top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

தீராக்காதலி

Updated: Feb 14

முகில்


2019 ம் வருடத்தின் ஏப்ரல் 21 ம் நாள் அதிகாலை உலகம் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் கொழும்பு நகரின்  முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய செய்தியை அன்று  முற்பகல் உறக்கத்திலிருந்து எழுந்தபோதுதான் தெரிந்துகொண்டேன். தாக்குதலுக்குள்ளான இடங்களில் கொச்சிக்கடை தேவாலயம் முற்றாக நிலைகுலைந்துபோனக் காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் கண்டபோது ஒருநிமிடம் உறைந்துபோனேன். தற்செயலோ கடவுள் செயலோ கடைசி நொடியில் உயிர்ப் பிழைத்திருக்கிறோம் என ஒரு பக்கம் ஆறுதல் இருந்தலும் இன்னொரு பக்கம் விதுஷிக்கு என்னவானதோ என பதற்றம் தொற்றிக்கொண்டது. அவசரமாக எனது அலைபேசியை எடுத்துப் பார்த்தபோது, ‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன், நீ கவலைப்படாதே’ என செய்தி அனுப்பியிருந்தாள்.


விதுஷியைச் சந்திக்கும் ஆவலோடு நேற்று பின்னிரவு  கொழும்பு செல்வதற்காக விமானநிலையத்தில் காத்திருந்தபோது, ‘பேபி வீட்ல இருந்து கிளம்பிட்டியா?... ப்ளீஸ் ப்ளீஸ் இன்னிக்கி வர வேணாம்… லாஸ்ட் மினிட் ல வசந்தனுக்கு லீவ் கெடச்சிடுச்சாம் அவரும் இப்ப கொழும்பு வர்றாரு…. நாம நெக்ஸ்ட் மந்த் மீட் பண்லாம்…’ என செய்தி அனுப்பியிருந்தாள். ஒருவார காலம் அவளோடு செலவிடப் போகிறோமென்கிற  குதூகலமெல்லாம் கரைந்து வெறுப்பும் ஆத்திரமும் எழுந்தது…  அவளுக்கென உடலில் தேக்கிவைத்திருந்த வெக்கை ஆத்திரத்தில் உடல் முழுக்க பரவ, இயல்பிற்கு அதிகமாய் வியர்த்துக் கொட்டியது. எதிர்ப்படும் எவரையாவது அடித்து வீழ்த்தவேண்டுமென்கிற ஆத்திரத்தில் கைகள் துடித்தன. கட்டுப்படுத்திக் கொண்டவனாய் அவசரமாக ஒரு வாகனத்திலேறி வீடு திரும்பினேன்.  வழமையாக இதுபோன்ற சந்திப்புகள் தவறும் தருணங்களில் உலகின் அத்தனை கெட்டவார்த்தைகளாலும் அவளை நான் ஏசுவதுண்டு.


‘நீ பேசற கெட்டவார்த்தையெல்லாம் கலெக்ட் பண்ணி ஒரு டிக்ஸ்னரி போடலாம்டா… ஏன் இவ்ளோ கெட்டவார்த்த பேசற…’ என ஒருமுரை விதுஷி என்னிடம் வருத்தபட்டபோது ‘ நம்மளோட எல்லா பெர்வெர்சனையும்  ஒருத்தர்கிட்ட வெளிப்படுத்திக்க முடியலைன்னா அங்க என்ன லவ் இருக்கு…?’ எனக் கேட்டேன்.

‘மூடு… பெர்வெர்ஷனுக்கும் லவ்வுக்கும் சம்பந்தமில்ல…. உனக்கு என்மேல லவ் கொஞ்சமா இருக்கு. பெர்வெர்ஷன் தான் அதிகமா இருக்கு…’ என வருத்தப்பட்டவள் எப்படியும் ஒருநாள் கெட்டவார்த்தைகளே பேசாத ஒருவனாக மாற்றுவதே தனது லட்சியமென அவ்வப்போது சிரிப்பாள். 

 

ஈஸ்டருக்குப் பிறகு வந்த சில நாட்களைக் கடப்பது பெரும் அவஸ்தையாக இருந்தது. ஒரு மாதம் நான் கொழும்புவுக்கும் அடுத்தமாதம் அவள் சென்னைக்குமாக நாங்கள் பயணப்பட்டுக் கொண்டிருந்த காலமது. ஈஸ்டருக்குப் பிறகு முதலில் அவள் என்னோடு பேசுவது குறைந்தது, பிறகு எனக்கு செய்திகள் அனுப்புவதையும் நானே அழைத்தாலும் பதிலளிப்பதையும் தவிர்த்தாள்.  இந்தத் திடீர் விலக்கத்திற்கு என்ன காரணமாக இருக்குமென பலவாறாக யோசித்து குழம்பிப்போன நான் ஒரு நாளிரவு நிரம்பக் குடித்தபின் ‘என்னதாண்டி பிரச்சன? ஏன் திடீர்னு அவாய்ட் பன்ற?  என்னோட பேசவோ பழகவோ பிடிக்கலைன்னா சொல்லிடு…’ என அவளுக்கு புலனத்தில் குரல் செய்தி அனுப்பினேன். பதிலெதுவும் வராத விரக்தியில் அலைபேசியை தலையனைக்கடியில் வைத்துவிட்டு உறங்கியவன்  அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அவளிடமிருந்து சில புகைப்படங்கள் பதிலாக வந்திருந்தன. நானும் கல்பனாவும் சேர்ந்திருக்கும் படங்கள். எனக்கு எல்லாமே ஒரு மாதிரியாக புரிந்தும் புரியாமலும் இருக்க, அவசரமாக அவளுக்கு அழைப்பெடுத்தேன்.


’சொல்லுங்க முகில்..’

அவளது குரலில்  இவ்வளவு காலமிருந்த நேசமெல்லாம் தொலைந்து யாரோ ஒருவருக்குப் பதிலளிப்பவளைப்போல் பேசினாள்.


‘விது… இதப்பத்தி நானே உங்கிட்ட பேசனும்னு இருந்தேன்… ஆனா இப்பிடி ஆகும்னு தெரியல… எதுவா இருந்தாலும் நாம ரெண்டு பேரும் சேந்து பேசினதுக்கு அப்பறம் ஒரு முடிவுக்கு வா… அவசரப்படாத…’


‘நாம பேசறதுக்கு ஒன்னுமே இல்ல… இனிமே என்ன தொந்தரவு பண்ணாத… காரணம் கேட்ட சொல்லிட்டேன்.. என்னய நிம்மதியா இருக்கவிடு..’


என கடுமையான குரலில் சொன்னவள், உடனடியாக இணைப்பைத் துண்டித்து எனது எண்ணை அவளது தொடர்பிலிருந்து முற்றாக தடைசெய்தாள்.  உடலின் நரம்புகளெல்லாம் துடிக்க, அவள் என்னைக் கைவிட்டுவிட்டாளென்பதை நம்பமுடியாதவனாக அலைபேசியைத் தூக்கியெறிய அது உடைந்து நொறுங்கியது.  திறந்திருந்த ஜன்னலின் வழியாக அறைக்குள்  விழுந்த அதிகாலை வெளிச்சத்தில் நான்   சூன்யமானவனாகியிருந்தேன். யோசித்துப் பார்த்தால் விளையாட்டாகத் துவங்கிய எல்லாமே இன்று கட்டுப்படுத்தமுடியாத காதலாக மாறியிருக்கிறது.


விதுஷிகாவைக் குறித்து நான் தெரிந்துகொண்டது கல்பனாவின் வழியாகத்தான். இரண்டு வருடங்களுக்குமுன் நானும் கல்பனாவும் உறவில் இருந்தோம். சென்னையில் பெண்களுக்கான நவநாகரீகமானதொரு ஆடையகத்தை நடத்தி வந்தவளை ஒரு இலக்கிய விழாவில்தான்  முதல் முறையாக சந்தித்தேன். என்னை விடவும் சற்றே கூடுதலான  உயரம், நாவல் பழ நிற முகத்தில் அகன்ற பெரிய கண்கள், பற்கள் தெரிய சிரிக்கையில் அசாத்தியமானதொரு வசீகரம் அவளிடமிருக்கும். நான் விருந்தினராக கலந்துகொண்ட  அரங்கில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  பதிலளிக்க முடியாமல் திணறியபோது எனக்காக மொழிபெயர்த்துத்   தந்ததன் வழியாக கல்பனா அறிமுகமானாள். எனது புத்தகங்களை வாசித்திருந்ததால் அவளுக்கு என்னிடம் நல்ல அபிப்ராயமிருந்தது. எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும் வாசித்துவிட்டு நெருங்கிப் பழகாதவரை எல்லோருக்கும் இருக்கும் நல்ல அபிப்ராயம் தான் இதுவும்.


அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு நாங்கள் அவ்வப்போது சந்திக்கும்படியான சூழலை நானே உருவாக்கிக் கொண்டேன். மிக முக்கியமான காரணம், அவளுடல் மீது எனக்கிருந்த வேட்கை. இரண்டாவது சந்திப்பிலேயே எனது உள்நோக்கத்தை அவள் புரிந்துகொண்டாலும் என்னை சந்திப்பதை அவள் தவிர்த்திருக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலையிலிருந்த  ஒரு மதுக்கூடத்தில் அன்றைய நாளின் சாரல்  தந்த குளிர்ச்சியும் அவள் எனதருகில் இருப்பதில் உண்டான கதகதப்பிலும் உடல் வினோதமானதொரு உணர்ச்சிநிலையில் இருந்தது. இரண்டாவது சுற்று விஸ்கிக்குப்பின் அவளது விரல்களைப் பற்றியபோது  கண்கள் விரிய புன்னகைத்தவள்


‘ஏன் இவ்ளோ அவசரம் முகில் ? பேசிப் பழகறதுக்கான அவகாசமே குடுக்கறதில்லையா? நேரடியா இங்கதான் ஆரம்பிக்கிறதா?

லஜ்ஜையே இல்லாமல் அவளது விரல்களை இன்னும் இறுக்கமாகப் பற்றிய நான்


‘பேசிப் பழகற நட்பெல்லாம் எதுவரை போகும் எவ்ளோ நாள் போகும்னு எனக்குத்  தெரியல. ஆனா ஒருத்தரோட  உடல்ரீதியா ஏற்படற நெருக்கமும் உறவும் அவ்வளவு சீக்கிரமா முடியறதில்ல..’

சிரித்தேன்..


‘இதென்ன சித்தர் முகிலன் அருள்வாக்கா?’

‘இல்ல கல்பனா, அனுபவம்…’


அவள் என் தோளில் மென்மையாக அடித்தாள்.  இயல்பாக இருக்கும் ஒரு சிறு கடிகாரத்தின் மீது வெடிகுண்டை பொருத்தும் செயல் அது. நான் பற்றியிருந்த விரல்களில் அழுத்தமாக முத்தமிட ‘இவ்ளோ அவசரம் வேணாம்… கொஞ்சநாள் பேசலாம்… வெளில போலாம்…’ என்றவள்,


 ‘உனக்கு எங்க ஊர்ல நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்கள்ல…’ எனக் கேட்டாள். அவள் இலங்கையைச் சேர்ந்தவளென்பது அப்பொழுதுதான்  தெரிந்தது. ஆமென்றதும் ‘சரி நாம ஒரு  டிரிப் போலாம்… ஹட்டன் ல என்னோட வீடு சும்மாதான் இருக்கு…’ அவள் சாதாரணமாகச் சொன்னபோது அவள் மதுமேசையில் வெறுமனே நாகரீகத்திற்காகச் சொல்கிறாள் என்றுதான் நினைத்தேன். ஆனால் இரண்டு வாரங்களிலேயே அப்படியானதொரு பயணம் நிகழுமென எதிர்பார்த்திருக்கவில்லை.


