“1528 ம் ஆண்டில் அஸ்டெக் மக்களின் பந்து விளையாட்டை ஐந்தாம் கார்லோஸ் மன்னன் முன்பு கோர்ட்டஸ் சமர்ப்பித்தபோது, அந்த விளையாட்டின் உள் அர்த்தம் அங்கிருந்த பார்வையாளர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது.”
வால்ட்டர் க்ரிக்கன்பெர்க். ( the ancient culture of mexico.)
முன் குறிப்பு :
இந்தக் கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஏதேனுமொரு தேச மக்களோடோ கார்ப்ரேட் கம்பெனிகளோடோ, அதிபர்களோடோ பொருந்திப்போயின் முழுக்க முழுக்க அது தற்செயலானதே…
ஆயிரம் கதவுகள் கொண்ட அந்தப்புரம் :
கோடை காலம் துவங்கியிருந்ததின் அடையாளமாய் மிகத் தாமதமான சூரிய அஸ்தமனத்தில் நீண்டு விரிந்திருந்த அந்தப் பனிமலை பொன்னிறத்தில் ஜொலித்தபடியிருக்க, இடுங்கிப் பனியடர்ந்த சாலையில் பூனைக்குட்டிகளைப் போல் சத்தமேயில்லாமல் புதிய porsh கார்கள் அரண்மனையை நோக்கி வந்துகொண்டிருந்தன. தூய நீர் சீறிப்பாயும் செயற்கை ஊற்றுகள் அன்றைய தினத்தின் புதிய விருந்தாளிகளை வரவேற்றபடி தலைவணங்கி மரியாதை செய்து கொண்டிருக்க, பணியாட்கள் கார்களின் கதவுகளைத் திறந்து பூர்ண மரியாதையுடன் தங்கள் விருந்தாளிகளை அழைத்துச் சென்றனர். பளபளக்கும் தரையும் சுவர்களும் நடப்பவர்களின் நிழல் விழாத சாதுர்யத்தோடு அமைக்கப்பட்ட விளக்குகளின் வெளிச்சமுமாய் அந்தக் கட்டிடம் தேசத்தின் பெருமைமிகு அடையாளமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அழகிய நங்கைகள் தங்கள் உடல்கள் எப்போதும் வேறு உடல்களோடு பிணைய பழக்கப்பட்ட முன் தயாரிப்போடான சிரிப்புடன் ஆங்காங்கு நின்று வரவேற்றனர். டிஜிட்டல் திரையில் மஹ்ராஜின் சில ஆயிரம் புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்து சென்றபடியே இருந்ததை அவர்கள் காணத் தவறவில்லை. முழுக்க ஆட்கள் புதையுமளவு இலகுவான குஷன் இருக்கையை காட்டிவிட்டு உதவியாளர்கள் ஒதுங்க, தாங்கள் அழைக்கப்படுவதற்காக காத்திருந்தபடி அமைதியாய் அவ்விடத்தை வெறித்தனர்.
எல்லா திசையிலிருந்தும் நுழைந்து வெளியேறும் வெவ்வேறு வாசல்களைக் கொண்ட அந்த கட்டிடத்தில் அவர்களுக்கு எதிரிலிந்த கதவைத் தவிர்த்து மற்ற கதவுகளனைத்தும் சாத்தியே வைக்கப்பட்டிருந்தன. ரகசியத்தின் எந்தக் கயிறையும் எவர் ஒருவரும் பற்றி தொடர்ந்து விடக்கூடாதென்கிற கவனத்தில் மஹ்ராஜின் ஆணையின் பேரில் செய்யப்பட்ட ஏற்பாடு அது. தனது புதிய பிரேசிலிய காதலியுடன் அவர்களிருக்கும் வளாகத்தை நோக்கி வந்த மஹ்ராஜின் நடையில் அசாத்தியமான கம்பீரம். பிரமுகர்களுக்கான பிரத்யேக புன்னகை ஒன்றை அவர்களை நோக்கி அவர் உதிர்க்கையில் எதிரிலிருந்த கதவைத் திறந்தபடி ஒரு பெண் படபடவென அவரை சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு நகர்ந்தாள். அத்தனை அவசரத்திலும் மிக லாவகமாக புகைப்படத்தில் தன்னை இறுத்திக் கொண்ட மஹ்ராஜ் காதலியின் இடையோடு சேர்த்திருந்த கையை சரியாக விலக்கிவிட்டு அவர் மட்டும் பதியும்படி பார்த்துக்கொண்டார்.
விருந்தினர்கள் எழுந்து கொண்டு மரியாதை செய்த போது அவர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிடத் தவறவில்லை. எல்லோருக்கும் ஆச்சர்யம். மன்னரின் சிறப்பே அவர் பிரம்மச்சாரி என்பதுதான். ஆனால் இப்பொழுது விளைந்த சோளக்கதிரின் வனப்பையொத்த அந்த பிரேசிலிய யுவதி அவர்களின் கண்ணை உறுத்தினாள்… ஒரு புதிய கதவு திறக்கப்பட உரையாடலுக்கென்ற பிரத்யேக மேடையோடு இருந்த அரங்கம் அவர்களுக்காய் காத்திருந்தது. தனது காதலியை இறுக்கி முத்தமிட்டவர் “நான் வரும் வரை இங்கு காத்திருக்க வேண்டாம். அறையில் சென்று இரு.. முக்கியமாய்க் கதவைத் தாழிட மறந்துவிட வேண்டாமென” அவளை அனுப்பி வைத்தார். புன்னகையோடு அவரிடமிருந்து பிரிந்து சென்ற அந்த ஆச்சர்யமிக்க அழகியின் பின்புற அசைவுகளை விருந்தினர்களில் சிலர் கண்கள் சொருக பார்க்க, சத்தமாக செறுமியபடியே மஹ்ராஜ் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவ்வளவு நேரமும் அவர்களுக்கிருந்த சந்தேகத்துடனான கேள்வியைப் புரிந்து கொண்ட மஹ்ராஜ்
“இப்பவும் நான் பிரம்மச்சாரிதான்… அப்டித்தான் இல்லையா?”
என அவர்களையும் அங்கு உதவிக்காக இருந்த அவர்களின் பெண் அதிகாரிகளையும் பார்த்து சத்தமாக சிரிக்க அதை ஆமோதிக்கும் விதமாய் எல்லோரும் புன்னகைத்து தலையசைத்தனர்.
ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்திருக்கும் வியாபாரக் கோப்புகளை எடுத்து அவரிடம் தர, மஹ்ராஜின் உதவியாளர் ஒவ்வொன்றாய் எடுத்து முக்கியமானவற்றை வாசித்துக் காட்டினார். மஹ்ராஜோடு எல்லோரும் கவனமாக அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க, டேபிளில் அருந்துவதற்காக கண்ணாடி தம்ளரில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறத் திரவத்தை விருந்தினர்களில் ஒருவர் கலவரத்துடன் பார்த்தார். எடுத்து அருந்தாலாமா வேண்டாமாவென்கிற குழப்பத்தோடு கையைக் கொண்டு செல்ல
“இருங்க உங்களுக்கு தாகசாந்திக்கு வேற இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல நாட்டு மக்கள் கிட்ட ”ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மக்கள்” ங்கற கருத்த வலியுறுத்தி தொலைக்காட்சி வழியா பேசப் போறேன். எல்லோரையும் ஒருங்கிணைக்கப் போறது இந்த புணித தீர்த்தம் தான். இத தொலைக்காட்சியில பாக்கப்போற மொத்த தேசத்துக்கும் இது கோமியம். கடவுளோட தீர்த்தம். இதை நான் அருந்தற மாதிரி ஒரு காட்சி திரைக்கதை ல இருக்கு. அதுக்கான செட் ப்ராப்பர்ட்டி இது.”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே பணிப்பென் ஒருத்தி சுத்தமான பசும்பாலை இளஞ்சூட்டில் அருந்தத் தந்தாள்… தேச ஒற்றுமை மாட்டுக்கோமியத்தில் இருக்கிறதென்பதை நம்புகிற மக்களா இவர்கள் என்பதை வியப்போடு பார்த்த ஒருவர் ‘இன்று இரவிலிருந்தே இதையும் ஆன் லைனில் விற்கத் தயார் செய்ய வேண்டுமென முடிவு செய்து கொண்டார்.’
விருந்தினர்களில் ஒருவர் அவ்வப்போது அந்த அறையின் ஒரு மூலையில் ஆடை விலகின நிலையில் உணவு மேசையில் பதார்த்தங்களைப் பரிமாறிக் கொண்டிருந்த பெண்ணின் மார்புகளை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டார். தற்செயலாக கண் திறந்த மஹ்ராஜ் ஏதோவொரு உள்ளுணர்வின் உந்துதலில் உணவை அலங்கரிக்கும் பெண்ணையும் அவளையே விழுங்கப் பார்க்கும் விருந்தினரையும் கவனித்தார். கையை உயர்த்தி கோப்பை வாசித்த அதிகாரியை நிறுத்தச் சொல்லிவிட்டு, திரும்பி அந்தப் பெண்ணைப் பார்க்க அதிகாரிகளில் ஒருவர் தனது புத்தம் புதிய பிஸ்டலால் அவளது பின்னந்தலையில் சுட்டார். கபாலம் சிதறி பரப்பி வைக்கப்பட்ட உணவு மேசையின் மீது ரத்தத் துளிகள் தெறிக்க, விருந்தினர்கள் யாவரும் அச்சத்துடன் இவன் வழக்கமான மஹ்ராஜ் இல்லை. அவர்களை விடவும் மூர்க்கமான பைத்தியக்காரன் என சப்தநாடியும் ஒடுங்கப் புரிந்து கொண்டனர். அதன் பிறகு கோப்புகளை வாசித்து முடிக்கும் வரையிலும் யாருடைய கவனமும் சிதறியிருக்கவில்லை.
எல்லோருடைய கோப்புகளையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்ட மஹ்ராஜ் கண்ணாடி வழியே அரண்மனைக்கு வெளியே திரண்டு கிடந்த பனிச்சரிவுகளை ஏக்கத்துடன் பார்த்தார். அதிகாரிகள் அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டு விருதினர்களின் காதில் கிசுகிசுக்க மஹ்ராஜோடு சேர்ந்து எல்லோருமாக பாதுகாப்போடு அரண்மனைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். எங்கும் நிறைந்து கிடக்கும் பனியை பார்த்த உற்சாகத்தில் கரடிக் குட்டியைப் போல் கால்களைத் தூக்க இயலாமல் ஓடிய மஹ்ராஜ் புனிக்குள் கைவிட்டு அதை பெரிய உருண்டையாக உருட்டினார். விருந்தினர்கள் அடுத்து என்னசெய்வதென்கிற விவரம் புரியாமல் பார்க்கும் பொழுதே அதிகாரிகள் அவர்களை மஹ்ராஜுக்கு உதவும்படி பார்வையால் பணித்தனர். எல்லோரும் தங்கள் பங்கிற்கு மஹ்ராஜைப் போலவே பெரிய பெரிய உருண்டைகளாய் உருட்டித் தர ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து மனித உருவாக்கினார். ஒவ்வொரு உருண்டைக்கும் அழகாக கண் மூக்கு வாய் எல்லாம் தன் கைப்பட மஹ்ராஜ் செதுக்கினார். அங்கு நிறைய பனி உருவங்கள் சேர்ந்தபின் ஒவ்வொரு உருவத்திற்குக் கீழும் தன் ஒவ்வொரு மாகாணத்தின் பெயரை எழுதி மையமாக அவர் அமர்ந்து கொண்டபோது மூச்சு வாங்கியது. குழந்தைத்தனமான இந்த வினோத விளையாட்டில் களைத்துப் போயிருந்த விருந்தினர்கள் அந்தப்புரத்தின் ஆகப்பெரிய ரகசியம் இதுதானோவென சந்தேகங் கொண்டனர். தன்னோடு கூடி விளையாடிய அவர்களின் பங்களிப்பை பாராட்டிய மஹ்ராஜ் தனது ராஜ்யத்தின் ஒவ்வொரு மாகாண பொம்மையிலும் விருந்தினர்களுக்கும் பங்கிருப்பதாக வாக்குறுதியளித்தார். அந்த சந்திப்பின் இறுதியின் சில புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படுமென வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட இருக்கும் புதிய திட்டங்களின் சாராம்சங்கள்.
1. குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் மனிதர்கள் முழுமையாக திருந்துவதில்லை என்கிற நிதர்சனத்தை பல்லாயிரம் குற்றங்களுக்குப் பிறகு ஆட்சியதிகாரத்திலிருக்கும் அவரைத் தவிர்த்து வேறு யாரால் புரிந்து கொள்ளமுடியும். அதனாலேயே அவர் குற்றங்களை மதிப்புடையதாக்கினார்.
2. பணம் வியாபாரத்திற்கும் வியாபாரிகளுக்குமானது, அது ஒரு தனிமனிதனிடம் தங்குவதை அரசாங்கம் முற்றாய் ஒழிக்கவே தேடித் தேடி வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. வழக்கு, விசாரணை போன்ற எல்லாம் ஒழிக்கப்பட்டு அந்த செலவீனங்கள் தடுக்கப்பட்டன. தண்டனையென்பதை இல்லாது செய்வதன் மூலம் சிறைச்சாலைகள் குறையக்கூடிய அனுகூலமுண்டு. குற்றத்தைப் பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டது.
3. அபராதத் தொகை செலுத்த கையில் பணமில்லாத பட்சத்தில் கடன் கொடுக்க உள்நாட்டு வெளிநாட்டு வங்கிகள் தங்களின் கடன் அட்டைகள் மூலம் எவ்வளவு பெரிய தொகையை வேண்டுமானாலும் தரத்தயாராகவே இருந்தார்கள்.
