top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

சிறந்த இந்தியச் சிறுகதை ஓர் அறிமுகம்


பணீஷ்வர்நாத் ரேணுவின் ’பயில்வானின் மத்தளம்’.






இந்தி சிறுகதை உலகில் பிரேம் சந்தின் மரபைத் தொடர்ந்து வந்தவர்களில் மிக முக்கியமானவர் பணீஸ்வர்நாத் ரேணு. பீகாரியான ரேணுவின் கதைகள் அதிகமும் பிரதிபலித்தது நகர்மயமாகும் கிராமங்களின் மனிதர்களைத்தான். பீகார் உத்திரபிரதேச மாநிலங்களின் வாழ்வை ஓரளவு தெரிந்து கொண்டிருப்பவர்களுக்கு ரேணுவின் கதைகளில் வரும் சித்திரமானது அசாத்தியமான எழுச்சியைத் தரக்கூடும். காலம் கடந்தும் அவர் கதைகளின் யதார்த்தம் இன்றளவும் அந்த மக்களின் வாழ்வோடு கலந்திருக்கிறது. நம்பிக்கைகளின் அடிப்படையில் அந்த மக்கள் முழு முற்றாக இழந்திருப்பது தங்கள் வளங்களை மட்டுமல்ல பிரதேச மொழிகளையும் அடையாளங்களையும் தான். இந்தத் தொடர் எழுதும் போது எந்தவிதமான திட்டமிடல்களையும் வைத்திராமல்தான் எழுத்தாளர்களையும் அவர்களின் சிறந்த கதைகளையும் தேர்வு செய்திருந்தேன். ஆனால் தொடர் வாசிப்பு சமகாலத்தில் இலக்கியத்தின் தேவை எதுவென்கிற தேடலில் அதிகமும் நிலம் சார்ந்த கதைகளை எழுதின எழுத்தாளர்களையே தேர்வு செய்ய வைத்திருக்கிறது, நாம் நம் கிராமங்களையும் அதன் ஜீவன் மிக்க மனிதர்களையும் இழந்துகொண்டிருக்கிறோமென்பது நமது ஆன்மாவை இழந்து கொண்டிருப்பதற்குச் சமம்.


ரேணு எழுதத் துவங்கிய காலகட்டம் ஏறக்குறைய தமிழில் மணிக்கொடி மரபு உருவாகி கோலோச்சத் துவங்கிய காலகட்டம் தான். தமிழ் சிறுகதை மரபின் ஆதாரமான வேர்கள் மணிக்கொடி மரபிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன. மணிக்கொடி கால எழுத்தாளர்களின் கதைகளையும் ரேணுவின் கதைகளையும் ஒன்றாக வைத்து வாசிக்கும்போது கதை சொல்லல் முறை, கதை உலகம் எல்லாவற்றிலும் ஓர் ஒற்றுமையும் கச்சிதமும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மெளனி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, நா.பிச்சமூர்த்தி இவர்கள் ஒவ்வொருவரின் கதையும் இன்னொருவரின் சாயல்கள் இல்லாதது, தனித்துவமானது. அதனால் தான் தமிழில் சிறுகதைகளுக்கான பரப்பு மிக ஆழமானதாய் இன்றளவும் இருக்கிறது. வெவ்வேறு நிலங்களை மனித மனங்களை எழுதினாலும் அவர்களின் கதைகளுக்குள் ஆதாராமய் இருந்த மனித மனம் இந்த நிலத்திற்கானது.


