சில வருடங்களுக்குமுன் கல்குதிரையில் வெளியான கடல் கன்னியை காதலித்தவனின் கதை என்னும் சிறுகதையின் வழியாக அதனை எழுதிய ஃபெர்னாண்டோ பெசோவா எனக்கு அறிமுகம். அவருடைய அந்த சிறுகதையைத் தவிர்த்து வேறு எதுவும் தமிழில் மொழிபெயர்க்கப்படாத சூழலில் ஒரு உரையாடலில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் பெசோவாவின் எழுத்துகள் குறித்து நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். கடந்த வருடம் எம்.டி.எம் எழுதிய ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும் என்ற நூலில் பெசோவா குறித்து எழுதிய கவிதை அவரைக் கூடுதலாக அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டியிருந்தது. பெசோவாவின் கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து எம்.டி.எம் தமிழில் மொழிப்யெர்த்திருக்கிறார்.
கவிதைகள் ஒரு மொழியில் அசாத்தியமான படைப்புணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடியவையாய் இருக்கின்றன. புதிய படிமங்களையும் சொற்களையும் கவிஞர்கள்தான் மொழிக்குக் கொடையாய் வழங்குகிறார்கள். உலகின் ரகசியங்களை குறியீடுகளாகவும் படிமங்களாகவும் வெளிப்படுத்தும் கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் நமக்கு வெவ்வேறு தரிசனங்களைத் தரக்கூடியதாக இருக்கிறது. சிட்டுக்குருவியின் சின்னஞ்சிறிய சிறகசைப்பினைக் கவனிக்கையில் கேட்கமுடிகிற படபடப்பு சத்தம் வேறு ஒலிகளை உற்றுக் கவனிப்பதில் கிடைப்பதில்லை. கவிதையில் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையிலான மெளனங்களும் அப்படியான ஒலிகள்தான். வாசிக்கிறவனின் மனதோடு அந்தரங்கமாக உரையாடக்கூடிய அந்த ஒலி, கவிஞன் சிருஷ்டித்த உலகை, அதன் பிரம்மாண்டத்தை பார்க்கக் கற்றுத்தருகிறது. கவிதைகளில் உறையும் காலம் அழிவற்றது. அங்கு வீழ்த்தப்படும் ஒரு மிருகம் என்றென்றைக்கும் எழுவதில்லை, படிமமாக்கக்ப்படும் ஒரு கொண்டாட்டம் அதன் வீரியமிழப்பதில்லை. மரங்களும் செடிகளும் பசுமை மாறாமல் எல்லா காலத்திற்குமிருக்கிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அலகையும் அழிவற்றதாக மொழியில் வடிக்கும் அசாத்தியமான வல்லமை கவிதைகளுக்குண்டு. அந்த வல்லமைதான் இலக்கியத்தின் பிற வடிவங்களிலிருந்து கவிதைகளை ஒரு படி மேலே வைத்துப் பார்க்கச் செய்கிறது.
பெசோவா போர்த்துக்கீசிய இலக்கியத்தில் ஆச்சர்யமானதொரு ஆளுமை. எண்பத்தியொரு புனைபெயர்களில் அவர் தனது படைப்புகளை எழுதியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை அவரது மரணத்திற்குப் பின்பாகவே வெளியாகின. அவர் மரணிக்கும் காலம் வரையிலும் இத்தனை புனைபெயர்களில் எழுதியிருப்பதை ஒருவரும் அறிந்திருக்கவில்லை. இந்த எண்பத்தியொரு பெயர்களில் மூன்று புனைப்பெயர்களில் அந்தப் பெயர்களுக்கான மனிதர்களைக் குறித்த முழுமையான விவரங்களை முழுமையாக உருவாக்கியிருந்தார். ஒருபோதும் பிறக்காத இலக்கிய ஆசிரியன் குறித்து அப்படி ஒருவர் வாழ்ந்தது போன்ற நம்பிக்கைகளை உருவாக்கியது ஆச்சர்யமானது. வாழ்வைப் புனைவிற்கு அருகில் வைத்துப் பார்த்திருக்கும் ஒரு கலைஞனாகவே அவரை மதிப்பிடத் தோன்றுகிறது.
