top of page
Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கடவுளின் தீவில் சில நாட்கள்…

Updated: 6 days ago



இந்தோனேஷியாவைக் குறித்த  ஆர்வங்கள் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக எனக்குள் வந்துள்ளது.  எழுத்தாளர் ப.சிங்காரம்.  சிங்காரம் சில காலம் இந்தோனேசியாவின் மேடானில் வசித்தவர், அங்கு வாழ்ந்த அனுபவங்கள்தான் புயலிலே ஒரு தோணி நாவல் எழுத முக்கியக் காரனியாக அமைந்தது.  காடும் மலைகளும் கடலும் சூழ்ந்த ஒரு  வினோத நிலமாகவே அந்த தேசத்தைக் குறித்த முதல் சித்திரங்கள் எனக்கிருந்தது. கலாச்சார ரீதியில் கிழக்காசிய நாடுகளுக்குள் சில ஒற்றுமைகள் இருப்பதை இந்த நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள் அறியமுடியும்.


லஷ்மி பமன்ஜக்கின் அம்பா என்னும் நாவலின் வழியாகத்தான் இந்தோனேசிய மக்களிடம் மஹாபாரதம் மற்றும் ராமாயணம் என்னும் இரு பெரும் புராணங்களும்  ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைத் தெரிந்துகொண்டேன்.  கடந்த காலத்தையும் நிகழ்கால அரசியலையும் ஒருசேர தீவிரமாக விவரிக்கக் கூடிய இந்த நாவல்  சுகர்த்தோ காலத்தில் கம்யூனிஸ்டுகளின் மீது நிகழ்ந்த படுகொலைகள் குறித்த  முக்கிய ஆவணம். அரசியல் ஒருபுறம் இருக்க ஜாவானியப் பெண்களைக் குறித்த பெரும் சித்திரமொன்றை இந்தக் கதை நமக்குத் தருகிறது. இந்த நாவலை வாசித்த சில நாட்களுக்குப்பின் சிங்கப்பூரில் ஒரு மதுவிடுதியில் ஒரு ஜாவானியப் பெண்ணைச் சந்தித்தேன்.  சில ஜாவானிய வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வமெழ அவளோடு நீண்ட நேரம் உரையாடியது பசுமையாக நினைவுக்கு வருகிறது.


நெதர்லாந்தின் நீண்டகால ஆளுகையில் காலனி நாடாக இருந்த இந்தோனேசியாவை இரண்டாவது உலகப்போர் காலகட்டத்தில் ஜப்பான் பெரிய எதிர்ப்புகளின்றிக் கைப்பற்றியது. ஜாவா சுமத்திரா என்ற  இரண்டு முக்கியத் தீவுகளைக் கைப்பற்றிய ஜப்பான்  வெகு விரைவிலேயே மொத்தத்  தேசத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. நீண்டகாலம் டச்சுக்காரர்களின்  பெரும் கொடுமைகளுக்கு உள்ளான மக்கள் ஜப்பானியர்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். சரியாக இந்தியாவில் சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் தீவிரமடைந்த அதே 1900 த்தின் துவக்க காலத்தில் தான்  இந்த நாட்டிலும் சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் தீவிரமடைந்தன. சரியாக யுத்தம் முடிந்த சில மாதங்களில் ஆகஸ்ட் 17 1945 ல் இந்தோனேசியா விடுதலையடைந்தது. எனினும் டச்சுக்காரர்கள் அந்த நாட்டின் விடுதலையை அங்கீகரிக்கவில்லை. இறுதியாக நான்கு வருடங்களுக்குப்பின் 1949 ம் வருடம் டச்சுக்காரர்கள் இந்தோனேசியாவின் விடுதலையை அங்கீகரித்தார்கள்.


இந்தோனேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மகத்தான தலைவராக அறியப்பட்ட சுகர்னோ அந்த நாட்டின்  முதல் குடியரசுத் தலைவரானார். 1945 முதல் 1967 ம் வருடம் வரை   ஆட்சியிலிருந்தவர் சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவைப்போல் தமது தேசத்தை ஒரு சோசலிச நாடாக வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டினார். சுகர்னோவின் தாயார் பாலியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியின் முக்கிய கோவில்களில் ஒன்றான கோ கஜாவிற்கு அருகிலேயே சுகர்னோவின் வீடொன்று இன்றும் உள்ளது. துரதிர்ஸ்டவசமாக அவரது இடதுசாரிக் கொள்கைகள் பிடிக்காமல் அவரது தளபதி சுகர்த்தோ 1967 ம் வருடத்தில் கலகம் செய்து ஆட்சியைப் பிடித்தார். டச்சுக்காரர்களின் காலத்தில் பத்து வருடங்கள் சிறையிலிருந்த சுகர்னோ தமது கடைசி மூன்று வருடங்களை வீட்டுச் சிறையில் கழிக்கும்படியாக ஆகிப்போனது.


இவ்விடத்தில் சுகர்னோ ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டதற்குப்பின் நடந்தேறிய படுகொலைகளைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.   ஆட்சியைக் கைப்பற்றியதும் சுகர்த்தோ செய்த முதல் வேலை யாரெல்லாம் அவரது ஆதரவாளர்களாக கருதப்பட்டார்களோ, யாரெல்லாம் கம்யூனிஸ்டுகளாக இருந்தார்களோ அவர்களைத் தேடி தேடிக் கொலை செய்தது. இதற்காக நாடு முழுக்க இருந்த பிரபலமான ரவுடிகள் அழைக்கப்பட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான குடிமக்கள் இரண்டு வருடங்களில் கொடுரமாக சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்தோனேசிய வரலாற்றின்  குருதிபடிந்த காலமிது. 2012ம் வருடத்தில் பிரபல இயக்குநரான வெர்னர்  ஹெர்சாக்கின் தயாரிப்பில் வெளியான act of killing என்ற  ஆவணப்படத்தில் கொலை செய்தவர்களில் நாற்பது பேரை நேர்காணல் செய்திருப்பார்கள். எப்படி கொலை செய்தோம், கொலை செய்வதற்கு என்னவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினோம் என அவர்கள் ஒவ்வொன்றையும் விலாவரியாக விளக்கியிருப்பார்கள். பார்க்கும்போதே ரத்தம் உறைந்துவிடும்.