மெளனி தன் கதைகளில் கையாண்ட நுட்பங்கள் மேற்கத்திய சாயலுடையவை ஆனால் நிலம் முழுக்க முழுக்க இங்கு வீற்றிருக்கிறது. சமகால இந்தியச் சிறுகதைகளில் மேலெழுந்தவாரியாக கவனிக்கும் போது நாம் நுட்பங்களை மட்டுமல்லாமல் மனித மனங்களையும் மேற்கத்தியர்களிடம் கடன் வாங்கியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நாம் சிந்திக்க அவசியமற்றதை நம் கதாப்பாத்திரங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. கதை சொல்லலில் எல்லா நவீனத்துவ மாற்றங்களையும் நாம் சொந்த நிலத்திலிருந்தே சாத்தியப்படுத்த முடியும். நிலத்தில் தான் கதைகள் விதைக்கப்படுகின்றன.


ஒரு வருடத்திற்கு முன்பாக நண்பரும் எழுத்தாளருமான தூரன் குணாவுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகாக உரையாடும் சந்தர்ப்பம் அமைந்தது. எழும்பூரின் மதுக்கூடத்தில் துவங்கிய இலக்கிய உரையாடல் அங்குமிங்குமாய் அலைந்து நீண்ட நேரத்திற்குப்பின் கிண்டி ரயில் நிலையத்தில் வந்து முடிந்தபோது அவர் உலகின் சரிபாதி நிலப்பகுதிகளுக்கு அலைந்த அனுபவத்திலும் வாசித்த அனுபத்திலும் இப்படிச் சொன்னார் “எல்லா நவீனத்துவமும் அவனவன் சொந்த நிலத்துலதான் இருக்கு.” அன்றைக்கு எங்கள் இருவரின் நிலைப்பாடும் இதுவே.


ரேணுவின் கதைகளை சொல் மரபைச் சேர்ந்தவையாக நாம் அடையாளப்படுத்தலாம். ஒரு உதாரணத்திற்கு மெளனியை எழுத்து மரபு என்று சொன்னால் கி.ராவை சொல்மரபிலிருந்து வந்தவர் என்று நாம் வகைப்படுத்த முடியும். இருவருமே வெவ்வேறு வகையில் மாஸ்டர்ஸ். ஊரை, ஊரின் மனிதர்களை விலங்குகளை செடி கொடி மரங்களை எல்லாம் நினைவுகளின் வழியாகவும் பார்த்தலின் வழியாகவும் சலிக்காமல் கதை சொல்லும் வல்லமை இந்த சொல்மரபில் வந்தவர்களுக்குண்டு. ரேணு அப்படியானவர்தான்.


ரேணுவின் கதையில் வாசிக்கும் கிராமங்கள் உடனடியாக நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. மிக முக்கியக் காரணம் அந்தக் கிராமத்தின் மனிதர்களும் அவர்களும் அப்பாவித்தனங்களும் நாம் நம் கிராமத்து மனிதர்களிடம் கண்டவை. பிடிவாதம் நம்பிக்கைகள் உறுதி என உணர்ச்சிகள் நிர்மபிய மனிதர்கள். ரேணுவின் கதை மாந்தர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள், ஆனால் மிகையுணர்ச்சி கொண்டவர்கள் இல்லை. அவர்களுக்கு வாழ்வின் அறங்களைக் குறித்தப் புரிதலுண்டு. இதனாலேயே ரேணு தன் கதாப்பாத்திரங்களின் வழியாக எந்தக் கருத்துக்களையும் வலிய திணிக்க விளைவதில்லை. இத்தனைக்கும் மிகையுணர்ச்சியால் நிரம்பிய கதை சொல்லிகள் ஆக்ரமித்த காலத்தில் எழுதிய அந்தக் கலைஞன் தன்னை தனித்துவமாகவே வெளிப்படுத்தியுள்ளார்.


