top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கொமோரா நாவல் வாசிப்பு.


- ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்



வெறுப்புகளின் பலவீனங்களின் வழியே அன்பைத் தேடி அலையும் ஒருவனின் கதை கொமோரா. தான் தேடுவது அன்புதான் என்பதை அறியாமலேயே வெறுப்பின் கோரதாண்டவத்திற்கு பலியாகும் ஒருவன் தன் வாழ்நாள் முழுமைக்குமாக சந்திக்கும் வலியும் அவமானங்களும் அதன் மூலம் கிடைக்கும் வெறுப்புகளும் வெறுப்பின் உச்சத்தில் நிகழும் தடம்மாறுதல்களும் அதன் மூலம் அடையும் ஞானங்களும் என ஒரு நூறு வருடத்திற்குத் தேவையான படைப்பாக உருமாற்றம் பெற்றிருக்கிறது கொமோரா. ஒவ்வொரு நாவலும் அவை தரும் அனுபவங்களும் அலாதியானவை. நம்மை வேறோர் உலகிற்கு அழைத்துச் செல்லும் பேருன்னதம் பெற்றவை. இதுவரை நாம் சந்தித்திராத மனிதர்களை அவர்களின் அந்தரங்கங்களை நம்மோடு அறிமுகம் செய்பவை. தமக்கான கதைகளின் மூலம் நமக்கான ஞானத்தைத் தந்துவிட்டுப் போகும் அற்புதம் பெற்றவை. அப்படித்தான் கதிரும் நம்மோடு அறிமுகம் ஆகிறான். கதிரை நாம் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு இடங்களில் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். உணவகங்களில் எச்சித்தட்டு எடுப்பவனாக, திருவிழாக்களின் பலூன் விற்பவனாக, வீடுவீடாக வந்து ஆடைகள் விற்கும் துணி வியாபாரியாக, பரோட்டா மாஸ்டராக, கஞ்சா விற்பவனாக, மாமா வேலை பார்ப்பவனாக என வெவ்வேறு இடங்களில் நன்கு அறிமுகமானவனாக இருக்கலாம். அவனுக்கோர் கதை இருக்கிறது அவனுக்கான வாழ்க்கை மாற்றம் இருக்கிறது கூடவே அவனுக்கான அவமானங்களும் வெறுப்புகளின் நியாயங்களும் இருக்கின்றன. அவை முக்கியமானது. ஏதோ ஓர் தருணத்தில் அந்த வெறுப்பு நம் மூலம் உருவானதாகக் கூட இருக்க முடியும். டேய் எச்சித்தட்டு என்று அவனை பொடனியில் அடிப்பதில் இருந்து மாமாப்பையா என கழுவேற்றுவது வரைக்கும் நாமும் நமக்கான நியாயங்களின் மூலமே இவ்வுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறோம். நாமிருவரும் சந்தித்துக் கொள்ளும் இடங்களில் எல்லாம் கதிர் வெறுப்பின் ஆழத்தினுள் மீண்டும் மீண்டும் அழுத்தபடுகிறான். அவன் வெறுப்பின் மொத்த வடிவம். நம்மாலான வெறுப்பின் மொத்த வடிவம். எவ்விதங்களிலும் அழிக்க முடியாது, மிக ஆழமாக வேரூன்றப்பட்ட வெறுப்பானது, கதிர் பிறப்பதற்கு முன்பே அவன் மனதில் விதைக்கபட்ட ஒன்று. கதிரின் வாழ்க்கை மாற்றம் அவன் தந்தை அழகரின் வித்து வழியாக வந்த ஊழ்வினை. மனிதர்கள் மீது இருக்கும் வெறுப்பும், பெண்களின் மேல் கொள்ளும் அடக்கமுடியாத காமமும் அப்பன் தானாகத் தந்த வரம். கதிரின் அப்பா