தமிழக அரசியல் களத்தில் கடந்த வருடங்களில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் மிக முக்கியமானவை என்பதோடு தொடர்ந்து உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. இன்றைக்கு ஒட்டுமொத்தமான இந்தியாவிற்கும் முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்குப் பின்னால் விதையாய் இருந்தது இந்தப் போராட்டங்கள்தான். ஒரு அரசியல் இயக்கம் மக்களை அரசியல் மயப்படுத்தும் போதுதான் சீரான வளர்ச்சி உருவாகக்கூடும். அந்த வகைய்ல் திராவிட இயக்கத்தின் வெற்றியென்பது அது பெருவாரியான மக்களுக்கான சித்தாந்தமாக மாறியதுதான். வாக்கரசியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இன்றைக்கு இருக்கும் திராவிடக் கட்சிகளை நாம் எளிதாக விமர்சித்துவிடலாம். எந்த அரசியல் இயக்கமும் கட்சிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் திராவிட இயக்கம் கடந்து வந்த பாதைகளும் எதிர்கொண்ட போராட்டங்களும் அசாதாரணமானது.
பல நூறு வருடங்களாகவே இந்திய சமூகம் சனாதன தர்மக் கொள்கைகளால் சுரண்டுபட்டு வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன. இன்றும்கூட சனாதனத்தின் நஞ்சூரிய நாக்குகளின் வெறியடங்கியதாய் இல்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவை அரசு வழங்கினால் அங்கும் விஷமத்தைக் கக்கும் அளவிற்குத்தான் அவர்களின் வக்கிரம் இருக்கிறது என்றால் அந்த வக்கிரங்களுக்கு எதிராக தொடர்ந்து நாம் போராட வேண்டியதும் குரல் எழுப்ப வேண்டியதும் அவசியமாகிறது.
தோழர் சுப.வீ எழுதிய ஒரு நூற்றாண்டில் தமிழ்நாடு கண்ட போராட்டங்கள் என்னும் இந்த நூலை சமீபத்தில் வாசித்திருந்தேன். இன்றைக்கு ஒரு உரைக்கான குறிப்புகளுக்காக மீண்டும் எடுத்து வாசிக்கையில் அந்த நூல் குறித்து சில செய்திகளைப் பகிரவேண்டுமென உந்துதல் உருவானது. பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் சென்னை இலக்கியத் திருவிழவில் உரை நிகழ்த்திய போது அந்த அரங்கின் வழிநடத்துநராய் நான் இருந்திருந்தேன். ஜெயரஞ்சன் அவர்களின் உரையில் ஓரிடத்தில் ரேஷன் கடையில் மலிவு விலையில் அரிசி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு இன்று அது படிப்படியாக விலையில்லாமல் கொடுக்கப்படுவது குறித்துக் குறிப்பிட்டு இந்தத் திட்டம் எவ்வாறு பன்னை அடிமை முறையிலிருந்து பெரும்பான்மை மக்கள் விடுபட காரணமாய் இருந்தது என்பதை சிறப்பாக பேசியிருப்பார்.
சுதந்திரத்திற்கு முன்பான நிலச்சுவான்தார்களின் காலமென்பது உழைக்கிறவர்களுக்கு கூலியாக நெல் அளப்பதுதான் இருந்தது. இரவு பகல் பாராமல் உழைத்தாலும் உழைக்கிறவனுக்குக் கிடைத்ததெல்லாம் அரைவயிற்றுக் கஞ்சிதான். கல்வியைத் தேடிச் செல்லவும் அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளவும் விளிம்பு நிலையிலிருந்த மக்களுக்கு வாய்ப்புகளே இல்லாமல் இருந்தது. அவர்கள் உணவுக்கான வழி செய்யப்பட்டபோதுதான் கல்விச் சாலைகள் நோக்கி பெரும்பான்மையான குழந்தைகள் வரத் துவங்கினார்கள். பள்ளிக்கூடத்தில் வழங்கப்படும் இலவச உணவென்பது பெருமைக்காக செய்து கொண்டிருக்கும் காரியமல்ல… இன்றைக்கு இந்த மாநிலம் கண்டிருக்கும் வளர்ச்சியில் எல்லோரும் கல்விச் சாலை நோக்கி வந்ததற்கு இந்தத் திட்டமும் ஒரு முக்கியக் காரணம்.