4. தேச பாதுகாப்பிற்காக புதிய வீரர்கள் அதிகளவில் தேவைப்படுவதால் எல்லைக்கு வரும் வீரர்களை உற்சாகப்படுத்தி புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
5. புதிய பணம் கொண்டு வரப்படும். ( பணத்தை அத்தனை எளிதில் எங்கும் மாற்ற முடியாதபடி அதில் ரகசிய சிப் பொறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் நீங்கள் கழிவறைக்கு செல்லும் போது மறக்காமல் பணமிருக்கும் வாலட்டை எடுத்து வெளியே வைத்துவிட்டு செல்ல வேண்டும். இல்லாது போனால் உங்கள் கழிவறை ரகசியங்கள் அவ்வளவும் வங்கியில் பதிவாகும். ---- பிற்பாடு திட்டம் அறிவிக்கப்பட்ட நடந்த சம்பவம் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு பெரிய ரயில் நிலையத்தின் கழிவறையில் இரண்டு இளைஞர்கள் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்று அவர்கள் பதுக்கியிருந்த பணத்தின் வழியாக வங்கியில் பதிவாகி பின்பு தேசமெங்கும் வைரலானது. …. மஹ்ராஹ் அதை பலமுறை ரசித்துப் பார்த்துவிட்டு பணத்தின் மதிப்பை குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய அந்த இளைஞர்களை நேரில் அழைத்துப் பாராட்டினார்.)
திரு.மஹ்ராஜ் இன்னும் களைத்துப்போகவில்லை
இந்த யுகத்தின் நீண்ட சாபங்களிலிருந்து தம் குடிமக்களை விடுவிக்கும் பெரும் போராட்டத்தை திரு.மஹ்ராஜ் அவர்கள் துவங்கி இன்று நூறாவது நாள். நளொன்றுக்கு நாற்பத்தைந்து விநாடிகள் மட்டுமே உறங்கி ஓய்வெடுக்கும் அவரின் கபாலமெங்கும் தினம் ஒரு ஜோடி கண்கள் புதிதாய் முளைத்தபடியே இருக்கின்றன. தீமை எத்தனை தொலைவிலிருந்தாலும் எந்த வடிவிலிருந்தாலும் கண்டுபிடித்து உடனடியாய் அவர் மூளைக்கு தகவல் அனுப்பும் அந்தக் கண்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாய் பெருகியதில் அவர் கபாலம் இப்பொழுது கண்களாலான சின்னதொரு சுழலும் கிரகமாகியிருக்கிறது. தவணை முறையில் ஒவ்வொரு ஜோடி கண்ணும் நாற்பத்தைந்து நொடிகள் மாறி மாறி ஓய்வெடுத்துக் கொள்வதால் அவர் பெரும்பாலும் விழிப்போடே இருந்தார். மனித வடிவிலான அந்த சதைக் கடவுளின் மறைக்கப்பட்ட ஆடைகளுக்குள் நிண நீர் கட்டிய சூட்டுக்கட்டிகளும் அழுகி நாறும் நாள்பட்ட புண்களும் உண்டு. ரகசிய சேவகர்கள் அவற்றை அவருக்குத் தெரியாமல் அவ்வப்போது சரிசெய்து விடுகிறார்கள். எத்தனை வலி,வேதனை,துயரம் எல்லாம் கடந்தும் தம் குடிமக்கள் குறித்து சிந்திப்பதை அவர் நிறுத்தியிருக்கவில்லை. தன் சொற்கள் ஒவ்வொன்றிற்குமான ரகசிய ஆணைகளை யாருமறியாதபடி அதிகாரிகளின் வழி செயல்படுத்தியபடியே இருந்தார். எல்லாம் மாறும், அந்த ஆணைகளின் வழி தம் தேசத்தின் அசுத்தம் ஒழிந்து தூய்மையின் ஈரம் எங்கும் நிலைக்குமென்கிற அவரின் நம்பிக்கை ஒருபோதும் களைப்படையப் போவதில்லை.
வரலாற்றின் எல்லாத் துயரையும் புதுமையான போட்டிகளின் வழி துடைத்தெறிந்திட முடியுமென்கிற ஞானதோயம் சில தினங்களுக்கு முன் அவருக்கு வந்த தருணத்தில், தங்கத்தால் இழைக்கப்பட்ட தனிப்பெரும் விமானத்தின் கழிவறையில் அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் மேல் பறந்துகொண்டிருந்தார். தம் அதிகாரிகள் நெருங்கிய சகாக்கள் ஒருவருக்கும் தெரியாதபடி கடந்த பலவருடங்களாய் காத்து வரும் ரகசியங்களில் ஒன்று அவரின் காத்திரமான வெளிமூலம். தகுதியின் அடிப்படையிலான எந்தவிதமான உடல்பரிசோதனைகளும் அரசர்களுக்கில்லை. அவர்களுக்கு எல்லாவற்றிலும் விதிவிலக்குண்டு. விதிவிலக்கின் ப்ரியத்திற்குரிய வாரிசுகள் அவர்கள். விமானங்களின் குறுகிய கழிவறையில் இருபுறங்களிலும் கைகளால் பற்றிக்கொள்வதன் மூலம் கிடைத்த வசதியில் பல காலத்திற்குப் பின் அவரால் முழுமையாக மலங்கழிக்க முடிந்தபோதுதான் இனி வாரத்தில் ஏழு நாட்களாவது விமான பயணம் மேற்கொள்ள வேண்டுமென உறுதியெடுத்துக்கொண்டார்.
இனி நிலம் யாருக்கும் சொந்தமில்லை.
கொஞ்சத்திலும் கொஞ்சமான தனது நிலத்தின் தானிய மணிகள் நீரின்றி வெய்யிலில் கருகிப்போவதை தூரத்திலிருந்து பார்த்தபடி நின்ற அவ்வூரின் கடைசி விவசாயி இடையறாது ஆங்காங்கே வேலிகட்டி ஏழெட்டு வர்ணங்களில் சுவர் எழுப்பப்பட்டிருக்கும் புதிய ஃப்ளாட்டுகளில் ஒன்றாக தன்னுடையதும் மாறிப்போகும் அவலநாடகம் வெகு விரைவில் நடக்குமென அச்சப்பட்டான். 4 G வசதிகளுக்காக வேண்டி நடப்பட்ட புதிய அலைபேசி கோபுரங்கள் கம்பீரமாய் வயல்வெளிகளின் வறண்ட நிலத்தின் மேல் அதிகரித்தபடியே இருக்கின்றன. அந்த சமவெளியின் மொத்த நீர்வளத்தையும் சில நாட்களுக்கு முன் உருவான புதிய பன்னாட்டு நிறுவனம் தனது உடமையாக்கிக் கொண்டதால் நிலங்களில் வெடிப்பு கண்டு பாளம் பாளமாய்க் கிடந்தது. நிலத்தை நம்பி வாழும் ஒருவன் இறப்பதற்கு உகந்த வழி, தன் நிலத்தினாலேயே திண்ணப்பட்டுவிடுதல். எந்த இழப்புமில்லாமல் ஊதியம் தர பன்னாட்டு நிறுவனங்களிருக்கையில் இன்னும் நிலத்தை நம்பியிருக்கும் இந்தக் கடைசி விவசாயி பைத்தியக்காரனாக இருக்கக் கூடுமென்றே ஊர்க்காரர்கள் நம்பினர்.
உள்ளங்கையின் ரேகையளவிற்கே மிச்சமிருந்த நம்பிக்கையில் தேசிய வங்கியில் கடன் வாங்கச் சென்றவனுக்கு இன்முகத்துடன் காணப்பட்ட அதிகாரிகளைக் கண்டதில் ஆறுதல்.
