top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

சிறந்த இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம் – 3

ரிஷிகேஷ் பாண்டாவின் தானபுலா சொன்ன கதை.இந்திய இலக்கியத்தின் தனித்துவமான சிறுகதையாளர்களில் ஒருவர் ரிஷிகேஷ் பாண்டா. எழுத்தாளர் என்பதை விடவும் ஆற்றல் மிக்கதொரு கதை சொல்லியென சொல்வதே சரியாய் இருக்கும். ஒரு மொழியில் எழுதப்படும் கதைகளை வாசிக்கையில் அந்த நிலத்தின் வாழ்க்கைப் பின்னனிகளை நாம் அறிந்து கொள்ள முடியும். இந்தியா என்பது நிலங்களின் கதை. இந்தியர்களுக்கு நிலமே பிரதானம். எத்தனை நாகரீக மாற்றங்கள் விளைந்தாலும் நாம் நிலத்தை பூமா தேவியாகவும், நீரை கங்கா மாதாவாகவும் பார்த்துப் பழகியவர்கள். வட இந்தியர்களுக்கு ஒரு பழக்கமுண்டு. எந்த ஊரில் பயணம் செய்தாலும் ஆறு குளங்களைக் கண்டதும் முதலில் நீரை அள்ளி தலையில் தெளித்து அந்த நீருக்கு மரியாதை செய்வார்கள். எந்த ஊரின் ஏரியானாலும் குளமானாலும் நீர் கங்காமாதா என்பது அவர்களின் நம்பிக்கை. நாம் எதற்கெல்லாம் அச்சப்பட்டமோ, எதையெல்லாம் கொண்டாடினோமோ அதையெல்லாம் வழிபட்டோம். கதைகளும் பாடல்களும் அதனால் தான் இயற்கையைச் சுற்றியே உருவாகின. இந்திய நாவல்களுக்குள்ளும் சிறுகதைகளுக்குள்ளும் நாம் தரிசிக்க முடிந்த நிலக் காட்சிகளை வேறு எந்த நிலத்துடனும் ஒப்பிட முடியாது. வங்கத்து கதைகளில் வரும் கிராமங்களும் அசட்டையான கல்கத்தா நகரமும் கிழக்கிந்தியாவின் பிரதான அடையாளமென்றால் தமிழ் மற்றும் மராத்திய கதைகளில் வரும் வறண்ட நிலங்கள் தென்னிந்தியாவின் முகம். இந்திய புனைவுகளில் நாம் காண முடிந்த நிலங்களையும் மனிதர்களையும் மட்டும் தனியாக பிரித்து எழுதினால் அது சுவாரஸ்யமான தொகுப்பாக வரக்கூடும்.


ஒரிய இலக்கியத்தின் கலை இலக்கிய வரலாற்றில் பாண்டாவுக்கு மிக முக்கியமான பங்குண்டு. எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் என பன்முகம் கொண்டவர். ஒரு தேர்ந்த கதை சொல்லி வெவ்வேறு ஆளுமைத் திறன் கொண்டவனாகத்தான் இருக்க முடியும். எர்னஸ்ட் ஹெம்மிங்வே, ஜாக் லண்டன் கதைகளில் இருக்கும் சாகசம் அவர்களே நிகழ்த்திப் பார்த்தவை. ஹெம்மிங்வே வேட்டைக்காரர் என்றால் ஜாக் லண்டன் பனி பிரதேசங்களில் தங்கவேட்டைக்குச் சென்றவர். வாழ்வின் அபூர்வ தருணங்களை ரத்தமும் சதையுமாய் தரிசிக்காத மனிதர்களின் எழுத்து அவர்களின் காலத்திலேயே கரைந்து போய்விடுகிறது. ஒரிய பழங்குடி மக்களின் வாழ்வோடு கலந்து போனவர் ரிஷிகேஷ் பாண்டா. அவரின் குறித்து எழுத வேண்டுமென முடிவு செய்தபோது எந்தவொரு கதையைத் தனியாக தேர்வு செய்வது என்கிற குழப்பம் வந்தது. ஒவ்வொரு கதையும் இன்னொரு கதையை விட செறிவானதாகவும் முக்கியமானதாகவும் தெரிகிறது. பத்து வருடங்களுக்கு முன் அவரின் சிறுகதைத் தொகுப்பை வாசித்தபோது என்ன மாதிரியான உணர்ச்சிகள் எழுந்தனவோ அதே உணர்வெழுச்சிகள் இப்பொழுது வாசிக்கையிலும் எழுகின்றன.


