top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

சுப்பு




ஊர் தூங்கி இன்றோடு மூன்று நாட்களாகிப் போயிருக்கிறது. சுப்புவின் செந்நிறமேறிய நீள்கூந்தலின் சுருளில் ஊரின் ஆதார ரேகைகள் மறைந்து கொண்டிருந்தன. சுப்பு, ஊரின் சூன்யத்தால் நினைவுகளை மீட்டெடுத்துப் உரக்கப் பாடும் வியாதிக்கு ஆளாகியிருந்தாள். அவள் வீட்டின் பின்புறத்திலிருந்த செடி கொடிகள் கூட தலைமுறை கடந்த நினைவுகளின் துர் கனவுகளால் இன்னும் தீர்ந்திடாத அவர்களின் துயரங்களை சுமந்து கொண்டிருக்கத் துவங்கின. பூனைகள் மெளனித்துக் கிடக்கும் பின்னிரவில் எழும் பேய்க்காற்று ஊரைமூடி கருவளையமிட்டு பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. பெருசுகள் அவளைச் சீக்காளியாய் பாக்க முடியாமல் ஆளுக்கொரு வைத்தியம் சொன்னார்கள். ”சுப்புக்கு சீக்கு ஒன்னுமில்லத்தா, புத்தி பேதலிச்சுப்போயி கெடக்கா அம்புட்டுத்தேன்... எதுக்கும் குருவித்துற கோடாங்கிகிட்ட கூட்டிப்போயி காட்டச் சொல்லுங்களா…” வெற்றிலை மென்று குதப்பிய நாக்கும் வாயுமாய் ஒச்சாயி ஆத்தா சொல்லி சொல்லிப்பார்த்து ஓய்ந்துவிட்டாள். யோசனை சொன்ன ஒருவருக்கும் சுப்புவை அருகில் போய்ப்பார்ப்பதற்கே இன்னும் துணிச்சல் வந்திருக்கவில்லை. மென்று விழுங்க முடியாத நரகலாய் அவளின் நடமாட்டம் ஊருக்குள்.



ஒவ்வொருவரும் அவளிடமிருந்து போதுமான தூரம் தள்ளி இருப்பதில் சுதாரிப்பாயிருந்தனர். இன்னும் அவள் மோசமான நிலைக்குப் போய்விடவில்லை. இரவுகளில் மட்டுந்தான் அசாதரணமானவளாகிவிடுகிறாள். அவள் அலறுகிற சத்தம் கேட்டு ஓடி ஒளிகிற ஆட்களால் எவ்வளவு முயன்றும் அந்த சத்தத்திலிருந்து தப்பிக்க முடிந்திருக்கவில்லை. கதவுகளை அடைத்தும், பஞ்சால் காதை அடைத்தும் எல்லா வழியில் முயன்றும் சத்தம் காதைப் பிளந்தது. அவள் யாரையும் வசைபாடவில்லை. ராசக்காபட்டியின் வீதிகளில் நட்சத்திரங்கள் குத்த வைத்து உட்காரத் துவங்கும் இரவுகளில் இப்பொழுது இவளின் பாட்டை வேடிக்கைப் பார்க்கிற விருப்பத்தோடுதான் வருகின்றன. ஊரின் நல்லது கெட்டதுகளுக்காக செத்துப்போன பெருசுகள் அனேகம்பேர் நட்சத்திரங்களாய் அவள் பாடும் கதைகளை கேட்டுக் கொள்கின்றனர். விதைச்சலுக்காகவும், வீரத்திற்காகவும் பலி கொடுக்கப்பட்ட ஊர்ச்சாமிகளின் வலி அவளின் குரலில். எல்லோருக்கும் தெரிந்து மறந்து போன, ஊரின் பல நூற்றாண்டு கதைகளை பாட்டாய் அலறினாள். வயசு மூத்த கிழவிகளெல்லாம் அவளின் கதைகளைக் கேட்டு மனசுக்குள் கேவினர். ”ஆத்தி இம்புட்டு ஊர்க்கதையவும் இந்த சின்னப்புள்ள மனசு என்னண்டு தாங்கும்… ஊர்ச்சாமிகளுக்கு இவமேல என்ன கோவம்?...” யாருடைய கவலைக்கும் தீர்வில்லை.


ஒவ்வொருவரும் அவளிடமிருந்து போதுமான தூரம் தள்ளி இருப்பதில் சுதாரிப்பாயிருந்தனர். இன்னும் அவள் மோசமான நிலைக்குப் போய்விடவில்லை. இரவுகளில் மட்டுந்தான் அசாதரணமானவளாகிவிடுகிறாள். அவள் அலறுகிற சத்தம் கேட்டு ஓடி ஒளிகிற ஆட்களால் எவ்வளவு முயன்றும் அந்த சத்தத்திலிருந்து தப்பிக்க முடிந்திருக்கவில்லை. கதவுகளை அடைத்தும், பஞ்சால் காதை அடைத்தும் எல்லா வழியில் முயன்றும் சத்தம் காதைப் பிளந்தது. அவள் யாரையும் வசைபாடவில்லை. ராசக்காபட்டியின் வீதிகளில் நட்சத்திரங்கள் குத்த வைத்து உட்காரத் துவங்கும் இரவுகளில் இப்பொழுது இவளின் பாட்டை வேடிக்கைப் பார்க்கிற விருப்பத்தோடுதான் வருகின்றன. ஊரின் நல்லது கெட்டதுகளுக்காக செத்துப்போன பெருசுகள் அனேகம்பேர் நட்சத்திரங்களாய் அவள் பாடும் கதைகளை கேட்டுக் கொள்கின்றனர். விதைச்சலுக்காகவும், வீரத்திற்காகவும் பலி கொடுக்கப்பட்ட ஊர்ச்சாமிகளின் வலி அவளின் குரலில். எல்லோருக்கும் தெரிந்து மறந்து போன, ஊரின் பல நூற்றாண்டு கதைகளை பாட்டாய் அலறினாள். வயசு மூத்த கிழவிகளெல்லாம் அவளின் கதைகளைக் கேட்டு மனசுக்குள் கேவினர். ”ஆத்தி இம்புட்டு ஊர்க்கதையவும் இந்த சின்னப்புள்ள மனசு என்னண்டு தாங்கும்… ஊர்ச்சாமிகளுக்கு இவமேல என்ன கோவம்?...” யாருடைய கவலைக்கும் தீர்வில்லை.


வீடு முழுக்க அறுத்துப்போட்டு குவித்து வைத்திருக்கும் எள்ளின் மனம். புது எள்ளை மோந்து பார்க்கும் போது மூக்குக்குள் அந்த நாசி சின்ன குறுகுறுப்பை உண்டாக்கும். அதுவொருவிதமான கிளர்ச்சி. இப்பொழுது அந்த வாசனையேகூட விருப்பமில்லாததாய் இருக்கிறது. மூலையில் சுருண்டு படுத்திருக்கும் பிள்ளைக்கு முதுகில் புளியவிளாரால் அடித்த காயத்தின் ஈரமிக்க தடம். குருதி கசிந்து உறைந்திருந்தது. கடைசியாய் இந்தக் காயத்தோடு வீட்டிற்கு வந்த நாளில்தான் திசைமிரண்டு போனவளாய் ஆனாள். வீடு வந்து சேர்ந்தது எந்தச் சாமி செய்த புண்ணியமோ. யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. முதுகில் ரத்தம் வடிந்திருப்பதைப் பார்த்து அய்யாவுக்கு உடலெல்லாம் கொதிப்பு. ”ஆத்தி,. என்னாச்சு தாயி? யாரு செஞ்சதுன்னு சொல்லு, போயி சங்கறுத்துப்புடறேன்.” என என்னென்னவோ கெஞ்சிப் பார்த்தார். அவளிடம் எந்தப்பதிலும் இல்லை. நாலு தகப்பன் வகையறா வீட்டு ஆட்கள் நடந்ததை சொல்லவும் மாட்டாமல் மெல்லவும் மாட்டாமல் விக்கித்துக் கிடந்தனர். அய்யாவுக்குப் பெறகு ஊர்ப்பெருசுகள், கிழவிகள் எல்லாம் கேட்டுப் பார்த்தும் சுப்பு பதில் எதுவும் சொல்லாமலேயே கிடந்தாள். முதுகில் உறைந்திருந்த ரத்தக்கவுச்சி வீட்டிற்குள் படையல் கேட்டது. அதுவும் ரத்தப்படையல்….


