top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கேத்தன் மேத்தாவின் மிர்ச் மசாலா – எதிர்ப்பின் அழகியல்


சினிமா மனித சமுதாயத்தின் பிரிக்க முடியாத அங்கமாய் மாறியதற்கு முக்கியமான காரணம், அது மக்களின் வாழ்விற்கும் கலைக்குமான தொடர்பை மிகவும் நெருக்கமாக்கியதுதான். ஓவியங்களும் இலக்கியங்களும் இசைத் தொகுப்புகளும் மனிதர்களின் ஆன்மாவோடு அந்தரங்கமாக உறவு கொண்டிருந்த போதும், சினிமா அவை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் யதார்த்த உலகைப் போலவே இன்னொரு உலகை சிருஷ்டித்துக் கொள்ள தூண்டியிருக்கிறது. எது நல்ல சினிமா? எது மக்களுக்கான சினிமா என்பதையெல்லாம் தாண்டி சினிமா மனித சமூகத்தின் வளர்ச்சியில் என்னவிதமான சிந்தனை மாற்றத்தையும் கற்பனை வளர்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது என்கிற உரையாடல்தான் இப்போது முக்கியமானது. பல்லாயிரம் வருடங்களாய் மனித பரிணாம வளர்ச்சியில் நிகழாத எல்லா அற்புதங்களும் கடந்த நூறாண்டுகளில் நிகழ்ந்த விஞ்ஞானப் புரட்சியால் நிகழ்ந்திருக்கிறதென்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அந்த அற்புதங்களில் முதன்மையானது சினிமா என்னும் இந்தக் கலைவடிவம்.

என் பதினைந்தாவது வயதிலிருந்து நான் மாற்று சினிமாக்களையும் உலக சினிமாக்களையும் கண்டு வருகிறேன். இன்றைக்கு இணையம் எல்லாவற்றையும் நமக்கு நெருக்கமாகக் கொண்டுவந்திருப்பதாகத் தோன்றினாலும், அவை சிந்தனை முறையில் நம்மை நுகர்வோராக மட்டுமே மாற்றியிருக்கிறது என்பதுதான் கசப்பான நிஜம். அது சினிமாவைப் பார்ப்பதற்கும் பொருந்தும். நான் இந்த மாதியான திரைப்படங்களைப் பார்க்க வேண்டுமென்கிற தேடலை அடித்து நொறுக்கி தினமும் பல்லாயிரக் கணக்கான வணிக சினிமாக்களை அமேஸான், நெட்ஃபிளிக்ஸ், முபி என இன்னும் ஏராளமான தளங்கள் கொட்டிக் கொண்டிருக்கின்றன. அதிலும் முபி உலக சினிமா ரசிகர்களுக்கான தளம். ஆனால் அவர்கள் எவ்வளவு தந்திரமானவர்களென்றால், இந்தியாவிலிருக்கும் ஒருவனும் மேற்குலக நாடுகளில் இருப்பவர்களைப் போல் பணம் கட்டித்தான் படம் பார்க்கிறான். ஆனால் மேற்குலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் வருகிற படங்கள் இங்கு நமக்கு வருவதில்லை. நமது ரசனை குறித்து அவர்களுக்கு இருக்கும் புரிதலில் கூட ஒருவித ஆதிக்க மனோபாவம் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் உலகின் எந்த நாட்டுத் திரைப்படத்தையும் பார்ப்பதற்கான வசதிகள் உள்ள இந்தச் சூழலில் தான், முன்னைவிடவும் திரைப்படங்களைக் குறித்த முறையான உரையாடல் அவசியமாகிறது. எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாதென்கிற அடிப்படை புரிதல் திரைப்படங்கள் குறித்த புரிதல்களையும் புதிய வெளிச்சங்களையும் நமக்குத் தரக்கூடும்.


தமிழ்ச் சூழலில் சிறந்த உலகத் திரைப்படங்கள் குறித்து அறிமுகம் செய்யப்பட்ட அளவிற்கு சிறந்த இந்தியத் திரைப்படங்களைக் குறித்தான அறிமுகம் நிகழ்ந்திருக்கவில்லை. ரேவின் பதேர் பாஞ்சாலியும், கட்டக்கின் மேஹ தஹ தாரவும் அடூரின் படங்களும் தான் திரும்பத் திரும்ப பேசப்படுகின்றனவே தவிர அவற்றைத் தாண்டின விசாலமான அறிமுகங்கள் நிகழ்ந்திருக்கவில்லை.

