top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

தெய்வீகனின் திருவேட்கை


போரிலிருந்தும் சமாதானத்திலிருந்தும் இன்னும் சில கதைகள்.





 

தமிழ் சிறுகதைகளின் தளம் விரிவடைந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சொல்முறையிலும் நாம் புதிய சாத்தியங்களை கண்டடைய வேண்டிய தேவையிருக்கிறது. வாழ்விற்கும் தொழில்நுட்பங்களுக்குமான இடைவெளி குறைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்  இலக்கியத்தினை ஒரு தேர்வாக எடுத்துக் கொள்கிறவர்களின் எண்ணிக்கை குறைவதைப் பார்க்க முடிகிறது. கடந்த வாரத்தில்  வாசித்த ஒரு செய்தியில் ஜப்பானில் ஒரு இளம் எழுத்தாளர் தனது புதிய நூலுக்காக அகுதகவா விருது பெறுகிறார். ( அகுதகவா ஜப்பானியர்களின் இலக்கிய அடையாளம். மிகச் சிறந்த சிறுகதைகளை எழுதியவர். நகுலனின் கதைகளில் அகுதகவாவின் தாக்கத்தை ஆழமாகப் பார்க்க முடியும்.) விருது வென்றதற்குப் பிறகான நேர்காணல் ஒன்றில் எழுத்தாளர் தான் அந்த நாவலின் பெரும்பாலான பகுதியை சாட் ஜிபிடியின் துணையோடு எழுதியதாக குறிப்பிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மொழிக்கும் கலைஞனுக்குமான உறவில் இடைவெளிகள் உருவாகக் கூடுமோ என்கிற அச்சம் இப்பொழுது எழத் துவங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் தானெழுதும் எல்லாவற்றின் மீதும் ஒரு எழுத்தாளன் அதீத அக்கறையினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.


தெய்வீகனின் முந்தைய சிறுகதைத் தொகுப்புகளான அமீலா மற்றும் உன் தெய்வத்திடம் போ என்ற இரண்டு நூல்களையும் வாசித்திருக்கிறேன். துவக்கம் முதலே ஒரு கதையை சுருங்கச் சொல்வதில் அவரிடமிருக்கும் நேர்த்தியை கவனித்திருக்கிறேன். இந்தத் தொகுப்பிலும் அந்த நேர்த்தியுண்டு.  புலம் பெயர் வாழ்விலிருந்து கதைகளை எழுதும்போது இரண்டு விதமான மனிதனாக ஒரு எழுத்தாளன் வெளிப்பட வேண்டியுள்ளது. ஒன்று சொந்த நிலத்தின் நினைவுகளைச்  சுமந்தலைகிறவன், இன்னொருவன் புலம்பெயர் நாட்டில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதில் முனைப்புக்  கொண்டவன். முதல் தொகுப்பான அமீலாவிலிருந்து இந்தத் தொகுப்பில் புதிய நிலத்தில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் ஒருவராக தெய்வீகனின் அகமனம் உருமாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது. அப்படித்தான் ஆகவும் வேண்டும். ஒற்றை அடையாளத்தோடு வாழும்  மனிதனை விடவும் வெவ்வேறு அடையாளங்களோடு வாழக்கூடிய மனிதன் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தக் கூடியவனாகவும் சர்வதேச சமூகத்தினைப் புரிந்துகொள்ளக் கூடியவனாகவும் இருக்கிறான் என்பது நிதர்சனம்.


பத்து சிறுகதைகளும் உடன் ஒரு நேர்காணலும் கொண்ட இந்தத் தொகுப்பில் முதலில் தெய்வீகனின் நேர்காணலையே வாசித்தேன். சில வருடங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் நான் தெய்வீகனைக் கவனிக்கத் துவங்கியது அவர் தொடர்ந்து இந்தோனேஷியாவில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மயூரனைக் குறித்து எழுதியதன் வழியாகத்தான். அந்த விடயத்தில்  மயூரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு பதினோறு வருடங்கள் சிறையில் கழித்தபின் தான் திருந்திவிட்டதாகவும் தனது மரணதண்டனையை நிறுத்துமாறும் கேட்டும் மறுக்கப்பட்டது. அன்றைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வரை மயூரனோடு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களுக்காக இந்தோனேஷிய அரசாங்கத்திடம் பேசியதை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நாம் பார்க்க வேண்டும்.  புலம்பெயர் வாழ்வில் உள்ள ஒருவருக்கு சர்வதேச அரசியலில் கூடுதல் கவனமிருப்பதை அதுமுதல் தான் நான் அவதானிக்கத் துவங்கியிருந்தேன். அதன் பிறகாகவே அவரது  நூல்களையும் வாசித்தேன்.