ரேணுவின் ஒரு கதையை அல்ல சில கதைகளை எடுத்து எவ்வாறு அவர் கதை மாந்தர்களுக்குள் வாழ்வின் மீதான அபிரிமித நம்பிக்கை மிளிர்கிறது என்பதையும், ஒரு இடைவிடாத தொடர்ச்சியும் தங்கள் கிராமங்களை அவர்கள் எத்தனை நேசிக்கிறார்கள் என்பதையும் பேசவேண்டும். முன்பே குறிப்பிட்டது போல் நகர்மயமாதலுக்கு எதிராக அவர் எங்கும் தன் குரலை போராட்டமாக எழுச்சியாகவோ வைக்கவில்லை. ஒரு இசைக்கலைஞனின் ஒற்றை இசைக்கருவியின் ஒலியாக எழுப்புகிறார். உங்கள் உறக்கத்தை, உங்கள் நிம்மதியை மொத்தமாக களைத்துப் போடும் இசையொலி அது, சூனியத்திற்குள் சிக்கிக் கொண்ட ஒரு கலைஞனின் ஆழ் மனதிற்குள்ளிருந்து எழும் கேவல் அது. தனித்தே நட மகனே, ரஸூல் மேஸ்திரி, மூன்று புள்ளிகள், ரஸப்ரியா சுவர் சித்திரத்துப் பெண்மயில் என முக்கியமான கதைகளைச் சொல்லலாம்.


ரேணுவின் கதைகளை இப்பொழுது மறுவாசிப்பு செய்கையில் கோணஙியின் ஆரம்ப காலக் கதைகளில் ரேணுவின் அழுத்தமான அடையாளங்களைப் பார்க்க முடிகிறது, பீகாரின் வறண்ட நிலத்தின் மனிதர்களும், சாத்தூரின் கரிசல் மண் மனிதர்களும் ஆளைக் கொல்லும் வறட்சியிலும் ஈரம் மிக்கவர்களாய் இருக்கிறார்கள். ரஸூல் மேஸ்திரியைப் போன்ற ஆட்கள் தானே பஞ்சம் பிழைக்க பட்டணம் வரும் மாயாண்டிக் கொத்தனும், கருப்பு ரயில் கதையில் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டுக் கிளம்பும் அந்தக் குடும்பமும். திரைக்குப் பின் நடிகன் கதையில் வரும் பார்சி நாடகக் கலைஞனுக்கும் கோணங்கியின் நாடகப் பாத்திரங்களுக்கும் உள்ளார்ந்த தொடர்பில்லாமல் இல்லை. மதினிமார் கதையில் பால்யத்தின் அத்தனை வசந்தங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டுபோவது கரிசல் நிலத்தை ஆக்ரமிக்கும் பஞ்சம் தான். பிரேம் சந்த், பணீஸ்வர்நேத் போல் தமிழில் பஞ்சகால மனிதர்களின் கதைகளை எழுதிய கலைஞனாய் இங்கு கோணங்கியைக் குறிப்பிடத் தோன்றுகிறது, மிகச் சிறந்த கதைகள் எல்லாம் ஊரைத் தொலைத்த மனிதர்களின் நினைவுச் சித்திரங்கள் போல.


லுட்டன் சிங் பயில்வான் கொள்ளை நோயும் மலேரியாவும் கூட்டம் கூட்டமாய் ஆட்களைக் காவு வாங்கி கொண்டிருக்கும் ஒரு குளிர் கால இரவில் மத்தளம் வாசிப்பதில் துவங்குகிறது கதை. ’இருள் நிறைந்த இரவு மெளனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது. நிசப்தம் என்னும் காரிகை தீனமான விம்மல்களையும், விசும்பல்களையும் தம் உள்ளத்தினுள் அடக்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள்” என்று அந்த இரவைக் குறித்து எழுதிகிறார். இரவு ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஒவ்வொரு நிலத்திற்கும் வேறானவை.


