top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

கொலை செய்யப்பட்டவனின் ஷூ ( குறுங்கதை )இடிபாடுகளுக்குள்ளிருந்த மரவீட்டின் தூசியடர்ந்த மூலையில் பிரபஞ்சத்தின் யாதொரு அசைவாலும் தொந்தரவு செய்யப்படாமல் கிடந்த தோலாலான அந்த கிழிந்த முரட்டு ஷூவிற்குள் பதிமூன்று கரப்பான் பூச்சிகள் வாழ்கின்றன. கோடை காலத்தின் அடர்த்தியான வெய்யிலின் போது கூட அதற்குள் சின்னதொரு கீற்று மட்டுமே எட்டிப்பார்க்கும் சாத்தியமிருந்ததால் கரப்பான் பூச்சிகளுக்கு ஏதுவாய்ப் போனது. துரோகம், ஏமாற்றம், நிராசை, பசி, தாபம், அதீத உணர்ச்சிவயப்படலென வேவ்வேறு காரணங்களுக்காக அந்தக் கரப்பான் பூச்சிகள் தங்கள் வசிப்பிடத்தைத் துறந்து இங்கு அகதிகளாகியுள்ளனர். முன்பு புறநகரின் பகட்டான வீடுகளில் ஒன்றாயிருந்த இவ்வீட்டில் நரிகளும் பூனைகளும் சண்டையிட்டுக் கொண்டதன் பொருட்டு பற்றிய தீயில் வீடு முக்கால்வாசிக்கும் மேல் எரிந்து போனது. நகரம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பின்னிரவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் சாட்சியான நட்சத்திரங்கள் பல காலம் பார்த்துப் பழகினதொரு சடங்காய் அதைப் பொருட்படுத்தியிருக்காததோடு எப்போதும் போல் மெளனமாகவே இருந்தன. பிரபல செய்தி ஊடகங்கள் கள்ளக்காதலின் காரணமாக நிகழ்ந்த கை கலப்பில் வீடு எரிந்து போனதாக செய்தி வெளியிட்ட போது துயர்மிக்கதொரு சம்பவம் எல்லா நகரங்களிலும் நடக்கும் வழக்கமானதொன்றாகிப் போனது.


எரிந்த தினத்தில் வீட்டிலிருந்து தப்பிப் பிழைத்த கரப்பான் பூச்சிகள் தங்களது கடைசி புகலிடமாக அந்த வீட்டிற்கு உடமையாளனின் இந்த ஹூவிற்குள் வந்து புகுந்து கொண்டன. இன்னும் கூட அவனின் கால் வியர்வை வாசனை படர்ந்திருந்த கிழிந்த தோலில் இறப்பதற்கு முன்பான அவனது அலறலும் சேர்ந்தே ஒலித்தது. பல வேளை அவன் அலறும் சப்தம் தாங்காமல் வெளியேறி நகர் முழுக்க உண்மையை சொல்லிவிடத் துடித்த கரப்பான் பூச்சிகள் ஷூவிலிருந்து வெளியேறும் பட்சத்தில் எதிர்கொள்ள நேரும் அபாயங்களுக்காக அஞ்சின. இருள் மட்டுமே சூழ்ந்திருந்த தங்களின் அந்த சிறிய உலகம் எத்தனை குரூரமானதென்றாலும் பாதுகாப்பனது. இருள் துவக்கத்தில் ஒரு உணர்வாக அவர்களின் முன்னாலிருந்தது பின் அந்த உணர்வு பசி உறக்கம் எல்லாவற்றோடும் கலந்து சேர்ந்த போது உடலின் இன்னொரு அங்கமாகிவிட்டிருந்தது. உண்மையைப் பேசுதலை விடவும் இந்த தற்காத்தல் இருக்கும் தங்களின் சின்னஞ்சிறு உயிரைக் காத்துக் கொள்ள போதுமானதென அவை திடமாய் நம்பின.


உறக்கமின்மையிலும் பசியிலும் மெலிந்த அவை இருப்பிற்கும் இறப்பிற்குமான சின்னதொரு இடைவெளிக்குள் வந்து சேர்ந்தபோது அவற்றில் பெரும்பாலான கரப்பான் பூச்சிகள் பார்வையிழந்து போயிருந்தன. அருகிலிருக்கும் இன்னொரு கரப்பான் பூச்சியின் சுவாசத்தைக் கொண்டுதான் யாரு உயிரோடு இருக்கிறார்கள், உயிரற்று இருக்கிறார்களென இனங்கண்டு கொண்டன. மழை பெய்து லேசாக சாம்பல் எழத் துவங்கினதொரு நாளில் பதிமூன்று கரப்பான் பூச்சிகளில் ஒன்று இறந்து போக, இறந்த உடலின் நாற்றம் பொறுக்கமாட்டாமல் உயிருடன் இருந்த மற்ற கரப்பான் பூச்சிகள் அவற்றை மெல்ல நகர்த்தி ஷூவிற்குள் வெளியே கொண்டு வந்தன.


சூரியன் மங்கிய பிறகான மயக்கும் வெளிச்சத்தில் அந்த மழை அபூர்வமானதொன்று, இருப்பினும் அத்தனை பெரிய இரைச்சலையும் மீறி அந்த வீட்டின் வாசலில் நின்ற முரட்டு மனிதக் கூட்டமொன்று இந்த ஷூவிற்கு உடமையாளனை வெளியில் இழுத்துப் போட்டு உதைக்கும் அவலத்தையும் பரிதாபத்திற்குரிய அந்த மனிதனின் அலறலையும் நடுங்கியபடி கரப்பான் பூச்சிகள் கேட்டன. அச்சத்தில் அவற்றின் நீண்ட மீசை மயிர்கள் துடிக்க அந்த வீட்டிற்குள்ளிருந்த சிறுமிகளும் சிறுவர்களும் அடிபட்டவனின் மனைவியும் வெவ்வேறு குரல்களில் “யா அல்லாஹ்” என அலற நகரம் தங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத ஏதொவொரு அசம்பாவிதம் எங்கோ நடக்கிறதென்கிற பாவனையில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வேடிக்கை பார்க்கும் நட்சத்திரங்கள் குரூர மெளனம் நினைவிற்கு வர, மழையை எதிர்கொள்ளும் விருப்பமின்றி அச்சத்தோடு கரப்பான் பூச்சிகள் மீண்டும் தங்களின் அந்த சின்னஞ்சிறிய உலகிற்குள் ஓடி ஒளிந்துகொண்டன.


33 views

Comments


bottom of page