அழகரின் சிறுவயதும் அத்தனை சுகமான ஒன்றாக இல்லை. கதிரை விடவும் வெறுப்பின் கோரநாவுகளினால் மிக அதிகமாக சூறையாடப்பட்டவன் அழகர். கதிர் தன் சொந்த மண்ணைச் சேர்ந்த மக்களினால் வேட்டையாடப்பட்டவன் என்றால் அழகர் கம்போடிய அரசியல் சூழ்ச்சிகளால் காயடிக்கப்பட்டவன். சிறுவயதில் ஒருவன் அடையும் மனஅழுத்தங்களும் மனமாற்றங்களுமே அவனின் மொத்த வாழ்நாளையும் தீர்மானிக்கிறது என்ற ஒற்றைச் வரியின் அழுத்தமான வடிவமாக அழகரும் கதிரும் நிற்கிறார்கள். கதிரைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன் அழகரை அறியவேண்டியது அவசியமானது. கம்போடியாவில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகளுக்கு மத்தியில் தப்பிப்பிழைக்கும் அழகரின் நாட்களை இதைவிட வேறெப்படியும் அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் கூற முடியாதென்று நினைக்கிறன். வதைமுகாம்களில் இன்னதென்று சொல்லமுடியாத பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு குடும்பத்தை இழந்து உடல் நலிந்து மனமொடிந்துபோன சிறுவன் அழகர், ஒருவாய் சோறுக்காக நாள் முழுவதும் அலைந்து திரியும் அந்தத் தருணங்கள் அத்தனை கனமானவை. உண்பதற்கு ஒருவாய் சோறு கிடைத்து, அது பசியை மேலும் தூண்டிவிட எப்படியேனும் எதையேனும் உண்டுவிட வேண்டும் என்ற வெறியோடு அலைபனின் கண்களில் சிக்குகிறது அந்தப்பூனை. உலகின் ஒவ்வொரு மூலையிலும் பசியால் அல்லாடும், பசிக்கு மடிந்து போகும் ஒரு சிறுவனின் பசி கொண்டு எழுதபட்ட வரிகள் அவை. பூனையைக் கொன்று அதனை வேக வைக்க நெருப்பு தேடி அலைந்து, அத்தனையும் கைவிட்ட நிலையில் பூனையின் பச்சைக் கறியை அழகர் தின்ன ஆரம்பிக்கும் போது என்னைச் சுற்றிலும் அந்தப் பூனையின் பச்சைவாடை. ஒருமாதிரி குமட்டிக்கொண்டு வந்தது. நிதர்சனத்தின் வெகு அருகில் நின்றுகொண்டு அழகரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரக்கமற்ற உலகின் அத்தனை தெய்வங்களையும் சபித்தபடி அந்த பூனையை மென்று தின்று கொண்டிருந்தான் அழகர். நாவலானது இந்த இடத்திலேயே பரிபூரணம் அடைந்துவிட்டதைப் போல் ஓர் உணர்வு. பசி, பிரிவு, நிலையின்மை, ஏக்கம், வெறுப்பு என அத்தனையும் கம்போடியாவில் இருந்து நாடு கடத்தபட்டவை. அழகர் அடைந்த அத்தனை வேதனைகளையும் அவன் மகன் கதிரும் அடைகிறான். அதிலும் பெரும்பாலான வன்முறைகளை தன் தந்தை அழகரின் மூலமே அடைகிறான். அவசூழலில் வளர்ந்த ஒருவன் தன் மகனையும் அதே போன்றதொரு சூழலில் வளர நிர்பந்திக்கிறான் என்பது பெருங்கொடுமை. தன் தந்தையின் இறந்தகாலம் குறித்தோ அல்லது அவர்பட்ட இன்னல்கள் குறித்தோ கதிருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்றாலும் கதிரின் வருங்காலம் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் அவனை வஞ்சிக்கிறான் அழகர். தான் பெற்ற வலிகளைக் கொண்டு எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் அவனை வேட்டையாடுகிறான். அதுவும் மிகக் குரூரமாக. உலகின் மீதான வெறுப்பை உலகிடம் இருந்து கற்றுக்கொண்டவன் அழகர். அதனைத் தன் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டவன் கதிர். இந்நாவலின் மையநீரோட்டமாக நழுவிச்செல்லும் கதிர் மூலமாகவே ஒரு சமுதாயத்தின் பேசப்படாத பெரும்பான்மை குறித்து பேசப்பட்டிருக்கிறது. அப்பாவிடம் இருந்து கிடைத்த வெறுப்பு அம்மாவின் மீதும் சூழ்கிறது. வாழ்க்கை எனும் பேரிருள் அவனுக்குள் எவ்வித உதயத்தையும் ஏற்படுத்தத் தயாராயில்லை. செல்லுமிடங்களில் எல்லாம் பிரிவைச்சந்திக்கிறான். விடுதியில், வாழச்சென்ற கிராமத்தில், பள்ளிக்கூடத்தில் என நிரந்தர அன்பைத் தர யாருமே இல்லை. அப்படியாரேனும் அன்பின் உரு கொண்டாலும் அடுத்தநொடியே அழிந்து போகிறார்கள். பிரிவின் வலி மேலும் மேலும் அவனை நிராயுதபாணி ஆக்குகிறது. இதன் மூலம் தனக்கென சில குணங்களை வளர்த்துக்கொள்கிறான். எல்லாத் தருணங்களிலும் அசாத்தியமானதொரு துணிச்சல்காரனாகவே வலம் வருகிறான் கதிர். அந்தத் துணிச்சலின் பின் பெண்கள் மீதான அன்பும் காதலும் காமமும் பெருகித் தவிப்பது அன்பை அடைய அவன் எடுக்கும் முயற்சிகள். 'சுண்ணாம்பு கொதிக்கும் தொட்டியினுள் குதித்தால் தன்னைக் கட்டிக்கொள்ளலாம்' என்ற ஒரு சொல்லுக்காக தொட்டியினுள் குதித்து சாகசம் செய்யத் துணிகிறான் கதிர் எனும் அச்சிறுவன். கால்கள் வெந்துபோய் அழுகிப் போகும் நிலையிலும் கூட அவள் தன்னை கட்டிகொள்வாளா என்ற ஏக்கம் தொடர்கிறது. எதையும் யோசித்து முடிவெடுக்க திராணியில்லாத கதிரை பாலர் விடுதியில் சேர்க்கிறாள் கதிரின் அம்மா. எல்லாமும் ஒழுங்காகச் செல்ல, சபிக்கப்பட்டவனின் வாழ்வில் பின்தொடரும் பிரச்சனையாக உரு கொள்கிறது காமம். விடுதியில் வசிக்கும் காமுகர்களால் சூரையாடப்படுகிறான். சமயங்களில் அப்பனின் காமமும் கதிரின் பின்புறத்தை சீரழிக்காமல் இல்லை. அப்பனின் முரட்டு உருவத்திற்கும் அடிக்கும் பயந்து, தனக்கு நேரும் அத்தனை கொடுமைகளையும் தனக்குள்ளேயே சேகரிக்கிறான். அடிபட்டவன் நெஞ்சில் வளரும் வன்மமாக அப்பனை வீழ்த்த அதன் காரணங்களை ஒன்றுதிரட்ட ஆரம்பிக்கிறான். அதற்கு வலுசேர்க்கும் விதமாக, பின்னொருநாள் அப்பன் செய்த கொலையொன்று குடும்பத்தையே சிறையில் வைக்கிறது. அப்பாவின் மீதும் வாழ்வின் மீதுமான ஆழமான வெறுப்பை ஏற்படுத்துகிறது அந்தச்சிறை. தனக்கான நியாயங்களை தானே தேடிக்கொள்ளத் தொடங்குகிறான்.