ஹட்டனுக்கு அதற்கு முன்பும் சிலமுறை சென்றிருந்தாலும் இந்தப் பயணம் வேறுவிதமானதாக இருந்தது. முக்கியமாக கல்பனா குறித்து எனக்கிருந்த அபிப்பிராயங்களும் அவள் மீதான விருப்பங்களும் புதிதாக உருமாறத் துவங்கியிருந்தன. ஒரு மலைச்சரிவில் பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு. எதிரில் பார்த்தால் மலையின் பெரும் பள்ளத்தாக்கைப் பார்க்க முடியும். அந்தப் பெரிய வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்த இரவுகள்  மறக்கமுடியாதவை. சென்னையில் நடந்த சந்திப்புகளில் என்னுடனான உடல்ரீதியிலான அணுக்கங்களை மறுத்தவள் இங்கு எல்லா சாகசங்களையும் என்னோடு  நிகழ்த்தத் தயாராக இருந்தாள். வீட்டின் எந்த அறையாக இருந்தாலும் நான் கேட்கிற நேரத்தில் எனக்காக தன்னுடலைத் தந்தாள். பெரும் பசி கொண்ட ஓநாய் குளிர்காலத்திற்கென வேட்டையாடுவதைப்போல் அவளை வேட்டையாடிக் கொண்டிருந்தேன்.


சில வேளைகளில் இரவில் அவளோடு காரில் பயணிக்கையில் ஆளற்ற வீதியில் காரை நிறுத்துவிட்டு உடனே வேண்டுமெனக் கேட்கும்போது கோவத்தில் சில நொடிகள்  முறைப்பாள். ஆனால் உடனடியாக கோவம் மறைந்து சம்மதித்துவிடுவாள். அவளுடலின் அத்தனை செல்களையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற வேட்கை அந்த பத்து நாட்களில் குறையவில்லை. ஊருக்குக் கிளம்புவதற்கு முந்தையநாள் காலை எழுப்பியவள் நான் தேனீரெல்லாம் அருந்தியபின் எனது உடல் முழுக்க தயிரைப் பூசினாள். நான் குழப்பமாகி


’என்னடி செய்ற?’ என அவளைப் பார்க்க


‘கேள்வி கேட்காம அமைதியா இரு… நீ  கேக்கற எல்லாத்தையும் செய்றன் ல…

இன்னைக்கி என்னோட நாள்…’ என்னை மேலும் பேசவிடாமல் என்னுடலை தன் விருப்பப்படி கையாளத் துவங்கினாள். மறுப்பேதுமில்லாமல் நிர்வாணமாய் அவளுக்கு முன் கிடந்தேன்.


உடலில் பூசிய தயிர் உலரத் துவங்கியபோது என்னை குளிப்பாட்டியவள் அந்த ஈரம் உலரும் முன்பாகவே உடல் முழுக்க நீங்கியிராத தயிரின் வாசனையையும் பாடி வாஷின் வாஷனையையும் நுகர்ந்து என்னுடலை சுவைக்கத் துவங்கினாள். குளிரில் நான் நடுங்க, சிரித்தபடியே ‘கொஞ்சம் பொறு பாடி வார்மா ஆகிடும்…’ என எனக்குள் எனக்கே தெரியாமல் கிடந்த பெரும் தீ சுவாலைகளை அடையாளம் கண்டு எழுப்பத் துவங்கினாள்.  ஒவ்வொரு செல்லிலிருந்தும் எழும்பிய அக்கினிக் குழம்பு அந்த வீட்டையே எரித்துவிடும் மூர்க்கத்தோடு எழ, மொத்த நெருப்பையும் ஆக்ரமிக்கும் ஆவேசத்தோடு என்மீதேறி இயங்கினாள். இதற்குமுன் ஒருபோதும் காணாத தரிசனத்தைக் கண்ட திகைப்பில் நான் அவள் அசைவிற்குக் கட்டுப்பட்டிருந்தேன்…. முற்பகல் வரை நீண்ட அந்தப் பொழுதுகள் அவள் மீது பெருங்காதலாக மாறத் துவங்கியது.


சென்னையில் நாங்கள் நிறைய சந்தித்துக் கொள்ள முடிந்தாலும் ஹட்டனில் இருப்பதைப்போல் நினைத்த நேரம் உடலுறவு கொள்வதற்கான வாய்ப்புகள் அமைவதில்லை. அவளையும் அவளது பொட்டிக்கையும் பராமரிக்க அவளுக்கொரு பாய்ஃபிரண்ட் இருந்தான். அவனோடு அவளுக்கு எந்தவிதமான பிணக்குகளோ வருத்தங்களோ இல்லை. அவர்கள் நல்ல நண்பர்களாக இருந்ததோடு தங்களுக்குள் சில ஒழுங்குகளையும் கடைபிடித்தனர். அதில் முக்கியமானது வீட்டிற்கு வெளியே யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம், ஆனால் ஒருபோதும் வீட்டிற்கு அழைத்துவர அனுமதியில்லை. ஹோட்டல் அறைகளில் காதலிக்கும் பெண்ணோடு உறவுகொள்வதில் எனக்கு பெரும் தயக்கமிருந்தது. முக்கியமான காரணம் எவ்வளவு பெரிய ஹோட்டலாக இருந்தாலும் ரிஷப்சனில் இருப்பவர்கள் பார்க்கும் பார்வை. ஒரு ஆணும் பெண்ணும் விருப்பத்தோடு உறவுகொள்வதை விபச்சாரமாக பார்க்கக் கூடிய நாட்டில் இந்தத் தயக்கம் இல்லாமல் எப்படிப் போகும்? இதனாலேயே நான் அவளோடு  ஹட்டன் வீட்டில் இருப்பதை அதிகம் விரும்பினேன். எனக்கும் அவளுக்குமான இடமாக இன்றளவிலும் அந்த வீடே நினைவிலிருக்கிறது.


ஆறேழு மாதங்களுக்குமேல்  தொடர்ந்த உறவில் எல்லாமே சரியாகத்தானிருந்து எங்களுக்குள். ஒருமுறை திருகோணமலையிலிருந்து வவுனியாவை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது அவளிடம் எப்போதுமில்லாத ஒரு சோர்விருப்பதைக் கவனித்தேன்…


என்னாச்சு கல்பனா? ஏன் ஒரு மாதிரி இருக்க?

’ஒன்னுமில்லடா…’

வழக்கமான சிரிப்புமில்லாமல் போக நான் விளையாட்டாக அவள் கழுத்தில் முத்தமிட்டேன்…

‘சும்மாரு நாயே… நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கன்ல…’

இந்த விளையாட்டுகளை விரும்புகிறவள் நிஜமாகவே கோவப்பட்டபோது அவள் வேறு ஏதோ குழப்பத்திலிருக்கிறாள் என்று புரிந்தது.

’வண்டிய நிறுத்து கல்பனா…’

’என்னடா ஆச்சு..?

‘அதான் நானும் கேக்கறேன்… என்னாச்சு ஒனக்கு…’

‘ஒன்னுமில்லடா நார்மலாத்தான் இருக்கேன்…’

‘இப்ப நீ உண்மையச் சொல்லலன்னா நான் வண்டிய விட்டு எறங்கிடுவேன்…’

நானும் பிடிவாதமாகச் சொல்ல சில நிமிடம் அமைதியாக இருந்தவள்

‘ட்ரிங்கோ வரவும் பழைய நியாபகம் லாம் வந்திருச்சுடா… என்னோட எக்ஸ் ஹஸ்பெண்ட் இந்த ஊருதான்… கல்யாணம் ஆகி இங்கதான் ஒரு வருசம் இருந்தோம்…’

எனக்கு சுருக்கென்றிருந்தது.


‘எக்ஸ் ஹஸ்பெண்டா? இத சொல்லவே இல்ல..?

‘அதுல சொல்லிக்கறதுக்கு எதுமில்லடா… அதான் சொல்லல.,,.. ஒரு வருசந்தான் அப்பறம் அவரு டிவோர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டாரு...’

அவள் சாதாணமாகச் சொன்னாலும் அந்தக் குரலில் ஒரு வேதனை இருந்தது.

‘உன்ன வேணாம்னு ஒருத்தன் சொல்லிட்டுப் போறான்னா அவன் லூசுதாண்டி…’

‘ஆமாடா காரியக்கார லூசு… என்னயவிட அழகா வேற ஒருத்தியக் கட்டிக்கிட்டுப் போயிட்டான்..’

‘உன்னவிட அழகா ஒருத்தியா?


நான் அந்தக் கேள்வியை சிலமுறை திரும்ப திரும்பக் கேட்க எரிச்சலானவள் தனது அலைபேசியை எடுத்து விதுஷிகாவின் இன்ஸ்டா பக்கத்தைக் காட்டினாள். நான் பேச்சற்றவனாக இருந்தேன். எனது கண்களை ஊடுருவிப் பார்த்தவள் ‘என்னடா ஒனக்கும் சிங்களத்தியப் பாத்த ஒடனே புடிச்சிருச்சோ… திங்கற மாதிரியே பாக்கற…’ எனக் கேட்டதும் சுதாரித்து சிரித்தேன்.


‘ச்சீ இல்லடி… உங்கிட்ட இல்லாதது அப்பிடி என்ன அவகிட்ட இருக்குன்னு பாத்தேன்… ஆமா சிங்களப் பொண்ணா இது?’


‘ம்ம் ஆமா… அவங்க அப்பா தமிழ், அம்மா சிங்களத்தி. நல்லா தமிழ் பேசுவா…’

நான் மேற்கொண்டு விதுஷிகாவைக் குறித்து பேசுவது நாகரீகமில்லையென முடிவுசெய்து ‘சரிடி முடிஞ்சத ஏன் யோசிச்சுட்டு இருக்க… அத மறந்துடு… இப்ப என்ன ஹேப்பியாத்தான இருக்க…’ என ஆறுதலாகச் சொன்னேன்.


‘மயிரு… ஹேப்பியா இருந்தா… இது ஃபர்ஸ்ட் லவ்டா… இன்னுமே அவர் மேல லவ் இருக்கு… ஒனக்கு லவ் பத்தி என்ன தெரியும்…’


நான் பதில் சொல்லாமல் அமைதிகாத்தேன்…

‘சரி மூஞ்சிய அப்பிடி வெக்காத… சகிக்கல…’

என்னிடம் சலனமில்லாததால் நான் செய்ததைப் போலவே அவளும் என் கழுத்தில் முத்தமிட்டு அழுத்தமாக கடித்துவைத்தாள்.

‘ஆவ்… வலிக்கிதுடி பன்னி…’ என நான் சிணுங்க,.. என் இதழ்களில் சின்னதாக முத்தமிட்டு அமைதிபடுத்தினாள்.


‘இப்ப எதுக்கு இந்த முத்தம்… அதான் இன்னும் ஒன் எக்ஸ லவ் பன்ற ல… அங்க போ…’

என நான் அவள் கைகளை விலக்க, அவள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜநிலைக்குத் திரும்பினாள்.

