top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

சிறந்த இந்திய சிறுகதைகள் ஓர் அறிமுகம் – 2

பூபென் கக்கரின் ’போரன் சோப்’“இந்திய மகத்துவத்தின் ரகசியம் தான் என்ன? அது புத்தககமோ தத்துவமோ இல்லை. அறிவும் சத்தியமுமாகிய எல்லாமும் முழுமையானதும் எல்லையில்லாததும் என்னும் திறந்த ரகசியமே. அது உருவாக்கப்பட வேண்டியதில்லை. கண்டெடுக்கப்பட வேண்டியது.”

- ஆனந்த குமாரசாமி.

இந்திய மனங்களுக்கென சில பிரத்தியேகத் தன்மைகளுண்டு. ‘இந்த பிரபஞ்சத்தை விடவும் இந்தியா பிரம்மாண்டமானது’ என போர்ஹேஸ் சொல்வது சத்தியமான உண்மை. ஏனெனில் விளங்கிக் கொள்ள முடியாத தொல்கதைகளையும் மர்மங்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம் நாம். தத்துவங்கள் கலைக் கோட்பாடுகளென அறிவு சார்ந்த எல்லாவற்றின் ஊற்றும் இங்கு மிகுந்திருக்கக் காரணம் நான் முதலில் சொன்ன அந்த பிரத்யேகத் தன்மைதான். இந்திய மனங்கள் காலம் காலமாக சொல்லப்பட்ட கதைகளால் உருவானவை. வாழ்வின் அறத்தை யாரும் கற்றுக் கொடுக்காமலேயே அகப்பூர்வமாக கற்றுக்கொண்டவர்கள் நாம். இயற்கையை, மனிதர்களை நாம் விஞ்ஞானப்பூர்வமாக அணுகுவதை விடவும் உணர்வுப்பூர்வமாகவே அணுகுகிறோம். நதிகள் தெய்வங்களாக வழிப்படப்படுகின்றன. இயற்கையின் மகத்துவத்தை மனிதர்கள் நம்பிக்கைகளின் வழியாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாய் நமது கதைகளிலும் இந்த மரபே இருந்து வருகிறது. மனிதனுக்கும் இயற்கைக்குமான அழுத்தமான பிணைப்பை பாடல்களும் ஓவியங்களும் ஏராளமாய் பதிவு செய்தபடியே இருக்கின்றன. மனிதனின் சமூக வாழ்வில் இயற்கையின் சின்னதொரு அசைவும் மாற்றமும் மிக முக்கியமானதொரு பங்கை செய்தபடியே இருக்கிறது.


நவீன இந்திய ஓவியர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவரான பூபென் கக்கருக்கு பல்வேறு முகங்களுண்டு. அறுபதிகளில் ஐரோப்பிய கலை உலகத்தின் ஓவியப் போக்குகளில் இருந்து முற்றிலும் புதிதான ஒரு போக்கை பூபென் துவக்கி வைத்திருந்தார். அவரை ஒரு கதையாடல் ஓவியர் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், பலகுரல் கலைஞர் என கக்கருக்கு ஏராளமான முகங்களுண்டு. ஓவியங்களிலும் சரி கதைகளிலும் சரி அவர் அதிகம் உள்வாங்கியிருந்ததும் மீட்டுருவாக்கம் செய்ததும் தொல்கதைகளைத்தான். ‘உங்களால் எல்லோரையும் மகிழ்விக்க முடியாது’ என்ற தலைப்பின் கீழ் இங்கிலாந்து ஓவியக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது ஓவியம் மத்திய தரைக்கடல் பகுதியில் சொல்லப்படும் ஒரு தொல்கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கழுதையைக் கூட்டிக் கொண்டு பயணப்படும் தந்தையையும் மகனையும் மையப்படுத்திய இந்தக் கதையை கக்கர் தனது ஓவியத்தில் பிரதிபலித்திருந்தார். கழுதையின் மீதேறி தந்தையும் மகனும் செல்ல, ஒரு வீட்டின் பால்கனியிலிருந்து நிர்வாண மனிதன் அதைப் பார்த்துக் கொண்டிக்கும் காட்சி. இந்த ஓவியம் குறித்து ஒரு நேர்காணலில் ‘இரண்டு ஆண்களை சுமந்து செல்கிறது அல்லவா அதனால் கழுதையின் ஆண்குறி விரைத்துள்ளது. இந்த உலகத்தின் கண் முன்னால் நான் நிர்வாணப்படுத்தப்பட்டிருப்பதாக உணர்கிறேன். அந்த தலை நரைத்த பார்வையாளன் நானாக இருக்கலாம். அடிப்படையில் தன்னை ஓருபால் தேர்வாளனாக அறிவித்துக் கொண்ட பூபென் அந்த அடையாளத்தை நீண்டகாலம் வெளியில் சொல்வதற்கு தயங்கி வந்துள்ளார். அவரது நண்பரான ஹைமேன் எழுதிய கட்டுரையில் ‘நான் எனது பாலியலைப் பற்றிப் பெரிதும் வெட்கப்படுகிறேன். நான் ஓரினச் சேர்க்கையாளன் என்பது எப்போதும் வெளிப்படக்கூடாது என்று நினைத்தேன். 1975 வரை என் நண்பர்கள் நான் ஓரினச்சேர்க்கையாளன் என்று தெரிந்து கொண்டால் நான் தற்கொலை செய்துகொள்ள எண்ணியிருந்தேன்’ என்று கூறியதாக பதிவுசெய்கிறார். தனது பாலியல் தேர்வை வெளிப்படையாக சொல்லிக் கொள்ள முடியாத இந்த அழுத்தம் அவரது படைப்புகளில் தொடர்ந்து வெளிப்பட்ட படியேதான் இருந்திருக்கின்றன.

