top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

ஒரு ராஜா வந்தாராம்.

( சிறுகதையாளனின் வாசிப்பு குறிப்புகளில் இருந்து.)


எப்போது எழுதத் துவங்கினோம் என்கிற கேள்விக்கு ஒருவருக்கு சொல்வதற்கு தெளிவானதொரு தருணமிருக்கிறதைப் போல், எப்போது வாசிக்கத் துவங்கினோம் என்கிற கேள்விக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. பஷீரிடம் ஒரு முறை எது உங்களை எழுத வைத்தது? என்று கேட்டபோது யோசிக்காமல் அவர் ‘பசி’ என்று சொன்னது மாதிரிதான், என்னை வாசிக்க வைத்ததும் பசியாக இருந்தது. ஆதரவற்றோருக்கான விடுதியில் வார இறுதி நாளில் நடைபெறும் பைபிள் வகுப்பிற்கு ஒழுங்காக செல்கிறவர்களுக்கும் வசனங்களை தெளிவாக ஒப்புவிக்கிறவர்களுக்கும் அன்பளிப்பாய் தரப்படுகிற க்ரீம் பன் மட்டுமே அன்றைய நாளில் தேவ அப்பம். ஆக அந்த பன்னுக்காக பைபிளை வாசித்ததில் துவங்கியது வாசிப்பு. கதை சொல்லவும் கதை கேட்கவும் அடியாழத்தில் யாருமறியாமல் விதைகளைத் தூவியது ஜீசஸும், ரோஸி ஆண்ட்டியும் தான். அவள் சொன்ன கதைகளின் வழியாகவே கதை என்னும் இந்த தனித்த உலகின் மீதான எல்லா பைத்தியக்காரத்தனங்களும் துவங்கியது. எழுத்தாளனாக வேண்டுமென்கிற எளிய விருப்பம் தலை தூக்கின நாளில் எல்லோரையும் போல் கவிதை எழுதவே விளைந்தேன் என்றாலும் அது எனக்கான வடிவமில்லை என்கிற தெளிவு பிறக்க மிகச் சில மாதங்களே போதுமானதாய் இருந்தது. மற்ற வடிவங்களை விட ஒரு மொழியில் மேலதிகமான பரீட்சார்த்த முயற்சிகளை செய்து பார்க்க ஏதுவானதாய் என்னளவில் சிறுகதைகளையே நினைக்கிறேன்.
இலக்கிய வாசிப்பை நோக்கி வரும் பெரும்பாலான இளம் வாசகர்கள் தமிழில் முதலில் சென்றடைவது ஜெயகாந்தனிடமே. இன்னொரு புறம் இணையத்திலிருந்து இலக்கியத்திற்கென வாசிப்புப் பழக்கம் அதிகமும் மேலோட்டமானதாய் ஆகிவிட்டபடியில் சுஜாதாவிடமிருந்தே கடந்த பத்தாண்டுகளில் வாசிக்க வருகிற இளைஞர்கல் துவங்குகின்றனர். இரண்டாயிரத்தின் துவக்கம் வரையிலும் இலக்கியத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் ஒரு வகையில் அதிர்ஸ்டசாலிகள். மொழி குறித்தான முந்தைய தலைமுறையுடன் ஆரோக்கியமான உரையாடல்கள் அவர்களுக்கு சாத்தியமானது போல் சமகாலத்தில் நடப்பது குறைவு. ஒரு வகையில் வாசிப்பிற்கு பழகிய மூத்தவர்களிடமிருந்துதான் புத்தகங்கள் அறிமுகமாகின. இலக்கியப் புத்தகம் வாசிப்பது அனாவசியமானதென நம்பும் ஒரு சூழலிலிருந்து வாசிப்பை நோக்கி நகர்ந்த ஒரு இளைஞனுக்குள்ளிருக்கும் உலகை மாற்ற முனையும் எல்லா லட்சிய வேட்கைகளும் அன்றைய நாளில் எனக்குமிருந்தது. வாழ்க்கை லட்சியங்களைச் சார்ந்திருக்க வேண்டுமென்னும் ஆவேசமிக்க உணர்வுகளோடு அக வாழ்வின் பிரச்சனைகள் அவ்வளவிற்குமான தீர்வுகளைத் தேடி ஜெயகாந்தனின் பக்கமே கரையொதுங்கினேன். அன்றைய தினம் ஊரில் புத்தகம் வாசிக்கும் பழக்கமிருந்த கொஞ்சமே கொஞ்சமான ஆட்களும் அவரைத்தான் உதாரணமாய் காட்டினார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் சொற்கள் வழியாகவே ஜெயகாந்தன் மாபெரும் உயரமாய் கட்டமைக்கப்பட்டிருந்தார். அவர் கதைகளை வாசிக்கத் துவங்கிய நாளில் அப்படியானதொரு உணர்வெழுச்சிகள் எழாமலும் இல்லை. ஆனால் அந்த அதீத உணர்வெழுச்சிகளுக்குள் ஒருவனை தேக்கி வைப்பதல்ல வாசிப்பு, வண்ணநிலவனையும், பஷீரையும் ஒரே சமயத்தில் சென்றடைந்த போது வாழ்வின் இருவேறு எல்லைகளைக் கண்டுகொண்ட பதட்டம். ஒருவனை நெகிழ்ச்சியூட்டி அல்லது அதீத உணர்வெழுச்சிக்கு ஆட்படுத்தி சுயமாக சிந்திக்கவிடாமல் திருப்தியடைச் செய்வதல்ல, வாசிக்கிறவனை தொந்தரவு செய்யவேண்டும். நல்ல எழுத்திற்கான அடையாளம் அதுதான்.
ஒரு கதையையோ நாவலையோ வாசித்து திருப்தியடைந்துவிடும் வாசகன் அந்தக் கதையிலிருந்து கற்றுக் கொள்ள எதுவுமில்லை. கலை தொந்தரவிற்குள்ளான ஒரு மனதிலிருந்து வெளியேறும் நதி, அது தான் கடக்கிற எல்லாப் பாதைகளையும் ஏதோவொரு வகையில் தொந்தரவு செய்தே ஆகவேண்டும். வண்ணநிலவனின் கதைகளும் பஷீரின் கதைகளும் அப்படியான விளைவுகளைத்தான் எனக்குள் நிகழ்த்தின. தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சியில் கரிசல் நிலக் கதைகளுக்கும் கதை சொல்லிகளுக்கும் மற்ற எல்லோரையும் விட கூடுதலான பங்குண்டு. நடுத்தர வர்க்க வாழ்க்கை முறை, அது சார்ந்த வறுமை என்று சுற்றிக் கொண்டிருந்த கதையுலகிற்குள் அத்தனை காலம் பதிவு செய்யப்படாத எளிய மனிதர்களின் கதையை அவர்களின் ஆதார மொழியோடு பதிவு செய்த கதைகள் தான் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் உருவாகக் காரணமாயிருந்தது. அந்த வகையில் வண்ணநிலவனின் எஸ்தரும், பலாப்பழமும், இன்று வரையிலும் வேறு யாருமே அணுகி எழுத முடியாத கதைகளாகவே தனித்துத் தெரிகின்றன. எளிய சொற்களில் கதை சொல்வதின் தனித்துவமானதொரு நுட்பம் அவருக்குண்டு. அவருடைய பாம்பும் பிடாரனும் கதை அப்படியானதொன்று. வேஷங் களைத்துவிட்டுப் பார்க்கையில் நாம் ஒவ்வொருவருமே இயலாமைகளோடும் குரூரத்திற்குப் பழக்கமானவர்களாகவும் தான் இருக்கிறோமென்பதை ஆழமாகப் பேசும் கதை. மனித உறவுகள் குறித்தான அவரின் புரிதல்கள் முன்முடிவுகளோ தீர்மானங்களோ இல்லாதவை. வாழ்க்கை பல சமயங்களில் பெருந் துரோகங்களை மறக்கச் செய்துவிடுகிற அளவிற்கு சின்ன சின்ன ஏமாற்றங்களை மறக்கச் செய்வதில்லை என்னும் பேருண்மையை அவரது கதைகள் மறைமுகமாகப் பேசியபடியே இருக்கின்றன. இன்னும் பல காலத்திற்குப் பின்னால் வரும் வாசகனுக்கும் வண்ணநிலவன் தவிர்க்கவே கூடாத முன்னோடிதான்.வண்ணநிலவனின் கதைகளும் பஷீரின் கதைகளும் ஒரு கோட்டின் இரு எல்லைகள். பஷீரும் வண்ணநிலவனைப் போல் வேறு யாரும் கதைகளாக எழுதாத மனிதர்களின் கதைகளைத்தான் எழுதுகிறார், ஆனால் துயரங்கள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் ஒரு வாசகன் எதிர்பாராத பகடியோடு எதிர்கொள்வதால் அந்தக் கதைகள் காலம் கடந்தவையாக நிற்கின்றன. நாடோடி ஒருவன் வேறு எவருக்குமே கிடைக்கப்பெறாத தமது அனுபவங்களில் இருந்து சுவாரஸ்யமானவைகளை எல்லாம் கதையாய்ச் சொல்வது போல் பஷீரின் கதைகளில் வரும் பஷீரின் நிழல் அவரது ஆன்ம சாட்சி. மூன்று சீட்டுக்காரர்களையும், ஒன்றும் ஒன்றும் சேர்ந்தா பெரிய ஒன்று என நம்பும் குழந்தைகளையும் பல சமயங்களில் பஷீராகவே பார்க்க முடிவதற்கு காரணம் அவரது பிற கதைகளில் வரும் மேட்னஸ் தான். அவரது கதைகளின் பலம் அந்தக் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களின் மேட்னஸ்தான், உண்மையில் அந்த மேட்னஸ் பஷீருனுடையது. கதைகளைத் தாண்டி எழுத்தாளனாக என் வாழ்க்கை முறையையும் நான் பஷீரை பின்பற்றியே இருக்க விரும்புகிறேன். ( யுவபுரஸ்கார் விருது பெற்ற மேடையில் அந்த விருதை அவருக்கே சமர்ப்பனமும் செய்தேன்.)