கடும் கோடை காலத்தில் கமுதியின் வறண்ட நிலத்தின் சீமைக்கருவேலங் காட்டில் கவிஞர் வெய்யிலுடனும் கோணங்கியுடனும் கழித்த ஒரு இரவு நினைவிற்கு வருகிறது. கோடை காலத்தின் வறண்ட நிலத்தை ஆக்ரமிக்கும் இருளின் அச்சுறுத்தல்களை அன்று புரிந்து கொண்டிருந்தேன். அதிர்ஸ்டவசமாக அன்று மதுவருந்தி இருந்தோம் என்பதால் இன்றும் அந்த நாளின் ஒவ்வொரு நிமிடங்களும் நினைவிலிருக்கின்றன. இந்தக் கதையில் வரும் நோய்மை நிறைந்தது. அடுத்த நாள் காலை ஊரில் எத்தனை உயிர்கள் போகக் கூடுமோ என்கிற அச்சத்தில் ஊர் மக்கள் உறக்கம் பிடிக்காமல் தவித்துக் கிடக்கும் இரவது. யுவான் ருல்ஃபோவின் கதைகளில் வரும் நோய்மை மிக்க இரவுகளை ஒத்தவை இந்த இரவுகள். லுட்டன்சிங் அந்த ஊரின் மக்கள் வாழ்வின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாதென்பதற்காகவே மேளம் வாசிக்கிறான். அந்த மக்களின் ஒரே ஆறுதல் இரவு நேரங்களில் லுட்டன் சிங்கின் மேள ஒலிதான்.


மிகச் சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்துவிட்ட லுட்டன் முரட்டு உடல்வாகு கொண்டவன், ஊருக்குப் பிடித்த பிள்ளை. மேளம் அடிக்கும் தாளத்தின் ஒலிகளுக்கு ஏற்றவாறு மல்யுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டு வளர்கிறான். பயில்வான்களுக்கென்ற பொதுவான குணமான குழந்தைத்தனமும் அறியாமையும் லுட்டன் சிங்கிடமும் இருக்கிறது. சிறுவயதிலேயே கல்யாணம் கட்டியிருந்ததால் அவனின் அத்தை அவனைப் பராமரித்து வளர்க்கிறார். தனித்த பெண்ணாக இருந்து மருமகனையும் மகளையும் வளர்க்கும் லுட்டனின் அத்தையை ஊரில் இருப்பவர்கள் அடிக்கடி வந்து தொல்லை செய்கிறார்கள், அவர்களிடமிருந்து தன் அத்தையை காப்பத்ற்காகவே தேகப்பயிற்சி செய்து உடலைத் தேற்றும் லுட்டன் ஒரு முறை சியாம் நகர் திருவிழாவில் குஸ்திச் சண்டையைப் பார்க்கச் செல்கிறான்.


இன்றைக்கு 900 சேனல்களின் ஆக்ரமிப்பில் வீட்டுச் சுவர்களை முழுமையாய் நிறைக்கும் தொலைக்காட்சிகளில் நாம் பார்க்கிற மல்யுத்த போட்டிகளைப் போலில்லை நமது மரபான மல்யுத்த போட்டிகள். அதுவொரு திருவிழா. எல்லா விளையாட்டுகளும் வணிகமயப்படும்போது அந்தப் போட்டிகளுக்கென்றே இருந்த தனித்துவங்கள் குறைந்து பார்ப்பவரை குஷிப்படுத்தி பணம் பறிக்கும் வித்தைகளாய் மாறிவிடுகின்றன. தமிழர்களின் மரபான விளையாட்டுகளில் ஒன்றாயிருந்து இன்று முற்றிலுமாய் அடையாளம் தெரியாமல் போன விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்று. அந்த மல்யுத்த போட்டியின் கொண்டாட்டங்களை ரேணு மிக அற்புதமாக விவரிக்கிறார். மல்யுத்தப் போட்டிகளை வேடிக்கை பார்க்கும் லுட்டனால் அமைதியாய் இருக்கமுடியவில்லை. அவனும் போட்டியில் கலந்து கொள்ள துடிக்கிறான். அந்தத் திருவிழாவில் கலந்து கொண்ட எல்லா பயில்வான்களையும் வென்றவன் சாந்த் சிங். லுட்டனுக்கு அவனோடு மோத விருப்பம். எந்த விதமான மல்யுத்த போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்காத ஒருவன் மல்யுத்த போட்டியின் மாபெரும் வீரனை எதிர்த்துப் போரிட்டால் என்ன நடக்கும்? நடக்கவே சாத்தியமில்லையென நாம் நம்புவதெல்லாம் வாழ்வில் அபூர்வமாய் நடக்கும் அப்படியான அபூர்வமான தருணங்களை கண்டு கதையாக்குவதில்தான் ஒரு எழுத்தாளனின் வெற்றி அடங்கியுள்ளது.