அப்பாவைத் துரத்திய அதே பசி கதிரையும் துரத்துகிறது. பசியைப் போக்க கோழி திருடுவதில் ஆரம்பித்து வேறுவேறு தொழில்களைக் கற்கிறான். அப்படிப் பழக்கம் கிடைத்த துணி யாவாரி மூலம் வாழ்வில் ஒரு திருப்பம் நேரும் என அனைவரும் நினைக்க, கதிரின் ஊழ்வினை வேறொன்றை நினைக்கிறது. துணி விற்கப்போகும் இடத்தில் மலைவாழ்ப் பெண் ஒருத்தியைச் சீண்டிப் பார்க்கிறான் கதிர். பின் கற்பழிக்கவும் முயல்கிறான். அவனுடைய முதல் சீண்டலுக்கு ஒத்துழைக்காத அந்தப்பெண்ணை மூர்க்க மனம்கொண்டவள் என நினைக்கிறான். தன் காமத்திற்கு இடம் கொடுக்காத அவளை மனிதப்பிறவியா என்கிறான். பெண் என்றாலே படுக்க மட்டுமே என நினைக்கும், பெண்களின் மீதான கதிரின் பார்வை நாவலின் ஆரம்பத்தில் இருந்தே முழுமை பெற ஆரம்பிக்கிறது. மதுரை மத்திய சிறைச்சாலைக்கு தன் கணவனைப் பார்க்க வரும் பெண்ணான சுதா கதிரை சகோதரன் என்றழைக்க, "நான் சந்திக்கிற சரிபாதி பெண்களுக்கும் மேல நான் தொடனும்னுதான் நெனைக்கிறேன். தற்காலிகமாகவோ இல்ல வாழ்க்கை முழுக்கவோ ஒருத்தர சகோதரியா நினைக்கிற அளவுக்கெல்லாம் நான் யோக்கியன் இல்ல. அபூர்வமா சிலர மட்டுந்தான் என்னால சகோதரப் பாசத்தோட பாக்க முடியும். எனக்கு உன்னய பாக்கறப்போ எல்லாம் உங்கூட படுக்கனும்னுதான் தோணுது. நீ கோவிச்சுக்கிட்டாலும் பரவா இல்ல. மனசுல பட்டத சொல்லிடனும்னு நினைக்கிறேன்." இதுதான் கதிர். எல்லாவிதங்களிலும் முழுமைபெற்ற ஒரு பாத்திரம் கதிர். எங்குமே முன்னுக்குப் பின்னாகப் புனையப்படவில்லை. இதுதான் தன் சுயம் என்பது அவனுக்கே நன்றாகத் தெரியும். தான் இப்படியானதற்கான காரணமும் யார் என்று அவனுக்குத் தெரியும். வாழ்க்கை சீரழியக் காரணமானவனை வதம் செய்வதற்காகக் கொலைவாளினைத் தூக்கவும் அந்தக் கொலையை நிகழ்த்தவும் அர்த்தப்பூர்வமான காரணங்கள் அவனிடம் இருக்கின்றன. கொல்லப்பட வேண்டிய ஆள் கதிரின் அப்பா அழகர். கொல்வதற்கான வேட்கை நீண்டகாலமாக உருபெற்று வலுபெற்று அவர் சிறையில் இருந்து விடுதலையாகி வரும் நாளுக்காகக் காத்திருக்கிறான். அதற்கு உதவும்படி முருகனின் துணையைக் கேட்கிறான். மிகச்சிக்கலான பாத்திரப்படைப்புகளை மிக எளிதாகப் படைப்பதற்கு லஷ்மியால் முடிகிறது. அப்படியொரு சிக்கலான பாத்திரப்படைப்புதான் முருகன். கதிரின் மேல் மையல் கொள்ளும் ஒரு ஆணின் காதல் முருகனுடையது. இந்தக்காதலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் அதன் தவிப்பில் பின்னொருநாள் இவர்கள் இருவரும் கலவி கொள்ளும் போது முருகனுக்கும் சக்திக்கும் திருமணமாகி இருக்கிறது. இதுவோர் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நிகழ்வு. முருகன் கதிரின் அந்தரங்கம் ஒரு