எந்த அடிப்படையில் ஒரு திரைப்படத்தை சிறந்த திரைப்படமென வரையறுப்பது? என்னளவில் எளிமையான அளவுகோல் ஒரு திரைப்படம் அது சார்ந்த சமூகத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பொறுத்ததுதான். சிறந்த இந்திய திரைப்படங்கள் பெரும்பாலானவற்றிற்கும் பொதுத்தன்மை ஒன்று உண்டென்றால் அது அந்தப் படங்களில் வெளிப்பட்டிருக்கும் இந்தியர்களின் வறுமைதான். இந்த வறுமை வெறுமனே புனைவல்ல, ப்ரிட்டிஷ் ஆட்சியின் இருநூறாண்டுகால சுரண்டல்களின் விளைவாய் உருவான கடும் பஞ்சத்தால் வந்த வறுமை. ஜப்பான் 1900-ம் வருடம் வரையிலும் பொருளாதாரத்தில் மிகச்சாதாரண நாடுதான், அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக உருவெடுத்ததற்குக் காரணம், அந்நாடு அண்டை நாடுகளுடன் நிகழ்த்திய போரும், அந்த போரின் விளைவாய் அவர்கள் மேற்கொண்ட சுரண்டலும்தான். அப்படியானால் இருநூறாண்டுகாலம் இந்தியாவை ஆண்ட ப்ரிட்டிஷ்காரர்களின் சுரண்டல் எத்தகையது என்பதை நாம் யோசிக்க வேண்டும். சசி தரூரின் இந்தியாவின் இருண்ட காலம் நூல் இதைத்தான் ஆதாரங்களுடன் விவரிக்கிறது. ரித்விக் கட்டக், சத்யஜித் ரே, மிர்னாள் சென், மணி கெளல் உட்பட தலை சிறந்த இந்திய இயக்குநர்கள் இந்த வறுமையின் பின்னனியில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்கள்.


கேத்தன் மேத்தாவின் “மிர்ச் மசாலா” 1940 களில் ப்ரிட்டிஷ் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிகழும் கதை. வெக்கையும் வறுமையும் நிரம்பிய இந்தியாவின் மிக வறண்ட பிரதேசமான கட்ச் குடா பகுதியில் வாழ்ந்த மனிதர்களே இந்தக் கதையின் பிரதானக் கதாப்பாத்திரங்கள். Chunlilal madia வின் குஜராத்திய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமிது. பெண்களின் மீதான வன்முறை இயல்பானது என்கிற எண்ணம் இந்திய சமூகத்திற்குள் மிக ஆழமாய் வேரூன்றிப் போயிருக்கிறது.


பெண்கள் குறித்த எல்லா புனிதங்களையும் வரலாற்றில் கட்டமைத்தவர்கள் ஆண்கள். நமக்கு கன்னிமார் சாமிகளாகவும், காவல் தெய்வங்களாகவும், தேவதைகளாகவும் சொல்லிக் கொடுக்கப்பட்ட பெண் தெய்வங்களின் கதை துயரமானது. பெண்கள் ஆண்களுக்கானவர்கள் என்பதன் நீட்சிதான் எந்த வகையான உறவென்றாலும் அங்கு அதிகாரம் ஆண்களிடமே இருக்கிறது. தாயும், சகோதரிகளும் மனைவியும் தெய்வத்திற்கு ஒப்பானவர்களென்கிற விதந்தோதல்களுக்குப் பின்னால், அவர்களைத் தங்களின் உடமையாக பார்க்கும் ஆண்களின் சுயநலமே மிஞ்சியிருக்கிறது.

