top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

சிறந்த இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம். - 1

கர்த்தார் சிங் துக்கலின் ‘பெளர்ணமி இரவு.’





சிறுகதைகளுக்கு இலக்கிய வகைமைகளில் வேறு வடிவங்களுக்கு இல்லாததொரு தனித்துவமும் வசீகரமும் உண்டு. புனைவின் அசாத்தியமான பரீட்சார்த்த முயற்சிகளை சிறுகதைகளில் தான் தொடர்ந்து செய்து பார்க்க முடிந்திருக்கிறது. சிறுகதைகள் மட்டுமே எழுதியவர்கள் என்ற போதும் உலகம் முழுக்க சிறந்த புனைவெழுத்தாளர்களாய் அறியப்பட்ட ஏராளமானோரை நாம் வாசித்திருக்கிறோம். போர்ஹே, ரேமண்ட் கார்வர், செகாவ், எட்கர் ஆலன் போ, ஆலிஸ் மன்றோ, தமிழில் புதுமைப்பித்தன், திலீப் குமார் வரை அந்த வரிசை மிக நீண்டது. காலம் கடந்து இவர்களின் கதைகள் மீள்வாசிப்பு செய்யப்படுகின்றன. கொண்டாடப்படுகின்றன.


ஒரு நாவலாசிரியனைப் போலவோ, கவிஞனைப் போலவோ இல்லாமல் சிறுகதை எழுத்தாளன் வடிவம் சார்ந்து நிறைய புதிய முயற்சிகளை செய்து பார்ப்பதற்கான சாத்தியங்களுண்டு. ஒரு கதையை அவனால் சிக்கனமாகச் சொல்லவும் முடியும், தேவைப்படும் போது விரிவாக எடுத்துச் செல்லவும் முடியும். சலிப்பூட்டக் கூடிய வாழ்வின் மிகச் சாதாரணமானதொரு சம்பவத்தைக் கூட கதையாக்கும் போது சுவாரஸ்யப்படுத்த முடியும். ரேமண்ட் கார்வரின் கதையொன்றில் சலிப்பான வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒரு தம்பதியினர் தற்செயலாக பக்கத்து வீட்டுக்காரர்கள் ஊருக்குச் செல்லும் போது அவர்கள் வீட்டு நாய்க்கு உணவளிக்கும் பொருட்டு அந்த வீட்டிற்குள் செல்கிறார்கள். தங்களைவிடவும் மேலானதொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாக இவர்கள் நம்புகிறார்கள். அந்த வீடு இவர்களை மயக்குகிறது. விளங்கிக் கொள்ள முடியாத கிளர்ச்சியை உணர்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்த வீட்டிற்குள் சென்று திரும்பும் போது சில மணிநேரங்கள் கடந்து போவதை அவர்களால் நம்பவே முடியவில்லை. கதையின் இறுதியில் அவர்கள் அப்படி ஒருநாள் அந்தவீட்டிற்குள் இருக்கையில் கதவை வெளியே மூடி சாவியை மறந்திருப்பது புரிவதோடு கதை முடிகிறது. சலிப்பானதென நாம் கடந்து செல்லும் எல்லாவற்றையும் ஒரு சிறுகதையாசிரியன் மர்மம் நிறைந்ததாகவும் சுவாரஸ்யமானதாகவும் மாற்றிவிடக் கூடும். ஒரு கவிஞனுக்கோ நாவலாசிரியனுக்கோ இந்த சுதந்திரம் குறைவு. சிறுகதை எழுத்தாளர்களுக்கு வேறு வகைமை எழுத்தாளர்களுக்கு இல்லாத சுதந்திரங்களும் சவால்களும் உண்டு.


தமிழின் சிறந்த சிறுகதைகள் குறித்த அறிமுகங்கள், தேர்ந்தெடுத்தக் கதைகளின் தொகுப்புகளென நிறைய வந்துவிட்டிருக்கின்றன. அந்த வகையில் சிறந்த இந்தியச் சிறுகதைகள் குறித்த ஒரு எளிய அறிமுகமே இந்தப் பகுதி. நூற்றாண்டுகால இந்தியச் சிறுகதைகளில் சிறந்தவற்றைத் தேடி வாசித்து எழுதுவதென்பது அசாத்தியமான செயல். அதனால் இந்த அறிமுகம் அதிலொரு சிறுதுளி மட்டுமே. அவரவர் வாசிப்பின் வழியாகத்தான் தங்களுக்கு விருப்பமானதைத் தேடிக் கண்டடைய முடியுமென்றாலும் சில கதைகளை ஒருவன் தன் வாசிப்பிலிருந்து கோடிட்டு காட்டுவதை ஒரு நினைவுபடுத்தல் என்று சொல்லலாம்.