சுவர்களெங்கும் கருணை மிக்க மஹ்ராஜின் புகைப்படம் பிரம்மாண்டமாய் வீற்றிருந்தன. கையெடுத்துக் கும்பிட்டவனிடம் ஆறுதலாய் பேசி பணத்தை தந்த அதிகாரிகள் அவனுக்கு வரவு செலவை எளிதாக்கும் விதமாக இனி கடன் அட்டைகளையும் பயன்படுத்தலாமென நம்பிக்கையளித்து அனுப்பி வைத்தனர்.
“புண்ணாக்கு மற்றும் உரக்கடைகளில் இந்த அட்டை செல்லுபடியாகுமா ஆகாதா என்னும் தீராத குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தவன் அன்றைய தினம் நிம்மதியாய் உறங்கினான். நிலத்தைப் போலவே ஒட்டி வதங்கிப்போயிருந்த அவன் வயிற்றுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் ஆரோக்கியமான ஆகாரம் இந்த கடன் வழியாக கிடைத்திருந்தது.
நிலத்தில் விதைத்தான், நிலத்தோடு விதைகளும் பொக்காகி மலடாகத் துவங்கியிருந்த அந்த காலத்தின் துவக்கத்தை பொய்நம்பிக்கைகளின் வழி கடக்க நினைத்தது எத்தனை முட்டாள்த்தனம் என்பதை மிகச் சிலநாட்களிலேயே அவன் புரிந்து கொண்ட போது அவ்வூரில் மழை பெய்து பல மாதங்களாகியிருந்தது. அவன் விதைகளையல்ல நம்பிக்கைகளையே விதைத்திருந்தான். அவை விளைவதுமில்லை, அழிவதுமில்லை. நம்பிக்கைகளின் வேர்கள் மண்ணின் ஆழத்திற்குள் கிளைத்து நீண்டதே தவிர பயிராகவில்லை. வீட்டிற்கும் நிலத்திற்குமான இடைவெளியெங்கும் நடந்து நடந்து அவன் பாதம் அரையடிக்கும் அதிகமாய்த் தேய்ந்து போய்விட்டிருந்தது. விளைநிலம் என்பதையே மறந்து போன அந்தப் பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த விலங்குகள் கூட முற்றிலுமாய் அழிந்து போயின. தான் வளர்த்து வந்த இரண்டு மாடுகளுக்கு உணவளிக்க புற்களாவது வளராதாவென ஏக்கத்தோடு காத்திருந்தான். எரிந்து கருகிப்போன நிலத்தில் ஜீவிதத்திற்கான எந்த ஆதாரங்களையும் பெறும் சாத்தியமில்லை. பசியில் அந்த மாடுகள் கிறங்கிப்போய் பகல் இரவென தொடர்ந்து சில நாட்கள் ஓலமிட்டு பின் தானிருந்த சுவடே தெரியாமல் அவன் வீட்டிற்குப் பின்னால் இறந்து போயின. இருந்த கடைசி நம்பிக்கையும் பொய்த்துப்போன வேதனையில் அந்த விவசாயி தன் குடும்பத்தினரின் உதவியோடு அந்த மாடுகளை வண்டியில் கட்டி இழுத்து அவனிடமிருந்து கடைசி விடுதலைக்கு காத்திருந்த நிலத்திற்கு எடுத்துச் சென்றனர்.
நிலத்தின் மையமாய் ஆழக் குழிதோண்டி இரண்டு மாடுகளையும் புதைத்த போது காத்திரமான வெய்யிலின் காணல் நீர் அவர்களை நனைத்தது. துர்கனவின் சாட்சியமாய் நின்ற அந்த வயலின் பொசுங்கிய பயிர்களைக் காணச் சகிக்காமல் ஸர்ப்பங்கள் ஊர்ந்து விஷமேறிய காய்களைத் தேடி பொறுக்கினான். வீடும் குடும்பமும், குடும்பத்திலிருந்தவர்களின் பசியும் திரும்பிச் செல்லமுடியாதபடி அச்சுறுத்த வயலில் காய்களைத் தின்று தற்கொலை செய்துகொள்வதையே எல்லோரும் தேர்வாகக் கொண்டார்கள். கடனாளிக்கு இறப்பு அத்தனை எளிதானதல்ல, தம் குடிமக்களை பணத்தின் ஊற்றாய் மாற்றத் துவங்கியிருந்த மஹ்ராஜின் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை கண்கானிக்கவென்றே நவீன வசதிகள் கொண்ட பறக்கும் கேமராக்களை எல்லா ஊர்களிலும் பொறுத்தியிருந்தார்கள். அவன் காய்களை பறிக்கும் போது அதிகாரிகளுக்கு எச்சரிக்கை மணியடிக்க, கடனாளியான அவன் மரணத்திற்கு முன்பாகவே மஹ்ராஜின் இந்தப் போட்டிக்கு இழுத்து வரப்பட்டான். வாழ்வோ சாவோ அதிகாரமே முடிவுசெய்ய வேண்டுமென்னும் எழுதப்படாத விதி அங்கிருந்தது. அவனது அத்தனை கடனும் முறைப்படி அவன் வாரிசு தாரர்களிடம் சேர, ஒரு பகுதி கடனுக்கு ஈடாக நிலம் அரசாங்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.
வாருங்கள் நாமொரு யுத்தநாடகத்தை வேடிக்கை பார்க்கலாம்.
உங்களிடம் முக்கிய வங்கிகளின் கடனட்டை இருக்கிறதா? ஒருமுறைக்கு பலமுறை பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் போட்டியை விளையாடுபவர்களுக்கு மட்டுமல்ல பார்ப்பவர்களுக்கும் நிபந்தனைகளுண்டு. தூய காவி நிற ஆடை அணிபவர்களுக்கு மட்டுமே அனுமதி. எந்தவிதமான பணப்பரிமாற்றமும் இங்கு கிடையாது. நீங்கள் உங்கள் அனுமதி சீட்டு உட்பட எல்லா செலவுகளுக்கும் வங்கி அட்டைகளையே பயன்படுத்த வேண்டும். கேளிக்கையின் பொருட்டு நீங்கள் வாங்கும் இந்த அனுமதிச்சீட்டிற்கு இந்த விளையாட்டின் மகத்துவத்தைக் கருத்தில் கொண்டு நூறுசதவிகித வரிவிதிப்பு உண்டு. அதன்படி நீங்கள் எவ்வளவு விலை கொடுத்து அனுமதிச்சீட்டு வாங்குகிறீர்களோ அதே அளவிற்கு வரியும் கட்ட வேண்டும். மைதானத்திற்குள் நுழைந்த பின்னர் உங்கள் எண் குறிப்பிடப்பட்ட போட்டி நடக்கிறவரை நீங்கள் காத்திருக்க வேண்டும். பின் மணி ஒலித்தபிறகே உள்ளே செல்ல வேண்டும். போட்டி துவங்குவதற்கு முன்பாக நமது கீதம் ஒலிக்கப்படும். அப்பொழுது எழுந்து நிற்பதோடு சேர்ந்து பாட வேண்டும். ஒவ்வொருவரின் இருக்கைக்கு மேலும் ரகசிய கேமரா உண்டென்பதால் உங்களின் நடவடிக்கைகள் கண்கானிக்கப்பட்டபடியே இருக்கும். நீங்கள் கூட்டத்தோடு இணைந்து பாடத் தவறுகிற பட்சத்தில் உங்களின் மீதான தண்டனைக்கு ஈடாக அபராதத் தொகை வசூலிக்கப்படும். போட்டியை கண்டுகளிக்கும் போது நீங்கள் கைதட்டலாம், போட்டியாளர்களின் மீது நீங்கள் கொண்டு வந்திருக்கும் தண்ணீர் பாட்டில்களை எறியலாம் ஆனால் சிரிக்க கூடாது. இவை எல்லாவற்றிற்கும் சம்மதமென்றால் கீழே உள்ள மூன்று பிரிவுகளில் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் அட்டையைத் தேய்க்கவும்.