அய்யாவுக்குக் காவக்காரத் திமிர். உடம்பில் நடையில் பேச்சில் எல்லாத்திலும். ஒரு ராத்திரியில் ராசக்காபட்டியிலிருந்து நடந்து மானுத்து வரைக்குமான எட்டு மைல் தூரமுள்ள காட்டையும் சுற்றி வருகிறவர் ரெண்டு மூணு இடங்களில் மட்டும் கம்பில் பெரிதாய் துணியைச் சுற்றி வைத்துவிட்டு வருவார். அது ஒருவிதான எச்சரிக்கை. நாகையசாமி காவலில் மட்டுந்தான் இந்த அடையாளம். களவாங்க வருகிறவர்களுக்கு அவர் காவலில் களவாங்கும் தைர்யம் இருந்ததில்லை. அது அவரின் மேலிருக்கிற மரியாதையால் வந்தது. மனுசன் அத்தனை நல்லது கெட்டதுகளுக்கும் வஞ்சகமில்லாமல் போய் வருவார். அதனாலேயே சுப்பு ஊர்ப்பிள்ளை. ஆத்தா செத்து இத்தனை வருடத்தில் ஆத்தா இல்லாத குறையை ஊரிலிருந்த அத்தனைத் தெரு பொம்பளைகளும் தீர்த்து வைத்தார்கள்.


செவக்காடும், அய்யாவும்தான் இத்தனை வருடத்தில் அவள் பார்த்து வளர்ந்த உலகம். அதைவிட்டால் அவளை அணைத்துக்கொள்ள ஊர்ப்புழுதியும் பொம்பளைகளுமிருந்தனர். மேலத்தெருவில் யார்வீட்டில் சுட சுட களி கிண்டினாலும் “இந்தச் சிறுக்கி எங்க போனா…. அடியேய் ஏய் சக்களத்தி, சுப்புங்கறவளே எங்கடி இருக்க?” சத்தம் தெருவைத்தாண்டி ஊர் முழுக்க காற்றில் பரவி அத்தனை பேரின் காதுகளுக்குள்ளும் சில நொடிகள் சுப்பு கூப்பிட்டவளின் சக்களத்தியாகி கடைசியாய் சுப்புவுக்கு வரும். இந்தப் பக்கத்திலிருந்து பதிலுக்கு இன்னொருத்தி எவடி அவெ என் வீட்டுச் சக்களத்திய அவ சக்களத்தின்னு சொல்றவ?...” என வம்புச்சண்டைக்கு வருவாள். கிழவிகளுக்கும் குமரிகளுக்கும் இவள்தான் சக்களத்தி. ஊர் ஆம்பளைகள் அம்புட்டு பேரும் முறை வைத்து விளையாடும் சக்களத்தி. சுப்பு களி தின்பதைப் பார்ப்பதற்காகவே அவளைச் சாப்பிடக் கூப்பிடுவார்கள். ஒவ்வொரு வாய்க்கும் ஒரு பெரிய உருண்டை, உருண்டையைப் பிளந்து குழியாக்கி உள்ளே கருவாட்டுக் குழம்பையோ, புளிக்குளம்பையோ ஊற்றி விட்டு அப்படியே சொர் சொரென அள்ளி விழுங்குவாள். ஒரு சின்ன சிதறல்கூட இருக்காது. அவள் இன்னொரு கை வேண்டுமெனக் கேட்டால் கூட உட்கார்ந்து சாப்பிடும் அத்தனை பேரின் கையும் அள்ளிக் குடுக்கும். ஒரு உறி உறிந்துவிட்டு ‘ம்ம்ம்ம்ம்ம்ம்’ என ரசித்து விழுங்குவாள். குடிக்கிற கஞ்சியைக்கூட சந்தோசமாய்க் குடிக்கிறதால்தான் அவள் மனசு மாதிரியே உடம்புக்கும் ஒன்னுமில்லாமல் சுகமாயிருந்தாள்.


சுப்பு ஊர்ப்பிள்ளைகள் மாதிரி இல்லை. வெயில் குடித்த செவக்காட்டு நிலத்தின் பகல் வேளைகளில் வியர்க்க வியர்க்க வேலை செய்கிறவள். கிணறே இல்லாத அவர்களின் அந்த வறண்ட பூமி இவளின் வியர்வையால்தான் வருடம் முழுக்க விளைந்து கொண்டிருந்தது. வானம் பாத்த பூமியென ஒருவரும் சொல்லிவிடமுடியாது. சோளம், எள்ளு, மிளகாய் என மாறி மாறி விதைப்பதும் அறுப்பதுமாய் இருப்பார்கள். ஊரில் யாரும் இதை பொச்சுக்காப்பாய்ப் பார்க்க மாட்டார்கள். “நாகசாமி மக கெட்டிக்காரியப்பா. ஒத்த ஆளா காட்ட வெதச்சு அறுத்துப்புடறா…’ என பாசமாய் இருப்பார்கள். உழைக்கிற பிள்ளை. அய்யா கள்ளைக் குடித்துவிட்டு எங்காவது விழுந்து கிடக்கிறாரெனத் தெரிந்தால் யாரையும் கூப்பிட மாட்டாள். கொஞ்சம் உப்பை எடுத்துக் கொண்டு அய்யா கிடக்கும் இடத்திற்குப் போவாள். பக்கத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து கல்லில் உப்பை உரசி அய்யாவின் மூஞ்சியில் சொரட்டு சொரட்டெனத் தேய்த்தால் சில நிமிசத்தில் உப்பின் எரிச்சல் தாங்க மாட்டாமல் அய்யா ‘ஆத்தி,ஆத்தி, எரியுது தாயி…” எனக் கத்துவார். அவள் கோவமாக எதையும் செய்வதில்லை. “எம்புட்டுக் குடிச்சாலும் வீட்ல வந்து விழுந்து கெடன்னுதான சொல்றேன்.” அவரின் துணியை சரிசெய்து கொஞ்சம்கூட ஐய்யரவே படாமல் இழுத்துக் கொண்டு போவாள். புலியை வேட்டையாடி கூண்டுக்குள் அடைக்க இழுத்துப் போவது போலிருக்கும்.


