top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

டெய்ஸி(painting courtesy - jose maria ferreia )


முன்னெப்போதும் இல்லாதபடி வஞ்சித்திருந்தது இந்தக் கோடை. நினைவின் சரிந்த ஆகாயமெங்கும் டெய்ஸியின் புன்னகைகள் நிரம்பியிருந்தன. வேறு எந்த ஆணிடமும் பகிர்ந்து கொள்ளாத தனித்துவமானதொரு புன்னகை, முதலும் முடிவுமாய் அவள் பகிர்ந்து கொண்டிருந்தது இவனிடம் மட்டுந்தான். தேவா இப்பொழுது இறக்கைகள் துண்டிக்கப்பட்ட பறவையென கிடக்கிறான். அவனது சந்தோசத்தின் எல்லா தடயங்களையும் அழிக்கிறவிதமாய் டெய்ஸி நீங்கிப் போயிருந்தாள். கொஞ்சமே கொஞ்சமாய் சேமித்து வைத்திருந்த வாழ்வின் மீதான நம்பிக்கையையும் சந்தோசங்களையும் அவள் எடுத்துப் போகுமளவிற்கு தான் என்ன செய்துவிட்டோம் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. துவக்கத்தில் அவளிடம் பகிர்ந்து கொள்ள நினைத்த எளிய அன்பு ஒரு உரமேறிய மரமென இப்பொழுது வளர்ந்திருக்கிறது. அவளே அவனின் மீட்பர். தேவாவின் உடல் முழுக்க வேர் பிடித்து வளர்ந்திருந்த எல்லா வன்மங்களும் அரக்கத்தனமும் அவளின் புன்னகையின் வழிதான் கரைந்து போயிருந்தது.


நேசிக்கப் பட முடியாத மனிதரென ஒருவர் இருக்க முடியுமா? தேவாவுக்கு டெய்ஸியின் மீது இருந்த நேசத்தை விடவும் ஆயிரம் மடங்கு அதிகமான நேசம் டெய்ஸிக்கு ஜீசஸின் மேல் இருந்தது. தன்னோடு அவளை பிணைய விடாது செய்யும் ஜீசஸை சபித்தான். துரதிர்ஸ்டவசமாய் அவனால் சபிக்க மட்டுமே முடிந்தது.

சில மாதங்களுக்கு முன் ஒரு மாலை நேரத்தில் குட்டியானை வண்டியில் கொஞ்சம் பொருட்களோடு கன்னியாஸ்திரிகள் சிலர் அந்த வீதியிலிருந்த ஒரு வீட்டிற்கு குடிவந்தனர். புனிதமேரியே தன் சகாக்களோடு அங்கு வந்திருப்பதைப் போன்ற ஆர்வத்தில் தெருவாசிகள் அத்தனை பேரும் சந்தோசமாய் அவர்களைப் பார்த்தார்கள். தேவாவும் அவன் நண்பர்களும் பொருட்களை வீட்டிற்குள் எடுத்து வைக்க உதவினார்கள். எல்லோருக்கும் மூத்தவளாய் இருந்த சிஸ்டர் இவர்களுக்கு பற்கள் தெரியாத புன்னகையையும், தேவனின் வருகையை அறிவிக்கும் கொஞ்சம் துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்தாள். கூடுதலாய் சர்க்கரை குறைவான தேநீரையும் தந்து அனுப்பினாள். கன்னியாஸ்திரிகள் அத்தனை பேரின் முகமும் ஒரே மாதிரியானதாய் இருப்பதைப் பார்த்து நண்பர்கள் தங்களுக்குள்ளாக குசு குசுத்துக் கொண்டார்கள். ‘இவர்கள் ஏன் எப்பொழுதும் மற்றவர்களுக்காக பிரார்த்திக்கிறார்கள்? தன்னைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் எப்போதும் பிறர் நலன் குறித்து யோசிக்கும் மனிதர்கள் இருக்க முடியுமா?’ மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும் யாரோ ஒருவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தான். சுவர் மறைவிலிருந்து அவ்வப்பொழுது இளம் கன்னியாஸ்திரிகளின் கண்கள் மட்டும் எட்டிப் பார்த்துவிட்டு போனபடி இருக்க அங்கு உட்கார்ந்திருப்பதில் அந்த இளைஞர்களுக்கு மெல்லிய கூச்சமெழுந்தது. கிளம்பலாம் என்பதை யார் சொல்வதென்கிற எண்ணத்துடன் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை பார்த்துக் கொண்டனர்.