சமகால அரசியல் போக்குகளைப் புரிந்துகொள்ளவும் உள்வாங்கிக் கொள்ளவும் கடந்தகால நிகழ்வுகளையும் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது. அந்தவகையில் இந்த நூலில் கடந்த ஒரு நூற்றாண்டில் தமிழ்நாடு கண்ட இருபத்தைந்து முக்கியமான போராட்டங்களை இந்தநூல் ஆவணப்படுத்தியுள்ளது. ஆலைத் தொழிலாளர் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், ஆலய நுழைவுப் போராட்டம், 1938ம் வருட இந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம், 1965 ம் வருட இந்தி எதிர்ப்புப் போராட்டம் கடைசியாக நம் தலைமுறையினர் சாட்சியாக இருந்த ஜல்லிக்கட்டு மற்றும் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டங்கள் வரை முக்கிய நிகழ்வுகள் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளன. போராட்டங்களை வெறுமனே ஆவணப்படுத்துவதை மட்டும் நோக்கமாக இல்லாமல் அந்தப் போராட்டங்களுக்காக உழைத்தவர்கள், அந்தப் போராட்டங்களை காலவாதியாகச் செய்வதற்காக துரோகமிழைத்தவர்களையும் இந்தநூல் அடையாளம் காட்டத் தவறவில்லை.
பிரிட்டிஷ்காரர்கள் துவங்கிய ஆலைகள் பெருநகரங்களை நோக்கி கிராம மக்களை இடம் பெயரச் செய்தன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனது இரண்டாம் ஆட்டம் நாவலின் துவக்கப் பகுதிகளில் மதுரை என்ற நகரம் கடந்த நூற்றாண்டில் எவ்வாறு விரிவடைந்தது என்பதை விலாவாரியாக எழுதியிருப்பேன். அந்த வகையில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி இடம்பெயர்ந்தது இந்தக் காலகட்டத்தில்தான். சென்னையில் கோரல் மில், கர்னாடிக், பக்கிங்ஹாம் என அன்றிருந்த பிரபலமான மில்களில் 1908 1918 1921 என வெவ்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. 1908 ம் வருடத்தில் தொழிற்சங்கங்கள் இல்லை. 1918 ம் வருடத்தில்தான் சங்கம் உருவாகிறது. தொழிசங்கத்திற்கென தனிச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்பது தலைவர்கள் விரும்பினார்கள். இதில் முக்கியமானவர் தோழர் சிங்காரவேலர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு பெயருக்கு ஒரு குழுவை அமைக்கிறார்கள். இதன் தலைவரான குமாரசாமி சாஸ்திரி ஏற்கனவே 1917 ம் வருடம் இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத்தை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு நியமித்த குழுவில் ஒருவராக இருந்தவர். இவருக்குத் தொழிலாளர் நலனில் எப்படி அக்கறை இருந்திருக்கும்?
தொழிற்சங்கத்தினர் ஆலையை நடத்தி வந்த பின்னி நிர்வாகத்திடம் ஊதிய உயர்வு உட்பட முக்கியக் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். ஆலை நிர்வாகம் இந்தப் போராட்டத்தைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. வேலை நிறுத்தம் மாதக் கணக்கில் தொடர்ந்தது. இந்த நேரத்தில் தந்திரமாக நிர்வாகத்தினர் ஆதி திராவிடர்களுக்கான தனி சங்கத்தினருக்கு சில சலுகைகள் தருவதாகச் சொல்ல அவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வேலைக்குத் திரும்புகிறார்கள். இந்த தேசத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பிரிட்டிஷ்காரர்கள் என்னவிதமான பிரித்தாழும் செயல்களைச் செய்தார்களோ அதையேதான் இந்த ஆலைப் போராட்டத்திலும் செய்தார்கள். ஆறு மாதங்களுக்கும் மேலாக பெரும் இழப்புகளையும் காயங்களயும் சந்தித்த அந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது என்பதுதான் துயரம்.
