தமிழின் நவீன ஓவிய மரபில் அசாத்தியமான சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவுக்கு இந்த வருடத்திற்கான ஸீரோ டிகரி பதிப்பகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்படுகிறது. ஓவியர் மருது அண்ணனுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும். விருது வழங்கும் நிகழ்வு அக்டோபர் 21 சனிக்கிழமை மாலை ம்யூசிக் அகடெமியில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வில் வழமைபோல் ஸீரோ டிகிரி இலக்கியப் போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறும்.
எழுத்தாளர்கள் ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் என எல்லா கலை வடிவங்களைச் சேர்ந்தவர்களும் ஒரு மொழியில் இணைந்து பணியாற்றுவது அவசியம். நான் எழுத வந்த இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் அப்படித்தான் இங்கு இருந்தது. நாட்கணக்கில் தொடரும் உரையாடல்களும் சிற்றிதழ்களில் புதிய முயற்சிகளைக் கொண்டு வருவதற்கான தேடலுடனும் எல்லோரும் இணைந்து வேலை செய்த காலகட்டமது. இணையம் பரவலான பிறகு எழுத்தாளர்கள் ஓவியர்கள் என தனித்தனியாக பிரிந்து செயலாற்றும் சூழல் உருவாகியிருப்பது துரதிர்ஸ்டவசமானது.
கலைச்செயல்பாடுகளில் முக்கியமானது என்பது மொழியில் இயங்கக்கூடிய அனைத்துவிதமான கலைஞர்களையும் கவனித்து குறைந்தபட்சம் அந்தக் கலைகளின் அடிப்படைகளையேனும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு எழுத்தாளன் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நிறங்கள் குறித்த புரிதல் இல்லாமல் நாம் மனித மனங்களைத் தீவிரமாக எழுதிவிட முடியாது. கண்ணால் பார்ப்பவற்றையெல்லாம் மனம் உணர்கிறது, உணர்ச்சிகளாக அவை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு நிறத்திற்கும் பிரத்யேகமானதொரு குணமுண்டு. நம்மையறியாமலேயே நமது குணநலன்கள் நமக்குப் பிரியமான நிறங்களைத் தேர்வு செய்துகொள்கின்றன. இசை, ஓவியம், சிற்பம் இவற்றைக் குறித்த அடிப்படைகளைக் கற்றுக்கொண்டபின் எழுதும்போது மொழியில் லயம் கூடுவதோடு நாம் பார்க்கும் உலகின் தன்மைகளும் நமக்குப் பிடிபடும். இதனாலேயே புதிதாக எழுத வரும் எல்லோருக்கும் பிற கலைகளின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளச் சொல்லி வலியுறுத்துகிறேன்.
Comments