வளமான நிலமும் விவசாயமும் இருந்தாலும் பாலியின் முக்கிய வருமானம் சுற்றுலாவிலிருந்தே வருகிறது.  அதனாலேயே மொத்தத் தீவையும் ஃபோட்டோ ஷூட்டுக்கான இடமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களின் இன்ஃப்ளூயன்சர்கள் வெளியிடும் பாலி சுற்றுலா வீடியோக்களை மட்டும் கண்டு பயணம் செல்கிறவர்கள் அங்கிருந்து புதிய அனுபவங்கள் எதையும் பெறுவதற்கில்லை. இன்னும்  சொல்லப்போனால் சில இடங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றுகூட சொல்லலாம்.  ஒரு புதிய நிலத்தைத் தேடிச் செல்கையில் நீங்கள் புதிய வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் தெரிந்துகொண்டு திரும்புவது அவசியம்.


பாலியில் இரண்டுவிதமான சுற்றுலாப் பயணிகளை அதிகமாகப் பார்க்கலாம். ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் விடுமுறை என்பதால் அவர்கள் மாதக்கணக்கில் இங்கு தங்குவதற்கு  கிளம்பி வருகிறார்கள்.  பெரும்பாலானவர்கள் எங்குமே செல்வதில்லை. பகல் முழுக்க அறையில் ஓய்வெடுக்கிறார்கள். மாலை கடற்கரையோர விடுதிகளில் மதுவருந்தி களித்துவிட்டு மீண்டும் பின்னிரவில் அறைக்குத் திரும்புகிறார்கள்.  இந்தியா சீனா கொரியா போன்ற நாடுகளிலிருந்து வரக்கூடிய பெரும்பாலனவர்கள் கையில் அலைபேசியோடு பிரபலமான சுற்றுலாத்தளங்களில் புகைப்படம் எடுக்க வரிசையில் நிற்கிறார்கள். இவர்கள் குறைந்தபட்சம் உள்ளூர் உணவைக் கூட சாப்பிட விரும்புவதில்லை.

குட்டாவில்  நாங்கள் தங்கியிருந்த விடுதி முழுக்க இந்தியர்கள்.  அதிலும் குறிப்பாக சைவம் சாப்பிடுவதை தனிப்பெருமையாக நினைக்கக் கூடியவர்கள். காலை உணவினை விடுதியிலேயே எல்லோரும் எடுத்துக் கொள்வது வழக்கம். ரொட்டி, ரவா உப்புமா மாதிரியான இந்திய உணவோடு இந்தோனேஷிய உணவுகளும் உண்டு. நமது பிரியத்திற்குரிய வட இந்திய இளம் தம்பதி ஒன்று பணியாளர்களிடம் எல்லாமே சைவம் தானே ஒரு முறைக்கு இருமுறை கேட்டுக்கொண்டிருந்தபோது எரிச்சலுற்ற நான் சத்தமாக மாட்டிறைச்சி கிடைக்குமா என்று கேட்க தம்பதியினர் என்னைத் திரும்பிப் பார்த்து முறைத்தனர். இந்தியர்களின் வருகை சமீபத்திய  வருடங்களில் அதிகரித்திருப்பதால் நிறைய இந்திய உணவகங்களையும் பார்க்க முடிகிறது.  பெரும்பாலான இந்தியர்களும் சைவர்கள் என்கிற பிம்பத்தை சோ கால்ட் வடக்கர்கள் உருவாக்கி வைத்திருப்பதுதான் துரதிர்ஸ்டம். பயணத்தின் பத்து நாட்களும் உள்ளூர் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வதென நானும் கார்கியும் உறுதியாக இருந்தோம். நம்மூர் சொமாட்டோ ஸ்விக்கி போல் அங்கு  க்ராப் என்ற செயலி உண்டு. இரவு உணவுகளை க்ராபில் மலிவாக வாங்கிக் கொண்டோம்.


இந்தோனேஷியாவின் காடுகள் அடர்த்தியானவை.  களிமந்தான் ஜாவா மற்றும் போர்னியோக் காடுகள்  இந்த தேசத்தின் கொடை என்றே சொல்லலாம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக போர்னியோக் காடுகளும் களிமந்தானும் வேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்குத் தேவையான ஆடம்பர அலங்காரப் பொருட்கள் செய்வதற்காக இந்தக் காடுகள் அழிக்கப்படுவதோடு இங்கிருக்கும் வன உயிரினங்களும் அழிக்கப்படுகின்றன. முக்கியமாக குரங்குகள். சில வருடங்களுக்குமுன் வாசித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. ஒப்பனைப் பொருட்கள் உற்பத்திக்கென  இந்தோனேசியக் காடுகளில் குரங்குகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருவதையும் அதுகுறித்த எச்சரிக்கையையும் விளக்கும் செய்தியது. மூன்றாம் உலக நாடுகளுக்கு நேரும் மிகப்பெரிய சாபம் அவை வளர்ந்த நாடுகளுக்குத் தேவையான உற்பத்திப் பொருட்களுக்காக சுரண்டப்படுவதுதான். 


பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் ஜான் பெர்கின்ஸ் இதனை விலாவாரியாகக் குறிப்பிடுகிறார். இந்தோனேசியாவிலும் தென் அமெரிக்காவிலும் ஒரு பகுதியை ஆக்ரமிக்க  முடிவுசெய்துவிட்டால் அமெரிக்கா முதலில் உலக வங்கியின் மூலமாக ஏராளமாக கடனை அளிக்கும் பின் அதற்கு ஈடாக அந்த நாட்டின் வளங்களை பெருநிறுவனங்கள் எடுத்துக்கொள்ளத் துவங்கும்.  காடுகள் எண்ணை வளமென நிரம்பிக் கிடக்கும் இந்தோனேஷியாவில் நிகழ்த்தப்பட்ட சுரண்டலை ஜான் பெர்கின்ஸின் வழியாக நாம் நிறைய அறிந்துகொள்ள முடியும்.