“என்னப்பா நீங்களா பேசிக்கிறீங்க?...”


என பெரிய சிஸ்டர் அவனைப் பார்த்து சிரித்தாள். தேவா, பதிலுக்கு சிரித்துவிட்டு “இல்ல சிஸ்டர் நீங்க எல்லாம் கூடப் பொறந்தவங்களா? எல்லோரும் ஒரே மாதிரி இருக்கீங்க…”

பெரிய சிஸ்டருக்கு அந்தக் கேள்வியில் எதும் உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. மெலிதாக சிரித்தாள்.


“அப்படியெல்லாம் இல்லப்பா, தேவனுக்கு ஊழியம் பன்ற எல்லாருக்கும் ஒரே ஆன்மா, ஒரே முகம் அவ்வளவுதான்…”


தேவாவுக்கு அவள் சொன்னதின் அர்த்தம் புரியவில்லை. தேநீருக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். துண்டறிக்கைகளில் இருந்த வாசகங்கள் பெரிதாக அவர்களை ஈர்த்திருக்காத போதிலும் தங்களின் பாவங்களை எல்லாம் சுமந்து செல்ல என்றாவது ஒருநாள் இயேசு வருவார் என்கிற நம்பிக்கைப் பிடித்துப் போயிருந்தது.

நான்கு அண்ணன்களுக்கும் ஒரு அக்காவுக்கும் அடுத்ததாக பிறந்த தேவாவுக்கு வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம் எதுவும் இருந்திருக்கவில்லை. அந்த வீதியின் எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொள்வது மட்டுமே அவனின் பிரதான வேலை. ஒவ்வொரு ஜன்னல்களுக்கும் பின்வாசல் கதவுக்கும் பின்னாலிருக்கும் ரகசியங்களைப் போலவே அவனுக்கும் சின்னதொரு ரகசியமிருந்தது. ஆளற்ற பிற்பகல் வேலைகளில் பின்வாசல் கதவருகில் எப்பொழுதும் மது இவனுக்காக காத்திருப்பாள். கணவனும் குழந்தைகளும் திரும்பி வரும் நேரத்திற்கிடையில் அவள் கண்டுபிடித்த தனித்த உலகமிது. தேவாவுக்கு வெக்கை பிடிக்கும். உடலின் அசாத்தியமான வெக்கைகளை அவன் திறந்து ஒவ்வொரு முறையும் ஆழமாய் ருசித்துவிட்டுத் திரும்புகையில் அவள் மலர்ந்த வனமாகி இருப்பாள். வேறு யாருக்குமே தெரிந்திருக்காத அந்த ரகசியத்தை ஒரு பிற்பகலில் டெய்ஸி தெரிந்து கொண்டதில் இருந்துதான் இவனுக்கு அவளின் மீது தனித்த கவனம் வந்தது. இதைக் குறித்த எந்தவிதமான கேள்விகளையும் இவனிடமோ மதுவிடமோ அவள் கேட்டிருக்கவில்லை, ஆனால் இவன் எதிரில் படும் சமயங்களில் அவனது கண்களை மட்டும் ஆழமாய்ப் பார்த்துவிட்டுப் போக அவள் தவறவில்லை. ஆயிரம் குறுங் கத்திகளால் உடலை அறுப்பது போலிருக்கும் அந்தப் பார்வை.


“அவங்க சும்மா பழக்கந்தான், நீங்க தப்பா எதும் எடுத்துக்காதிங்க…”

அவனாகவே அவளிடம் ஒருநாள் சொன்னான்.

“நான் எதுவுமே உங்ககிட்ட கேட்கலையே?...”

அவள் அவனோடு பேச விரும்பாதவளாய் கடந்து போக நினைத்தாள்.

“நேரடியா சொல்லல, ஆனா நீங்க பாக்கற பார்வைல ஒரு உக்ரம் இருக்கு என்னால அத எதிர்கொள்ள முடியல…”


அவளின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து தலையைக் குனிந்திருந்தான். “நான் எதையுமே பாக்கல, யாரையும் தப்பா நினைக்கல. நீங்களா எதையாவது நெனச்சு குழப்பிக்காதீங்க..”


வேகமாய் அங்கிருந்து நகர்ந்து போனாள். அவளைப் பொறுத்தவரை தேவா அவளுக்குத் தெரிந்த மிகச் சில ஆண்களில் ஒருவன். அவன் அவள் போவதையே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். டெய்ஸி தன்னை எல்லா வசீகரங்களுக்கும் அப்பாற்பட்டவளாகவே வைத்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் கண்ணுக்குப் புலனாகாத வண்ணங்களுக்கு எப்போதும் ஒரு தனித்துவம் இருக்குமே, அவள் அப்படியானதொரு வண்ணத்திற்கான வசீகரத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.