மும்பைவாசியான பூபென் பணியின் நிமித்தமும், ஓவிய வாழ்விற்காகவும் பரோடா வந்ததுதான் அவரது வாழ்வின் திருப்புமுனை. சுதந்திரமான அந்தச் சூழலில் குஜராத்திய எழுத்தாளரான சுரேஷ் ஜோஷியின் நட்பு அவரை இலக்கியத்தோடு ஆழமாய் பிணைக்கிறது. ’விருச்சிக்’ என்னும் சிற்றிதழை துவங்கி நடத்தியிருக்கிறார். தனது ஓவியங்களில் எவ்வாறு பாப்புலிசத்தை பிரதிபலிப்பவராக இருந்தாரோ எழுத்திலும் அதையேதான் பிரதிபலித்தார் அதிகமும் மும்பை வாழ் குஜராத்திய மத்தியதர மக்களின் வாழ்வின் பின்னனியிலேயே கக்கார் தனது கதைகளை எழுதியுள்ளார். போரான் சோப் என்னும் இந்தக் கதை எழுத்தாளர் சி.மோகனை ஆசிரியராகக் கொண்டு வந்த புனைகளம் இதழில் மருதா. பாலகுருசாமியின் மொழிபெயர்ப்பில் வெளியானது.


போரான் சோப் கதைக்குள் வரும் கதாப்பாத்திரங்கள் யாருக்கும் தெரியாமல் நாம் ஒவ்வொருவரும் ஒளித்து வைத்திருக்கும் முகங்கள். நமக்கு மிக நெருக்கமானவர்களிடம் மட்டும் அந்தரங்கமாக அந்த முகம் வெளிப்படும். மனித இனம் ஒருபோதும் வெல்லவே முடியாமலிருப்பது ஆசைகளைத்தான். போரான் சோப் மனிதர்களின் இச்சைகளையும் அதன் பொருட்டு அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் போலியான குற்ற உணர்ச்சிகளையும் அங்கதத்தோடு துகிலுரிக்கிறது. பூபென் இந்தக் கதையின் வழியாக மனித வாழ்விற்கான தீர்வையோ கண்டுபிடிப்பையோ சொல்ல முயலவில்லை. எந்தவொரு கலை ஊடகத்திற்கும் அப்படியான கட்டாயமும் இல்லை. ஒரு ஓவியத்தைப் பார்க்கும் ஏதோவொரு கனத்தில் அதன் சின்னதொரு வளைவு , நிழலோ தொந்தரவு செய்வதில் நாம் துணுக்குற்று வேறு யாரும் நம்மை கவனிக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்வோமில்லையா அப்படியானதொரு உணர்வையே ஏற்படுத்துகிறது. இந்தக் கதையில் சோப் என்பதற்கு பதிலாக எதை வேண்டுமானாலும் வைத்துப் பார்க்கலாம். கிளர்ச்சியின் பொருட்டு நாம் எத்தனை போலித்தனங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தாலும் அதை மீறமுடிவதில்லை என்கிற யதார்த்தம் தான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.


