top of page
  • Writer's pictureலக்ஷ்மி சரவணகுமார்

நீலத்திரை …






1


            சந்தேகமில்லாமல் அந்தப் படத்தில் நடித்திருப்பது அம்மாதான். சரியாக அடையாளம் தெரியாது  போனாலும்கூட அந்தச் சிரிப்பு சத்தமும் முகவமைப்பும் அது அவளாக மட்டுமே இருக்க முடியுமென உறுதியாய் அவனை நம்பச் செய்தது. அப்பா இல்லாத இத்தனை வருடங்களில் தனி மனுசியாய் தன்னை வளர்க்கும் அவளின் தைர்யத்தில்  பெருமதிப்பும் அன்பும் கொண்டிருந்த மகேஷூக்கு இப்பொழுது அவ்வளவும் சாம்பலாகியிருக்கிறது. படம் துவங்கின சில நிமிடங்களிலேயே அவனுக்கு முன்பு இதுமாதிரியான படங்களைப் பார்க்கையில் இருக்கும் பரவசங்கள் நொறுங்கிப் போயின. இருந்தும் ஒரு ஓரத்தில் அது தன் அம்மா இல்லை, அவளைப் போலவே இருக்கும் வேறு யாரோ ஒருவராக இருக்கக்கூடுமென நினைத்துக் கொள்ள விரும்பினான். ஆனால் அப்படி இல்லை, அது அம்மாதான்.


சகித்துக்கொள்ள முடியாத  துரோகம் ஒன்றை அவள் தனக்கு இழைத்துவிட்டதாய் வதைகொண்டான். குமுறிய ரெளத்ரம் முழுக்க சொற்களாகத் துடித்து தொண்டையைத் தாண்டி வரத் திராணியற்று உடல் முழுக்க வலியாய் உருண்டு கொண்டிருந்தது. தன் முன்னாலிருக்கும் எல்லோரையும் வதம் செய்வதன் மூலம் அந்தத் துரோகத்தைக் கடந்து இயல்பாகிவிடலாமென மனம் ஏராளமான வன்முறைகளை யோசித்துக் கொண்டிருந்தது. படம் முடிந்தும் அவன் இயல்புநிலை அடையாததை நண்பர்கள் ஒருவரும் வித்யாசமாய்ப் பார்த்திருக்கவில்லை. அந்தப் படம் அளவுக்கு அதிகமாய் அவனைக் கிளர்த்தியிருக்கக் கூடுமென தங்களுக்குள்ளாகவே சொல்லி சிரித்துக் கொண்டனர். போனவாரமும் அதற்கு முந்தைய வாரங்களும் பார்த்த படங்களைக் குறித்து அவர்களோடு சேர்ந்து  அவனும் சிலாகித்துப் பேசியிருக்கிறான். குறிப்பாக இதுமாதிரியான படங்களில் நடிக்கும் பெண்களின் வினோத சப்தம் அவனுக்கு எப்போதும் ஒரு பேசு பொருள். அப் பெண்களின் உடல் குறித்தும் கேமராவில் அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளும் செயற்கையான முகபாவங்கள் குறித்தும் இச்சையை மீறின ஒரு சுவாரஸ்யம் அவனுக்கு உண்டு. முதல் முறையாக இன்று அது மாதிரியான உரையாடல்கள் முழுக்க கசந்தது.


நண்பர்களின் பேச்சைக் கவனிக்காது தவிர்த்துவிட எவ்வளவு முயன்றும் அவனால் முடியவில்லை. யாரோ ஒருவரின் வார்த்தைகளிலிருந்து ஒரு பெண்ணை புணரமுடிவது அதீதமானதொரு காமமாய் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.  ”த்தா அவளுக்கு எவ்ளோ பெரிய பாச்சிடா?... படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரையிலும் சிரிச்சிட்டே வேற இருக்கா… கண்டார ஓழி…” அந்த மார்புகளின் அளவைத் தனது கைகளால் விரித்துக் காட்டி கண்கள் உருள வினோத் சிரித்தான்.


அவர்களோடு சேராமல் மகேஸ் மட்டும் இன்னும் சீரியஸாக இருப்பதைப் பார்த்த வினோத் 

“என்னடா மந்திரிச்சு விட்ட மாதிரி திரியிற?... படத்த இன்னொரு தடவ பாக்கனுமா?...”  சிரித்தபடி கேட்டான். அவன் மூஞ்சியில் ஒரு குத்து குத்தலாமென்கிற அளவிற்கு வெறி. மகேஷ் காட்டிக் கொள்ளாமல் வினோத்தை முறைத்தான்.


“அப்பறம் என்னத்துக்கு அந்தக் கேசட்ட கைல எடுத்து வெச்சிருக்க?...”

எப்படி அவன் பார்த்தானெனத் தெரியவில்லை.  மகேஸ் எதுவும் பேசாமல்  அங்கிருந்து போய்விட்டான்.  


படம் பார்த்த நாளிலிருந்து அவனுக்கு அம்மாவின் நினைப்பு மட்டுமே இருந்தது. அம்மாவின் நினைவு இதற்கு முன்பெல்லாம் இவ்வளவு அதிகமாய் இருந்ததில்லை. அம்மா கன்னியாஸ்திரிகளைப்போல் எதற்கும் பெரிதாய் சலனமில்லாமல்தான் இருப்பாள்.  விடுமுறைகளில் இவன் வீட்டிலிருக்கும்போது கூட அவளிடம் பேசுவதற்கென பெரிதாய் எதுவும் இருக்காது. அம்மா இவன் எப்படி படிக்கிறான்? யாரெல்லாம் நண்பர்கள்?  எந்தவிதமாகவும் அவனுடன் பேசின நினைவில்லை. பள்ளிக்கூட ஆசிரியையிடம் பேசுவது போல்தானிருக்கும்.  ஒரு குழந்தையை விடவும் கொஞ்சம் முதிர்ந்த சிறுவனாய் அவன் இந்த விடுதிக்கு வந்து சேர்ந்து பணிரெண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மொத்த பள்ளிக் காலமும் இங்குதான் அவனுக்கு கழிந்து போயிருக்கின்றன. அம்மா எப்போதாவது வருவாள். அவன் சிறுவனாய் இருந்த போதும், கொஞ்சம் வளர்ந்த போதும் குறைந்தபட்சம் வந்து பார்த்துவிட்டுப் போவாள். அவன் அம்மாவிடம் நிறையப் பேச வேண்டுமென  விரும்பிய வயதில் வருவதை சுத்தமாகக் குறைத்துக் கொண்டாள். ஆண் துணை இல்லாத வீடு, தனி மனுஷியாய் உழைத்து வாழ்க்கை நடத்துகிறவள்.  முதலில் சில வருடங்கள் வார இறுதியில் தனது நண்பர்களைப் பார்க்க வரும் அவர்களின் அம்மாக்களைப் போல் தன்னுடைய அம்மாவும் ஏன் வரவில்லை என்கிற கேள்வி இருக்கும். ஆனால் அம்மாவிற்குப் பதிலாய்ப் பணம் வந்தது. அம்மா சில நாட்களில் பணமாகத்தான் அடையாளம் தெரிந்தால். கேட்டதையெல்லாம் வாங்கித் தரும்  பண எந்திரம். தனக்குத் தேவையான எல்லாவற்றையும் அம்மா என்னும் பண எந்திரம் வாங்கித் தருவதாய் நினைத்துக் கொண்டு இவனே வாங்கிக் கொள்வான்.


