பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘சீமுர்க்.’கை முன்வைத்து...
புரிந்துகொள்ள முடியாமைகளுக்கு எதிராக மனிதன் செய்யும் கலகமே கலை என ஓரிடத்தில் போர்ஹே குறிப்பிடுகிறார். கதைகளின் வழியாக ஒருவன் தொடர்ந்து முன்னிறுத்துவது யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான தூரத்தைதான். வாழ்வின் மீதான கேள்விகளை குழப்பங்களை எந்தவிதமான தீர்வுகளையும் எதிர்பாராமல் கதைகளாக்கும் போது எழுதுகிறவனுக்கும் வாசிக்கிறவனுக்குமான அந்தரங்கமானதொரு உரையாடல் நிகழ்கிறது. கலை திருப்தியடைகிறவர்களுக்கானதல்ல, தேடலும் உரையாடலும் வேண்டுகிறவர்களுக்கானது. ஒன்றை வாசித்து திருப்தியடைகிறவன் ஒரே நேரத்தில் எழுதுகிறவனையும் அவன் எழுதியவற்றையும் கொலை செய்கிறான். தொந்தரவு செய்யாத, அந்தரங்கமான குழப்பங்களை நோக்கின ஒரு தேடலை உருவாக்காத படைப்புகள் பெருகிவிட்ட காலத்தில் இந்தக் காலகட்டத்தின் மனிதர்களின் கதைகளை எழுதுவது முக்கியமானது.
நிறைய அலைகிறவன் என்கிற வகையில் எனது பயணங்களில் நான் பார்ப்பது சலிப்பான மனித முகங்களை. ஒரே மாதிரியான வாழ்வை, அதன் தீர்க்க முடியாத பிரச்சனைகளை, உடலில் ஒரு பெரும் தழும்பைப் போல் படிந்துவிட்ட சலிப்பூட்டும் அன்றாடங்களை சுமக்கும் மனிதர்கள் புதிய சிந்தனைகளற்றவர்களாக மாறியிருக்கிறார்கள். முக்கியமாக பெருநகரங்களி வந்து சேரும் வெவ்வேறு நிலத்தைச் சேர்ந்த மனிதர்களின் சோர்வும் எதுக்களிப்புகளும் அயர்ச்சியூட்டுகின்றன. நகரங்கள் ஒரு புறம் மிகுதியானவற்றின் திகைப்புகளிலிருந்து மீளமுடியாமல் நிரம்பி வழிவதாகவும், மற்றொரு புறம் பெரும் தேவைகளோடு வெறுமையில் காத்துக் கொண்டிருப்பதாகவும் குழப்பமான முகத்தைக் கொண்டிருக்கின்றன. இதில் எந்த நகரங்களும் விதிவிலக்கானவையல்ல. நேற்றைய மனிதனின் பிரச்சனைகளைப் போலில்லை இன்றைய மனிதனின் பிரச்சனைகள். எல்லாவற்றையும் விட அவன் தன்னுடன் போரிட்டு மீள்வதே பெரும் சவாலானதாக இருக்கிறது.
தமிழ் சிறுகதைகளின் இயங்குதளங்களில் நகரம் குறித்தான பார்வையென எடுத்துக் கொண்டோமானால் அதில் கொண்டாட்டத்தைத் தவிர எல்லாம் இருக்கும். அதிலும் குற்றங்களும் சலிப்புகளும் அதிகமெனச் சொல்லலாம். அசோகமித்திரனின் கதைகளில் வந்த பெருநகர மனிதர்கள் எளிமையானவர்கள், அவர்களின் சவால்களும் எளிமையானவை. மிகப் பெரிய கேள்விகளோ தத்துவ குழப்பங்களோ இல்லாத அந்த எளிமைக்குள் அவ்வப்போது வந்துபோகும் அசாத்தியமான தருணங்கள்தான் அவரது கதைகளை இன்றளவும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. அபூர்வமாகவேதான் அவரது கதைகளிலும் மனிதர்கள் சிரிக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கோபிகிருஷ்ணன், ஜி. நாகராஜன், புதுமைப்பித்தன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் என நகரங்களின் கதைகளை எழுதியவர்களின் வரிசை ஒன்றை உருவாக்கினோமானால் ஒவ்வொருவரு காலகட்டத்திலும் தமிழ் சமூகத்தின் நகர வாழ்க்கை கண்ட தோல்விகளை ஏமாற்றங்களை எல்லாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். மகிழ்ச்சியான மனிதர்கள் குறைவான கதைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்த நீண்ட வாசிப்பில் எனது அனுமானமாக இருக்கிறது. பாலசுப்ரமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பான சீமுர்க் பெருநகர மனிதர்களைக் குறித்த ஒன்பது கதைகளோடு வெளியாகியிருக்கிறது. ‘நீத்தார்’ என்னும் ஒரு ஒரேயொரு கதை மட்டும் நாஸ்டாலஜியா வகையில் வரக்கூடுமென்றாலும் அங்குமே கடந்த காலத்திற்குள் பயணிக்கும் கதைசொல்லி பெருநகரத்தால் உருவான ஒருவனாகவே இருக்கிறான். இந்தத் தொகுப்பின் அத்தனைக் கதைகளுமே தான் என்னும் தன்னிலையிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. தீவிரமான சில இடங்களில் கதையின் தன்மையிலிருந்து விலகி ஒரு டைரிக்குறிப்பின் வாசிப்பனுவமும் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் இந்த டைரிக்குறிப்புமே அன்றாடங்களைப் பதிவு செய்யும் சராசரி மனிதனின் டைரிக் குறிப்பாக அல்லாமல் வாசிக்கிறவனின் மனதை ஊடறுத்துச் செல்லும் நுட்பமான கேள்விகளோடு இருக்கின்றன.
இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு தனித்துவமான குணமுண்டு. பெங்களூரு நகரத்தை ஒரு குட்டி இந்தியாவாக நாம் கருதலாம். எல்லா மாநிலத்தவர்களும் வந்து வசிக்கக் கூடிய இந்த நகரத்தில் எப்படி வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு கலாச்சாரங்கள் இருந்தாலும் அதன் மைய இழை எப்போதும் கன்னடர்களுக்கான குரலை முன்னிறுத்துவதை நம் கவனிக்க முடியும். இரு திசைகளிலிருந்தும் எழும் இந்த பெரும் முரணை வேறு நகரங்களில் நாம் பார்ப்பது அரிது. திடீரென உருவான பொருளாதார வளர்ச்சியால் அந்நகரம் பெரும் கலாச்சார மாற்றங்களை மட்டும் எதிர்கொண்டிருக்கவில்லை, நவீன மனிதர்களின் புதிய பிரச்சனைகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. பனிமூடிய சிகரங்களும் கதையில் ஒரு புத்தகக் கடையின் நிலத்தடி வசிப்பிடத்தில் நேபாளி ஒருவன் பஞ்சம் பிழைக்க வந்திருக்கிறான். அவனோடு நட்பாகும் ஒரு தமிழன் பொருளாதார ரீதியில் சற்றே மேம்பட்ட வாழ்க்கையைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவனும் பஞ்சம் பிழைக்க வந்தவனாகவே இருக்கிறான். இந்த ஒற்றுமையைத் தாண்டி அந்தக் கதையின் இழையானது ஒரே நகரின் வெவ்வேறு பொருளாதாரப் பின்னனி கொண்ட மனிதர்கள் எதிர்கொண்ட ஒரே விதமான பிரச்சனையைப் பேசுகிறது.
கதையை தன்னிலிருந்து சொல்லும் போது இயல்பாகவே எழுத்தாளனுக்குள் ஒரு சுயதணிக்கை உருவாகும். திட்டமிட்டு சில செய்திகளைச் சொல்லியும் சொல்லாமலும் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகளுண்டு. இந்தக் கதையிலுமே கதைசொல்லி எதிரிலிருப்பவனின் வாழ்வைக் குறித்த ரகசியங்களை நமக்கு நேரடியாகச் சொன்னாலும் தனது ரகசியத்தை நேரடியாகச் சொல்லியிருக்கவில்லை. ஒரே நேரத்தில் தெருவோர பூனையாகவும் திடீரென வந்து நிற்கும் புதிய மனிதனாகவும் உருமாறி ஒருவன் கதை சொல்லியின் ரகசியத்தை நமக்கு அறியத் தருகிறான். கவனமாகப் பார்த்தால் அந்த வினோத மனிதன் வாசிக்கிறவனாகவே இருக்கலாமென நமக்குத் தோன்றுகிறது. புனைவிலிருந்து கதை சொல்லி தன்னைத் துண்டித்துக் கொண்டு வாசிக்கிறவனை மறைமுகமாக கதைக்குள் கொண்டுவரும் இந்தத் தன்மை முக்கியமானது.