சவீதா சரிதா இருவரும் தோழிகள். அருகருகே வசிப்பவர்கள். சவீதாவின் கணவன் ஜீவன் லால், தனது உறவினன் அபுதாபியிலிருந்து அனுப்பியதாக அந்த சோப்பை எடுத்து வருகிறான். ‘போரான் சோப் என்பது வேறு ஏதோ ஒன்று’ என்கிற முதல் வரியே வழக்கமாக நாம் பாவித்திருக்கும் எல்லா சோப்புகளையும் மறக்கச் செய்து விடுகிறது. வாசிப்பவருக்கு விருப்பமான பிரத்யேக மணம் ஒன்றை உணரச் செய்வதன் மூலம் ஒரு உயிர்ப்பான ஓவிய கேன்வாஸிற்குள் நாமும் ஒரு பாத்திரமாக நுழைகிறோம். ஏனெனில் குளித்து முடித்துவிட்டு வெளியே வரும் போது ஜீவன் லால் இப்படிச் சொல்கிறான். ‘முழு உடலையும் சுத்தப்படுத்தியாகிவிட்டது. பாவங்களையும் கூட.’ இத்தனை மகத்துவம நிறைந்த ஒரு சோப்பை வாசிக்கும் நாம் மட்டும் அதை வெறும் சோப் தானென எப்படி நம்புவது?


ஜீவன் வீட்டிலிருந்து கிளம்பும் போது ‘இந்த சோப் விஷயத்த யார் கிட்டயும் சொல்லாம ரகசியமா வெச்சுக்கோ’ என சவிதாவிடம் எச்சரித்துவிட்டுப் போகிறான். ஆனாலும் ரகசியங்களுக்குப் பழக்கப்படாத சவீதா அவன் வீட்டிலிருந்து கிளம்பிய நொடியிலேயே சோப்பை எடுத்துக் கொண்டு தன் தோழியான சரிதாவின் வீட்டிற்கு செல்கிறாள். சில ரகசியங்களை நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மனிதர்களுக்கு ஏற்படும் கிளர்ச்சி அலாதியானது. அந்த நகரில் வேறு எவருக்கும் கிட்டாத புதையலொன்றை எடுத்து வந்திருக்கும் உற்சாகத்தோடு சவீதா சோப்பை பற்றிச் சொல்ல, அதை ஒருமுறையேனும் பாவிக்க வேண்டுமென்கிற விருப்பம் சரிதாவிற்கும் ஏற்படுகிறது. அவள் கேட்கவெனெடும் என்பதற்காகவே சவீதா எடுத்துச் சென்றாளோ என்றுகூட நாம் யோசிக்க முடியும். ஏனெனில் இந்த நான்கு கதாப்பாத்திரங்களும் ஒருவர் மற்றவருக்கு மிக நேர்மையாய் இருப்பதான சித்திரத்தை வலிந்து உருவாக்கியபடியெ இருக்கிறார்கள். மனிதன் தனக்குத் தானே நேர்மையாக இருக்க முடியாதென்கிற உண்மையை நம்மில் யாரும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கிற போது இந்த நால்வர் என்ன செய்ய முடியும்? பாவிக்காமல் அப்படியே திருப்பித் தந்துவிடுவேனென சரிதா செய்து கொடுத்த சத்தியத்தை நம்பி சவிதா சோப்பை கொடுத்துவிட்டுச் செல்கிறாள்.