2


ஒவ்வொரு அறுப்பு காலத்திற்கும் தொலைவிலிருந்து கூத்துக்காரர்கள் வருவது வழக்கம். கூத்தோடு சேர்த்து அவர்கள் கடந்து வரும் ஊரின் கதைகளையும், காத்தையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வருவார்கள். அதையெல்லாம் பாட்டாய் ஆட்டமாய் இந்த ஊரில் இறக்கி வைத்துவிட்டு இந்த ஊரின் கதையை இன்னொரு ஊருக்கு எடுத்துப் போவார்கள். இந்த வருசம் பெய்யாத மழை பெஞ்சு அமோக விளைச்சல். சம்சாரிகளின் வீட்டில் வஞ்சகமில்லாமல் மானாவாரியாய் அறுப்பு முடிந்த தான்யங்கள் நிறைந்திருந்தன. கூத்துக்காரர்கள் வந்து சேர்ந்த பொழுது அவர்களை ஊர் சந்தோசமாக வரவேற்றது. சந்தோசத்தில் கோழியும் கெடாயும் அடித்துப்போட்ட ஊர்க்காரர்களின் அன்பில் கூத்துக்காரச் சனம் மெச்சிப்போய் நேரங்காலமில்லாமல் கூத்தாடினார்கள். கூத்தாடி கூத்தாடுவதைத் தவிர எந்த வேலைகளையும் பொதுவில் பார்ப்பதில்லை. அவர்களுக்கே விளைந்து கிடக்கும் காட்டைப் பார்க்க ஆசையாயிருந்தது. மூணு ஆம்பளைகள் ரெண்டு பொம்பளைகள் ஒரு சின்னப்பிள்ளை, ரெண்டு சின்னைப் பையன்கள். இவ்வளவுதான் கூத்தாட வந்த குடும்பம். சின்னப்பிள்ளையின் ஆட்டம் பிரமாதம், ரெண்டு பொம்பளைகளில் ஒருத்தி பிரமாதமாய்ப் பாடினாள். நாத்து நடவுப்பாட்டுகளையும் அறுப்புப் பாட்டுக்களையும் கேட்டுப் பழகியவர்களுக்கு அவள் பாடின தெம்மாங்கு பாட்டு வார்த்தைகள் சரிவர புரியாதபோதும் அந்த மெட்டு மயக்கியது. ”ஊரடங்கும் சாமத்துல. ஒய்யார பல்லக்குல. ஒத்தையா நான் போறேன் . ஒரு துண தேடி “ இப்படி ஆரம்பிக்கிற பாட்டு அவள் தாசியைப்பத்திப் பாடுகிறாளோ என யோசித்துக் கொண்டிருக்கிற பொழுதே ‘தை மாசம் கல்யாணமுன்னு, தவமிருந்து சொன்னீயளே, தை போயி மாசியும் வந்து என்ன தவிக்க விடுதீயளே. வெள்ளாம காலம் முடியலையோ ராசா? எனக்கொரு விடிவும் இல்லையோ?....” இப்படி அறுக்காத ஊர் வயல்களின் கதையாய் மாறிப்போகும். சந்தோசமாய்ப் பாடுகிற பொழுது எல்லோரும் சந்தோசமாய்க் கேட்டார்கள். அவள் பாட்டோடு கண்ணீரும் சேர்கிற பொழுது எல்லோரும் சேர்ந்து கண்ணீர் விட்டார்கள்.


கூத்துக்கார பொம்பளைகள் பாடுகிற அத்தனை பாட்டையும் வாய்ப்பாட்டாக பாடுமளவுக்கு சுப்புவுக்கு மனப்பாடமாகிப் போனது. அவர்கள் பாடும்போது இவளும் திரும்பப் பாடினாள். பாட்டோடு கதைகளும் அவள் வார்த்தைகளில் சேர ஊரின் விசேச கதை சொல்லியானாள். கூத்தில்லாத நேரங்களில் கூத்துக்காரப் பொம்பளைகளை இழுத்துக் கொண்டு செவக்காடு முழுக்க சுற்றினாள். மண்ணைக் கிழித்து விதை நடும் சூட்சும் சொல்லிக் கொடுத்தாள். விளைந்து அறுப்புக்குத் தயாராகியிருந்த பச்சை நெல்லை கூத்துக்கார சனங்களின் கைகளில் குடுத்த பொழுது விதைநெல்லை விதைக்க நெலமில்லயே தாயி என்று அந்தச் சனம் தவதாயப்பட்டது. அய்யாவிடம் சொன்னால் சொத்தையே குடுத்துவிடுவார். கூத்தாடி எந்த ஊருக்கும் சொந்தமானவனாய் இருக்க முடியாது. நாடோடிகளாய்த் திரிய வேண்டும். அலைந்து திரிந்த அந்த வலியை வேதனையத் தான் கூத்தாய் ஆட வேண்டும். ஓலைக்கொட்டானில் சுப்பு கொடுத்த நெல்லை வாங்கிக் கொண்ட கூத்துக்காரப் பொம்பளைகள் அதை பத்திரமாய் வைத்துக் கொண்டார்கள்.


வேஷங்கட்ட கூத்துக்காரி வைத்திருந்த ஒரு பழைய கண்ணாடியைத்தான் இருப்பதிலேயே பெரிய ஆச்சர்யமாய் சுப்பு பார்த்தாள். நம்ம மூஞ்சியப் பாக்க முடியுமா?... அவளுக்கு ஆச்சர்யம். சந்தோசம். தன் மூஞ்சியை பார்த்த பொழுது கருப்பும் மினுமினுப்புமாய் தன்னை அவ்வளவு பிடித்துப் போனது. சீலைக்காரி சிலையிலிருக்கும் பொலிவு தன்னிடமிருக்கிறதால்தான் எல்லோருக்கும் தன்மீது இத்தனை அன்போ என நினைத்துக் கொண்டாள். முடியை அழகாக வாரிச் சீவவும், அழகாக்கவும் கூத்துக்காரி சொல்லித் தந்தாள். சீவி முடித்து அவள் ஊருக்குள் வந்த பொழுது பெருசுகளுக்கெல்லாம் அப்படியான ஆச்சர்யம் “யாத்தே நம்ம பெரியாத்தா பேச்சி மாதிரியே இருக்குதுய்யா புள்ள.” என நெட்டி முறித்தனர். பேச்சி ஊரின் அடையாளம். பெருங்காமநல்லூர் வழி வந்தவர்களின் ஊர்ச்சாமி. எந்த பேச்செடுத்தாலும் பேச்சியை சொல்லாமல் துவங்கவும் முடியாது முடிக்கவும் முடியாது. சுப்புவின் நடையும், பேச்சும் அவர்களுக்கு பேச்சியைத்தான் நினைவுபடுத்தியது. அய்யாவுக்கு பிள்ளையைப் பார்த்து அம்புட்டுப் பூரிப்பு. அப்படியே கையைப் பிடித்துக் கொண்டு அவளோடு ஊரைச்சுற்றி நடக்க வேண்டும் போலிருந்தது. பிள்ளைக்கு கோழியடித்து சாப்பாடு போட்டார். சிங்காரித்துவிட்ட கூத்துக்காரிக்கு மனசு நெறய தானியம் குடுத்தார்.

கூத்து முடிந்து அடுத்த ஊருக்குப் போகையில் கூத்துக்காரி தனது நினைவார்த்தமாய் அந்தக் கண்ணாடியை சுப்புவிடமே குடுத்துவிட்டுப் போனாள். அது ஊர் காட்டும் கண்ணாடி. எந்த ஊர்க்கெல்லாம் போனதோ அந்த ஊரையெல்லாம் கதையாய்க் காட்டிக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் கண்ணாடி வந்த பொழுது அதை அத்தனை சந்தோசமாய் உணர்ந்தாள். இரவும் பகலும் அந்தக் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்வதை விளையாட்டுத்தனமாய் ஒரு குழந்தை செய்வதைப்போல் செய்து கொண்டே இருந்தாள். காவலுக்குப் போகும் அய்யாவிடம் எல்லோருமே இப்பொழுது சுப்புப்பிள்ளையைப் பற்றி அக்கறையாய் விசாரித்ததில்தான் பிள்ளைக்கு கல்யாண வயசு வந்திருப்பது அய்யாவுக்குப் புரிந்தது. கல்யாணம் கட்டிக் குடுப்பதென்றால் பிள்ளயைப் பிரிந்து இருக்கனுமே, அத்தனை சாதாரண விசயமா? ஆனாலும் தகப்பனின் கடமை. அய்யா சொந்த பந்தத்தில் சொல்லி வைத்துவிட்டார்.

’முல்லக் கொடியாட்டம் செழிச்சு வளந்துட்டாடா சோண. பிள்ளயக் கெட்டிக் குடுத்துடு ’ பெருசுகள் அய்யாவே சும்மா இருந்தாலும் சொல்லி சொல்லி அய்யாவை சங்கடப்படுத்தினார்கள். ஒருவழியாய் கொக்குளத்தில் சொந்தத்திலேயே பையன் கிடைத்துவிட்டான். அவன் அய்யாவும் காவக்காரர். ஆளை முன்னமே இவருக்குத் தெரியும். பேர் போன குடும்பம் தான், நம்பிக் குடுக்கலாம். ஆனால் இம்புட்டுத் தொலைவா இருக்கேன்னு அய்யா மலைத்தார். தொலவு என்ன தொலவு? நிலாவுலயா பிள்ளயக் கெட்டிக் குடுக்கப்போற? இந்தா இருக்கு் கொக்குளம். விடிய நடந்தா மத்தியான கஞ்சிக்கு போய்ச்சேந்துடலாம், சந்தோசமா குடுடா.” ஒத்துக்கொண்டார் அய்யா. பிள்ளையை அவர்களுக்க்குப் பிடித்துப் போனது, ரெண்டு வாரத்தில் வந்து பரிசம் போடுவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்.