சேரன்மாதவி குருகுலப் போராட்டத்தை இன்றைய சூழலிலும் முக்கியுமானது. சேரன்மாதவி என்னும் ஊரிலிருந்த குருகுலம் வெவ்வேறு தனவான்களின் நிதியால் உருவானது. இந்த குருகுலத்தில் ப்ராமண சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் மற்ற சமூகத்தவரும் தனித்தனியாக சாப்பிட அமரவைக்கப்பட்டனர். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதற்கான சமபந்தி போஜனமுறையை வலியுறுத்தி நடந்த போராட்டம் அது. அன்றைக்கிருந்த காங்கிரஸ் கட்சி மேலிடமும் மஹாத்மா காந்தியடிகள் அவர்களும் நேரடியாகத் தலையிட்டுமே பிராமணர்கள் சமபந்தி போஜனமுறைக்கு கடைசிவரை ஒப்புக்கொள்ளவில்லை. தீர்வுகளே ஏற்படாத சூழலில் ஒரு கட்டத்தில் அந்த குருகுலத்தை நிர்வகித்த வ.வேசு. எல்லா பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார்.
வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்னவென்பதை ஏராளமான நூல்களின் ஆதாரங்களோடு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கோவில் நுழைவுப் போராட்டங்கள் குறித்து எழுதுகையில் ‘கிபி 6 ம் நூற்றாண்டில் கோவில்கள் மிகப்பெரிய சமூக நிறுவனங்களாக வளரத் துவங்கின. அளவற்ற விளைநிலங்கள் கோயில் சொத்தாயின. அதுவரையில் தீ வளர்த்து வேள்விகள் மட்டுமே செய்துகொண்டிருந்த பார்ப்பனர்கள் கோயிலில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர். சாதி ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் கோயிலுக்குள் வந்துவிட்டன.’ என்ற குறிப்புகளைக் கொண்டு வாசிக்கையில் தமிழ்நாட்டில் நடந்த ஆலயப் போராட்டங்களுக்குப் பின்னாலிருந்த சமூக மற்றும் அரசியல் காரணங்கள் எத்தனை வலுவானவை என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த இருபத்தைந்து கட்டுரைகளிலும் ஏராளமான செய்திகள் நமக்குச் சொல்லப்படுகின்றன. இவற்றை வெறும் செய்திகளாக மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. நமது உரிமைகளுக்காக போராட வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல் போராடி பெற்றவைகளைத் தக்கவைத்துக் கொள்வதும் முக்கியமானது. குலக்கல்வி திட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்த கட்டுரையில் முக்கியமானதொரு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. துவக்கம் முதலே ராஜாஜி அவர்கள் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவர எத்தனை தீவிரம் காட்டினார் என்பது ஒருபுறம் இருக்க அவர் எவ்வாறான தந்திரங்களைச் செய்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். 1942 ம் வருடம் ஆகஸ்ட் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தவர் காம்ராஜர், காங்கிரஸை தமிழ்நாட்டில் வளர்த்தவரும் அவர்தான். போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே ராஜாஜி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். ( துண்டுசீட்டு கொடுத்து தப்பிப்பது சனாதனவாதிகளின் தனித்துவமான குணம்போல…) அதன்பிறகு இந்தியா விடுதலை பெறும் நேரத்தில்தான் மீண்டும் கட்சிக்குள் வந்திருக்கிறார். 1952 ம் வருடம் நடந்த தேர்தலில் நிற்காமலேயே முதல்வரும் ஆகிவிட்டார். அவர் ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் காரியம் குலக்கல்வி சட்டத்தை அறிவித்தது. அன்றைக்கு ராஜாஜியின் இந்தத் திட்டத்தை ஆதரித்தவர்களில் முக்கியமான இருவர் மா.பொ.சியும் எழுத்தாளர் கல்கியும் ஆவார்கள். குலக்கல்வி திட்டத்தை ஆதரித்து மா.பொ.சி தமிழ்நாடெங்கும் கூட்டங்களை நடத்தியிருக்கிறார். 1954 ம் வருடம் தான் குலக்கல்வி திட்டம் திரும்பப் பெறப்பட்டது.
புதியக் கல்விக் கொள்கை திட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒவ்வொரு நாளும் புதிய ஆயுதங்களோடு ஒன்றிய அரசு இந்திய மக்களை வேட்டையாடத் துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் நமது கடந்துகாலப் போராட்டங்களிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. திராவிடம் என்கிற கருத்தாக்கம் வெறுமனே எதிர்ப்பின் அடையாளமாக மட்டுமில்லாமல் அநீதிக்கு எதிரான அரசியல் எழுச்சியாக தொடர்ந்து வெளிப்பட வேண்டியது முக்கியமாகிறது.
Comments