நெடுஞ்சாலையிலிருந்த ஒரு சிறிய உணவகத்தில் நாங்கள் தேநீருக்காக அமர்ந்தோம். இவ்வளவு நாட்களாக நான் பார்க்காத ஒருத்தியைப் பார்த்திருந்த ஆச்சர்யத்தில் நான்  அவளது முன்னால் கணவன் குறித்துப் பேச விரும்பினேன்… ஆனால் தயக்கமிருந்தது. எனது பார்வையின் அர்த்தங்களைப் புரிந்துகொண்டவள் ‘டேய் எனக்கு ஒரு ஆசடா…’

‘என்னன்னு சொல்லு…’

‘நாம ரொம்ப விரும்பற ஒருத்தர் நம்மள விட்டுட்டு இன்னொருத்தரோட போன அந்த வலி எப்பிடி இருக்கும்னு அவருக்குப் புரியனும்…’

‘அதுக்கு?’

‘நீ விதுஷி கூட பழகினா அது நடக்கும்…’

அவளது கண்களில் விளையாட்டுத்தனங்கள் மறைந்து முதல்முறையாக பழிவாங்கும் வெறிகொண்ட ஒரு மிருகத்தின் அடையாளங்களைக் கண்டேன்.

‘ஏய் எதாச்சும் லூசுத்தனமா ஒளறாத… யாருன்னே தெரியாத ஒருத்தர் கிட்ட எப்பிடி போயி பழகமுடியும். அதுமில்லாம எனக்கு ஒன்னப் பிடிச்சிருக்கு கல்பனா… உன்ன ரொம்ப லவ் பன்றேன்…’


’சரிடா… என்ன லவ் பன்ற.. எனக்காக எதாச்சும் செய்யனும்னு உனக்கு ஆச இருந்தா இத செய்…’ அவள் பிடிவாதமாகக் கேட்க நான் முடியவே முடியாதென்றேன்…

‘தேடிப்போயி ஒருத்தரப் பாத்து அவங்களுக்காக காத்திருந்து ஒரு திட்டத்தோட காதலிக்கிறதெல்லாம் என்னோட இயல்பு இல்ல கல்பனா… எனக்கு வரவும் வராது… வேற எது வேணாலும் கேளு… இதக் கேக்காத… ஸாரிடி…’


நான் பிடிவாதமாக இருந்ததில் ஏமாற்றமடைந்தவள் எதுவும் பேசாமல் உணவக மேசையிலிருந்து எழுந்துகொண்டாள்.  ஏமாற்றத்தின் பெரும் தாவரமொன்று எங்கள் இருவருக்குமிடையில் படர்ந்திருந்தது. வவுனியா சென்று சேரும்வரை நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  வெளிநாட்டிலிருந்து  வந்திருந்த அவளது தம்பியைச் சந்திக்கச் சென்றிருந்த நாங்கள் அந்த சந்திப்பையும் சரிவர செய்யவில்லை என்றானபின் எரிச்சலில் ‘என்னதாண்டி பிரச்சன ஒனக்கு… முடிஞ்சுபோனத எடுத்துட்டு வந்து இப்ப ஒரு பிரச்சனையா மாத்திட்டு இருக்க…’ என கடிந்து கொள்ள

‘எதுடா முடிஞ்சு போனது… நான் உங்கூட பழகறது வேற… ஆனா இது வேற… சந்தோசமா ஒரு வாழ்க்கைய ஆரம்பிக்கப் போறோங்கற நம்பிக்கைல இருந்த என்னய கருணையே இல்லாம விட்டுட்டுப் போனவன் அவன்…. சனியன மறந்தும் தொலைக்க முடியல… ஒரு பக்கம் அந்தக் காதல் பாடாபடுத்துது. இன்னொரு பக்கம் அவன்மேல இருக்க கோவம் அடங்கவே மாட்டேங்குது.. ஏன் பொம்பள எப்பவும் நல்லவளாவும் விட்டுக் குடுக்கறவளாவும் தான் இருக்கனுமா? ஒரு தடவ பழிவாங்கனும்னு நெனைக்கிறதுல என்ன தப்பு?’ என ஆத்திரமும் ஆவேசமுமாய்ப் பேசி ஓய்ந்தாள்.


யோசனைகளோடு அவளருகில் அமர்ந்த நான் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டேன்.

’சரி கல்பனா…. உன் விருப்பம் போல செய்றேன்..’

என்னை விலக்கிப் பார்த்தவள்

நெஜமாவாடா சொல்ற…?’ என நம்பிக்கையில்லாமல் கேட்டாள். ஆமென்று தலையாட்டியதும் கண்ணீரோடு வாரி அணைத்துக்கொண்டு முத்தமிடத் துவங்கினாள்.


விதுஷிகா இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலாஷேத்ராவிற்கு வருவதையும் எப்போது வந்தாலும் மகாபலிபுரத்தில் தங்குவாளென்பதையும் உடன் அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதென ஏராளமான தகவல்களை கல்பனா சொல்லியிருந்தாள்.


            மஹாபலிபுரத்தின் கடறகரை செல்லும் சாலையில் ஒரு சின்னஞ்சிறிய சந்தினுள்  இருந்த ஜோஸ் கஃபேயில் முதல்முறையாக விதுஷிகாவைப் பார்த்ததுமே ‘இவளோடு அறிமுகமாக நேர்ந்தால் உன்னால் அத்தனை எளிதில் மீளமுடியாது’ என உள்ளுணர்வு எச்சரித்தது. என்னால் திரும்பமுடியாது. கல்பனாவிற்கு வாக்குக் கொடுத்துவிட்டேன். இந்த கஃபேவிற்கு அவள் வழக்கமாக வரக்கூடும் என்பதை அறிந்துகொண்ட நான் அங்கே அடிக்கடி சென்று ஜோஸோடு நன்கு அறிமுகமாகியிருந்தேன்.  முதல் சந்திப்பிலேயே மனிதர்களை நண்பர்களாக்கிவிடும் அபூர்வமான ஆள் ஜோஸ்.  அழகான சிறிய கஃபே… பெரும்பாலும் அங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான உணவுகள்தான். காலை ஏழு மணியிலிருந்து  பதினோறு  மணிவரை பரபரப்பாக இருக்கும். பிற்பகலில் பெரிய கூட்டமோ ஆரவாரமோ இருக்காது. மாலை நான்கு மணிக்குமேல் மீண்டும் களைகட்டிவிடும். அன்றைய தினம் நல்ல கூட்டமிருந்ததால் ஜோஸுக்கு உதவும் பொருட்டு நானும் சிறிய வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். விதுஷிகா அருகிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருக்கிறாளென்கிற தகவல் எனக்கு முன்பே தெரிந்திருந்தது. நான் எதிர்பார்த்தது போலவே மாலையில் அங்கு வந்தவளிடம் ஜோஸ் என்னை அறிமுகப்படுத்தினான். ஆச்சர்யமாக அவளுக்கு என்னைத் தெரிந்திருந்தது.


உங்களோட நாவலப் பத்தி என்னோட ஹஸ்பெண்ட் நிறைய தடவ சொல்லி இருக்காரு…,’ என உற்சாகமாக சிரித்தாள். அடுத்த சில நிமிடங்களிலேயே நாங்கள் நிறைய பேசத் துவங்கியிருந்தோம்.
 

விதுஷிகா

 

மஹாபலிபுரத்தில் முதல்முறையாக கண்டபோது முகிலனை எழுத்தாளன் என்பதைத்தாண்டி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் அவனோடு பேசத் துவங்கியிருந்த ஓரிரு மணி நேரங்களிலேயே அவன்மீது நல்லவிதமானதொரு அபிமானம் உருவாகியிருந்தது. முக்கியமான காரணம் அந்த ஓரிரு மணிநேரங்களில் அவன் எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதுவுமே கேட்டிருக்கவில்லை. அன்று இரவு நான் அறைக்குத் திரும்புகையில்


‘விதுஷிகா உங்ககிட்ட ரொம்ப அபூர்வமான ஒரு சிரிப்பு இருக்கு… எதிர்ல இருக்கவன் நல்லவனா கெட்டவனா சுயநலவாதியா எதிரியா நண்பனான்னு எந்தவிதமான கெள்வியுமில்லாம சந்தேகமுமில்லாம பேசவும் சிரிக்கவும் ஒருத்தரால முடியும்னா அது ஒரு அதிர்ஸ்டம்..’ என்று அவன் சிரித்தபோது நான் சிரிப்பதை உடனடியாக கண்ணாடியில் பார்க்க வேண்டுமென குறுகுறுப்பு உண்டானது.


எத்தனையோ முறை புகைப்படங்களில் பார்த்ததுதான், ஆனாலும் அவன் குறிப்பிட்டபொழுது இருந்த பரவசத்தை முன்னெப்போதும் உணர்ந்திருக்க முடியவில்லை.


‘நீங்க எங்க ஸ்டே முகில்?’


‘ஜோ வோட கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு சின்ன ரூம்… இங்க இருந்து கிளம்பினா ஒரு மணிநேரத்துல வீட்டுக்குப் போயிடலாந்தான்… ஆனா  ராத்திரில இந்த ஊரோட அமைதிக்கு நடுவுல கடலோட சத்தத்தக் கேக்க நல்லாருக்கும். அதனாலேயே கதை எழுதறப்போல்லாம் இங்க வந்துடுவேன்..’


‘நானும் நிறைய முற இங்க தங்கி இருக்கேன். ஆனா ராத்திரில வெளில போனதில்ல.,.. பயம்… இன்னைக்கு நீங்க கூட்டிட்டுப் போறீங்களா?’


அவன் சிரித்தான்.


‘முன்னபின்ன தெரியாத ஒருத்தர இவ்ளோ நம்புவீங்களா?


‘முன்னபின்ன தெரியாட்டி என்ன? எனக்குத்தான் டேக்வாண்டோ தெரியுமே… ரைட்டர் சில்மிஷம் பண்ணலாம்னு ட்ரை பண்ணா அவருக்குத்தான் டேமேஜ் ஆகும்…’ என நான் ஒரு கையையும் காலையும் உயர்த்திக் காட்ட அவன் பயப்படுவதுபோல் உடலைக் குறுக்கிக்கொண்டு சிரித்தான். தூரத்தில் ஒரு வால்நட்சத்திரம் வேகமாய் நகர்ந்து கடலில் விழுந்தது.


பத்துமணிக்கெல்லாம் மனித நடமாட்டம் அடங்கிவிடும் இந்த ஊரில் இரவின் நித்யத்துவமான ஒரு அமைதி படர்ந்திருந்தது. நான் அறையிலிருந்து வெளிக்கிட்டு ஜோஸின் கெஸ்ட் ஹவுஸை அடைந்தபோது முகில் எனக்காக வாசலில் காத்திருந்தான்.

‘தம் இருக்கா ரைட்டரே...’ என நான் உரிமையோடு கேட்க

‘பழக்கமில்ல விதுஷிகா..’ என்றான்.


‘சரியான பால் டப்பாவா இருப்பீங்க போல… எனக்கு தம் வேணுமே..’