செவக்காட்டுப் புழுதியப்பிய அந்தப் பழைய சுப்பு இல்லை இப்பொழுது, அவளுக்கு யாரைப்பார்த்தாலும் வெட்கம் வந்தது. தெருவில் நடக்கையில் அந்தத் திமிரும் தினவும் குறைந்து போய் அவள் யாரோ மாதிரியாய் இருந்தாள். பொம்பளைகளுக்கு அவளை உரிமையோடு சக்களத்தி எனக்கூப்பிட தயக்கமாய் இருந்தது. சட்டென அவளை பெரிய மனுசியாய் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது சனம். இன்னும் அதே அக்கறையோடு களி கிண்டினால் கூப்பிட்டுவிடத்தான் செய்கிறார்கள். அவளும் வந்து வஞ்சகமில்லாமல் சாப்பிடுகிறாள். ஆனால், அவள் சாப்பிடுவதிலிருந்த குழந்தைத்தனம் போயிருந்தது.

பொழுசாயங்களில் இப்பொழுதெல்லாம் அவள் வயதுப் பிள்ளைகளோடு பேசுவது சுப்புவுக்குப் பிடித்துப்போக அந்தப் பிள்ளைகள் சொல்லும் புதுப்பொண்ட்டாட்டி புருஷன் கதைகளை ஆர்வமாய்க் கேட்டாள். அந்தப் பிள்ளைகளுக்கு ஊரின் பெரும்பாலான பெண்களின் ஒடம்பு வாகு தெரிந்திருந்தது, யாருக்கெல்லாம் பிஞ்சு மாங்காய் யாருக்கெல்லாம் கொழுத்த மாங்காயென கதை கதையாய்ச் சொன்னார்கள். ”ராக்கப்பக் கோணாரு பொண்டாட்டிக்கு எது பெருசோ இல்லையோ பொச்சு இத்தந்தண்டிடீ…” என ஒருத்தி விரித்துக் காட்டிய பொழுது நிஜமாக அத்தம் பெரியதாய் பொச்சு இருக்குமா என ஆச்சர்யமாய் இருந்தது இவளுக்கு. வயக்காட்டுக்கு காலை நேரத்தில் ஒதுங்கப் போகையில் ரகசியமாய் தன்னுடையதைப் பார்த்தாள். அத்தாம் பெருசு என்றைக்குமே தனக்கு வர வாய்ப்பில்லை என்கிற அளவிற்கு இருந்தது. பேச்சு ஓயும் நேரங்களிலெல்லாம் அந்தப் பிள்ளைகள் இவளைப் பாடச்சொன்னார்கள் . சுப்பு ஏராளமாய்ப் பாடினாள். பட்டசாமிகளின் வாழ்க்கையைச் சொல்லியிருந்த கிழவிகள் கூட இப்படி அடிதப்பாமல் பாடுவார்களா என்பது சந்தேகம். சுப்பு பாடும் போது பட்டசாமிகளே பாடுவது போலிருக்கும். வேதனையும், வலியும் அந்த பாடலுக்குள் பூச்சிகளாய் ஊறி ஊர் முழுக்க இரவுகளில் பறக்கத் துவங்கும். எல்லோரும் உறங்குகிற நேரத்தில் ஊருக்காக உயிர் விட்ட சாமிகளெல்லாம் ஊர் நிம்மதியாய்த் தூங்குவதை உறங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும். சுப்புவுக்கு உறக்கம் பிடிக்காத இரவுகளில் இந்த ஊர்ச்சாமிகளுடன் பேசுவதுதான் பிடித்தது. அவர்களின் கதையையும் அழுகையையும் அக்கறையாய்க் கேட்பாள். குறையிருந்தால் அதை யாருக்கும் சொல்லாமல் நிறைவேத்தி வைப்பாள். அதனாலேயே சாமிகளுக்கும் அவளென்றால் ப்ரியம்.


எல்லோருக்கும் காட்டியதைப்போலவே சாமிகளுக்கும் தன்னிடமிருந்த கண்ணாடிகளைக் காட்டினாள். ஊரார் முகங்களை எல்லாம் பார்த்த சாமிகளுக்கு தங்களின் முகங்களைப் பார்த்த பொழுது அத்தனை காலம் சொல்லி மாளாத துயரமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமய்க் கரைவது போலிருந்தது. மணிக்கணக்காக எதுவும் பேசாமல் சாமிகள் கண்ணாடிகளையேப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்படி என்னதானிருக்கிறது இந்தக் கண்ணாடியில்? ஏன் இதைப் பார்க்கும் போது இந்தச் சாமிகளெல்லாம் அமைதியாகிவிடுகின்றன. எல்லாச் சாமிகளிடமும் கேட்டாள். ஒருவரும் பதில் சொல்லவில்லை. அய்யா காவலுக்குப் போகாத ராத்திரிகளில் திண்ணையில் தான் படுப்பார். ரவையெல்லாம் இந்தப் பிள்ளை யாரோடு பேச்கிறாளென இவருக்கு விளங்காது. சரி கல்யாணம் ஆகப்போற பிள்ளகிட்ட இதெல்லாம் போயா கேட்க முடியுமென எதுவும் கேட்காமலேயே விட்டுவிடுவார்.


கண்ணாடி ஊரில் எல்லோரின் வீட்டிற்கும் வந்தது, எல்லோரும் முகம் பார்த்தனர். ஊரின் முகங்கள் பிம்பங்களாகிக் கொண்டிருந்தன. ஊரே கண்ணாடியில் பிரதிபலிக்க, எல்லோரும் கண்ணாடியைப் பற்றிப் பேசுவதை சந்தோசமாக செய்தனர். சிவராத்திரி இரவில் ஊரில் முன்பிருந்த கவுச்சி வாடையோடு புதிதாய் பவுடர் வாசனை வந்து சேர்ந்திருந்தது. கண்ணாடி பார்க்கும் பெண்களின் முகங்களில் காட்டுத் தன்மை குறைந்துபோய் மண் பொம்மைகளாகியிருந்தனர். வலிய அழைத்தும் ஊர்ச்சாமிகள் இந்தமுறை இறங்கி வருவதாய் இல்லை. மலைக்குப் போயிருந்த சங்கிலிக் கருப்பு கும்பிடும் ஆட்கள் சாமத்துக்கு மேலாகியும் அருளிரங்காமல் ”அடுத்த வருசம் எல்லாத்தயும் ஒழுங்கா செஞ்சிடறோம் சாமி’ என உருண்டு பெறண்டு கும்பிடவும்தான் கருப்பு இறங்கி வந்திருந்தார். ஊர் முன்னெப்போதும் பார்க்காத அதிர்ச்சிகளைப் பார்க்கத் தயாராகக் காற்று ஊரோடு சேர்த்து சுழற்றியடித்தது.