வளர வளர அம்மாவைப் பற்றின நினைவு குறைந்து ஜங்கிள் புக்கில் காட்டில் தனித்து விடப்படும் சிறுவனைப்போல் மாறிவிட்டான். பிரபலமான அந்தப் பள்ளிக்கூட விடுதி இவனைப் போலவே நிறைய சிறுவர்களை சிறைப்படுத்தி வைத்திருந்தது. குறைந்தபட்சம் அந்த சிறுவர்களுக்கு ஆறுதலாய்ப் பேசவும் முத்தமிடவும் அவர்களின் அம்மாக்கள் வந்து போனார்கள். தனது நண்பர்கள் இல்லாது தனித்துக் கிடக்கும் நேரத்தில் அந்த விடுதியின் சுவர்களெங்கும் ஓடித் திரிந்து


“சின்ன சின்ன சிட்டுகளா… சிங்கார ரோஜா மொட்டுகளா… துள்ளித் துள்ளி ஓடிவாங்க… காட்டின் கதையைக் கேட்டிடுவோம்…”


என உயரமான சுவர்களில் உட்கார்ந்து கொண்டு தனது கதையையும் விடுதியென்னும் சுவர்களாலான அந்த வறண்ட காட்டின் கதையையும் சொல்லிக் கொண்டிருப்பான்.

கடுமையான கண்கானிப்புகள் கொண்ட அந்த விடுதியில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் தங்கிப் படித்தனர். அவ்வளவு எளிதில் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடி மிகுந்த சூழலிலும் மாணவர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அங்கு கொண்டு வரச்செய்யும் சூட்சுமங்களைத் தெரிந்து வைத்திருந்தனர். அந்த விடுதிக்கு வெளியிலிருந்த உலகத்திற்கு எத்தனை விதமான முகமும் உயிரும் இருந்தனவோ அதேபோல் விடுதிக்குள்ளும் இருந்தன. வாடகைக்கு வரும் பெண்களைத் தவிர்த்து மற்ற எல்லா நல்ல  விசயங்களும் எப்பொழுதும் தாரளமாகக் கிடைக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் இயல்பைவிட கொஞ்சம் அதிகமான விலையிருந்தது அவ்வளவுதான்.


மகேஸ் பத்தாவது படிக்கையில்தான் முதல் முறையாக நீலப்படம் பார்க்கப் பழகினான். ஒரு வெள்ளைக்கார பெண்ணும் கருப்பு ஆணும் சேந்திருக்கும்  அந்தப்படம் நாற்பது நிமிடங்கள் ஓடியது. கருப்பனின் ஆண்குறி பார்த்து ஒருவன் “தாயோலி அத வளக்கறதுக்குன்னே தனியா தின்னுவானுக போலடா…’” என கைலிக்குள்ளிருந்த தனது குட்டிக் குஞ்சைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டான். மகேசுக்கு அது புதிதாக இருந்தாலும் முதல் முறையாய் நிர்வாணம் தன்னை கிளர்த்துவதை அனுபவித்தான். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுப்படமென அவர்களின் இரண்டு வருடங்களின் வார இறுதி நாட்கள் நீலப்படங்களிலும், பள்ளிக்கூட நாட்கள் செக்ஸ் புத்தகங்களாலுமே கடந்து கொண்டிருந்தன. வினோத், மகேஸ், மூர்த்தி, சுந்தர் நான்கு பேருமே ஒரு அறை. படம் பார்ப்பதிலும் சரி புத்தகம் படிப்பதிலும் சரி இந்த நாலு பேரைத் தவிர்த்து வேறு யாரையும் அவர்கள் தங்களின் அறைக்குள் அனுமதிக்கவில்லை. இவர்களைப் போலவேதான் அந்த விடுதியின் பெரும்பாலான அறைகளும், மாணவர்களும் இருந்தனர். ஆனால் தங்களிடம் நீலப்படம் இருப்பதையும், அவர்கள் பார்ப்பதையும் வேறு யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.


சில மாதங்களுக்கு முன்  மகேசின் ரூமிலிருந்து இரண்டு ரூம் தள்ளியிருக்கும் பி செக்ஸன் மாணவர்கள் “நைட் ஷோ வர்றீங்களாடா?...” என இவர்களைக் கேட்டனர். பெரிய விருப்பம்மில்லாமல் போனாலும் இரவில் குறைந்தபட்சம் வெளியில் போய் வரலாமென்கிற விருப்பத்துடன் நான்கு பேரும் அவர்களுடன் கிளம்பினர். விடுதிக்கு வெளியில் இருள் முடிவுறாத பாதையென நீண்டிருந்தது. எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் அறைக்குள்ளாகவே இருந்தனர். கிரிக்கெட் மேட்ச் பார்க்க கொஞ்சம் மாணவர்கள் கேண்டினில் இருந்திருக்க வேண்டும். தொலைக்காட்சி சப்தம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இடம் பொருள் பார்க்காமல் சிறுநீர் கழிப்பிடமாய்  பயன்படுத்துவதால் பல இடங்களில் மூத்திர நாற்றம். விடுதியின் மைதானத்திற்கு அருகிலிருந்த பெரிய வேப்பமரத்தினடியில் மூன்று நான்கு தம்ளர்கள் கிடந்தன. டீ தம்ளர்தான். இப்பொழுதெல்லாம் சின்னப் பையன்கள் ஹாஸ்டலில் யார் பேச்சையும் கேட்பதாயில்லை.


மகேஷ் ரூமிலிருந்த நான்கு பேரோடு சேர்த்து மொத்தம் ஏழுபேர் நைட் ஷோவுக்குப் போய்க் கொண்டிருந்தனர். மைதானத்தைத் தாண்டியதும் ஒருவன் மட்டும் நின்றான். “டே…சீக்கிரம் ஏறிக்குதிங்கடா…” என காவலுக்கு நிற்பவன் போல் நிற்க… மகேஷூம் அவன் ரூம் மேட்டும் எதுவும் புரியாமல் பார்த்தனர். அது பெண்கள் விடுதிக்கான சுவர்… இவர்கள் என்ன ஏதென யோசிக்கும் முன்பாகவே அவர்களில் இரண்டு பேர் ஏறிக் குதித்துவிட்டனர்.