நாம் ஒருவகையில் நம் முன்னோடிகளிடமிருந்துதான் உருவாகிறோம். ஒவ்வொரு காலகடத்திலும் நமது கதைகளில் நிகழும் மாற்றங்களுக்கு அவர்களைத் தொடர்ந்து வாசிப்பதுதான் முக்கியமான காரணம். கு.அழகிரிசாமி, கி.ராஜநாரயணன், இராசேந்திர சோழன், வண்ணநிலவன், ஜி.நாகராஜன், தி.ஜானகிராமன், தஞ்சை ப்ரகாஷ், கோணங்கி, நாஞ்சில் நாடன், திலீப் குமார், ப்ரேம் ரமேஷ், சாரு நிவேதிதா என தமிழில் சிறுகதைகளுக்கான முன்னோடிகளாய் நான் கொண்டிருப்பது இவர்களைத்தான். புதுமைப்பித்தன், மெளனி, பிரமிள், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், வண்ணதாசன், கு.ப.ரா, எம்.வி.வெங்கட்ராம், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், என நான் கொண்டாடும் இன்னொரு வரிசை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் தான். இவர்களின் நிறைய கதைகளை நான் மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஆனால் என் பாணி எழுத்து, அல்லது நான் நான் தொடர விரும்புகிற கதையுலகம் முன்பு நான் என் முன்னோடிகளாகச் சொன்னவர்களின் கதையுலகம் தான். அந்த உலகிற்குள்ளிருந்து என் குரல் ஒலிக்கும் போது அதன் அசல் தன்மைகளை என்னால் எளிதில் இனங்கண்டு கொள்ளமுடிகிறது. தமிழில் கதை சொல்லிகள் தனித்துக் கிடக்க விதிக்கப்பட்டவர்கள். கவிஞர்களுக்கு இருக்கும் கூட்டைப்போல் புனைவெழுத்தாளனுக்குகூட்டு கிட்டுவதில்லை. கிடைக்கும் ஒரு சில நட்பும் பெரும்பாலும் கூடா நட்பு கேடு தரும் கதைதான். இதற்கெல்லாம் அப்பால் தனக்குள்ளிருக்கும் உதிரத்தின் ஒவ்வொரு துளிக்குள்ளிருந்தும் வாழ்வின் அசாத்திய தருணங்களை கதைகளாக்கிப் பார்க்கத் துடிப்பதை ஒரு கதை சொல்லியால் ஒருபோதும் தவிர்க்கமுடியாது. கதைகளாலானது அவனுடல். அதனாலேயே நல்ல கதைகளுக்கான காலமென்பது எல்லையற்றதாக இருக்கிறது. அது, சமயங்களில் எழுதியவனின் பெயர் மறந்து போனாலும் அழியாது நிலைத்திருக்கக் கூடியது. கரிசல் நிலம் நமக்குத் தந்த மகத்தான கதை சொல்லிகளில் கி.ராவும் கு.அழகிரிசாமியும் முதன்மையானவர்கள். கி.ராவின் மொழி முழுக்க முழுக்க கரிசல் வட்டார வழக்கென்றால் கு.அழகிரிசாமியின் மொழி எளிய கவிதைகளால் பின்னப்பட்டது. இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் தான். ஆனால் இருவரின் உலகமும் அடிப்படையில் வேறு வேறானதாக இருக்கிறது. குழந்தைகளுக்கு வால்ட் விட்மனின் புத்தகத்தை கொடுக்க வேண்டுமென நினைப்பது கு.அழகிரிசாமியின் மனம். நாம் மறந்து போன ஒரு காலகட்டத்தை இளமையோடு பதிவு செய்திருக்கும் இவரது கதைகளில் அந்த இளமை இப்பொழுது வாசிக்கும் பொழுதும் அப்படியே இருக்கிறது. அழகிரிசாமியின் கதைகளை பதிணெட்டு வயதில் வாசித்தது. அதன் பிறகு இப்பொழுது திரும்ப வாசிக்கையில் முன்னை விடவும் அதீத இளமையுடன் அந்தக் கதைகளிருக்கின்றன. கதை சொல்லல் முறையில் எளிமை எத்தனை அத்யாவசியமானதென்பதை அழுத்தமாக உணர்த்துகின்றன.