பஞ்சாபி இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் கர்த்தார் சிங் துக்கல். 500 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் 1965 ம் வருடம் தனது ‘இக் சித் சநான் தி’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகதெமி பெற்றுள்ளார். பத்மபூஷன் உட்பட இந்திய அரசின் கெளரத்திற்குரிய ஏராளமான விருதுகளை பெற்றுள்ள துக்கலின் கதைகள் இந்திய மரபையும் சொல்கதைகளையும் உள்வாங்கியவையோடு கவித்துவமான மொழியிலும் சொல்லப்பட்டவை. இவரது சில கதைகளை சாகித்ய அகதெமி ‘பெளர்ணமி இரவு மற்றும் கதைகள்’ என்ற தலைப்பில் லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியிட்டுள்ளது. ஒரு தொகுப்பின் எந்தக் கதையை வேண்டுமானாலும் திறந்து வாசிக்கலாம், அப்படி மிகச் சிறந்தக் கதைகள் நிரம்பிய தொகுப்பு இது. நாற்பது கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பின் கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவையாய் இருப்பினும் தேர்ந்த சொல்முறையாலும் கதைகளின் இறுக்கமான பின்னனியாலும் மகத்தான வாசிப்பனுவத்தை நமக்குத் தருகின்றன.


கவிதைகளும் பார்சி நாடகங்களும் தான் எழுதத் துவங்கியதற்கு முக்கியமான காரணங்களென துக்கல் சொல்வதிலிருந்து அவர் கதைகளை அணுகும்போது இந்த இரண்டு வடிவங்களும் அவரது சிறுகதைகளை செழுமைப்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடியும். தனது சாகித்திய அகதெமி உரையில் “இந்த இலக்கிய வடிவம் எனக்குள்ளிருந்த கவிஞன், நாடகாசிரியன் இருவரையும் திருப்தி செய்தது. கவிதையைப்போல், சிறுகதையும் நீளம் தொடர்பான வரையறையை ஏற்றுக் கொள்கிறது. அதனுடைய நிகழ்வைப் பொறுத்தவரை சிறுகதை நாடகத்திற்கு நெருக்கமாக உள்ளது. அது நுட்பமானது, குறிப்பாக உணர்த்துவதும், இறுக்கமான கட்டமைப்பும் கூடியதாக அது அமைந்திருக்கிறது. கருத்தளவில் கவிதைத்தன்மை கூடியதாகவும், சித்தரிக்கும் விதத்தில் நாடகத்தன்மை கொண்டதாகவும் சிறுகதை விளங்குகிறது.” என சிறுகதை இலக்கியம் குறித்து தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது கதைமொழி தனித்துவமான கவிதைத் தன்மையைக் கொண்டிருக்கிறது.


