top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

- செபாஸ்தியன் – கலையின் வழியாய் அடையாளங்களை மீட்டெடுத்த மலேசியத் தமிழர்.


( இவர்கள் தொடருக்காக எழுதப்பட்ட கட்டுரை )

            வரலாற்றை நாம் வென்றவர்களின் கதையாக மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறோம்.  கடல்  கடந்து சோழர்கள் வென்ற போர்களும் தமிழ் மன்னர்களின் வீரக் கதைகளும்  மட்டுமே தொடர்ந்து முன்னிறுத்தப்படுவதால் வஞ்சிக்கப்பட்டவர்களின் வரலாற்றை நாம் அறிந்துகொள்ள முடியாமலேயே போய்விடுகிறது. ப்ரிட்டிஷ் காலத்தில் கரும்புத் தோட்டங்களில் கூலியாட்களாகவும், ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணிசெய்யவும் உலகின் வெவ்வேறு நாடுகளுக்கு இழுத்துச் செல்லப்பட்ட தமிழ்  மக்களின் துயரக்கதைகள் இன்றளவும் பெருமளவில் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை.  


மனதிலும் உடலிலும் அவமானங்களைச் சுமந்து அடையாளமிழந்து புலம் பெயர் நாடுகளில் உதிரிகளாய் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட கடந்தகால அவலங்கள் குரூரமானவை.


ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக  வெவ்வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தங்கள் விடுதலைக்கான எழுச்சிமிக்க போராட்டங்களை கலைகளின் வழியாகவே முன்னெடுத்தனர். அரசியல் போராட்டங்களுக்கான விதைகளை ஆழமாய் விதைப்பது கலைகள்தான். ஆஃப்ரோ அமெரிக்க இலக்கியத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் நாவல் கருப்பின மக்கள் அடிமைப்படுத்தப்பட்ட மிக நீண்ட வரலாற்றைப் பேசக் கூடியது. மறக்கடிக்கப்பட்ட தங்களது அடையாளங்களை, வேர்களை எல்லாம் ஆழமாய்ப் பதிவு செய்த அந்நாவல்  வெளியாகி உலகமே கொண்டாடியபின் அதனைத் தொலைக்காட்சித் தொடராக இயக்கி வெளியிட்டார்கள். 


அந்தத் தொடர் பெற்ற வரவேற்பு மகத்தானது. அமெரிக்காவில் தொலைக்காட்சிகளில் அந்தத் தொடர் ஒளிபரப்பான காலத்தில்  ஒளிபரப்பப்படும் நேரத்திற்கு பயணங்களைத் தவிர்க்கவேண்டி  விமானப் போக்குவரத்தையே மாற்றி வைக்கும் அளவிற்கு மக்கள் அதனைக் கொண்டாடினார்கள். அந்தத் தொடர் முடிவுக்கு வந்தபோது பத்துலட்சத்திற்கும் அதிகமான வெள்ளையர்கள்  கருப்பின மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு மனம் வருந்தும்விதமாய்  ஊர்வலம் சென்றார்கள். அலெக்ஸ் ஹேலியின் வேர்களைக் குறித்து யோசிக்கும் போதெல்லாம் கரீபியத் தீவுகளிலும், மலேசிய இலங்கைத் தோட்டங்களிலும், மொரீசியஸ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் காடுகளிலும் வெள்ளையர்களால் அடிமையாக்கப்பட்டு சுரண்டப்பட்ட தமிழர்களின் கடந்தகாலம் தான் நினைவுக்கு வரும்.  இலங்கை, மலேசியத் தமிழர்கள் ஓரளவு தங்களது வரலாற்றைப் பதிவு செய்திருந்தபோதும் மற்ற நாடுகளுக்குச் சென்ற தமிழர்களிடமிருந்து ஏன் எந்த வரலாற்றுப் பதிவுகளுமில்லை? வேர்களைப் போன்று ஏன் மகத்தானதொரு நாவல் எழுதப்படவில்லை என்ற கேள்விகள் எழும்.   வரலாற்றை கலைகளின் வழியாய் ஆவணப்படுத்த வேண்டுமென்கிற பிரக்ஞை அவசியமென நண்பர்களுடனான சந்திப்பில் நான் எப்போதும் வலியுறுத்துவதுண்டு. அப்படியொரு உரையாடலில்தான் மலேசிய எழுத்தாளர் ராஜேஸ்வரி செபாஸ்தியன் என்னும் அந்த அற்புதமான மனிதரைக் குறித்து எனக்கு அறியப்படுத்தினார்.