எங்களது சேவையை பயன்படுத்தியதற்கு நன்றி.
1. எலைட் - 50000 ரூ
2. டிவைன் - 25,000 ரூ
3. காமன் - 10,000 ரூ
உங்களுக்கான அழைப்பு வரும் வரை காத்திருக்கவும்.
மைதானத்தில் வேடிக்கை பார்க்க வருகிறவர்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் தான், கடன் வசூலிப்பிற்கு ஏற்ற வலிய மிருகங்களையே அவர்கள் தேடினார்கள். மிருக உணர்ச்சி கொண்ட மனிதர்களையல்ல, எல்லா மனிதர்களுக்குள்ளும் மிருக உணர்ச்சி கொஞ்சத்திலும் கொஞ்சமாய் காலகாலத்திற்கும் தேங்கிக் கிடக்கிறதுதான். ஆனால் இந்த வியாபாரத்திற்குத் தேவை வன்மங் கொண்ட காட்டு மிருகங்களே… இதனாலேயே போட்டியில் வெற்றி பெறுகிறவரை விலைக்கு வாங்க கடும் போட்டி நிலவுகிறது. போட்டியின் இடைவெளியில் எவ்வளவு நேரம் சண்டை நீடிக்கும் என்பது குறித்த சூதாட்டமும் உண்டு. ஆக இந்தப் போட்டியால் நன்மை விளைந்தது மஹ்ராஜிற்கு மட்டுமல்ல, அவரது முதலாளிகளுக்கும் தான்.
ஒவ்வொரு போட்டி முடிந்ததும் துவங்கும் அடுத்த போட்டிக்கான இடைவெளியில் மஹ்ராஜின் ஆத்மார்த்த ப்ரியத்திற்குரிய கடவுளுக்கான வழிபாடு துவங்கும். முன்பு மஹ்ராஜ் எளிய மனிதனாய் சோமபானம் விற்றுக்கொண்டிருந்த நாளில் அவருக்கு முகங்கள் வரையப்பட்டதில்லை. நாலுக்கு நாலு இஞ்ச் அளவுள்ள சப்பட்டை முகம் அவருக்கு. எப்போதும் வன்மத்தையும் பொய்களையும் மறைத்து அடக்கின இடுங்கிய கண்கள். அதில் ஒளியின் தீட்சண்யத்தின் எந்த அடையாளங்களையும் நாம் காணவியலாது, அதிகபட்சம் நமக்குக் கிடைக்கக் கூடியதெல்லாம் சூன்யத்தின் சின்னதொரு இருள் வெளிதான். என்றாவது ஒருநாள் தன் சித்திரத்தை இவ்வுலகம் பயன்படுத்தக் கூடுமென்கிற முன்னெச்சரிக்கையில் அவர் தனக்கான பிரத்யேக வடிவமைப்பாளரிடம் தனது ஆத்மார்த்த கடவுளையும் தன்னையும் இணைத்து வரையச் சொன்னார். முதலில் வரைந்த படங்களில் கடவுள் தனியாகவும், மஹ்ராஜ் தனியாகவுமிருந்தனர். ஹாலிவுட் படங்களில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் மூலமாய் உருவாக்கப்பட்ட ஹல்க், ஸ்பைடர் மேன் வடிவிலான மஹ்ராஜின் மேலை நாட்டு உருவம் அவருக்கு சாகசத்திற்குரிய ஒன்றாய் பிடித்துப் போயிருந்தாலும் ஒரு தேசத்தின் மன்னனுக்கு அது அழகல்ல என கவனமாய் மறுத்தவர், கடவுளின் முகத்தில் தன்னைப் பொறுத்திக்கொள்வதில் உறுதியாய் இருந்தார். பின் கீழே கொடுக்கப்பட்ட வகையில் அவரின் சித்திரம் உருவாக்கப்பட்டது.
முன்பு மக்கள் கடவுளை வணங்கினர். இப்பொழுது கடவுளின் வடிவிலிருக்கும் மஹ்ராஜை வணங்கினர். எல்லா நம்பிக்கைகளும் இப்படி உருவாக்கப்படுகிறவைதான். அவற்றில் சில புழுக்களின் பிசுபிசுப்பான தசைகளைப் போல் தற்காலிகமானவை, இன்னும் சில காட்டு மிருகங்களின் இறுகிய தோல் போல் நிரந்தரமானவை.
இதோ புதிய போட்டியாளர்கள் வந்துவிட்டார்கள்.
வெள்ளி நிறத்திலான அந்த ராட்சத வாகனம் உக்ரமான வெயிலில் ஜொலித்தபடி மைதானத்தின் முன்னால் வந்து நின்றது. தேசத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இழுத்துவரப்பட்டிருந்த அவ்வளவு பேரும் முதுகெலும்பு நிலத்தில் வளைய துன்புறுத்தப்பட்டு இறக்கிவிடப்பட்டனர். கால்களிலில் சங்கிலிகள் அழுத்தியதால் கசிந்த குருதியின் ஈரம் இன்னும் வற்றியிருக்கவில்லை. ஜீவிதத்தின் நித்திய தருணங்கள் எல்லாம் முடிந்து போன அவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்காக. வலிமையானதொரு தேசம் உருவாக வலிமையான அரசன் மட்டும் போதாது, அவரிலும் வலிமையான குடிமக்கள் வேண்டும். மன உறுதிமிக்க குடிமகன்களை உருவாக்கும் நூதன விளையாட்டை திரு.மஹ்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத்தான் கண்டுபிடித்திருந்தார். மரண ஓலங்களின் இரைச்சல் காற்றில் கூர் ஊசிகளாய் கலந்துவிட்டிருந்ததில் அவ்வெளியில் சவக்களை நிரந்தரமாய்த் தங்கிவிட்டிருந்தது. முதலில் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் எளிதாக துவங்கப்பட்ட அந்த மைதானத்தின் விஸ்தாரம் இன்று ஒரு முழு மாநகரை ஆக்ரமிக்கும் அளவிற்கு விரிந்துள்ளதற்கு விளையாட்டின் மீது மஹ்ராஜ் கொண்டிருந்த அதீத விருப்பமே காரணம். மார்புக் கவசங்கள், பட்டிகள், ஹெல்மட்டுகள் எல்லாம் சரியாய்ப் பொருந்தி வர ஒரு போட்டியாளனுக்கு நல்ல தேக லஷ்ணம் வேண்டும். ஒவ்வொரு ஆட்டக்காரனுக்கும் விதிக்கப்பட்ட நேர அளவு ஐந்து நிமிடங்கள்.