இச்சைகளின் காலடியில் மனிதர்கள் நிபந்தனையின்றி அடிபணிவது மனிதகுல வரலாறு . சரிதாவும் சத்தியத்தை மறந்து தனது சோப்பைக் கையிலெடுத்து குளிக்கச் செல்கிறாள். அந்த சோப் அவளின் அந்தரங்கமான அத்தனை விருப்பங்களையும் கிளர்த்துகிறது. ஒரு அபூர்வ உயிராய் நினைத்து குளியலறையில் விளையாடிவிட்டு சரிதா வெளியே வரும் போது அந்த வீடு முழுக்க சோப்பின் நறுமணம். வேலை முடிந்து வரும் அவளின் கணவன் வீடெங்கும் பரவியிருக்கும் அந்த புதிய வாசணையில் தூண்டப்பெற்று ‘என்ன இது புது வாசணை எனக் கேட்க, சரிதா போரான் சோப்பை அவனிடம் கொடுக்கிறாள். உற்சாகமாக குளிக்கச் செல்லும் சரிதாவின் கணவனுக்கு சோப்பைக் கொடுத்த சவிதாவின் நினைவு வர, சவிதாவுடன் சல்லாபித்த தருணத்தை நினைத்துப் பார்க்கத் துவங்குகிறான். அந்த சோப்பின் மகத்துவம் இப்பொழுது சவிதாவின் உடலோடு தொடர்புடைய ஒன்றாய் மாறுகிறது. இச்சைகள் நெருங்கியவர்களிடமிருந்து சடாரென தனிமைப்படுத்தி வேறொரு உலகிற்கு மனிதர்களை இழுத்துச் செல்வதுதானே யதார்த்தம். அவர்கள் இருவரும் உடலுறவு கொள்ளும் இடம் ஒரு வேடிக்கையான கொலாஜ் ஓவியம் போலவும், ஒரு அங்கத நாடகத்தின் ஆகச்சிறந்த காட்சி போலவும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘உங்கள முதல் தடவையா பாத்தப்பவே உங்க மார்ல இருக்க ரோமம் என்னய சுண்டி இழுத்துடுச்சு.’ என சவிதா சொல்லிக் கொண்டிருக்கையில் பின்னால் தொலைக்காட்சியில் உரத்திற்கு பொட்டாஷ் கலப்பது எப்படி என்கிற விவசாய நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியை அணைக்கச் செல்லும் அவனை சவிதா இல்ல அது இருக்கட்டும். எனக்கு சத்தமா இருந்தாதான் பிடிக்கும்.’ என்கிறாள். சவிதா தனது தோழியின் கணவனோடு உறவு கொள்வதற்காக எப்படி தயக்கம் காட்டியிருக்கவில்லையோ அப்படியே உடலுறவு கொண்டபின் குற்றவுணர்ச்சி கொண்டிருக்கவும் இல்லை. குடும்பத்திற்கு வெளியிலான உறவுகளில் மற்றவர்களுக்கு தெரிந்து யாரும் கேள்வி கேட்காதவரை மனிதர்கள் குற்ற உணர்வற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். குற்றவுணர்வோடு ஒரு மனிதனால் ஒருபோதும் உறவு வைத்துக் கொள்ள முடியாது. இந்தக் கதை முழுக்க இப்படியொரு உறவு இருப்பதற்காக அவளோ அவனோ எங்கும் மனம் நோவதாக இல்லை. ஒரு கதை சொல்லியின் ஆழ்மனம் வழமையான பிடிமானங்களில் இருந்து விடுபட்டு முற்றிலும் யதார்த்தமானதொரு அறத்தை முன் வைத்திருப்பது முக்கியமானது.


சவிதாவை நினைத்தபடியே விரகத்தில் மூழ்கிப்போன அவன் திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திடுக்கிடுகிறான். ‘யாரது?’ என கோவமாகக் கேட்கிறான். ‘நாந்தாம்ப்பா தீபக்?’ என்கிறது குரல். ‘தீபக்னா யாரு?” மேலும் எரிச்சலுறுகிறான். ‘உங்க ஒரே மகன் தீபக் ப்பா. எனக்கு அவசரமா பாத் ரூம் போகனும்ப்பா.’ என்று சொல்லியும் கூட அவன் சமாதானமாகவில்லை. பூபென் கக்காரின் ஓவியங்களிலும், கதைகளிலும் இந்த தந்தை மகன் உறவு முரண்கள் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன. கழிவறையின் கதவு திறக்கப்படும் போது மகன் தந்தையின் விரைத்த குறியைப் பார்க்கிறான். பிறகு கழிவறையில் அமரும் போது தந்தையின் விரைத்த குறியோடு தனது சின்னஞ் சிறிய குறியை ஒப்பிட்டுப் பார்க்கிறான். இந்த சித்திரம் பாலியலை ஆண் பெண் அல்லது கணவன் மனைவி என்ற நிலையிலிருந்து சடாரென களைத்துப் போடுகிறது. இவ்விடத்தில் மறுபடியும் கழுதையின் மீது பயணிக்கும் இரண்டு ஆண்களின் ஓவியம் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.