பெண்ணின் முன் அம்பலமாகும் இடம். ஒருவிசயத்தை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டே போவதின் மூலம் படைப்பின் வேரினை மேலும் மேலும் ஆழமாக்குகிறார் லஷ்மி. வாழ்க்கை எப்படி எல்லாத் தருணங்களிலும் தன்னை உபயோகித்துக்கொண்டதோ அப்படியே ஒருகட்டத்திற்குப் பின் கதிரும் தன்னைச் சார்ந்த அத்தனைப் பேரையும் உபயோகித்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். முருகனை, சத்யாவை, மலரை, சந்திரனை என வாழ்வின் மிகமுக்கியமானவர்களையும் ஏதோ ஒருவிதத்தில் தன் சுயதேவைக்காக அவர்களுக்கே தெரியாமல் உபயோகிக்கிறான். கதிரின் மீது இருக்கும் காதலால் கதிரின் தந்தையைக் கொல்வதற்கு முருகன் சம்மதிக்கிறான். கொன்றழித்தபின் தன்னோடு வெளிநாட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று அழைக்கும் முருகனுக்கு அப்போதும் கதிரின் மேல் காதல் இருக்கிறது. கூடவே முருகனுக்கும் சக்திக்கும் ஒருவயதில் பிள்ளையும் இருக்கிறது. சக்தியைப் பார்க்கும் போதெல்லாம் என்றாவது ஒருநாள் அவளை அடைய வேண்டும் என்று கதிர் நினைக்க, தன்னோடு கலவி கொள்வது போலவே தான் சக்தி மற்றும் கதிர் மூவரும் கூட்டாக கலவிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறான் முருகன். இவற்றிற்கு மத்தியில் சக்தி கதிர் குறித்து என்ன நினைக்கிறாள் என்பது வங்கக்கடல் ஆழம். இப்படியாக நாவல் முழுக்கவே பல்வேறு வகையான மனிதர்கள் வந்துசெல்கிறார்கள் அவர்களின் தேவையும் இருப்பும் மிகமுக்கியமான ஒன்றாக நிகழ்கிறது காமம் நிறைந்த மனதினுள் காதலையும் ஊன்றிச்சென்றவள் சத்யா. சத்யா வந்துபோவது மிகசில அத்தியாயங்கள் என்றாலும் அவள் கடந்து போகும் அந்த சில நாட்களில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திச் செல்கிறாள். ஒரு கவுரவக் கொலையில் தோற்றுப்போன காதலின் நீட்சியாகிப் போகிறாள் சத்யா. சத்யாவை இழந்த துக்கத்தில் இருக்கும் கதிரை அம்மணமாக்குகிறது மேல்சாதி வெறுப்பு. அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறான். ஓட ஓட விரட்டுகிறது ஏதேனும் ஒன்று. வெறுப்பின் எச்சங்களால் நிறைந்த ஒருவனுக்கு அவனைத் துரத்தியடிப்பதைத் தவிர, ஓடவைத்துக் கொண்டே இருப்பதைத் தவிர காலம் வேறெப்படியான வெகுமதியைக் கொடுத்துவிட முடியும். கதிரைப் போலவே கால ஓட்டத்தில் சிக்கிக்கொண்ட மற்றொரு மனிதர் விஜி அண்ணா. கதிர் அப்பா அழகரின் சிறைச்ச்சாலை நண்பன். விஜி வந்து செல்லும் பகுதிகள் சிறைச்சாலையின் குற்றச்சரித்திரங்கள். சிறைச்சாலையின் உள்ளிருக்கும் பகை அரசியல் மற்றும் கைதிகளின் குடும்பகளில் நிகழும் இன்னபிற