சிஸ்டர்கள் தங்கியிருந்த வீட்டில் யாரும் அழைக்காமலேயே தெரு நாய் ஒன்று அடைக்கலம் புகுந்திருந்தது. டெய்ஸி அதற்கு டைசன் என பெயரிட்டிருந்தாள். முன்பு அவளுக்கு குத்துச் சண்டையின் மீது பெரும் ஆர்வமிருந்த நாட்களில் டைசன் அவளுக்கு விருப்பமான குத்துச்சண்டைக்காரன். எதிராளியை சிதறடிக்கிற அவன் கண்களில் இருக்கும் தீவிரம் அலாதியானது.. ஒவ்வொரு குத்துக்கும் அவன் எடுத்துக் கொள்ளும் இடைவெளியும் நிதானமும் அவனின் தனித்துவம். தொலைக் காட்சியில் உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஷிஃப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த நாளில் தான் அவள் பூப்பெய்தி இருந்தாள். இரண்டு உடல்கள் சண்டையிடுவதை விரும்பிப் பார்ப்பது கூட ஒருவிதமான காமம் தானோ? அவள் அப்படியான ஒரு கணத்தில் பூப்பெய்தியதற்காக குற்றவுணர்வு கொண்டாள். பின் தொலைக்காட்சி பார்ப்பதை என்றென்றைக்குமாய் நிறுத்திவிட்டாள். அவளுக்குப் பரிட்சமயமான ஆண்களின் பெயர்களில் அந்தப் பெயர் பிடித்திருந்ததாலேயே அதை அந்த நாய்க்குட்டிக்கும் வைத்தாள். மழை வரும் நாட்களில் மட்டுமே குளிக்கப் பழகி இருந்த டைசனுக்கு அவள் தன்னை இரண்டு நாளுக்கு ஒரு முறை குளிப்பாட்டியது நம்ப முடியாத ஆச்சர்யம். டைசன் அவளின் அந்தரங்க மெய்க்காப்பாளன் போல் எப்போதும் கூடவே சுற்றியது.


எல்லா உயிர்களுக்குமான ஆதி குணம் அதன் ஆன்மாவில் எங்கோ ஒரு மூலையில் உறங்கியபடிதான் கிடக்கிறது. டைசனுக்குள் உறங்கிக் கிடந்த போர்க்குணம் ஒருநாள் டெய்ஸியைப் பார்த்துக் குரைத்த இன்னொரு தெருநாயிடம் வெளிப்பட்டது. அன்று இரண்டு நாய்களுக்கும் கடுமையான சண்டை. டைசனின் மூர்க்கத்தைப் பார்த்து அவள் ஸ்தம்பித்துப் போனாள்.

“டைசன் சண்ட போடாத, வா…”

அவள் எவ்வளவு கத்தியும் அது திரும்பிப் பார்க்கவில்லை. அந்த வீதியின் இன்னொரு முனையில் குட்டிச் சுவற்றில் உட்கார்ந்திருந்த தேவாதான் ஓடி வந்தான். டைசனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த நாயை அடித்துத் துரத்த கல்லை எறிந்தான்.

”நாய அடிக்காம துரத்துங்க. ப்ளீஸ்…”

பின்னால் இருந்து டெய்ஸி கத்தினாள்.

“சிஸ்டர், சொன்ன உடனே போகுற நாயா அது..? அடிச்சாதான் ஓடும்…” ஒரு பெரிய கல்லைத் தூக்கி எதிர் நாயின் காலில் போட்டதும் அது அலறியபடியே ஓடியது. டைசன் இன்னும் வெறி அடங்காமல் ஓடிப்போன நாயைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. சண்டையை முடித்துக் கொள்ளும் எத்தனம் அதனிடம் இல்லை.