‘வாங்கிக்கலாம் வாங்க…’


பகலில் அணிந்திருந்த கருப்பு நிற சட்டையை மாற்றிவிட்டு பிங்க் ஃப்ளாய்ட் படமணிந்த டீஷர்ட் அணிந்திருந்தான்… கடல்காற்றிலிருந்த குளிர்ச்சிக்கு மெல்லிய வெப்பம் தேவைப்பட்டதால் அவனைக் கேட்காமலேயே ஒரு கையை கோர்த்துக் கொண்டேன். சிரித்தபடியே விரல்களைப் பற்றிக் கொண்டவன் நிதானமாக நடந்து அந்த வீதியின் இடது முனையிலிருந்த கடையில் எனக்கு சிகரெட் பாக்கெட்டை வாங்கினான்.


‘அச்சோ  ஒன்னு போதும் …’

‘பரவால்ல இருக்கட்டும். எப்பிடியும் ராத்திரிக்கு வேணும்ல..’

சிரித்தபடியே சிகரெட்டுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பி என்னை அழைத்துக் கொண்டு எதிர்த் திசையில் கடற்கரை நோக்கி நடந்தான். சிறுசிறு கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு வாசலில் நாய்கள் உறங்கிக் கிடந்தன. ஆள் நடமாட்டத்தைக் கண்டு ஒன்றிரண்டு நாய்கள் எழுந்து குரைத்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டன.


‘கடல் புடிக்குமா முகில்?’

‘இல்ல காடும் மலையும்தான். இங்க சென்னை ல எங்க போறது… அதான் கடற்கரைக்கு வரேன்…’

‘ஓ எனக்கு கடல் தான் புடிக்கும்…’

‘உங்க ஊர்ல இல்லாத கடற்கரையா? கலே, பாசிக்குடா, ட்ரிங்கோ பீச் எல்லாம் இதவிட அற்புதமான இடமாச்சே…’

‘ஆனா அங்க எல்லாம் பல்லவர்கள் வாழலையே…’


நான் சிரித்தபடி பல்லவர்களது கலைகளின் மீது எனக்கிருந்த ஆர்வத்தை விளக்கினேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டே வந்தவன் ஒரு இறக்கத்தில் குதித்து இறங்கினான். கற்கள் உயரமாக அடுக்கப்பட்டிருந்ததால் நான் அணிந்திருந்த பாவாடையோடு இறங்குவதற்கு சிரமமாக இருக்க நான் தயங்கினேன்..

ஒரு நிமிஷம்.. என திரும்பி நின்றவன்


‘ரெண்டு காலையும் என் ஷோல்டர் ல போட்டு உக்காந்துக்கங்க…’

என சொன்னபோது சில நொடிகள் நான் எதுவும் செய்யாமல் அப்படியே நிற்க… அவன் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். அந்த இருளில் அவனது கண்களில் தெரிந்த மெல்லிய வெளிச்சம் அவனை சந்தேகப்பட வைக்கவில்லை. நான் கூச்சத்தோடு அவனது தோள்களில் அமர்ந்துகொள்ள மெதுவாக தூக்கி கடற்கரையை ஒட்டிய பாதையில் இறக்கிவிட்டான்…


‘ஜோஸ கண்டிக்கனும் இனிமே…’

‘ஏன் அவரு என்ன செஞ்சாரு?’

‘எல்லா டிஷ்ஷும் டேஸ்ட்டா செஞ்சு குடுத்துடுறாரு… நீங்களும் நல்லா ஃபுல் கட்டு கட்டிடறீங்க… கூட நடந்து வர்றப்போ தெரியல… தூக்கறப்போதான் தெரியுது… யம்மா… எவ்ளோ கனம்..’


அவன் தோள்களைப் பிடித்து வலியோடு சொல்ல நான் சிரித்தபடி அவனது தோளில் அடித்தேன். ‘டேய் போடா…’ அந்த உரிமையும் நெருக்கமும் அந்த நொடியில் எவ்வாறு வந்ததெனத் தெரியவில்லை.  அலைகளின் பேரோசை வெளியை நிரப்பியிருக்க, காற்றில் உடைகள் படபடத்தன.  காற்றுக்கு எதிர்த் திசையில் நின்று நான் சிகரெட்டைப் பற்றவைத்தபோது எனது இதழ்களை கவனமாகப் பார்த்தவனிடம்


‘என்ன ஸார் அப்பிடி பாக்கறீங்க….? தம் வேணுமா?’


‘ச்ச… ச்ச… எனக்கு ஸ்மோக் பண்ண புடிக்காது… ஆனா ஸ்மோக் பன்ற பொண்ணுங்கள புடிக்கும்…’

‘பார்ரா… ஏனாம் அப்பிடி…’


நான் நிதானமாக சிகரெட்டின்  புகையை இழுத்துக்கொண்டே ஆர்வமாகக் கேட்டேன், காற்றில் எனது கூந்தல் பைத்தியம் பிடித்த பிசாசைப்போல் பறந்து கொண்டிருக்க அதனை இழுத்துக் கட்டமுடியாமல் தடுமாறினேன். என்னை நெருங்கி வந்தவன் பின்னாலிருந்து எனது நீண்ட கூந்தலை இரு கைகளாலும் அள்ளி அழகாக கொண்டைபோட்டு இறுக்கினான்.


‘சின்ன வயசுல எங்க ஆயா சுருட்டு புடிக்கிறதப் பாத்திருக்கேன்… செம்ம ஸ்டைலா இருக்கும்… அதனாலேயே சிகரெட் புடிக்கிற பொண்ணுங்களப் பாத்தா எங்க ஆயா நெனப்பு வந்துடும்…’


நான் அவனை முறைத்தேன்…


‘ஓ அப்போ நான் ஆயாவா? போடா பன்னி..’ என்றபடியே இந்தமுறை வலிக்கும்படியாகவே அவன் தலையில் அடிக்க எனது கையிலிருந்து சிகரெட் நழுவி விழுந்தது. அவசரமாக அதனை எடுத்து தூசியைத் தட்டிக் கொடுத்தான்.

கடல் அலைகளின் நடுவே இருளுக்குள் பல்லவர்கள் கோவில் ரம்மியமானதாய் உறைந்திருக்க நாங்கள் இருவரும் அதனை பார்த்தபடியே நின்றிருந்தோம்…. ‘யாரிவன்? எதனால் முதல் சந்திப்பிலேயே இப்படியானதொரு நெருக்கம் வரவேண்டும்? எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.


‘வாங்க விதுஷிகா கோவில் வரைக்கும் நடக்கலாம்…’


அவன் கடற்கரையிலிருந்து அலைவந்து காலை தொட்டுச் செல்லும் எல்லையில் கடல் நீரில் கால் நனைத்தபடியே அழைத்துச் சென்றான்.  எங்களுக்குப் பின்னால் மீனவர்கள் காலையில் கடலுக்குச் செல்வதற்காக படகுகளைத் தயார் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் ஆள் நடமாட்டமில்லாத பகுதியை நோக்கிச் செல்வதைக் கவனித்த மீனவர் ஒருவர் எச்சரிக்கும் விதமாக ‘ப்ரோ அந்தப் பக்கமா ரொம்ப தூரம் போ வேணாம்… சிட்டிக்குள்ள இருந்து வர்ற பசங்க ட்ரக் அடிச்சுட்டு சுத்துவானுங்க… புது ஆளுங்க கிட்ட வம்பிழுப்பானுங்க…’ என்றார்.


‘அண்ணா நான் நம்ம ஜோஸோட கஸின்… நல்லா தெரிஞ்ச ஏரியாதான்’ என அவசரமாக முகில் சொல்ல அவர் ‘செரி செரி பாத்துப் போங்க… எதுனாச்சும் ஒன்னுன்னா யோசிக்காம கொரல் குடுங்க…’ என சிரித்தார்.


‘எவ்ளோ ஃப்ரஃண்ட்லியா இருக்காங்க ல… எங்க ஊர்ல நிறைய இடங்கள் ல இந்த மாதிரி ஃப்ரண்ட்லியான ஆட்கள பாக்கவே முடியாது…’

அவன் சிரித்தான்.


‘இவங்க பல்லவர்களோட தொடர்ச்சி விதுஷி… அந்தக் கர்வம் இந்தப் பக்கத்துல பூர்வீகமா இருக்க எல்லாருக்குமே இருக்கும். அதுமட்டுமில்லாம சிட்டிக்குள்ள இருந்து பணக்கார வீட்டு பசங்க போதைப் பொருள் எடுத்துட்டு இங்க வந்து எஞ்சாய் பன்றாங்க… ஆனா கடைசி ல கெட்ட பேர் வாங்கறது உள்ளூர் ஆளுங்க… இங்க இருக்க பல பேருக்கு குடிப் பழக்கமே இருக்காது…’ நாங்கள் பேசிக் கொண்டே கோவிலை நெருங்கியிருந்தோம். எத்தனையோ முறை பார்த்திருந்த கோவில்தான், ஆனாலும் இதுபோன்றதொரு இரவில் இந்தக் கடலின் ஆர்ப்பரிப்பில் பார்ப்பதற்கு மகோன்னதமாக இருந்தது. உடலில் மெல்லிய சிலிர்ப்பு உருவாக எனக்கு அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. நாகரீகம் கருதி கட்டுப்படுத்திக் கொண்ட நான் அவனது ஒரு கையை மட்டும் என் உடலோடு இறுகக்க் கட்டிக்கொண்டு ‘தேங்க்ஸ்டா… ரொம்ப நல்லாருக்கு…’ என சிரித்தேன்…


‘அட இதுக்கெல்லாமங்க தேங்க்ஸ்…’

‘பொம்பள நானே போடா வாடான்னு கேஷ்வலா பேச ஆரம்பிச்சிட்டேன்… நீ என்ன இன்னும் போங்க வாங்கன்னு சொல்லிட்டு இருக்க…’

அவன் தயங்கி நின்றான்…


’இல்ல விதுஷிகா… ஒரு இடைவெளிய தாண்டி யாருகிட்டயும் நான் உரிமை எடுத்துக்க ஆரம்பிச்சிட்டா என்னயக் கண்ட்ரோல் பன்றது கஷ்டம் அதான்…’

‘ஓ அப்பிடியா? அதையும் பாக்கலாம். இன்னும் ரெண்டு நாள் இங்கதான இருக்கப் போறேன்…’

‘நீங்க இருங்க. நான் காலை ல வீட்டுக்குப் போறேன்…’


அவன் விளையாட்டாகச் சொல்கிறான் என்றுதான் நினைத்தேன், ஆனால்  எந்தவிதமான தொடுதலும் அத்துமீறலுமில்லாத அபூர்வமான இரவை பரிசளித்தவன் அடுத்தநாள் காலை என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே கிளம்பிச் சென்றுவிட்டிருந்தான். காலை ஜோஸின் கஃபேயில் அவனை எதிர்பார்த்து சென்றபோது ‘ஹலோ மேடம், முகில் ப்ரோ விடிகாலைலயே கிளம்பிட்டாரு… நீங்க வந்தா சொல்லச் சொன்னாரு…’ என ஜோஸிடமிருந்து தகவல் மட்டுமே எனக்குக் கிடைத்தது.


என்ன மனிதன் இவன்? ஒரு விடைபெறுதல் இல்லை, குறைந்தபட்சம் அவனது முகவரியோ, அலைபேசி எண்ணோ கொடுத்துச் சென்றிருக்கலாம்…  என்னிடம் நெருங்காமல் இருப்பதற்குப் பின்னால் வேறு பெண் இருக்கக் கூடுமா? இருக்கட்டுமே… நானொரு தோழனாகத்தானே அவன் அருகாமையை விரும்பினேன்.