ஒரு இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் பாலியில் மட்டும் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்குமான உறவென்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.  இராசேந்திரச் சோழன் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக  தெற்கு சுமத்திரா தீவின் மீது போர் தொடுத்து வென்றது வரலாறு. எழுத்தாளர் நரசய்யா ஒரு நேர்காணலில் முக்கியமானதொரு செய்தியைக் குறிப்பிடுகிறார். இராசேந்திரச் சோழனின் முதன்மையான நோக்கம் பெருங்கடலில் கடற்கொள்ளையர்களின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகவே இருந்தது. இராசேந்திரச் சோழனின் ஆளுகையிலிருந்த சோழ தேசத்தை இன்று கற்பனை செய்தோமானால்  அதன் பிரம்மாண்டம் வியப்பூட்டும்.


சுமத்திராவில் இன்றுமே  சோழர்கள் ஆண்டதற்கான ஏராளமான எச்சங்களை நாம் காணமுடியும். அதேபோல் ஜாவாவுக்கும் தென்னிந்தியாவிற்குமான  வணிகத் தொடர்புகள்  ஆழமானவை.  பல ஆண்டுகளுக்குமுன் சிறிய அளவிலான மக்கள் ஜாவாவிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு வந்து குடியேறியதன் அடையாளமாய் இன்றும் சாவகச்சேரி என்ற இடங்கள் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இலங்கையில் ஜாவாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள்  கொஞ்சம் கொஞ்சமாய் இப்போது சிங்கள சமூகத்துடன் இணைந்து வாழத் துவங்கிவிட்டார்கள்.

 

விடுதலைக்கு முன்பான பாலியின் தலைநகரம் வடபகுதியிலிருக்கும் சிங்கராஜா என்னும் நகரமே… இன்று அந்த நகரம் அதன் பழைய அடையாளங்களையும் பெருமைகளையும் இழந்து நிற்பதோடு அதன் முக்கிய பலமான துறைமுகத்தையும் இழந்து வருகிறது. தலைநகரை தென்பசாருக்கு மாற்றியதோடு அங்கு பெரும் துறைமுகத்தையும் உருவாக்கி வருகிறார்கள். ஒன்பது சிற்றரசர்களைக் கொண்டது பாலி ராஜ்ஜியம். இந்த ஒன்பது சிற்றசர்களும் இன்று தங்களின் அதிகாரங்களை முற்றாக இழந்துவிட்டிருந்த போதும் மக்களின் மத்தியில் சிறிதளவேனும் செல்வாக்கு உடையவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக giyanyar  பிரதேசத்தின்  நகரான ubud ல் இன்றளவும் இந்து கலாச்சாரமே முதன்மையாக மதிக்கப்படுகிறது. Ubud அரன்மனையின் நுழைவாயிலிலேயே சரசுவதி தேவியின் சிலை தான் நம்மை வரவேற்கிறது. மொத்த நகரிலும் எங்குமே மசூதிக்கு அனுமதியில்லை என்று தெரியவந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. தலைநகரான தென்பசாரிலிருக்கும் மசூதிகளிலும் ஒலிபெருக்கிகள் சத்தமாக வைப்பதற்கு அனுமதியில்லை.

கோவில்கள் பெயர்கள் கலைவடிவங்கள் இவற்றில் மட்டுமில்லாமல் சமூக அமைப்பிலும் இந்து அடையாளங்களே பாலி மக்களிடம் மிகுந்திருக்கின்றன. முக்கியமாக சாதிய அமைப்புமுறை. சனாதனத்திலும் கர்மாவிலும் பாலி மக்கள் அதீத நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவைப் போலவே நான்கு வர்ணங்கள் அங்கேயும் உண்டு.  எழுபத்தைந்து சதவிகிதம் சூத்திரர்களைக் கொண்ட பாலியில் முதல் மரியாதை எப்போதும் ப்ராமணர்களுக்குத்தான். அதிலும் ஒரு சூத்திரரோ அல்லது வைசியரோ  ப்ராமணரைத் திருமணம் செய்துகொள்ளும் போது தங்களது சொந்தக் குடும்பத்திலேயே மரியாதையாகப் பார்க்கப்படுகிறார். அதே சமயம் சூத்திரரை திருமணம் செய்துகொள்ளும் ப்ராமணர் தங்கள் குடும்பங்களில் தனக்கான உரிமைகளை இழக்கிறார்.  நம்பிக்கைகள்  பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலுமே சனாதனம் ஊறிப்போயிருப்பதைக் கவனித்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.





பாலி மக்களின் ஒரு வருடமென்பது ஆறு மாதங்கள் மட்டுமே. ஒரு மாதத்திற்கு முப்பத்தைந்து நாட்கள்.  தீபாவளித் தவிர்த்து நாம் கொண்டாடும் எல்லா பண்டிகைகளும் அதே அடையாளங்களோடு கொண்டாடப்படுகின்றன. உதாரணத்திற்கு நாம் ஆயுத பூசைக்கு எப்படி நமது வாகனங்கள், புத்தகங்கள், வீட்டுச் சாமான்கள் எல்லாவற்றிற்கும் பூசை செய்கிறோமோ அவர்களும் அதேபோல் கொண்டாடுகிறார்கள். ( நான் பாலியிலிருந்து கிளம்பிய தினம் ஆயுத பூசை.) பொங்கல் விழா எப்படி நமது உழவர்களுக்கானதாக இருக்கிறதோ, அவர்களும் உழவர்களுக்கான ஒரு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இதில்லாமல் ஏராளமான கோவில் பண்டிகைகள் உண்டு. நமது ஊர்களில் எப்படி குலதெய்வம், ஊர் தெய்வம், பெருந்தெய்வமென வெவ்வேறு கோவில்கள் அதற்கு வெவ்வேறு பண்டிகைகள்  இருக்கின்றனவோ அதே போல் பாலி மக்களும் பிரத்யேகமான பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான கோவில்களின் கட்டுமான அமைப்பும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியானவைதான். இரண்டு பெருந்தூண்களை வாசலாகக் கொண்ட அமைப்பினைக் கொண்டக் கோவில்களில் பூசை செய்யும் இடத்திற்கு வெளியாட்கள் அனுமதியில்லை.


