top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

நமது விருப்பத்திற்குரிய அங்கமாயிருக்கும் காதலென்னும் சிலுவையும், பெருந்திணையின் வசீகரமும்.


உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’.





கதைகள் எப்போதும் தன்னகத்தே ஒரே முகத்தைக் கொண்டிருப்பதில்லை, அதிலும் குறிப்பாக காதல் கதைகள். அவை அனேக முகங்களைக் கொண்டவை. பெருந்திணையும் சேர்ந்துவிட்டால் எண்ணிக்கையில் இன்னும் கொஞ்சத்தைக் கூட்டிக் கொள்வது ஒன்றும் சமூகக் குற்றமில்லை. தமிழில் சொற்கள் அனேகமாய் இருப்பதாலோ என்னவோ நம்மவர்கள் கைக்கிளை, பெருந்திணை, என பல்வேறு வகையாய் காதலைக் கூறுபோட்டு வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு காதல் கதை ஏதோவொரு வகையில் சுவாரஸ்யமானதாகவும், எல்லோருக்கும் பொருந்திப்போகக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பதையே நாம் விரும்புகிறோம். நாம் வாசிக்கும் புத்தகங்கள் நம்மை கிளர்ச்சியடையச் செய்து நம் உள்ளாடையை குறைந்தபட்சம் சில துளிகள் ஈரமாக்க வேண்டும், அல்லது அந்தக் காதல் நசிந்து நாசமாகி நமது கண்களை குளமாக்க வேண்டும். காதல் கதைகளுக்கான நமது பொதுபுத்தி வாசகன் கட்டமைத்து வைத்திருக்கும் நூற்றாண்டு விதியிது. இதிலிருந்து விலகி பிரிதொன்றாய் காதலை அணுகுகிறவனை அயோக்கியனாகவும் முட்டாளாகவும் சுயநலக்காரனாகவுமே வாசகன் அனுகுகிறான்.


ஈழத்து நாவலென்றதும் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு அது யுத்தம் குறித்தானதாகவும், போராளிகள் குறித்தானதாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. யுத்தத்தின் பின்னால் அல்லது அதன் காரணமாய் ஏற்ப்பட்டிருக்கும் தனிமனித சிதைவுகளைப் பேசுகிற படைப்புகளை பெரும்பாலனவர்கள் பொருட்படுத்தக் கூடியவைகளாய்ப் பார்ப்பதில்லை. உமா வரதராஜனின் ’மூன்றாம் சிலுவை’ யுத்தத்தின் காரணமாய் தனிமைப் படுத்தப்பட்ட ஒரு நிலத்தின் மனிதர்களையும் நிலையற்ற அவர்களின் மனங்களையும் விரிவாகவும் நுட்பமாகவும் பேசுகிறது.


நீங்கள் வாசிக்கும் புத்தகம் ஒருநாளும் உங்களைத் திருப்திபடுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. எந்தப் புத்தகமும் உங்களுக்கு ஆசை நாயகியாகவோ, காதலியாகவோ இருக்க வேண்டுமென்கிற நிபந்தனைகளுடன் எழுதப்பட்டவையல்ல. ஒரு கதை எழுதப்பட்டவனுக்கும் அதை வாசிப்பவனுக்கும் இடையில் ஏதோவொரு வகையான உணர்வுப் பரிமாற்றத்தை நிகழ்த்துகிறது. எந்தவிதமான உணர்வாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஏதோவொரு வகையில் அந்தரங்கமாய் வாசகனோடு ஒரு கதையோ நாவலோ உரையாட வரும்போது அது முக்கியமானதொன்றே.


உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’ நாவலை எளிதில் ஒரு காதல் கதை என்றோ அல்லது பெருந்திணை வகை மாதிரியென்றோ சொல்லிவிடலாம்… ( அதென்ன பொருந்தாக் காதல்…?) பெருந்திணையின் வசீகரத்தை அந்தரங்கமாய் நான் அதிகம் உணர்ந்தனென்பதால் இந்த நாவல்களின் உரையாடல்கள் பெரும்பாலும் என்னுடையதாகவும் இருக்கிறது. என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாகவும், கேள்விகளாகவும் நான் எதிர்கொள்வது ஒருவகையான பிரம்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் இது காதல் என்பதையும் மீறி மனிதர்கள் துண்டு துண்டாய் தனித்துக் கிடக்க நேரும் வாழ்க்கையில் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள் என்பதை நுட்பமாய் பேசும் கதை. இந்தக் கதையின் ராகவனும், ஜூலியும் அப்படியொன்றும் நம்மிடமிருந்து அந்நியமானவர்களாய் இல்லை. அவர்களின் வாழ்க்கை முறையும் நமக்கு அந்நியமானதாய் இல்லை. ராகவனுக்கு இயல்பாகவே தன்னை எல்லா சூழ்நிலைகளிலும் நேர்மையானவனாய் வைத்துக் கொள்ள வேண்டுமென்கிற அவஸ்தை இருக்கிறது. ஒருவகையில் ஆண்கள் தங்களை உண்மையானவர்களாய் எல்லா சமயத்திலும் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாலேயே அனேக சமயங்கள் பொய்யானவர்களாய் ஆகக் கூடிய நெருக்கடி ஏற்பட்டுவிடுகிறது போல. ஒரு மனிதனின் அசலான உணர்வுகள் குறித்து இந்த உலகத்திற்கு ஒருபோதும் அக்கறைகள் இல்லை. அவை ஏற்புடையதா இல்லையா என்பது மட்டுந்தான்.


இந்த நாவலின் முதல் உரையாடல் துவங்கும் இடமே முக்கியமானது. தொலைபேசியில் ஒருவன் ‘உன் வயதென்ன?...” என்றுதான் கேட்கிறான். பதிலுக்கு ராகவன் ‘ஐம்பத்தியிரண்டு’ என்றதும் ‘இந்த வயதில் உனக்கு காதல் ஒரு கேடா?... உண் குறியை இழுத்து வைத்து அறுக்க வேண்டுமென்கிறான்’ எதிர் முனையிலிருப்பவன். இந்த நாவலின் மொத்தக் கதைக்கான சரடையும் இந்த முதல் பத்தி உரையாடல் விரித்துப் போட்டுவிட்டது. அதுவும் நுட்பமாகவும் சுருக்கமாகவும். எல்லா தேசத்திலும் சமூகம் காதலுக்கென சில நியதிகளைக் கொண்டிருக்கிறது. அது சமூக அமைப்பைப் பொறுத்து பல்வேறான பாதுகாப்பு வளையங்களைக் கொண்டிருக்கிறது. ஐம்பத்தி இரண்டு வயதில் காதலிப்பதும், அதுவும் தன்னைவிட இருபது வயது இளைய ஒரு பெண்ணை ஒருவன் காதலிப்பது நிச்சயமாக அவனை விட வயது குறைந்த ஒரு ஆணின் ஈகோவை கிளறிப் பார்க்கக் கூடிய விசயம்தான். ஜே.பி. சாணக்யாவின் சில கதைகளில் அம்மாவும் மகளும் ஒரு ஆணுக்காக அடித்துக் கொள்வது நுட்பமாக விவரிக்கப்பட்டிருக்கும். அந்த மனோநிலை முழுக்க முழுக்க யாருடைய உடலுக்கு மதிப்பென்கிற அந்தரங்க ஆணவம்தான். ராகவனிடம் அலைபேசியில் கேட்கிறவனின் அந்தரங்க ஆணவத்தையும் இதுமாதிரியானதொன்றாகத்தான் பார்க்க முடிகிறது.





இதன் பின் ராகவன் இந்தக் கதையை முன் பின்னாக சொல்லிச் செல்கிறார். ராகவன் கடன் கொடுக்கும் ஒரு நிறுவனத்தின் முகமையாளர். அங்கு ஜூலி எப்படி வேலைக்கு வருகிறாள் என்பதும் அவள் வந்தவுடன் அந்த அலுவலகம் என்னவிதமான மாறுதல்களை எல்லாம் எதிர்கொள்கிறது என்பதையும் சுருக்கமாக விவரிக்கிறார். பெண்கள் குறித்து பெண்கள் பேசுவது அனேகமும் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை அந்த அலுவலகத்தின் சகா கதாப்பாத்திரங்கள் ராகவனிடம் ஜூலி குறித்து பகிர்ந்து கொள்வதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். இங்கே குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம்.