“என்னத்தடா வேடிக்க பாக்க்றீங்க… ஏறுங்கடா… பதினோரு மணியானா எல்லாம் படுத்திருவாளுங்கடா….” மிச்சமிருக்கும் ஒருவன் அடித்துத் தள்ளாத குறையாய்த் துரத்தினான்.

மங்கலான டியூப் லைட் விளச்சத்தில் அந்தக் கட்டிடத்திலிருந்த அறைகளைப் பார்க்கவே ஒருமாதிரியாய் இருந்தது. வாட்ச்மேன் முன் வாசலில் இருக்க வேண்டும், இவர்கள் ஏறிக் குதித்திருந்ததது ஹாஸ்டலின் பின்பகுதி, ஆண்களின் விடுதியை விடவும் மோசமாக இருந்தது பெண்களின் விடுதி…. உலக சமாதான விழாவிற்கு தூதனுப்புவதுபோல் ஜன்னல்களெங்கும் மாணவிகளின் உள்ளாடைகள் காய்ந்து கொண்டிருந்தன. பாதிக்கும் மேல் வெள்ளை நிற பிராக்கள். சில கருப்பும் சாம்பல் நிறத்தில் ஒன்றிரண்டுமாய் ஒரே நேரத்தில் சில நூறு பிராக்களையும் பூப் போட்ட ஜட்டிகளையும் பார்த்ததிலேயே மகேஷுக்கு உச்சத்திற்கு ஏறிவிட்டது.


ஒரு பைப்பைப் பிடித்து முதலில் பி செக்ஸன் மாணவன் ஒருவன் மேலே ஏறினான். அவனைத் தொடர்ந்து வினோத்தும் மகேஷும் ஏறினார்கள்.  வெளிச்சத்தில் களைந்து கிடக்கும் அறைகள். சில மாணவிகள் பேசும் சப்தம்.  ஒவ்வொரு அறைக்கும் ஐந்து நிமிடங்கள் என கணக்கு வைத்து தங்கள் விரும்பும் அறையத் தேடினர். ஒரு அறையில் மேலாடை இல்லாது வெறும் பிராவுடன் இரண்டு பேர் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். மங்கலான வெளிச்சத்தில் முகம் அறைகுறையாகத்தான் தெரிந்தது. இன்னும் நல்ல வளர்ச்சி கண்டிராத முலைகள். பி செக்ஸன் மாணவன் தனது மொபைலை எடுத்து படமெடுத்தான். மகேஷூக்கு அவன் பார்த்த படங்களிலெல்லாம் நடித்த நடிகைகளின் முகமும் உடலும் நினைவுக்கு வந்தது. சிம்ரனும்ம், ட்ரூ பாரி மோரூம் அவனுக்கு விருப்பமானவர்கள்.  இந்தப் பெண்களின் உடலில் சில நொடிகள் அவர்கள் இரண்டு பேரின் முகங்களையும் ஒட்ட வைத்துப் பார்த்தான். அவ்வளவு எடுப்பாக இல்லை. அவனால் ரசிக்க முடியவில்லை.


அந்த அறையிலிருந்து விலகி  மூன்றாவது மாடியிலிருக்கும் ஒரு அறையின் ஜன்னலுக்கு வந்தனர். பாதிக்கும் மேல் அறை  தெரியாதபடி உள்ளாடைகள் மறைத்துக் காய்ந்து கொண்டிருந்தன. ஒருவன் மெதுவாக அதனை விலக்கி விட்டான்.  மகேஷ் யாரும் பார்க்காமல் ஒரு கருப்பு நிற பிராவையும், பூப் போட்ட வெள்ளை நிற ஜட்டியையும் தனது ஷாட்ஸில் எடுத்து வைத்துக் கொண்டான். உள்ளாடைகளை விலக்கியபின் அந்த அறையைத் தெளிவாய்ப் பார்க்க முடிந்தது. சுத்தமான அறை. லகான் படப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இவர்கள் கவனமாய் அறையைக் கவனித்தபோது கட்டிலில் இரண்டு பெண்கள் கட்டி உருண்டு கொண்டிருந்தனர். இரண்டு ஸர்ப்பங்களென உருண்ட அவர்களில் மேலிருந்த ஸர்ப்பம் தனது நீள் நாவை நீட்டி கீழிருந்த சர்ப்பத்தின் தேகத்தை சுவைத்தது. இது மாதிரியான நிறைய சர்ப்பங்களின் நாவிலிருந்த சூட்டை பார்த்திருந்ததால் இந்தப் பையன்களின் உடலும் சூடாகிக் கொண்டிருந்தது, பொறுமையாக ஒருவன் அவ்வளவையும் படமெடுத்துக் கொண்டிருந்தான். அந்தக் கூடல் அந்த இரவில் துவங்கியதாகவும் இல்லாமல் அந்த இரவோடு முடியப்போவதாகவும் இல்லாமல் நீண்டு கொண்டே இருக்க பார்த்த வரை போதுமென கொஞ்ச நேரத்தில் அவர்கள் இறங்கி வந்துவிட்டனர்.


வழி முழுக்க யாருக்கும் பேச்சில்லை. மகேஷ் எல்லோரையும் கடந்து வேகமாய் முன்னால் நடந்தான். அவன் ஷாட்ஸிலிருந்த உள்ளாடை வெளியில் பாதி எட்டிப் பார்த்தபடி இருந்ததைக் கவனித்த வினோத் “புறா பறக்குதுடா… பாத்து…” என்றான். அவசரமாக இருளில் நடந்த மகேஷ் அதனை இன்னும் பைக்குள் தள்ளிவிட்டு ஹாஸ்டல் பக்கமாய் நடந்தான். மங்கலான வெளிச்சத்திலிருந்த ஆண்களின் விடுதி கற்பழிக்கப்பட்டதொரு முதிர்கன்னியான் அரையிருளில் கிடந்தது.  இரவு படுக்கையறையில் இவனது வெக்கை அவ்வளவையும் உறிந்து கொண்டு சுய உணர்வின்றிக் கிடந்தது திருடி வந்த உள்ளாடை.