வறண்ட பாலை நிலத்தில் வெயில் மட்டுமே நிரம்பியிருக்கும் அந்தக் கிராமத்தின் வரிவசூல் அதிகாரியாக (சுபேதார்) நஸ்ருதீன் ஷா வந்து சேர்கிறார். அன்றைய காலகட்டத்தில் ப்ரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரி ஒருவனுக்கிருந்த அதிகாரமென்பது எல்லையில்லாதது. தன் ஆளுகைக்குட்பட்ட எல்லையில் சூரியனுக்குக் கீழிருக்கும் அத்தனையும் தனக்கே சொந்தமென்கிற எண்ணம் அவர்களுக்குண்டு. இந்த சுபேதாரும் அப்படித்தான் நடந்துகொள்கிறான். அவன் அந்த ஊருக்கு வந்த முதல் நாளில் ஏரியில் நீரெடுத்துக் கொண்டிருக்கும் ஸ்மிதா பட்டீலைப் (சோன்பாய் ) பார்க்கிறான். இந்தத் துவக்கக் காட்சிகள் அந்தக் கிராமம் இந்த உலகின் விஞ்ஞான வளர்ச்சிகளிலிருந்து எத்தனைதூரம் பின்னோக்கி இருக்கிறதென்பதைப் புரியவைக்கும் விதமாக நிறைய வைட் ஆங்கிள் ஷாட்களிலேயே கதையை சொல்லி இருக்கிறார்கள். சுபேதார் எடுத்து வரும் கிராமஃபோனை அந்த கிராமத்துவாசிகள் காணக்கிடைக்காத ஆச்சர்யமாய்ப் பார்ப்பது நிறையக் காட்சிகளில் வருகிறது. சாலைகளும் வாகனங்களும் கிராமங்களுக்கு வந்தபோது இல்லாத ஆச்சர்யங்கள் இசைத்தட்டுகளும் சினிமாவும் வந்தபோது மக்களிடம் இருந்தது.


நிலச்சுவான்தார்களைச் சார்ந்திருக்கும் எளிய மக்கள் என்கிற அளவில் ஊர் அமைப்புகள் இருந்த காலமது. ஒவ்வொரு ஊரிலும் நிலத்திற்கு உரிமையாளர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாகவும் அவர்கள் நிலங்களில் உழைத்து காலம் முழுக்க அவர்களால் சுரண்டப்படுகிறவர்களாக பெரும்பாண்மையான மக்களும் இருந்தனர். சுபேதருக்கு அடுத்த அதிகாரம் கொண்டவனாய் அந்த ஊர்த் தலைவர் இருக்கிறான். இந்தப் படத்தின் மையச் சரடு சுபேதாரான நஸ்ருதீன் ஷாவையும் அவர் அடைய நினைக்கும் ஸ்மிதா பட்டீலையும் சுற்றியதாக மேலோட்டமான பார்வைக்குத் தோன்றினாலும் உள்ளார்த்தமாக எதிர்ப்பின் அழகியலையும் தீவிரத்தையுமே இந்தப் படம் பேச விழைகிறது.


சுபேதார் அந்த ஊரில் தான் நினைக்கும் எந்தப் பெண்களை வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிடுகிறான். பெண்கள் ஆண்களின் விருப்பங்களுக்கு இணங்கிச் செல்ல வேண்டியவர்கள் என்கிற நம்பிக்கையுடைய அந்த ஊரில் ஆண்களும் சுபேதாரின் இந்த அத்துமீறல்களை ஆண்மையின் பெருமிதங்களாக புகழ்கிறார்கள். ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கிறபோதும் ஆணின் உலகமும் பெண்ணின் உலகமும் இருவேறு எல்லைகளில் இயங்குவதாய் இருக்கின்றன. ஊர்த் தலைவரான சுரேஷ் ஓபராய் தன் மகள் பள்ளிக்குச் சென்று படிப்பது அவமானமென நினைக்கிறார், அவரின் மனைவி மகள் எப்படியும் படித்துவிட வேண்டுமென விரும்புகிறார். ஊர் நலனுக்காக ஸ்மீதா பாட்டீலை சுபேதாரின் இச்சைக்கு இணங்க எல்லோரும் வலியுறுத்தி அனுப்புவதென சுரேஷ் ஓபராயும் இன்னும் சிலரும் முடிவு செய்கையில் அவரின் மனைவி அதற்கு முழு எதிர்ப்பு தெரிவிப்பதோடு ஸ்மீதா பாட்டீலுக்கு ரகசியமாக உதவியும் செய்கிறார். இப்படி ஆணின் உலகமும் பெண்ணின் உலகமும் எதிரெதிர் எல்லைகளில் இருக்கிற யதார்த்தத்தை இந்தப் படம் நுட்பமாக விவரிக்கிறது.