“ஏய் கத்தாத, சிஸ்டர் கூப்டறாங்கள, போ…” டைசன் அவனையும் பார்த்துக் குரைத்தது. டெய்ஸி, தெருவில் எல்லோரும் தன்னை வேடிக்கை பார்க்கிறார்களோ என்கிற தயக்கத்தில் ”பக்கத்துல போகாதீங்க கடிச்சிடப் போகுது. அதுவா வீடு வந்து சேரட்டும். நான் போறேன்.” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக நடந்தாள். வியர்த்துக் கொட்டியது. அவசரத்தில் அவனுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டோமே எனத் தயக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள், அவன் இவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வை இயல்பாயில்லை. மதுவின் வீட்டிலிருந்து வரும்பொழுது அவன் கண்களில் இருந்த உணர்வின் இன்னொரு வடிவம் தான் தன்னைப் பார்க்கும் போதும் அவனிடம் இருப்பதாக நினைத்தாள். அப்படி நினைத்தபோதே மெல்லிய அச்சத்தில் ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன. அதென்ன அச்சமா? இல்லை வேறுவிதமான உணர்வா?( painting courtesy - andrea ortuno )

சில நாட்களுக்குப்பின் டைசனின் வாயில் இருந்து அடிக்கடி கோழை வழிந்தபடியே இருக்க, அது வெறி கொண்டு குரைத்தபடியே இருந்தது. டெய்ஸியுடன் இருந்தவர்கள் அதற்கு வெறி பிடித்துவிட்டதால் துரத்திவிடச் சொன்னார்கள்.

“இந்த நாய் இங்க இருந்தா பிரச்சன டெய்ஸி, குட்டிப் பசங்க வர்ற இடம். யாரையாவது கடிச்சு எதாச்சும் ஆகிடுச்சுன்னா பிரச்சனை ஆகிடும். துரத்தி விடு….” பெரிய சிஸ்டர் கொஞ்சம் கடுமையாகவே சொன்னாள். டெய்ஸிக்குத்தான் மனசில்லை.

“இல்ல சிஸ்டர் ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிட்டுப் போயி ஊசி போட்டா சரியாகிடும்…” அவள் சமாதானங்களை அங்கு யாரும் கேட்பதாய் இல்லை. நாய் பிடிக்கிறவர்கள் வந்து அந்த நாயைப் பிடித்துக் கொண்டு போன நாளில் டெய்சிக்கு எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. இரவு உறங்குவதற்கு முன்பான பிரார்த்தனை முடிந்து வெளியே வந்தவள் அமைதியாகக் கிடந்த தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள். டைசனின் நினைவு. இத்தனை வேகமாய் அந்த ஜீவன் தன்னை விட்டுப் போகுமென்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. இன்னொரு புறம் தான் ஏன் இன்னொரு உயிரின் மீது இத்தனை விருப்பம் கொண்டு இருக்கிறேன்? நான் சராசரிப் பெண்களைப் போல் மாறிக் கொண்டிருக்கிறேனோ என அச்சம் கொண்டாள். தெரு முனையில் தேவாவும் அவன் நண்பர்களும் சோடியம் விளக்கு வெளிச்சத்தில் கேரம் ஆடிக் கொண்டிருந்தார்கள். சமீப நாட்களாய் அவன் பார்வை சூசகமாய் தன்னிடம் எதையோ உணர்த்த விரும்புவதை இவளும் கவனித்து இருந்தாள். இவள் வீட்டிலிருந்து வெளியேறிப் போகிற நேரமும் திரும்பி வருகிற நேரமும் அவனுக்கு சரியாகத் தெரிந்து இருந்தது.


இதற்கு முன் அவளை யாரும் இத்தனை பொருட்படுத்தி இருக்கவில்லை. தேவா அவள் நிழல் போல் எப்போதும் பின் தொடர்ந்தான். தன்னிடம் என்ன இருக்கிறதென இப்படி வருகிறான்? நீண்ட காலத்திற்குப் பின் அவளுக்கு சமீபமாய் கண்ணாடி பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. கட்டுப்படுத்திக் கொண்டாள். அவன் கண்களில் தெரிந்த மலர்ச்சியின் வழி தன்னைப் பார்த்துக் கொள்ள முடியுமென நம்பினாள். சமயங்களில் அவள் வீடு திரும்புகையில் அவன் இல்லாமல் போனால் கண்கள் தானாகவே அவனைத் தேடியது. தன்னிடம் ஏற்ப்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை மற்றவர்கள் கவனித்துவிடாமல் இருக்க ரொம்பவே பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. தனக்கு வெட்கப்படத் தெரியுமென்பதை ஒவ்வொரு முறையும் அவன் கண்கள் அவளுக்கு உணர்த்தியதில் அவனுக்கும் தனக்கும் இடையில் இருப்பது என்ன என்கிற சந்தேகம் வந்தது.


