top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கிடக்கட்டும் கழுதை - யவனிகா ஸ்ரீராம்
ஒரு புனைவெழுத்தாளனுக்கு இந்த உலகின் எல்லா நிகழ்வுகளும் முக்கியமானவை.  அதிகமும் பெருநிகழ்வுகளையே பிரதானமாகக் கொண்டு தங்களது கதைகளை உருவாக்குகிறார்கள். பெருநிகழ்வுகள்  வாசிக்கிறவர்களுக்குக் கடந்த காலத்தின்  துக்கத்தையோ மகிழ்ச்சியையோ நினைவுகூரத்தக்கதாக மாறுகிறது. நினைவு கூறப்படுதலின் வழியாக  அந்நிகழ்வுகள் பெரும்பாலும் ரொமாண்டிசைஸ்  செய்யப்படுவதாகவே மாறுகின்றன.  பெருந்துயரின் மீது எழுதப்படும் பாடல்களும் கதைகளும் அதன் ஆதாரமான பிரச்சனைகளை அகவயமாக அணுகக்கூடியதாகவோ அதற்கான சிறிய விடைகளைக் கண்டடையக் கூடியதாகவோ இருப்பதில்லை. அங்கு நிகழ்வது நினைவுகூறப்படுதல் தான்.  எவராலும் பொருட்படுத்தப்படாத மிகச்சிறிய நிகழ்வுகளை மையப்படுத்தப்படும் படைப்புகள் எனக்கு எப்போதும்  முக்கியமானவை.  அழுக்கும் துர்நாற்றமும் சூழ வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்விலிருக்கும் அன்றாடமே எனக்கு சாகசம். நான் அங்கிருந்து வந்தவன் என்பதோடு ஒரு காலை கோட்டுக்கு இந்தப் பக்கமாகவும் ஒரு காலை இன்னும்  அதே எல்லையிலும் வைத்திருக்கிறவன் என்கிற வரையில் நான் இன்னும் அந்த மிகச் சிறிய உலகின் அங்கமாகவே இருக்கிறேன். அதனாலேயே அவ்வாறான படைப்புகளை எழுதுவதற்கான உந்துதலும் அவ்வாறு எழுதுகிறவர்களின் மீது தனித்த கவனமும் எப்போதும் இருக்கிறது.


கதை சொல்லிக்கு புதிய சொற்களையும்  புதிய உருவகங்களையும் பரிசளிப்பது கவிஞர்கள் தான். நல்லவற்றையும் அழகான அவ்வளவையும் பேசித் தீர்க்கும் கவிதைகளின் மீது ஒவ்வாமை மிகுந்துவிடுகிறது. நதிகள், மரங்கள், பறவைகள், பெண்களின் தனிமை, மழையில் நனையும் சிறுமி, சலிப்பான அலுவலக வாழ்க்கை இவைத் திரும்ப திரும்ப எழுதப்படுவதற்குப் பின்னால் உலகின் மீதான கலைஞர்களின் பார்வை சுருங்கிக் கொண்டே செல்கிறதோ என்கிற ஐயம் எழாமலில்லை.   சோ கால்ட் எலீட் மக்களின் ரசனைகள் மற்றும் தேர்வுகளின் மீதான இந்த ஒவ்வாமை எது அழகானது என்கிற கேள்வியை ஒவ்வொரு முறையும் கேட்கை வைக்கிறது.


எவையெல்லாம் பொதுசமூகத்தால்  அருவருப்பாகப் பார்க்கப்படுகிறதோ, எவையெல்லாம் துரோகமாகவும், பாவங்களாகவும் பார்க்கப்படுகிறதோ அவை எல்லாவற்றின் மீதும் பெருங்காதல் உண்டாகிறது. குற்றவுணர்ச்சியில்லாத குற்றங்களுக்குப் பின்னான மனிதர்களின் மனங்களில் இருக்கும் நேர்மை எவரையும் அச்சுறுத்தக் கூடியதுதான்.  

அரிதாகவே தமிழ் இலக்கியம்  உதிரிகளின் வாழ்வை அவர்களது மனநிலையிலேயே பதிவு செய்கிறது.  


ஏற்கனவே சொல்லப்பட்ட எல்லா அழகானவைகளையும் மறுதலிக்க எழுத வருகிறவனுக்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். குற்றவுணர்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாதவனாகவும் பாவங்கள் குறித்த அக்கறையற்றவனாகவும் அவன் இருக்க வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் கனகச்சிதமான அறிவோடு பகுத்தாய்ந்து தனக்கு வசதியான ஏதாவதொரு  கோட்பாட்டையும் தத்துவத்தையும் துணைக்கழைத்துக் கொண்டு கலைச் செயல்பாடுகளில் ஈடுபடுவது வன்முறை.  


யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளைக் குறித்த விவாதங்களில் அவரை பொதுவாக பின்காலனிய  தேசத்தின் அரசியல் குரலாகக் குறிப்பிடுவதுண்டு. இந்த அரசியல் லேபிளுக்கு அப்பால் அவரது கவிதைகள் அந்தரங்கமான நெருக்கத்தையும் விருப்பத்தையும் உருவாக்கக் காரணம் அதில் மிகுந்திருக்கும் கவுச்சியும். நேரடித் தன்மையும்,  வேறு எவரும் பேச விழையாதவற்றின் மீது அவர் செலுத்தும் வெளிச்சமும் தான். வாசிக்கிறவனைக் கண்கூசச் செய்யும் வெளிச்சமல்ல அது…. நாம் பார்வையை இன்னும் விசாலப்படுத்தக் கூடிய பார்க்கத் தவறியவற்றை அடையாளங்காட்டும்படியான வெளிச்சம்.  அவரது சமீபத்திய  கவிதை நூலான கிடக்கட்டும் கழுதையை வாசிக்கத் துவங்கியபோது முதல் சில பக்கங்களிலேயே மிக முக்கியம் என்றொரு கவிதை என்னை ஸ்தம்பிக்கச் செய்தது.  