ஒரு பரந்த தேசத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியானவையாய் இருப்பதில்லை. பெருநகரங்களில் வசிப்பவர்களின் தேவைகளுக்காக காடுகளிலும் மலைகளிலும் வசிக்கும் பழங்குடி மக்கள் சுரண்டப்படுகிறார்கள், தங்கள் நிலங்களில் இருந்து துரத்தப்படுகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. ஒற்றை தேசம் ஒற்றை அரசு ஒற்றை மொழி என நாம் பிதற்றிக் கொண்டிருப்பது எத்தனை பைத்தியக்காரத்தனமானது என்பதை காடுகளுக்குள் பயணித்தவர்கள் நன்கறிவர். சில வருடங்களுக்கு முன் நியமகிரி மலைப்பகுதியில் நண்பர்களோடு சுற்றுகையில் அந்த பழங்குடி மக்களின் எளிய வாழ்க்கை முறையைக் காண ஆச்சர்யமாக இருந்தது. நகர வாழ்வு நம்மை எப்போதும் நுகர்வோராகவே வைத்திருக்கிறது. நாம் நமது நுகர்வுத் தேவைகளுக்காக காடுகளில் இருந்தும் மலைகளில் இருந்தும் என்னவெல்லாம் கிடைக்குமோ அவ்வளவையும் சுரண்டிக் கொள்கிறோம். இப்படி தங்கள் நிலங்களை சுரண்டுவதற்கு எதிராக போராடும் எளிய பழங்குடி மக்களை இந்திய இராணுவம் கருணையின்றி வேட்டையாடுவதை தனது எழுதப்படாத விதியாகக் கொண்டுள்ளது. இராணுவமும் வனத்துறையும் எவ்வளவு மூர்க்கமாக அந்த மக்களை ஒடுக்கினாலும் பழங்குடி மக்கள் ஓய்வின்றி தீரம் மிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்தியபடிதான் இருக்கிறார்கள்.


கடந்த பத்து வருடங்களில் இந்திய தேசியத்திற்கு எதிரான மகத்தான போராட்டங்கள் எல்லாம் பழங்குடி மக்களால் நடத்தப்பட்டவையே. என்னளவில் இந்திய அரசியலின் எதிர்காலம் வனங்களுக்குள்ளாக இருந்துதான் உருவாக முடியுமென திடமாக நம்புகிறேன்.


எண்பதுகளின் துவக்கத்தில் லத்தீன் அமெரிக்க கதைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றதற்கு அந்தக் கதைகள் கையாண்ட கதையும் கதைமொழியுமே முக்கியமான காரணங்கள். சிக்கலான அரசியல் பிரச்சனைகளைச் சொல்ல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் யதார்த்தத்தை மீறின புதிய உத்திகளைக் கையாண்டனர். நீண்ட பழங்குடி கலாச்சாரத்தைக் கொண்ட மாயன் இன மக்கள் ஸ்பானிஷ் மொழி ஆதிக்கத்தின் கீழ் வந்து அலைக்கழிக்கப்பட்டு தங்களது ஆதார மொழியும் இல்லாமல் ஆக்கிரமித்த மொழியும் இல்லாமல் ஒரு புதிய மொழியில் எழுத விளைந்ததன் முயற்சியே மாய யதார்த்தவாதக் கதை சொல்லல் முறை. லத்தீன் அமெரிக்க பழங்குடிக மக்களுக்கு என்னெல்லாம் நேர்ந்தனவோ அவை எல்லாமே இந்தியாவின் மத்திய பகுதியில் காடுகளுக்குள் வாழும் பழங்குடி மக்களுக்கும் நேர்ந்தன. இப்போதும் நேர்கின்றன. ஏராளமான மொழிகளை முற்றிலுமாக ஒழித்து ஹிந்தியை வலுக்கட்டாயமாக அவர்களிடம் திணித்து அவர்களை அடையாளமற்றவர்களாய் ஒற்றை தேசியவாதிகள் மாற்றுகிறார்கள். இப்படி அடையாளமாக்கப்பட்ட மனிதர்களின் அவலங்களையும் காலம் காலமாய் வனத்திற்கும் அவர்களுக்கும் இருந்த உறவையும் சொல்பவை ரிஷிகேஷ் பாண்டாவின் கதைகள்.