ஒரு ஞாயிற்றுக் கிழமை பிற்பகல், காலை நேரத்தின் பிரார்த்தனை முடிந்து சர்ச் நீண்ட அமைதியில் இருந்தது. அந்தப் பகுதியில் இருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொஞ்சம் பழைய உடைகளை சேகரித்து வைத்திருந்தார்கள், அதை எடுத்துச் செல்வதற்காக அவள் மட்டும் அங்கிருந்தாள். உதவிக்கு யாராவது வேண்டுமே என யோசித்தபடி பிரார்த்தனைக் கூடத்திற்கு வந்தாள். கடைசி இருக்கையில் தேவா உட்கார்ந்திருந்தான். அவ்வளவு நேரமும் தனியாகத்தான் இருக்கிறோம் என்பது பொய்யாகி அவனைப் பார்த்ததும் உடல் வியர்த்தது. தன்னுடல் எங்கும் கண்கள் மீன்களாகி நீந்துவதாகத் தோன்ற, உடலில் விநோதமானதொரு குறுகுறுப்பை உணர்ந்தாள். அவன் கண்களின் வழியாய் அவன் கடந்து வந்த பெண்களின் உடல்களை எல்லாம் ஒரு நொடி நினைத்துக் கொண்டாள். ஆனால் எந்தச் சலனமும் இல்லாமல் இவளைப் பார்த்தவனின் கண்களில் கோரிக்கைகளோ, நிர்ப்பந்தங்களோ இல்லை. டெய்சி மூச்சு விட சிரமப்பட்டாள். அங்கிருந்து போய்விடுவதா அல்லது நிற்பதா எனத் தெரியாமல் குழம்பினாள். அவனுடன் இதற்கும் மேல் மெளன யுத்தம் நடத்திக் கொண்டிருக்க முடியாது


“ஒரு நிமிசம் இங்க வாங்க….” தேவா இயல்பாக எழுந்து வந்தான்.

“சொல்லுங்க சிஸ்டர் என்ன செய்யனும்?...”

தேவா அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

“டெய்சின்னே கூப்டுங்க. நான் உங்கள விட வயசுல சின்னவதான்…”

தான் தான் பேசுகிறோமா என அவளுக்கு சந்தேகம். தேவா சிரித்துக் கொண்டான்.

“கொஞ்சம் துணி இருக்கு, பக்கத்துல இருக்க ஆஃபனேஜுக்கு எடுத்துட்டுப் போகனும், ஹெஃல்ப் பன்றீங்களா?...”


அவன் சரியெனத் தலையாட்டினான். துணிகள் சிதறிக் கிடந்த அந்த சின்ன அறையில் அவர்கள் இருவரும் எதிரெதிராய் உட்கார ஜன்னல் வெளியாய் வந்த மெல்லிய காற்றும் வெளிச்சமும் இப்பொழுது அநாவசியமானதாய் இருந்தது. கைகள் துணிகளை அள்ளிக் கட்டிக் கொண்டிருந்தாலும் தன் கண்களை அவள் மேலிருந்து அவன் நகர்த்தியிருக்கவில்லை. கூரான ஊசிகள் ஆயிரம் ஆயிரமாய் குத்தித் துளைக்கும் பார்வை. மார்பின் இடைவெளியில் வியர்த்துக் கொட்ட, ஆவன் முன்னால் அப்படி உட்காரவும் முடியாமல் வெளியேறிப் போகவும் முடியமாலிருந்தாள்.

“எதுக்கு இப்பிடிப் பாக்கறீங்க?...”

“உங்களப் பாக்கப் பிடிச்சிருக்கு பாக்கறேன்…”

அவன் தயக்கமே இல்லாமல் பேசினான்.

“நீங்க இந்த மாதிரி என்னயப் பாக்கறது தப்பு. ப்ளீஸ். இனிமே இப்பிடிப் பாக்காதீங்க…”

அவள் வார்த்தைகள் தடுமாறினாள்.

“நான் பாக்கறதுனால உங்களுக்கு என்ன பிரச்சன? எதுக்காக டிஸ்டர்ப் ஆகறீங்க. ம்ம்ம்ம். நான் உங்கள சிஸ்டர்னு கூப்டறதக் கூட ஏன் இயல்பா எடுத்துக்க முடியல…”

டெய்ஸிக்கு விரல்கள் நடுங்கின. தன் தூய்மையை இவன் களைத்துப் பார்க்கிறான். எப்படி பதில் சொல்வது?