படத்தின் துவக்கக் காட்சியில் சுபேதார் ஆற்றை நோக்கி வரும் போது அங்கிருக்கும் பெண்கள் எல்லோரும் பயத்தில் அலறி ஓடுகிறார்கள். ஸ்மீதா எந்தவிதமான அச்சமும் இல்லாமல் அவனை எதிர்கொள்வதோடு அவன் கேட்டதற்காக தண்ணீரும் கொடுக்கிறார். துவக்கம் முதல் இறுதிக் காட்சிவரையிலும் ஸ்மீதா பாட்டீலின் கதாப்பாத்திரம் கொண்டிருக்கும் உறுதியும் எதிர்ப்பும் தான் இந்தத் திரைப்படத்தின் அத்தனை முடிச்சுகளுக்கும் மையமாக அமைகிறது. அவள் நினைத்தால் ஊரின் பிற பெண்களைப்போல் இணங்கிப் போயிருக்கலாம். ஆனால் ‘என் கணவனே அவனோடு போகச் சொன்னாலும் நான் போகமாட்டேனென’ உறுதியாய் இருக்கிறாள். சுபேதார் அடைய நினைப்பது உண்மையில் ஸ்மீதாவை அல்ல, அவளிடமிருக்கும் இந்த எதிர்ப்பை. அதனால் தான் படத்தின் இறுதியில் அவள் தன்னிடம் வராவிட்டால் தன் வீரர்களின் மூலமாய் ஊரின் மீது தாக்குதல் நடத்துவேன் என சுபேதார் மிரட்டுகிறான். ஊர்க்காரர்கள் அந்த மிரட்டலுக்கு பணிகிறார்கள். ஊர்த் தலைவரின் வீட்டில் கூடி எல்லோருமாகச் சேர்ந்து ஸ்மீதாவை சுபேதாரின் விருப்பத்திற்கு இணங்கச் செய்வதென முடிவு செய்கிறார்கள். ஸ்மீதாவின் கணவனுக்கு அந்த ஊரில் பெரிய வருமானம் இல்லாததால் அவன் அவளை மட்டும் விட்டுவிட்டு வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறான். யாருடைய பாதுகாப்பும் இல்லாமல் இருப்பவளை ஊர்க்காரர்கள் தாரை வார்த்துக் கொடுக்க முடிவு செய்யும்போது அவள் தான் வேலை செய்யும் மசாலா ஃபேக்டரிக்குள் சென்று ஒளிந்து கொள்கிறாள். அவளோடு வேலை செய்யும் சில பெண்களும், ஃபேக்டரியும் காவலாளி அபு மியானும் (ஓம் புரி) அவளுக்குப் பாதுகாப்பு அரணாய் நிற்கிறார்கள். ஸ்மீதாவைத் தேடி ஊருக்குள் வரும் சுபேதாரின் ஆட்கள் அவள் ஃபேக்டரிக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு முதலில் ஃபேக்டரியின் முதலாளியை அனுப்பி கதவைத் திறக்க வைக்க முயற்சிக்கிறார்கள். அபு மியான் கதவைத் திறக்க மறுத்துவிட, பிறகு ஊர்த் தலைவர்களும் ஊர்க்காரர்களும் வருகிறார்கள். அப்பொழுதும் கதவைத் திறக்க மறுக்கிறார்கள். இதன் நடுவே ஃபேக்டரிக்குள் இருக்கும் பெண்களுக்கு ஊர் தங்களுக்கு எதிராக திரண்டு நிற்கிற அச்சம். அவர்கள் ஸ்மீதாவை சமாதானப்படுத்த முயல்கிறார்கள். அவள் எனக்கு விருப்பமில்லாத காரியத்தை நான் செய்ய மாட்டேனென உறுதியாய் இருக்கிறாள். சுபேதார் இறுதியாக தன் ஆட்களோடு ஊருக்குள் நுழைந்து ஃபேக்டரியின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கிறான். ஆயுதங்களோடு வரும் தங்களை ஃபேக்டரிக்குள் இருக்கும் சில பெண்கள் என்ன செய்துவிட முடியுமென நினைத்த அவர்களின் எண்ணங்களை சிதறடிக்கும்விதமாய் அந்தப் பெண்கள் மசாலாப் பொடிகளை சுபேதாரின் மீதும் அவன் ஆட்கள் மீதும் எரிந்து அலற வைக்கிறார்கள். குதிரைகள் மசாலாப் பொடியின் காரத்தைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் சிதறி ஓடுகின்றன. அவ்வளவு நேரமும் வெவ்வேறு கருத்துக்களையும் முரண்பாடுகளையும் கொண்டிருந்தபோதும் அந்தப் பெண்கள் இப்போது ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கிறார்கள். கதை நிகழும் காலகட்டத்தை வைத்துப் பார்க்கையில் பெண்களின் இந்த எதிர்ப்பு நமக்கு ஏராளமான சித்திரங்களைத் தருகிறது.



கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலில் இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் குறித்து வரும் பகுதியொன்றில் பெஷாவரில் நடக்கும் ஒரு வன்முறைக் காட்சியை விலாவாரியாய் எழுதி இருப்பார். ப்ரிட்டிஷ் போலிஸ் படை இந்திய மக்களின் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்துவார்கள். அவர்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் பெஷாவர் நகர வீதிகளில் இருக்கும் வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து பெண்கள் மசாலாப் பொடியை போலிஸ்காரர்களின் மீது எறிந்து துரத்துவார்கள். மிர்ச் மசலாவின் இந்த இறுதிக் காட்சியைப் பார்க்கிறபோதும் அந்த பெஷாவர் போராட்டத்தின் காட்சிகளே எனக்கு நினைவிற்கு வந்தன.

புதிய அலை இந்திய சினிமாவின் மகத்தான ஆளுமைகளில் நஸ்ருதின் ஷா, ஸ்மீதா பட்டீல், ஓம் புரி, ஷபனா ஆஷ்மி, ஆனந்த் நாக் போன்ற நடிகர்களை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். பெரும்பாலான திரைப்படங்களுக்கு அழுத்தமாக உயிரூட்டியிருப்பவர்கள் இவர்கள். இந்தத் திரைப்படத்திலும் சோன்பாயாக ஸ்மீதா பாட்டீலும் சுபேதாராக நஷ்ருதின் ஷாவும் மகத்தான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் இன்னும் இரண்டு பலங்கள் ஜஹாங்கிர் சவுத்திரியின் ஒளிப்பதிவும் சஞ்சீவ்ஷாவின் படத்தொகுப்பும். இந்தத் திரைப்படத்தின் இயக்குநரான கேத்தன் மேத்தா பட்டேலின் வாழ்வை மையப்படுத்தி உருவான சர்தார், மங்கல் பாண்டே உட்பட ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். சில வருடங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாஞ்சியும் இவர் இயக்கியதே. 90-களின் ஆரம்பத்தில் தூர்தர்ஷனில் வெளியான கேப்டன் வ்யோம் தொடரை இயக்கியதும் இவர்தான். இன்றைக்கு யாராலும் பொருட்படுத்தப்படமால் இருக்கும் தூர்தர்ஷனிலிருந்துதான் முன்பு ஏராளமான கலையுலக ஆளுமைகள் உருவாகி இருக்கிறார்கள். திரைப்பட விழாக்களில் படங்கள் பார்க்கிற பொழுது படத்தின் துவக்கத்தில் அந்நாட்டின் கலாச்சார அமைப்பின் நிதியில் உருவான திரைப்படம் என குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனிக்க முடியும். இந்தியாவிலும் அப்படி சிறந்த திரைப்படங்களை உருவாக்க வேண்டுமென்கிற குறிக்கோளோடு என்.எஃப்.டி.சி என்னும் அமைப்பு இயங்கி வருகிறது. என். எஃப். டி சியின் இணைய தளத்தில் அவர்களின் தயாரிப்பில் உருவான திரைப்படங்களை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் வருத்தம் யாதெனில் அவற்றில் தமிழ்த் திரைப்படங்களுக்கான இடமென்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக்கூட இல்லையென்பதுதான்.

23 views

Comments


bottom of page