ராகவனுக்கு இரண்டு முறை திருமணமாகிவிட்டது. மூன்று பெண் குழந்தைகள். மூத்தவளுக்கு சமீபமாய்த்தான் திருமணம் ஆகியிருக்கிறது. எந்த உறவுகளிலும் ராகவனுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் காமம் இப்போதும் பொங்கிப் பெருகும் ஊற்றென கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. அதுசரி, எல்லா வயதிலும் அது அப்படித்தானே இருக்கிறது. சற்றேறக்குறைய ஒரு டைரிக் குரிப்பின் கவனத்தோடுதான் இந்த மொத்த நாவலின் கதையும் விரிகிறது, ஒரு மனிதனின் அடிமனதிலிருந்து அவன் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத அவஸ்தையில் தனக்குத்தானே டைரியில் எழுதிக் கொள்வதுபோல, நாவலின் இறுதிப் பகுதியில் ராகவனும் தனது ஏமாற்றப்பட்ட யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் தவிக்கிறான் என்பதையும் இதன் நீட்சியைப் புரிந்து கொள்ளலாம். நகுலனின் நவீனன் டரியை வாசிக்கும் போது ஏற்படுகிற ஒரு ரகசிய உணர்வு மூன்றாம் சிலுவையை வாசிக்கும் போதும் நமக்கு ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. யாரோ ஒருவரின் ஆத்ம ரகசியத்தை நம் கைகளில் நாம் விருப்பத்துடன் ஏந்திக் கொண்டது போலவும் அதைக் கீழே போட்டு உடைத்து விடாமல் கவனத்துடன் நாம் பாதுகாக்க வேண்டிய கவனத்திலேயே வாசித்த முடித்த பின்பும் இருக்கத் தோன்றும்.


ராகவன் தனியானவனாக இருக்கிறான். அந்த அலுவலகத்தின் மொத்த கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவனிடமிருக்கிறது. ஜூலியை அங்கு வேலைக்கு சேர்க்கும் போதும் அதற்குப் பின்புமே கூட அவள் மெலிந்தவளாகவே இருக்கிறாள். ராகவன் தனது அதிகாரத்தை அங்கிருக்கும் பிற பெண் பணியாளர்களிடம் பிரயோகித்திருக்கலாம், ஆனால் ஜூலியின் மீது ராகவனுக்கு ஈர்ப்பு. ஒருக்காலமும் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்த்தனமான சுவராஸ்யங்களில் ஒன்று ஒருத்தரின் மீது ஏன் விருப்பம் ஏற்படுகிறது என்பது. அப்படியானதொன்றுதான் அவள் மீது அவனுக்கும். அவளுக்கும் அவன் மீது விருப்பம். ஜூலியின் அம்மா சரியில்லாதவள். அப்பா எங்கோ ஓடிப்போய்விட்டார். அக்காக்கள் வேறு வேறு ஊர்களில் இருக்கிறார்கள். இவளும் படிக்கிற காலத்தில் எவனோ ஒருவனோடு சுற்றியவள்தான்… இப்போது தனித்துக் கிடக்கிறாள். அவள் தனியாக இருக்கிறாள் என்பதாலேயே அவளிடம் அத்துமீறலாம் என்கிற மனநிலை ராகவனுக்கு இல்லை. ராகவன் அசலாகவே அவளின் மீது பிரியம் கொண்டிருக்கிறான். அவளைக் கவனித்துக் கொள்கிறான். வயது முதிர்ந்த அவளின் பாட்டியை முதியோர் விடுதியில் சேர்த்துவிட்டு வருவதோடு அவ்வப்போது போய் பார்த்து வந்து உதவியும் செய்கிறான். ஆக, ராகவனுக்கு ஜூலியின் மீதிருக்கும் காதலை நாம் ஒருபோதும் நம் சந்தேகிப்பதற்கில்லை. ஜூலியும் அப்படியானதொரு காதலியாகத்தான் இருக்கிறாள். வெள்ளிக்கிழமை பகல் நேரங்களை ராகவனுக்காக ஒதுக்குகிறாள். அவனோடு புணர்கிறாள். அவள் வீட்டின் அருகாமையிலிருப்பவர்களின் புலன்கள் சதாவும் தங்களைக் கண்கானிப்பதான அச்சத்தில் ராகவன் தயங்கினாலும் அவனை அவள் சமாதானப்படுத்துகிறாள். அவனுடான காதலில் பெரும் நிறைவு கொண்டவளாய் இருக்கிறாள். எல்லாம் சரிதானே வேறென்ன குழப்பமென நாம் அத்தனை சீக்கிரம் இயல்பாகிவிட முடியவில்லை. நம் வாழ்க்கை என்ன நம்மை அப்படியா விட்டுவைக்கிறது? ஜூலியின் அம்மா வருகிறாள்.