“இல்ல அந்த மாதிரி இல்ல, பேர் சொல்லிக் கூப்ட சொன்னது இயல்பா நடந்தது. நீங்க அத தப்பா எடுத்துக்கிட்டீங்க. நான் இவ்ளோ வருசம் எப்பிடி இருந்தனோ அப்படியே இருக்கத்தான் விரும்பறேன். நீங்க எனக்கு ஹெஃல்ப் பண்ண வேணாம், இங்க இருந்து போயிடுங்க..”

அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“தயவு செஞ்சு போயிடுங்க…”

அவள் அனுமதி இல்லாமலேயே துணிகளை மூட்டை கட்டிக் கொண்டு வெளியே நடந்தான். அவள் அவனுக்குப் பின்னால் மெளனமாக நடந்தாள். மழையை எதிர்நோக்கியிருந்த அந்தப் பகல் பொழுதில் அவனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து ஆட்டோவில் பயணிப்பது உடலில் இனம் புரியாததொரு சிலிர்ப்பைத் தந்தது. ஏன் இவ்வளவு நேரமாய் அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறோம். அவனும் இதே போல் யோசிப்பானா? அவன் கைகளில் இடைவெளியின்றி அடர்ந்திருந்த மயிர்க்கற்றைகளை அவன் தன் கால்களுக்கு அருகில் கை வைத்திருந்தபோதுதான் கவனித்தாள். வசதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டி தன் கால்களை கொஞ்சமாய் அவள் நகர்த்த அவன் கை இப்பொழுது அவளின் தொடைகளுக்குக் கீழாக இருந்தது. அவன் எடுத்துக் கொள்ளவும் இல்லை, இவள் எடுக்கச் சொல்லவுமில்லை. ஆட்டோ ஒரு திருப்பத்தில் நின்றுகொண்டிருக்க, மது பள்ளி முடிந்து தன் குழந்தையுடன் சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்தாள். ஆட்டோவில் நெருக்கமாய் உட்கார்ந்திருந்த இவர்களைப் பார்த்த நொடி அவள் முகத்தின் உணர்ச்சிகள் மாற, டெய்ஸியின் தொடைக்கடியில் இருந்த தன் கையை இன்னும் அழுத்தமாக அவன் நகர்த்தினான். மது முகத்தை வேறு பக்கமாய்த் திருப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“அவங்களோட இப்போ நீங்க பேசறதில்லையா?”

ஆட்டோவிற்கு வெளியே பார்த்தபடி டெய்ஸி கேட்டாள்.

“பேசறதில்ல…”

“ஏன்?”

“கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கனுமா?”

வேண்டாமென டெய்ஸி தலையாட்டினாள்.

அதன் பிறகு ஆட்டோ மீண்டும் சர்ச்சிற்குத் திரும்பும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆட்டோவை விட்டு இறங்கி பணம் கொடுப்பதற்காக அவன் தன் சட்டைப் பையில் கை விட்ட பொழுது அந்த சின்ன இடைவெளியில் அவன் மார்பில் தன் பெயரை பச்சைக் குத்தியிருப்பதைப் பார்த்தாள். அவனை முறைத்துப் பார்த்தபடியே வேகமாக சர்ச்சுக்குள் நடந்தாள். சர்ச்சுக்குள் போவதா அல்லது திரும்பி வீட்டுக்குப் போவதா என அவனுக்குக் குழப்பம்.

“நான் கெளம்பறேங்க…”

“ஏன் ஏதாச்சும் அவசர வேல இருக்கா? ,நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்…”

அவன் காலியாக கிடந்த பெஞ்சுகளில் ஒன்றில் போய் உட்கார்ந்தான். அவள் அவனுக்கு எதிரில் உட்கார்ந்தாள்.

“நடக்காத ஒரு விசயத்துக்காக நீங்க உங்கள ரொம்ப வருத்திக்கிறீங்க…”

அவன் கண்களைப் பார்க்காமலேயே பேசினாள்.

“உடம்புல பேர பச்சக்குத்திக்கிறது, எப்ப வருவேன் எப்போ போவேன்னு தெருவுலயே நிக்கிறது, இதை எல்லாம் நீங்க வேற பொண்ணுக்காக செய்ங்க…”