இந்தத் தொகுப்பின் முதல் கதையான திருவேட்கை உலகின் இரு எல்லைகளில் உள்ள தேசத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் துரத்தப்பட்ட மனிதர்களின் கதையினை ஒரு புள்ளியில் வந்து இணைக்கிறது. ஒரு நாவலாக விரிய சாத்தியமுள்ள அத்தனை பெரிய கதையை சுருக்கமாக சொல்லியிருப்பதில்  தெய்வீகனுக்கு இருக்கும் மொழிப்பயிற்சி வெளிப்படுகிறது. ஆனால் இங்கிலாந்தில் குற்றமிழத்து தண்டனை பெற்றவர்களை எல்லாம் கப்பலில் ஏற்றி ஒரு புதிய தேசத்திற்கு அனுப்பியதன் வரலாற்றை இன்னும் விரிவாகவே சொல்லி இருக்கத்தான் வேண்டும் என்கிற எண்ணம் எழாமலில்லை. இந்தக் கதையில் குற்றமிழைக்காமலே தண்டனை பெற்ற ஒரு பெண்ணும் அவரது மகனும் ஆஸ்திரேலியாவிற்கு வருகிறார்கள். ஏழாண்டுகாலம் சிறை தண்டனைக்குப்பின் அந்தப் பெண் எளிய வாழ்வைத் துவங்கி பின் மரணித்தும் போகிறாள். ஆனால் அவளுக்கு நேர்ந்த அநீதியை உலகறியச் செய்யும் பொருட்டு அவளது மகன் தனது கடைக்கு வரும் எல்லோருக்கும் இலவசமாக ஒரு கைக்குட்டையைக் கொடுக்கிறான். ( அந்தப் பெண்ணின் மீது கைக்குட்டை திருடியதாக வழக்கு) தன் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து எல்லோருக்கும் சொல்கிறான்.


இந்தக் கதை பல தலைமுறைகளாகத் தொடர்ந்து இன்றைக்கும் நீள்கிறது. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வரும் ஒரு ஏதிலியுடன்  அநீதி இழைக்கப்பட்ட பெண்ணின் வழி வந்த பெண் இணைவதுபோல் இந்தக் கதை முடியும்போது நமக்கு வரலாறு குறித்த பெரும் கேள்விகள் எழுகின்றன. ஒரு நல்ல சிறுகதைக்கு அடிப்படையாக முரணையும் கதாப்பாத்திர உருவாக்கத்தையும் சொல்லலாம். இந்தக் கதையின் முரணை விடவும் தனித்திருப்பது அந்த மகனின் கதாப்பாத்திரம். தனது தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகறியச் செய்ய வேண்டுமென்பதற்காக அவன் மேற்கொள்ளும் முயற்சி. இதனையும் பல பக்கங்களுக்கு விரிவாகச் சொல்லாமல் இரண்டு பத்திகளில் கடந்து போவதால் நமக்கு அந்த மகனின் தோற்றம் குறித்தும் அவனது போராட்டம் குறித்தும் சுயமாக ஏராளமான கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. வாசகனின் எல்லைகளை விரிவுபடுத்தும் இந்தக் கதையில் இரண்டு சமூகங்கள் இணையும் புள்ளி சிறப்பாக வெளிப்பட்டது போல் வேறு  சில கதைகளில் அமையவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.