எல்லோரும் அவனை எச்சரிக்கின்றனர், சியாம்நகர் மஹராஜாவோ வேறு யாருடனாவது அவனை சண்டையிடச் சொல்கிறார். ஆனால் லுட்டன் மறுக்கிறான். ‘சாந்த் சிங்குடன் தான் யுத்தம் புரிவேன், அல்லது தற்கொலை செய்து கொள்வேனென மிரட்டுகிறான். வேறு வழியில்லாமல் எல்லோரும் சம்மதிக்கிறார்கள். மக்கள் ஆராவாரம் முழுக்க சாந்த் சிங்கின் பெயரையே சொல்கின்றன. சாந்த் சிங் தான் கற்றுக் கொண்டு முறைகளின்படி எளிதாக லுட்டனை வீழ்த்தும் செயல்களில் இறங்க, லுட்டனோ சுற்றிலும் வாசிக்கப்படும் மேளங்களின் ஒலிகளைத் தொடர்கிறான். அந்த ஒலிகளுக்கு ஏற்றாற்போல் சண்டையில் தன் அசைவுகளை மாற்றுகிறான். ரேணுவின் மேதமை வெளிப்படும் இடம் இதுதான். மல்யுத்தத்தை போர்க்கலை என்பதையும் தாண்டி இசையோடு லயித்து ஒன்றிணைந்து அதற்கேற்றாற் போல் மனதின் கட்டளைகளைத் தொடரும்போது அசாத்திய ஆற்றல் வெளிப்படுவதை லுட்டனின் வழியாக ரேணு வெளிப்படுத்துகிறார். அந்தப் போட்டியில் லுட்டன் வெல்கிறான். சாந்த் சிங்கை மட்டுமல்லாமல் சியாம்நகர் மக்களையும் மஹராஜின் மனதையும்.


ஜெயமோகனின் வாழ்விலே ஒரு முறை அனுபவத் தொகுப்பில் ஒரு கதையில் கால் ஊனமுற்ற ஒரு இளைஞன் அந்த ஊரின் பெரிய ரவுடி ஒருவனை அடித்து வீழ்த்தும் கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. அந்தக் கதையின் இறுதியில் ஜெயமோகன் அந்த இளைஞனால் எப்படி முரட்டுத்தனமான மனிதனை வீழ்த்த முடிந்ததென விவரிக்கிறார் ‘தன்னை யாருமே எதிர்க்கப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு உடல் ஊனமுற்ற ஒருவன் தன்னை எதிர்த்து வருகிறான் என்கிற் செய்தியே குழப்பத்தையும் அச்சத்தையும் முதலில் உருவாக்கி இருக்கும், அடுத்ததாக, அடிமுறை கற்றவர்களுக்கு என்று சில ஆதாரமான டெக்னிக்குகள் உண்டு. அவர்கள் அதனைப் பயன்படுத்திதான் எதிராளிகளை வீழ்த்துவார்கள். ஆனால் அந்த ரவுடியை எதிர்த்தவன் வழக்கமானவன் அல்ல, மேலும் ரவுடியை விட வலிமை குறைந்தவன் என்ற போதிலும் பெரியதொரு பூட்டை வரும்போதே எடுத்து வந்திருப்பான், ஆக ஒரு சண்டையில் வெற்றி என்பது ஆளின் உடல் பலத்தை மட்டுமே வைத்து முடிவாகும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். லுட்டன் சாந்த் சிங்கை வென்ற இடத்தையும் நாம் இதனோடு ஒப்பிட்டு நோக்க முடியும். லுட்டன் அவனோடுதான் சண்டை போடுவேன் என பிடிவாதமாய் நின்ற இடத்திலேயே அவனை வெல்வதற்கான தன் பாதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.