அவள் குரலிலிருந்த எந்தவித உணர்ச்சிகளையும் முகம் காட்டாமலிருக்க, அவளை ஊடுருவிப் பார்த்தான். தன்னை வதைக்கும் அவளின் நினைவை அத்தனை எளிதில் தூக்கி எறிந்துவிட முடியுமா? அவள் எதிர்பாராததொரு நொடியில் அவளின் காதுக்கும் கன்னத்திற்கும் இடையில் முத்தமிட்டான். சடாரென எழுந்து கொண்டவளின் கண்கள் கலங்கிப் போயிருந்தது. ஒரு ஆணின் முதல் முத்தம். வேகமாக அங்கிருந்து நகர்ந்து ஓடப் பார்த்தவளின் கைகளை இறுக்கமாகப் பிடித்திருந்தான். அவன் பிடித்திருந்த இடம் அழுத்தத்தால் சிவந்து கொண்டிருக்க இன்னொரு முறை அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அடிக்க கை ஓங்கினாள். முடியவில்லை. அவள் கண்கள் முன்னைவிடவும் அதிகமாக கலங்குவதைப் பார்த்து அவனே கைகளை விட்டான். அவள் துணிகளிருந்த அதே அறைக்கு அவசரமாக ஓடினாள், தப்பு செய்துவிட்டமோ என்கிற குற்றவுணர்ச்சியில் பின்னாலேயே தேவாவும் ஓடினான்.

“டெய்ஸி அழாதிங்க, ப்ளீஸ்…”

சத்தமே வராமல் அழுவது பெண்களால் மட்டுந்தான் முடிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்

“ப்ளீஸ் அழாதீங்க…” இந்த வார்த்தைகளைத் தவிர வேறெதையும் அவனால் சொல்ல முடியவில்லை. அவனிடமிருந்து கைகளைப் பிடுங்கிக் கொண்ட டெய்ஸி அவனை இழுத்து ஆவேசமாய் முத்தமிட்டாள். ஸ்தம்பித்துப்போன தேவா அவள் இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். நிற்க முடியாமல் சரிந்த உடலெங்கும் ஸ்பரிசத்தைப் படரவிட்டவனின் காதுகளுக்குள் சத்தமின்றி கிசுகிசுத்தாள்.

“எனக்குப் பயமா இருக்கு, வேணாம், நான் மது இல்ல…” அவள் அச்சம் அவனை முன்னைவிடவும் ஆவேசங்கொள்ள வைக்க, மூர்க்கமாய் அவள் மீது தன்னைப் பிணைத்தான். கண்கள் இருண்டு எல்லாம் மங்கலாகிப் போவது போலிருந்தாலும் அவன் ஸ்பரிசம் பட்ட உடலெங்கும் புதிதாய் தசை பிறந்திருப்பது போல் புத்துணர்வு கொண்டதை அவள் மட்டுமே அறிவாள். யாரோ ஒருவர் தங்கள் இருவரின் நிர்வாணத்தையும் உற்று நோக்குவது போலிருக்க, அவசரமாக தேவாவை தன்னிலிருந்து விலக்கிவிட்டுப்போய் ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். ஜீசஸ் அப்பாவியாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். தன் நிர்வாணத்தை அவர் பார்த்துவிட்ட அதிர்ச்சியில் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி பிரார்த்தனைக் கூடத்திற்குப் போனாள். சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த ஜீசஸ் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தார். திறந்து கிடந்த அறைக்கு வெளியே டெய்ஸி அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்க தேவா உடைகளை சரிசெய்து கொண்டு வெளியேறிப்போனான்.


அதன் பிறகு சில நாட்கள் எவ்வளவு முயன்றும் அவனால் டெய்ஸியைப் பார்க்க முடியவில்லை. அவள் அங்குதான் இருக்கிறாளா என்றும் சந்தேகம். யாரிடம் கேட்பது? ஜீசஸாவது கருணை கொண்டு அவனிடம் சொல்லலாம். மன்னிக்க முடியாத ஒன்றை தான் செய்துவிட்டதாக நினைத்தான். திடீரென மறைந்த காற்றைப் போல் அவள் விட்டுப் போன வெறுமை அவன் உடலெங்கும் அலைக்கழித்தது. ஒரு வாரத்திற்குப் பின்பாக டெய்ஸி கடலூரில் இருக்கும் சர்ச்சுக்குப் போய்விட்ட விசயம் தெரிந்தது. அவளைப் போய் பார்ப்பதா? வேண்டாமா? அவளை நேசிப்பதும் அவளோடு எப்போதும் இருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்த்தனமா? வன்முறையா? பதில் இல்லாமல் குழம்பினான். என்ன ஆனாலும் அவளைப் பார்த்துதான் ஆக வேண்டும். குறைந்தபட்சம் அவளைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பாவது கேட்டுவிட வேண்டும்.


