புத்தகக் கண்காட்சிகளில் கலந்துகொள்வது எழுத்தாளர்களுக்கு உற்சாகமளிக்கக் கூடிய செயல். நான் எழுத வந்த காலம் முதல் வெவ்வேறு ஊரின் புத்தகக் கண்காட்சிகளுக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கண்காட்சியிலும் புதிய வாசகர்களை ஏராளமாகச் சந்திக்கையில் எழுதுவதிலிருக்கும் பொறுப்பு அதிகமாவதை உணரமுடிகிறது. எனது முன்னோடியான எழுத்தாளர்கள் பலர் இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கும் அந்த உயரம் என்பது என்ன எழுதவேண்டும் என்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறையின் வழியாய் உருவானது. ஒரு எழுத்தாளனின் படைப்புகளை வாசிப்பதன் வழியாக எழுதுகிறவனுக்கும் வாசிக்கிறவனுக்குமான மெல்லிய பந்தம் ஒன்று முகிழ்க்கும். சரியானதைச் சொல்லும் எழுத்தாளன் வாசகனுக்கு வழிகாட்டியுமாய் ஆசிரியருமாய் இருப்பதால் ஒவ்வொரு சொல்லிலும் கவனம் எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.
நடந்து முடிந்த கோவை புத்தகக் கண்காட்சியில் கடைசி இரண்டு நாட்கள் கலந்துகொண்டேன். அதற்கும் முன்பாகவே ஒருநாள் பயணமாக ஓசூருக்குச் சென்று எழுத்தாளர் பா.வெங்கடேசன் அவர்களைச் சந்தித்தேன். நிறைய புதிய கதைகளை எழுதிப் பார்க்கையில் ஒருவித அதிருப்தியின்மை அதிகரித்துப்போனது. கதைகள் எழுதுவதிலிருந்து எடுத்துக்கொள்ளும் இடைவெளி உடலையும் மனதையும் சோர்வூட்டியிருந்ததால் அந்த தேக்க நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ளவே எனது முன்னோடிகளை சந்தித்து உரையாட விரும்பினேன். பா. வெங்கடேசன் அவர்களுடனான உரையாடல் ஒரு நல்ல திறப்பைத் தந்தது. ஒரு இலக்கியவாதி பின்பாற்ற வேண்டிய ஒழுங்கையும், எழுதுவதற்காக செலுத்தும் உழைப்பில் காட்டவேண்டிய சமரசமின்மையையும் அவர் உணரவைத்தார். இதுவரையிலுமான புனைவு வெளிகளிலிருந்து துண்டித்துக்கொண்டு புதிய கதைகளை எழுதிப் பார்ப்பதற்கான சாத்தியங்கள் குறித்து எனக்கிருந்த சில ஐயங்களுக்கும் தெளிவான விளக்கங்களைத் தந்தார். அந்த உரையாடல் தந்த நிறைவோடு அங்கிருந்து கோவைக்குப் பயணமானேன்.
கோவை புத்தகக் கண்காட்சியில் எனக்குப் ப்ரியமான நாஞ்சில் நாடன் அவர்களோடு இரண்டு நாட்களுமே உரையாடினேன். எழுபத்தைந்து வயதில் தான் இன்னும் எழுத வேண்டிய படைப்புகள் குறித்து அவர் உற்சாகமாக உரையாடியது எனக்கு பெரும் உத்வேக மூட்டியது. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதை விடவும், அதற்காக தேடியலைவதை விடவும் நிறைவளிக்கக் கூடிய செயல் வேறொன்றுமில்லை. எழுத்தாளர்கள் எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், செல்வேந்திரன், சுஷில்குமார், வைரவன் என நிறையபேரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கானகன் நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கும் ராஜன் அச்சுதன் தனது குடும்பத்தினரோடு வந்திருந்தார்.
இரண்டு நாட்களுமே விஷ்னுபுரம் அரங்கில் சில நிமிடங்கள் இருந்தேன். எழுத்தாளர்கள் அருண்மொழி நங்கை, அஜிதனோடு உரையாடினேன். சென்னையிலிருந்து நண்பர்கள் அகரமுதல்வன், வாசுமுருகவேல், அன்பு ஹனிஃபாவோடு நூல்வனம் மணிகண்டன் அவர்களும் வந்திருந்தார். கோவையில் நண்பர்கள் மூர்த்தி மற்றும் நவீன் இருவரும் உடனிருந்து கவனித்துக் கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை உணவுக்காக அகரமுதல்வன் மணி அண்ணனோடு பொள்ளாச்சியிலிருக்கும் எழுத்தாளர் & லோகமாதேவி அவர்களின் வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தோம். அங்கிருந்து நண்பர் அனுஷின் புக்ஸ் & புக்ஸ் புத்தகக் கடைக்குச் சென்று பார்வையிட்டபின் மீண்டும் புத்தககக் கண்காட்சி திரும்பினோம். கானகன் வெளியிடப்பட்டு பத்து வருடங்கள் நிறைவடைந்தை ஸீரோ டிகிரி அரங்கில் மாலை கொண்டாடியது நிறைவான அனுபவம். கிளம்புவதற்கு முன்பாக கோவையைச் சேர்ந்த நண்பர் வழக்கறிஞர் சரவணன் தனது நண்பர்களோடு வந்திருந்தார். புத்தகங்களோடும் நல்ல உரையாடல்களோடும் புத்தகக் கண்காட்சி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்பினேன்.
Comments