 

மிக முக்கியம்

 

தோராயமாக நூறு ராத்தல் எடையுள்ள மனிதன் நான்

குண்டி மற்றும் இடுப்புச்சதை தொடைக்கறி என்றளவில்

கறிக்கோழியைப்போல் இரண்டுபக்க அங்கை உரிப்பையும்

கணக்கிட்டால் சட்டக நல்லிகள் போக ஐம்பத்தைந்து கிலோ

சுத்த இறைச்சி கிடைக்கும்

 

ஒரு ஆட்டுக்குட்டியைப்போல அல்லது சிறிய

பசுங்கன்றினைப்போலவோ எடுத்துச் சுட்டோ அல்லது

பச்சையாகவோ உண்ணலாம்

கொஞ்சம் மிளகுத் தூக்கலாய் இருப்பது உசிதம்

 

வாக்குறுதி என்னவெனில் குலைக்காய்கள் இருதயம் ஈரல்

இரண்டு கொட்டைகள் ( நுரையீரல் நிகோடின் இருக்கும் அதைத் தூர வீசுங்கள். ) மற்றும் குடல்கள் உள்ளிட்டு

உள் உறுப்புகள் எதுவும் நோய் வாய்ப்படாத சத்துள்ள

பண்டங்களாய் போதுமான கொழுப்புடன் இருக்கிறது

 

பொதுவான இறைச்சி விற்பனை எனில்

தலை மற்றும் பாதங்கள் கணுக்கைத் தாண்டிய  கைவிரல்களை

துண்டாக்கிப் புதைத்துவிட்டால்

 

பொது இறைச்சி தயார்

தோலை உரித்தபின் கொக்கிகளில் தொங்கவிடலாம்

 

கூழாக வேகும்படி உள்ளங்கை கால் பாதவிரல்களை

என்காதலிக்கு அவளை தொட்டுத் துயராக்கிய

கொடுமைக்குப் பதிலாக இலவசமாகக்

கொடுத்துவிட்டால் முகுளத்தில் என் இன்பச் சிரிப்புத்

தோன்றி மறையும்

 

வேண்டுகோள் தான்

 

புதைத்துவிட்டாலும் என் தலைக்கறி காதுமடல்கள் மூளை

மற்றும் நாக்கு மிக ருசியானவை போகட்டும்

 

உள் நெஞ்சில் தங்கிய வாழ்நாள் சளியை மேலும்

அடிவயிற்றுப் புழுக்களை நீக்கி

விட்டால் பொரிக்க குழம்பிற்கு ஏதுவான ஆர்கானிக்

இறைச்சி உத்திரவாதம்

நம்புங்கள் எனது உடலை வளர்க்கச் செயற்கை உரங்களை

பயன்படுத்தவில்லை

 

தாய்ப்பால் கோழி முட்டைகள் மீன்கள் கம்பு சோளம்

இவற்றால் வளர்ந்த விலங்கு

 

விலையைப்பற்றி இப்போதெல்லாம் யார்

கவலைப்படுகிறார்கள் தரம் முக்கியம்

 

பவுண்ட் ராத்தல் எல்லாம் போய் கிலோ கிராம் வந்துவிட்டது

வேண்டுமானால் மாற்று உறுப்புக்கான விற்பனைக்கு கண்

விழிகள் உட்பட எதையும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள

 பாகங்களை புரத உணவாய் எடுத்துக்கொள்வது காலத்தில்

நல்லது

 

உடலை மண்ணிலும் நெருப்பிலும் வீணாக இட்டு மூன்றாம்

நாளை புண்ணியார்த்தமாக யார் ஒரு வெங்காயமும் நினை

வொழிய வேண்டியதில்லை

 

அந்த வகையில்

புரதத்தேவைக்கென பசியாற ஏதுவான நல் இறைச்சி நான்

 

பிறகு இவ்வளவு தேவைக்குப் பயன் பட்டதன்றி ஏதொரு

விளைவும் என்னால் இப்பூமியில் இருப்பதில்லை

 

இந்த இறைச்சிக்கு வரிகள் ஏதும் போட வேண்டாம்

அதைக் கட்டி வாழ்நாள் சலித்துப்போய் விட்டது

 

போக இந்த ஒப்பந்த லாபத்தை என் வரிகளுக்கு

தரவேண்டியதில்லை

 

ஒரு பொது வருமானம் என்பதாய் நீதிகள் சட்டங்கள் மேலும்

தேச நலன்களுக்கு என

எடுத்துக்கொள்வது குறைந்தபட்ச

பயன் மதிப்பு

 என ஒப்புகிறேன்

 

மறந்துவிட வேண்டாம் எலும்பு நீக்கிய ஐம்பத்தைந்து அல்லது

ஏழு கிலோ கூடுதல் இறைச்சி

 

மிக முக்கியம் தம்மத்தின்

இறைச்சியைத் தின்ன பயம் வேண்டியதில்லை

அன்பர்களே

இந்த மண்ணில் உயிர் வாழ வேண்டின் எதையும்

வீணாக்காதீர்கள்

 

 

 

172 views

コメント


bottom of page