பாண்டாவின் பெரும்பாலான கதைகளும் ஊரின் கதைகளாகவே இருக்கின்றன. அரிதாகவே தனித்த ஒரு மனிதரின் கதையை சொல்கிறவராக இருக்கிறார். அவரின் கதைகளில் நிலமும் ஒரு முக்கியமான பாத்திரமாய் மாறிப்போகிறது. தானபுலா சொன்னக் கதையைப் போலவே கோரஸ், ஒரு அழகான வேடிக்கை அது, நாரைகள், ஒரு சுழற்காற்று பேய் பொன்ற கதைகளையும் ஒரே நேரத்தில் குறிப்பிட்டு எழுத யோசித்தேன். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவமானதாய் இருந்த போதும் தானபுலா சொன்ன கதை ஒரு நாவலாக எழுதக் கூடிய பெரும் வாழ்வை சிறுகதையாய்ச் சொன்னதன் மூலம் எனக்கு முக்கியமானதாய்ப் பட்டது. தலை சிறந்த எழுத்தாளரான பிரேம் சந்தின் சில கதைகளும் கூட இதுபோல் நாவல் அளவிற்கு விரியக்கூடிய பெரியதொரு வாழ்வை சில பக்கங்களுக்குள் எழுதியவைதான். பாண்டாவைப் போலவே பிரேம் சந்தும் இந்திய எளிய மக்கள் நிலத்தோடு மேற்கொள்ளும் போராட்டத்தையும் வறுமையையும் தான் எழுதுகிறார். தனி மனிதனின் அகச் சிக்கல்களையே சிறுகதைகள் பிரதானப்படுத்தும் சூழலில் ஒரு சமூகத்தின் புறவயமான அரசியல் சிக்கல்களையும் அதன் மூலமாய் சாதாரண மனிதர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதன் வேரைத் தேடிச் செல்வதும் முக்கியமானது. முன்பே குறிப்பிட்டது போல் லத்தீன் அமெரிக்க கதைகளின் தனித்துவம் அந்தக் கதைகள் தங்களின் அரசியலைக் கையாண்ட விதம் தான்.


நாரைகள் கதையை இன்றைக்கு தமிழகத்தின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம், சில கதைகள் உலகம் முழுமைக்குமாக பொருந்துமே அப்படி பொருந்தக் கூடிய ஒரு கதை. ‘அவர்களது அகன்ற பார்வையும், அமைதியும், பொறுமையின்மையும் இரைக்குக் காத்திருக்கும் நாரைகளை நினைவூட்டின.’ எனத் துவங்கும் கதை அதிகார மையங்களுக்குய் இயற்கை வளங்களின் மீதிருக்கும் கொடும் பசியை நமக்கு உணர்த்துகின்றன. எண்ணை வளங்களுக்காக லத்தீன் அமெரிக்காவில் அமேஸான் பழங்குடிகள் துரத்தப்பட்ட வரலாறு உலகமே அறிந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் உலகில் நடந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் எண்ணை அரசியலை மையப்படுத்தியவையே. இந்தக் கதையில் வரும் சோனாபாட் என்னும் கிராமம் வளம் நிறைந்தது. இங்கிருந்து எரிபொருள் திருடுவதற்காக வரும் அதிகாரிகள் அந்த மக்களை அவர்களின் நிலங்களில் இருந்து துரத்த என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை வாசிக்கையில் இன்றைக்கு தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்களின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கை எரிவாயு எடுப்பதற்காக இன்னும் சில வருடங்களில் மொத்த டெல்டா நிலங்களும் சூரையாடப்படும். வளமான நெல் விளையும் நிலங்கள் மலடாகி நாம் உணவுக்கு கையேந்துவோம். இதுவெல்லாம் நம் தலைமுறையில் நம் கண் கூடாகவே நடக்கப் போகிறது. ஆட்சியாளர்கள் வேண்டுமானால் சுதந்திர இந்தியாவில் வேறு வேறானவர்களாய் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஆட்சி நடத்தியது நடத்திக் கொண்டிருப்பது உலகம் முழுக்கவிருக்கும் தொழில் நிறுவனங்களுக்காகத்தான்.


