல் வெகுநேரம் அழுதவனைத் தேற்றவியலாமல் பிரியா வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.


“அழாதடா ப்ளீஸ்.”


முன்னைவிடவும் அவளின் குரல் சன்னமாய் இருந்தது.


”எவ்ளோ பெரிய விஷயத்த மறச்சுட்டல்ல… நான் ஏதோ தப்பு பண்ணிட்டேன் அதனாலதான் நீ விலகிப் போயிட்டன்னு நெனச்சிருக்கனே தவிர ஒருநொடி கூட உனக்கு ஏதாவது ஆகி இருக்குமோன்னு நெனைக்கவே இல்ல. ஏன்னா என் உயிர் இருக்கற வர உனக்கு எதாச்சும் ஆகிடுமோன்னு கூட நினைக்கவும் மாட்டேன். எவ்ளோ ஈசியா என்னயத் தூக்கிப் போட்டுட்டல… நீ என்னோட வாழ்க்கை ல ஏதோ ஒரு பார்ட்லாம் இல்ல பிரியா… என் வாழ்க்கையோட அர்த்தம் …”


அவளிடம் பேச ஏராளமான சொற்களிருந்தாலும் உடலில் ஆற்றல் குறைவாகவே இருந்தது. இவன் அத்தனை எளிதில் அடங்கிவிடுகிறவனில்லை, அரற்றி அழுது போராடுகிறவன் என்பது அவளுக்கும் தெரியும்.


“உனக்கு எப்பிடி சொல்லிப் புரிய வைக்கன்னு தெரியல மனோ.. என் பக்கத்துல வா..”


அவன் மிக மெல்ல அவளை நெருங்க, அவன் தலையை இரு கைகளாலும் ஏந்தி தன் வலது மார்பில் வைத்தாள். முன்பே நொறுங்கிப் போயிருந்தவனுக்கு அவளுடலில் ஒரு மாரில்லை என்கிற உண்மை தெரிந்தபோது தாளா மாட்டாமல் திரும்பவும் அழுதான். அவள் அவனை அனுமதித்தாள். அவளை இறுக அணைத்துக் கொள்வதற்குக் கூட முடியாத இந்த தவிப்பில் உடைந்துபோனவனின் காதுகளில்


“தீரத் தீர முலையூட்டி அந்த நிலைல சாகனுங்கறதுதாண்டா நீ எங்கிட்ட வெளிப்படுத்தின ஒரே ஆச. உன் முன்னால இப்போ நிக்கிறப்போ எனக்கே நான் யாரோ மாதிரி இருக்கு. உங்கூட இருந்தப்போல்லாம் தெரிஞ்சிருக்கும் என்னோட காதல் எத்தனை விஸ்தாரம்னு. இப்போ எல்லாம் ஒடுங்கிப்போன மாதிரி நெனைக்கிறேன். என்னால பழைய பிரியாவா உனக்கான காதல கொடுக்க முடியாது மனோ. அப்பிடி குடுக்காமப் போனா அந்த ஏமாற்றத்துல நான் ரொம்ப நொறுங்கிடுவேன். புரிஞ்சுக்கடா..”


மனோ அவளிடமிருந்து விலகினான். அவளிடமிருக்கும் குழப்பங்கள் எதுவும் இப்போது அவனிடமில்லை.


“எனக்கான உன்னோட காதல்ங்கறது உன்னோட உடல் மட்டுமில்ல பிரியா, நீ என் வாழ்க்கையோட முழுமை. உனக்கு எழுதின லெட்டர்ஸ இன்னொரு தடவ படிச்சுப் பாரு. சராசரி மனுஷனோட உலகத்துல பறவைகள், மரங்கள், மலைகள், கடல்னு எவ்வளவோ இருக்கும், என் உலகத்துல எனக்கு எல்லாத்துலயும் நீ மட்டுந்தான் இருந்த. உன்னைய நெனச்சுட்டு இருக்கறதுலயும், திரும்ப உன்னப் பாத்துடுவேங்கற நம்பிக்கையிலயும் மட்டுந்தான் என்னால உயிர் வாழ முடிஞ்சது….”


“நம்ம உறவு உடலுக்கு வெளில துவங்கினாலும் உடலாலதான் இணஞ்சது மனோ. நாம போன இடங்கள், பார்த்த மனிதர்கள், இது எல்லாத்தப் பத்தின நினைவுகள்லயும் அந்த நாட்கள்ல நாம வெச்சுக்கிட்ட செக்ஸ்தான் தனித்துவமா இருக்கும். எந்த தீண்டலும் முலையூட்டலும் இல்லாம எப்பிடிடா எங்கிட்ட உன்னால பழைய காதலப் பாக்க முடியும்.”


மனோ அவள் ஸ்கார்ஃபை கழுத்தைச் சுற்றிப் போட்டுவிட்டான். கன்னத்தை நிரப்பியிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான்.


“உங்கூட செக்ஸ் வெச்சுக்க மாட்டேன்னு எப்படி சொன்னேன்? … உன்மேல இருக்க மோகம் நீ என்னவா இருந்தாலும் அப்படியே தான் இருக்கும். நாளைக்கே நீயொரு பூனையாவோ, இல்ல ஏதாவதொரு பறவையாவோ மாறினாலும் கூட நானும் அதுவா மாறி உங்கூட மோகிக்கனும்னுதான் நெனப்பேன். உன் உடம்புல இருந்த ஒரு முலை இப்போ இல்லாமப் போனதால உன்மேல எனக்கிருந்த ப்ரேமை இல்லாமப் போயிடாது. உங்கூடதான் நான் ட்ராவல் பண்ணனும், உங்கூடதான் வாழ்க்கையோட எல்லா சாகசத்தையும் பகிர்ந்துக்கனும். நீ இல்லாம என் வாழ்க்கைல எதுவும் இல்ல.”


அவள் காலடியில் அமர்ந்தவன் அவள் பாதத்தை எடுத்து முத்தமிட்டான். இங்குதான் இந்த அறையில்தான் இதேபோலொரு நாளில் முதன்முதலாக இதேபோல் அவள் பாதத்தில் முத்தமிட்டான் என்ற நினைவு வர, அவன் உச்சந்தலையில் பிரியா அழுத்தமாய் முத்தமிட்டாள்.

122 views

Comments


bottom of page