பெண்களை அதிகமாக எழுதும் எழுத்தாளனின் கதைகள் தான் காலம் கடந்து நிற்பவையாய் இருக்கின்றன. இவரின் கதைகளும் தனித்துத் தெரிவது அந்த கதைகளில் வரும் பெண்களால் தான். கு.பா.ரா தன் கதைகளில் பெண்களுக்குள்ளிருக்கும் சில வினோத குணங்களை பதிவு செய்ததைப் போல் அழகிரிசாமி அப்பெண்களின் யதார்த்தங்களை சொல்கிறார். கி.ரா உலகின் மிகச் சிறந்த எந்த எழுத்தாளருக்கும் நிகரானதொரு கதை சொல்லி. அவருடையதில் சுமாரானவை என்று ஒரு சில கதைகளை மட்டுந்தான் சொல்ல முடியும். ஒரு நூறு வருட மனித வாழ்வின் மாற்றங்களுக்குமான சாட்சியமாய் அந்தக் கதைகளை எடுத்துக் கொண்டோமானால் நம்மிலிருந்து எதெல்லாம் தொலைந்து போயிருக்கிறதென்பது புரியும். கதவு, கன்னிமை, கோமதி மாதிரியான கதைகள் நமக்குள் ஏற்படுத்தும் வாழ்வு குறித்தான புரிதல்கள் விசாலமானது. கரிசல் காட்டு சம்சாரிகளின் வாழ்வையும், களவுக்கு வருகிறவர்களிடம் கூட அவர்கள் காட்டும் கரிசனத்தையும் கிராமிய வாழ்வின் அறமென அழுத்தமாகப் வேறு யாரல் பேசமுடியும்? நிலம் குறித்து எழுதுதல் மைய நீரோட்டத்தில் சேராத வகை என்றாகிவிட்ட இன்றைய சூழலில் கால்நடைகளின் இருப்பும் இல்லாமல் வறண்டு போயிருக்கும் சமகால கரிசல் நிலத்தின் கதையைச் சொல்ல அவரையல்லாது வேறு யாரை பின் தொடரமுடியும்?ஒரு கதையைத் துவங்கும் போது அதன் ஒவ்வொரு பத்தியை எழுதி முடித்த பிறகும் அதன் வாக்கியங்களைக் கவனமாக வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. ஒவ்வொரு சொல்லும் கதையில் முக்கியத்துவமானதே என்கிற அக்கறை திலீப் குமாரின் கதைகளை வாசிக்கிற போதெல்லாம் தோன்றும். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களைப் போல் அவர் எழுதியதும் நடுத்தர வர்க்கத்து சிரமங்களையும், துயரையும் தான். ஆனால் அவர் அதனை நோக்கிய விதம் வேறு மாதிரியானது. முதுமையை, மரணத்தை, வாழ்விற்காக மனிதன் செய்யும் சின்னத்தனங்களை எல்லாம் தயவு தாட்சன்யமில்லாமல் கேலி செய்யக் கூடியவை. வந்தேறிகளாக மட்டுமே இன்றளவும் பார்க்கப்படும் குஜாராத்திகளின் வாழ்வையும் ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்திற்கு இடம்பெயர்ந்து இங்குமில்லாமல் அங்குமில்லாமல் அலைக்கழிக்கப்பட்டதொரு வாழ்வியல் முறைக்குள் சிக்கிக் கொண்டு அவர்கள் படும் தவிப்பை தொடர்ந்து தனது கதைகளுக்குள் பேசியிருக்கிறார். கொஞ்சமே கொஞ்சமாக கதைகளை எழுதியிருக்கிற போதும் அவற்றில் ஒவ்வொன்றுமே தனித்துவமானவை தான். கவிதைகளை வாசிப்பதைப் போல் மயக்கம் தரக்கூடியது அவரின் கதைமொழி, ஒரு கதையை எத்தனை சுவாரஸ்யமாக சொல்லமுடியுமென்பதற்கு தமிழில் மிகச் சிலரை மட்டுமே நாம் உதாரணமாக சொல்லமுடியும். அதில் திலீப்குமார் முக்கியமானவர். என் கதைகளில் குஜாராத்திகள் குறித்தும், மலையாளிகள், வடகிழக்கு பகுதி மக்கள் குறித்து தொடர்ந்து நான் பதிவு செய்வதற்கு அடிப்படையில் திலீப்குமாரின் கதைகளே முக்கியமான தூண்டுதல்கள். 2004 ஆம் ஆண்டு ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன், அதற்கு அவர் எழுதிய பதில் கடிதத்தின் வழியாகத்தான் எனக்கு ஆ.மாதவனின் எழுத்துக்கள் அறிமுகமாகின. திலீப் குமாரின் கதைகள் எத்தனை நுட்பமானவையோ அதேயளவிற்கு நுட்பமானவை ஆ.மாதவனின் கதைகளும். முந்திரிப் பருப்புகளை கொட்டி வைத்தாற் போலிருந்தது வாயைப் பிளந்து விழுந்து கிடந்த பாச்சியின் பற்கள் எனத் துவங்கும் பாச்சி செத்துப் போனாள் என்னும் கதையை இப்போதும் கூட என்னால் மனப்பாடமாக சொல்ல முடியும். கடை வீதிகளில் உலவும் மனிதர்களுக்கேயான விட்டேத்தியான குணத்தை அவரது கதாப்பாத்திரங்களுக்குள் பார்க்க முடியும். இன்றைக்கும் கூட ஆ.மாதவனின் கதைகளை ஒட்டிய அதே சாயலுடைய வேறு சில எழுத்தாளர்களின் கதைகளைக் காண முடிகிறது. ஆனால் அவர் இன்றளவும் பெரிதாக கொண்டாடப்படாமல் போனது நம் துரதிர்ஸ்டமே.


