2009 ம் வருடம் ஈழத்தமிழர் தோழமைக் குரலின் சார்பில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்களென பெரும் எண்ணிக்கையில் ஒரு குழு தலைநகர் புதுதில்லியில் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதன் வழியாகத்தான் எனக்கு காந்திராஜன் அறிமுகமானார். பக்கத்து ஊர்க்காரர்கள் என்றளவில் உடனே நெருக்கமாகிவிட்டாலும் ஒவ்வொரு முறையும் அவரைத் தேடிச் சென்று சந்திப்பதற்கான காரணம், வரலாற்றின் மீதும் பண்பாட்டின் மீதும் அவருக்கிருக்கும் அளப்பெரிய ஞானம்தான். அவருடனான ஒவ்வொரு உரையாடலில் இருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். மதுரை மாவட்டத்திலுள்ள மலைகளின் வரலாறுகள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள்தான் கானகன் என்னும் நாவலை எழுத எனக்குத் தூண்டுகோலாக இருந்தது.
தமிழ்நாட்டின் வரலாற்று ஆய்வுகள் இந்தியளவில் கவனிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொல்லியல் துறை ஆய்வுகளின் மிக முக்கியமான முன்னோடிகளில் ஒருவர் காந்திராஜன் . இவர் பாறை ஓவியங்களை கண்டறிந்து ஆய்வு செய்து அவற்றின் தன்மையிலிருந்து ஆதிமனிதனின் வாழ்வியல் சூழலை குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துத் தந்துள்ளார். மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த காந்திராஜன் தமிழ் இணைய கல்வி கழகத்தில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் புத்தகங்கள் வடிவமைப்பிலும் உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். வரலாற்று ஆய்வாளர் மற்றும் தொல்லியல் ஆய்வாளருமான திரு. ஐராவதம் மகாதேவன் ஐயாவின் பல ஆய்வுக் குழுக்களில் காந்திராஜன் இணைந்து பணியாற்றியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க கரூர் மாவட்டத்து புகளூர் கல்வெட்டுகள் ஆய்வுக் குழுவிலும் இடம்பெற்று முக்கிய பங்காற்றியுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால ஓவியங்களை அடையாளம் கண்டுள்ள காந்திராஜன், 12 புதிய குகை ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளார். அவரது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள கவணம்பட்டியைச் சுற்றிலும் மலைகள்தான். திருவிழா காலங்களில் ஊர் மக்களோடு மலையேறிச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தவருக்கு ஒரு வயதிற்குப்பின் யாரும் செல்லாத பாதைகளில் பயணிக்கும் ஆர்வம் மேலிடுகிறது. ஒருமுறை பளியர் இன மக்களின் பகுதிக்குச் செல்லும்போது அம்மக்கள் தங்களின் மலையின் ஒரு பகுதியை சித்திரக் கல் பொடவு என்று குறிப்பிடுவதைக் கேட்டு வியக்கிறார். அந்தப் பெயர் எப்படி வந்திருக்கக் கூடுமென்கிற ஆர்வத்தில் அவர்களோடு மலையேறிச் சென்றிருக்கிறார். பளியர் இனமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே மலையில் மிகப்பெரியதொரு குகை இருந்துள்ளது. ஒரே சமயத்தில் நூறு பேர் வரை அமரக்கூடிய அளவிற்கு பிரம்மாண்டமான அந்தக் குகையின் உள்ளே ஏராளமான ஓவியங்கள் இருப்பதை பார்த்திருக்கிறார். மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அந்த ஓவியங்களைக் கண்டதுதான் அவரது வாழ்வின் முக்கியமான திருப்புமுனை. சென்னை பல்கலைகழகத்தின் தொல்லியல் துறையில் தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள சுவரோவியங்கள் குறித்து ஆய்வு செய்துகொண்டவர் அதன் பிறகு பாறை ஓவியங்களைத் தேடி பயணிக்கத் துவங்கிவிட்டார்.
தொல்லியல் ஆய்வு முயற்சிகள் யாவும் காலப்போக்கில் தொலைந்து போன அல்லது மனித இனம் மறந்து போன வரலாற்று உண்மைகளையும் பண்பாட்டு கூறுகளையும் மீட்டுத் தருவனவாகவும், கலாச்சாரங்களின் பரிணாம வளர்ச்சியை ஆவணப்படுத்துவனவாகவும், மனித இனத்தின் குணாதிசயங்களை ஆய்வு செய்யும் கருவிகளாகவும் இருக்கின்றன. கால ஓட்டத்தில் மனிதர்களாகிய நாம் எதையெல்லாம் தொலைத்தோம் அல்லது மீட்டுக் கொண்டோம் என்பதையும் தொல்லியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளே உணர்த்துகின்றன.