மலேசியாவில் உள்ள அழகான நகரங்களில் ஈப்போவும் ஒன்று. 1940 ம் வருடம் திருச்சியிலிருந்து சமையல் வேலைகளுக்காக செபாஸ்தியனின் அப்பா மலேசியாவுக்குச் செல்கிறார்.  தமிழர்களின் திருமணங்களிலும், வேறு விசேஷங்களிலும் சமையல் செய்வதுதான் அவரது பணி. வேலைக்குச் சென்ற  ஊரில்  பூக்கடை வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த செபாஸ்தியனின் அம்மாவைச் சந்திக்கிறார்.  அந்த அறிமுகம் பின்பு நேசமாக வளர்ந்து  இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.  செபாஸ்தியனோடு பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர். சிறுவயது முதலே செபாஸ்தியனுக்கு தமிழ் நாட்டுப்புற கலைகளின் மீது அலாதியான ஆர்வமுண்டு. ஈப்போவிலுள்ள பிந்தோங் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியென்றாலும் நாட்டுப்புற கலைகளை முறையாகக் கற்றுக் கொடுப்பதற்கான ஆசிரியர்களோ பள்ளிகளோ இருந்திருக்கவில்லை. பொதுவாகவே புலம் பெயர் நாடுகளில் இந்திய அடையாளங்களாக பரதமும் சாஸ்திரிய சங்கீதமுமே பார்க்கப்படுகிறது.  நாட்டுப்புற கலைகளுக்கான கவனம் வெகு சொற்பமே. செபாஸ்தியான் தனது சொந்த முயற்சியில் கலைகளைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்.   பத்தொன்பது  வயதானபோது  முதல்முறையாக கோலாட்டத்தைக் கற்றுக்கொண்டு ஒரு கோவில் திருவிழாவில் ஆட அந்த நிகழ்ச்சி சுற்றுவட்டாரத்தில் பிரபலமாகப் பேசப்படுகிறது. அது 1990 ம் வருடம். கலையின் மீது பிடிப்பும் அசாத்தியமான ப்ரியமும் கொண்ட கலைஞனுக்கு பலம் மக்களின் பாராட்டும் கைதட்டும்தான்.  அந்த நிகழ்ச்சியில் கிடைத்த பாராட்டுகள் செபாஸ்தியனை வெவ்வேறு கலைகளைக் கற்றுக்கொள்ளவும் தனக்குப் பின்னால் பெரும் கலைஞர்கள் கூட்டத்தை உருவாக்கவும் தூண்டியிருக்கிறது.  அன்று முதல்  இன்றுவரை முப்பது வருடங்களுக்கும் மேலாக நாட்டுப்புற கலைகளுக்காக தன்னை அற்பணித்துக் கொண்டிருக்கிறார்.


முதல் நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள ஏராளமான கோவில்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அவரை அழைக்கிறார்கள்.  கோலாட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு  கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிற ஆர்வமும், மிகப்பெரிய கலைக்குழுவை உருவாக்க வேண்டுமென்கிற தவிப்பும் அவருக்கு உருவாகியதால் தமிழ்நாட்டிற்கு வந்து மற்ற கலைகளை  கற்றுக்கொள்ள விரும்புகிறார்.  தனது குழுவினரோடு தஞ்சைக்கும் ,மதுரைக்கும் வந்து முறையாகக் கற்றுக் கொண்டு செல்பவர் தமிழ்நாட்டிலுள்ள கிராமிய கலைகளுக்கான சங்கத்திலும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார்.