என் கதைகளில் வரும் மதுரை நகரமும் அதன் மனிதர்களும் ஜி,நாகராஜனுடைய கதைகளின் நீட்சிதான். ஒரு நகரம் குறித்தான ஒவ்வொரு மனிதனின் பார்வையும் வெவ்வேறானது. நமது புறப்பார்வைக்குப் புலப்படும் மனிதர்களைக் கொண்டு நாம் உருவகித்துக் கொள்ளுவதில் கொஞ்சமே கொஞ்சமாகத்தான் உண்மை இருக்கிறது. நாம் பார்க்கவே விரும்பாத சில பக்கங்கள் ஒவ்வொரு நகரத்திற்கும் உண்டு. தஸ்தாவ்ஸ்கியின் லோயர் டெப்த்ஸை அந்தக் காலகட்டத்தில் இந்த உலகம் அருவருப்போடுதான் எதிர்கொண்டது, ஆனால் அந்த காலகட்டத்தின் போலித்தனங்கள் பகட்டுகள் அவ்வளவிற்கும் பின்னாலிருந்த இன்னொரு உலகிற்கான இன்றளவிலான சாட்சியம் அது. Eric partridge தொகுத்த dictionary of the underworld என்ற புத்தகம் உலகம் முழுக்க இருக்கும் கடத்தல்காரர்கள், கொலைக்காரர்களென வெவ்வேறான குற்றம் சம்பந்தப்பட்டவர்களின் உலகிற்கான கலைச் சொல் அகராதி. பல வருடங்கள் உழைப்பில் உருவான அந்த நூலை இன்றளவும் உலகம் முழுக்கவிருக்கும் நிறைய ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் பாதுகாத்து பயன்படுத்தி வருகிறார்கள். நம் சமூகம் குற்றங்களின் உலகை எப்பொழுதும் அருவருப்பாக பார்ப்பதினாலேயே குற்றங்களுக்கு அதிகம் பலியாக நேர்கிறது. உப்புநாய்கள் நாவலை வாசித்துவிட்டு ஒரு பேராசிரியர், “இதையெல்லாம் எதுக்கு எழுதற? எழுதி என்ன கிழிச்சிடப் போற?” என ஆவேசமாகக் கேட்டார். ”எதையாவது கிழிக்கத்தான் எழுத வேண்டுமா?” என நான் கேட்ட எளிய சந்தேகத்திற்கு பதிலளிக்க விருப்பமற்றவராய் பேச்சை முடித்துக் கொண்டார். ஆக நமது மனங்கள் தூய்மைவாதத்தால் நிரப்பப்பட்டவை. இந்தத் தூய்மை வாதங்களை தொந்தரவு செய்பவைதான் ஜி.நாகராஜனின் கதைகள். கொஞ்சம் ரொமாண்ட்டிசைஸ் செய்யப்பட்ட கதைகளாக இருந்தாலுமே கூட, அவரின் கதைகள் அவ்வளவும் முக்கியமானவையே. ‘செப்டம்பர் மாதத்தின் ஸ்பானியத் தோழியென நான் எழுதிய ஒரு சிறுகதைக்கும் ஜி.நாகராஜனின் டெர்லின் ஷர்ட் கதைக்கும் தொடர்பில்லாமல் இல்லை. முன்னோடிகளிடமிருந்து நமக்கான கதையுலகை கண்டடைவது இப்படியாகத்தான் இருக்கிறது.


இராசேந்திர சோழன், நாஞ்சில் நாடன் இவர்களின் சிறுகதைகளில் நாஞ்சில் நாடன் குறித்து இங்கு அதிகம் பேசப்பட்டிருந்தாலும் அவரது சிறுகதைகள் இன்னும் போதிய அளவிற்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இராசேந்திர சோழன் குறித்து யாரும் உரையாடவே தயாராய் இல்லை என்பது அதைவிடவும் துயரம். நாஞ்சிலின் கதையுலகம் பிரத்யேகமானது. நாட்டார் வழிபாடுகள் அதுசார்ந்த வழக்கங்கள் மனிதர்களுக்குள் இருக்கும் வாழ்க்கை குறித்த அச்சம் என எப்போதும் வாசிக்கிறவனை அந்தரங்கமாக மயக்கக் கூடியவை. தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் தொகுப்பின் கதைகளை எப்போது படித்தாலும் ஒரு அதீத பரவசத்தை உணரமுடியும். மனிதர்களுக்குள் இருக்கும் தேவையற்ற குற்றவுணர்ச்சிகளை நுட்பமாக விவரிக்கக் கூடிய திறன் அவர் கதைகளுக்குண்டு. இராசேந்திர சோழனின் புற்றிலுரையும் பாம்புகள் சிறுகதையும் சிறகுகள் முளைத்தது குறுநாவலும் என்னை கதை எழுதத் தூண்டியதில் முக்கியமான ஆக்கங்கள். அந்த வட்டார மொழியும், எழுத்திலிருந்த தீவிரமும் அலாதியானது. இதையெல்லாம் ஒரு கதையில் நாம் உரையாட முடியுமென்கிற நம்பிக்கையை எனக்களித்தவர்களில் இவரும் ஒருவர். சிறகுகள் முளைத்தது என்னும் குறுநாவல் இன்றளவும் என்னை அதிகம் தொந்தரவு செய்தபடிதான் இருக்கிறது. அதுமாதிரியானதொரு கதையை எழுத முடியவில்லையே என தவித்தபடியே இருக்கிறேன். நல்ல கதை எழுதிவிட்டதாக தோன்றும் தருணங்களில் இந்த குறுநாவல் நினைவிற்கு வந்தால் அடுத்த நிமிடம் அந்த கர்வம் மொத்தமாய் அழிந்து போகும். இதைத் தாண்டி நம்மால் ஒரு கதையை என்றாவது ஒருநாள் எழுத முடியுமா என்பதே சந்தேகமாய் இருக்கிறது.