சூன்யத்தால் ஊதிப் பெருத்த உடல் அவளுக்கு. மகளை பிரதான பாத்திரமாக்கி தனக்கு விருப்பமான தான் ரொம்பவே அனுபவப்பட்ட ஒரு சதுரங்க விளையாட்டை ராகவனுடன் விளையாடுகிறாள். தான் இந்த விளையாட்டில் தோற்போம் என்பது தெரிந்தும் ராகவன் ஜூலியின் மேல் கொண்டால் காதலால் அனேக விசயங்களை அந்த வீட்டில் இழக்கிறான். எத்தனை தூரம் காதலிக்கும் போது ஒரு மனிதன் முட்டாளாகிறானோ அத்தனை தூரம் அவன் அந்தக் காதலுக்கு அசலானவனாக இருக்கிறான்.


எட்டு வருடங்களுக்குப்பின் அந்த உறவின் வெறுமை அவளால் சகிக்க முடியாததாய் இருக்கிறது, ராகவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லிக் கேட்கிறாள். இன்னொரு திருமணத்துக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் மனநிலையில் இல்லாத ராகவன் இந்தக் காதல் போதுமென்கிறான். தன்னால் தோல்வியுறும் இன்னொரு திருமணப் பந்தத்திற்குள் சுழன்று கொண்டிருக்க முடியாதென்கிறான். இந்தக் கள்ள உறவைத் தன்னால் நீண்டகாலம் சகித்துக் கொள்ள முடியாதென கரையும் ஜூலி அவ்வளவிற்குப் பின்னும் ராகவனின் விருப்பத்திற்கு இணங்குகிறாள். கசந்து போகும் வரை எந்த உறவும் கள்ள உறவாகாது தானே?... மீண்டும் அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். புணர்கிறார்கள். ஆனால் அந்தரங்கமாய் ஜூலி தன்னைத் தோலூரித்துக் கொண்டு புதிய உடலும் மனமும் வேண்டி நிற்பவளாய் தொலை தூரத்திலிருக்கும் முன்னால் காதலனோடு பேசத் துவங்குகிறாள். ராகவன் கொஞ்சம் கொஞ்சமாய் கசக்கத் துவங்க, அவள் அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறாள். பெருந்திணையின் சகித்துக்கொள்ளமுடியாத துயரம் எந்த முன்னறிவிப்புமில்லாமல் எதிர்கொள்ள நேரும் இந்தப் பிரிவும் தனிமையும்தான். இறுதியில் ராகவனுக்கு உடல் கோளாறு வருகிறது. தொலைந்து போயிருந்த குடும்பம் தேடி வந்து அரவணைத்துக் கொள்கிறது, ராகவன் அப்போதும் மெலிந்து இறுகிப்போன அந்த ஜூலியின் நினைவோடும் காதலோடுமே மருத்துவமனைக்குள் இருக்கிறான்.