புந்தோங் சுங்கை பாரி சாலையிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு மிக அருகிலேயே செபாஸ்தியனின் வீடும் இருந்துள்ளது.  கிறிஸ்தவராக இருந்தபோதும் நாட்டுப்புற கலைகளின் மீதிருந்த ஆர்வம் காரணமாய் சிறுவயது முதலே அவர் அந்தக் கோவிலுக்குச் செல்லத் துவங்குகிறார்.     அவரது தந்தை கோவிலுக்குச் செல்லக் கூடாதென கண்டித்தும்கூட  அவர் கோவிலுக்குச் செல்வதை நிறுத்தியிருக்கவில்லை.  ஒருபுறம் கோவிலின் மீதிருந்த ஆர்வம் இன்னொருபுறம் கலைகளின் மீதிருந்த பிடிப்பு இரண்டின் காரணமய் இந்துவாக மதமாற்றம் செய்துகொள்பவரை அவரது குடும்பத்தினர் விலக்கி வைக்கத் துவங்குகிறார்கள். மலேசிய பல்கலைக் கழகத்தில் திரைப்பட இயக்கத்தை பட்டப்படிப்பாக 90 களிலேயே படித்து முடித்தவர் சமீபத்தில் தான் சினாஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். திரைப்பட உருவாக்கம் மற்றும் விநியோகத்திற்கான அரசு உரிமை பெற்றுள்ள செபாஸ்தியன் தற்போது குறும்பங்களையும் இசை ஆல்பங்களையும் உருவாக்கி  வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.


2010 ம் வருடம் கவிஞர் கனிமொழி எம்.பி  இவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறார். சென்னை சங்கமம் ஒவ்வொரு  வருடமும் சிறப்பாக நடைபெற்று தமிழ்க் கலைகளும் கலைஞர்களும் கெளரப்படுத்தப்பட்ட காலகட்டம் அது.  அச்சமயத்தில்  நாற்பதுபேர் கொண்ட குழுவோடு வந்த செபாஸ்தியன்  இந்தியாவில் எட்டு இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.  சென்னை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, தில்லி என பதினெட்டு நாட்கள் அவர்கள் பயணத்திற்கான மொத்த ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டவர் கவிஞர் கனிமொழி அவர்கள். மலேசிய மண்ணில் அவர்கள் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும் தமிழகத்தில் தமிழ் மக்களின் முன்பாக தங்களது  கலைத்திறமையை வெளிப்படுத்த முடிந்த தருணங்கள் அற்புதமானவை என்கிறார்.  அவருக்கும் அவரது குழுவினருக்கும் கிராமியக் கலைகளின்  மீதிருந்த அலாதியான பற்றைத் தெரிந்து கொண்ட கனிமொழி அவர்கள்  அவரது குழுவினர்   வேறுபல  கலைகளை முறையாகவும் விரிவாகவும் கற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.