பயணங்களில் கவிதைகளை வாசிப்பது எனக்கு விருப்பமானது. இலங்கைப் பயணத்தில் வாசிக்கவென பெசோவாவின் தேர்ந்தெடுத்தக் கவிதைகள் அடங்கிய ‘இந்த முழு பிரபஞ்சத்தையும்விடச் சற்றே பெரியது’ என்ற கவிதை நூலை எடுத்துச் சென்றிருந்தேன். சிடுக்குகளற்ற மொழி, எளிமையான படிமங்கள் அதிலும் அவரது அசலான பெயரில் எழுதிய கவிதைகள் புனைப்பெயர்களில் எழுதிய கவிதைகளெனத் தனித்தனியாகப் பிரித்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன ஆச்சர்யமென்றால் அசலான பெயரில் எழுதிய கவிதைகளுக்கும் புனைப்பெயர்களில் எழுதிய கவிதைகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாமலிருக்கிறது. ஒரு மனிதன் வெவ்வேறு முகங்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் வெவ்வேறு கலைமனதையும் வெவ்வேறுவிதமாக சிருஷ்டிக்கும் ஆற்றலையும் கொண்டிருப்பது அசாத்தியமானது. இந்தக் கவிதை நூலில் நிறைய நல்ல கவிதைகள் வாசிக்கக் கிடைத்தாலும் ஒரு கவிதை என்னை வெகுவாகப் பாதித்தது. அன்றைய தினம் எறாவூரின் புன்னக்குடாவில் குளித்துவிட்டு ஓட்டமாவடி திரும்பியிருந்தேன். ஓட்டமாவடி பள்ளிவாசலுக்கு உட்பட்ட ஒரு சிறிய ஓய்வெடுக்கும் விடுதியில் இரவு தங்கல். நீண்டநேரம் கடலில் கிடந்ததில் லேசான தலைவலியும் காய்ச்சலுமிருந்ததால் எதையும் யோசிக்காமல் வெறுமனே கட்டிலில் கிடந்தேன். சலிப்பு தட்டி எழுந்து இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்த நின்றபோது ஈரக்காற்று ஆறுதலாய் உடலைத் தழுவிக் கொண்டது. அறைக்கு வெளியே சலனமற்ற ஆறு. கடலில் கலக்கும் ஆராவாரம் ஏதுமில்லாமல் இரவின் அமைதியில் கிடக்க, வெளியே வந்து ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்களை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டு நின்றேன். புத்தகத்தைப் புரட்டி கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கையில் ஒரு கவிதை அந்த தருனத்தில் ஆழமாக என்னைப் பிணைத்துக் கொண்டது.
கடற் பறவைகள் தாழத் தரையருகே பறக்கின்றன.
கடற் பறவைகள் தாழத் தரையருகே பறக்கின்றன
அப்படியென்றால் மழை வரப்போகிறதென்று
சொல்கிறார்கள்
ஆனால் மழை இன்னும் வரவில்லை. இப்போது
தரையருகேத் தாழப்பறக்கும் கடற்பறவைகள்
இருக்கின்றன
அவ்வளவுதான்
அதுபோலவே மகிழ்ச்சி இருக்கையில்
சோகம் வருவதற்கான வழியிலிருக்கிறது
என்று சொல்கிறார்கள்.
ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம்,
ஆனால் அதனாலென்ன?
இன்று மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தால்
அங்கே சோகம் எங்கே பொருந்தியிருக்கிறது?
அது பொருந்தியிருப்பதில்லை. அது
எதிர்காலத்தைச் சேர்ந்தது
அது வரும்போது நான் சோகமாய் இருப்பேன்
இன்று தூயதாகவும் நல்லதாகவும் இருக்கிறது
எதிர்காலம் இன்றில் இருப்பதில்லை
நமக்கும் அதற்கும் இடையில்
ஒரு சுவர் இருக்கிறது
இருப்பில் போதையுற்றவனாய்
உன்னிடமிருப்பதை அனுபவி
எதிர்காலத்தை அதன் இடத்தில் விட்டுவிடு
கவிதைகள், மது, பெண்கள், லட்சியங்கள்
எது உனக்குத் தேவையென்றாலும்,
அது அதுவாக இருக்குமென்றால்
அது நீ அனுபவிப்பதற்காகவே.
நாளை நாளை நாளை .... நாளை
நாளை என்ன கொண்டு வருகிறதோ
அதுவாக இருக்கட்டும்
இப்போதைக்கு
நீ உன்னை ஒப்புக்கொடு
அறிவற்றவனாய் இரு,
நம்பு
தரைக்கு அருகே இரு
ஆனால் பற
கடற்பறவையைப் போல
முதல் வாசிப்பில் ஒருவனுக்கு முழுக்கவிதையும் ஒரு போதனையாகத் தோன்றலாம், கவிதைகளில் போதனைகள் இருக்கக் கூடாதென விதிகளெதுவுமில்லை. கவிதையின் முழுமை அதனை வாசிக்கிறவன் மனதில் நிகழ்த்திப் பார்ப்பதிலிருக்கிறது. அந்தரங்கமாக ஒருவனை வசீகரித்துச் சிந்திக்கச் செய்யவும் தான் சிந்திப்பது குறித்து அல்லது உணர்ந்து கொண்டது குறித்து தெளிவான சித்திரங்களை உருவாக்கிக் கொள்ளச் செய்வதுமே கவிதையின் வெற்றி. எல்லா காலத்திலுமே தன்னை உணர்தல் அல்லது இந்தக் கனத்தில் வாழ்தல் என்பதை கலைஞன் சமூகத்திற்கு வலியுறுத்தி வருகிறான் என்றாலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பாதைகளையும் படிமங்களையும் தருகிறார்கள். ஒரே சொல் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு அர்த்தங்களைத் தருவதுபோல் ஒரே கருத்து வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமான படிப்பினைகளைத் தரவல்லது. இந்தக் கவிதையை அவர் தனது சொந்தப் பெயரில் எழுதியிருக்கிறார். பெசோவாவின் தனிப்பட்ட ஆளுமையை இந்தக் கவிதையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இத்தனை புனைப்பெயர்களுக்கு அப்பால் ஒரு கலைஞனாக அவரது தெரிவு என்னவென்பது குறித்து நமக்கு சிறியதொரு புரிதல் கிடைக்கிறது.
コメント