கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் பதிலீடாய் ஒற்றைக்கண்ணை கொடுத்துவிட்டுச் சென்ற மனிதன் தனது மிச்சமிருந்த நிலத்தில் சாபத்தின் விதைகளைத் தூவிவிட்டுச் சென்றான்.
”இந் நிலமெங்கும் என் கண்களால் நிரம்பட்டும், என் மூதாதையரின் பால்மடி உறங்கும் இங்கு பூக்கும் அவ்வளவிலும் என் பார்வையே ஒளிரும். என் கண்கள் இனி எங்கு எல்லாமுமாகுமென”
குமுறலோடு அவ்விடத்தை நீங்கியிருந்தான். சில மாதங்களுக்குப்பின் இலையுதிர்க் காலத்தின் துவக்கத்தில் வெவ்வேறு நிறங்களாலான ஆளுயரக் கற்கள் நடப்பட்டு வேலி அமைக்கப்பட்டன.
அங்கு புதிய குடியிருப்பு வருவதற்கான பிரம்மாண்ட அறிவிப்புகள் தோன்றின. ஈட்டுத்தொகையாக வந்த ஒற்றைக்கண்ணை என்ன செய்வதெனத் தெரியாத கடன் கொடுத்தவன் புதிதாக அவன் நிலத்தில் உருவாகும் குடியிருப்பின் வினோத காட்சிப்பொருளாய் மையமானதொரு இடத்தில் தூண் அமைத்து கண்ணாடி பேழைக்குள் வைத்தான்.
ஒற்றைக்கண் நிலம் என்னும் பெயரில் விளம்பரப்படுத்தப்பட்ட அந்த இடத்தில் வெகு விரைவிலேயே ஹைபிரீட் மரங்களோடு கூடிய புதிய அடுக்குமாடிக் குடியிருப்பொன்று வந்தது. பெருத்த லாபம் தந்த கண்ணை நன்றியோடு வணங்கி விடைபெற்ற கடன்கொடுத்தவன் இனி ஒழுங்காக கடன் கொடுக்காதவர்களிடமிருந்தெல்லாம் கண்களை பெற்றுக்கொள்வதென்று முடிவு செய்தான்.
புதிய குடியிருப்பில் அனேக குடும்பங்கள் வந்து வசிக்கத் துவங்கிய பிறகு அங்கிருந்த எல்லோருக்கும் எப்போதும் யாரோ ஒரு ஆள் தங்களைத் தொடர்ந்து வருவது போன்றிருந்தது. துயரமும் வன்மும் தோய்ந்து மனதாழத்தின் வெறுப்பில் சிவந்து போன அந்தக் கண்ணின் உக்ரம் தங்கள் உடலைத் துளைத்து நரம்புகளுக்குள் நஞ்சின் தீவிரத்தை உமிழ்வதாய் உணர்ந்தனர். சிலர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டதோடு உயரமான இடங்களில் நிற்கையில் தானாகவே கால்கள் கீழ் நோக்கி நகர்ந்து குதிக்கத் தூண்டின. முதலில் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அருகிலிருந்த மற்ற குடும்பத்தினரை சந்தேகித்தனர், சந்தேகத்தின் அச்சம் மெல்ல வளர்ந்து தங்கள் குடும்பத்திலிருப்பவர்களையும் சேர்ந்து பின் சந்தேகிக்கச் சொன்னது.
யாரும் யாரின் மீதும் அன்பு கொண்டிருக்கவில்லை. பல மாதங்களாய் உறக்கத்தைத் தொலைத்த மனநோயாளிகளாய் ஆனபின்பாகத்தான் அவ்வளவிற்கும் காரணம் குடியிருப்பின் மையமாயிருந்த ஒற்றைக்கண் என்பதைப் புரிந்து கொண்டனர். தன் நிலத்தை, வாழ்வை, அடையாளத்தை அவ்வளவையும் இழந்த காட்டு மிருகமொன்றின் நூற்றாண்டு காலத் துயரத்தை ஒத்திருந்த அந்தக் கண்ணின் தீட்சண்யம் அவர்களைப் பொசுக்கியது. ரகசியமாக அந்தக் கண்ணை அங்கிருந்து அகற்றிவிட அவர்கள் செய்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிய தங்களின் இயலாமையை சபித்தபடி வாழ்வதற்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டபடி இடம்பெயரத் துவங்கினர்.
ஆளற்ற அந்த அடுக்குமாடி குடியிருப்பை எப்போதும் அசைவின்றி பார்த்தபடி இருந்தது ஒற்றைக்கண். ”இந் நிலமெங்கும் என் கண்களால் நிரம்பட்டும், என் மூதாதையரின் பால்மடி உறங்கும் இங்கு பூக்கும் அவ்வளவிலும் என் பார்வையே ஒளிரும். என் கண்கள் இனி இங்கு எல்லாமுமாகும்..” எல்லா திசைகளிலிருந்தும் பேரோசையாய் ரணத்தின் குரல் எதிரொலித்தபடியே இருந்தது.
Comentarios