2016ம் வருடம் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திற்குக் கடிதம் எழுதி கரகாட்டம், ஆட்டக்காவடி போன்ற கலைகளைக் கற்றுத்தரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.  அதைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் உதவியோடு  ஒரு மாதகாலம் அங்கேயே தங்கி கலைமாமணி விநாயகம் அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்டக்காவடி கட்டக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலைகளைக் கற்றுக் கொண்டுள்ளார்கள்.  தொடர்ந்து மதுரையில் இயல் இசை கழகத்தின் உதவியோடு ஆசிரியர் மணிகண்டனின் வழிகாட்டுதலில் சிலம்பாட்டம், உள்ளிட்டக் கலைகளையும் ஆசிரியர் தங்கப்பாண்டியனின் வழிகாட்டுதலோடு கரகாட்டத்தையும் கற்றுக் கொண்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து பறை, நய்யாண்டி மேளம், கோலாட்டம் உள்ளிட்ட கலைகளை தஞ்சையில் ஆசிரியர் ராஜேந்திரன் வழியாகக் கற்றுக் கொண்டார்கள்.  கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு நில்லாமல் புதிய கலைகளைத் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் அவரிடம் இன்றளவும் இருந்து வருவதால்தான் எங்கெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் அலைந்து திரிகிறவராய் இருக்கிறார். 2019 ம் வருடம்  மீண்டும் தஞ்சைக்கு வந்தவர்கள் நாதஸ்வரம், பரதம் உள்ளிட்டக் கலைகளையும் ஆசிரியர் வீரசங்கரின் வழியாக கிராமியப் பாடல்களை எழுதவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். சென்னை இயல் இசை மன்றத்தைச் சேர்ந்து முத்து என்னும் கரகாட்டக் கலைஞர் கரகாட்டத்தில் உள்ள வித்தைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார். முறையாக நாதஸ்வரம் வாசிப்பது, தவில் வாசிப்பது, பரதம் உள்ளிட்டக் கலைகளை செபாஸ்தியனோடு வந்த பதிணெட்டு மலேசிய மாணவர்கள் கற்றுக்கொண்டனர். பல்கலைக் கழகம், தனியார் அமைப்புகள், அரசியல் தலைவர்களென ஏராளமானவர்கள் இவர்கள் தமிழ்நாட்டில் கலைகளைக் கற்றுக்கொள்ள உதவியாய் இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகம் இவருக்கு இரண்டு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளது.  


ஈப்போவில் கிராமியக் கலைகளுக்கான மிகப்பெரிய பள்ளியையும், அதோடு கூடிய விடுதியையும் கட்டி நிர்வகித்து வருகிறவர் இந்த முப்பதாண்டு காலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கிராமியக் கலைகளைக் கற்றுக்கொடுத்து உருவாக்கியுள்ளார். இந்தப் பள்ளியில் கலைகளைக் கற்றுக்கொள்ள வருகிற மாணவர்களிடம்  எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் குறைந்தபட்சம் மூன்று வருடங்களேனும்  அவரோடு பயணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    பயிற்சியின் அடிப்படையில்  வெவ்வேறு படிநிலைகளை வைத்துள்ளார்கள். ஐந்தாவது  படிநிலையைத்  தாண்டியபின்  அந்த மாணவர் விருப்பப்பட்டால்  பள்ளியின் நிர்வாகத்தில் சேர்ந்து கொள்ளலாம். 2001 ம் வருடம் திருமணம் செய்து கொள்பவருக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையாமல் 2003 ம் வருடமே விவகாரத்து செய்துகொண்டுவிடுகிறார். அதன்பிறகு மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார்.