லண்டனில் உட்கார்ந்து கொண்டு வேதாந்தா முதலாளியால் தூத்துக்குடியின் வீதிகளில் அப்பாவி மக்களின் மீது அவர்களின் சொந்த மக்களை வைத்தே துப்பாக்கி சூடு நடத்த முடிகிறதென்றால் உண்மையில் நம்மை ஆள்வது யார்? இதுவெல்லாம் பிரச்சனை தானே இதை எழுதினால் கதையாகுமா என்று கேட்கலாம், கலையின் நோக்கமும் தேவையும் மக்களின் வாழ்விற்கானது. தனி மனிதனின் அகச்சிக்கலை எழுதுவது எத்தனை முக்கியமோ அதேயளவு அவன் எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல்களை எழுதுவதும் முக்கியம். கார்மன் நரான்ஹோவின் மிகச் சிறந்த கதையான ‘நாங்கள் மழையை விற்றுவிடோம்’ கதையும் சற்றேறக்குறைய இதே பிரச்சனையை பேசுவதுதான். மழை அதிகமாக பெறும் ஒரு நிலம் பேராசையின் காரணமாய் மழை வளத்தை வேறு ஒரு தேசத்திற்கு விற்றுவிடுவதால் ஏற்படும் பேரிடர்களை பேசும் கதை இது. மறைமுகமாக இயற்கை வளங்களை அமெரிக்க நிறுவங்களுக்கு விற்கும் லத்தீன் அமெரிக்க அரசுகளை கடுமையாக விமர்சிக்கும் கதை இது. ஒரு கதை மொழி தாண்டி தேசம் தாண்டி பொதுமையாய் ஆவகும்போது அது மையப்படுத்தும் அரசியல் முக்கியமானதாகிறது.


சிறுகதைகளுக்கான வழமையான கதை சொல்லல் முறையிலிருந்து துண்டித்துக் கொண்டு புதிய மொழியில் அமைந்திருக்கிறது தானபுலா சொன்ன கதை. ஒரு விதூஷகனைப் போலவோ கட்டியங்காரனைப் போலவோ தானபுலா பெருந்திரளான மக்களுக்கு முன்னால் இந்தக் கதையை சொல்லத் துவங்குகிறாள். அரங்க நாடகங்களின் தொனியில் துவங்கும் கதை சடாரென சிறுகதைகளுக்கேயான இறுக்கமான வடிவத்திற்கு மாறுகிறது. தான் சொல்லப் போகும் கதையை மையப்படுத்தி தானபுலா வாசிக்கிறவர்களை நகர்த்திவிடுகிறாள். சிறுகதைகளுக்கான உத்தியை நாம் எவ்வாறு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு கதை எடுத்துக் கொண்ட அல்லது சொல்ல விளைந்த விஷயத்திலிருந்து விலகாமல் இருக்க வேண்டியது முக்கியம். ஒரு குடியரசுதினக் கொண்டாட்டத்தின் போது அவள் பேசுகிறாள். இந்தக் குடியரசு தினமானது இந்தத் தேசத்தின் மக்களுக்கு எத்தனை பாரபட்சமானதாய் இருக்கிறது என்பதை காடுகளில் வாழும் தங்களின் வாழ்வை முன்னிட்டு சொல்கிறாள். இரண்டு தலைமுறை மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் aவளின் குரலில் சொல்வதே இந்தக் கதை. ஆற்றாமையின் குரலுக்கு ஒரு நேரடித்தன்மையும், கூரிய வாளைப்போல் கேட்கிற ஒவ்வொருவருக்குள்ளும் இறங்கும் வலிமையும் உண்டு. தானபுலாவின் சொற்களும் அப்படித்தான் நமக்குள் இறங்குகின்றன. ” இதற்கு முன்னே எல்லோராலும் ஒவ்வொருவராலும் நாம் சுரண்டப்பட்டோம், நம் நிலத்திலிருந்து மரம் வெட்டிக் கொள்வதற்கு அரசனுக்கு வரி செலுத்தினோம். நமது சொந்த மரத்தின் பழங்களை உண்ணுவதற்கு நமக்கு அனுமதியில்லை. நிலவரி கட்டுவதற்காக, நெல்லும் ராகியும் நான்கைந்து மைல் தூரம் சுமந்து சென்றோம். தசரா விழாவின்போது ஏழுமைல் தூரம் கால்நடையாக நடந்து போய், அரசன் முன் நடனமாடினோம். கூலி ஒன்றும் பெற்றுக்கொள்ளாது ஆடிவிட்டு, முப்பத்தாறு ஜாதிகளையும் மூன்று கலிங்க நாடுகளையும் ஆள்கிறவன் என்று அரசன் பெயர் பெறுவதற்காக, சாலையோரங்களில் படுத்துத் தூங்கினோம்.” என்று அவள் சொல்லத் துவங்கும்போது நமக்கு வனங்கள் குறித்தும் பழங்குடிகள் குறித்தும் இருக்கும் அத்தனை பிம்பங்களும் உடைந்து போகின்றன.


