top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கடந்த காலத்திற்குத் திரும்பியவன். ( குறுங்கதை )
அந்த வனத்தின் ரகசிய வயிற்றுக்குள் பல காலமாய் தவங்கிடந்தவனின் உடல் முழுக்க கரையான் புற்றேறி பூச்சிகள் அடர்ந்து போயிருந்தன. வேண்டாவெறுப்பாய் வரம் தர வந்த கடவுள் எவ்வளவு எழுப்பியும் அவன் விழித்துக் கொள்வதாய் இல்லை. தன் பார்வையால் புற்றை சுட்டெரித்தார். அவன் தேகத்தை வெப்பம் சுட்டபோது மெல்ல இசைந்து கொடுத்து மெதுவாகக் கண் திறந்தான். எதிரிலிருப்பவரை அடையாளம் தெரியாமல் ”என்ன வேணும் எதற்காக எழுப்பினாய்?” எனக் கேட்க? “உனக்கென்ன வேண்டும்? எதற்காக உறங்கினாயென?” கடவுள் கேட்டார். அவன் எல்லாவற்றையும் மறந்து போயிருந்தான். தன் கடந்த காலத்தோடு ஓர் வரலாறு பிணைந்திருக்கக் கூடுமென்கிற பிரக்ஞை அவனுக்கில்லை. எவ்வளவு யோசித்தும் எதற்காக இங்கு வந்தோம், யாரால் வந்தோமென எதுவும் நினைவிற்கு எட்டவில்லை. விருப்பங்களும் கோரிக்கைகளும் இல்லாது பிரார்த்தனைக்கான காரணம் தெரியாமல் விட்டேத்தியாய்ப் பார்த்தவனிடம் பிரபஞ்சத்தின் எத்தனை பெரிய வரத்தையும் தரத் தயாராய் நின்றிருந்தார் கடவுள். என்ன தேவை என்பது மறந்து போன அந்த மனிதன் வேறு வழியே இல்லாமல் தன் கடந்த காலத்தை மட்டும் கேட்டான்.


ஒருமுறைக்கு பலமுறை அவனை யோசிக்க சொன்ன கடவுள் “கடந்த காலம் உனக்கு எது ஒன்றையும் தரப்போவதில்லை, வேறு ஏதேனும் கேளென்றார்..” அவனுக்கு கேள்வியே தெரியாமல் பதில்களைப் பெற விருப்பமில்லை. தன் கோரிக்கையில் உறுதியாய் இருந்தான். ”நீ என்னவாய் இருந்தாயோ அதுவாகவே ஆவாயென” ஆசிர்வதித்து அவர் மறைந்த பிறகு கடும் சோர்வில் மயங்கிப் போனான்.


விழித்துப் பார்க்கையில் மனித இயல்பின் அடிப்படைகளை வேட்டையாடும் தன் கடந்த காலத்திற்குள் தனித்து விடப்பட்டிருந்தான். முட்டாள்த்தனமும் வேடிக்கைகளும் மிகுந்த கட்டளைகளுக்கு கட்டுப்படுவதையே வாழ்வின் ஒரே நோக்கமாய் கொண்டிருக்கும் மனிதர்கள் மட்டுமே அவனைச் சூழ்ந்திருந்தனர். சுயமாக சிந்தித்தல் தண்டனைக்குரிய குற்றம். மனிதர்களிடமிருந்து மூளைகளும் இருதயங்களும் திருடப்பட்டிருந்தன. அநாவசியமாக சிந்தித்தல் மனித நாகரீகத்திற்கும் மத நம்பிக்கைக்கும் எதிரானதென்கிற பிரச்சாரம் வலுத்திருந்த காலமது. இரக்கத்தின் காரணமாய் எவரொருவரும் மன்னிக்கப்படக் கூடாதென்பதற்காக கடவுளே மன்னராகி இருதயங்களை களவாடச் சொல்லி இருந்தார். இருதயங்களாலான மாளிகை ஒன்று காலங்கடந்த நினைவுச்சின்னமாய் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்க மாதத்தில் ஒருநாள் ஒவ்வொருவரும் நானூறடி தூரம் தள்ளி நின்று தங்களின் இருதயத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். மூளைகள் என்னவானதென்று ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.


அநீதியின் அபரிமித விளைச்சலில் கிடந்த சமூகத்தில் சிலர் யார் கண்ணிலும் படாமல் தங்களின் இருதயத்தையும் மூளையையும் பாதுகாத்து வந்தனர். செயற்கை உறுப்புகள் பொறுத்தப்பட்ட மன்னரின் அதிகாரிகள் சமூகத்திலிருந்து தப்பித்து வாழும் அந்த உதிரிகளை, இருதயமும் மூளையுமிக்கவர்களை துரத்தி துரத்தி வேட்டையாடினர். உடல் பல நூறு துண்டுகளாக்கப்பட்டு மன்னரை ஏமாற்ற நினைப்பவர்களுக்கான எச்சரிக்கையாய் எல்லா ஊரின் முக்கிய சதுக்கங்களிலும் காட்சிக்கு வைக்கட்டன.


சிந்திக்கும் திறன் கொண்ட மூளையும், ஈரமிக்க இருதயமும் கொண்ட கடைசி மனிதன் எல்லா வேட்டைக்காரர்களிடமிருந்தும் தப்பித்து கடலுக்கு நடுவில் மறைந்திருந்த அந்த வனத்திற்குள் ஓடி ஒளிந்துகொண்டான். தனித்து வாழும் விருப்பமற்றவனாய் மனிதர்களின் இருதயங்களும் மூளைகளும் அவர்களுக்கே திருப்பிக் கிடைப்பதாகவென ஆழக் குழிதோண்டி அதற்குள் அமர்ந்து கடவுளை நோக்கிப் பிரார்த்திக்கத் துவங்கினான்…. பல ஆண்டுகள் கடந்து போயின, புயல் மழை அவ்வளவும் இந்த பூமியை நிறைத்தது. அவன் தவம் புகுந்த வனம் கடலில் சரிபாதிக்கும் மேல் மூழ்கியும் போனது… பின்னெப்போதும் கடவுள் வந்திருக்கவில்லை, அவன் கண்விழிக்கவுமில்லை.

82 views

Comments


bottom of page