கோணங்கியின் முதல் மூன்று சிறுகதைத் தொகுப்புகளில் இருக்கும் பெரும்பாலான கதைகளை என்னால் மனப்பாடமாக சொல்ல முடியும். உரைநடையை அவரளவிற்கு கவித்துவமாக தமிழில் எழுதியவர்கள் இருக்க முடியாது. எரியும் சமவெளி, பெட்ரோ ஃபரோமா என்னும் இரண்டு நூல்களை மட்டுமே எழுதிய யுவான் ருல்ஃபோ இன்றளவும் உலகம் முழுக்க கொண்டாட்டப்படுகிறார். ருல்ஃபோவின் ஆவிதான் அந்தக் கதைகளை கோணங்கியின் வழியாய் எழுதிக் கொண்டிருக்கிறதோ எனத் தோன்றும். ( அவரது மொழியில் இப்படித்தான் அவரைக் குறிப்பிட முடியும்/) எரியும் சமவெளித் தொகுப்பில் வாரும் கதைகளில் இழந்த நிலத்தின் அடையாளங்களையும், மனிதர்கள் வாழ்வின் பொருட்டு இடம்பெயர்ந்த பின் கைவிடப்பட்ட விலங்குகள் நிலங்கள் அவ்வளவிலும் பெருகி வழியும் மூர்க்கமான துயரமும் கோனங்கியின் கதைகளில் உண்டு. கொல்லனின் ஆறு பெண்மக்கள், கோப்பம்ம்மாள், மதினிமார் கதை, கோப்பம்மாள் போன்ற கதைகளை உலகின் வேறு எந்த மொழி எழுத்தாளனும் எழுதிவிட முடியாதுதான். கரிசல் நிலக் கதைகளின் துவக்கமும் வளர்ச்சியும் கி.ராவும், கு.அழகிரிசாமி என்றால் அதன் உச்சம் கோணங்கி. இவர்கள் ஒவ்வொருவரின் அளவிற்கும் ரமேஷ் பிரேமின் கதைகளும் என்னை ஆழமாக பாதித்தவை தான். அவர்களை கதை சொல்லும் மாயவித்தைக் காரர்கள் என்றுதான் குறிப்பிடத் தோன்றுகிறது. முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன, குருவிக்கார சீமாட்டி, பரதேசி என அவர்களின் சிறுகதைத் தொகுப்புகளும் கனவில் பெய்த மழை பற்றிய இசை குறிப்புகள் என்னும் குறுநாவல் தொகுப்பும் நான் பலமுறை வாசித்தவை. ஒரு புனைவிற்கு இருக்கும் அதீத மயக்கத்தை தரும் இவர்களது கதைகளின் உலகம் பிரத்யேகமானது. வரலாற்றையும் , வழிபாட்டையும் புனைவின் வழியாய் உரையாடலுக்கு எடுத்து வந்தவர்களின் இவர்கள் முக்கியமானவர்கள். தமிழில் ஒவ்வொரு எழுத்தாளரையும் யாராவது இன்னொரு எழுத்தாளரோடு நாம் ஒப்பிட முடியும், பிரேம் ரமேஷை நாம் அவர்களைத் தவிர்த்து எவரோடும் ஒப்பிட முடியாது. எனது சுப்பு, யானை, இருளில் தொலைந்து போனவன் என பல கதைகளில் இவர்களின் தாக்கமுண்டு. உண்மையில் அதை விரும்பிச் செய்கிறேன். சமீபத்தில் எழுதிய ஹெக்கம்மா கதையிலும் கூட குருவிக்கார சீமாட்டியின் சாயலுண்டு. முன்னோடிகளின் மிகச் சிறந்த ஆக்கங்கள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஒரு புதிய கதையுலகின் பக்கமாய் நகர்த்தியபடியே தான் இருக்கிறது.

2007 ம் வருடத்திலிருந்து தஞ்சை ப்ரகாஷ் குறித்து வெவ்வேறு இடங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ப்ரகாஷை ஒரு பாத்திரமாக்கி கதை எழுதுமளவிற்கு ப்ரகாஷ் என் ஆதர்ஷம். இன்றைக்கு அவரை கொண்டாடுகிறவர்கள் ஒரு பக்கமாகவும் மறுக்கிறவர்கள் மறுபக்கமாகவும் இருந்தாலும் வாசிக்காமல் தவிர்க்க முடியாது என்பதுதான் நிஜம். என் வாழ்வின் சொல்ல முடியாத பக்கங்களை கதைகளாக எழுதியதாலேயே அவர் மீது அபரிமிதமான நேசம் பிறக்கிறது. கடைசிக்கட்டி மாம்பலம், அங்கிள், பொறாஷோக்கு, அங்குசம் என அவர் கதைகள் ஒவ்வொன்றிலும் எனது வாழ்வின் சாயலைப் பார்க்கிறேன். நம் வாழ்வை நமது முன்னோடியின் புனைவின் வழியாக பார்க்க முடிவது அதிர்ஷ்டமல்லாமல் வேறென்ன? அசோகமித்திரனின் புலிக்கலைஞன், பறவை வேட்டை, இன்ஸ்பெக்டர் செண்பகராமன் என சென்னை என்னும் இப்பெருநகரின் இன்றைக்கு வரைக்குமான சாட்சியமிக்க கதைகளை ஒருவன் வாசிக்காமல் உள்வாங்காமல் எப்படி எழுத முடியும்? துயரை பகடி செய்து பார்க்கும் மகத்தான கலைஞன் அவர். ஆனால் என்னால் அவரைப் போல் ஒரு கதையை எழுத முடியாது. அப்படித்தான் சுந்தரராமசாமியும். எனக்கு அவரது கதைகள் விருப்பமானவையே, ஆனால் அந்தக் கதையுலகிற்குள் நான் அந்தரங்கமாக ஒன்றிப்போய் என்னைத் தொந்தரவு செய்கிறளவிற்கானதில்லை. ஒரு சிறுகதையை எத்தனை கச்சிதமாக எழுத வேண்டுமென்னும் நுட்பத்தை அவர் கதைகளை வைத்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும். எஸ்.சம்பத்தின் முடிவுகள் என்றொரு கதை இருக்கிறது, அது குறித்து யாரும் பேசியதாகத் தெரியவில்லை. அந்தக் கதை வாழ்வின் தற்செயல் நிகழ்வுகள் குறித்த பிரேமையை ஆழமாக உருவாக்கி விட்டது. அந்தக் கதையில் வரும் பேராசிரியரைப் போன்ற மனிதர்கள் தான் நாம் ஒவ்வொருவரும். நாம் தருணங்கள் அமையாத வரை எத்தனை சிரமப்பட்டு நேர்மையாளர்களாய் ஒழுக்கவாதிகளாய் இருக்கிறோம், அது எத்தனை ஏமாற்றுத்தனமானது என்பதை உரித்துக் காட்டும் கதை. தற்செயலாக இதெல்லாம் நடக்குமா என்றால், ஏன் நடக்கக் கூடாதென பதில் கேள்விதான் கேட்கத் தோன்றுகிறது.? எஸ்.ரா, ஜெயமோகன் இவர்களின் சிறுகதைகளில் எனக்கு ஜெமோவின் துவக்க கால சிறுகதைகளை விட்டு அவரது நாவல்களே முக்கியமானவையாய்ப் படுகின்றன. அவரது மண் தொகுப்பும் குறுநாவல்களும் கொடுத்த வாசிப்பனுபவத்தை வேறு கதைகள் கொடுக்கவில்லை. எஸ்.ரா இன்று வரையிலும் அவ்வப்போது நல்ல கதைகள் எழுதக் கூடியவராய் இருக்கிறார். இரநூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியபிறகும் கூட அவருக்கு எழுத இன்னும் ஏராளமாய் கதைகளிருப்பது ஆச்சர்யம். சிறுகதைகள் எழுத முடியாமல் தேக்கம் காணும் நாட்களில் எல்லாம் நான் அவரிடம் உரையாடுவதை விரும்புகிறேன். சிறுகதையின் நுட்பங்கள் குறித்து எனக்குக் கற்றுத் தந்தவர்களில் அவர் எப்போதும் முக்கியமானவர்.