விடுமுறை தினத்தில் ஒரு அனார்கிஸ்ட் என்ற கதையில் வரும் பேராசிரியர் ரமேஷ் ப்ரேமின் ஒரு கதையில் வரும் பேராசிரியரை நமக்கு நினைவுபடுத்துகிறார். ஆனால் பாலாவின் முந்தயைத் தொகுப்புக் கதைகளையும் வாசித்ததன் அடிப்படையில் வைத்துப் பார்க்கையில் அவரது கதைமாந்தர்கள் எவரும் பொருளாதார வறுமையில் இருப்பவர்கள் அல்ல. தத்துவத்தின் வறுமையில் இருப்பவர்களெனக் கொள்ளலாமா? அவரே ஒரு கதையில் குறிப்பிடுவதுபோல் எப்போதும் ப்ராண்டட் உடைகளை அணிந்தாலும் சரியாக நகம் வெட்டினாலும் அழுக்கு ஷூவையும் அழுக்கு முதுகுப் பையையும் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு குழப்பமும் சிக்கலுமானவர்கள். இந்தத் தொகுப்பின் கதை முழுக்க நமக்குக் காணக்கிடைப்பது பெருநகரத்தில் தனக்கென நிரந்தரமாக ஒரு இடத்தைத் தேடி அலையக்கூடிய மனிதர்களைத்தான். சற்றேறக்குறைய எல்லாக் கதைகளிலுமே தனக்கான வசிப்பிடத்தைத் தேடி அலையக்கூடிய மனிதர்களை நாம் பார்க்க முடிகிறது.
பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு தனக்கானதொரு இடமென்பது எப்போதும் ஒரு கனவுதான். சிறிய கிராமங்களிலும் நரங்களிலும் ஓடியாடி விளையாடி சுதந்திரமாக இருந்தவர்கள் கிடைத்த வேலையைப் பற்றிக்கொண்டு நகரத்தில் ஒரே அறையில் நான்கைந்து பேருடன் வசிக்க நேரும் போது தங்களுக்கென அந்தரங்கமில்லாமல் போக நேர்கிறது. தனக்கு மட்டுமேயான ஒரு வீட்டை ஒருவன் உருவாக்கிக் கொள்ள ஒரு நகரத்தில் குறைந்தபட்சம் பத்து வருடங்களேனும் ஒருவன் உழைத்துத் தேயவேண்டியிருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் தனக்கான எல்லா விருப்பங்களையும் ஒதுக்கி, தியாகம் செய்தே ஆக வேண்டுமென்பது மனிதன் தனது இயல்பிற்குச் செய்துகொள்ளும் வன்முறை. ஒரு விடுமுறை நாளை என்னசெய்வதெனத் தெரியாத சலிப்போடு கதைசொல்லியும் அவரது நண்பரும் நகரில் இன்னொரு எல்லையிலிருக்கும் நண்பரின் நண்பரைச் சந்திக்கச் செல்கிறார்கள். அந்த மனிதர் ஒரு பேராசிரியர். லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இலக்கியம் வாசிக்கத ஒரு சராசரி மனிதனுக்கு குறைந்தபட்சமேனும் நகரங்களில் விடுமுறை நாளை எளியக் கொண்டாட்டங்களின் மூலம் கடக்க முடியும். இலக்கியம் வாசிக்கிறவர்கள் பாவப்பட்டவர்கள்தான். பேராசிரியர் வேலையை உதறிவிட்டு தனது ஆய்வில் கவனம் செலுத்துவதாகச் சொல்கிறார். அந்த மூவருக்கும் இடையிலான மது அமர்வு உரையாடல்கள் மூன்று வெவ்வேறு உலகங்களை நமக்கு அறியத் தருவதோடு நான்காவதாக வேலைக்குச் செல்லும் மனைவி அவளோடு வசிக்கும் வேலைக்குச் செல்லாத கணவன் என்கிற இன்னொரு உலகையும் காட்சிப்படுத்துகிறது.
’மனிதனுக்குக் கொஞ்சமே போதுமானது.எதுவுமே குறைவான அளவில் கிடைத்தாலே போதும். நாம் நம்மை ஏதோ தெய்வ நிலைக்குக் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். இந்த பூமியைக் காத்து வேறு காலத்தில் பாதுகாப்பாக மற்றொருவரின் கைகளூக்குத் தரும் பொறுப்பு நமக்கு இருப்பதாக நம்புகிறோம்.’ எனத் தொடங்கி பேராசிரியரின் உரையாடலில் அரசு மக்கள் உழைப்பு குறித்தான பெரும் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் கதையின் இறுதியில் பேராசிரியருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் நிகழும் உரையாடல் இல்லாத ஒரு சண்டை அவ்வளவு நேரத்திற்குமான தத்துவார்த்த விசாரணைகளை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து மீண்டும் சூன்யத்திலேயே முடித்துவிடுகிறது.