3

நாலு தகப்பன் வகையறா குடும்பத்தில் நல்ல நா கும்பிட்ட ராத்திரியில்தான் வினை வந்தது. ஒரு குடும்பம் குலசாமி கும்பிடும்போது பிறத்தியார் யாரும் பார்த்துவிடக்கூடாது. எல்லாத்தையும்விட பெரிய தப்பு அது. சாமி கடுமையாய்த் தண்டிக்குமென எல்லோருக்குமே அச்சம் இருக்கும். லேசில் அந்தப் பேச்சையே எடுக்க மாட்டார்கள். சின்னப்பிள்ளைகள் கூட பேசிக்கொள்வார்களே தவிர யாரும் எட்டிப்பார்ப்பதில்லை. வீட்டில் விசேசம் வைக்கப் போதற்கு முன்னால் குலசாமிக்குப் படையல் குடுப்பது வழக்கம், அப்படி படையல் குடுக்க வேண்டிதான் அந்தக் குடும்பம் கும்பிட்டது. அவர்கள் குலசாமிப்பாட்டு அவர்கள் வீட்டு ஆட்களை விடவும் இவளுக்கு நன்றாகவேத் தெரிந்திருந்தது, அந்தப் பாடலின் வழியாகவே அந்தக் குடும்பத்தின் வரலாறும் தெரியும். வழி வழியாய் வாழ்ந்ததை பாட்டாய்ச் சொல்லிவிடுவாள். சுப்புவின் வீட்டிலிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் இருந்தது அவர்கள் படையல் போடும் இடம். சாமத்துக்கு உடுக்கையும் பாட்டுமாய் இருந்ததை வீட்டிலிருந்தே கவனித்தபடிதான் இருந்தாள். ரெண்டாம் ஜாமம் தாண்டியும் இப்பொழுது உறக்கம் வருவது அத்தனை சுலபமாய் இல்லை அவளுக்கு. பாட்டுச் சத்தம் கேட்டு மெல்ல அவளின் கால்கள் பரபரத்தன. படையல் வைக்கப்பட்ட கவுச்சியின் வாசனை ஊரை நிறைத்திருந்தது. பால் தேடி ஓடும் பூனைக்குட்டியாய் சாமி கும்பிடுகிற வீட்டுப்பக்கமாய்ப் போனாள். அந்த வீட்டிற்குப் பின்னாலிருந்த மரத்தடியில்தான் சாமி இருந்தது. படையல் மரத்திலிருக்கும் சாமியால் வேகமாய் உறியப்பட்டு தீர்ந்து கொண்டிருக்க, சாராயம் குடித்த நாலு தகப்பன் வகையறா பெருசுகள் பேய்க்காமன் இறங்கி முறுக்கேறிக் கிடந்தனர். அவளும் வீட்டில் சாமி கும்பிடுகையில் பார்த்திருக்கிறாள். ஆனால் இது முன்னை மாதிரி இல்லை. ஏதோ ஒரு ரெளத்திரம் இருந்தது. சாமிக்கு மனசடங்கவில்லை. பேய்க்காமன் இறங்கி ஆடியதில் மரமும் வீடும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. பேயுரு கொண்ட ஊரின் மற்ற பெருசுகள் எல்லாம் ‘பேய்க்காமெ ஆட்டம் இன்னைக்கி பொல்லா ஆட்டாமா இருக்கேய்யா?....” என பயத்தில் ஊருக்கு வெளியிலேயெ சுற்றினர். பேய்க்காமனின் ஆட்டத்தில் ஊரின் ராத்திரி சிதறி அரண்டு கிடந்தது. படையலோடு சேர்த்து சாராயம் குடித்த பெருசு நாக்கைத் துருத்தி வீட்டிலுள்ள ஒரு கிழவிக்கு வாக்கு சொல்கிற நேரமாய் வீட்டின் பின்புறத்திலிருந்து “வீச்ச்”சென ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது. பேய்க்காமனே அலறி ஓடுகிற சத்தம். அவன் குரல் ஒடுங்கி பாதிவழியில் ஓடிப்போனான். படையல் போட்ட வீட்டு ஆட்கள் ஓடிப்போய் பார்க்கையில் சுப்பு சொரணையற்றவளாய் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தாள். கருத்த அவள் முகம் இறுகி நீலமாகியிருந்தது. முதுகில் பச்சை விளாரால் அடித்ததுபோல் ஒரு அடி. தோலுரிந்து ரத்தம் கசிந்தது. ஒரு ஆள் அவளைத் தூக்க முடியாது, ஒரு முற்றிய மஞ்சணத்தி மரம் விழுந்து கிடப்பதைப்போல் கிடந்தாள். “இந்த கிறுக்குக் கழுத ஏன் இங்க வந்தா?.’ சடவாகவும் நினைத்து அவளை எதுவும் செய்ய முடியவில்லை. பஞ்சாயத்துக்குக் கொண்டு போனால் பெரிய தண்டனை இந்த தப்புக்கு. இவள் ஊர்ப்பிள்ளையாச்சே. கிழவிகள் கையோடு சேர்த்துத் தூக்கிக் கொண்டு சென்றனர். அடித்தது பேய்க்காமனாகத்தான் இருக்க வேண்டும். அவன் வெறி கொண்டு ஆடியதை எட்டிப் பார்த்திருக்கிறாள். பெருசுகளுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை, மந்திரித்து வைத்திருந்த விபூதியை பூசிவிட்டு எழுப்பிப் பார்த்தனர். அவளிடம் எந்த அசைவும் இல்லை. எந்திரிக்கும் வரை எதையும் கேட்க வேண்டாமென படையல் போடுவதை விட்டுவிட்டு அமைதியாய் வெளியில் போய் உட்கார்ந்திருந்தனர்.

காவலுக்குப் போய்விட்டு வந்த அய்யா பிள்ளை கிடக்கிற நிலையைப் பார்த்துவிட்டு நொறுங்கிப் போனார். அய்யாவுக்கு முறுக்கேறிய தேகம். நடந்து நடந்து நரம்புகள் முறுக்கேறிக் கிடக்கும் கால்கள். கைத்தாங்கலாக பிள்ளையக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போகையில் பேய்க்காமன் இருந்த மரம் இவளையே பார்த்து அசைந்து கொண்டிருந்தது. மரத்தைத் தாண்டிப் போகையில் மரத்திலிருந்து காற்றின் சத்தம் காதடைக்கும்படி அதிர, தன் முரட்டுக் கூந்தல் விரித்து பேய்க்காமன் மரமாய் ஆடிக்கொண்டிருந்தான். வீட்டிற்குப்போன சுப்பு கண்முழிச்சு எந்திரிக்க நடுமதியம் ஆனது. வாட்டமாய் உணர்ந்தாள். கம்மங்கஞ்சி ருசிக்கவில்லை. கண்ணாடி வீட்டின் மூலையில் எங்கோ கிடந்ததை தேடி எடுத்தவள் மூஞ்சியைப் பார்க்க, அருளில்லாமல் கிடந்தது. தன் மூஞ்சியா இப்படிப் போனது? எந்த விசயத்திற்காகவும் வாட்டமாகாத முகம். மூஞ்சியைக் கழுவிவிட்டு வந்து பார்த்தாள். ஈரம் உலர்ந்திருந்ததே ஒழிய முகம் மாறவில்லை. துணியால் முகத்தைத் துடைத்தபடியே இருந்தாள். இன்னும் கொஞ்சம் துடைத்தாள் ரத்தம் வந்திருக்கும், ஆனாலும் கண்கள் இறுகி மூஞ்சியின் நிலை மாறவில்லை. சுப்புவுக்கு மனம் கொள்ளவில்லை. எந்த துயரத்திற்கும் அழுகிறவளில்லை. எதையும் பார்க்க முடியாமல் கண்ணாடியைத் தூக்கி எறிந்தாள். நொறுங்கிய கண்ணாடி வீடு முழுக்க சிதறியது. சுப்புவுக்கு தலைக்குமேல் ரத்தம் கிறுகிறுத்தது. உடைந்த கண்ணாடியிலிருந்து கூத்துக்காரியின் குரல் வழியாய் வந்து சேர்ந்திருந்த அத்தனை ஊர்ச்சாமிகளும் பேயாட்டம் ஆடின. சத்தம் பாட்டாய் ஒப்பாரியாய் எதிரொலித்து எக்காளமிட்டது. சிதறிய கண்ணாடித் துண்டுகள் எதிலும் எதுவும் பிரதிபலிக்கவில்லை. கண்ணாடித் துண்டுகள் உயிரில்லாமல் எதையும் பிரதிபலிக்காமல் கிடந்ததை இன்னும் துயரத்தோடு பார்த்தவள் ஒரேயொரு துண்டில் மட்டும் கடைசியாய் பேய்க்காமன் இறங்கி ஆடிய பிம்பம் அசைவதைக் கண்டாள். அந்த இரவு தனக்கு என்ன நடந்ததென்கிற அதிர்ச்சி இன்னொருமுறை தலைக்குள் ஏற மீண்டும் அலறினாள்.