ஆங்கிலத்தில் மிக மெதுவாக வாசிக்கக் கூடியவன் என்பதாலேயே மொழிபெயர்ப்புகளை அதிகபட்சமாய் தேடிப்பிடித்து வாசித்துவிடுவேன். இரண்டாயிரம் வருடத்தின் துவக்க காலம் வரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளை வாசிக்கும் போது மலைப்பாக இருக்கிறது. கோணங்கி கல்குதிரையிலிருந்து கொண்டு வந்து உலகச் சிறுகதைகள் தொகுப்பு ஒரு மாபெரும் பொக்கிஷம். அது போலவே அந்தக் காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் தமிழில் ஏற்படுத்திய மாற்றங்களும் ஏராளம். எழுத்தில் அரசியல் ரீதியான உரையாடல்களை முன்னெடுத்ததில் அந்தக் கதைகளுக்கு முக்கியப் பங்குண்டு. முழுக்க வணிகமயமாக்கப்பட்டிருக்கும் மொழிபெயர்ப்பு கதைகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவைகளாகத்தான் இருக்கின்றன. இந்தக் கதைகள் ஒரு வாசகனை குஷிப்படுத்தக் கூடும், ஆனால் கற்றுக்கொடுப்பது சொற்பமே. கத்தார் சிங் துக்கலின் பெளர்ணமி இரவு மற்றும் கதைகள், பனீஸ்வர்நாத் ரேனு கதைகள், ரிஷிகேஷ் பாண்டாவின் சிறுகதைத் தொகுப்பு, மண்ட்டோவின் கதைகள், அரவிந் மாளகத்தி, சித்தலிங்கைய்யா போன்றோரின் கன்னட சிறுகதைகளென இந்திய சிறுகதைகளே ஏராளமாய் இருக்கின்றன. மண்ட்டோவும், கத்தார் சிங் துக்கலும், பஷீரும் இந்திய அளவில் என்னை அதிகம் பாதித்தவர்கள். துக்கலின் பெளர்ணமி இரவு கதைக்கு நிகராக இன்னொரு கதையை வேறு எந்த இந்திய எழுத்தாளரும் எழுதியிருக்கவில்லை. ’அவர்கள் இருவரையும் பார்க்க அம்மா மகள் போல் இருக்காது, அக்கா தங்கைகளைப் போலவே இருப்பார்கள் என்னும் முதல் வரியே விக்கிரமாதித்தியனின் குழப்பமான கதையை நினைவுபடுத்தினாலும் இந்தக் கதையை வாசித்து முடிக்கும் போது நம்மை நொறுக்கிப் போடுகிறது. நாளை மகளின் திருமணத்தை வைத்துக் கொண்டு அம்மா இப்படி செய்வாளா? என எளிதாக ஒரு கேள்வியை நேர்மையாளர்கள் கேட்கலாம். வாழ்க்கை அப்படி சிக்கலான நேரத்தில் சிக்கலானதை செய்யச் சொல்லித் தான் நம்மைத் தூண்டுகிறது. அந்த குரூரமான யதார்த்தம் தான் துக்கலின் பெரும்பாலான கதைகளில் தொடர்ந்து வருகிறது. மண்ட்டோவின் ஒரு கதையில் தன் காதலியை நிறைய பேர் வல்லுறவு செய்யும் வரை எதுவு செய்ய முடியாமல் அமைதி காக்கும் காதலன் எல்லோரும் சென்ற பிறகு தனது டர்பனால் அவளது குறியை மறைக்க முயல்கிறான். அதற்கு அவள் “இதை எடுத்துப் போ, உனது இந்த மத அடையாளத்தை’ என காறி உமிழ்கிறாள். இந்திய பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் நிகழ்ந்த கற்பனையே செய்ய முடியாத வன்முறைகளை எழுதியவர்களில் முக்கியமானவர்கள் மண்ட்டோவும் துக்கலும். துக்கலின் இன்னொரு கதையில் எல்லை தாண்டி வந்து மாட்டிக் கொள்ளும் ஒரு இஸ்லாமியப் பெண்ணை ஒரு முதியவன் ஒரு ஆசிரியனுக்கு விற்கிறான், அந்த ஆசிரியனால் அவளைக் கட்டுப்படுத்தி உறவு கொள்ள முடியவில்லை, சில நிமிடங்களில் குடிசைக்குள் நுழையும் கிழவன் அவளை அடித்து உதைத்து மூர்க்க்கமாக உறவு கொள்கிறான். பின் அந்த ஆசிரியனைப் போகச் சொல்கிறான். யுத்தம் முதியவர்களை எத்தனை வன்முறையாளர்களாக மாற்றியிருந்ததை வேறு யாரும் பதிவு செய்திருப்பதாய் தெரியவில்லை. மண்ட்டோ அதிகம் கவனிக்கப்பட்டவராய் இருப்பதாலேயே இங்கு துக்கலின் கதைகள் குறித்து எழுதியிருக்கிறேன்.