தலைப்புக் கதையான சீமுர்க் கதை சொல்லியின் கதையாகத் துவங்கி பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்யியலாளரான கஸ்வினியின் கதையாக விரிகிறது. தேடல் எப்போதும் குழப்பங்களையே நமக்குத் தருகிறது. குழப்பங்களிலிருந்து விடுபடுவதற்கான தொடர்ந்து போராட்டங்கள் சிறிய குழப்பங்களிலிருந்து பெரும் குழப்பங்களை நோக்கி நம்மை நகர்த்துகிறது. விஞ்ஞானக் கூடங்களில் நிகழும் ஆய்வுகளில் முடிவுகள் அல்ல, ஆய்வின் ப்ராசசே முக்கியமானது என்பதைப் போல் தேடலின் முடிவில் நமக்குக் கிடைக்கும் விடைகளல்ல, அதற்கான பயணத்தில் கண்டுகொள்ளும் ஒவ்வொன்றுமே முக்கியமானது. நீத்தார் என்னும் கதை தனது ஊரை, முன்னோர்களின் நினைவுகளை, அவர்களது கடந்து காலத்திலிருந்து தனக்கான அடையாளங்களை உருவாக்கிக் கொள்ளும் முனையும் ஒருவனைப் பற்றிய கதையாக விரிகிறது. கடந்த காலத்தின் மீதான நம்பிக்கையென்பது கதை சொல்லிக்குக் கிளர்ச்சியானதுதான் என்றாலும் தத்துவங்களை நம்புகிற பின் நவீனத்துவத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற ஒருவருக்கு அதுவாக என்னவாக இருக்குமென்கிற கேள்வி எனக்கு சுவாரஸ்யமானதாகப் படுகிறது. கருடன், பெருமாளை வணங்குதல் வீட்டில் நடைபெறும் சடங்குகள் யுகாதிக் கொண்டாட்டம் இதையெல்லாம் கொண்டு இந்தக் கதையை இன்றைக்கிருக்கும் மேலோட்டமான பார்வையில் சாதிய அபிமானம் கொண்ட கதையாகக் கூட சித்தரித்து விடமுடியும். ஆனால் சாதியைக் குறித்த உரையாடலே இல்லாமல் இன்றைக்குக் கதையைச் சொல்வது சாத்தியமா என்கிற கேள்வியையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் ஊரைப் போலவே நகரங்களிலும் சாதியுண்டு. அது என்னவாகப் பார்க்கப்படுகிறது என்பதற்கு இன்னொரு கதையில் ஒரு சம்பவம் வருகிறது.
அடிக்கடிச் சென்று வரும் நண்பனின் வீட்டில் கதைசொல்லி ஒருபோதும் சாப்பிடுவதில்லை. இதுகுறித்து உரையாடும் நண்பனின் மனைவி நாங்க எஸ்ஸின்னு உங்களுக்குத் தெரியுமா? என பட்டும் படாமல் கேட்கிறார். கதை சொல்லி இல்லை என்று சொல்லிவிட்டு அன்று அந்த வீட்டில் காஃபி அருந்துகிறார். எல்லா நகரங்களிலும் சாதி கேட்கப்படுகிறது அல்லது சொல்லப்படுகிறது. அது இயல்பான உரையாடலாக இல்லாமல் அச்சமாகவும் அதிகாரமாகவும் மாறும்போதுதான் சிக்கலாகிறது. பெருநகரங்களை நிறைத்திருப்பவர்கள் எல்லோரும் சாதியைச் சுமந்துகொண்டு ஊர்களில் இருந்து வந்தவர்கள்தான் என்பதால் இந்தத் தொடர்ச்சியிலிருந்து அத்தனை எளிதில் கடந்து வரமுடியாது. உள்ளடக்கித்திலும் சொல்முறையிலும் முக்கியமான கதையாக நீத்தாரைக் குறிப்பிடத் தோன்றுகிறது.