படமெடுத்தவனுக்கு அதை எல்லோருக்கும் பார்க்க கொடுக்க வேண்டுமென்கிற பெரிய மனது. ஹாஸ்டலிலிருந்த பெரும்பாலான பையன்களின் மொபைல் போனிலும் அன்று இரவு ஸர்ப்பங்கள் பிணைந்த வீடியோ பரிமாறப்பட்டிருந்தது. அந்த இரண்டு மாணவிகளும் 11 ஏ வில் இருப்பதை அடுத்த நாளிலேயே மகேஷ்ஷும் வினோத்தும் கண்டு பிடித்துவிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாய் மாணவர்களின் மத்தியில் அந்தப் பெண்கள் ரகசிய பிரபலமடைய “கப் அண்ட் சாஸர்…” என மாணவர்கள் அந்தப் பெண்களுக்கு ஒரு அடையாளப்  பெயரிட்டனர்.  மாணவர்கள் இப்படிக் கூப்பிடும் போதெல்லாம் அந்தப் பெண்களுக்கு எதுவும் புரியவில்லை. ஏதோ விளையாட்டுக்கு எல்லோரும் பேசுவதாய் நினைத்துக் கொண்டு விட்டுவிட்டனர். 


அதன்பிறகு முன்னிரவில் நிறைய மாணவர்கள் நைட் ஷோவுக்குப் போகத் துவங்கினர். அப்படி போனவர்களெல்லாம் அந்த ஸர்ப்பங்களின் தீராத விளையாட்டுக்கள் குறித்து வெவ்வேறு விதமானக் கதைகளை சக நண்பர்கள் மத்தியில் சொல்லத் துவங்கினர். மகளிர் ஹாஸ்டலில் தொடர்ந்து நிறைய பெண்களின் உள்ளாடைகள் தொலைந்து போவதாய் புகார்கள் வந்தபடியிருந்தன.  அந்தப் பிள்ளைகள் முதலில் ஜன்னலில் உள்ளாடைகளை காயப்போடப் பயந்து தவிர்த்தனர். ஜன்னல்களிலிருந்து அந்தப் பிள்ளைகளின் படுக்கைக்கும் பைகளுக்கும் காயப்போடும் இடம் மாறியிருந்தன. சில நாட்கள் தொலையாமலிருந்த உள்ளாடைகள் மீண்டும் தொலைந்து போகத் துவங்கவும் எல்லாவற்றையும் மீறி வந்து திருடும் திருடனை என்ன செய்வதெனத் தெரியாமல் நிறையப் பிள்ளைகள் உள்ளாடை அணிவதையே நிறுத்துவிட்டனர்.





            தங்களின் மொபைல்களில் வெவ்வேறான படங்களை சேமித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அந்த சர்ப்பங்களின் படம் தான் அதீத விருப்பமாயிருந்தது. பாரபட்சமில்லாமல் எல்லா வகுப்பு பையன்களுக்கும் அந்தப் படம்  கடந்து  பத்தாம் வகுப்பிலிருந்த ஒரு பையனுக்கு கடைசியாய் வந்து சேரவும் தான் பிரச்சனை வந்தது. இரண்டு மாணவிகளில் ஒருத்தியின் தம்பியான அந்தப் பையன் அந்தப்படம் கிடைத்த அடுத்த நொடியே வீட்டில் அம்மா அப்பாவுக்கு தகவல் சொல்லிவிட்டேன். தேர்வுகள் துவங்கியிருந்த நாளொன்றில் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த மாணவிகளின் அந்தரங்கம் மொத்த பள்ளிக்கூடமும் தெரியும்படி அந்த மாணவியின் அப்பாவும் அம்மாவும் “படிச்சது போதும்… முதல்ல இங்க இருந்து கிளம்பென…” அந்தப் பிள்ளையை இழுத்துக் கொண்டு சென்றதோடு பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்று வண்டை வண்டையாய் வசைகளை வாரி இறைத்தனர். அவசரமாக அத்தனை பையன்களின் மொபைலும் சோதிக்கப்படப் போவது தெரிந்ததும் எல்லோரும் அந்தப் படத்தை  ஆதாரமின்றி அழித்தனர். பள்ளிக்கூட வாசலில் அந்த மாணவி அழுது புரண்டு படிக்க வேனுமெனக் கதறியதை தங்களின் வகுப்புகளின் ஜன்னல் வழியாய்ப் பார்த்து ஆயிரம் மாணவ மாணவிகளுடன் அவளின் தோழியும் பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணீருடன்.


மாணவர்களின் ஹாஸ்டலை ஒவ்வொரு அறையாய் சோதனையிட்ட பொழுதுதான் அத்தனை நாட்களும் தொலைந்து போயிருந்த மகளிர் விடுதியின் உள்ளாடைகள் கிடைக்கப்பெற்றன. மகளிர் விடுதி வார்டனின் உள்ளாடைகள் உட்பட மலையெனக் குவிந்திருந்ததைப்  பார்க்கையில் ஹாஸ்டல் நிர்வாகிகள் மிரண்டு போயிருந்தனர். அதிகபட்சமாய் மகேஷின் பையிலிருந்துதான் பதிமூன்று பிராக்களும், எட்டு பூப் போட்ட ஜட்டிகளும் கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தும் அவனின் ஆண்மையை உள்வாங்கி விறைத்துப் போயிருந்தது. எண்ணிக்கையின் அளவைக் கொண்டு பார்த்ததிலும் பதில் சொல்வதில் தடுமாற்றம் இருந்ததிலும் அவன் தான் இப்பொழுது மொத்த பிரச்சனைகளுக்குமான காரணமென நம்பப்பட்டான். ”உங்கூட சேந்து வேற யாரெல்லாம் அந்தப் படத்த எடுத்தது?” அந்த விடுதியின் வார்டன், தலமையாசிரியர், பிரின்ஸிபால் எல்லோரும் மாறி மாறிக் கேட்டும் இவன் வாயைத் திறந்திருக்கவில்லை. மாணவர்கள் அத்தனை பேரையும் வேறு வேறு அறைகளுக்கு மாற்றிவிட்டனர். மகேஷின் அறை நண்பர்கள் நான்கு பேரும் பத்து நாட்களுக்கு தண்டனையின் அடிப்படையில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். மற்ற மூன்று பேரின் வீட்டிலிருந்தும் பெற்றோர்கள் வந்திருந்ததோடு செமத்தியாக மூன்று பேருக்கும் பள்ளிக் கூடத்திலேயே அடி விழுந்தது. மகேஷின் அம்மாவையும் வரச் சொன்னார்கள்…


“உங்க பையன் மேல பெரிய கம்ப்ளைண்ட்?... கொஞ்சம் நீங்க ஒருமுறை வந்துட்டுப் போக முடியுமா?...”

கரஸ்பாண்டட் தான் பேசினார்.

“என்ன கம்ப்ளைண்ட்?...”

அம்மாவிடம் எந்த சலனமுமில்லை.

“அத எப்டிங்க சொல்றது?... அவன் வயசுக்கு மீறின வேலய செஞ்சிருக்கான்….”

”அப்பிடி என்ன செஞ்சான்?...”