இவர்களோடு மிக எளிய மொழியில் கதை சொன்ன ப்ரேம் சந்தும் எனக்கு விருப்பமானவரே, அவரின் ஒரு கதை உண்டு. ‘ஒரு கைப்பிடி கோதுமை.’ வறுமையும் ஏழ்மையும் நிரம்பிய ஒரு இந்திய கிராமத்தில் நிகழும் கதை. எழுதி பலவருடங்கள் கடந்து போனாலும் எல்லாக் காலங்களுக்கும் இந்திய தேசத்திற்குப் பொருந்தக்கூடிய காலங்கடந்த கதை. இந்தியர்களுக்கு இயல்பாகவே இயல்பாக ஒரு குணம் உண்டு. எத்தனை வறுமையில் இருந்தாலும் நம்பிக்கைகளின் பொருட்டு தங்கள் மீது செலுத்தப்படும் எத்தனை பெரிய வன்முறைகளையும் சகித்துக் கொள்வார்கள். ஏமாற்றம் துரோகம் இவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. கடும் பஞ்சம் நிகழும் ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகளின் குடும்பம் பல நாள் பட்டினியோடு வாடி வதங்கிப் போயிருக்கிறார்கள். ஊரில் தின்று கொழுத்து பணக்காரனாய் இருப்பதோடு அதிக வட்டிக்கு பணம் கொடுப்பதும் அந்த ஊர் பூசாரிதான். மக்கள் எத்தனை வறுமையில் உழன்றாலும் வருட முடிவில் பூசாரிக்கு தானமாய் தரவேண்டிய தானியங்களுக்கு குறை வைப்பதில்லை. தங்கள் வயிற்றுக்குச் சேரவேண்டிய தானிய மணிகளையும் சேர்த்தே அந்த மிருகத்திற்கு தானமளித்தனர். பல சமயங்களில் தவிர்க்க முடியாத நெருக்கடி வரும்போது அவர்கள் கடன் வாங்க சென்று நிற்பது அந்தப் பூசாரியிடம் தான். சின்ன தொகைக்குக் கூட பெரிய வட்டி கேட்கும் அந்த அயோக்கியன் கடவுளின் பெயராலும் நம்பிக்கைகளின் பெயராலும் அந்த மக்களை முட்டாளாய் வைத்திருக்கிறான். கதையில் கடும் ஏழ்மையில் இருக்கிறான் ஒரு விவசாயி. மனைவி பிள்ளைகள் என எல்லோருக்குமே அரைவயிற்று ஜீவனம். இந்நிலையில் ஒருநாள் சந்நியாசி ஒருவர் அவன் வீட்டிற்கு யாசகம் கேட்டு வர வந்தவருக்குத் தர எதுவுமில்லாமல் கடன் கிடைக்க ஒரே சாத்தியமுள்ள பூசாரியிடம் சென்று ஒரு கைப்பிடி அளவு கோதுமை கடன் கேட்கிறான். பூசாரியும் மறுக்காமல் கோதுமை தர அதை எடுத்து வந்து உணவு தயாரித்து சந்நியாசியை பசியாற்றி அனுப்புகிறார்கள். உடனடியாக தனது கடனைத் திருப்பித் தரமுடியாத அந்த விவசாயி அந்த வருட முடிவில் வழக்கமாக பூசாரிக்கு தரும் தானியத்தோடு சேர்த்து அவரிடம் வாங்கியதையும் கூடுதலாக நிறைய தானியத்தையும் தருகிறான், ஆனாலும் இது தான் வாங்கியதற்கான கடனிற்கான பதிலீடு என்று சொல்வதற்கு அவனுக்குத் தயக்கம். சில வருடங்கள் போகின்றன. ஊரில் முன்னிலும் ஏழ்மை. அந்த விவசாயி எல்லாம் பொய்த்துப்போய் வாழ்வின் கசப்பில் உழன்றுகொண்டிருக்கிறான். அவனைத் தேடிவரும் பூசாரி ஆறு வருடத்திற்கு முன்னால் நீ வாங்கிய கடனுக்கு இன்று வட்டியோடு இன்று சில மூட்டை தானியம் பதிலாக தர வேண்டும், அல்லது பணமாக வேண்டும் அதுவும் உடனே வேண்டுமென கேட்கிறார். குழம்பிப் போகும் விவசாயி அந்த வருட முடிவில் தான் அதைத் தந்ததாக சொல்ல, “தானத்தின் போது நீ எனக்கு எவ்வளவு தந்தாலும் அது தானத்தில் மட்டுமே சேரும் என்று சொல்லி தனது கடனைத் தரச்சொல்லி விடாப்பிடியாக நிற்க என்ன செய்வதெனத் தெரியாமல் அவகாசம் கேட்கிறான். அந்த வருடம் முழுமையும் கடுமையாக உழைத்தும் அவருக்குத் தர வேண்டிய கடனுக்கு ஈடாக சம்பாதிக்கமுடியவில்லை. வீட்டில் ஒரு நேரம் மட்டுமே எல்லோருக்கும் உணவு. உடைகள் இல்லை, குளிருக்கு போர்த்திக் கொள்ள கம்பளி இல்லை. ஆனாலும் கடனைத் திருப்பித் தர வேண்டும். இல்லையென்றால் நரகத்திற்குப் போவாய் என பூசாரி மிரட்டுகிறான். அடுத்த வருடமும் கடுமையாக உழைக்கிறான். பாதிக்கு மேல் மனமுடைந்து குடிக்கு பழகுகிறான். எல்லாம் சூன்யமாகிறது. அந்த வருட இறுதியிலும் அவனிடம் எதுவும் இல்லை. ‘என் கடனை அடைக்க என் நிலத்தில் வந்து வேலை செய்’ என பூசாரி அவனை மிரட்ட தன் வாழ்நாள் முழுக்க அதன்பிறகு பூசாரியின் நிலத்தில் வேலை செய்கிறான். ஒவ்வொரு வருட முடிவிலும் கடனுக்கான வட்டிதான் கழிந்ததே தவிர கடன் கழியவில்லை. பல வருடங்களுக்குப்பிறகு அவர் இறந்து போக, அந்த பூசாரி அதன் பிறகு அவரது மகனை தன்னிடத்தில் வேலை செய்ய பணிக்கிறான். தலைமுறை மாறியது. கடன் அப்படியேதான் இருந்தது. இந்தக் கதை இந்திய அப்பாவி மனங்களின் மனசாட்சி.

மனித ஜீவிதத்தின் புரிபடாத புதிர்களை எழுதிய சிலரில் ஜாக் லண்டன், ஹெம்மிங்வே, வில்லியம் ஃபக்னர் மூவரும் முக்கியமானவர்கள். எட்கர் ஆலன் போவின் கதைகள் எனக்கு விருப்பமானவை என்றாலும் இன்னுமே கூட அவரது சில கதைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜாக் லண்டனின் கதைகளிலும் ஹெம்மிங்வேயின் கதைகளிலும் இருக்கும் சாகசம் எனக்கு விருப்பமானது. அவர்கள் இருவரும் இலக்கிய உலகின் சுவாரஸ்யமான கதை சொல்லிகள், ஃபாக்னர் ‘தனக்கு விருப்பமான புத்தகங்களைத் திரும்ப திரும்ப வாசிப்பதையே விரும்புவதாக ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். எனக்கு அப்படித்தான் ஜாக் லண்டனின் கதைகள். அவரது ஒரு துண்டு இரைச்சி, மெக்ஸிகன், சாமுவேல், பார்லேயின் முத்துக்கள் என நிறைய கதைகளை திரும்ப திரும்ப வாசிக்க விரும்புகிறேன். சாகசத்தையும் தாண்டி அந்த கதையுலகின் சுவாரஸ்யம் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிய கதையுலகை நோக்கி நகர்த்துகிறது. மெக்ஸிகன் கதையை மையமாக வைத்துதான் முதல் நாவலொன்றை எழுதி பின் அது முடிக்கப்படாமலெயே போனது. இப்பொழுதும் கூட அந்த நாவலை எழுதிவிட விரும்புகிறேன், ஆனால் அந்த நாவல் அந்தக் கதைக்கு நிகராக இருக்குமாவென்றால் சந்தேகமே…

மார்க்தெரித் யூரிஸ்னாரின் கீழை நாட்டுக் கதைகள் தொகுப்பில் வரும் ஓவியர் கதையும் காளி கதையும் ஒரு முறை வாசித்தவை தான். ஆனால் மறக்கக் கூடியவை அல்ல. பூமணி தமிழில் தொகுத்த ஸ்லவோமிர் ம்ரோஸெக்கின் யானை என்னும் தொகுப்பு ஒரு சிறுகதையாளனுக்கு பைபிள் என்றே சொல்லலாம். உருவகக் கதைகளை எழுதுவதில் உலகளவில் அவருக்கு நிகரானவர்கள் குறைவே. முழுக்க அரசியல் தன்மை கொண்ட அவரது கதைகளில் யானை என்னும் கதை சிறுகதை வடிவத்தின் உச்சபட்ச சாதனை. செலவுகளைக் குறைக்கும் பொருட்டு மிருகக் காட்சி சாலைக்கு கொண்டு வரப்போடும் ரப்பர் யானை என்னும் குறியீட்டின் வழி அதிகாரம் எத்தனை போலித்தனமானது அது சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கை குறித்தான எந்த நம்பிக்கைகளையும் தருவதில்லை என தோலுரித்துக் காட்டும் கதை, இந்தக் கதையை ஒருவன் நூறுமுறை கவனமாக வாசித்தால் போதும் மிகச் சிறந்த எழுத்தாளனாகிவிடலாம். ஆல்பெர்தோ சிம்மலின் பிரிவு, அமர்ந்தா மொழிபெயர்த்து தொகுத்த பனியும் நெருப்பும் சிறுகதைத் தொகுதி என தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் ஒரு மாபெரும் கடல். அவற்றைத் தேடி தேடி வாசித்துதான் ஆகவேண்டும்.