அந்த வெற்றிக்குப் பிறகு அவன் ராஜாவின் ஆதரவு பெற்ற பயில்வானாகிறான். அவன் வாழ்வின் பசி வறுமை எல்லாம் மறைந்து இரண்டு மகன்களும் பிறக்கிறார்கள். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு யாராலும் வெல்ல முடியாத பயில்வானாய் மாறுகிறான். லுட்டனையும் அவன் பிள்ளைகளையும் அந்த ஊர் ரசிக்கிறது. பதினைந்து ஆண்டுகாலம் உலகின் துயரங்கள் எல்லாவற்றையும் மறந்து சந்தோசமாக வாழும் லுட்டனின் வாழ்க்கை மஹராஜாவின் மரணத்தில் திசை திரும்புகிறது. மஹராஜாவின் மகனுக்கு பயில்வானை பராமரிப்பது வெட்டிச் செலவாகத் தோன்ற அவன் குடும்பத்தை உடனடியாக வெளியாகச் சொல்கிறார். மனைவி, மாமியார் இறந்துபோக தன் மகன்களோடு லுட்டன் சொந்த கிராமத்திற்குத் திரும்புகிறான். எந்த வேலைகளையும் செய்து பழகியிருக்காத அவனுக்கு ஊர்க்காரர்களே குடிசை போட்டு கொடுக்கிறார்கள். லுட்டன் ஆடு மேய்க்கும் இளைஞர்களூக்கும், வேலை வெட்டி இல்லாத சிறுவர்களுக்கும் மல்யுத்த பயிற்சி குடுக்கத் துவங்குகிறான். சாப்பாட்டிற்கே எதுவுமில்லாத அந்த இளைஞர்களால் நல்ல உணவு எடுத்துக் கொள்ளமுடியாமல் பயிற்சிக்கு வருவதை நிறுத்திவிடுகிறார்கள். யாருமே தன்னிடம் சண்டை கற்றுக் கொள்ள வரவில்லை என்கிற விரக்தியில் மத்தளத்தை இசைத்து அதன் தாளத்திற்கேற்றபடி மகன்களை சண்டையிடச் செய்து பார்த்துவந்தான்.


பயில்வானுக்கு இந்தக் கதையில் நேர்ந்த நிலையை ஜமீன் தார்களையும் பாளையக்காரர்களையும் அரசர்களையும் நம்பி வாழ்ந்து கைவிடப்பட்ட மற்ற கலைஞர்களுக்கும் நாம் பொறுத்திப் பார்த்துக் கொள்ளமுடியும். தமிழ்நாட்டில் அப்படி சுவடில்லாமல் அழிந்து கொண்டிருக்கும் கலைகளில் ஒன்று தோல்பாவைக் கூத்து.