தன் கதையின் ஒவ்வொரு சொல்லையும் கவனமாக எழுதக் கூடியவர் என்று அவரைச் சொல்லலாம். அதேபோல் அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்கள். நாடகீயமான உணர்வெழுச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய கதாப்பாத்திரங்களை நிறைய கதைகளில் உருவாக்குகிறார். ஆனால் அந்தக் கதாப்பாத்திரங்கள் செய்யக் கூடிய செயல்களும் கதையின் போக்கும் நாடகத்தனமானவையாய் இல்லை. சமேலி என்றொரு கதையில் வரும் கதையின் மையப்பாத்திரமான சமேலி தன் எஜமானர் குறித்தும் அவரது குடும்பம் குறித்து நிறைய விஷௌயங்களை பகிர்ந்து கொள்கிறார். ஒரே வளாகத்திலிருக்கும் இரண்டு குடுமபங்களின் எதிரெதிரான வாழ்வை பேசும் இந்தக் கதை முழுக்கவே அந்த எஜமானர் ஒரு இடத்தில் கூட அவளை பொருட்படுத்திப் பார்ப்பதில்லை. ஆனால் கதையின் இறுதிப் பகுதியில் ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது சமேலி உற்சாகமாக அந்த வீடு முழுக்க ஓடுகிறாள். ஒரு கட்டத்தில் தூய ஆடைகளோடு தன் வீட்டு வாசலில் நின்றிருக்கும் எஜமானரின் மீது தயங்காமல் வண்ணப்பொடிகளை பூசுகிறாள். அவர் பதறி விலகியபோதும் விடாமல் வர்ணப்பொடி பூசுகிறாள். இந்தக் கதையின் துவக்கத்திலிருந்தே சமேலி என்ற பாத்திரத்தின் செயல்கள் ஒரு சிறுகதையின் போக்கிலும் இறுதிப் பகுதி ஒரு அரங்கில் நிகழும் காட்சியைப் போலும் மாறுகிறது. ஆனால் அப்படி ஒரு அரங்கில் காட்சியைப் பார்ப்பதான அந்த உணர்வு அந்தக் கதையை அழகூட்டவே செய்கிறது. துக்கலின் மிகப்பெரிய பலம் அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள்.




இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பிண்ணனியில் இவர் எழுதிய கதைகள் மிக முக்கியமானவை. கடத்தப்பட்டவள், குல்ஸீம் என்ற இரண்டு கதைகள் அவற்றுள் முக்கியமானவை. எல்லாப் பெரிய வன்முறைகளும் பெண்களையே அதிகம் சிதைக்கிறது என்பதே வரலாறு. ஒரு புனைவெழுத்தாளன் வரலாற்றின் ஆன்மாவிற்குள் நெருங்கிச் சென்று பார்க்க வேண்டிய தேவையுள்ளது. துக்கல் அதைத்தான் இந்தக் கதைகளில் செய்கிறார். கடத்தப்பட்டவள் கதையில் இஸ்லாமியரால் கடத்தப்படும் ஒரு பாகிஸ்தானி இந்துப் பெண்ணின் கதையைச் சொல்பவர் குல்ஸீம் கதையில் ஒரு இஸ்லாமியப் பெண்ணின் கதையை எழுதுகிறார். குல்ஸீம் நமக்கு மறைமுகமாக உணர்த்தும் மனித மனதின் குரூரம் பயங்கரமானது. ஒரு கிழவன் ஒரு பள்ளி ஆசிரியனுக்கு பட்ட கடனைத் தீர்க்கும் விதமாக குல்ஸீமை பரிசாகக் கொண்டு வந்து கொடுக்கிறான். அவள் கலவரங்களில் தன் உறவுகளை எல்லாம் இழந்தவள். அழகின் பேரொளி மிகுந்த அவளைக் கண்டதுமே ஆசிரியருக்கு கிளர்ச்சி உடலை நிறைக்கிறது. அவளைத் தீண்ட நெருங்குகிறவனிடம் ‘முதலில் என்னைத் திருமணம் செய்து கொள். எனக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டவன் கூட உன்ன மாதிரி உயரமான அழகான மனிதன் தான்.’ எனக் கெஞ்சுகிறாள். அவன் அவளை அடைவதை மட்டுமே இலக்காகக் கொண்டு நெருங்க அவள் மறுக்க ஒரு கட்டத்தில் எரிச்சலோடு வெளியேறுகிறான். வெளியில் இருக்கும் கிழவன் இவன் தோற்று வெளியே வந்ததை கவனித்துவிட்டு உள்ளே செல்கிறான். அந்தப் பெண்ணின் அலறல் மட்டும் வெளியே ஒலிக்கிறது. சில நிமிடங்களுக்குப்பின் வெளியே வரும் அவன் ‘இப்போ போங்க சம்மதிப்பா’ என்கிறான். வெறும் அதிர்ச்சியாக அந்தக் கதை அவ்விடத்தில் எழுவதில்லை. மனித மனம் எல்லா வயதிலும் வன்முறையை தனக்குள் ரகசியமாய் ஒளித்து வைத்துள்ளதை நுட்பமாய் வெளிப்படுத்துகிறது. மிகச் சிக்கனமான வார்த்தைகளில் இந்த இடங்களை அவர் கடந்து செல்வதுதான் இதில் கவனிக்கத்தக்கது. வாசிக்கிறவனுக்கு அதிர்ச்சிகளைத் தரக்கூடுமென்பதற்காக பக்கம் பக்கமாக திணிக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளின் அறிக்கையாகவோ செய்தியாகவோ இல்லாமல் ஒரு மிகச் சிறந்த கதையாக குல்ஸீம் மாறுகிறது.