2003 ம் வருடத்தில் ஏழெட்டு மாதங்களுக்கும் மேலாக தேசிய வழிச்சாலைகளில் செல்லும் லாரியில் க்ளீனராக வேலை செய்த அனுபவம் எனக்குண்டு. இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் சாலை வேலைகளுக்கும் கட்டிட வேலைகளுக்குமாக துரத்தப்பட்டிருப்பவர்கள் பழங்குடி மக்கள். அதிலும் குறிப்பாக ஒரியாவின் மலைவாழ் மக்களும் , சந்தால் பழங்குடி மக்களும். காட்டுயிர் பாதுகாப்பு, பாதுகாக்கப்பட்ட வனம் என்ற பெயரில் பழங்குடிகள் துரத்தப்பட்டு அங்கு பிரம்மாண்டமான ரிசார்டுகள் கட்டுப்படுவதும் இயற்கை வளங்களை சுரண்டும் ஆலைகள் உருவாவதும் இன்னும் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன.

தன் நிலத்திலிருந்து துரத்தப்படும் பழங்குடி தனது மொத்த வாழ்வாதாரத்தையும் இழக்கிறான். எளிய தேவைகளுக்காகக் கூட கடன் வாங்குகிறான். இந்தக் கதையில் ஓரிடத்தில் இப்படி வருகிறது, “மகன் திருமணம் செய்து கொண்டால், திருமணக் கடனுக்காக அவன் அப்பன் அடிமையானான். வனத்துறையினர் ஒருவனைக் கைது செய்தால், அவன் குடும்பமே அப்படி ஆயிற்று. நிலவரி செலுத்த முடியவில்லையானால் அடிமை ஆனாய் நீ. இன்னும் அடிமை முறை ஒழிக்கப்படவில்லை என்றாலும் அதையொழிக்க ஒரு சட்டம் இருக்கிறது இப்போது.” வரலாற்றில் ஒருபோதும் கையேந்தி பழக்கப்படாத பழங்குடிகள் தலைதலைமுறையாய் கடனாளிகளாய் ஆக்கப்படுகிறார்கள். தானபுலாவிற்கு ஒரு காதலன் இருக்கிறான், அவனை ஒருநாள் வனத்துறை அதிகாரி கூப்பிட்டாரான ஒருவன் கூட்டிச் செல்கிறான். அதன்பிறகு அந்தக் காதலன் ஒருபோதும் திரும்பியிருக்கவில்லை. இப்படி ஒருபோதும் திரும்பாத எத்தனையோ பழங்குடி ஆண்கள் இந்தியாவின் எல்லா வனப்பகுதிகளிலும் இருக்கிறார்கள். வீரப்பன் தேடுதலில் தமிழக கர்நாடக வனத்துறையினரால் காணாமலாக்கப்பட்ட பழங்குடிகள் எத்தனையெத்தனை பேர். நாம் அவர்களின் கதையைக் கேட்கும் போது இரக்கப்படுகிறோம், ஆனால் அவர்கள் நம்மிடம் வேண்டுவது இரக்கத்தையல்ல, அவர்களுக்கான நீதியை.