போராட்டங்கள் என சிறைச்சாலையின் உள்ளும் வெளியுமாக நாவலின் தளம் வேறோர் களத்திற்குச் செல்கிறது. விஜிஅண்ணாவும் அவன் அப்பாவும் கொமோராவின் மிக முக்கிய சித்திரங்கள். பொதுவாகவே லஷ்மியின் நாவல்களில் அவரும் துரத்திக்கொண்டு தெரிவார். நாவலில் கதாப்பாத்திரங்கள் பேசவேண்டுமே ஒழிய நாவலாசிரியன் அல்ல நாவலின். தேவையிருப்பின் ஆசிரியர் தன் மூக்கை நுழைக்கலாம். உப்பு நாய்களில் சில பகுதிகளிலும், கானகனின் பெரும்பாலான பகுதிகளிலும் லஷ்மி தான் தெரிவார். அது ஓர் உறுத்தலாகவே இருக்கும். கானகன் வெளியீட்டு விழாவில் லஷ்மி கூறிய வாசகம் இன்னும் ஞாபகம் இருக்கிறது. 'என் அப்பாவக் கொல்லனும்ன்னு நிறையவாட்டி யோசிச்சிருக்கிறேன்'. கானகன் நாவலின் மையம் கூட அதுதான். ஆனால் கொமோராவில் அப்படியில்லை. எல்லாத் தருணங்களிலும் நாம் கதாப்பாதிரங்களோடு மட்டுமே உலவுகிறோம். ஒரே ஒரு இடத்தில் மட்டும் லேசாகே லஷ்மி தனது மூக்கை நுழைக்கிறார். 'தன் தந்தையைக் கொலை செய்ய ஏதோவொரு தருணத்தில் நினைக்காத மனிதர் நம்மில் அபூர்வம்.' இந்த இடம்தான் அது. அதுவும் பெரிதாக உறுத்தவில்லை. இந்தப் படைப்பின் உச்சம் என்றால் அது அழகரைக் கொல்லவும் முடியாமல் வெல்லவும் முடியாமல் தவிக்கும் கதிரின் நாட்கள். இவங்கொல்லுவானா மாட்டானா என நமக்குள் இருக்கும் தவிப்பு முருகனுக்குள்ளும் இருக்கும். அதனை கடைசிவரை படபடப்போடு நிகழ்த்தியிருப்பது நாவல் பெறும் உச்சம். லஷ்மி இதுவரைக்குமாக எழுதிய அத்தனை நாவல்களையும் படித்துவிட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன், லஷ்மி தன் படைப்பில் அடைந்திருக்கும் உச்சம் இந்நாவல். எவ்விதங்களிலும் குறையில்லாமல் படைக்கப்பட்ட நாவல். வாசகர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றும் கூட. நாவலின் சில முக்கிய பகுதிகளை சாத்தானின் மனவெளிக் குறிப்புகளாக எழுதியவிதம் அருமை. அந்தக் குறிப்புகள் நீண்ட அத்தியாயங்களாக இடம் பெற்றிருந்தாலும் அலுக்காமலேயே இருக்கும். ஏனென்றால் தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்று நிருபித்திருக்கிறார் லஷ்மி சரவணகுமார். உங்களின் வாசகன் என்பதில் மெல்லியதோர் பெருமை எனக்கு. இந்த நாவலை கார்கி தவிர வேறு யாருக்கு சமர்பித்திருந்தாலும் அந்தப் பாவம் உங்களை சும்மா விட்டிருக்காது. என்வாழ்நாளில் இதுவரைக்கும் படித்த நாவல்களில் மிகச்சிறந்த பத்தாக சிலவற்றைக் கூற முடியுமென்றால் அதில் நிச்சயமாக கொமோராவிற்கும் இடமுண்டு. ஏனென்றால் கொமோரா - என் தலைமுறை எழுத்தாளன் எழுதிய மிகச்சிறந்த நாவல். தவிர்க்கக்கூடாத நாவலும் கூட.




17 views

コメント


bottom of page