அந்த அதிகாலையிலேயே பிரார்த்தனைக்காக சர்ச் வாசலில் காத்திருப்பது யார்? டெய்ஸிக்கு அது பழக்கப்பட்ட உருவம் போல் இருக்க தயக்கத்தோடு வெளியே வந்தாள். அவனே தான். அவளுக்கு முகம் ஒரு நொடி கோபமாகி பின் மாறியது.

“இங்க எதுக்கு வந்தீங்க?...”

”பேசனும்…”

“நான் உங்க கிட்ட பேசறதுக்கு ஒன்னும் இல்ல, போங்க..”

“இது வெறுப்பா? பயமா? டெய்ஸி…”

அவள் அவன் கேள்வியின் அர்த்தம் புரியாமல் பார்த்தாள்.

“நான் உன்னோட எப்பவும் இருக்கனும்னு நினைக்கிறத தடுக்கறது எது? நீ வாழ வேண்டிய வாழ்க்க இது இல்ல டெய்ஸி, என்னோட வந்துடு. உனக்கு என்னயப் பிடிக்கலைன்னு மட்டும் பொய் சொல்லாத…”

“இந்த சர்ச்ச விட்டு நான் எங்கயும் போறதா இல்ல. நீங்க டைம் வேஸ்ட் பண்ணாம கெளம்புங்க...”

முன்பு சர்ச்சில் பேசிய டெய்ஸியின் குரல் அல்ல இது. இந்தக் குரலில் சின்னதொரு வெறுப்பு இருந்ததைப் புரிந்து கொண்டான்.

“நீங்க எவ்ளோ காலம் இப்பிடியே நின்னாலும் நான் மாற மாட்டேன்.”

“தன்னத் தானே வருத்தி அதுல சந்தோசப்பட்டுக்கறது உனக்கு புதுசு இல்லையே டெய்ஸி. உனக்கு இந்த வலிதான வேண்டி இருக்கு, சந்தோசமான வாழ்க்கை இல்ல. இல்லாத ஒரு வலிய நீ உருவாக்கி இருக்க…”

உள்ளெழுந்த ரெளத்ரம் அவ்வளவையும் காட்டிக்கொள்ளாதிருக்க சிரமங் கொண்டவள் கண்களில் வெறுப்பு கொப்பளிக்க அவனைப் பார்த்தாள்.

“பேசாம என்னயக் கொன்னுடு. உனக்கும் நிம்மதி எனக்கும் நிம்மதி…”

அவன் ஸ்தம்பித்துப் போனான். அதெப்படி அவளைக் கொல்ல முடியும். அவளைக் கொல்வதென்பது இந்தப் பிரபஞ்சத்தைக் கொல்ல முடிவது போல. அவளே இப்பொழுது அவனது பிரபஞ்சம். அவளிட்ட முத்தங்களும், அவள் நினைவுகளும் அவன் உடலெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. அவளின் முன்னால் மண்டியிட்டு வேண்டினான். திரும்பியே பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டாள். அவனை ஏன் இத்தனைக் காயப்படுத்தினோம்? யாரையுமே காயப்படுத்தக் கூடாதென நினைக்கிறவளுக்கு தான் அதிகம் நேசிக்கும் ஒருவனை காயப்படுத்தி விட்ட வருத்தம். அவன் போவதையே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். முடிந்தவரை மற்றவர்களுக்காக சிலுவை சுமக்க வேண்டுமே தவிர தான் யாருக்கும் சுமையாகி விடக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேல் இத்தனை காலம் தான் வாழ்ந்த தான் நம்பிய ஒன்றை பொய் என அவன் மீதான நேசம் மாற்றிவிடக் கூடாது.


தேவா வீடு திரும்பவில்லை. அவன் டெய்ஸியைத் தேடிப் போனான் என எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எந்தப் பதில்களும் இல்லாமல் போவான் என்பதை ஒருவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் டெய்ஸியை எல்லா இடங்களிலும் தேடி பின்னொரு நா அவள் தன்னோடே இருக்கிறாள் என்கிற நம்பிக்கையோடு கால் போன போக்கில் போனான். எதிர்ப்பட்ட எல்லாவற்றிலும் அவளிருந்தாள். இயற்கையின் எல்லா வடிவங்களிலுமிருந்த அவளை காற்றும் மழையும் வெயிலும் நினைவு படுத்திக் கொண்டிருந்தது. அவள் பிம்பம் தெரிந்த எல்லாவற்றோடும் அவனும் கலந்து போனான்.


198 views

Recent Posts

See All

Fake

Comentarios


bottom of page