அவரது சிறந்த கதைகளில் ஒன்று பெளர்ணமி இரவு. சொல்லப்பட்ட விதத்திலும் இந்தக் கதை கையாண்டிருக்கும் விஷயத்தின் ஆழமும் மிகச் சிறந்த இந்தியக் கதைகளின் வரிசையில் வைக்கக் கூடிய ஓர் இடத்தை இந்தக் கதைக்குத் தருகிறது. இந்திய மரபுகளையும், சொல்கதைகளையும் தனது கதைகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். எல்லா மகன்களும் தன் தந்தையைப் போலவே மாறுகிறார்கள் என ஓர் நம்பிக்கை உண்டு. இந்தக் கதை அதன் வேறொரு வடிவத்தை பேசுகிறது. ‘மாலாவும், மினியும் அம்மா மகள் என்பதை யாருமே நம்பவில்லை. அவர்கள் பார்ப்பதற்கு அக்கா தங்கைகளைப் போலவே இருந்தனர்’ எனத் துவங்கும் இந்தக் கதை கதைத் துவங்கும் முதல் வரியிலேயே கதையின் முக்கிய முரணை நம்முன் வைக்கிறது. தாயைப்போன்ற மகள், இருவரும் இளமையான அழகான தோற்றமுடையவர்கள். தன்னையொத்த இளமையுடனான தாயை மகள்களும், தந்தையை மகன்களும் உள்ளூர அவ்வளவு ரசிப்பதில்லை. இந்தக் கதையில் மகளுக்கு அம்மாவின் மீது அளவில்லாத அன்பே இருக்கிறது. அவளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் வேறு. ஆனால் இப்படியான நிலையில் தான் அம்மாவிற்கு தனக்கு இத்தனை வயதாகிவிட்டதா என்கிற கவலை மிகுந்து எழுகிறது. இத்தனை காலம் தன் வாழ்வில் எந்த சந்தோசங்களையும் அனுபவித்திராத அவள் தன் திருமண வாழ்வில் சந்தோசமாக இல்லை என்பதுதான் அடுத்த முரண். ஒப்பனை செய்யப்பட்ட மகளைக் காண்கிற போதெல்லாம் அம்மாவிற்கு மனம் ஏங்குகிறது. கையில் மருதாணியும் வளையல்களும் போட்டுக் கொள்ளச் சொல்லி பரபரக்க இரவில் எல்லோரும் உறங்கிய பின் மகளின் வளையல்களை எடுத்துப் போட்டுக் கொள்கிறாள். தான் தனது மகளின் பருவத்திலிருப்பது போன்ற நிறைவு அவளுக்கு. தன்னை நீண்ட காலமாக நேசிக்கும் ஒரு மனிதனின் நினைவு வர அவள் சஞ்சலப்படுகிறாள். ஒவ்வொரு வருடத்தின் தை மாத பெளர்ணமி தினத்தில் அவளுக்காக அவன் இப்போதும் வருவதுண்டு. அவளுக்கு அதை நினைக்கையிலேயே இன்றும் அதே நாள் என்பது உரைக்க, அவசரமாகச் சென்று கதவைத் திறக்கிறாள். தூரத்தில் வயல் வெளியின் நடுவே அவன் அவள் வீட்டையே பார்த்தபடி நிற்கிறான். அவள் தயக்கமோ யோசனையோ இல்லாமல் செல்கிறாள். அவனோடு உறவு கொள்கிறாள்.