ஊரை பஞ்சகாலம் சூழத் துவங்க, கொள்ளை நோய்களால் மக்கள் கூட்டம் கூட்டமாய் இறந்து போகத் துவங்குகிறார்கள். ஒவ்வொரு நாளின் இரவையும் கடப்பது ஊர்க்காரர்களுக்கு பெரும் துயரமாய் மாறும்போது லுட்டன் இரவுகளில் மத்தளம் வாசிக்கத் துவங்குகிறான். சக மனிதர்களின் மீதான ரேணுவின் கரிசணை இங்குதான் மிளிர்கிறது. பிரேம் சந்தின் வழி வந்த மிக முக்கியமான கதை சொல்லியாய் அவரை பிரதிபலிக்கும் இடமும் இதுதான். “இரவின் இந்த பயங்கரத்துக்கு சவால்விடும் துணிவு பயில்வானின் மத்தளத்துக்கு மட்டுமே இருந்தது. பயில்வான் அந்திமயங்கும் வேளையிலிருந்து விடிகாலை வரையிலும் என்ன நினைத்துக்கொண்டு மத்தளம் அடிப்பானோ தெரியாது, ஆனால் பாதி உயிருடன் – மருந்தோ சிகிச்சையோ பத்தியமோ இல்லாமல் வசிக்கும் பிராணிகளுக்கு இந்த மத்தள ஒலி சஞ்சீவிவ் போல ஊக்கமளித்தது. கிழவர்கள், இளைஞர்கள், சிறுவர்களின் ஒளி மங்கிய கண்களின் முன்னால் சண்டைக் களத்தின் காட்சிகள் ஒவ்வொன்றாக விரியும். துடிப்புச் சக்தியை இழந்த நரம்புகளில் கூட மின்சார சக்தி பாய்வது போலத் தோன்றும்.”


ஊரிலிருப்பவர்களின் நம்பிக்கைகள் பயில்வானின் மத்தள ஒலிக்கு கட்டுப்பட்டு போகின்றன, அதனாலேயே அவனும் பசியை பிணியை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு இரவும் மத்தளம் வாசிக்கிறான். ஒரு இரவில் அவனது இரண்டு மகன்களும் நோய் கண்டு இறந்து போகிறார்கள், அப்போதும் அவன் மத்தளம் வாசிப்பதை நிறுத்தவில்லை. ‘இரண்டு சிங்கக்குட்டிகள் இறந்தும் கூட பயில்வானின் தைரியத்தைப் பார்த்து மெச்சுகிறார்கள், ஆனால் அந்த மத்தள ஒலி நீண்ட நாட்கள் தொடரவில்லை. நான்கைந்து நாட்களுக்குப்பின் ஒரு இரவில் முழுமையாக நின்றுவிடுகிறது. பயில்வான் இறந்து போகிறான். அவனுடலை எரிக்கும் முன்பாக பயில்வான் சொன்னதாக ஒருவன் இப்படிச் சொல்கிறான் “நான் இறந்தபிறகு என்னுடலை நிமிர்த்தி வைத்து கொழுத்தாதீர்கள், கவுத்துப்போட்டு கொள்ளி வையுங்கள். ஏன்னா நான் வாழ்நாள் முழுக்க எந்தச் சண்டையிலும் கவிழ வில்லை. கொள்ளி வைக்கும் போது மறக்காம மத்தளம் தட்டுங்க.” எந்தவொரு சண்டையிலும் வீழாத அந்த மாவீரனின் உடல் எரியத் துவங்குகிறது.


கதையின் பிற்பகுதியில் ஊர்க்காரர்களுக்கும் பயில்வானுக்கும் இடையிலான பிணைப்பு தான் கடந்த சில பத்தாண்டுகளில் நாம் தவறவிட்ட வாழ்க்கை முறை. பத்மராஜனின் ஓரிடத்தொரு பயில்வான் என்ற திரைப்படம் எனக்கு இங்கு நினைவிற்கு வருகிறது. சற்றேறக்குறைய லுட்டனைப் போன்றே அவனும் யாரோ ஒருவனாய் ஒரு ஊருக்குள் வந்து அந்த ஊரில் எல்லோருக்கும் விருப்பமானவனாய் மாறிப்போவான். அவனும் லுட்டனைப்போல் அப்பாவி. அங்கும் பயில்வான் சொந்தவாழ்வில் தோல்வியுற்றவனாய் தேசாந்திரியாகிவிடுகிறான்.