“என்ன செஞ்சானா?... பொம்பளப் புள்ளைங்க ஹாஸ்டலுக்குள்ள போயி அந்தப் பிள்ளைங்களோட இன்னர்ஸெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கான்… ரெண்டு பொண்ணுங்கள அசிங்கமா வேற படம் எடுத்திருக்கான்….”

அம்மாவிடமிருந்து எந்த பதிலுமில்லை,

“மேடம்….”

இன்னும் அமைதி…

“மேடம் … ஆர் யூ தேர்?,…”

“எஸ்,.. சொல்லுங்க…”

“இல்ல… இவ்ளோ பிராப்ளம்ஸ்… ப்ளஸ் டூ பையன்… இன்னும் 2 மாசத்துல அவனுக்கு ஸ்கூல் முடிஞ்சிடும்… அதனாலதான் அவன மன்னிச்சு விட்றுக்கோம்.. இல்லைன்னா ஸ்கூல விட்டு உடனே அனுப்பிடுவோம்…. நீங்க தான் உங்க பையங்கிட்ட அட்வைஸ் பண்ணனும்….”

அம்மாவிடமிருந்து இன்னும் அமைதி.

அவள் அமைதியாய் இருப்பதைப் பார்த்து “நீங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்டா வார்ன் பண்ணுங்க… நாங்க அனுப்பி வைக்கிறோம்…”

அம்மா தயக்கத்துடன் “ம்..அனுப்புங்க…” அடுத்த நொடி அம்மாவின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

 

 

                                                                        2               

                              

அம்மா நடித்த நீலப்படத்தைப்  பார்த்த நாளிலிருந்து மகேஷ் தன்னை  எல்லோரிடமிருந்தும் துண்டித்துக் கொண்டான். நண்பர்களிடமிருந்து திருடி வந்த அந்த படத்தை தனது லேட் டாப்பில் சேமித்துக் கொண்டவன் அறையை விட்டு வெளியேறுவது குறைந்து போனது. அவன் படிப்பதில் தீவிரமாகியிருக்கிறானென மற்றவர்கள் நம்பினர். இந்த உடலை என்ன செய்யலாம்?... அம்மாவைப் பற்றி மட்டுமே யோசிக்கச் செய்து கிளர்த்தி பின்னிரவு தாண்டியும் உறக்கமின்றி கண்கள் சூம்பிப்போய் எதிலும் நாட்டமற்றவனாய்ப் போனதிலிருந்து எப்போது மீள?... ஒவ்வொரு முறையும் அந்தப் படம் பார்க்கையில் செயற்கையாய் அவள் முனகுவதும், தன்னுடலை ஒரே நேரத்தில் படிப்படியாய்க் காட்டி பின்பு முகம் தெரியாத ஒருவனின் குரலுக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வதுமாய்  இருப்பதை எப்படி ரசிக்க மட்டுமே முடிகிறது… வினோத்தும் அவனது மற்ற நண்பர்களும் அந்தப் படத்தையோ அல்லது அதில் நடித்த தனது அம்மாவையோ இப்பொழுது நினைவு வைத்திருப்பார்களா என தெரியவில்லை. தனது லேட் டாப்பில் சேமித்த கனமே அந்த குறுந்தகடை உடைத்து எறிந்து விட்டான். ஆனால் அந்தப் படம் பார்த்த தினத்தில் வினோத் அதில் நடித்த அம்மாவை நினைத்துதானே சுயமைதுனம் செய்தான். அவனது முகத்தில் அதைச் செய்யும்போது எத்தனை பரவசம?... உண்மையில் அவனது பரவசத்தைப் பார்த்தபின் தான் தானும் அந்தப் படத்தைப் பார்த்து சுயமைதுனம் செய்து கொள்ள வேண்டுமென நினைத்தான். தனது லேட் டாப்பை வேறு யாரும் தொடமுடியாதபடி கடவுச் சொல் குடுத்து மாற்றி வைத்திருந்தவன் வகுப்புக்கும் அதனை எடுத்துச் செல்வதில்லை.


வினோத்தும் இன்னும் சிலரும் இப்பொழுதும் நைட் ஷோவிற்குப் போகிறார்கள். ஜன்னல்கள் இறுக்கமாய் அடைக்கப்பட்ட மகளிர் விடுதியின் ஏதாவதொரு ஓட்டையில் தெரியும் பெண்களின் உடல்களை ரசித்தவர்களாய் அந்தச் சுவர்களில் தங்களின் ஆண்மையின் எச்சத்தைத் துப்பி வருகின்றனர். வெளிச்சுவர் முழுக்க போடப்பட்ட எந்த பாதுகாப்பும் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கவில்லை. ஸர்ப்பங்கள் புரண்ட புதிய கதைகளும் அரிதாக திருடப்பட்ட மாணவிகளின் உள்ளாடைகள் பற்றியும் வகுப்பில் சத்தமேயில்லாமல் பேசிச் சிரிக்கும் பொழுதெல்லாம் ஒரு ஓரமாய் விருப்பமின்றி கவனித்துக் கொண்டிருக்கும் மகேசுக்கு தேர்வுகள் முடியும் நாளை நோக்கின எதிர்பார்ப்புகள் மட்டுமே மனம் முழுக்க ஓடிக் கொண்டிருந்தன.  முன்பு மாணவிகளைக் கவனித்த விதமெல்லாம் மாறிப்போய் அவர்களிடம் எந்த சுவாரஸ்யங்களும் கொள்ளாதவனாய் இருந்தான்.





தேர்வுகள் வந்தன. எல்லோரையும்விட ஆர்வமாய் எழுதியவன் எந்தத் தேர்வுகளின் முடிவுகள் குறித்தும் பெரிய எதிர்பார்ப்போ அக்கறையோ கொண்டிருக்கவில்லை. பரந்து விரிந்து கிடந்த அந்த பள்ளி வளாகமெங்கும் சூன்யமே நிறைந்திருக்கிறதாய் உணர்ந்தான். வீடு சேரும் தினத்திற்காக காத்திருந்தவன் தேர்வுகள் முடிந்து நண்பர்கள் எவரிடமும் விடைபெற்றுக் கொள்ளாமலேயே ஊருக்குக் கிளம்பினான். எட்டு மணிநேரப் பயணம்தான். வீட்டிற்குப் போய்விடலாம். எப்பொழுதும் வெளிச்சம் சூழ்ந்திருக்கும் வீட்டில் தனது காமத்தின் சாகசங்களை எவ்வாறெல்லாம் நிகழ்த்திப் பார்க்கலாமென்கிற கனவுகள் ஓடிக்கொண்டிருந்தன. அம்மா இன்னும் அதே மாதிரிதான் சிரித்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவளோடு படுக்கையில் இருப்பது மட்டும் யாரோ ஒரு ஆணல்ல…. அவள் முனகுகிறாள். தனது அருகில் படுத்துக் கிடக்கும் மகேஷின் விரல்களை எடுத்து சுவைப்பதும் அவனை தன் மீது படரச் செய்து அவன் காதுகளில் முத்தமிடுமிவதுமாய் இருக்கிறவளின் உடலெங்கும் கிளம்பி வரும் அலாதியானதொரு வாசனையைத் தேடித் தேடி மகேஷ் நுகர்ந்து பார்க்கிறான்.