முதல் வாசிப்பில் மிகச் சாதாரணமான கதையாகத் தோன்றும் இந்த நாவல் அதன் மொழியாலும் இரண்டு மனிதர்களுக்கு இடையிலான உறவில் ஏற்படும் யதார்த்த சிக்கல்களை நுட்பமாக பேசுவதிலும் ரொம்பவே முக்கியமானதாகிறது. ராகவன் ஜூலிக்கு எழுதும் அந்த ஐந்து கவிதைகளும், டைரிக் குறிப்பும் இந்த நாவலில் மிக முக்கியமான பகுதிகள். ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு கதையை வாசிக்கிறோம் என்பதையும் மீறி அந்த நாவலின் கதாப்பாத்திரங்கள் உண்மையில் யாராகவெல்லாம் இருக்கக் கூடுமென அந்தரங்கமாக மனம் யோசிக்கத் துவங்கிவிடுகிறது. திருட்டுத்தனமாய் பிறர் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ள நினைக்கும் விருப்பம் எல்லோருக்குள்ளும் இருக்கிறதுதானே?. அதேபோல் ஃபாதரிடம் பாவமன்னிப்புக் கேட்கப் போகும் ராகவனின் உரையாடல். முழுக்கவும் ஒரு கதாப்பாத்திரத்தின் அகமனதின் குரலாய் ஒரு கதையைச் சொல்லும் போது அந்தக் கதாப்பாத்திரத்தினை நியாயப்படுத்துவதற்காக எப்போதும் எழுத்தாளன் அதீத பிரயத்தனம் கொள்வான். ஏனெனில் அது தன்னைப் பற்றியதான குறிப்புகள், அல்லது தானே அந்தப் பாத்திரம் என்கிற எண்ணம். இதனாலேயே ஒரு கதாப்பாத்திரத்தின் மனநிலையைப் பேசுகிற தமிழின் பெரும்பாலான மனக்குரல் நாவல்கள் உண்மைக்கு அப்பால் போலியானவையே பகிர்ந்து கொள்கிறவையாய் இருக்கின்றன. ஆனால் ராகவனின் குரலில் இருக்கும் நடுக்கமும், கண்ணீரும் அசலான வார்த்தைகளும் அந்தப் பாத்திரத்தின் உண்மைத் தன்மையை நமக்கு அழுத்தமாக உணரச் செய்கிறது. ”நீங்கள் எவருடைய குற்றங்களை மன்னிக்கிறீர்களோ, அக்குற்றங்கள் பரலோகத்திலும் மன்னிக்கப்படுகின்றன” என ஃபாதர் ராகவனுக்கு ஆதரவு சொல்லி அனுப்புகிறார்.


பெர்னார்டோ பெட்லூசியின் ‘லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்’ படத்தின் மார்லன் பிராண்டோ பாத்திரமும் இந்த ராகவனும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டவர்கள்தான். இரண்டும் வேறு வேறுவிதமாக உடலைக் கையாண்டிருந்தாலும் இரண்டும் இரண்டு எல்லைகளில் முக்கியமான விசயங்களைப் பேசியிருக்கிறது. கள்ள உறவென உரைக்கும் சமயங்களில் உறவு முடிந்தபின் ஏற்படுகிற குற்றவுணர்ச்சியிலிருந்து மீள்தல் நீண்ட காலப் பயிற்சிக்குப் பின்பாக மட்டுமே இயல்பாகிறது. நாம் நமது இதயச் சுவர்களெங்கும் வெளியேற்றி அனுப்பவியலாத அனேக ஆசைகளை சமூகத்தின் குரூர கண்களுக்கு அஞ்சியே பாதுகாப்பாக யாருக்கும் சொல்லாது பதுக்கி வைத்திருக்கிறோம். ஆனால் ஆசைப்படுதல் அப்படியொன்றும் மோசமான விசயமில்லை. எனது வருத்தமெல்லாம் இந்த நாவலின் இறுதிப் பகுதியில் ஏன் ராகவன் காயப்பட்டவனாக ஏமாற்றப்பட்டவனாக போகவேண்டும் என்பதில்தான். ராகவன் ஜூலியோடு வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே… திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது என்ன அத்தனை பாவமான காரியமா? நிஜம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், இந்தப் புனைவு அவர்கள் இருவரையும் பிணைத்தே வைத்திருக்கலாமே. எல்லா ஆண்களும் விரும்பக் கூடியதாகவும், பெரும்பாலான பெண்கள் விமர்சிக்கக் கூடியதாகவும் இருக்கும் இந்த நாவல் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.



45 views

Comments


bottom of page