எழுத்து மலினப்பட்டுப்போயிருக்கும் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து அதில் தீவிரமாக இயங்க இலக்கியத்தின் மீதான அசாத்தியமான நேசம் இருக்கவேண்டியிருக்கிறது. உலகின் எந்த மொழிக்கும் இணையாக தமிழிலும் மகத்தான சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் எழுத வந்தவர்களிடம் இருந்த அரசியல் உணர்வும் தீவிரமும் சமகாலத்தில் எழுதுகிறவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலான சிறுகதைகள் ஒரே மாதிரியான வாழ்வை பேசுகிறவைகளாகத்தான் இருக்கின்றன. இரண்டு மூன்று வகைமைகளுக்குள் இக்கதைகளை நம்மால் அடக்கிப் பார்த்துவிட முடியும். சமயங்களில் ஒருவித சுயதிருப்திக்காக மட்டுமே இக்கதைகள் எழுதப்படுகின்றனவொ என யோசிக்குப்ப்படியாகத்தான் அக் கதைகள் இருக்கின்றன. கடந்த சில வருடங்களில் வந்த சிறுகதைத் தொகுப்புகளில் சிறந்தவை என மிகச் சில நூல்களைக் கூட சொல்ல முடியவில்லை. ஒரு சில நல்ல கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் கூட அவை காத்திரமானவையாய் இல்ல.

2000 த்தின் ஆரம்பங்களிலும் அதற்குப் பிறகான சில வருடங்கள் வரையிலும் சிறுகதைகளில் இருந்த வீர்யம் ஒட்டுமொத்தமாக சிதைந்து போயிருப்பது வருந்தத்தக்கதே... நான் எழுதத் துவங்கிய நாட்களில் ஜே.பி.சாணக்யா, ஷோபா சக்தி, ஜி,முருகன் என என்னை சிறுகதையின் பக்கமாய் இழுத்த தேர்ந்த கதை சொல்லிகள் இருந்தனர். அசதாவின் ஒரே தொகுப்பான வார்த்தைப்பாடு முக்கியமானதொன்று. ஆனால் அவர்களுக்குப் பிறகு அப்படியான ஆட்கள் இங்கு வந்திருக்கவில்லை. சாணக்யா, ஷோபா, ஜி.முருகன் மூவரும் இரண்டாயிரத்திற்குப் பிறகான தமிழ் சிறுகதை உலகின் மகத்தான சாதனைகள். இன்று எழுத வரும் ஒருவர் அவர்களை தயக்கமின்றி முன்னொடிகளாய் ஏற்றுக் கொள்ளலாம். தமிழில் நமது பெரும் சாதனைகள் எல்லாம் சிறுகதைகளில்தான் நிகழ்ந்திருக்கின்றன. நமது மகத்தான எழுத்தாளர்கள் சிறுகதைகளில் இருந்து வந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுகதைகளில் நிகழ்ந்திருக்கிற மாற்றம் முக்கியமானதொன்று. 2010 வரை தமிழில் வந்த கதைகளைப் பிரித்து பார்த்தோமானால் ஒரு 100 சிறந்த கதைகளாவது நம்மிடம் இருக்கும். உலகின் எந்த மொழிச் சிறுகதைகளோடும் சவால் விடக்கூடியவை மற்ற இந்திய மொழிகள் நாவல்களைப் பிரதானமாய்க் கொண்டாடியதும் தமிழில் சிறுகதைகளுக்கான இடம் அப்படி நிகழ்ந்ததும் கொஞ்சம் ஆச்சர்யமான முரண். அதனாலேயே மகத்தான இந்திய நாவல்களின் வரிசையில் தமிழ் நாவல்களுக்கான இடம் பெரிய அளவில் இருப்பதில்லை. ஆனால் மகத்தான இந்திய சிறுகதைகளுக்கான ஒரு வரிசையை யாராவது உருவாக்கினால் அதன் பெரும்பாலான சாதனைகள் நம்முடையதாகத்தான் இருக்கும். நகர்மயமாதலும் இணையமும் அதிகமான கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ரொம்பவுமே குறுகிப் போனதால் அவர்கள் எழுதுகிற கதைகளின் எல்லையும் சுருங்கிப் போய்விட்டது. ஜெயமோகன் ஒரு முறை உரையாடும் போது சொன்னதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்... “அலைக்கழிக்கப்பட்ட பால்யம் என்பதோ, அல்லது மகத்தான லட்சியங்களோ எதுவும் இவர்களுக்கு எல்லை. பெரும்பாலும் சுயதிருபதிக்காகவே எழுதுகிறார்கள்.” ஒருவகையில் இதில் உண்மையிருந்தாலும் சுயதிருப்திக்காக மட்டுமே ஒருவன் எழுத்தாளனாய் இருக்க மாட்டான் என நம்புகிறேன். பாலசுப்ரமணியம் பொன்ராஜ், கார்த்திகை பாண்டியன், அகரமுதல்வன் என இன்னொரு வரிசை சிறுகதை எழுத்தாளர்களை இன்று பார்க்க முடிகிற போது அவர்களின் புதிய கதைசொல்லல் தொடர்ந்து எழுத உற்சாகமளிக்கிறது. எழுபது கதைகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறேன், ஆனாலும் ஒரேயொரு நல்ல கதையையாவது எழுதிவிடமாட்டோமா என்கிற தவிப்புதான் இன்னும் இருக்கிறது. நான் எழுத விரும்புவது அந்த ஒரேயொரு நல்லக் கதையைத் தான், அதற்காக வாழ்நாள் முழுக்க எழுதவேண்டியுள்ளது. கதை என்பது சொற்களால் ஆன ஒரு வினோத மிருகம், அந்த மிருகத்திற்கு தன்னை தின்னக் கொடுத்துப் பழக்கும் ஒருவன் அத்தனை எளிதில் அதிலிருந்து மீள்வதில்லை. நானும் அப்படித்தான்.பின்குறிப்பு :

இதில் நான் குறிப்பிட்டுள்ள கதைகளும், எழுத்தாளர்களும் வெகு சொற்பமே… ஒவ்வொரு எழுத்தாளனையும் பாதிக்கும் கதைகளென்று பார்த்தால் சில நூறு பக்கங்களுக்கு விரிவாக எழுதலாம்… இது அதிலிருந்து ஒரு துளி மட்டுமே.7 views

コメント


bottom of page