அந்த வாசனையில் நொறுங்கி அவளின் வியர்வையில் மீன்களாய் நீந்தி கரை சேரமுடியாமல் களைத்து ஒதுங்குவதற்கும் பேருந்து ஏதோவொரு நால்வழிச் சாலையின் ஹோட்டலில் தேநீருக்காக நிற்பதற்கும் சரியாய் இருந்தது. அவ்வளவு நேரமும் அடங்காது விறைத்துக் கிடந்த குறியோடு இறங்க சங்கடங் கொண்டவன் சீட்டிலேயே சுருண்டு உட்கார்ந்தான். பாதிக்கும் மேல் பயணிகள் பேருந்திலிருந்து இறங்கியிருக்கவில்லை. கொதித்துக் கொண்டிருக்கும் இவனுடலை வருடிக் கொடுப்பது போல் ஜன்னல் வழி அடித்த குளிர்ந்த காற்றுக்குத் தன்னுடலை முழுமையாய்த் தழுவக் குடுத்தான்.

 

                        வீட்டில் முன்பு எப்பொழுதோ நட்டு வைத்திருந்த அழகுச் செடிகள் வளர்ந்து முன்வாசலை நிறைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டின் வெளிப்புறம் தெரியாத அளவிற்கு வந்துவிட்டிருந்தது. அப்பா இந்த வீட்டைக் கட்டியபொழுது வைத்ததென்பதால் அவரின் நினைவாக அம்மா இன்னும் வைத்திருக்கிறாள். இவன் வளர்ச்சியை விடவும் அதீதமாய் வளர்ந்திருந்த அந்தச் செடியின் வளர்ச்சி அந்த வீதியின் வினோத அடையாளமாய் மாறிப்போனது சமீபமாய். வீட்டில் எல்லாம் நெறிப்படுத்தப்பட்டு சுத்தமானதாய் இருந்தது. தனக்கு அன்னியமாய் இருந்த வீட்டுக்குள் ஒன்றிப்போக முடியாமல் தவித்தான்.  அம்மாவிடம் அவனால் இயல்பாக  எதையும் பேசமுடியவில்லை... அவள் கேட்கிற எல்லாவற்றிற்கும் அமைதியாய்த் தலையைக் கூட தூக்கிப் பார்க்க முடியாதவனாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தவன். மகனிடம் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தை அம்மா வினோதாமாகத்தான் பார்த்தாள்.


“ஏண்டா செல்லாம் ஒரு மாதிரியா இருக்க.. எக்ஸாம்ஸ் சரியா எழுதலையா?..”

“அதெல்லாம் இல்லம்மா… நல்லா எழுதி இருக்கேன்…”

”அப்பறம் என்ன?...”

“இல்லம்மா நான் நல்லாத்தான் இருக்கேன்…”

அவன் கண்கள் அச்சமும் வெட்கமும் கொண்டு தவித்தன.

அம்மா குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். ”முடிஞ்சு போன எதப்பத்தியும் யோசிக்காத.”


அம்மாவின் இயல்பும் அவள் தனது அன்பை மொழியாக்கி அதனை வெளிப்படுத்தியும் வெளிப்படுத்தாமலும் அவனை அரவணைத்துக் கொள்வதிலும் சில சமயங்களில் அவளின் மீதான அன்பும் மரியாதையும் அபரிமிதமானதாய் மாறிவிடுகிறது. ஆனாலும்?... அந்த படம்… தன்னை வதைக்கும் அந்த உடல்?... அது அவள் தானே…. அதை ஏன் பார்த்துத் தொலைத்தோம்?... அவள் நடக்கையில் பின்னிருந்து  பார்க்கிற பொழுதெல்லாம் எல்லா குற்றவுணர்வையும் தாண்டி ஒருவித பரவசம் வருகிறதே?.... 

அம்மா வாசலிலிருக்கும் செடியாகிக் கொண்டிருக்கிறாள். அவளின் அகம் இவனாலேயே கூட கண்டுகொள்ள முடியாதளவிற்கு முழுக்க தனது உணர்வுகள் எல்லாவற்றையும் மறைத்தபடி வளர்ந்து கொண்டிருக்க அவள் அந்த வளர்ச்சியின் வீர்யம் தெரியாதவளாய் தன்னைத் தவிர்த்து வேறு யாரைப்பற்றியும் யோசிக்க முடியாதவளாகிப் போனாள்.


“அம்மா உன் ஆஃபிஸுக்கு என்னயக் கூட்டிட்டுப் போறியா?...”


இரவு சாப்பிடும் போது அவளுக்குப் பின்னாலிருந்து கேட்டான். அவள் முகத்திற்கு நேராக வந்ததிலிலிருந்து கேட்க நினைத்து முடியாமல் போன அந்தக் கேள்வியை கேட்ட நொடி சின்னதொரு ஆசுவாசம் கொண்டான். அம்மா கவனமாய் தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்.


“நாளைக்கு என்னோட ஆஃபிஸ் வாடா கண்ணா…. இன்னொரு தோசை வாங்கிக்கிறியா?...”

தட்டிலிருந்து தலையை உயர்த்த முடியாதவனாய் இதற்கு முன்னால் அவள் வைத்த தோசையையே இன்னும் திண்ண முடியாதவனாய் தலையைக் குனிந்து கொண்டிருந்தான். அம்மா அவனைக் கவனிக்காமலேயே அடுத்த தோசையையும் எடுத்து வைத்தாள்.

”சட்னி வேனுமா ”


அவன் நினைவு எங்கெங்கோ ஓடி சறுக்கிக் கொண்டிருந்த நேரத்தில் கேட்ட இந்த வார்த்தையில் மோதி நினைவு திரும்பியவன் “இல்லம்மா வேணாம்… போதும்….”

அவசரமாய்ச் சாப்பிட்டு எழுந்தான்.