அடுத்த நாள் காலை சவிதா அவசரமாக அந்த சோப்பைக் கேட்டுப் போக சரிதா அது முழுவதுமாக கரைந்து போய்விட்டதென்கிறாள். தன் கணவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாத குழப்பத்தோடு சவிதா வருகிறாள். சோப்பை பாவிக்கும் ஆர்வத்தோடு தூங்கி எழும் ஜீவன் லால் குளியலறையில் போரன் சோப் இல்லாமல் அதற்குப் பதிலாக ஹமாம் சோப் இருப்பதைக் கண்டு எரிச்சலடைகிறான். சவிதாவை அழைத்து சத்தம் போட, அவள் தன் கணவனின் எச்சரிக்கையையும் மீறி சரிதாவிடம் கொடுத்ததையும் அது கரைந்து போனதையும் சொல்கிறாள். ’அந்த சோப்பை அவர்கள் தராவிட்டால் அந்த வீட்டிலுள்ள எல்லோரையும் சுட்டுக் கொல்வேன்’ என துப்பாக்கியோடு ஜீவன் லால் கிளம்ப, அவனுக்கு முன்பாக சவிதா தோழியின் வீட்டை நோக்கி ஓடுகிறாள். சரிதாவின் வீட்டில் அவள் கணவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, துப்பாக்கியோடு வரும் ஜீவன் லால் ஒரு வேடிக்கையாக மாறத் துவங்குகிறான். ஒரு புறம் ஆக்ரோஷமான அவன் முகமும் இன்னொரு புறம் வாசலில் கட்டப்பட்டிருக்கும் சரிதாவின் நாய் அவனைக் கடிக்கத் துரத்துவதுமாய் அந்த நிகழ்வுகள் ஒரு அரங்கத்தின் காட்சியை நம் கண் முன்னால் கொண்டு வருகிறது. அத்தனை கோவத்திலிருந்தவனை சரிதா சமாதானம் செய்து சாப்பிட அழைக்கையில் ஜீவன் லால் அவள் அங்கங்களைப் பார்க்கிறான். அவள் நடந்து கொள்ளும் விதம் இவனைத் தூண்டுவதாக இருப்பதோடு ‘இரண்டு பூரிகளாவது நீங்கள் சாப்பிட வேண்டுமென சொல்வதை அவளது மார்புகளைத்தான் சொல்கிறாளோ என நினைத்துக் கொள்கிறான். கரைந்து போன சோப்பைத் திரும்பப் பெற முடியாத ஏமாற்றத்தில் இரண்டு பூரிகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்புகிறவனை சவிதா சமாதானப்படுத்தும் இடம், மென்னுணர்வுகளைக் கொண்டு போலியாக எவ்வாறு ஆறுதல் படுத்த முடியும் என்கிற பகடியைக் காட்டுகிறது.