பாலி மக்கள் துவக்கத்தில் முன்னோர்களை வழிபடக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்து மதத்தின் வருகைக்குப்பின்பாகத்தான் அவர்கள் கோவில்களில் வழிபாடு செய்யத் துவங்கினார்கள். இப்பொழுதும் ஊர்க்கோவில்களில்  தெய்வங்களுக்கான சிலைகள் இல்லை. பாலியின் மிகப் பழையக் கோவில்களில் ஒன்றான பைசாக்கி  அகுங் மலைக்கு அருகில் உள்ளது. அகுங் மலையிலிருந்த உருவானா எரிமலைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோவிலிது. ரிஷி மார்க்கண்டேயா என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தத் தீவில் பயணித்தபோது வெவ்வேறு இடங்களில் தியானம் செய்திருப்பதோடு கோவில்களையும் கட்டியிருக்கிறார். இந்தக் கோவிலையும் அவர்தான் கட்டத் துவங்கினார். பிரதானமாக இருக்கும் சிவன் கோவிலை இவர் கட்ட அதன்பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் அதையொட்டி கோவில்கள் கட்டப்பட்டன. இன்றும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிவன்,விஷ்னு, ப்ரம்மா மூவருக்கும் இந்த மலையில் கோவிலுண்டு. அதோடு இங்கு தங்களது குடும்பத்தின் கோவிலைக் கட்ட மக்கள் விரும்பி அவர்களும் கட்டிவருகிறார்கள். மன்னரின் கோவிலும் உண்டு. ஐம்பது குடும்பங்கள் சேர்ந்து ஒரு இடத்தை வாங்கி இந்த மலையிலேயே புதிதாகக் கோவிலைக் கட்டிக்கொள்ளலாம். இது அவர்களுக்கானது.  சுற்றி வந்தால் மலை முழுக்க கோவில்களாக நிறைந்திருக்கின்றன. பைசாக்கி கோவிலில் எங்களுக்கு வழிகாட்டியாய் வந்தவரிடம் கேட்டேன் ‘ஏன் இந்தத் துறயைத் தேர்ந்தெடுத்தீர்கள்? வேறு வேலைகளுக்குச் சென்றிருக்கலாமே? அவர் சிரித்தபடி ‘நான் இங்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்கு வருகிறேன். மற்ற நாட்களில் என் குடும்பத்தினரைப் பார்த்துக் கொள்கிறேன். மாதத்தில் அதிகபட்சம் எட்டு நாட்கள். ஒரு ஃபேக்டரியில் மாதம் முழுக்க வேலை செய்தாலும் நான் இங்கு சம்பாதிப்பதில் பாதியைக் கூட சம்பாதிக்க முடியாது.. அவர் சொன்னதில் இரண்டு செய்திகளுண்டு. ஒன்று அவர்களுக்கு சுற்றுலா மிக முக்கிய வருமானம். இரண்டாவது தொழிற்சாலைகள் உண்டு ஆனால் வருமானம் குறைவு.


1960 களில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட, அரசாங்கம் அவர்களை வேறு நிலங்களில் குடியமர்த்த முடிவுசெய்தது.  அதில் ஏராளமானோர் விருப்பபட்டுச் செல்ல அப்படிச் சென்றவர்களை வெகு தொலையில் களிமந்தானில் குடியமர்த்தியதோடு அவர்களுக்கு சிறிதளவு நிலமும் கொடுத்தனர். பாலி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு சடங்குகள் முக்கியம். ஆண்டு முழுக்க நடைபெறும் திருவிழாக்களில் அவர்கள் நேரடியாக கலந்துகொள்ள முடியாவிட்டாலும் திருவிழாவிற்கான பணத்தை தங்கள் கோவிலுக்கு அனுப்பிவிடுகிறார்கள். உள்ளூரில் இருக்கும் அவரது உறவினர்கள் கோவிலையும் சடங்குகளையும் பார்த்துக் கொண்டால் போதுமானது.


சுற்றுலா செல்ல விரும்புகிறவர்களுக்கு பாலி அற்புதமான இடம். உங்களுக்கு கடற்கரைகள்  மட்டுமே பிடிக்கும், காடுகளில் பயணிக்க விருப்பமில்லையா? தாரளமாகச் செல்லலாம்.   தலைநகரான தென்பசாரைச் சுற்றி ஏராளமான கடற்கரைகள் உண்டு. தென்பசாரிலிருந்து ஒரு மணிநேரம்  படகில் பயனித்தால் நீங்கள் நூசா பெனிடா என்னும் தீவை அடையலாம். அங்கிருக்கும் broken beach ஓர் அற்புதம். ஐரோப்பியத் திரைப்படங்களில் நாம் பார்க்கும் கடற்கரைகளுக்கு நிகரான அழகு இங்குண்டு.  இதன் அருகிலேயே கெலிங்கிங் என்ற இடமும் உண்டு.  இன்ஸ்டாவின் உபகாரத்தால் இங்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். நீங்கள் மலையேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால் இந்த இடம்  ஆர்வமூட்டக்கூடும்.  ஒரு மணி நேரம்  சிறிய பாதையில் பெரும் கூட்டத்தினருக்கு நடுவே கவனமாக இறங்கிச் சென்றால் கடற்கரையின் அற்புதத்தை தரிசிக்கலாம். ஆனால் மீண்டும் மேலே ஏறி வருவதற்குள் நாக்குத் தள்ளிவிடும். எத்தனை அற்புதமான மலையேற்றமோ அதேயளவிற்கு இதில் ஆபத்தும் உண்டு. சில மாதங்களுக்குமுன் ஒரு ஐரோப்பிய இளைஞன் இங்கிருந்து தவறி கடலில் விழுந்து உடலைக் கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் ஆனதாக அங்கிருந்த மக்கள் சொல்லிக் கேட்டேன்.