அம்மாவின் அலுவலகம் அழகானதாயிருந்தது. பிரபலமான விளம்பரக் கம்பெனி. நிறைய பேர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். புதுப்படங்களின் போஸ்டர், கம்பெனிகளின் விளம்பர போஸ்டர்ஸ் என பரபரப்பாக இருந்தது அலுவலகம். பணியிடத்தில் அவள் எல்லோருடும் இணக்கமாய் பேசுவதைப் பார்க்கையில் அவர்களோடெல்லாம் அந்த மாதிரி இருந்திருப்பாளோ என சில நொடிகள் அவனுக்கு நினைப்புப் போய் பின்பு மீண்டும் தப்பு தப்பு எனத் திருத்திக் கொண்டான். அம்மாவை எப்படிப் பார்த்தாலும் சுவாரஸ்யம் அவனுக்கு… ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது?... தனித்திருக்கும் பல சமயங்களில் இது தப்பென்று தோன்றும்தான்.  அவளைப் பார்க்கிற நொடியிலேயே அது உடைந்து நொறுங்கி உள்ளே உரமிட்டு வளரும் மூர்க்கமானதொரு உயிர் எழுந்துவிடும். ஒரு நாள் முழுக்க அவளோடு அலுவலகத்தில் இருந்தான்.


எல்லோரும் அவனிடம் ஸ்னேகமாய் இருந்தனர். அந்த ஸ்னேகம் அவன் அம்மாவின் பொருட்டு அவன் மீது காட்டியதாய்ப்பட்டது. வீடு திரும்புகையில் அம்மா அவனுக்குப் பிடிக்குமென கே.எஃப்.சிக்குக் கூட்டிப் போனாள். சிக்கன் லாலி பாப்பும், சிக்கன் பர்கரும் வாங்கினார்கள். மகேஷ் கோல்ட் காஃபி வாங்கினான். சிக்கன் ருசிக்கவில்லை. அம்மாவின் மடியில் அப்படியே சாய்ந்து எல்லாவற்றையும் அழுது கொட்டி விடலாமாவென துடித்தான்.  கே.எஃப்.சி யிலிருந்து வீடு திரும்பும் வழியில் வண்டியில் வருகையில் அம்மாவை இறுக அணைத்தபடி வந்தான். எப்படி அந்த தைர்யம் வந்ததெனத் தெரியவில்லை. ‘என் அம்மாவை நான் கட்டிப் பிடித்துக்கொள்ளாமல் வேறு யார் கட்டிப்பிடிப்பது?...;’ மகேஷின் நெருக்கம் அம்மாவுக்குப் புதிதாய் இருந்தது. அவன் கைகளிலும், நெருக்கத்திலும் தனது மகனின் அபரிமிதமான பாசத்தை உணர்ந்தாள். பல வருடங்கள் தன்னிடமிருந்து தனித்துக் கிடந்தவனின் ஏக்கம். ஒரு குழந்தையாய் அவனைக் கொஞ்சிய தினத்திற்கு அப்பால் இப்படியானதொரு இறுக்கமான அணைப்பிற்கு இத்தனை வருடங்கள்…. ஆனாலும் இது என்ன அவனின் அன்பு இவ்வளவு வசீகரமானதாய் இருக்கிறது. இத்தனை வருட விடுமுறைகளில் இல்லாது இப்பொழுது இவ்வளவு நெருக்கமாய் அன்பாய்… ஆம் என் மகன் வளர்ந்துவிட்டான்… அம்மாவுக்கு பெருமையாய் இருந்தது. நீண்ட நாளைக்குப் பிறகு தன்னை ரொம்பவும் பாதுகாப்பாய் உணர்ந்தாள். இரவு உறக்கத்திற்கு முன் கடவுளைப் பிரார்த்திக்கயில் அந்த தினத்திற்காக நன்றி கூறினாள்.

 

அவனுக்கு போஃன் வந்திருக்கிறதென அம்மாதான் கூப்பிட்டாள். வேகமாய் ஓடிப்போய் எடுத்தான். வினோத் தான்…. அவனிடம் இந்தக் காலை நேரத்தில் பேச கொஞ்சமும் விருப்பமில்லை. “டே மாப்ள… ஒரு சின்ன வேலயா சென்னைக்கு வந்தேன்…”

இவன் அவன் வருகையில் பெரிய ஆர்வமெதுவும் கொண்டிருக்கவில்லை, இணைப்பைத் துண்டித்துவிடும் நொடிக்காகத்தான் காத்திருந்தான். ஆனாலும் நாகரீகம் கருதி சில வார்த்தைகள் பேசினான்.


“எப்போடா வந்த?...”

“ரெண்டு நாளாச்சுடா… இப்போ உன் வீடு இருக்க ஏரியால தான் இருக்கேன்… கரெக்டா தெரு பேரச் சொல்லு…”

ஒரு கனம் தெருவின் பெயரைச் சொல்லப் போனான். அம்மா கிச்சனிலிருந்து

“ஃபிரண்ட்ஸ் யாரும் வர்றாங்களா மகேஷ்?...”

நினைவின் பொறி எங்கயோ மோதி மிக மோசமான ஒன்றை நினைவு படுத்த அவசரமாய் வினோத்திடம்

“டே… நானும் அம்மாவும் வெளில போறோம்… ஸோ… நாம இன்னொரு நாள் பாக்கலாம்டா…”

சமாளிக்கப் போனவனை


“ஏண்டா மகேஷ்… உன் ப்ரண்ட்ஸ் யாரும் இதுவரைக்கும் வந்ததில்லயே இவனாவது வரட்டும்டா வரச்சொல்லு….”


மகேஷ் எதுவும் பேசாமல் போஃனில் கையை வைத்து மறைத்தபடி இருந்தான். அம்மா வேகமாய் வந்து அவனிடமிருந்து போஃனை வாங்கி


“தம்பி … நம்பர் 16 குமனன் தெரு… எம்.ஜி.ஆர்.நகர்…. கரெக்டா வீட்டுக்கு ஆப்போசிட்ல ஒரு அயர்ன் வண்டி நிக்கும்.. அங்க வந்து கேட்டாச் சொல்லிடுவாங்க….”

ஓகே…ஆண்ட்டி…”


போஃனை வைத்துவிட்டு அவன் தலையை தடவிவிட்டாள்.


“அழுக்கு மூட்ட மாதிரி உக்காராம.. உன் ஃப்ரண்ட் வர்றதுக்குள்ள… போ.. போய் குளிச்சிட்டு வா…”


அவன் கைகளை பிடித்து எழுப்பினாள். அவன் உடலின் கனம் முழுக்க அவளின் மீது சாய்ந்து அங்கிருந்து நகர விருப்பமில்லாத அவனை அம்மாவின் கைகள் சற்றேறக்குறைய வம்பாய் இழுத்து அவனது அறைக்குள் விட்டு வர,  ஷவர் எவ்வளவு வேகமாய் நீரை இறைத்தும் அவனது எரிச்சல் அடங்கவில்லை. வினோத் இன்னும் நினைவு வைத்திருந்தால்? ஒருவேளை அந்தச் சிரிப்பு? அல்லது அவன் அந்த தினம் பெரிதாய் இருப்பதாய்ச் சொல்லி சுயமைதுனம் செய்து கொண்ட அம்மாவின் முலை ஏதாவதொன்று அவனுக்கு நினைவு கொள்ளச் செய்யுமானால்? கண்ணீர் அந்த ஷவரின் நீரையும் மீறி கன்னத்தை நனைத்தது. வலது கை தானாகவே இயங்க… சில நிமிடங்களுக்குப் பிறகு உடலின் துயர் கரைந்ததை உணர்ந்தான். உடை மாற்றிக் கொண்டிருக்கும்போதே காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

அம்மாதான் கதவைத் திறந்தாள்.