சாமத்தில் அன்றைக்குத்தான் முதல் முறையாய் அவள் அரண்டு அலறினாள். என்னவோ ஏதோவென ஓடிவந்த ஊர்ச்சனம் இவள் கிடக்கிற நிலையைப் பார்த்து விக்கித்துப்போய் நின்றனர். நாலு தகப்பன் வகையறா வீட்டு ஆட்கள் வாயைப்பொத்திக் கொண்டு நாம செஞ்ச வெனதான் இப்பிடி ஆயிப்போச்சே எனக் கேவினர். சுப்பு அலறியது அலறலில்லை. துயரத்தின் பாடல். ஊருக்காகவே உயிர்விட்ட ஆத்மாக்களின் வலி, வார்த்தைகளாய் பாட்டாய் ஊரை சிதறடித்தது. பெருசுகள் அந்தப் பிள்ளையின் பாட்டிலிருந்த துயரத்தை கூர்ந்து கேட்டனர். யாரும் ஒரு வார்த்தைப் பேசிக்கொள்ளவில்லை. பேய்க்காமன் ஊர்ச்சாமிகளின் பிரதிநிதியாகிப் போனான், அப்பனின் வாழ்க்கையையும் அப்பனின் அப்பனுடைய வாழ்க்கையையும் கதையாய் கேட்ட பெருசுகளுக்கு பேய்க்காமன் சொன்ன ஊர்க்கதை பிடிபடவில்லை. பலி குடுத்த பட்டசாமிகளின் நூற்றாண்டு கோவம் ஊரை சூரையாடத் துடித்தது. எதற்கு காலம் முழுக்க இத்தனை பலி? நல்லது கெட்டதுக்கு பலி குடுக்க யார் சொல்லிக் குடுத்தது? இந்த ஊரின் தாகத்திற்கு இன்னும் எத்தனைபேரின் ரத்தம்? விடிய விடிய ஊர் அமைதியாய் அவ்வளவையும் கேட்டது. ஒரு வார்த்தை பேசவோ கேட்கவோ ஒருவருக்கும் திராணியில்லை. உறங்காமல் ஒவ்வொருவரும் தங்கள் கழுத்தில் கை வைத்துப் பார்த்தனர். அத்தனை பேரின் கழுத்திலும் ரத்தம்.


ஊரிலிருந்து துவங்கி ரொம்ப தூரத்திற்கு அறுக்க முடியாத நெல்கருதுகள் தழைத்து நின்றன. வயலோடு சேராது தனியாகிக் கிடந்த அந்த தானியத் தொடர்ச்சி ஒரு பாதையைப் போல் தொடர்ச்சியாய்ச் சென்றது. ஒவ்வொரு நெல்மணியும் அத்தனை கனம். ஒரு நெல் ஒரு ஆளுக்கு சாப்பிடப் போதுமாயிருக்கும். அத்தனை பெருசு. சம்சாரிகள் பார்க்காத விசயம். அந்த நெல்லிலிருந்து பச்சை வாடைக்குப் பதிலாக சாம்பல் வாடை வீசியது, சுடுகாட்டுச் சாம்பலின் வாசனை. வயலில் நெல்லுக்குப் பக்கத்திலேயே யாரோ ஊரின் வினையை விதைத்து விட்டுப் போயிருந்தார்கள்.


பிள்ளை இம்புட்டு சீக்கிரத்தில் நரம்பாகிப் போவாள் என ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. ராத்திரியில் அவள் குரல் வெவ்வேறாய் மாறி பேயாட்டம் ஆடியது. வார்த்தைகளால் பெருஞ்சாட்டைகளைச் சுழற்றி ஊரை பலியெடுத்துக் கொண்டிருந்தாள். கண்ணாடிகள் யார் முகத்தையும் இப்பொழுது பிரதிபலிக்கவில்லை. சொல்லி வைத்தாற்போல் எல்லாம் கருப்படித்துப் போனது, கண்ணாடியை கழுவியும் துடைத்தும் பார்த்தார்கள். துடைக்க துடைக்க கண்ணாடி மூர்க்கமான கருப்பாகியது. சரி, உடைத்துத் தூக்கி எறிந்துவிடலாமென்றாலும் கண்ணாடிகள் கருங்கல்லாகி விடுகின்றன. அதனை கல்லென்று அத்தனை எளிதில் சொல்லிவிட முடியாது, பட்டசாமிகளாய் வைக்கப்பட்ட உயிர்க்கல். அந்தக் கண்ணாடிகளுக்குள் ரெளத்ரமிக்க குருதி ஓடிக்கொண்டிருக்கிறது. என்ன செய்து இந்த ஊரை மீட்க?... யாரிடமும் பதிலில்லை.


பிள்ளை இம்புட்டு சீக்கிரத்தில் நரம்பாகிப் போவாள் என ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. ராத்திரியில் அவள் குரல் வெவ்வேறாய் மாறி பேயாட்டம் ஆடியது. வார்த்தைகளால் பெருஞ்சாட்டைகளைச் சுழற்றி ஊரை பலியெடுத்துக் கொண்டிருந்தாள். கண்ணாடிகள் யார் முகத்தையும் இப்பொழுது பிரதிபலிக்கவில்லை. சொல்லி வைத்தாற்போல் எல்லாம் கருப்படித்துப் போனது, கண்ணாடியை கழுவியும் துடைத்தும் பார்த்தார்கள். துடைக்க துடைக்க கண்ணாடி மூர்க்கமான கருப்பாகியது. சரி, உடைத்துத் தூக்கி எறிந்துவிடலாமென்றாலும் கண்ணாடிகள் கருங்கல்லாகி விடுகின்றன. அதனை கல்லென்று அத்தனை எளிதில் சொல்லிவிட முடியாது, பட்டசாமிகளாய் வைக்கப்பட்ட உயிர்க்கல். அந்தக் கண்ணாடிகளுக்குள் ரெளத்ரமிக்க குருதி ஓடிக்கொண்டிருக்கிறது. என்ன செய்து இந்த ஊரை மீட்க?... யாரிடமும் பதிலில்லை.

4

ஊருக்கு வெளியே கிணறு வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊரையே பலி குடுக்க முடியாது, பலி குடுத்து பலி குடுத்து கரையாகிப் போன ஊரின் கடைசிப் பலி. யாருக்கும் வேறு வழியில்லை. கேள்விகளால் சிதறுண்ட சனம் சாமியாடிகளையும் கோடாங்கிகளையும் ஊருக்குள் கூட்டி வந்து எல்லாவற்றிலிருந்தும் மீள என்னதான் வழியெனக் கேட்டு சலித்துப் போனது. வந்த அத்தனை பேரும் உதட்டைப் பிதுக்கிவிட்டுப் போய்விட்டனர். கள்ளவீட்டு சண்டையும், பகையும் ஒரு நாளில் முடிந்து போவதில்லை. அப்படித்தான் துயரமும். அழுது தீர்த்து ஆற்றுப்படுகிற சனமில்லை. வெடித்துச் சிதற வேண்டும் ஊர்க்காரர்களின் முகங்காட்டாத கண்ணாடிகள் அவ்வளவையும் அள்ளிக் கொண்டு வந்து கிணற்றில் போட்டனர். கண்ணாடிகள் மீது ஈரமிக்க செம்மண்ணைக் கொட்ட கொட்ட உடைவதற்குப் பதிலாக நெகிழத் துவங்கின. கண்ணாடிகள் நெகிழ்ந்து கண்ணீராகின. யார் யாரின் துயரமோ நெகிழ்ந்து நீராகிக் கொண்டிருந்தது.