சுளீரென அடிக்கும் வெயில், கடலின் நீல நிறத்தை விடவும்  வசீகரமான ஆகாயத்தின் நீலம். சட்டென மாறி விலகிச் செல்லும் மேகங்கள், அத்தனை வெக்கையையும் எளிதாக மறக்கச் செய்யும் கடற்காற்று என நூசா பெனிடாவின் கடற்கரைகள் நமக்கு கலவையான உணர்வினைத் தரக்கூடியவை.  சிறியதாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஓரிரு வாரங்கள் தினமும் காலை மாலை அந்தக் கடற்கரையைப் பார்த்துவிட்டு அமைதியாகத்  திரும்பினால் உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத நாட்களாக இருக்கும். சாகசம், புகைப்படங்கள் இவற்றையெல்லாம் மறந்து இயற்கை நமக்குத் தரும் பேரனுபவம் ஒன்றுண்டு. அது உங்களை  நீங்களே அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய தருணம். எளிதாக உங்களுக்கு ஆடம்பரங்கள் சலித்து, வெற்றுக் களிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் தேவையற்றதாகி கடலும் அலைகளும் காடும் தரும் உள்ளார்ந்த அமைதியில் மூழ்கிப் போவது. ஆக்ரோஷமான கடல் அலைகளை உயரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தபோது இனம் புரியாததொரு அமைதியை நான் உணர்ந்தேன்.  


உலகம் முழுவதிலுமிருந்து  பெருங்கூட்டமாய் மக்கள் வந்தபடியே இருக்கிறார்கள். நான் நின்ற அதே  மலையுச்சியில் நின்று கடலைப் பார்க்கிறார்கள்.  ஆனால் ஒவ்வொருவரின் பார்வையிலும்  கடல் வேறு வேறாக இருக்கிறது. ஆகாயம் வேறாக இருக்கிறது. சிலர் களிப்பையும் மகிழ்வையும் பெறுகிறார்கள். சிலர் அலைகளுக்குப் பின்னாலிருக்கும் ஆழ் கடலில் திளைக்கும் பேரமைதியைப் பெறுகிறார்கள்.  நூசா பெனிடாவிலிருந்த நாள் எனக்கு அற்புதமானது. ஆனால் திரும்பி வருகையில் சற்றே வருத்தப்படும்படியான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. படகில் தலைநகருக்குத் திரும்ப வேண்டும். ஒவ்வொரு இருக்கையிலும் மூன்றுபேர் அமரலாம். எனது இருக்கையில் நானும் கார்கியும் அமர்ந்திருந்தோம். ஒரு அமெரிக்க கருப்பினக் குடும்பம் படகில் நுழைந்தபோது சற்றேறக்குறைய இருக்கைகள் நிரம்பிவிட்டன. எனது அருகில் ஒருவர் அமரலாம் என்ற நிலையில் அந்தக் கருப்பினப் பெண் ‘என்னால் இவனருகில் அமரமுடியாதென தனது கனவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். கார்கி அவர்களோடு சண்டைக்குச் செல்லத் தயாரானபோது நான் அமைதிபடுத்தினேன். அந்தப் பயணத்தில் எனது அருகிலிருந்த  இருக்கை காலியாகவே இருந்தது.


கடற்கரைகளைப் பற்றிச் சொல்லும்போது உலுவாட்டு ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இங்குதான் பாலினிய மக்களின் பாரம்பர்யமான கெச்சாக் நடனத்தையும் நாங்கள் கண்டோம். உலுவாட்டு ஆலயம் கடலையொட்டிய மலையில் ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருக்கிறது. மலையுச்சியிலிருந்து கடலை பார்க்கையில் அதன் பிரம்மாண்டம் நம்மை வியக்கவைக்கும். கோவிலின் இன்னொருபுறம்  அடர்ந்த காடு. இங்கு கருங்குரங்குகள் அதிகமாக இருக்கின்றன. இந்தோனேஷியாவின் மற்ற ஊர் குரங்குகளைப் போல் இல்லாமல் இந்தக் குரங்குகள் ஆக்ரோஷமானவை. நம்மிடமிருந்து அலைபேசிகளையோ தண்ணீர் போத்தலையோ எதிர்பாராத நொடியில் பறித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். ஒரு குரங்கன் எனது செருப்பை என்னிடமிருந்து தட்டிப்பறிக்க கடுமையாக  போராடினார். அவரோடு  போராடமுடியாமல் செருப்பை விட்டுவிடலாமென நான் நினைத்த நேரத்தில் ஒரு உள்ளூர் வழிகாட்டி குரங்கனைத் துரத்திவிட்டார். பாலியில் வெவ்வேறு இடங்களில் கெச்சாக் நடனம் அரங்கேற்றினாலும் இந்த உலுவாட்டு மலை அவற்றுள் முக்கியமானது.


பராக்கா என்னும் ஆவணப்படத்தை பல  வருடங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். அதில் இந்த கெச்சாக் நடனத்தைப் பற்றிய காட்சிகளுண்டு. மையமாக நெருப்பு ஏற்றப்பட்ட ஒரு தூணைச் சுற்றி வட்டமாக ஏராளமான மக்கள் அமர்ந்திருப்பார்கள்.  ஆக்ரோஷமான குரலிசையோடு நிகழும் இந்த கெச்சாக் நடனத்தின் ஒரு சிறு பகுதியை நாங்கள்  அரவான் படத்தில் ஊரே ஊரே என்னப் பெத்த ஊரே என்ற பாடலில் நடன அசைவுக்காக பயன்படுத்தினோம். இந்த நடனத்திலிருந்து பெருமளவில் தூண்டப்பட்டு அதனை சிறப்பாக வெளிப்படுத்திய திரைப்படமாக அவதாரைக் குறிப்பிடலாம். அவதாரில் நாவி மக்கள் இறந்தவர்களை உயிர்ப்பிக்க ஒன்றாக அமர்ந்து செய்யக்கூடிய சடங்கு இந்த கெச்சாக் நடனத்திலிருந்து  எடுத்தாளப்பட்டது. மிக சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் செங்குருதி சேயோனே பாடலின் துவக்கத்திலும் இந்த கெச்சாக் நடனத்தின் குரலோசையை மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருப்பார்கள்.