தொடுகை மற்றும் நினைவுத் திரையில் கருப்புப் பூனை என்ற இரண்டு கதைகளும் தனித்துவமான கதைகளாகத் தெரிந்தன. தொடுகையில் தான் கதைசொல்லியின் முழுமையான பெருநகர அலைச்சலை நாம் கண்டுகொள்ள முடிகிறது. மனைவியைப் பிரிந்த காலகட்டத்தில் உறக்கமின்மையாலும் சோர்வாலும் மன அழுத்தத்தாலும் பீடிக்கப்பட்ட மனிதர் நகரின் வெவ்வேறு நண்பர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்குகிறார். பொருளாதாரச் சூழலும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தாலும் அதையும் மீறின ஒன்று உண்டு. ஒரு வயதிற்குப் பிறகு மனிதனின் அதீதத் தேவையாக இருப்பது சக மனிதனின் அரவணைப்பு. குறிப்பாக உறவுகளிலிருந்து பிரிந்தவர்களின் மனங்கள் கொடுமையானவை. தன்னைத் தானே வேட்டையாடிக் கொள்ளும் மிருகத்தைபோல் ஆபத்தானவை. எப்போதும் குற்றவுணர்ச்சியாலும் தோல்வியாலும் சோர்ந்துபோன அந்த மனதை சின்னதொரு தொடுகை எத்தனை ஆறுதலடையச் செய்யக் கூடுமென்பதை மிகச் சிறப்பாக இந்தக் கதை வெளிப்படுத்தியிருக்கிறது.
நினைவுத் திரையில் கருப்புப் பூனை கதையில் கதை சொல்லி இரண்டாம் பட்சமாகி அவர் வசிக்கும் அடுக்ககத்தில் வசிக்கும் மத்திம வயதுப் பெண் ஒருத்தி முக்கியப் பாத்திரமாகிறாள். கணவனையும் குழந்தையையும் பிரிந்து தனித்து வாழும் அந்தப் பெண்ணின் சோர்வும் மனப்போராட்டங்களும் எதிர்வீட்டில் வசிப்பவர்கள் மேல் அவளுக்கு வரும் ஆத்திரமும் இந்தத் தொகுப்பின் மற்ற கதைகளை வைத்துப் பார்க்கையில் இங்கு பெண்ணாகியிருப்பது கதைசொல்லிதானோ என்கிற சந்தேகத்தை நமக்குத் தருகிறது. மற்ற கதைகளில் எல்லாம் அவனுக்கு ஏதோவொரு வகையில் ஆறுதல் கிடைத்துவிடுகிறது. ஆனால் இந்தக் கதையில் பூனையைக் கொன்று எதிர்வீட்டில் வசிக்கும் அந்தப் பெண் பெரும் அச்சத்தைத் தரக்கூடியவளாய் மாறுகிறாள். சாதாரண மனிதன் என நாம் வகைப்படுத்தும் எல்லோருமே சாதாரணமானவர்கள் அல்ல. இந்தக் கதையின் இறுதிப் பகுதியை வாசித்தபோது உடலில் நடுக்கம் கண்டது.
பெரும் வன்முறைகளை சிறுவயது முதல் பார்த்தவன் என்றாலும் அவையெல்லாம் அந்த நேரத்தில் வெளிப்படும் கோவத்தின் விளைவுகளால் உருவானவை என்பதால் அதன் தீவிரத்தைக் கடந்து வந்துவிட முடிகிறது. இங்கு அந்தப்பெண் செய்யும் காரியமானது திடீர் கோவத்தினால் உருவானதல்ல. அவள் அதனை மிகக் கவனமாகச் செய்கிறாள். கண்கானிப்புக் கேமராக்கள் இருப்பதை அறிந்தும் செய்கிறாள் என்கிறபோது அது தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கான எச்சரிக்கையாக மாறுகிறது. இந்தக் குரூரம் தான் ஆகயிறுதியாய் பெருநகர மனிதர்களின் சோர்வும் சலிப்பும் உருவாக்கக் கூடியதாய் இருக்கிறது.
இதன் கடைசிக் கதையில் கடைசி பத்தியில் ஒரு வரி வருகிறது. கிளாரிஸ் லிஸ்பெக்டரின் எச்சரிக்கையாக ‘whoever imitated christ would be lost – lost in the light, but dangerously lost. Christ was the worst temptation.’ இப்பொழுது ஒட்டுமொத்தமாக இந்தத் தொகுப்பின் கதைகளை பின்னோக்கி வாசித்தால் நமக்கு வேறுவிதமான புரிதல் கிடைக்கலாம்.
Comments