மேசையில் வைக்கப்பட்ட உணவை விருப்பிமின்றி பார்த்துக்கொண்டே யோசனையிலிருந்தவள், சுற்றியிருப்பவர்கள் என்னைக் கவனிக்கக் கூடுமென்கிற பிரக்ஞையில் தேனும் எலுமிச்சையும் கலந்த பேன் கேக்கை உண்ணத் துவங்கினேன். மெல்லிய ஒலியில் எடித் ஃபியாஃபின் பாடலொன்று கஃபேயில் ஒலிக்கத் துவங்க இரண்டு மேசைகளில் அமர்ந்திருந்த முதிய ஃப்ரஞ்ச்க்காரர்கள் உற்சாகமாக இசைக்குத் தலையாட்டினார்கள். உணவுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பியபோது ஜோஸ் எனது கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். பிரித்துப் பார்த்தபோது அதில் முகிலின் அலைபேசி எண் இருந்தது. இப்பொழுது எடித் ஃப்யாவின் குரல் என்னைக் கிளர்த்துவதை உணர்ந்த நான் ஜோஸுக்கு நன்றி சொன்னேன்.


ஒரு நாளைக்கு முன்பாகவே அறையைக் காலி செய்துவிட்டு  சென்னை நகரத்திற்குள்ளிருக்கும் உறவினரின் வீட்டிற்கு சென்றவள் அன்று மாலை முகிலைச் சந்திக்க வேண்டுமென்கிற விருப்பத்தால் உந்தப்பட்டேன். ஆனால் அவன் எங்கு இருப்பான்? நாமே தேடிச்சென்றால் நம்மைக் குறித்து என்ன நினைப்பான்?  அவன் என்னிலிருந்து விலகிய நொடியிலிருந்தே அவனை நெருங்க வேண்டுமென்பதில் ஏன் இத்தனை குறுகுறுப்பு. முப்பது வயதைக் கடந்தபின்னும் உடலில் புதிது புதிதாக வேர்விட்டுத் துளிர்க்கிற இந்த அபூர்வ உணர்விற்குக் காரணமென்ன? அவன் வீட்டிற்குச் செல்லலாமா? வேண்டாம்…


எனது உறவினரின் சகோதரியை அழைத்து அவளிடம் முகிலைக் குறித்த விவரங்களைச் சொல்லி ‘நார்வே ல இருந்து வந்திருக்க வாசகின்னு சொல்லு. உன்னோட உண்மையான பேரவே சொல்லு. உன்னோட நம்பர் ல இருந்தே பேசு…. நாளைக்குக் காலைல ஊருக்குப் போகனும்.. அதுக்கு முன்ன உங்க புக் ல கையெழுத்து வாங்கனும்… நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நானே நேர்ல வரேன்…; எனக் கேட்கச் சொன்னேன்.


அவள் என்னை வினோதமாகப் பார்த்தாள். ‘அக்கா நீ வேண்டாத வேல பாக்கற… எழுத்தாளனுங்களுக்கு இவ்ளோ இம்பாட்டன்ஸ் குடுக்கறது வெடிய பத்தவெச்சு அதுல நீயே ஏறி உக்காந்துக்கற மாதிரி…’ என்றாள்.


‘ஏய் எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒளறாத… சொன்னத செய்டி..’ என செல்லமாகக் கடிந்துகொண்டேன். ஓரிரு நிமிடங்களிலேயே சந்திப்பை உறுதி செய்தவள் மாலை அண்ணாநகரில் உள்ள கிம்லிங்  உணவகத்திற்கு வருவதாகச் சொன்னாள்.  அந்த நொடியில் என் கண்களில் தெரிந்த ஒளியைக் கவனித்த எவருக்கும்  உடனடியாக எவரையாவது காதலிக்க  வேண்டுமென்கிற தூண்டுதல் வந்துவிடும்.  மிக மோசமான தொற்றுநோயைப் போன்றதொரு ஒளி.  நேசத்தின் மகத்துவமே அது சூறாவளியைப்போல் திடீரெனக் கிளம்பி தன்னைச் சூழ்ந்திருக்கும் யாவற்றையும் அடித்துச் செல்லும் வல்லமை கொண்டது. அந்த நொடி நானொரு சூறாவளியாகியிருந்தேன். ஆனால் அதுதான் காதலாவெனச் சொல்லத் தெரியவில்லை.


மாலை ஏழு மணிக்கு சொன்னதுபோலவே கிம்லிங் வந்தவன் பெரிய அலட்டல்கள் எதுவுமில்லாமல் எனது சகோதரியிடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் வந்த பிறகுதான் உணவகத்திற்குள் செல்லவேண்டுமென காரிலேயே காத்திருந்த நான் சில நிமிடங்களுக்குப்பின் உள்ளே செல்ல அந்த நிமிடத்தில் அங்கு என்னைப் பார்த்ததில் எந்தவிதமான ஆச்சர்யத்தையும் காட்டிக் கொள்ளாதவனாக இயல்பாகச் சிரித்தான்.

ஊருக்குப் போகலையா? இங்க என்ன செய்றீங்க?


‘இந்த ஹோட்டல் ல ரசவடை நல்லா இருக்கும்னு சொன்னாங்க… அதான் வந்தேன்…’

நான் அவனை முறைத்தேன்… எங்கள் இருவரையும் கவனித்த எனது சகோதரி

’அக்கா போதும் உன் ட்ராமால்லாம்…. எனக்கு இவரோட பேச போர் அடிக்கிது… நீயே வந்து உக்காந்து பேசு… நான் பக்கத்து டேபிள் ல உக்காந்து சாப்பிடறேன்…’ என எழுந்துகொண்டாள். என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்றதற்கான காரணத்தை அவனும் சொல்லவில்லை, நானும் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாக இந்த உலகத்தின் அத்தனை அபூர்வமான விஷயங்களையும் அவனோடு பேசித் தீர்க்கவேண்டுமென்கிற தவிப்பு எனக்குள் எழுந்தது. எனது மனமும் உடலும் தவிப்பது தெரிந்தும் அவன் நிதானமாகவே இருந்தான்.


‘எனக்கு ட்ராவல் பண்ண நல்ல கம்பெனி யாருமில்ல… உங்களுக்குத்தான் காடு மலைன்னு சுத்தப் பிடிக்குமே… எங்க ஊருக்கு வர்றீங்களா? ஒரு டிரிப் போகலாம்… இல்ல இங்கயே நார்த் ல எங்கியாச்சும் போறதுன்னாலும் எனக்கு ஓகே…’

நானேதான் விருப்பத்தை வெளிப்படுத்தினேன்…

‘ம்ம்.. நல்ல ஐடியாங்க.. போலாம்… என் கேர்ள் ஃப்ரண்ட் கூட சொல்லிட்டு இருந்தா.. ட்ரிப் போகனும்னு… நீங்களும் வாங்க சேந்து போகலாம்…’

‘ஏன் செத்துப் போன உங்க ஆயாவையும் கூட்டிட்டு வாயேன்…’

ஒரு கத்தியின் வீச்சைப்போல் வெளிப்பட்ட எனது கோவத்தைக் கண்டு சிரித்தவன் ‘எங்க ஆயாவ உப்பு மூட்டத் தூக்கிட்டு போகனும். யாரு தூக்கறது..?’ எனக் கேட்டான்.

‘வெளயாடாம சொல்லு முகில்…’

சில நிமிடங்கள் யோசித்தவன் ‘சரிங்க போலாம்…’ என சம்மதித்தான்.


            அந்த நாள் நாங்களிருவரும் ஒரு உறவுக்குள் செல்வதாக எந்தவிதமான தீர்மானங்களுமில்லாமல் உறவைத் துவங்கினோம். ஒருமுறைகூட லவ்யூ சொல்லிக்கொள்ளாத, ஒருமுறை கூட மிஸ்யூ சொல்லிக்கொள்ளாத ஒரு காதல்… அவன் அப்படியாகத்தான் என்னை பாவித்தான்.  மிஸோரத்திலிருக்கும் ரெயிக் என்னும் கிராமத்தில் ஒரு வார காலம் அவனோடு தங்கியிருந்த அந்த முதல் பயணம் எனது முப்பது வருட வாழ்க்கையையும் மாற்றக்கூடிய வல்லமை கொண்டதென்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உண்மையில் அவன் எனக்காக பிரத்யேகமாக எதையும் செய்யவில்லை. அந்த அருகாமையும் அவனுடனான உரையாடலும் மட்டுமே என்னை ஒவ்வொரு நாளும் நிறைவடையச் செய்தது. கடவுளும் சாத்தானும் ஒன்றாய்ச் சேர்ந்து உருவாக்கிய கள் நொதித்துப் பொங்கினால் எப்படியிருக்குமோ அப்படியொரு பூரிப்பும் நிறைவுமாயிருந்தேன் நான்.   உடலின் ஒவ்வொரு சிறு பகுதியிலிருந்தும் ஒரு நூறு பட்டாம்பூச்சிகளை உயிர்ப்பித்து எழுப்பியவனை ஒரு மந்திரக்காரனாகவே பார்த்தேன். சொற்களாலும் புன்னகையாலும் வசீகரிக்கும் மந்திரக்காரன். ஊருக்கு வெளியே இருந்த மலைமுகட்டில் கிளம்புவதற்கு முந்தைய நாள் மாலையில் ‘எனக்காக ஒருமுறை நடனமாடுவாயா?’ என அவன் கேட்டதுதான்  தனக்காக அவன் என்னிடம் வேண்டிக்கொண்டது. அவன் நின்ற இடத்திலிருந்து நான்கடி உயர புல்மேட்டில் நின்றிருந்த நான் குனிந்து அவன் முகம் நெற்றி கழுத்தென முத்தமிட்டு மூச்சுவிடக் கூட அவகாசமில்லாமல் அவனை ஆக்ரமித்தேன். ஒருவார  காலம் ஒரே அறையில் தங்கியிருந்தும் எனதுடலை அவன் தீண்டியிருக்காததில் தவித்துப்போன நான் அந்திசாயும் அந்த மாலையில் அவன் அனுமதி இல்லாமலேயே அவனை எடுத்துக்கொள்ளத் துவங்கினேன்.


‘ஏய் என்னாச்சு ஒனக்கு? பொறு விதுஷி…’ என விலக்கியவன் ‘எனக்கும் இதெல்லாம் வேணும்… ஆனா அதுக்கு முன்னாடி  உன்னோட நடனத்தப் பாக்கனும். நான் மட்டுமே பாக்க முடியற நடனம்…’ எனக் கேட்க நான் உடையை சரி செய்துகொண்டு நடனமாடத் தயாரானேன். அலைபேசியில் அவன் பாடலை ஒலிக்கவிட நான் அவனுக்காக மட்டுமே ஆடுகிறோம் என்கிற கர்வத்தோடு ஆடத் துவங்கினேன். எனது நிழல் மலைச்சரிவில் மெல்ல நகர்ந்து தொலைந்தது. தனது சிறிய கண்களை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் நான் ஆடி முடித்ததும் என்னை அள்ளி அணைத்துக் கொண்டான். நான் காத்திருந்த முத்தங்களை மூச்சுமுட்ட தந்தவன் அன்றிரவு நீண்ட புணர்ச்சிக்குப்பின் ‘உன்னுடைய நிழலும் நர்த்தனமாடும் அபூர்வமான பெண் நீ..’ என என் காதிற்குள் சொன்னபோது வேறு எவரும் அறிந்திராத எனது பெண்மையை அறிந்தவனாக பூரித்த நான் அவனது மென்மையான உடலுக்குள் புகுந்து கொண்டேன்.