தானபுலாவின் காதலனைத் தொடர்ந்து நிறைய பேர் காணாமல் போகிறார்கள். ஒருநாள், வனத்துறை அதிகாரிகளும் வேறுசில அதிகாரிகளும் அங்கு வந்து ‘உங்களுக்கு வேறு நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது நீங்கள் அங்கு செல்லலாம்’ என்று சொல்லும்போது அந்த மக்கள் அதற்கு இசைய மறுக்கிறார்கள். சில நாட்கள் யாருடைய இடைஞ்சல்களும் இல்லாமல் அவர்கள் இயல்பு வாழ்வைத் தொடர, ஒரு இரவில் ஆறேழு ட்ரக்குகளில் வரும் வனத்துறையினர் கட்டாயமாக அவர்களை ஏற்றிக் கொண்டு வெவ்வெறு இடங்களில் சென்று இறக்கி விடுகிறார்கள். அவர்கள் காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்து சேர்ந்தது இப்படித்தான். ஆனால் அங்கும் அவர்கள் வாழ்க்கை நரகமாகவே தொடர்கிறது. அவர்கள் வலிந்து குடிகாரர்களாக்கப்படுகிறார்கள். குடிப்பதற்காகவே தங்கள் உடைமைகளை இழக்கிறார்கள். இராண்டாயிர வருட பாரம்பரியத்தில் ஒரு பழங்குடி தனது அன்றாட தேவைகளுக்காக திருடத் துவங்கி அந்த இனத்தில் திருடனாகிறான். நினைவிருக்கிறதா கேரளத்தின் மதுவை? ஒரு கவளம் அரிசி திருடியதற்காக கொலை செய்யப்பட்ட மனிதன். உங்களால் அவனை நினைவு கொள்ள முடியுமென்றால் உலகம் முழுக்கவும் வாழ்வாதாரங்களை இழந்து துரத்தப்படும் பழங்குடிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்கள் எல்லோருக்கும் ஒரே முகம் தான்.


வெவ்வேறு நிலங்களுக்கு துரத்தப்பட்டவர்களில் சிலர் ஏவல் வேலைகளுக்கு செல்கிறார்கள், சிலர் கொத்தடிமைகளாகிறார்கள், இன்னும் சிலர் நக்சல்பாரிகளாகிறார்கள். இந்த நகசல்பாரிகளைத் தேடி பாதுகாப்பு படை வீரர்கள் மீண்டும் காட்டுக்குள் நுழைந்து மிச்சம் மீதியிருக்கும் மக்கள்களை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறது. இன்னொரு வெளியிலிருந்து வந்து காட்டிற்குள் குடியேறும் புதிய மனிதர்களாலும் அவர்களுக்கு நெருக்கடி. போலிஸ்காரர்கள், வனத்துறையினர், பாதுகாப்பு படையினர், ராணுவத்தினர், வட்டிக்காரர்கள் எத்தனையெத்தனை பேரைக் கண்டு அம்மக்கள் அஞ்சி ஓடுவது? சாலைபோடும் வேலை முடிந்ததும், ரயில்வே ட்ராக் போடும் வேலைக்குச் செல்கிறார்கள். உடலில் வலு இருக்கும் வரை உழைத்தே ஆகவேண்டுமென்கிற நிர்ப்பந்தம் அவர்களுக்கு. ‘என் வாழ்நாளின் நிகழ்ச்சிகளும் தியாகத்திற்கு ஒப்பானவைதான். ஒரு இனக்குழுமக்கள் செய்த ஒட்டுமொத்த தியாகத்தின் தொகுப்பு அது’ என்கிறாள் தானபுலா. ‘எங்கள் நிலங்கள் எங்கே போயின? எங்கள் குடும்பங்கள் என்ன ஆனார்கள்? இவையெல்லாம் ஏன் நடந்தது?’ என விடையே கிடைக்காத ஏராளமான கேள்விகளை அம்மக்கள் கூட்டத்திடம் கேட்கிறாள் என்பதோடு முடிகிறது கதை.