கெச்சாக் நடனத்தில் சமீபமாகத்தான் ராமாயனத்தின் கதையை சேர்த்திருக்கிறார்கள். சரியாகச் சொல்வதானால் 1930 களுக்குப் பிறகு. அதற்கு முன்பாக இந்த நடனம் தங்களது முன்னோர்களை வழிபடுவதற்கான ஒரு சடங்காக மட்டுமே நிகழ்த்தப்பட்டது.   பாலி மக்கள் முன்னோர் வழிபாட்டை இன்றளவும் பெரிதாக மதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நகர்ப்புறத்தைத் தாண்டி கிராமப்புறங்களில் கட்டப்பட்டிருக்கும் பாரம்பர்யமான பாலினிய வீடுகளில் அவர்கள் மரபை மீறாமல் இருப்பதை இன்றும் நாம் காணமுடியும். எல்லா வீட்டின் நுழைவாயிலிலும் ஒரு சாமி சிலை  இருக்கும். அதனைக் கடந்து உள்ளே சென்றால் தெற்கு பக்கமாக சமையலறை,  மேற்கு புறமாக படுக்கையறை பின் வடக்குப் புறமாக சிறிய கோவில். பெரும்பாலான வீடுகளில் இந்தக் கோவிலையொட்டி தனியாக இருக்கும் தூண்கள் அல்லது சுவர்களில் தங்களது முன்னோர்களின் அடையாளங்களை பாதுகாக்கிறார்கள். சிலர் அஸ்தியையும் வைப்பதுண்டு.  ஒவ்வொரு நாளும்  காலை நண்பகல் இரவு என மூன்று வேளையும் கடவுளுக்கு சிறிய படையலை தங்கள் வீட்டு வாசலில் வைக்கிறார்கள்.





நாங்கள் பார்த்த கெச்சாக் நடனத்தில் ஆறு அல்லது ஏழு காட்சிகள் இருந்திருக்கலாம். ராமன் சீதை இருவரின் திருமணம், இருவரும் காட்டிற்கு வருவது, ராவணன் சீதையைக் கவர்ந்து செல்வது, சீதையைத் தேடிச் செல்லும் ராமனுக்கு அனுமன் உதவுவது. இலங்கைக்கு வரும் அனுமன் சீதையிடம் ராமனின் கணையாழியைக் கொடுத்து விரைவில் மீட்கப்படுவீர்கள் என்று சொல்வது, இறுதியில் ராவணன் கொல்லப்பட்டு சீதை விடுவிக்கப்படுவதென ஒரு மணிநேரத்தில் பெருங்கதையை சுருக்கமாக சிறப்பாக நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள். நமது வடமாவட்டங்களின் கூத்தினில் அவ்வப்போது கோமாளி வந்து செய்யும் நகைச்சுவை  செயல்கள் பார்வையாளருக்கும் கதைக்குமான நெருக்கத்தைக் கூட்டும். இந்த கெச்சாக் நடனத்திலுமே அது உண்டு. முக்கியமாக அனுமன் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். பெரும் அரங்கத்தை முழுமையாக பயன்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளவர்களால் மட்டுமே அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியும். இறுதிப் பகுதியில் ராவனனை எல்லோருமாகத் தூக்கி வைத்திருக்க அனுமன்  பாய்ந்து சென்று ராவணனுக்கு மேல் அமர்ந்து அவனைக் கொலை செய்வதுபோல் காட்சி. நாம் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மின்னல் வேகத்தில் அனுமன் பாய்ந்து செல்கிறார்.  இந்த அரங்கின் துவக்கமும் சரி, இறுதிப் பகுதியும் சரி பார்ப்பவர்களைத் திகைப்படையச் செய்கிறது. அதேபோல் ராமன் மற்றும் சீதையாக நடித்தவர்களின் நடன அசைவுகள். பார்க்க எளிமையாகத் தோன்றும் இதனை   நீண்டகாலம் பயின்றவர்களால் மட்டுமே நுட்பமான அசைவுகளை வெளிப்படுத்த முடியும்.  அந்தி சாயும் நேரத்தில் கடலின் பேரோசையைக் கேட்டபடி இப்படியானதொரு நடனத்தைப் பார்ப்பது ஒரு ஆசிர்வாதம் தான்.  ஒரு நாளுக்கு இரண்டு காட்சிகள் மட்டுமே இங்கு நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். அதனால் முன்கூட்டியே  சீட்டுகளை பதிவுசெய்து கொள்வது நல்லது.


இந்தியாவில் நமக்கு முன்னூறு வகைஇயான ராமாயணங்கள் இருப்பது போலவே இந்தோனேஷியாவிலும் வெவ்வேறு வகையான ராமாயணக் கதைகளுண்டு, பாலி, ஜாவா, சுமத்திரா என ஒவ்வொரு தீவிற்கும் பிரத்யேகமான அடையாளங்களோடு இருக்கும் இந்த ராமாயணக் கதைகள் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே இந்தோனேஷியாவில் பரவியிருந்தது. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் அங்கு வருவதற்கு முன்பாகவே இந்து மத அடையாளங்கள் ஆழமாக வேரூன்றி விட்டன. ஜாவா சுமத்திரா மக்கள் இந்த இதிகாசங்கள் இந்தியாவிலிருந்து வந்தவை என்பதைக் கூட ஏற்காத அளவிற்கு இது தங்களது அடையாளமென அளவற்ற பற்றினை வெளிப்படுத்துகிறார்கள்.  1330 ம் வருடத்தில் சீனாவிலிருந்து இந்தியாவின் வழியாக உலகம் சுற்றி வந்த tingkok என்பவரின் வழியாக மஹாபாரதம் இந்தோனேஷியாவிற்கு வந்ததாக வாசிக்கக் கிடைத்தது. சற்றேறக்குறைய ராமாயனத்தின் வருகையும் இந்த காலகட்டத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் இதற்கும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ராசேந்திரச் சோழன் சுமத்திராவினை ஆண்டதை நாம் மறந்துவிடக் கூடாது.