அடுத்த கதையான ராம்போவில் தனித்து தெரிவது அந்தக் கதையின் முரண். யுத்தம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் என்னவாக நினைவிலிருக்கிறது? யுத்தத்தையே பார்க்காத ஒருவனின் அன்றாடத்திற்கும் யுத்தத்தினூடாக வளர்கிற ஒருவனின் அன்றாடத்திற்குமான வேறுபாடுகள் குறித்து என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? யுத்தத்தில் காலை இழந்த போர் வீரன் ஒருவன் தன்னைப் போலவே யுத்தத்திலிருந்து திரும்பிய நாயொன்றை காப்பகத்திலிருந்து வாங்கி வந்து வளர்க்க விரும்புகிறான். நாய்க்கும் அவனுக்குமான உறவு அந்த நாயின் சுட்டித்தனங்கள் என செல்லும் கதையில் சடாரென ஓரிடத்தில் நான்கு மாதங்களுக்குப் பின் அதற்கான மருந்துகளை நிறுத்தும்போது அந்த நாய் உக்கிரமாக நடந்துகொள்ளத் துவங்குகிறது. யுத்த சத்தத்தினைக் கேட்டுப் பழகிப்போன நாயினால் அமைதியை எதிர்கொள்ள முடியாதென்கிற இந்தக் கதையின் முரண் ஒரு நொடி  என்னைத் துணுக்குறச் செய்தது. தடுப்பு முகாம்களின் கொடுமைகளை எதிர்கொண்டு மீண்டு மனிதர்களுக்கு கடந்தகாலம் என்னவாய் நினைவிருக்கும்? சப்தங்களும் ஒளிகளும் ஒரு சராசரி மனிதனுக்கு தரும் அதேவ் விளைவைத்தான் இவர்களுக்கும் கொடுக்குமா? ராம்போவை இதற்குமேல் தன்னால் பராமரிக்க முடியாதெனா அந்த ராணுவ வீரன் அரசாங்கத்திடமே கையளிக்கிறான். ‘போருக்குள்ளிருந்து தப்பி வந்தவர்கள்தான் போரிற்கான நிராகரிப்பை மீண்டும் மீண்டும் அழுத்தமாக உணரவேண்டும்’ என இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது. ராம்போ என்ற நாய் அந்த ராணுவ வீரனையும் அவனுக்கு உதவியாக வரும் ஈழத்தமிழனையும் உடன் ஈராக்கிலிருந்து வந்த நாய் என்பதற்காகவே அதனை வந்து பார்த்துச் செல்லும் ஈராக்கியர்களையும் ஒரு புள்ளியில் இணைக்கிறது. நாம் கற்பனை செய்வதை விடவும் வாழ்க்கை வினோதமானதில்லையா?


புதிய நாட்டில் குடியுரிமை பெறுவதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது என்பதை புலம் பெயர் எழுத்தாளர்களின் ஏராளமான கதைகளில் வாசித்திருக்கிறோம். இங்கு ஒரு கதையில் முதுகில் தீயில் கொதித்த இரும்புக் கம்பியால் முதுகில் காயத்தை  உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும் ஒரு மனிதன் வருகிறான். புதிய தேசம் ஒருவனுக்கான அகதியுரிமையைக் கொடுக்கக் கூட ஏராளமான சோதனைகளைச் செய்கிறது. நானூறு வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்திலிருந்து  வந்த குற்றவாளிகளும் முரடர்களாலும் அபகரிக்கப்பட்ட ஒரு நிலம் புதிய மனிதர்களை  வரவிடாமல் தடுப்பதில் அவர்களுக்கு இருக்கும் எச்சரிக்கையுணர்வை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் இப்படி வந்தவர்கள்தானே? பூர்வ குடிமக்களை வேட்டையாடி படுகொலைகள் செய்து எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்டதன் நினைவுகளை அத்தனை எளிதில் மறந்து கடந்துவிட முடியுமா? முடிந்தவரை அகதிகளாக வருகிறவர்களை சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பவே நினைக்கிறார்கள். நாடற்றவர்களின் கடவுச்சீட்டு என்னும் தெய்வீகனின் முந்தைய நூலில் கிறிஸ்துமஸ் தீவில் ( ஆஸ்திரேலியாவிலிருந்து 3500 கிமீ தொலைவு) தடுத்து நிறுத்தப்படும் அகதிகளின் வாழ்க்கை குறித்து விவரிக்கப்பட்டிருக்கும். அகதிகளாக புறப்படுகிறவர்களின் வாழ்க்கை நிச்சயத்தன்மையற்றது. ஒதுங்க நிரந்தரமாக ஒரு நிழல் வேண்டுமென்பது அவர்களுக்கு பெருங்கனவு. எல்லோருக்கும் சாத்தியமாகா பெருங்கனவு.