இந்தக் கதை நேரடியான மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் தானபுலாவின் பார்வையாளர்கள் கதையில் யாரென்று சொல்லப்படவில்லை. கவனமாக வாசிக்கும் போதுதான் தானபுலா கதைக்குள் வாசிக்கிறவர்களை பார்வையாளராக்கி கதை சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பது புரியும். கதை சொல்லி மரபில் காலம் காலமாய் ஒரு வழக்கமுண்டு. கேட்கிறவனையும் கதைக்குள் ஒரு பாத்திரமாக்குவது. பாண்டா இந்தக் கதையில் தானபுலா மூலமாக செய்து காட்டியிருப்பது அதைத்தான். இதனாலேயே கதையின் சம்பவங்களை கடந்து செல்வது நமக்கு எளிதாக இல்லாமல் போகிறது. சிறுகதைக் கலை குறித்து தி.ஜானகிராமன் பின்வருமாறு கூறுகிறார். ”எந்தக் கலைபடைப்புக்கும் முழுமையும் ஓர்மையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலை வடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக் கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன் சிரிப்போ, நகையாடலோ, முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில் தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்து விடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும்.” தானபுலா சொன்ன கதை விஸ்தாரமான காலத்தை நம்முன் தந்தாலும் எடுத்துக் கொண்ட விஷயத்திலிருந்து கொஞ்சமும் நகரவில்லை. ஒரு சிறுகதைக்கு ஆக முக்கியமான இறுக்கமும் தெறிப்பும் நிரம்பி வழிகிறது. மேலும் இறுக்கமான மொழியைத் திணித்து நம்மைத் துன்புறுத்தவில்லை. பாண்டா நாடகங்களும் எழுதக் கூடியவர் என்பதால் இந்தக் கதையின் கதாப்பாத்திரங்கள் குறித்த சித்திரத்தை நாம் தெளிவாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. ஒரு கதையின் நிகழ் களத்தையும், மனிதர்களையும் வாசிக்கிறவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்போதுதான் கதையில் நிகழும் சம்பவங்கள் உணர்த்த வரும் துயரமோ, களிப்போ, கேலியோ அதை முழுமையாக உணரமுடியும். கதையை மீறின மொழி வாசிக்கிறவனை தொந்தரவு செய்வதோடு தொடர்ந்து வாசிப்பதின் மீது எரிச்சலையும் உருவாக்கிவிடுகிறது. செகாவ் உலகின் மிகச் சிறந்த சிறுகதையாசிரியராகக் கருதப்படுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட கதைக்களங்கள் மட்டுமல்ல அதை அவர் சொன்னவிதமும், கையாண்ட மொழியுமே முக்கியக் காரணம். செகாவின் அனேகக் கதைகளின் மொழி வாசகனோடு நேரடியாக உரையாடக் கூடியவை. இந்திய எழுத்தாளர்களில் வைக்கம் முகமது பஷீரின் கதைகளில் அந்தத் தன்மை மிகுந்து காணப்படும். அபூர்வமாகவே எழுத்தாளர்களுக்கு வாசகர்களின் மனதோடு நெருக்கமாகப் பேசக்கூடிய மொழியை கையாளும் திறன் வாய்க்கிறது. ரிஷிகேஷ் பாண்டா அவர்களில் ஒருவர். எழுத்தாளர் தமிழ்நாடன் அவர்களால் மொழிபெர்யர்க்கபட்டு அலைகள் வெளியீட்டகத்தால் ரிஷிகேஷ் பாண்டாவின் பனிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக பல வருடங்களுக்கு முன் வெளியாகியது. கடந்த வருடம் சாகித்திய அகதெமி அவரின் நாடக நூல் ஒன்றையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியுட்டுள்ளது.


தமிழில் பழங்குடி மக்களைக் குறித்து எழுதப்பட்ட சிறுகதைகள் வெகு சொற்பம். வளமான காடுகளும், ஏராளமான பழங்குடி மக்களும் நிறைந்த ஒரு மொழியில் அவர்கள் குறித்த கதைகள் சொல்லப்படாமல் இருப்பது துரதிர்ஸ்டவசமானது. அரிதாக சொல்லப்படும் ஒரு சில கதைகளும் கதை சொல்லிகள் பார்வையாளராய் இருந்து எழுதுகிறவைகளாகவே இருக்கின்றன. ஒரு தமிழ்த் திரைப்படத்தின் துவக்கக் காட்சியில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாயகன் ( அதிலும் வனத்துறை அதிகாரி வேறு ) புலியை வேட்டையாடி தூக்கி வருவது போல் ஒரு பாடல் இருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் அந்தக் காட்சியை நாம் எல்லோருமே ரசித்துக் கடந்தோம். காட்டுயிர்களுக்கும் பழங்குடிகளுக்குமான உறவு ஆழமானது. அதைப் பார்வையாளர்களின் மனநிலையில் எதிர்கொள்ளும் மனிதர்களால் அதிகம் புரிந்து கொள்ள முடிவதில்லை. ‘சோளகர் தொட்டி’ மாதிரி ஒரு சில புனைவுகளைத் தவிர காடுகள் குறித்து தமிழில் எழுதப்பட்ட பெரும்பாலான புனைவுகள் பார்வையாளர்களின் மனநிலையில் எழுதப்பட்டவை என்பதுதான் நம் மொழிக்கு நேர்ந்த துரதிர்ஸ்டம்.


19 views

Comentários


bottom of page