இதேபோல் ubud நகரில் பரோங் என்ற இன்னொரு பாரம்பர்ய நடன நிகழ்ச்சியையும் காணும் வாய்ப்பு அமைந்தது.  மனிதர்களைப் போலவே காட்டில் உள்ள மிருகங்களுக்கு அதீத சக்திகளுன்டு என்பதைப் பிரதிபலிக்கும் படியான நடனம் இது. பரோங் என்பது நன்மைக்கான அடையாளம்.  அதீத சக்திகளுக்கான அரசன் என்பது அவர்களின் நம்பிக்கை. ரங்கடா தீய சக்தி. சீனர்களின் ட்ராகன் நடனத்தைப் பார்த்திருப்போம். பரோங்கிலும் ட்ராகன் போன்ற ஒரு மிருக உருவமே( புலி)  பிரதானமாக வருகிறது.  இந்த பரோங் வடிவத்தில் மஹாபாரதத்தின் ஒரு சிறிய பகுதியை அரங்கேற்றுகிறார்கள். தங்கள் முன்னோர் வழிபாட்டிற்காக வைத்திருந்த கலைவடிவத்தினில் அவர்கள் நிலத்திற்கு சற்றும் தொடர்பில்லாத புராணங்களை எடுத்துக் கொண்டு  நிகழ்த்திக் காட்டுவது அழகான முரண்.  மஹாபாரதத்தின் ஒரு துணைக்கதையாக குந்தியின் மகனை அழிக்க நினைக்கும் ரங்கடா என்னும் அரக்கன்  அரசனின் உடலுக்குள் நுழைந்து அவனைக் கொல்லும்படி உத்தரவைப் பிறப்பித்துவிடுகிறது. காட்டிற்கு அழைத்து வந்து கட்டிவைக்கப்படும் சகாதேவனின் முன்னால் தோன்றும் சிவன் அவனுக்கு சாகாவரத்தை அளிக்கிறார். இதன்பிறகு ரங்கடா வெவ்வேறு மிருக உருவம் எடுத்து வந்து அவனைக் கொல்ல முயல, அவன் எதிர்த்து நின்று போரிட்டு ஜெயிக்கிறான். இறுதியாக ரங்கடா கரடி  உருவம் எடுத்து வருகையில் சகாதேவன் பரோங் என்னும் புலி உருவமெடுத்து அதனோடு போரிடுகிறான். அவன் சண்டையிட்டு வெல்ல காட்டில் குரங்குகள் உட்பட மற்ற மிருகங்கள் உதவி செய்கின்றன.  இதுவும் ஒரு மணி நேரநிகழ்வு தான் .தங்களது தொன்மத்தை மஹாபாரதக் கதையோடு மிக அழகாக பின்னி இந்த நடனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் கெச்சக் என்னை ஈர்த்த அளவிற்கு பரோங் ஈர்க்கவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.  


தொன்மங்கள், பண்டிகைகள், இயற்கை அழகு என எல்லா வகையிலும் பாலி தனிச்சிறப்பான இடம். முக்கியமாக கலைப் பொருட்கள். Ubud நகரில் வெள்ளி மற்றும் மர அலங்காரப் பொருட்கள் விசேடமானவை. மரங்களிலிருந்து உருவாகும் ஏராளமான கலைப் பொருட்களை இங்கு நாம் வாங்க முடியும். விலை அதிகமென்றாலும் இங்கு நீங்கள் பார்க்கக் கூடிய மரச் சிற்பங்களை வேறு எங்கும் வாங்கமுடியாது. அதே போலவே வெள்ளி ஆபரணங்களிலுமே ஏராளமான வடிவங்கள் இங்கு கிடைக்கின்றன. இவையிரண்டையும் விட நான் அதிகம் விரும்பியது பட்டிக் ஓவியங்கள். இந்தோனேஷியாவின் வேறு தீவுகளில்  பார்க்க முடியாத தனித்துவமானவை இந்த ஓவியங்கள். கலைபொருட்களை சேகரிப்பவர்கள் ஓவியங்களின் மீது ஆர்வமுள்ளவர்கள் இங்கு தேடிக் கண்டடைய ஏராளமுண்டு.  இதனோடு நான் வலியுறுத்த விரும்பும் இன்னொரு செய்தி முடிந்தவரை உள்ளூர் உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். அதிலும் பெரிய உணவகங்களைக் கண்டிப்பாக தவிருங்கள்.  அங்கெல்லாம்  சுற்றுலா வரும் ஐரோப்பியர்களுக்காக அவர்கள் விரும்பும் படியான சுவையில் இந்தோனேஷிய உணவுகளைத்தயார் செய்து  வைத்திருக்கிறார்கள்.  சிறிய உணவகங்களில் தான் உள்ளூர் உணவின் அசலான சுவையை நீங்கள் ருசிக்க முடியும். சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்கள் செய்யும் பெரும் தீங்கு ‘குழாய் தண்ணீர் குடிக்காதீர்கள், சிறிய உணவகங்களில் சாப்பிடாதீர்கள் என பரப்புரை செய்வது.  அப்படி சொல்லப்படுவது எல்லாமே  ஸ்பான்சர்களின் வியாபாரக் காரணங்களுக்காகத்தான். நீங்கள் மதுவருந்தும் வழக்கமுடையவராக இருந்தால் தவறாமல் பாலியின் பாரம்பர்யமான சாராயத்தை அருந்த வேண்டும். நம்மூரில் விற்கப்படும் மலிவான  தரம் குறைந்த மதுவெல்லாம் சாபக்கேடு. பிந்தோங் என்ற பியரும் சரி வெவ்வேறு  சேர்மானத்தில் கிடைக்கும் அசலான சாராயமும் சரி சிறப்பானவையாக இருக்கின்றன.