அதன்பிறகு எங்கள் சந்திப்புகள் சென்னையிலும் கொழும்பிலுமாக சந்தோசமாகவும் நிறைவாகவும் இருந்தது. வசந்தனுடனான எனது உறவில் எந்தவிதமான குழப்பங்களும் வந்துவிடக்கூடாதென்பதில் கவனமாயிருந்த நான் இவனுக்கான இடத்தையும் விட்டுக் கொடுத்திருக்கவில்லை.  வசந்தன் கிழக்கு மாகாணத்தில் பணியிலிருந்ததால் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே கொழும்பு வருவார்.  மற்றைய நாட்களில் பகல் நேரங்களில் என்னிடம் நடனம் கற்றுக்கொள்ள வரும் மாணவிகளைத் தவிர்த்து வேறு யாரும் என்னைப் பெரிதாகத் தொந்தரவு செய்வதில்லை என்பதால் முகில் இங்கு வந்து செல்வதில் பெரிய தடைகளெதுவும் இருந்திருக்கவில்லை. சமயங்களில் அவனில்லாத நாட்களிலும் கூட அவனது வாசனையை என்னால் உணரமுடியும். மெல்லுடல் கொண்ட ஆண்களுக்கு மட்டுமேயான பிரத்யேக வாசனை. எளிமையான சிங்கள உணவுகளும் மதுவும் இசையுமாய் கழியும் பொழுதுகளில் நான் எனக்கு விருப்பமான இசைத் துணுக்குகளையும் அவன் தனக்கு விருப்பமானவற்றையும் பகிர்ந்துகொள்வோம். காதலின் உச்சநிலை உங்களுக்கு விருப்பமான இசைக்கோர்வைகளை உங்கள் இணையருடன் சேர்ந்து கேட்டபடி புகைப்பதிலோ புணர்வதிலோதான் இருக்கிறது.  


ஒரு பயணத்தில் சிரபுஞ்சியின் மலைகளுக்கு நடுவே சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தபடி நான் அவன் மடியில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்த நாளில் நான் பலநூறு முறை பல நூறு உயிரினங்களாய்ப் பிறப்பெடுத்துக் கொண்டிருந்தேன். அந்த இறுதி நொடியில் அவன் தனது அலைபேசியில் nothing is gonna hurt you baby பாடலை ஒலிக்கவிட்டான். என்றென்றைக்குமாய் அவனுக்குள்ளிருந்துவிட வேண்டுமென நான் கண்ணீரோடு அணைத்துக் கொண்டேன்.


எழுத்தாளர்க்கேயான சில வினோத பிரச்சனைகள் அவனுக்குண்டு. பண்டிகளைகள் ஆகாது, இரைச்சல் ஆகாது, கூட்டம் ஆகாது, ஆனால் கண்டி நகரின் பெரஹர திருவிழாவை ரசிக்கக்கூடியவனாக இருந்தான். என்னோடு  வந்த இரண்டுமுறையும் அவனது முழுமையான மகிழ்ச்சியைக் கண்டிருந்தேன். அதனாலேயே  அவனோடு ஒரு ஈஸ்டரைக் கொண்டாட வேண்டுமென்கிற விருப்பம் இயல்பாக வந்தது. 2019 ம் வருடத்தின் ஈஸ்டருக்கு நாங்கள் முழுமையான உற்சாகத்தோடு தயாராகியிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக வஸந்தன் விடுமுறையில் வருவதாகச் சொல்லிவிட்டார். தவிர்க்கவே முடியாமல் முகிலின் பயணத்தை தள்ளிவைக்க வேண்டுமென்கிற நெருக்கடி வந்துவிட அந்த நாட்களை நான் சிரமத்தோடு எதிர்கொண்டேன்.


ஒருபுறம் ஈஸ்டர் தாக்குதலால் இலங்கை முழுக்க உருவாகியிருந்த பதற்றம், இன்னொரு புறம் அந்த நிகழ்வு முடிந்த இரண்டு வாரங்களுக்குப்பின் எனக்கு வந்த சில தகவல்களும் புகைப்படங்களும். நான் முற்றாக நிலைகுலைந்து போனேன்.  நான் பார்க்காத இன்னொரு முகில் இருக்கிறானென்பதையும் என்னை விடவும் அதிகமாக இன்னொரு பெண்ணையும் அவனால் நேசிக்க முடியுமென்கிற உண்மை தெரிந்தபோது முற்றாக நொறுங்கியிருக்க எல்லாவற்றிலும் உச்சமாய் அவள்தான் வசந்தனின் முன்னாள் மனைவி என்பதும் தெரியவந்தபோது எனக்கான சிறிய உலகத்தின் எல்லோராலும் துரோகிக்கப்பட்ட பெருவலியோடு நொறுங்கிப் போனேன். 

கல்பனா

 

            எல்லாமே ஒரு கனவைப்போல் என் முன்னாலிருந்து மறைந்துபோகத் துவங்கியது. வசந்தன் என்னை ஒருபோதும் டி என்று அழைத்ததில்லை. வாங்கோ போங்கோ என்றோ கல்பனா என்றோதான் அழைப்பவர். என்னை முதல் முறையாக டி என்று அழைத்தது முகில் தான்.  விளையாட்டுத்தனங்களும் கேலியும் நிரம்பிய ஒருவனாக மட்டுமே அவனை எதிர்கொண்டிருந்த எனக்கு சில நாட்களிலேயே என்னுடலில் அவன் காட்டும் தீவிரத்திலும் புணர்வுக்குப்பிறகு என் மீது காட்டும் காதலும் என்னை மகிழ்ச்சியானவளாக்கியது. வசந்தனுக்குப் பிறகு நிறைய ஆண்களின் காதலை எதிர்கொண்டு கடந்திருந்தாலும்   அவையெல்லாமே ஏதோவொரு எதிர்பார்ப்பின் நிமித்தமாக மட்டுமே வந்துபோனதாக இருந்தது. என்னையும் எனது உடலையும் தவிர வேறெதையும் எதிர்பார்க்காத ஒருவனாக இவன் மட்டுமே இருந்தான். இவனிடம் முழுமையாக வீழ்ந்துவிடக் கூடாதென்கிற பிடிவாதம் மட்டுமே எனக்குள்ளிருந்த காதலின் தீவிரத்தையும் என் வேட்கையையும் முழுதாக அவனிடம் வெளிக்காட்டாமல் தடுத்துக் கொண்டது.  


திருகோணமலை பயணத்திலிருந்து திரும்பியபோது எந்த நம்பிக்கையிலும் துணிச்சலிலும் அப்படிக் கேட்டேன் எனத் தெரியவில்லை. இப்பொழுது புரிகிறது, வசந்தனை விடவும் இந்த உலகில் வேறு எவரையும் விடவும் என்னை எல்லையின்றி நேசிக்க ஒருவன் இருக்கிறான் என்கிற அகம்பாவமான உண்மையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தவே நான் முகிலிடம் அந்த கோரிக்கையை வெளிப்படுத்தினேன். விதுஷிகாவோடு அவனை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னபோது எனக்கு அவர்களுக்குள் ஒரு உறவு முளைக்குமென்பதில் நூறு சதமான நம்பிக்கையில்லை. ஆனால் ஒரு சிலவாரங்களிலேயே அவன் விதுஷியைச் சந்தித்ததாக சொன்னபோது முதல்முறையாக நடுக்கமுற்றேன். என்னிடமிருந்து  மகிழ்ச்சி நிரம்பிய புன்னகை மறையத் துவங்கியது.


‘எனக்கு இது சரியா வரும்னு தெரியல கல்பனா… உம்மேல ஆசைய வெச்சுக்கிட்டு அவகூட நெருங்கிப் பழக கஷ்டமா இருக்கு. அவ அழகா இருக்கா. அவளப் பாத்தா எனக்கும் உணர்ச்சிகள் வருது…. ஆனா ஏதாவதொரு தருணத்துல செக்ஸும் காதலும் வளரத் துவங்கிட்டா தேவையில்லாம இன்னொரு பெண்ண இதுக்குள்ள இழுத்து விட்ற மாதிரி ஆகிடுமோன்னு தோணுது… எனக்கு உணர்ச்சிகள கவனமா கையாள்ற பக்குவம் இல்லடி..’


என சோர்வோடு சொன்னான்.


‘டேய் இதப் பாரு…. இன்னும் கொஞ்ச நாள் பழகு…. அதுகூட கட்டாயம் இல்ல… எனக்குப் புரியுது நான் செய்றது தப்புன்னு… ஆனா அடிபட்ட மிருகத்துகிட்ட நியாயம் தர்மத்த எதிர்பாக்காத….’


எனது கண்களை உற்றுப்பார்த்தவன் அன்று நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை.

‘எனக்கும் உங்கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு இருக்கு… உன் ரூம் போலாமா?’

‘இல்ல கல்பனா பசங்க இருக்க ரூம்… சுத்தமா இருக்காது… அதுமில்லாம அந்த மாதிரி ஒரு இடத்துல உங்கூட என்னால இருக்க முடியாது…’

‘சரி டா மகாப்ஸ் போலாம்… நல்ல ரிசார்ட் எங்கியாச்சும் தங்கலாம்…’


நான் என் எச்சரிக்கைகளையும் மீறி அவனிடம் வீழ்ந்துகொண்டிருந்ததை உணர்ந்தாலும் அப்படி அவனிடம் கேட்டதை தவிர்க்க இயலவில்லை.


’இல்லடி இங்க வேணாம்… நாம ஊருக்குப் போலாம்…’ என சொல்லிவிட்டான்…

பண்டிகை காலமென்பதால் வியாபாரத்தை சில நாட்கள் நானே கவனிக்க வேண்டிய சூழல் ஒருபுறமும் தங்கை ஒருத்தியின் திருமணம் காரணமாகவும் சில வாரங்கள் என்னால் அதன்பிறகு அவனை சந்திக்க முடியவில்லை.


ஒரு அக்டோபர் மாதத்தில் பெரும் பசியோடு அவனைத் தேடியபோது கொழும்பிலிருப்பதாக செய்தி அனுப்பியிருந்தான். நிச்சயம் விதுஷியொடுதான் இருப்பான் என்கிற நம்பிக்கையில் ஒருபுறம் எனக்கு குரூரமான மகிழ்ச்சியும் இன்னொரு புறம் எனக்கானவனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்கிறோமோ என்கிற தவிப்பும் எழுந்தது. ஆனால் இந்த விளையாட்டில் வேறு மாற்றுவழியில்லை.   நான் விட்டுக்கொடுப்பது எனக்கானவனை மட்டுமல்ல, நான் இழந்தவனை பழி தீர்ப்பதற்கான ஓர் இரை. வேட்டையின் துவக்கத்தில் நிகழும் இதுபோன்ற சூது விளையாட்டுகளில் என்னவெல்லாம் இருக்குமோ என்கிற குழப்பத்தோடே ஹட்டனில் நான் அவனுக்காகக் காத்திருக்கத் துவங்கினான்.