பாறை ஓவியங்களின் மீது வரலாற்றியலாளர்களுக்கு கவனம் திரும்பியது மிக சமீப காலங்களில்தான் என்றொரு இடத்தில் காந்திராஜன் குறிப்பிடுகிறார். அதற்கு முன்பு வரை கல்வெட்டுகளும், நாணயங்களும், நடுகல்களும், சிலைகளும் மட்டுமே தொல்லியல் சின்னங்களாக கருதப்பட்டு வந்ததன. உலகின் முதல் பாறை ஓவியங்கள் 1851ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் எனும் சிற்றூரில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே ஆய்வாளர்களின் பார்வை பாறை ஓவியங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.
தமிழகத்தில் 1978 ஆம் கிருஷணகிரி மாவட்டம் மல்லப்பாடி எனும் ஊரில் முதன்முறையாக பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இங்கு குதிரையின் மீது அமர்ந்துள்ள இருவர் நீண்ட மூங்கில்களால் ஆநிரைகளை ஓட்டுதல் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரே வருவது போன்று வெண்சாந்தினால் தீட்டப்பட்ட ஓவியம் அது. மாடுகளை பட்டிக்கு ஓட்ட இப்படிபட்ட நீண்ட கழிகளை அக்கால மக்கள் பயன்படுத்தி இருக்கலாம். குதிரை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்துள்ளவர் ஒரு கையால் குதிரையை பிடித்து இருக்கிறார் . அவர் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடும் என்பது வரை துல்லியமாக கணிக்கக் கூடிய விதத்தில் ஓவி்யம் கச்சிதமாக வரையப்பட்டுள்ளது. ஓவியத்தில் தொப்பை காட்டப்பட்டுள்ளது. ஒரு கையில் நீண்ட கோலை பிடித்துள்ளார். தலையில் உருமாலை கட்டியுள்ளார். குதிரையின் இருகாதுகள் முன்பகுதி நோக்கி இருப்பதும் . குதிரையின் வாய் திறந்திருப்பதும் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. குதிரையின் ஓவியத்தை தமிழகத்தில் சிறப்பானதாக இங்கே தான் காணமுடியும். இதே போன்று அச்சு அசலாக ஓவியம் அரேபிய பாலைவனத்தின் மண் திட்டுகளில் வரையப்பட்டிருப்பதாக கூறுகின்றார்கள்.
இங்கு உருவங்களை கோட்டோவியங்களாக வரைந்த பின்னர் உட்புறம் வெள்ளை வண்ணத்தால் நிரப்பியுள்ளனர். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இத்தகு பாறை ஓவியங்களின் முக்கியத்துவத்தை தனது நேர்காணல்களிலும் கட்டுரைகளிலும் திரு.காந்திராஜன் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
பாறை ஓவியங்களுக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. மற்ற கலை வடிவங்களும் கைவினை சின்னங்களும் மனிதர்களின் கூட்டு முயற்சியால் உருவாகின்றன. ஆனால் ஓவியங்கள் மட்டுமே தனிமனித சிந்தனையிலும் செயல்பாட்டிலும் உதிப்பனவாக இருக்கின்றன. அவ்வகையில் அவற்றின் தனித்தன்மையும் ஒரு மனிதனின் சிந்தனை மற்றொரு மனிதனின் சிந்தனையிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருந்ததென்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மிக தொன்மையான காலங்களில் வேட்டைச் சமூகத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்களை அச்சுறுத்தும் காட்டு மிருகங்களைக் குறித்த குறியீடுகளை மற்றவர்களை எச்சரிக்கும் விதமாக பாறைகளில் வரைந்து வைத்தனர். பின்னர் காலப்போக்கில் இன்னுமே விரிவாக மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமிடையேயான உறவு, இயற்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள் என வகைப்படுத்தி வரைந்தனர்.