போட்டி மிக எளிமையானது. மான்புமிகு மஹ்ராஜின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட திப்புவின் இயந்திரப்புலியுடன் சண்டையிட வேண்டும். அந்தப் புலி பத்து யானைகள் சேர்ந்த பிரம்மாண்ட உருவம். அதை இயக்குவதற்கான பொத்தான் அழுத்தப்பட்டதும் அது உறுமுவது போன்ற கொடூர சத்தமும் அதன் வேகத்திற்கேற்ற மாதிரியான இசையும் சேர்ந்து மைதானம் முழுக்க எதிரொலிக்கும். போட்டியாளன் சமாளிக்க வேண்டியது புலியை மட்டுமல்ல, இந்த சத்தத்தையும் தான்.
பார்வையாளர்கள், விருந்தினர்கள் யாரையும் இந்த சத்தம் தொந்தரவு செய்துவிடாதபடி பிரம்மாண்டமான கண்ணாடி வேலி போடப்பட்டிருந்தது. இவ்வளவையும் மீறி உடல் காயங்களுடன் தப்பிக்கிறவர்களின் அதுநாள் வரையிலுமான கடன் முழுமையாக விலக்கப்பட்டு மன்னரிடம் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கொல்லப்படுகிறவர்களின் உடல்கள் தேசத்தில் பாதுகாக்கப்படும் விலங்குகளுக்கும் தலை மைதானத்தை அலங்கரிப்பதற்கும் எடுத்துக் கொள்ளப்படும்.
இறந்தவர்களின் மண்டை ஓடுகளால் அலங்கரிக்கப்பட்ட திரு.மஹ்ராஜின் சிம்மாசனம் மொத்த மைதானத்தையும் கழுகுப்பார்வையில் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. கண்கள் பிடுங்கப்பட்ட மண்டை ஓட்டின் குழிகளில் நிகழ்காலத்தின் சூன்யம் அடர்ந்து நிரம்பியிருந்தது. அந்த நகரின் மீது மனித இரைச்சியின் ருசிக்குப் பழகிய பறவைகள் பெருங்கூட்டமாய் எப்போதும் சுற்றியலைந்தபடியே இருந்ததால் வானவெளியின் தரிசனம் கிடைப்பதே அபூர்வம். பறவைகளை ஊடுருவி வரும் வெய்யிலின் காத்திரத்திற்கு நடுவில் எப்போதாவது சிலர் அங்கு வானத்தைக் காணக்கூடும். ஒவ்வொரு நாளும் விடிவதற்குள் பாதாள உலகத்திற்கான பயணத்திற்கு அன்றைய தினம் யாரெல்லாம் என்பதை காவல் வீரர்கள் பிரித்து வைத்திருப்பார்கள். அவர்கள் ஜன்னலின் வழியே தங்களின் கடைசி சூரிய உதயத்தை காண அனுமதிக்கப்படுவது அவர்களுக்கு மஹ்ராஜ் தரும் அன்புப் பரிசு. வானத்துப் பிரதேசங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு அன்றைய தினம் வரவிருக்கும் யாரோ ஒரு பார்வையாளன் வழி தான் காப்பாற்றப்படலாமென அபிலாஷை அடியாழத்திற்குள் இருக்கும். மரித்தவர்களின் உலகத்தினூடாகப் பயணப்பட்டு புதிய மனித இனம் ஒன்றை உருவாக்குவதற்காக எலும்புகளைப் பொறுக்கி சேகரிக்கும் அரசு அதிகாரிகள் இந்த போட்டியாளர்களின் ஒளியற்ற கண்களை விரும்புவதில்லை.
கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் புதிய தேசத்தின் உருவாக்கத்திற்காக அந்த பெரிய மைதானத்தினடியில் உறங்கிக் கொண்டிருந்தன.
ஒப்பனை அறையில் யுத்தத்திற்கு தயாராய் இருப்பவன் :
இப்போது அவன் கைகள் சுதந்திரமாய் இருக்கின்றன. முகம் துயர்மிகு நடனமொன்றிற்கான அதீத ஒப்பனையில் மலர்ச்சியாய் இருந்தும் இருதயம் இயல்பை விடவும் தீவிரமாய் துடித்துக் கொண்டிருந்தது. இவனுக்கு முந்தைய மனிதனின் யுத்தம் இன்னும் சில நிமிடங்களில் முடிவடையலாம் என்பதற்கான அறிகுறிகளை மைதானத்திலிருந்து வரும் பெருந்திரளான மக்களின் கரவொலிகள் உணர்த்தியபடி இருந்தன. இதுவரையிலுமான அவன் வாழ்வின் முடிவாக இந்நாள் இருக்கலாம், ஆனாலும் எப்போதும் வரும் சூரியனைப் போல் அதன் மாசற்ற ஒளிக்கதிர்களைப் போல் வரலாறு இவனுக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள அனேக காரணங்களை இவன் விட்டுச் செல்லமுடியும். எதிர்ப்புணர்வென்பது தன்மானத்தின் உதிரத்துளிகளில் இருந்து துளிர்க்கிறது.
எத்தனை முறை வெட்டினாலும் மீண்டு வரும் அந்த உணர்ச்சியால் பின்னப்பட்ட இவன் இன்றைய அந்தியில் கொல்லப்படலாம். ஆனாலும் மீண்டும் பிறப்பதற்காகவே இறக்க வந்திருக்கிறான். சுட்டெரிக்கும் அக்னியை ஒத்த வெயிலில் கொஞ்சம் கொஞ்சமாய்த் துரத்தப்பட்டு உடலின் நீராதாரம் அவ்வளவையும் சூரியன் உறிஞ்சிய பிறகு தோன்றும் கிலியை, பீதியை, அருவருப்பை அத்தனை எளிதில் விவரிக்க முடியாதுதான். ஏதோவொரு இருளார்ந்த மன உலைவு வாழ்விற்கும் சாவிற்குமான அந்த சிறிய இடைவெளியிலும் அவனை நிம்மதியற்றவனாய்ச் செய்திருந்தது. சில காலங்களுக்கு முன்பு வரையிலும் இதைவிடவும் கடுமையான வெயிலில் தன் நிலத்தில் வியர்வையும் குருதியும் கசிய விதைத்து அறுவடை செய்த அந்த விவசாயி தன் சொந்த ஊர், உறவுகள் எல்லாவற்றிலிருந்தும் துண்டிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தான்.
அவன் முன்னால் இரண்டு தேர்வுகளிருந்தன. போட்டியில் தோற்று கொலை செய்யப்படுவது, அல்லது வென்று தன்னைப் போல் புதிய அடிமைகளை மஹ்ராஜிற்கு உருவாக்கிக் கொடுப்பது. இதற்கு முன் ஒருபோதும் மனிதர்களோடோ, மிருகங்களோடோ சண்டைக்கு பழகாத அவன் பல காலமாய் பசியோடு மூர்க்கமாய் போராடியவன். அந்த நம்பிக்கை மட்டுமே இருப்பின் தீர்க்கமான வெளிச்சத்தை அவனுக்குள் நிறைத்திருந்தது… இரும்பு ஹெல்மட்டால் முகத்தை மறைத்திருந்த வீரனொருவன் “நீங்கள் போட்டிக்குத் தயார்தானே?” ஒருமுறை நினைவுபடுத்த தளர்ந்த உடலைத் திருப்பி இவன் ஆமென்றான்.