நான்கு நாட்களுக்குப்பின் ஹட்டன் வந்தவனின் தோற்றத்தில் சின்ன சின்னதாய் நிறைய மாற்றங்கள். புதுவிதமான சிகையலங்காரம், காதில் கம்மல், கழுத்தில் பெரிதாக தேங்காய் ஓட்டில் செதுக்கிய யானை பொம்மை. அவனை அணைத்துக் கொண்டபோது உடலில் இன்னொரு பெண்ணின் வாசணையை உணர்ந்தது என்னைத் துன்புறுத்தியது.


‘போயி குளிச்சிட்டு வாடா..’ என அனுப்பி வைத்தேன்.

அவனுக்கு விருப்பமான மரக்கறி உணவுகளைச் சமைத்திருந்தேன்.. அவன் மதுவருந்தியபடியே சாப்பிடத் துவங்கியபோது மெல்ல மெல்ல எனக்கானவனாகத் திரும்பினான்.


’என் வாயப் பாத்துட்டு இருக்காம நீயும் வந்து சாப்டு..’


நான் அவனது அழைப்பை மறுக்காமல் அவனது மடியில் அமர்ந்து நெருங்கிச் சென்று அவன் மென்ற உணவை எனக்கும் கொஞ்சமாய் வாங்கி சாப்பிட்டேன். எனது கண்களை ஊடுருவியவன் தீரவே தீராத என் பசிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் இதழூட்டினான். உணவும் அவன் எச்சிலுமாய் நான் அவனை விழுங்கிவிடும் தீவிரத்தில் சாப்பிட்டு முடித்தபோது நான் மதுவருந்தாமலேயே என்னுடலில் போதையின் நரம்புகள் முறுக்கேறியிருந்தன. உணவு மேசையிலிருந்த அவ்வளவையும் விலக்கி வைத்துவிட்டு என்னை மலர்த்தி என் மீது படர்ந்தவன் இரை தேடும் கழுகைப் போல் என்னைக் கொத்தித் திண்ணத் துவங்கினான். ஒவ்வொரு வருடலும் ஒவ்வொரு தீண்டலும் என்னை மலரச் செய்தன. உடலின் அத்தனை பகுதியிலும் சுழன்று திரும்பிய நாவு என்னை மூர்ச்சையடையச் செய்ய இருளின் ரகசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தவிப்ப்பில் அவனோடு புணர்ந்தேன். உடல் வியர்த்து கசகசத்து நான் களைத்து விலகும் நொடியில் ‘விதுஷி போகாத… எனக்கு இன்னும் வேணும்…’ என முனகினான்.  புணர்ச்சியின் தீவிரத்திலும் அந்த சொற்கள்  என்னை சிதறடிக்க, நடுங்கிய உடலோடு நான் அவசரமாய் அவனிடமிருந்து விலகினேன்… என்னையும் மீறி கண்ணீர் பெருக்கெடுக்க அதே நிலையில் நான் தலை கவிழுந்து அழத்துவங்கினேன்..


‘அய்யோ… ஸாரி டி… ச்ச…. மன்னிச்சுக்கொ செல்லம்… சத்தியமா தெரியாம வந்துடுச்சு…. ஸாரி… ஸாரி…

என் கால்களைப் பற்றிக் கெஞ்சினான். அவசரமாக் அவனை விலக்கிவிட்டு உடைகளை எடுத்துக்கொண்டு எனது அறைக்குள் சென்ற நான் இந்தமுறையும் வீழ்ந்துவிடுவோமோ என அஞ்சத் துவங்கினான்.  நீண்ட நேரம் என் அறைவாசலில் கெஞ்சியபடியே நின்றிருந்தவனின் குரல் கேட்டு கதவு திறந்தபோது என்னை இறுகக் கட்டிக் கொண்டான்.


‘பரவால்ல விடுடா… வா தூங்கலாம்… நாளைக்குப் பேசிக்கலாம்..’

எங்கள் இருவருக்குமான ஆறுதலாகச் சொல்லிவிட்டு அவனை  உறங்க அழைத்தேன். அந்த இரவு மிக நீண்டதாயிருந்தது.


            விதுஷிகாவின் மீது தனக்கிருந்த விருப்பத்தை மிகச் சிரமங்கொண்டு என்னிடம் அவன் மறைப்பதை நான் புரிந்துகொண்டாலும் பெரிதுபடுத்த வேண்டாமென விட்டுவிட்டேன். ஒருவகையில் எப்போதோ என்னை கைவிட்டுச் சென்ற வசந்தனை வென்றுவிட்ட மகிழ்ச்சி மனதின் ஓரத்தில் இருந்தது. அடுத்து வந்த சில மாதங்களில் முகிலுடனான சந்திப்புகள் குறையத் துவங்கியபோதுதான் என்னிடமிருந்த சின்னஞ்சிறிய குரூர மகிழ்ச்சிகளெல்லாம் தொலைந்து நான் இதுவரையில்லாத சூனியத்தில் சிக்கிக் கொண்டதை உணர்ந்தேன்.  நாங்கள் சந்திக்கும் பொழுதுகளில் அவன் என்னோடுதான் உரையாடுகிறேன், என்னை அணைத்துக் கொள்கிறான், உறவுகொள்கிறான் ஆனால் இதில் எதுவும் நான் நேசித்தவனின் உடலும் முகமுமில்லை. எனக்கு அறிமுகமேயில்லாத ஒரு புதிய மனிதனைத் தழுவுவதாக மனம் உறுத்தியது. அந்த இரவுக்குப்பின் அவன் விதுஷியின் பெயரை ஒருபோதும் உச்சரித்ததில்லை. அவளை சந்திப்பது குறித்தோ அவர்களின் பயணங்கள் குறித்தோ என்னிடம் பகிர்ந்துகொண்டதில்லை. ஆனால் விதுஷி இன்ஸ்டாவில் பகிரும் படங்களில் வரும் மலைகளும் காடும் அந்தப் படங்களை எடுத்தவனின் காதலுக்குரிய இடமென்பதை எனக்குச் சொல்லாமல் சொல்லியது.  என் காதலுக்குரியவன், எனக்கே எனக்காக நான் நேசித்த ஒருவனின் காதலுக்குரியவள் இவள் என உறுதியாக நம்பினேன். அந்தப் பயணங்கள் குறித்து விளையாட்டாகக்கூட அவனிடம் விசாரிக்கும் துணிச்சல் எனக்கில்லை.


            மலையிலிருந்த எனக்கும் கடற்கரையிலிருந்த அவளுக்கும் நடுவிலுமாக பயணித்துக் கொண்டிருந்தவன் எழுதத் துவங்கியிருந்த புதிய கதைகளில் வெளிப்பட்ட காதல் அவன் யாரென்று எனக்கு உணர்த்தியது. அவனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்க முடியலாம், ஆனால் நான் நேசித்த ஒரேயொருவனை இன்னொருமுறையும் விட்டுக்கொடுக்கும் மன தைரியம் எனக்கில்லை என்கிற உண்மை விளங்கியது. நான் இதுகுறித்து விவாதிக்கவோ சண்டையிடவோ முடியாமல் அவளிடமிருந்து இவனை மீட்டுக்கொள்ளும் வழியை மட்டும் யோசித்தேன். சென்னையில் என்னோடு சேர்ந்து வாழ்ந்தவருடனும் என்னால் சரியாக பொருந்திக் கொள்ள முடியவில்லை. உடல்ரீதியாக எங்களுக்குள் பெரிய நெருக்கமில்லாத போதும் எல்லாவற்றைக் குறித்தும் உரையாடக்கூடிய நல்ல உறவிருந்தது. எனக்குள் நானே நடத்திக் கொண்டிருந்த மனப்போராட்டம் என்னை எதிலும் கவனம் செலுத்தவிடமால் செய்ய நான் நிறைய நாட்கள் ஹட்டனிலேயே தங்கத் துவங்கினேன். ஆனால் அந்தப் பெரிய வீட்டில் என்னை ஆராதிக்க அவனில்லை. மாதத்திற்கு ஒருமுறையென நிகழ்ந்த சந்திப்பு அருகத்துவங்கியபோது எனக்குள் முகிலின் மீதான காதலும் வெறுப்பும் வன்மும் ஒருசேர வளர்ந்தது. இந்த தீவிரமான வன்மம் தான் ஒருவேளை காதலென்றால் இவ்வுலகில் என்னைவிடவும் மிகச் சிறந்த காதலி இருக்க முடியாது. நானே விருப்பப்பட்டு ஆடத் துவங்கிய சதுரங்கத்தில் கருணையின்றி நான் தோற்கடிக்கப்பட்டால் அதிலிருந்து மீள எந்தவிதமான யுத்தத்தையும் செய்யலாமென மனம் துடித்தது. அவன் வருகை குறைந்து, என் மீதான நேசமும் குறையத் துவங்கியபோதுதான் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் நானும் முகிலும் எடுத்துக் கொண்ட படங்களையும் எதற்காக அவனை விதுஷியிடம் அனுப்பினேன் என்பதற்கான காரணத்தையும் அவளுக்கு செய்தியாக புலனத்தில் அனுப்பினேன். அந்த நிமிடம் நான் வீழ்த்தியது வசந்தனையோ, லஷ்மியையோ, விதுஷியையோ அல்ல, என் காதலை…. ஒரு குருவியின் கூட்டைப்போல் வெகு அழகானதாய் நான் கட்டிவைத்திருந்த மொத்த காதலையும் அழித்தபோது எனக்குள்ளிருந்த பேய்கள் நர்த்தனமாடின. தாங்கமுடியாத வலியில் உடலை வதைத்துக் கொண்டேன்.. எல்லோரிடமிருந்தும் துண்டித்துக் கொண்டு சில நாட்கள் காணாமல் போய்விடும் முடிவோடு பயணத்தைத் துவங்கினேன். கடந்தகாலத்தை முற்றாக அழித்துக்கொண்டபிறகு மட்டுமே திரும்புவது என்கிற முடிவோடு நான் இலங்கையிலிருந்து வெளியேறினேன். 


காதல்.

 

ஒரு மாலை நேரம் விதுஷியின் வீட்டை முகில் அடைந்தபோது அவள் தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு மருத்துவரைச் சந்திப்பதற்காக வெளியேக் கிளம்பிக் கொண்டிருந்தாள். வாசலில் தெரிந்த நிழலைக் கண்டதும் தன்னையுமறியாமல் முகிலா என சிலிர்த்தவள் உண்மையிலேயே அவன் தான் வந்திருக்கிறானென்பதை அறிந்தபின் சந்தோசம் மறைந்து இறுக்கமானாள்.


’விது… உங்கிட்ட பேசனும்… ப்ளீஸ்…’

அவன் உடைந்து நொறுங்குவதற்கு முந்தைய நிலையிலிருந்தான்.


‘நான் ரொம்பவே பலவீனமா ஆகிட்டேன் முகில். இதுக்கு மேல என்னால வலிய ஏத்துக்க முடியாது… நீ போயிடு…’


‘இந்த மாதிரி ஒரு நாள் வரும்னு எனக்குத் தெரியும் விது. அதுக்கு முன்ன எல்லாத்தையும் நானெ சொல்லிடனும்னு நெனச்சேன். ஆனா உங்கிட்ட சொல்ற தைரியமில்ல. உன்னய இழந்துடக் கூடாதுன்னு பயம்… உனக்கு உண்ம தெரிஞ்சா நீ எவ்ளோ வேதனப்படுவன்னு தெரிஞ்சுதான் சொல்லாம இருந்தேன்… உன்ன தேடி வந்ததுக்கான காரணம் மட்டுந்தான் கல்பனா… ஆனா என்னோட காதல் முழுக்க நெஜம்…’


அவன் அவளது கைகளைப் பற்றிக்கொள்ள அவள் அசைவே இல்லாமல் அவனைப் பார்த்தாள். கைகளில் முத்தமிடப் போனவனை விலக்கியவள்


‘உள்ள வா…’ எனச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.  அவசரமாகப் பின்னால் சென்று இறுக்கி அணைத்துக் கொண்டவன் பிரிவின் வெக்கை தணிய அவளை முத்தமிட்டான்.


