top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

தோல்விகளுக்குப் பழகுங்கள்.


இது புலம்பல் அல்ல...

இது புத்தாண்டு வாழ்த்து அல்ல...

இது அறிவுரை அல்ல....
ஒரு வருடம் முடிந்து புதிய வருடம் துவங்குகையில் தோல்வியைக் குறித்துப் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது? எழுத்தாளர்கள் லட்சிய பிம்பங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தோல்விகளைக் குறித்துப் பகிர்ந்துகொள்வது ஒருவகையில் எனது சுயநலம். நீண்ட காலத்திற்குப்பின் 2023 எனக்கு மிக சோர்வான வருடம்.


 2007 ம் வருடம் எழுதத் துவங்கியதிலிருந்து இந்தநாள் வரை வெவ்வேறு சவால்களை இறக்கங்களை மனத்தளர்வுகளைக் கடந்து வந்திருந்த அனுபவமிருந்தாலும் கடந்த வருடத்தின் சோர்வு சற்று அதீதமானது. மிக முக்கியமான காரணம் திட்டமிட்டு எழுத்திலிருந்து நான் எடுத்துக்கொண்ட – எடுத்துக்கொண்டிருக்கும் இடைவெளி. பெரும் பணம் சேர்க்க வேண்டுமென்கிற பொருளாதார தேவைகளோ அவசியங்களோ இல்லாதபோதும் எனக்குப் பிடித்த இன்னுமொரு துறையான திரைப்படத் துறையில் எனக்கான முதல் படைப்பை முடித்து வெளியிட வேண்டிய நெருக்கடியில்  இலக்கியப் பணிகளை சற்று ஒதுக்கி வைக்க வேண்டிய சூழல்.


ஒரு மனிதன் இரண்டு நேரெதிர் குணங்களோடு பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுத்தாளன் திரைப்பட இயக்குநராக மாறும்போது நிகழ்கிறது.  இலக்கியத்தைப் பற்றிக்கொண்டு வாழப் பழகியவனுக்கு அது மட்டுமே அடையாளம். சினிமா எனது தொழில் என்று சொல்லலாமா? தவறில்லை. எனக்குப் பிடித்தமான நான்  மதிக்கும் வேலை. இன்றைக்கிருக்கும் தமிழ் சினிமாவின் சூழலில் எவருடைய ஆதரவும் இல்லாமல் வாய்ப்பு கிடைப்பது அரிய செயல். யாரோ ஒருவருடைய ஆதரவு இங்கு தேவையாய் இருக்கிறது. அப்படி இல்லாமல் ஊரிலிருந்து வருகிற என்னைப் போன்றவர்களுக்கு அதிலும் குறிப்பாக வாய்த் துடுக்கும் வெளிப்படைத்தன்மையும் எவரையும் எளிதில்  பகைத்துக்கொள்ளும் முன்கோபமும்  கொண்ட ஒருவனுக்கு வாய்ப்புக் கிடைப்பதும் அதைத் தக்கவைத்து வெல்வதும் அரிதினும் அரிதான காரியமாகவே இருக்கிறது.


வெற்றி – தோல்வி என்கிற கட்டங்களுக்குள் எல்லாம் செல்லாமல் வெளியே நின்று எல்லாவற்றையும் பார்க்கையில் எனக்கு இந்தப் பயணம்தான் முக்கியமோ என்று தோன்றுகிறது. ஒரு வெப்சீரிஸ் இயக்குவதற்காக ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கும் மேலாக வேலை செய்துகொண்டிருக்கிறோம்.  ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே படப்பிடிப்புகள் துவங்கி இந்த வருட இறுதியில் அந்த சீரிஸ் வெளியாகியிருக்க வேண்டும். சில பல காரணங்களால் அந்த வேலைகள் தள்ளி தள்ளி இப்பொழுது ஒரு எல்லையில் நின்றிருக்கிறது. ஒரு  மனிதன் தான் மிக நேசிக்கும் ஒன்றைச் செய்ய முடியாமல் இருப்பதைப்போல் வலிதரக்கூடியது வேறில்லை. நான் பணத்தை இழப்பதற்காக, காலத்தை இழப்பதற்காக, நண்பர்களை இழப்பதற்காக ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. ஆனால் செயல்படாமல் இருப்பதற்காக கடும் மனவருத்தம் கொள்கிறேன்.  


இலக்கியம் சினிமா என்னும் இரு எல்லையிலும் செயலற்று நிற்கையில் நான் எனக்குப் பொருந்தாது நான் விரும்பாத மனிதனாக என்னைப் பார்க்கிறேன். இந்தச் சிக்கல் உடண்டியாக விலகிவிடும். சில வாரங்களில் படப்பிடிப்புத் துவங்குவதற்கான வேலைகள் நடந்துவிடும். நானும்  இந்தச் சோர்வுகளிலிருந்து மீண்டுவிடுவேன். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைத்த படிப்பினைகளையும் அவதானங்களையும் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.