வெவ்வேறு கோடுகளில் பயணிக்கும் இந்தக் கதை அதுவரையிலும் நமது பொதுப்புத்தியின் யதார்த்தத்திற்குள் வருவதாக இருக்க, இந்த இடத்தில் தன் தவறை உணர்ந்து ஜீவன் லால் செய்யும் காரியத்திலிருந்து வேறு இடத்திற்கு நகர்கிறது. ‘ஒரு சோப்பிற்காக அவர்களைக் கொலை செய்ய நினைத்தது எவ்வளவு பெரிய பாவம் என் மனம் இன்னும் சமாதானமாகவில்லை என்கிறான். ‘ஒரு டம்ளர் சூடான பால் உங்களை ஒருவேளை சமாதானப்படுத்தக் கூடுமென சவிதா சொல்ல எரிச்சலாகிறவன் செய்த பாவத்திற்கு பிராய்ச்சித்தமாகவும் சோப்பின் மீதிருந்த ஆசை முற்றிலுமாக ஒழியும் வரையிலும் இனி நான்கு கால்களில் தான் நடப்பேன் என சபதமெடுக்கிறான். எங்கு சென்றாலும் நான்கு கால்களில் செல்லும் அந்த மனிதனை எல்லோரும் வினோதமாக பார்க்கத் துவங்குகிறார்கள். ஒரு திருமண நிகழ்விற்குச் செல்கிறவன் சாப்பாட்டிற்காக செல்லும் போது அந்தப் பகுதியிலிருக்கும் நாய்கள் அவன் தங்களில் ஒரு ஆள் என நினைத்து அவனோடு போட்டிக்கு வந்து நிற்கின்றன. ஜீவன் லாலும் விடுவதாக இல்லை. நாய்களோடு சரிக்கு சரியாய் சண்டை போடுகிறான். மண்டபத்தில் இருப்பவர்கள் இதை ஒரு கேலிக்கூத்தாக பார்த்ததைக் கூட அவன் பொருட்படுத்தாத போதும் நடந்த கலவரத்தில் அவனுக்கு காயங்கள் ஏற்படுகிறன. மனம் திருந்துவதில் கூட ஏராளமான தடங்கல்கள் இருப்பதை உணர்ந்த ஜீவன் லால் வருத்தத்தோடு உறங்க முடியாமல் தவிக்கிறான்.


அடுத்தநாள் காலை நகரிலிருக்கும் பூங்காவிற்கு நடை பயிற்சிகாக தன் நான்கு கால்களில் செல்லும் ஜீவன் சோகமான முகத்தோடு ஒரு சாது அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான். சாதுவும் அவனும் உரையாடும் இந்த இடம் நமது தொல் கதைகளை நினைவுபடுத்துவதாய் இருக்கின்றன. ’கடவுளப் பாத்திங்களா சாது மகாராஜா? என அவன் கேட்பதற்கு, சாது ‘அவரைப் பார்த்துவிடுவதற்கான மன ஓர்மையை நெருங்கிவிட்டிருந்தேன். ஆனால் அந்த நேரத்தில் அம்மாவின் நினைவும் அவள் செய்யும் மோர்க்குழம்பின் நினைவும் வந்துவிட்டது. எவ்வளவு முயன்றும் என்னால் அந்த நினைவிலிருந்து மீளமுடியவில்லை. மோர்க்குழம்பிற்காக கடவுளைக் காணும் தன் தவத்தையும் விடுத்து மீண்டும் ஊருக்கே வந்துவிட்டேன் என அழுதபடி சொல்கிறார். மனிதன் தன் ஆசைகளை ஒருபோதும் வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொள்ளும் ஜீவன் லால் நடந்த சம்பவங்களுக்காக இனியும் மனம் வருந்தத் தேவையில்லை என உணர்ந்து இரண்டு கால்களில் நடக்கத் துவங்குகிறான். பை நிறைய போரான் சோப்புகளை வாங்கிக் கொண்டு உற்சாகமாக வீட்டிற்குத் திரும்புகிறான். மீண்டும் இரண்டு கால்களில் நடக்கத் துவங்கிவிட்ட தன் கணவனைக் கண்டு சவிதா நிம்மதியடைகிறாள். ஒரு மாத காலம் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டதோடு, ஐயாயிரம் ரூபாய் கடனும் வாங்கியதாகச் சொல்கிறவன் அத்தனைக் காசிற்கும் தான் வாங்கியிருக்கும் சோப்பை மொத்தமாகக் கொட்டுகிறான். இருவரும் அந்த சோப்புகளை ஒரு ரயில் வண்டிபோல் அடுக்கி விளையாடுகிறார்கள் என்பதோடு கதை முடிகிறது.