கோ கஜா ஆலயத்தில் புனித நீராடுகிறார்கள். நமது கங்கையில் குளித்தால் பாவம் தீருமென்பது எப்படி நம்பிக்கையோ அதேபோல் இந்தக் கோவிலின் குளத்தில் குளித்தால் பாவம் தீருமென்பது நம்பிக்கை. ஏராளமான ஐரோப்பியர்கள் இந்தக் குளத்தில் குளித்துவிட்டு அதன் பிறகு பூசைகளும் செய்வதைப் பார்த்தபோது  கிழக்கின் மனிதர்களும் மேற்கின் மனிதர்களும் பாவங்களிலிருந்து விடுபடுவதை வாழ்வின் முக்கிய அங்கமாக நினைப்பதிலிருந்து தப்ப முடியாதென புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தோனேஷியாவிற்கும் தமிழர்களுக்கும்  கடந்தகால உறவைப்போல சகமால உறவும் உண்டு. முக்கியமாக ஈழத்தமிழர்களுக்கு. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு அகதிகளாக செல்கிறவர்களுக்கு இந்தோனேஷியாதான் துவக்கப்புள்ளி. நண்பர் தெய்வீகனின் நாடற்றவனின் கடவுச்சீட்டு என்னும் நூலில் இலங்கையிலிருந்து தப்பிக்கும் ஒருவன் இந்தோனேஷியத் தீவொன்றில் சில வருடங்கள் வாழ்ந்து அங்கிருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஒரு கட்டத்தில் இந்தோனேஷியக்காரனாகவே மாறும் சூழலில் எதிர்பாராத நெருக்கடியின் காரணமாக ஆஸ்திரேலியா செல்ல நேர்கிறது. அதன்பிறகு கிறிஸ்துமஸ் தீவில் அவன் வாழ்க்கை என்னவாகிறது என பயணிக்கும் அந்த நூல் கசப்பான பல நிஜங்களை நமக்கு விவரிக்கும். நியூசிலாந்தில் வசிக்கும் எனது நண்பர் ரங்கா சில வருடங்கள் ஜாவாவிலுள்ள மேடானில் வேலை செய்த அனுபவங்களை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். இன்றைக்கும் படகுகளில்  வாழ்வின் மீதான நம்பிக்கைகளைச் சுமந்துகொண்டு ஆஸ்திரேலியாவை நோக்கிச் செல்லும் மக்களுக்கு இந்தோனேஷியா அச்சுறுத்தக்கூடிய ஒரு நிலம். சில வருடங்களுக்கு முன் ஒரு படகைச் சூழ்ந்துகொண்டு  அந்த நாட்டின் கடற்படையினர் கைது செய்ய முயன்றபோது ‘எங்களைக் கைது செய்வதற்குப் பதில் சுட்டுக் கொல்லலாம்’ என ஒரு தமிழ்ப் பெண் கண்ணீரோடு நின்ற புகைப்படம் நம்மைக் கலங்கடித்தது உங்களில் பலருக்கும்  நினைவிருக்கலாம்.


பத்து நாள் பயணத்தில் வாசிப்பதற்கு உள்ளூர் புத்தகக் கடையில் நூலொன்று வாங்கினேன். ஒப்ரேஷன் ப்ளேபாய் என்ற அந்த நூலை எழுதியது ஒரு இங்கிலாந்து பெண்.  பாலியில் நீர்ச்சறுக்கு விளையாட்டு பிரபலம். உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து இதற்காகவே ஏராளமானோர் வருகிறார்கள். இவர்களோடு பழகும் உள்ளூர் இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் வாழ்க்கைக்குப் பழகுகிறார்கள். இதில் சிலர் கிகிலோக்களாகவும் போதை மருந்துகளை ஏற்பாடு செய்து தருகிறவர்களாகவும் மாறி ஒரு கட்டத்தில் அவர்களோடு பயணித்து வெவ்வேறு நாடுகளுக்கு கடத்தல் வேலைகள் செய்யக்கூடிய மாஃபியக்காளாக மாறுவதைப் பற்றி பேசும் புத்தகம். சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார். இந்தோனேசியாவில் போதை மருந்து பயன்படுத்துவது மிகக் கடுமையான குற்றம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனைதான். சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் வசித்த ஈழத்தமிழர் ஒருவர் சுற்றுலாவிற்காக பாலி வந்தபோது அவரிடம் மிகச் சிறிய அளவில் போதை மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் கோரிக்கை வைத்தும்கூட இந்தோனேஷிய அரசாங்கம் மறுத்துவிட்டது.




ஜாவாவும் சுமத்திராவுமே எனது பிரதான தேர்வுகளாக இருந்தபோதும் நான் கார்கியோடு பயணிக்க வேண்டியிருந்ததாலேயே பாலியைத் தேர்ந்தெடுத்தேன்.  இந்த பத்து நாட்களும் எனக்குக் நிறைவானவையே. இந்தப் பயணமே இன்னும் ஒரு வார காலம் நீண்டிருந்தால் நான் செல்ல நினைத்திருந்த வேறு சில இடங்களுக்கும் சென்றிருக்க முடியும். அதோடு mount batur எரிமலையில் மலையேற்றம் செல்ல வேண்டுமென்பது எனது விருப்பம்.  ஆனால் அதற்கு தனியாக திட்டமிட வேண்டும். இதில்லாமல் பாலியின் படபகுதி நகரமான சிங்கராஜாவில் ஏராளமான காலனிய அடையாளங்கள் இன்றுமுண்டு. டச்சுக்காரர்கள் அந்த நகரத்தை எவ்வாறு தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டார்கள் என்பதற்கான வரலாற்றை நாம் அறிய முடியும். சிங்கராஜாவிற்கு செல்வதற்கு அவகாசமில்லாமல் போனதும் கொஞ்சம் ஏமாற்றமே….  என்றாலும் அடுத்தமுறை ஜாவா தீவுக்குச் செல்லவே விரும்புகிறேன். அம்பா நாவல் ஏற்படுத்திய பெரும் தாக்கமும்,  மேடானில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுமே அதற்கான முக்கியக் காரணங்கள்.

226 views
bottom of page