அய்யாவுக்கு உசுரு இப்பொழுது அரை உசுராகியிருந்தது. பிள்ளையை இப்படி பாதியில் விட மனசில்லை. அவள் ஒருத்திக்காகவென்றுதான் இத்தனை வருசமாக உசுரைப் பிடித்து வைத்திருந்தார். திண்ணையில் உட்கார்ந்து பேய்க்காமனிருக்கும் மரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்பு. ஊர்க்காரர்கள் வந்து இவளை சடங்கு செய்து கூட்டிப் போவதற்கு முன்னால் என்ன செய்வதெனக் கலக்கம். பிள்ளையிடம் போய்ப் பேசக்கூட முடியாமல் தவதாயப்பட்டார். “அய்யா…” சுப்புவுக்கு குரல் கட்டிப்போய் இப்பொழுது யாரோபோல் பேசுகிறாள். “என்ன தாயி” மனசு படபடத்தது. “கெழக்காம முப்பத்தாறு மைல் போனா, அங்க இருந்து ஒரு ஒத்தயடிப்பாத வழியா மூனு மைல் நடந்து பெருங்காமநல்லூர் போற பெரிய பாதைய பிடிச்சிரலாம். இன்னக்கி சாமத்துக்கெல்லாம் நான் அங்க இருப்பேன். நீங்க வந்து சேருங்க….” திரும்பியே பார்க்கவில்லை. எழுந்து வேகவேகமாய் நடந்து போனாள்.


அய்யாவுக்குத் திசையும் புரியவில்லை, ஒன்னும் புரியவில்லை. ஊர்கூடிப் பேசித்தான் முடிவெடுத்தனர். மனுசரா இருக்க வேண்டிய பிள்ள இல்லப்பா, இந்த ஊரோட காவல் தெய்வம். நம்ம பேச்சியாத்தாள இன்னைக்கி வர நாம சாமியாக் கும்பிடறதில்லயா? விடுப்பா, உங்குடும்பம் இந்த ஊரக் காத்ததா இருக்கட்டும். ஊர்ப்பெருசுகள் அய்யாவின் தோளைப் பிடித்து ஆறுதல் சொல்லி சரிசெய்து வைத்திருந்தனர். இப்பொழுது ஊருக்குக் குடுத்த வாக்கு முக்கியமில்லை பிள்ளைதான் முக்கியம். சுப்பு எழுந்து போகையில் அவளின் கண்கள் எரிந்து கொண்டிருந்தன. ஊரின் தெருக்கள் எங்கும் பேயுரு கொண்ட ஊர்ச்சாமிகள் குருதி வழியும் நாவோடு இவள் வருகைக்காக காத்திருந்தனர். ஒரு சின்ன துணிமூட்டையை மட்டும் இடையில் வைத்துக் கொண்டாள். பொட்டணத்திற்குள் உடைத்து நொறுக்கின அவளின் கண்ணாடி. அவள் உடலோடு சேர்ந்ததும் குழைந்தது. வெக்கை ஊரை எரிக்க, ஊரிலிருந்து ரொம்ப தூரம் தாண்டிப் போயிருந்தாள்.


அய்யா ராசக்காபட்டியின் எல்லையைத் தாண்டுகிற பொழுது ஊர் முழுக்க சுப்புவைத் தேடி ஆட்கள் சுற்றினர். பொம்பளைகள் யார் வீட்டில் எழவு விழுமோ? என்கிற கவலையுடனும் இன்னொரு பக்கம் “சக்களத்தி மக, எங்கிட்டாச்சும் போயி உசுரோட இருந்தா சந்தோசம்டி யாத்தா…” என மனசுக்குள் வேண்டிக்கொண்டனர். அந்த ஊர்க்கார பெண்களின் முதலும் கடைசியுமான சக்களத்தி சாமியாகும் விருப்பங்கள் எதுவுமின்றி ஊரை ஏமாற்றின சராசரி மனுஷியாகவே அங்கிருந்து போயிருந்தாள். இரவின் சூன்யம் நிரம்பிய சாலையெங்கும் மரங்கள் மெளனமாய் அய்யாவின் நடையிலிருந்த பதட்டத்தைக் கவனித்தன. எல்லாத் திசையும் ஒன்னு போலவே இருந்தது. வழியில் முனியின் நடமாட்டம் இருக்கிற பொழுதுதான் இந்த மாதிரியெல்லாம் இருக்குமென பெருசுகள் சொல்வார்கள். காவலுக்கு நிக்கிற இரவுகளில் பேயாவது முனியாவது? முதல் முறையாய் அய்யாவுக்கு ஊரைப் பழிக்கிறோமே என்கிற கவலை. ஊரின் பாசம் அவருக்குள் விசுவாசமாய், நீக்கி எடுக்க முடியாத அன்பாய் இறுக்கிப் பிடித்த வேரென பிணைந்து கிடந்தது. அந்த பிணைப்பு அத்தனையும் இதோடு அவ்வளவுதானா? சுப்பு இந்த நேரத்திற்கு எங்கு போய்க்கொண்டிருப்பாள்? அய்யாவுக்கு அனாதையாகிவிட்டோமோ என கவலையாகிப் போனது. அவள் தெய்வாம்சம் உடையவள், பேச்சி. அவளுக்கு எந்த வில்லங்கமும் இருக்கப் போவதில்லை. ஆனாலும் ஆன மட்டுக்கும் வேகமாய் நடந்து அவளை எட்டிப் பிடித்துவிட வேண்டுமென நினைத்தார். உசிலம்பட்டியைத் தாண்டுகிற நேரமாய் முதுகில் சுளீரென ஒரு சாட்டையடி விழுந்ததை உணர்ந்தவர் வலியை உணரும் முன்னரே மயங்கிச் சரிந்தார். காவலுக்குப் போகும் முனியின் குதிரை ஒரு சுழற்காற்றென அவரைக் கடந்து போனது. முனி தூரத்தில் போய் இவரைத் திரும்பிப் பார்த்தார். ’ஆயிரம் இருந்தாலும் அவனும் காவக்காரனாச்சே’ என்கிற அக்கறையாய் இருக்கலாம்.


ஊர்ப்பொதுவாய் சேமித்திருந்த வைக்கோல் படப்பு மலை மாதிரி கிடந்தது. அதனடியில்தான் அய்யா மயங்கிக் கிடந்தார். வெயில் ஏறி சுள்ளென அடித்தது. மாட்டுக்கு கூளம் அள்ள வந்த பெண்ணொருத்தி பேச்சு மூச்சில்லாமல் ஒரு ஆள் கிடக்கிற கிடையைப் பார்த்து ஓடிப்போய் ஊரிலிருந்த ஆட்களைக் கூட்டி வந்தாள். வந்தவர்களில் ஒன்றிரண்டு பேருக்கு இவரைத் தெரிந்தது. ‘ஆளு நம்ம சோணையப்பா. ராசக்காபட்டி காவக்காரென், போங்கத்தா போயி இம்புட்டு நீராகாரம் கொண்டுக்காங்க.” பிள்ளைகளைத் துரத்தினர். நீராகரம் குடித்தது கொஞ்சம் தெம்பாக இருக்க, அய்யா எல்லோரையும் கும்பிட்டுக் கொண்டார். கூடியிருந்த ஊர் என்ன ஏதென விசாரித்தது. “ஒரு துக்க வீட்டுக்குப் போயிக்கிருந்தனப்பா… வழில என்னண்டோ வந்துச்சு. சுதாரிக்க முன்ன மயங்கிட்டேன்.” பட்டும் படாமல் பேசினார். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு பெருங்காமநல்லூர் போகும் பாதையைக் கேட்டார். ஒரு பெருசு அவரோடு கொஞ்ச தூரம் வழி காட்ட ஒரு ஆளை அனுப்பி வைத்தார். ஒரு கலயத்தில் கொஞ்சம் கஞ்சித் தண்ணியைக் குடுத்து ‘போற வழில குடிச்சுக்கப்பா.” அனுப்பி வைத்தார். அய்யாவின் நடை இப்பொழுது வேகம் பிடித்திருந்தது. யோசித்துப் பார்த்ததில் இரவு பதட்டத்தில் திசை மிரண்டு போயிருக்கிறது, முனி நடமாடும் பாதையில் மாறி நடந்ததால் முனியடித்திருக்கிறது. இனி சுதாரிப்பாய் இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டார்.