 ஈப்போவின்  புந்தோங் சுங்கை பாரி சாலையில் அமர்ந்திருக்கும் அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற ஒன்று.  1850 ம்  வருடம்  ப்ரிட்டிஷ்காரர்கள் தமிழ்நாட்டில் பழனி அருகிலிருக்கும் பள்ளபட்டி என்னும்  கிராமத்திலிருந்து  ஏராளமான மக்களை மலேசியாவிற்கு துப்புரவு பணிகளுக்காக அழைத்துச் செல்கிறார்கள். இப்படிச் சென்றவர்களில் அனேகரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  நாட்டைவிட்டுச் செல்லும்போது சொந்த ஊரிலிருந்து அந்த மக்கள் எடுத்துச் சென்றது கொஞ்சம் உடைகளையும் அவர்கள் தெய்வமாக வணங்கிய அம்மனின் சூலாயுதத்தையும் மட்டும் தான்.  காடும் மலையும் நிரம்பிய புதிய தேசத்தில்  தங்களுக்கு வாழ ஒதுக்கப்பட்ட சின்னஞ்சிறிய நிலத்தில்  அந்த  சூலாயுதத்தையே  தெய்வமாக வைத்து வணங்கத் துவங்கினார்கள். அந்த மக்கள்  சூலாயுதத்தை ஊண்டி வணங்கிய இடம் மெல்ல மெல்ல ஒரு கோவிலாக உருவானது.   அருகாமைப் பகுதிகளிலிருந்த  தமிழ் மக்கள்   அந்தக் கோவிலைத் தேடி  வரத் துவங்கினார்கள்.  இளம் வயது முதலே அந்தக் கோவிலோடு நெருங்கிய தொடர்பிலிருந்த செபாஸ்தியன் இந்துவாக மதம் மாறியபின் கோவிலின் நிர்வாகக் கமிட்டியில் ஒருவராகச் சேர்க்கபட்டார்.  பின்பு,  2010 ம் வருடம் அதே கோவிலின் துணைத் தலைவராக உயர்ந்தார்.  அவர் காட்டிய ஈடுபாட்டின் காரணமாகவும்,  பொறுப்புகளை சிரத்தையாக கையாண்டதின் பலனாகவும் 2014 ம் வருடம் அந்தக் கோவிலின் தலைவராக நிர்வாகத்தினர் அவரை தேர்வு செய்தார்கள். கோவிலின் நிர்வாகக் குழுவில் வந்த நாட்களிலிருந்தே  அந்தக் கோவிலின் பூர்வீகத்தையும் மக்களின் பூர்வீகத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.   தொடர்ச்சியான தமிழகப் பயணங்கள் அந்தத் தேடலுக்கான விடையைக் கண்டுகொள்ள அவருக்கு உதவுகிறது. 


1850 ம் வருடம் பள்ளப்பட்டியிலிருந்து துப்புரவு வேலைக்காக அழைத்துவரப்பட்ட அந்த மக்கள் ஒருபோதும் தங்களது சொந்த நிலத்திற்குத் திரும்பியிருக்காததோடு  பூர்வீக கிராமத்திலிருப்பவர்களுடன் எந்தவிதமான  தொடர்பிலும் இல்லை என்பது தெரியவர தனது சொந்த முயற்சியில்  உறவுகளைப் புதுப்பிக்கும் வேலைகளைச் செய்கிறார்.  2014 ம் வருடம் 40 பேர் கொண்ட குழுவோடு தமிழ்நாட்டிற்கு வந்து பள்ளப்பட்டியில் தங்களது உறவினர்களை அடையாளம் கண்டுகொண்டு பூர்விகக் கதைகளை அம்மக்கள் புதுப்பித்துக் கொள்ளச் செய்துள்ளார்.  அத்தோடு நில்லாமல் பள்ளப்பட்டியிலிருந்து அம்மன் கோவில் பிந்தோங் வந்தது வரையிலான வரலாற்றை ஒரு பாடலாக எழுதி அந்தக்  பாடலை தற்போது  யூ ட்யூபில் வெளியிட்டுள்ளார்கள்.  நூற்றம்பைது வருடங்களுக்கும் மேலாக தங்களது வேர்களை மறந்துபோயிருந்தவர்களுக்கு அதனை அடையாளம் காட்டி புதுப்பித்த பெருமை செபாஸ்தியனுக்கு உண்டு.   


கிராமியக் கலைகளின் மீது அளப்பெரிய காதலிருந்தாலும் அடிப்படையில் திரைப்பட இயக்குநராவதற்கான படிப்பை முடித்திருப்பதால் சமீபகாலமாய் குறும்படங்களை இயக்குவது, இசை ஆல்பங்களை உருவாக்குவதென தனது கவனங்களை காட்சி ஊடகங்கள் நோக்கி விரிக்கத் துவங்கியுள்ளார்.  தனது திரைப்பட கம்பெனியின் மூலமாய் அவர்  கடந்த வரும் வெளியிட்ட குறும்படமும் இசை ஆல்பமும் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து முழுநீளப் படமொன்றை இயக்குவதற்கான வேலைகளில் தற்போது இயங்கிவருகிறார். 

 

 

77 views

Commentaires


bottom of page