இருள்மீது குற்றமில்லை என்கிற சிறுகதையை இந்தத் தொகுப்பின் முக்கியக் கதையாகக் குறிப்பிடலாம். எவ்வாறெனில் இந்தக் கதையின் முடிவில் வரும்  அழுத்தமான திருப்பமும் அதைச் சொன்ன விதமும். அடுத்ததாக கச்சிதமான மொழிநடையும் கதாப்பாத்திர உருவாக்கமும். மற்ற கதைகளை விடவும் இந்தக் கதை கவனமாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தினை சுற்றி எழுதப்பட்ட கதையென்றாலும் இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான கதையாக இருக்கிறது. ஒரு தலைமுறை வேறுநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தது, இன்னொரு தலைமுறை இந்தப் புதிய நிலத்தில் பிறந்து வளர்ந்தது. ஆனால் வாழ்க்கை குறித்தும் உறவுகள் குறித்தும்  காமம் குறித்தும் இவர்களுக்குள் இருக்கும் புரிதல்களும் தேர்வுகளும் கவனமாக எழுதப்பட்டுள்ளன. நம்மைச் சூழ்ந்த எல்லோருக்குமே அந்தரங்கம் வேறானது. ஒருவரின் பாலியல் தேர்வைக் கொண்டு அவரது குணத்தை நாம் மதிப்பிட  முடியாதென நிறைய புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய கதையிது. பழைய செய்திகளையும் வாழ்க்கை முறைகளையும் துண்டித்துக் கொள்வது ஒரு புனைகதை ஆசிரியனுக்கு அவசியம். புதிய வாழ்வை அணுக முடிந்தவனால் மட்டுமே புதிய அறங்களையும்  புரிந்துகொள்ள முடியும்.


ஜூடோ என்ற கதை நான் முன்பே குறிப்பிட்டது போல் வெவ்வேறு புள்ளிகளில் இரண்டு இனத்தவரை இணைக்க முயன்ற கதை. ஆனால் இந்தக் கதை ஆஸ்திரேலியாவிலிருந்து புலம் பெயர்ந்த ஒரு பழங்குடி மனிதனின் கதையாக மட்டுமே எழுதபப்ட்டிருக்குமானால் இன்னும் செழுமையாக வந்திருக்கக் கூடும்.  ஒரு கதாப்பாத்திரம் எதிர்கொள்ளும் சவால்களும் போராட்டங்களும் கொண்டாட்டங்களும் ஏதொவோரு வகையில் நமது அந்தரங்கத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் விதமாய் இருந்தால் போதுமானது. அதற்காக நம் மொழி பேசக்கூடிய ஒருவனை அந்தக் கதாப்பாத்திரம் எதிர்கொள்ள வேண்டிய தேவையில்லை. ஒரு சிறுகதையின் பாதை சிறிதாகும்போது அது அடர்த்தியாகும்.  தற்பலி என்ற கதையை எடுத்துக்கொண்டாலும் இதே தான் நிகழ்கிறது. குடிபோதையில் எதிர்பாராத விதமாய் தனது மனைவியைக் கொலை செய்துவிட்ட ஒரு கால்பந்து வீரன் முப்பது வருடங்கள் சிறையில் கழித்துவிட்டு வருகிறான் என்பதே அழுத்தமான கதைதான். ஆனால் அந்தக் கதைக்குள் ஒரு தமிழ் பேசுகிறவனை வைக்கிறபோது அந்தக் கதையின் இயல்பிலிருந்து சற்றே துருத்திக் கொண்டு தெரிவதாக இருக்கிறது. கால்பந்து வீரனுக்கு இருக்கும் மூர்க்கமும் சூதில் தோற்ற இடத்தில் அவன் கொள்ளும் பதற்றமும்  சிறப்பான இடங்கள். அந்த சம்பவத்தை மட்டுமே தனியாக எழுதியிருந்தால்  முக்கியமானதொரு கதை நமக்குக் கிடைத்திருக்கும். அடிப்படையில் பொறுமையும் புத்திகூர்மையும் மிக்க கால்பந்து விளையாட்டை விளையாடக் கூடிய ஒருவனை எந்தப் புள்ளி அவசரப்பட வைத்தது என்பதுதான் இந்தக் கதையின் வலுவான புள்ளி. அதனை தெய்வீகன் தவறவிட்டிருக்கிறார்.