மகளின் திருமணத்தை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணால் இதைச் செய்ய முடியுமா? அதும் இந்தக் கதை எழுதப்பட்ட காலகட்டம் எழுபது வருடங்களுக்கும் முன்பாக, அதோடு கதை நிகழ்வதும் பஞ்சாபின் ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில். இந்தக் கேள்விகள் அவ்வளவையும் மாலா என்ற அந்தப் பெண்ணின் கதாப்பாத்திரம் மீறி நிற்கிறது. அடுத்த நாள் அவள் அயர்ந்து உறங்குகிறாள். ‘மரணத்தைப் போன்றதொரு அசாத்தியமான உறக்கமென’ துக்கல் எழுதுகிறார். சொல்லப் போனால் அவளுக்கு இந்த விடியல் மறுபிறப்பு என்பது போல். உறவினர் பெண் ஒருவள் வந்து மாலாவுடன் சண்டை போடுகிறாள். ‘உன் மகள் நேற்று இரவு வேறு ஒரு ஆணுடன் வயல்வெளியில் சல்லாபம் செய்தாள் என்னும் போது மாலாவுக்கு தூக்கி வாரிப்போடுகிறது. அவளைத் தொடர்ந்து ஊர்க்காரர்கள் வேறு சிலரும் வந்து சண்டை போடுகிறார்கள். மாலாவுக்கு எல்லாமே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி என்றாக, இறுதியாக வரும் ஊர்த்தலைவர் அவளின் உடைந்த ஒரு வளையலையும் எடுத்து வந்து தூக்கிப் போடுகிறார். ‘உன் மகள் ஒழுக்கம் கெட்டவள் திருமணத்தை நிறுத்தியே ஆகவேண்டுமென’ அவர்கள் சொல்லும் எதற்கும் பதில் சொல்ல முடியாதவளாய் மாலா ஸ்தம்பித்துப்போயிருக்கிறாள். மகள் எல்லோரின் முன்னாலும் வந்து நிற்கும் போது வளையல்களை எண்ணுகிறார்கள். ஒரு வளையல் குறைகிறது. அந்த வளையல்களை அவள் வாங்கும் போது ஊக்காரபெண்கள் எல்லோரும் பார்த்திருப்பதால் அவளே தான் என்று உறுதியாக நம்புகிறார்கள். இந்தக் கதையின் முடிவில் மகள் தன் தாய் குறித்து என்ன நினைக்கிறாள் என்பதையோ தாய் என்ன சொல்கிறாள் என்பதையோ துக்கல் சொல்லவில்லை. திருமணத்திற்கு முன்பாக ஒரு இளம்பெண் வேறொரு ஆடவனுடன் உறவு கொண்டிருக்கிறாள். என்பதை கதைக்குள்ளிருப்பவர்களுக்கான முரணாகவும், மகளின் இடத்தில் தாயின் விரகதாபத்தைப் பேசியிருப்பதை வாசிக்கிறவர்களுக்கான முரணாகவும் கச்சிதமாக ஏழுதியுள்ளார்.


கதை சொல்லலின் புதிய சாத்தியங்களை செய்து பார்க்கவும், மனித மனதின் ஆழங்களில் புதைந்திருக்கும் சஞ்சலங்களைத் தேடித் தருவதற்கும் அவருக்கு இயல்பாகவே கைவந்திருக்கிறது. தன் கதாப்பாத்திரத்தின் செயல் குறித்த தீர்வுகளுக்கோ முடிவுகளுக்கோ அவர் செல்ல விரும்பவில்லை. மனித மனதின் ரகசிய ஆசைகளை அது மனிதர்களையும் மீறி வெளிப்படுவதையே துக்கல் எழுதுகிறார். முதலிலேயே குறிப்பிட்டது போல் ஒரு அரங்க நாடகத்திற்கு நெருக்கமாக இருப்பதாகத் தோன்றும் இந்தக் கதை ஒரு நாடகாசிரியனுக்குரிய எல்லைகளையும் தாண்டி நிற்கிறது. எழுதுகிறவனுக்கும் வாசிக்கிறவனுக்குமான அந்தரங்கமான ஒரு பிணைப்பை உருவாக்கும் விதமான கதை இது. இந்தக் கதை மாலாவின் தாபத்தைதான் பேச விழைகிறது என்பதை ஒரு இடத்தில் மீறி கதையின் துவக்கத்தில் வைத்த முரணில் கொண்டு வந்து நிறுத்தும் போதுதான் இது அசாதரணமான கதையாக மாறுகிறது.


- லஷ்மி சரவணகுமார்


25 views

Comments


bottom of page