கொல்லனின் ஆறு பெண் மக்கள் கதையில் மொத்த ஊரும் கொல்லனுக்காக தவதாயப்படுவதும் அவனை ஆற்றுப்படுத்துவதுமான இடத்தை கோணங்கி எழுதியதைப் போல் இன்று ஊருக்கும் மனிதர்களுக்குமான தொடர்பை நம்மால் எழுத முடிகிறதா? இஸங்களும், கோட்பாடுகளும் மனிதர்களுக்கு சக மனிதர்களின் மீதான அன்பையும் நெருக்கத்தையும் வளர்ப்பதற்குப் பதிலாக வெறுப்பையும் விலகுதலையும் தான் விதைத்திருக்கின்றன. ஏராளமான மொழிகள் பேசும் பீகார் மாதிரியான மாநிலங்களில் இன்று அந்த மக்கள் இந்தி என்னும் ஒற்றை மொழியின் கீழ் அடையாளப்படுத்தப்படுவதால் தங்களுக்கென்று இருந்த பிரத்யேகமான அடையாளங்களை இழந்துபோயிருக்கிறார்கள். சொந்த ஊரின் மீதான பிடிப்பு தேவையற்றதாய் மாறிப்போயிருக்கிறது. ரேணுவின் சுவர் சித்திரத்து பெண்மயில் கதையில் ஒரு கிராமத்திலிருக்கும் பாரம்பர்ய ஓவியம் வரையும் பெண்ணின் ஓவியங்கள் வெளி உலகில் பிரபலமாக நகரத்திலிருந்து வரும் ஒருவன் அந்தப் பெண்ணை நகரத்திற்கு குடிபெயரச் சொல்லி நிர்ப்பந்திக்கிறான், பெரிய வீடு, நல்ல வருமானம் என எவ்வளவோ ஆசைகள் காட்டியபோதும் அவளின் மகள் எல்லாவற்றுக்கும் மறுத்துவிடுகிறாள். என்னவானாலும் தனது சொந்த ஊரை விட்டு செல்லப்போவதில்லை என பிடிவாதமாய் இருக்கிறாள்.


நாட்டுப்புறக் கலைகளின் மீதான கோமான்களின் அக்கறை என்பது அதை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்யலாம் என்கிற வியாபார எண்ணம் சார்ந்தது மட்டுமே. நம் கண்முன்னால் அப்படி சீரழிந்த ஒன்று தஞ்சை ஓவிய மரபு. ‘நீங்க எங்களையும் நாங்க வரையற படம் மாதிரி விலைக்கு வாங்கிடலாம்னு நெனக்கிறீங்க’ என அந்தப் பெண் கேட்கும் கேள்வி எனக்கு கள்ளம் நாவல் முழுக்க பரந்தாம ராஜூ என்னும் கலைஞனின் வழியாக தஞ்சை ப்ரகாஷ் எழுப்பிய கேள்விகளை நினைவூட்டின. ரேணுவின் கதைகளில் உள்ளார்ந்து வெளிப்படும் இன்னொரு முக்கிய அம்சம் அவரின் கதை மாந்தர்களுக்கிருக்கும் போராட்ட குணம். ‘இன்றைய கதாசிரியர்களுல் அவர் ஒரு தவச்செல்வர்’ என்று அவரைக் குறிப்பிடும் நிர்மல் வர்மா ‘பீகாரின் நிலப்பரப்பு என்னும் உள்ளங்கைக்குள் இவர் வடமாநிலங்களில் வாழும் விவசாயிகளின் தலையெழுத்தைத் துல்லியமாகக் குறிப்பிடுகிறார்”. என்று எழுதுகிறார். ரேணுவிடமிருந்து துவங்கிய கதைமரபானது முற்றிலும் புதிதான ஒன்று. இவரின் தேர்ந்தெடுத்த கதைகளை தமிழில் சாகித்ய அகதெமி வெளியிட டாக்டர் எச். பாலசுப்ரமணியன் மொழிபெயர்த்துள்ளார்.

48 views

Коментари


bottom of page