எந்த எதிர்வினைகளுமின்றி நின்றவள்

‘நான் என்னடா தப்பு பண்ணினேன்…’எனக் கேட்டபோது தடுமாறி அவளிடமிருந்து விலகியவன் எப்போதும் போல் அவளைத் தனது மடியில் அமரவைத்துக் கொண்டு அவளது தோளில் சாய்ந்தான்…


‘நடந்த எதுலயுமே சரி எது தப்பு எதுன்னு எனக்கு சொல்லத் தெரியல விது… ஆனா இப்பிடியொரு விஷயத்த கல்பனா சொன்னப்பவே நான் தெளிவா சொன்னேன் நாம இன்னொரு பெண்ணக் காயப்படுத்தப் போறோம்னு…. அவளுக்கு வசந்தன் மேல இருந்த கோவமும் எனக்கு அவமேல இருந்த காதலும் எல்லாத்தையும் மீறி செய்ய வெச்சிடுச்சு…’


‘ஓ அவளோட காதலுக்காக என்னையக் காயப்படுத்திட்ட, இப்போ என்னோட காதலுக்காக நான் கேட்டா இன்னொருத்தி கிட்டயும் இதே மாதிரி போவல்ல…’

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளைப் பற்றியிருந்த அவனது கைகள் நடுங்கின…. அவனிடமிருந்து விலகி அமர்ந்தவள் தன்னையும் மீறி கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள்.


‘ஆசையா ஒரு உயிர உனக்காக வயித்துல வளத்துட்டு இருந்தேன்… எப்போ எல்லாம் பொய்யின்னு தெரிஞ்சதோ அப்பவே அழிச்சுட்டேன்… நம்மளுக்கான ஒரு உயிர் முகில்… புரியுதா நான் என்னவா உன்ன நெனச்சிருந்தேன்னு…’


அவளை எதிர்கொள்ள முடியா வலியோடு அவளது கால்களில் மண்டியிட்டவன் நீண்டநேரம் அழுது தீர்த்தான்.


‘எனக்கு உன்னவிட்டு விலகற மனதைரியமும் இல்ல… பழைய மாதிரி காதலிக்க விருப்பமும் இல்ல… என்ன செய்யட்டும் சொல்லு…’

அவனது நாடியைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.


‘என்னய மன்னிச்சுடு விது…’


‘சரி மன்னிச்சுடறேன்… இப்ப சொல்லு… நீ யாரக் காதலிக்கற… என்னயா? இல்ல அவங்களையா?’


அவன் அவளது கண்களைப் பார்த்தேன். தயக்கமே இல்லாமல் ‘ரெண்டு பேரையும்…’ என்று சொன்னபோது குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டவள் ‘இந்தளவுக்காவது உங்கிட்ட நேர்மை இருக்கறதுல சந்தோசம்டா…’ என்று சொல்லிவிட்டு எழுந்து உடைமாற்றச் சென்றாள்.


            அந்த இரவு அவர்கள் ஒரே கட்டிலில் உறங்கவில்லை. அடுத்தநாள் அவனது அருகாமை அவளுக்கு சற்றே ஆறுதலாக இருக்க ‘எங்கியாச்சும் போலாமாடா…?’ என சோர்வோடு கேட்டாள். அவனிடமிருந்து வருத்தம் களைப்பு எல்லாம் காணாமல் போய் உற்சாகமாய் பயணத்திற்கு ஆயத்தமானான். அடுத்த சில மணிநேரங்களில் மலையகத்திலிருந்த எல்ல என்னும் சிறுநகரத்தை நோக்கி அவர்களின் கார் விரைந்துகொண்டிருந்தது. இருவருக்குமே விருப்பமான அந்த சிறுநகரில் ஊர் சுற்றுவது அவளுக்கு மிகப் பிடித்தமான ஒன்று… தங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்டிருந்த இந்தப் பிரிவை அந்தச் சிறுநகரம் சரி செய்யும் என்னும் நம்பிக்கையோடும் ஆசையோடும் கடந்த சில நாட்களில் தனது அன்றாடங்களைக் குறித்து அவளிடம் பேசியபடியே வந்தான். நகரை நெருங்கி வந்தபோது பொழுதுசாயத் துவங்கியிருந்தது.


‘முகில் உனக்கு டயர்டா இருக்கா?’

‘இல்லடி … என்னாச்சு?’

‘இப்பவே ரூம் செக் இன் பண்ண வேணாம்… நாம எப்பவும் போல லிட்டில் ஆடம் பீக் ல ஒரு வாக் போயிட்டு அப்பறமா ரிலாக்ஸா ரூம் போலாம்.,..’

என அவள் கேட்க, அவன் சந்தோசமாக ஒத்துக்கொண்டான்.


            தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே இரண்டு மூன்று மைல்கள் நடந்து சென்றால் சிறிய மலையுச்சி. அங்கிருந்து பார்த்தால் நீண்ட மலைத்தொடர்களைப் பார்க்கமுடியும். அதிகாலையிலும் அந்தி நேரத்திலும் ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கு வருவதுண்டு. சொல்லப்போனால் மொத்த எல்லா நகரமுமே ஐரோப்பியர்களுக்கானது. மதுக்கூடம், உணவுக்கூடம், வீதிகள் எல்லாவற்றிலும் அவர்களே நிரம்பியிருப்பார்கள். அதனாலேயே அந்த ஊரில் அமைதியும் கொண்டாட்டமும் ஒருசேர நிரம்பியிருக்கும். அடிவாரத்தில் காரை நிறுத்துவிட்டு இருவரும் மலையேறத் துவங்கியபோது அவன் மறக்காமல் தனக்கான பியரையும் அவளுக்காக சிகரெட்டையும் எடுத்துக் கொண்டான். மலையேறும் வழியில் புதிதாக பெரியதொரு விடுதி துவங்கப்பட்டு பாட்டும் ஆட்டமுமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஆர்ப்பாட்டங்களைக் கடந்து மலையேறியவர்கள் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் சரியாக உச்சியை வந்தடைந்தார்கள்.  அந்த சிறிய குன்றின் உச்சியில் அங்குமிங்குமாக நின்றிருந்த வெள்ளைக்காரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்க இவர்கள் இருவரும் ஒரு பாறையில் அமர்ந்தனர். ஒரு வருடத்திற்கு முன்னால் சற்றுத் தள்ளி அவர்கள் கூடாரமடித்து தங்கியிருந்த இடத்தில் இப்பொழுது புதிதாக ஒரு புத்த விகாரை முளைத்திருந்தது.


‘இங்கயும் விட்டுவைக்கலையா?’ எனக் கேட்டவனிடம் பியரைக் கொடுத்தவள் ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைக்கத் துவங்கினாள். மற்றவர்களிடமிருந்த பரவசமோ பதற்றமோ இல்லாமல் நிதானமாக அவர்கள் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.


வெளிச்சம் மறைந்து இருள் முழுமையாகச் சூழத் துவங்கியபோது அங்கிருந்தவர்கள் கீழே இறங்கிச் சென்றிருந்தார்கள். தூரத்தில் செல்லும் வாகனங்களின் வெளிச்சப் புள்ளிகளைப் பார்த்தபடியே விதுஷிகா


‘இப்ப சொல்லு முகிலா … எங்க ரெண்டு பேத்துல யார லவ் பன்ற?’


எனக் கேட்டாள். இரண்டாவது பியரையும் குடித்து முடித்திருந்தவன் அவளை இழுத்து அணைத்து ஆவேசமாக முத்தமிட்டபடியே அவளை பேசவே விடக் கூடாதென்கிற தீவிரத்தோடு உடல் முழுக்க தீண்டினான்… அவளுடலின் அத்தனை ரகசியங்களையும் அறிந்த கைகள் எங்கெல்லாம் அவளது நெருப்பு மலர்கள் உறங்கக்கூடுமென்பதை அறிந்து அவற்றிற்கு உயிர்கொடுக்கும் வேகத்தோடு அலைந்தன. அவனை விடவும் தீவிரமான வேட்கையில் விதுஷி முத்தமிட்டு ஆக்ரமிக்கத் துவங்கியபோது அவன் அதற்காகவே காத்திருந்தவனைப் போல் அவளிடம் முழுமையாக தன்னை ஒப்புக் கொடுத்தான். அவர்களின் அசைவையும் முத்தச் சத்தத்தையும் புணர்ச்சி வேகத்தையும் கண்டு சற்றுத்தள்ளி ஒரு நாய் அச்சத்தோடு குரைத்துக் கொண்டிருந்தது. அவன் மீது ஏறி இயங்கியவள் அவனை தன்னைத்தவிர எவருக்கும் தரவே போவதில்லையென்கிற தீர்மானத்தோடு கூடினாள். அவளுடல் ஓய்ந்து அவன் மீது சாய்ந்தபோது நெற்றியில் முத்தமிட்டவன் மெல்ல எழுந்து இருவரின் உடைகளையும் சரி செய்துகொண்டான்.


தனது மொபைலை ஆன் செய்து ‘nothing is gonna hurt u baby ‘ பாடலை ஒலிக்கவிட்டபின் பையிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்துக் கொண்டு தனது குறியைக் கழுவுவதற்காக குன்றின் ஒரு முனையை நோக்கி நடந்தான்.  விதுஷியும் தனது உடைகளைச் சரிசெய்துகொண்டு அவனுக்குப் பின்னால் சென்றாள். முகடின் விளிம்பில் நின்று தனது குறியில் தண்ணீரைக் கொட்டி அவன் சுத்தம் செய்துகொண்டிருக்க அவனது தோள்களில் கைவத்து கழுத்தில் முத்தமிட்டவள் ‘இருக்கற ஒரு உயிர இன்னொருத்தருக்கு பங்கு தரமுடியாது முகிலா… நான் காதலிச்ச கடைசி ஆண் நீதான்… நீ காதலிச்ச கடைசி பொம்பளையும் நானா மட்டுந்தான் இருக்கனும்..’ என சிரித்தபடியே அவனை ஆவேசத்தோடு தள்ளிவிட்டாள். எதிர்பாராத அந்தத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவன் மலையுச்சியிலிருந்து விழுந்தான்.  அவன் விழுந்த திசையை நோக்கித் திரும்பாமல் வந்து தனது பையை எடுத்துக் கொண்டவள் மறக்காமல் அவனது மொபைலையும் எடுத்துக்கொண்டு நிதானமாக அடிவாரம் நோக்கி நடக்கத் துவங்கினாள்.


கையிலிருந்த மொபைலில் பாடல் இன்னும் சன்னமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.


Nothing's gonna hurt you,

babyAs long as you're with me,

you'll be just fineNothing's gonna hurt you,

babyNothing's gonna take you from my side

 

           

822 views

Comments


bottom of page