பாறை ஓவியங்கள் மற்ற ஓவியங்களைப் போலவே மூன்று கோணங்களில் இயற்றப்பட்டன(Three perspectives to draw). அவை நேர்க்கோட்டு கோணம், பக்கவாட்டு கோணம் மற்றும் பறவைக் கோணம். இதில் வியப்பான விஷயமாக காந்திராஜன் குறிப்பிடுவது எதுவென்றால், ஆதிமனிதனும் இதே கோணங்களின் அடிப்படையிலேயே ஓவியங்கள் வரைந்துள்ளான் என்பதுதான். சமகால ஓவியன் போலவே ஆதி மனிதனும் சிந்தித்துள்ளான். பாறை ஓவியங்களில் விலங்குகள் பெரும்பாலும் பக்கவாட்டு கோணத்திலும், மனித உருவங்கள் நேர்க்கோட்டு தோற்றத்திலும் மீன் மற்றும் ஊர்வனவை பறவைக் கோணத்திலும் வரையப்பட்டிருந்தன. இதுவே பாறை ஓவியங்களின் பொதுவான கட்டமைப்பு அல்லது உருவாக்க முறையாக இருந்து வந்துள்ளது. மனிதன் தனது பார்வையில் பதிந்த கோணத்தையே ஒவியங்களிலும் பிரதிபலித்தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் முதுமக்கள் தாழி, கல்வெட்டுகள், இலக்கிய ஆதாரங்கள் இவற்றின் மூலம் அதிகபட்சம் மூவாயிரம் வருட வரலாற்றை மட்டுமே நம்மால் அறிய முடியும், ஆனால் குகை ஓவியங்கள் பல்லாயிரம் வருட பழமையான வரலாற்றை அறிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. உலகின் மிகப் பழமையான குகை ஓவியங்கள் நாற்பதாயிரம் ஆண்டுகள் பழமையானவை. தமிழ்நாட்டிலிருக்கும் சில பாறை ஓவியங்களுக்கே இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு உண்டெனச் சொல்லப்படுகிறது. ஆதி மனிதனின் சொத்துகளாக இருந்தவை ஆடு மாடுகள்தான். இதற்காக கொள்ளைகளும் யுத்தங்களும் நடந்துள்ளன. இந்தக் கொள்ளைகளையும் யுத்தங்களையுமே அவர்களின் பெரும்பாலான பாறை ஓவியங்கள் அடையாளப்படுத்துவதாய் இருக்கின்றன.
ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும் பண்பாட்டு எழுச்சியையும் காந்திராஜன் போன்ற ஆய்வாளர்களின் பங்களிப்பின் வழியாகத்தான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடிகளைத் தேடிச் சென்று அவர்களின் வரலாற்றைத் தெரிந்துகொண்டு பதிவு செய்வதையும் நீண்டகாலமாகச் செய்து வருகிறார். எந்த அமைப்புகளின் உதவிகளையும் எதிர்பாராமல் நண்பர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பயணிப்பதுதான் இவரது தனிச்சிறப்பு. பழங்குடி மக்களின் பாறை ஓவியங்களை ஒரு ஆவணப்படமாகவும் தொகுத்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னால் மதுரை புத்தகத் திருவிழாவில் நான்மாடக் கூடல் என்னும் தலைப்பில் தமிழர்களின் வரலாறு பண்பாட்டை விளக்கும்படியான புகைப்படக் கண்காட்சியை நடத்திய பெருமை இவருக்குண்டு. இவர் கண்டுபிடித்த கரிக்கியூர் பாறை ஓவியங்கள் ஒன்பதாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. மிக சமீபத்தில் திருவண்ணமாலை மாவட்டம் வேட்டவலம் அருகிலுள்ள பன்னியூர் கிராமத்தில் கிழக்குப் பகுதி குன்றில் புதிய பாறை ஓவியம் ஒன்றை இவரும் இவரது குழுவினருமாகச் சேர்ந்து கண்டுபிடித்திருந்தனர்.
உலகின் பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பாறை ஓவியங்களுக்கென தனித்துறையே அமைக்கப்பட்டுள்ளன. நாம் நாட்டில் பேராசிரியர்கள் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் கற்றவைகளையே வரலாறென கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது காந்திராஜனின் ஆதங்கம். தமிழ்நாட்டின் வெவ்வேறு மலைப்பகுதியில் சுற்றியலைந்தவன் என்கிற முறையில் எனக்கு சில ஆதங்கங்கள் உண்டு. சமண பெளத்த அடையாளங்களைத் தாங்கி உலகத்தின்பார்வைக்கு எட்டாமல் விலகியிருக்கும் மலைகளில் கூட அந்த ஓவியங்களைப் பார்க்கச் செல்கிறவர்கள் தங்களின் பெயர்களைக் கிறுக்கி வைத்துவிட்டு வருகிற அளவிற்குத்தான் அவற்றின் பராமரிப்பு இருந்து வருகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்த அளவிலேனும் வரலாற்று உணர்வு இருக்க வேண்டும். குகைகளிலும் பாறைகளிலும் பல்லாயிரம் வருடங்களுக்குமுன் வரையப்பட்ட ஓவியங்கள் நமது பெரும் அறிவு பொக்கிஷங்கள். அவற்றை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. கீழடி ஆய்விற்குப்பிறகு பொதுமக்கள், ஊடகங்கள் மட்டுமில்லாமல் அரசுக்குமே வரலாற்று ஆய்வுகளின் மீது தனித்த கவனம் வந்திருப்பது ஆரோக்கியமான விடயம். சமீபத்தில்கூட நமது அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கீழடி ஆய்வ்வுகளின் தற்போதைய நிலைகளை அறிய நேரடியாக ஒருநாள் முழுக்க அங்கு செலவழித்ததை நாம் செய்திகள் வழியாக அறிந்தோம். தமது வரலாறுகள் மற்றும் பண்பாடு குறித்த அக்கறை கொண்டதொரு சமூகம்தான் ஆரோக்கியமான சிந்தனைகளைக் கொண்டதாய் இருக்க முடியும்.
Comments