”எந்தவொரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை என்கிறார் விர்ஜினியா வுல்ஃப். ஒன்று அகப்பார்வை, அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. இரண்டாவது கற்பனை. படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு. இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். மூன்றாவது கற்றல். எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ அறிவுத் தொகுப்பாகவோ, உண்மையாகவோ, வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்கலாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.” இந்த மூன்று நிலைகளில் இருந்தும் நாம் இந்தக் கதையை அணுகலாம். இந்தக் கதை எழுதப்பட்ட காலகட்டம் வேறானதாக இருந்தாலும் இன்றைக்கும் நமது வாழ்வோடு பொருந்திப் போகக்கூடிய ஒற்றுமைகள் உண்டு. தனித்துவமான எல்லாக் கதைகளும் காலம் கடந்து மனித வாழ்வின் அறத்தையே பேசுகின்றன. அரேபிய இரவுகளின் கதைகள் இன்றளவும் இளமையோடு இருப்பதற்குக் காரணம் அது மனித மனங்களை ஆழமாய் பிரதிபலிப்பதுதான். நாம் எதற்காகவெல்லாம் கிளர்ச்சியடைந்திருக்கிறோம், எதற்காகவெல்லாம் குற்றவுணர்வு கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்துப் பார்த்தால் பல சமயங்களில் வேடிக்கையாக இருக்கும். ஆனால் அவையெல்லாம் இயல்பான உணர்ச்சிகள் என்னும் பார்வையைத்தான் இந்தக் கதையும் சொல்கிறது.


அடுத்ததாக கற்பனை, கார்ட்டூன் படங்களில் வரும் கதாப்பாத்திரங்களை ஒத்த செயல்களை இந்தக் கதையின் கதாப்பாத்திரங்களிடம் நாம் காண முடியும். ஒரு கதையின் போக்கையும் அடர்த்தியையும் வளப்படுத்துவதில் கதாப்பாத்திரங்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. அந்தக் கதாப்பாத்திரம் மனிதனாகவோ, விலங்காகவோ அல்லது அசைவற்ற பொருளாகவோ இருக்கலாம். ஆனால் அந்தக் கதாப்பாத்திரத்தின் இயல்பை மிகத் தெளிவாக சொல்ல வேண்டியது அவசியம். இந்தக் கதையில் வரும் சோப் ஒரு பொருள். ஆனால் இந்தக் கதையின் எல்லா விளைவுகளுக்கும் காரணமாக இருப்பது அதுதான். மற்றமையை பிரதானப்படுத்தி எழுதப்பட்ட கதைகளில் இது முக்கியமானது. சவிதா, சரிதா, ஜீவன், மணி லால் , போரான் சோப் என தனது எல்லா பாத்திரங்களுக்குமான இயல்புகளை கக்கரால் எளிதாக கொண்டு வரமுடிந்திருக்கிறது. சவிதாவும் மணி லாலும் உறவு கொள்ளும் போது பின்னனியில் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் விவசாய நிகழ்ச்சி உடலுறவுக் காட்சிகள் குறித்து வழமையான சித்திரத்தை விலக்கி கேலியான புதிய பிம்பங்களைத் தருகிறது.