செயலின்மை ஒரு மனிதனை என்ன செய்யக்கூடும்? முதலில்   அவநம்பிக்கையும் சலிப்பும் வருகிறது. அதனைத் தொடர்ந்து மனிதர்களின் மீது தாங்க முடியாது காழ்ப்புணர்வும் தாழ்வுணர்ச்சியும் வருகிறது.   ஏதோவொரு வகையில் நீங்கள் நீங்களாக வெளிப்படுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பது அவசியம். உங்கள் வேலைம் குடும்பம் நண்பர்கள் இதுமட்டுமே நீங்கள் அல்ல.. அதைத் தாண்டி உங்கள் அகம் ஒன்றை தேடுகிறது. ஒன்றில் நீங்கள் ஆத்மார்த்தமாக வெளிப்படக் கூடும். கலை வடிவங்களில் இயங்குகிறவர்கள் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்க வேண்டுமா? அவர்களுக்குக் காத்திருப்பு தேவையில்லையா எனக் கேட்கலாம்…. காத்திருப்பு என்பது வேறு செயலின்மை என்பது வேறு. ஒன்றைச் செய்வதற்காக நீங்கள் காத்திருக்கையில்  புதியனவற்றைக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் செயலின்மை என்பது நீங்கள் முழுவேகத்தோடு செய்யக் காத்திருக்கும் ஒரு செயலை  புறக் காரணங்களால் செய்யமுடியாமல் தள்ளிப்போவதால் உருவாவது. புறக்காரணிகளோடு போராடி போராடி  அடிப்படையாகச் செய்ய விரும்புகிற எல்லாவற்றிலிருந்தும் விலக்கம் ஏற்படத் துவங்குகிறது. இந்த செயலின்மையைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.


எந்தச் சரிவிலிருந்தும் தன்னை மீட்டுக்கொள்ளும் வித்தை மனிதர்களுக்குத் தெரியும்.  சரிவிற்கும் மீட்சிக்குமான இடைப்பட்ட காலத்தில் உங்கள் மனதை உற்றுக் கேளுங்கள். சக மனிதர்களின் மீது உருவாகும் கசப்புணர்வு சலிப்பு எல்லாவற்றையும் குறித்துக் கொள்ளுங்கள். அது எல்லாமே நீங்கள் தான்.   நாம் பார்க்க விரும்பாத நமது முகங்களில் இப்படி நிறைய ஒன்று. இதைக் கவனமாகப் பார்க்க பழகிவிட்டால் மெல்ல மெல்ல அதிலிருந்து உங்களை மீட்டுக்கொண்டு விடலாம். மாறாக இந்தக் காழ்ப்பும் சலிப்பும் குரூரமானதொரு  சுகத்தை உங்களுக்குத் தருமென நினைப்பீர்களேயானால் எச்சரிக்கை அது உங்களுக்கு மட்டுமல்ல உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நல்லதல்ல.

எப்போதும் ஏதாவதொன்றைச் செய்துகொண்டே இருங்கள் என்பதோ, நீங்கள் சாதித்தே ஆகவேண்டுமென்றோ நான் வலியுறுத்தவோ இல்லை.  உங்களின் செயல் தான் நீங்கள். அன்றாடங்களுக்கு வெளியே ஒரு செயலை உருவாக்கிக் கொள்ளுங்கள். செயல் தான் உங்களை இந்தச் சமூகத்தில் ஒருவராக நகர்த்துகிறது.


இந்த செயலின்மைக்கும் செயலுக்கும் இடையிலான பெரும் இடைவெளியில் சில தோல்விகளும் அவமானங்களும் தவிர்க்கமுடியாதவை. அதற்குப் பழகிக்கொள்ளுங்கள்.  அவமானத்தின் குரல் சகிக்க முடியாதது என்றாலும் கொஞ்சம் கவனிக்கப் பழகிவிட்டால் நாம் எதிர்கொண்டதை நாம் இன்னொருவருக்கு  நிகழ்த்தாமல் இருக்க வேண்டுமென்கிற பக்குவம் ஒருவேளை கைகூடலாம். இல்லாதுபோனால் தோல்விகளின் வழியாகவும் செயலின்மையின் காரணமாகவும்  உருவாகும் பதற்றங்கள் நாம் இதுவரையிலும் கட்டியெழுப்பிய பல சித்திரங்களை தர்த்துவிடக்கூடும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

435 views

Comments


bottom of page