புனிதக்கிளை என்ற கதை பெருந்தேசியத்தை நம்புகிற ஒருவன் எப்படியெல்லாம் நடந்துகொள்வான் என்பதை முன்வைக்கிறது. பெருந்தேசியம் என்கிற கருத்தாக்கம் மதத்தை முன்னிறுத்தி மட்டுமில்லாமல் இன்று உலகம் முழுவதிலுமே வெவ்வேறு அடையாளங்களோடு தலையெடுத்து வருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு நாடாக இன்று இந்தியா  இல்லை. அயோத்தியைத் தொடர்ந்து நாடு முழுக்க ராமர் கோவிலை கட்டுவோம் என்கிற கோஷத்தினை முன்னெடுத்திருக்கிறார்கள். இந்தக் கதையில் வரும் ரஜிதவைப் போலவே ஏராளமானவர்களை சமீப வருடங்களில் நான் எதிர்கொள்கிறேன்.  ரஜித தமிழ் பத்திரிக்கையாளனிடம் அன்பாகப் பேசுகிறான். தனது பத்திரிக்கையில் எழுதச் சொல்லிக் கேட்கிறான். வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். தனது சமூகத்தோடு இணக்கமாக பழக அவனைத் தூண்டுகிறான். ஆனால் அடிப்படையில் அவனுக்குள்ளிருப்பது மிகக் குரூரமான வன்மம்.  தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். காரர்களும் வலதுசாரிகளும் ஒரு உதாரணமாகச் சொல்லலாம். அவர்கள்  நேரடியாக மக்களுக்குச் சேவை செய்கிறோம் என தூய்மைப் பணிகள் செய்வார்கள், பண உதவி செய்வார்கள். இப்பொழுது வணக்கம் காஷி, வணக்கம் சோம்நாத் என தங்கள் அமைப்பின் செலவில் புனிதப் பயணம் அழைத்துச் செல்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? இந்தத் தேசம் இந்துக்களுக்கானது என்பதை அழுத்தமாக வெளிப்படுத்த. அதையேதான் ரஜித செய்கிறான். தன்னை சமத்துமிக்கவனாக காட்டிக் கொண்டாலும், நாட்டிற்கு வெளியே  ஆஸ்திரேலியாவில் வசிக்கக் கூடியவனாயிருந்தாலும் புத்தர் ஞானமடைந்த அரசமரத்தின் ஒரு கிளையை எடுத்துவந்து அதனை ஆஸ்திரேலியாவில் வளர்க்க நினைக்கிறான். அந்த மரத்தின் கீழ் தமது மக்களையும் அடையாளத்தையும் திரட்டுவதே அவனது நோக்கமாக இருக்கிறது. பெருந்தேசியக் கனவுகளைக் கொண்ட தேசங்கள் எல்லாம் படுகுழியில் விழுந்ததைத்தான் வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் அந்த வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்பதில்லை.


பிறிதொரு நறுமனம் கதை தாய்லாந்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணித்த நிகழ்வை புனைவாக்கி அதன் இன்னொரு முனையில் கொழும்பிலிருந்து அகதியாக புலம்பெயர்ந்த ஒரு கிரிக்கெட் வீரனின் மகளது கதையாக பிணைக்கிறது. இரண்டு வெவ்வேறான புள்ளிகள் என்பதிலிருக்கும் சுவாரஸ்யம் கதை சொல்லப்பட்ட விதத்தில் கூடி வந்திருக்கவில்லை. இறுதிக் கதையான பயனிலை இன்னுமொரு சிறப்பான கதை. நாடுகடந்து வாழும் தமிழர்களுக்கு தமிழ் போராட்ட இயக்கங்களின் மீது கொண்டிருந்த அபிமானத்தையும் அதற்காக அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் பேசுகிறது. விடுதலைப்புலிகளுக்கும் புளோட் அமைப்பிற்குமான பிரச்சனை துவங்குவதற்கு முன்பாக இரண்டு இயக்கங்களை ஆதரித்தவர்கள் பிரச்சனைக்குப்பின் என்னவிதமான நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். அவர்களுக்கு அடுத்த தலைமுறையில் வரும் இளைஞர்கள் 2009 ல் யுத்தம் முடிந்த நாளில் தமிழர் என்பதனாலேயே என்னவிதமான நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள் என்கிற வெவ்வேறு புள்ளிகளை கச்சிதமாக இணைத்துள்ளது.  


ஒரு தொகுப்பை வாசித்து முடிக்கிறபோது சில சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் நமது மனதில் ஆழமாகப் பதியவேண்டும். அத்தோடு வாழ்க்கை குறித்த நாம் அறிந்த முரண்களிலிருந்தும் புரிதல்களிலிருந்தும் இதுவரையில்லாத புதியனவற்றை நாம் தெரிந்திருக்க வேண்டும். அப்படி பார்க்கையில் இவை எல்லாமே இந்தத் தொகுப்பின் வழியாய் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் தெய்வீகனின் முந்தையக் கதைகளையும் வாசித்தவன் என்கிற வகையில் இந்தத் தொகுப்பில் நான் குறையாகப் பார்ப்பது அவரது கதைகளில் காணாமல் போன பகடி.  இயல்பான பகடியும் கேலியும் அவரது முந்தையக் கதைகளில் இருந்தன. அது ஒரு கதை சொல்லியின் பலம். அதை இந்தத் தொகுப்பில் தவறவிட்டிருக்கிறார்.

 

176 views

Comments


bottom of page