அடுத்ததாக கற்றல். இந்தக் கதை ஒரு வாசகனிடம் மிக முக்கியமாகக் கோருவது அதைத்தான். வாழ்வின் மீதான பொதுமைப்படுத்தப்பட்ட அறத்திலிருந்து வெளியேறி மனித இயல்புகளை கவனிக்கவும் அப்படியே ஏற்றுக் கொண்டு வாழவும் வலியுறுத்துகிறது. ஜீவன் லால் மனம் திருந்தும் வரை நான்கு கால்களில் தான் நடப்பேன் என சத்தியம் செய்வது, குற்றவுணர்ச்சிகளின் பொருட்டு நாம் மறைமுகமாகச் செய்யும் கோமாளித்தனங்களில் சின்னதொரு உதாரணம் . பூபென் இந்த இடத்தில் “நான்கு கால் ஜீவராசிகளின் உலகம் இரண்டு கால் ஜீவிராசிகளின் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதென நினைத்தான். உங்களது தலை தாழ்ந்திருக்கும் போது, தூசு, சேறு, கண்ணாடிச் சில், சாக்கடைக் கழிவுகள் மூக்குத் துவாரங்களை அடைத்துவிடுகின்றன. பசுஞ்சாணி, ஆட்டுப்புழுக்கை, நாய்ப் பீ போன்றவற்றை கடந்து செல்லும் போது முட்டிகள் கழிவுப் பொருட்களால் தேய்ந்துபோய்விடுகின்றன.” என்று எழுதுகிறார். அதீத உணர்ச்சிகளை முன்னிலைப்படுத்தும் படைப்புகள் மனிதர்களிடம் போலித்தனமான கண்ணீரையும் சோகத்தையும் கோருவதோடு அவர்களை ஏதோவொரு வகையில் சிந்திக்க லாயக்கற்றவர்களாக்கி முட்டாளாக்குகின்றன. கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த எழுத்தாளர் Luis Negron. “I think that melodrama is a safe way of suffering, because your suffering is a fake. That’s why I like melodarama.” என ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். புபென் கேலி செய்வதும் இந்த வகையான மெலோ ட்ராமா உணர்வுகளைத்தான். ’மனிதன் தன் ஆசைகளை ஒருபோதும் வெல்ல முடியாது’ என்கிற உண்மை காலம் காலமாக நமது கதைகளில் சொல்லப்பட்டு வந்தாலும் அது ஒவ்வொரு காலத்திலும் புதிய அனுபவத்தைத் தரக்கூடியதாகத்தான் இருக்கிறது. ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா நாவலில் வரும் நாயகனும் சம்சாரா என்னும் திபெத்திய படத்தில் வரும் நாயகனும் ஞானத்தைத் தேடிச் சென்றவர்கள் தான் என்றாலும் தங்களின் ஆசைகளை கடந்து செல்ல முடியாதவர்கள். உலகின் மீதான பற்றென்பது வாழ்வின் மீதான விருப்பம். இச்சைகளே இல்லை என்று சொல்கிறவர்கள் தன்னையும் இந்த உலகையும் ஒருசேர ஏமாற்றுகிறவர்களாய் இருக்கிறார்கள். சம்சாரா என்னும் அந்தப் படத்தில் துறவறத்தின் கடுமையான பயிற்சிகளுக்குப் பழக்கப்பட்டவன் நாயகன். திருவிழாவில் ஒரு பெண் தன் குழந்தைக்கு பாலூட்டுவதைக் கண்டு சலனமுறுகிறான். அந்த சில நிமிட இச்சை அத்தனை கால துறவற வாழ்வை மீறி வெளிவருகிறதென்றால் அதுதான் மனித மனம்.

பூபெனின் ஓவியங்கள் கதைகளில் பாலியல் மிகுந்திருப்பதாக சொல்லப்படுவதுண்டு. பொதுப்புத்திக்கு பழக்கப்பட்டவர்கள் தன்னைப்போலவே யாரும் அதை மீறக்கூடாதென்றுதான் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் அவர்களைப் போல் இல்லாத எவர் ஒருவரைக் கண்டும் அவர்கள் அச்சமுறுகிறார்கள். குறிப்பாக கலைஞர்களாக இருக்கிற பட்சத்தில் அந்த சமூகத்தின் அச்சமானது அச்சமூகத்தை இயக்கும் அதிகாரத்தின் அச்சம். ‘பாதுகாப்பு என்ற சொல்லை நீங்கள் அனைவரும் வெறுக்க வேண்டும். கல்வியில் திருமணத்தில் பயணத்தில் வேலையில் அக்கம் பக்கத்தில் சுற்றுலாவில் எங்கிருந்தாலும் நாம் உள்ளிருந்து பாதுகாப்புக்கான தேவையிலிருக்கிறோம். நாம் முன்பே அறிந்த மக்களுக்கும் இடத்திற்கும் பாதுகாப்பு கோருகிறொம். நமக்கு நன்கு அறிமுகமானவர்களிடம் பாதுகாப்புக் கிடைக்கிறது. அறியாதவர்கள் மத்தியில் ரயிலில் தெருவில் வகுப்பறையில் இருக்கும் கணத்தில் சஞ்சலம் அடைகிறோம் சங்கடப்படுகிறோம்.’ என்று தனது உரையொன்றில் பூபென் குறிப்பிட்டதையே அவரை அணுகுவதற்கான மந்திரச் சொற்களாக பார்க்கிறேன்.

16 views

留言


bottom of page