60 இஞ்ச் கர்வ் தொலைக்காட்சியில் மஹ்ராஜின் பழைய சொற்பொழிவொன்று அந்த சின்னஞ்சிறிய அறைக்குள் ஓடத்துவங்க, வேட்டைப்புலியின் ரணமேறிய கண்களோடு அவன் மெதுகாக சத்தத்தைக் கூட்டினான்.
“ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மக்கள்…. என் கனவெல்லாம் இதெல்லாம். தீமை எந்த வடிவிலென்றாலும் அதை முற்றிலுமாக இரும்புக்கரம் ஒன்று ஒடுக்குவேன். என் அன்பான குடிமக்களே நான் உங்களுக்கு சத்தியம் செய்து தந்த அந்த கனவு தேசம் இன்னும் மூன்று மாதங்களில் நிஜமாகும்…
“BURN ME ALIVE, IF I AM WRONG. BURN ME ALIVE IF I AM WRONG… BURN ME ALIVE IF I AM WRONG….”
அவரது குரல் ஆவேசமாய் அந்த அறைக்குள் எதிரொலிக்க அதற்கும் மேல் கேட்க பொறுமையின்றி எரிச்சலுற்றவனாய் இவன் அவசரமாக தொலைக்காட்சியை அணைத்தான். மூன்று மாதங்களும் முடிந்தபிறகு சூன்யம் துப்பிப் போட்டிருக்கும் இந்த நசுங்கிய தேசத்தின் மஹ்ராஜ் முன்னைவிடவும் கர்வத்தோடே இருக்கிறார். தான் வாக்கு தந்தபடி ஒரு தூய தேசம் வெகு விரைவில் சாத்தியமாகுமென இப்போதும் அவர் சில இரவுகளில் உரையாற்றத் தவறுவதில்லை.
திப்புவின் புலியோடு யுத்தம் தொடங்கியது.
தாழப் பறந்து வரும் பறவைகள் மைதானத்தில் சிந்தியிருந்த கொல்லப்பட்டவனின் குருதியையும் சதைகளையும் கொத்திச் செல்கின்றன. நிலமெங்கும் குருதி வாடை. தனக்கு முன்னாலிருந்த கதவு திறக்கப்பட்ட போது அவ்வளவு நேரமிருந்த பதட்டங்கள் அவ்வளவும் விலகி சூரிய உதயத்தைக் காணத் தயாராகும் மலர்களைப் போல் அந்த மைதானத்தில் நடக்கத் துவங்கினான். வதங்கி மெலிந்த அந்த உடலை மைதானத்தில் வேடிக்கை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவருக்குக் கூட பிடிக்கவில்லை. புத்தம் புதிய கவசங்கள் இரும்பு ஹெல்மட் என தன் மீது கிடக்கும் பாதுகாப்பு வளையங்களின் எடையே அவனுக்கு தொந்தரவாய்ப்பட சிரமத்தோடு ஹெல்மட்டை கழற்றி மைதானத்தின் இன்னொரு எல்லையில் சலனமே இல்லாமல் நின்றிருந்த இயந்திரப் புலியை நோக்கி எறிந்தான்… “ஹோ”வென பார்வையாளர் எழுப்பிய கரவொலியின் போது அவ்வளவு நேரமும் தனது சிம்மாசனத்தில் குட்டித் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த மஹ்ராஜ் அவசரமாக கண்விழித்து தான் விமானத்தில் பயணிக்கிற அச்ச உணர்வில் சீட் பெல்ட்டைத் தேடினார். கேமராக்கள் எதுவும் படம் பிடிப்பதற்கு முன்பாக அவரது மந்திரிகளில் ஒருவர் குனிந்து
“ஐயா தாங்கள் தங்களின் ப்ரியத்திற்குரிய மைதானத்தில் தான் இருக்கிறீர்கள். அச்சப்படாமல் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.”
என இயல்பாக்கினார். மஹ்ராஜிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் இன்னொரு புதிய போட்டியை காணும் ஆர்வத்தோடு நிமிர்ந்து சரியாக உட்கார்ந்து கொண்டார். சற்று நேரத்திற்கு முன்பு உண்ட நெய் கலந்த பருப்பு சாதம் மெதுவாக இளகி நாற்றமெடுக்கும் குசுவாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்க குசுவை வெளியேற்றும் பொருட்டு இடதும் வலதுமாய் அசைந்து இரண்டு புறங்களிலும் உடலை நகர்த்தி காற்றை வெளியேற்றினார். அவரின் முதுகிலிருந்த மண்டை ஓடுகள் நாற்றத்தைப் பொறுக்கமாட்டாமல் தடுமாறிக் கதறின.
வார்த்தைகள் வெளியே கேட்டுவிடாதபடி “அய்யோ கொல்றானே, கொல்றானே..” என அவற்றில் சில மண்டை ஓடுகள் புலம்ப, திரும்பி அத்தனை எலும்புகளில் பேசத் துவங்கியிருக்கும் அந்த தீய சக்தியை ஆத்திரத்துடன் தேடினார். எந்த பாவனைகளையும் வெளிப்படுத்தாமல் எலும்புகள் எல்லாம் மெளனமாய் இருந்தது. தடயம் கிடைக்காமல் திரும்பி மைதானத்தைப் பார்த்த பொழுது தலையில் ஹெல்மெட் அணியாமல் ஒருவன் அவரை நோக்கி மண்டியிட்டிருப்பதைப் பார்த்தார். வளரத் துவங்கியிருக்கும் சிறிய வேப்பமரத்தைப் போல் சத்தில்லாமல் கிடந்த அந்த மனிதன் ஓர் முன்னாள் விவசாயி என்பதை அதிகாரி அவரின் காதிற்குள் சொன்னார். ’அதுதான் இத்தனை கர்வமா?’ என நினைத்தபடி தலையாட்டிக் கொண்டவர் புலியை இயக்கச் சொல்லி சைகை செய்தார்.
அந்த மனிதன் அப்பொழுதும் அதே நிலையிலேயே கிடந்தான். சூரியனின் அஸ்தமனத்திற்கு இன்னும் சில நிமிடங்களே மிச்சமிருந்த வேளையில் பல்வேறு கார்ப்பரேட்டுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அந்த இயந்திரப் புலி முதலில் காதை செவிடாக்கும்படி அலறியது. கண்ணாடி வேலியிலும் சில நொடிகல் அந்த அலறலின் அதிர்வை பார்வையாளர்கள் உணர்ந்திருந்தாலும் பசியின் காரணமாய் எப்பொழுது கேட்கும் திறன் குறைந்து போயிருந்த அந்த மனிதன் புலியின் உறுமலை பொருட்படுத்தாமலே இருந்தான். எந்த எதிர்வினைகளுமில்லாமல் தன் முன் கிடக்கும் சதைப்பிண்டத்தை சந்தேகத்தோடு பார்த்து சுற்றி சுற்றி வந்தது புலி.