பெருங்காமநல்லூர் நெருங்குவதற்கு சில மைல்கள் முன்பாகவே மெல்ல இருட்டத் துவங்கியிருந்தது. தூரத்திலிருந்து கூத்துக்காரர்களின் மேளச்சத்தம் கேட்க, சத்தம் வந்த திசையைப் பிடித்தே அய்யே ஊரை நெருங்கினார். ஊருக்குள் நுழைந்ததும் மந்தையை ஒட்டி பெரிய கூட்டம் திரண்டிருந்தது. ஒரு பெண் வெண்கலக் குரலில் பேச்சியாத்தாளின் கதையைப் பாடிக்கொண்டிருந்தாள். அய்யாவுக்கு நழுக்கென்றிருந்தது. சுப்பு மட்டுந்தான் இதையெல்லாம் பாடுவாள். வேக வேகமாய் ஓடினார். மந்தையில் அம்சமாய் சிங்காரித்து சுப்பு கூத்தாடிக் கொண்டிருந்தாள். அவள் குரலில் பேச்சியின் உயிர். ”இந்தக் கழுதைக்கு என்னவாகிப் போனது? கள்ள வீட்டுப் பிள்ளை கூத்தாடுவது தெரிந்தால் கள்ளநாடு சும்மா விடுமா?” என்ன செய்வதெனத் தெரியாமல் ஒதுங்கி நின்றார். ஊரின் பெரிய தலைக்கட்டு ஆட்கள் சிலருக்கு இவரைத் தெரியும், யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி நிற்க வேண்டுமென ஒதுங்கி நின்றார். கள்ளநாட்டில் பெரிய ஊர்களென்று சொல்வதானால் ஒரு பத்து ஊர்களிருக்கும். காரியக்காரர்கள் பெரும்பாலும் இருப்பது பெருங்காமநல்லூரில்தான், வெள்ளைக்காரன் நுழைய முடியாமல் தோற்றுப்போய் ஓடின ஊர். அந்தக்கால பெருசுகள் அவ்வளவு லேசில் வேத்து ஆட்களை ஊருக்குள் விட்டுவிட மாட்டார்கள். எந்தெந்த ஊரில் யார் பெரிய காவக்காரன், யார் பெரிய களவாணி என்கிற எல்லாத் தகவலும் தெரிந்திருக்கும் அவர்களுக்கு. மானூத்தைச் சுற்றி அத்தம் பெரிய காவக்காரனாய் வீராப்பாக திரியும் அய்யா ஒடுங்கிப்போய் நின்றார். பேச்சியாத்தாளின் கதையைக் கேட்ட ஊர் உறக்கமின்றி தவித்தது, எல்லோருக்குள்ளும் சொல்லி மாளாத ஒரு குற்ற உணர்ச்சி. கள்ளவீட்டுப் பிள்ளைகளுக்கே மறந்துபோன கதை எப்படி இந்தக் கூத்துக்கார பிள்ளைக்குத் தெரிந்தது. ஊர்ப்பெருசுகள் இந்த மாசத்திலேயே மறக்காமல் பூசைபோடச் சொல்லி தலக்கட்டு ஆட்களிடம் சொன்னார்கள்.

கூத்து முடிந்து கூத்துக்கார்களோடு டெண்ட்டுக்குப் போன மகளுக்குப் பின்னாலேயே அய்யாவும் போனார். ரெண்டே டெண்ட்டுகள். சற்றுத் தள்ளி அவர்களின் வண்டியும் மாடும் நின்றுகொண்டிருந்தன. பெரிய கூத்துக்காரிதான் அய்யாவை முதலில் பார்த்தாள். சந்தோசமாய் சிரித்து இவரை வரச்சொன்னாள் “எம்புட்டோ சொன்னோம் சாமி, பிள்ள கேக்க மாட்டேங்கறா. கூத்தாடற எல்லாத்துக்கும் இந்த மாதிரி ஒரு வாக்கு கிடச்சிடாது. சுப்புக்கு பேய்க்காமனும், பேச்சியும் வாக்கு குடுத்திருக்காக.. இந்தப்பிள்ள எதயோ ஊருக்கெல்லாம் சொல்லனும்னு நினக்கிறா. சொல்லட்டுமே சாமி.” அய்யா வாயைப் பொத்தி அழுதார். இதுக்காகவா வம்பாடுபட்டு பிள்ளையை வளத்தது?. “மனச விட்றாதிய சாமி, எல்லாம் சரியாப் போகும். கூத்தாடறது அப்படியொன்னும் கேவலமான சோலியில்ல. இந்தப்பிள்ள போக்குல விட்டியன்னா சந்தோசமா இருப்பா.” பேசிக்கொண்டிருக்கும்போதே சுப்பு ஓடி வந்தாள். கொஞ்ச நாளாய் அவளிடம் தொலைந்து போயிருந்த அந்த உற்சாகம் வந்திருந்தது, சந்தோசமாயிருந்தாள். அவள் முகமே மாறிப்போய் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு தெளுச்சி. சாமி சிலைகளில் மட்டுமே பார்க்க முடிகிற தெளுச்சி அது. அய்யாவின் கம்பீரமெல்லாம் தொலைந்து போயிருந்ததைப் பார்த்தவள் கரைத்துக் கொண்டு வந்த கம்மங்கஞ்சியை அவரிடம் குடுத்தாள். பேச்சற்றவராய் அய்யா கஞ்சியை வாங்கி குடிக்க, சாமத்திற்கு மேல் அங்கிருந்து வேறு ஊருக்குப் புறப்பட கூத்துக்காரர்கள் மூட்டை கட்டிக் கொண்டிருந்தனர். அய்யா அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் கூத்துக்காரர்களுடன் சந்தோசமாய் பேசித்திரிந்த சுப்புவையே பார்த்துக் கொண்டிருந்தார். டெண்ட்டும் பிரிக்கப்பட்டு வண்டி அங்கிருந்து கிளம்பியபோது அய்யா அமைதியாய் சுப்புவையே பார்த்துக் கொண்டிருந்தார். “காலம்பூர காவக்கம்பு புடிச்ச வளந்த சீவன் தாயி என்னால ஊரு நாடு சுத்தி வர முடியாது.. நீ சந்தோசமா போயிட்டு வா. நா கும்பிடற பேச்சி உன்ன எங்கிட்டக் கொண்டாந்து சேப்பா.” அவளிடம் ஆறுதலாய் பேசிய அய்யாவையே பார்த்தவள். அவரின் கையில் ஒரு சின்ன பொட்டலத்தைக் குடுத்தாள். ”நீங்க ஊர்போய்ச் சேர்ற பாதை முழுக்க இத தூவிக்கிட்டே போங்க அய்யா. இந்த தானியமெல்லாம் வளந்து என்னைக்கு அறுக்கறாகளோ அன்னைக்கு நான் ஊர் வந்து சேந்துருவேன்.” அய்யா பக்குவமாய் வாங்கி தனது இடுப்போடு சேர்த்து கட்டிக்கொண்டார். வண்டி ஊரைத் தாண்டி ரொம்ப தூரம் போனபின் ராசக்காபட்டிக்கு நடந்தவர் வழியில் எங்கும் அந்தத் தான்யத்தைத் தூவவில்லை. அவருக்குத் தெரியும் அவை வெறும் விதைகளல்ல. சுப்புவின் ஆவி. சுப்பு மனுச சென்மமல்ல. தான்யாள். அழிவற்ற தான்யாள்.

275 views

Recent Posts

See All

Fake

Comments


bottom of page