முழங்கால் போட்டிருந்த நிலையிலேயே தலையை உயர்த்தி புலியைப் பார்த்தவனின் கண்களில் பல நூற்றாண்டுகளாய் துரோகிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட வன்மத்தின் ரேகைகள் வரி வரியாய் ஓடின. ப்ரோகிராம் செய்யப்பட்ட அதன் பிரம்மாண்ட உடல் முழு விசுவரூபமெடுக்க ஆகாயத்தைத் தொடும் உயரத்தில் வளர்ந்து நின்றது. முப்பது விநாடிகளுக்குள் அவன் கொல்லப்படுவதற்கான ப்ரோகிராம் கம்ப்யூட்டரின் மூலம் உறுதி செய்யப்பட்டதும் தனது வழக்கமான உடல் அசைவுகளோடு ஆவேசமாய் அவனை நோக்கி முன்னேறியது. அத்தனை பெரிய உருவத்திடமிருந்து லாவகமாக விலகித் தப்பிய அந்த மனிதன் புலியின் பழக்கப்பட்ட ப்ரோக்ராம் அசைவுகளுக்குள் அடங்காத பூச்சியை இங்கும் அங்குமாய் தாவினான். வழக்கமாக மனிதர்கள் இத்தனை சாதுர்யமாய் அவனிடமிருந்து தப்பிப்பதில்லை. சிந்திக்கும் திராணிய்ற்ற புலி முப்பது நொடிகளுக்கான தனது அசைவுகளிலேயே தொடர்ந்து முன்னேற அதனிடமிருந்து தப்பி அதன் பின் பகுதிக்கு வந்திருந்த மனிதன் அதன் செயற்கை வாலைப் பற்றி மூன்றே தாவுதலில் அகன்ற அதன் முதுகில் ஏறிக்கொண்டான். புலியை இயக்கிக் கொண்டிருந்தவனுக்கு இன்னும் அனேக நேரமிருந்ததால் அவசரமாய் அவன் புலிக்கு அடுத்த அசைவுகளுக்கான உத்தரவுகளை கம்யூட்டரில் மாற்றினான். இப்பொழுது வெயிலில் பளபளக்கும் பிரம்மாண்டமான புலியின் முதுகில் ஏறியிருந்த அந்த ஏழை மனிதர் தன் ஆத்மார்த்தமான நிலமும் ப்ரியத்திற்குரிய மாடுகளும் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் அதன் உடலில் வெவ்வேறு இடத்தில் மூர்க்கமாய் மிதித்தான். பல காலமாய் உழுவதற்கு நிலத்தை மிதித்து வலுவேறிப் போயிருந்த அவன் கால்களில் மிதிபட்டு புலியின் உடலில் இணைக்கப்பட்டிருந்த வயர்கள் அறுந்து தொங்கின. அந்த பிரம்மாண்ட புலி கம்ப்யூட்டரிலிந்து வந்த எந்த உத்தரவுகளையும் எடுத்துக் கொள்ள முடியாமல் தேமேவென ஒரே இடத்தில் அப்படியே நிற்க, இனி இந்த இயந்திரம் தன்னை ஒன்னும் செய்யப்போவதில்லை என்கிற கர்வத்தில் அந்த மனிதன் அதன் உடல் பகுதிகளை ஆத்திரம் தீர பிய்த்துப் போட்டான். புலியை உருவாக்க ஸ்பான்சர் செய்திருந்த கார்ப்ரேட் கம்பெனிகளின் ஆளுயர பேனர்கள் அதன் உடலில் இருந்து பிய்த்து எறியப்பட, எல்லாம் இப்பொழுது மைதானமெங்கும் பறந்தது.
அவ்வளவு நேரமும் ஆராவரத்தோடு பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர் கூட்டம் இந்த புதிய மனிதனின் மூர்க்கத்தைக் கண்டு அச்சமுற்றது. இத்தனை கால தங்களின் உழைப்பிற்குப் பிறகும் நிலத்தை நம்பி வாழ்ந்த ஒரு மனிதனுக்குள் இந்த வலிமை எப்படி சாத்தியமென அவர்களுக்கு குழப்பம்? பிய்த்தெறியப்பட்ட புலியின் இயந்திர உடல் மைதானத்தில் பரிதாபமாய்க் கிடக்க முன்னைப் போலவே அதே பணிவோடு அவன் மஹ்ராஜின் முன்னால் குனிந்து நின்றான். அவன் சாதாரண வெற்றியாளனல்ல என்பதைப் புரிந்து கொண்ட மஹ்ராஜ் தமது நிறுவனங்களுக்கு புதிய பாதுகாவல் கிடைத்துவிட்டான் பூரிப்பு கொண்டார். உற்சாகமாக எழுந்து அவர் கைதட்ட விருப்பமே இல்லாமல் பார்வையாளர் கூட்டமும் எழுந்து கைதட்டியது.
புலியோடு போரிட்டு வென்ற அந்த மாவீரனின் தலைமையில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு படை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் உத்தரவிட்ட அந்த நாளில் தான் புதிய தேசம் பிறந்தது. அதிகாரம் செய்ய பழக்கப்பட்டவர்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய பழக்கப்பட்டவர்களென்கிற இரண்டு விதமான மனிதர்கள் மட்டுமே இனி இங்கிருப்பார்கள். யுத்தத்தை வென்ற மனிதன் மீண்டும் ஒப்பனை அறைக்குத் திரும்பியபோது அவனுக்கான புதிய உடைகள் காத்திருந்தன. அவனை எப்படியாவது தங்கள் நிறுவனத்திற்கு உடமையாக்கிக் கொள்ள மைதானத்திற்கு வெளியே பெரும் போட்டி நடந்து கொண்டிருக்க, அதிகாரிகள் அந்த மனிதனிடம் வந்து “இன்று இரவு நீங்கள் மரியாதைக்குரிய நமது மஹ்ராஜூடன் உணவருந்த அழைக்கட்டிருக்கிறீர்கள் என்று சொல்ல அவன் ஆமோதித்து தலையசைத்தான். சிலர் அவனை “கமாண்டர்” என்றழைக்க எல்லோருக்கும் பொதுவாக புன்னகைத்துவிட்டு அவன் தன் புதிய உடையுடனும் அதிகாரத்துடனும் அந்த அறையிலிருந்து வெளியேறினான். நீண்ட வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தின் கதவுகள் திறக்கப்பட நாசூக்காக அதில் ஏறிக்கொண்டான். மைதானத்தின் வாசலை நோக்கி கார் மெதுவாக நகர நிறுவனங்களின் தரகர்கள் அந்த வாகனத்தைத் தொடர்ந்து ஓடிவந்தனர். காரின் ஜன்னலை இறக்கி அவர்களை நோக்கி கையசைத்த வேலையில் தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றிய மரியாதைக்குரிய மஹ்ராஜ் உற்சாகமாக தனது உரையை இப்படித் துவக்கினார்……
வலிமையான ஒரு புதிய தேசம் பிறந்தது.
வலிமையான ஒரு புதிய தேசம் பிறந்தது.
வலிமையான ஒரு புதிய தேசம் பிறந்தது.
Comments