“ஹலோ ஆண்ட்டி… ஐம் வினோத்… மகேஷ்ஷோட க்ளாஸ் மேட்…”

“ஹாய் வினோத்… கம் இன்…”

வெகு இயல்பாய் இருவருக்குமான உரையாடல்...


மகேஷுக்கு கொஞ்சம் பாரம் குறைந்தது போலிருந்தது. அவன் கண்டு பிடித்திருக்கவில்லை. அவன் பார்த்திருந்த பல நூறுப் படங்களின் பல நூறுப் பெண்களுக்கு மத்தியில் அம்மாவின் நினைவு இல்லாமல் போனதில் ஆச்சர்யமில்லை. ஆசுவாசத்தோடு அறையிலிருந்து வெளியேறினான். அவன் பேசிய எதுவும் இவன் காதில் ஏறவில்லை. எல்லாமே வழக்கமான பேச்சு. ”அன்னா யுனிவர்சிட்டில எப்டியும் சீட் கிடச்சிடும்டா…”

வினோத்தின் ஆர்வமான பேச்சிற்கு கிச்சனிலிருந்தே அம்மா உம் கொட்டிக் கொண்டிருந்தாள்.


“மகேஷ் ஆயில் தீந்து போயிடுச்சுடா…. கட வரையிலும் போய்ட்டு வாடா…”

அவனுக்குப் போக விருப்பமில்லை… யோசித்து அமைதியாய் உட்கார்ந்திருந்தான். அம்மா பணத்தையும் அவனது சைக்கிள் சாவியையும் எடுத்து வந்து

“இந்தாடா… உன் ஃப்ரண்ட் இங்கதான் இருப்பான்… வந்து பேசலாம்.. சீக்க்கிரம் போய்ட்டு வா கண்ணா…’

காசையும் சாவியையும் எடுத்துக் கொண்டு மகேஷ் வெளியேறினான். டீப்பாயிலிருந்த வார இதழ்களை புரட்டிக் கொண்டிருந்த வினோத் 

“ஆண்ட்டி பாத்ரூம் போகனும்…”

“உனக்கு லெஃப்ட்ல இருக்கறது மகேஷோட ரூம் தான் போப்பா…”

மகேஷின் அம்மா எதையோ வதக்கிக் கொண்டிருந்தாள்.


பாத்ரூம் போன வினோத் அந்த ரூம் அவ்வளவு அழகாய் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ஹாஸ்டலில் எடுத்ததை எடுத்த இடத்தில் போடும் மகேஷா இப்படி?... வீடு ஒருத்தனை இவ்வளவு மாற்றுமா?... வரிசையாக அடுக்கப்பட்ட புகைப்படங்கள், புத்தகங்கள்… இவ்வளவு பொம்மைகளா?... ஒரு பையன் என்றால் எல்லா அன்பும் அவனுக்குத்தானே… ஒவ்வொன்றாய் பார்த்தபடி அவனது லாப் டாப்பை எடுத்தான். இணையத்தோடு இணைக்கப்பட்டிருந்ததால் தனது மின்னஞ்சலை பார்க்கலாமென உள் நுழைந்தான். ஸ்க்ரீன் சேவரில் மகேஷ் அம்மாவோடு கே.எஃப்.சியில் ஈயென இழித்தபடி எடுத்துக் கொண்ட போட்டோ… தற்செயலாய் அந்தக் கணிணியிலிருக்கும் சேமிக்கப்பட்ட பைஃல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மீடியா ப்ளேயர் பாதியில் ஸ்டாப் பன்னப்பட்டு மினிமைஸ் செய்யப்பட்டிருப்பதைக் கவனித்தான். என்ன படமாயிருக்குமென்கிற எதார்த்தமானதொரு ஆர்வத்தில் அதனை ஓடவிட்டான். ஒரு பெண் சிரித்தபடி தனது படுக்கயிலிருந்த ஆணின் குறியைப் பிடித்து முத்தமிட்டாள். பின்னாலிருந்து ஒருவன் ஏதோ சொல்ல அதற்கு ஏற்றாற்போல் தன்னுடலை கேமராவிற்கு சரியாக இடம் மாற்றினாள்… இது ?... இந்தப்படம்?... இதை முன்பு பார்த்திருக்கோமே என்கிற பிரக்ஞை சில நொடிகளிலேயே உரைக்க, யார் இந்தப் பெண்?... அவசரமாய் படத்தை நிறுத்தி அந்தக்  கணிணித் திரையைப் பார்த்தான். கள்ளமற்ற மகேஷின் அம்மாவின் புன்னகை அருகிலேயே மகேஷூம்… அவள் தானே இது?... தனது லாப் டேப்பிலேயே சேமித்து வைத்து சதாவும் பார்த்துக் கொண்டிருக்கும் இவன் யார்?... இதனால் தான் இவ்வளவு நாட்களாய் விலகியிருந்தானா?...


“வினோத் காலிஃப்ளவர் சாப்டுவியாப்பா?...”


மகேஷின் அம்மாவினுடைய குரல் அந்த கனத்தில் சகிக்க முடியாததொன்றாய்க் கேட்க அவசரமாய் வினோத் அந்த அறையிலிருந்து வெளியேறினான். தனது கால்களில் சின்னதொரு நடுக்கமிருப்பதாய் உனர்ந்தவன் சிரமப்பட்டு தன்னை இயல்பாக்கிக் கொள்ள முயன்று வேக வேகமாய் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வெளியேறிப்போனான். இவன் இன்னும் பாத்ரூமிலிருந்து வரவில்லையென நினைத்த மகேஷின் அம்மா தற்செயலாய் கிச்சன் ஜன்னல் வழியாய்ப் பார்க்கையில் வினோத் அந்த தெருவின் முனையைக் கடந்து   வேகமாய் நடந்து கொண்டிருந்தான்.


’என்னாச்சு இவனுக்கு?...’ ஏன் இப்ப்பிடி சொல்லாமக்கூட ஓடறான்….? என்ன பசங்களோ?...’


சமைத்தது எல்லாம் வீணாய்ப் போனதேயென கவலை அவளுக்கு.

கடைக்குப்போன மகேஷ் திரும்பி வந்த பொழுது வினோத் இல்லாத வீட்டைக் கவனித்து திடுக்கிட்டான். கிச்சனுக்குள் நுழைந்தவன் தயக்கத்தோடு அம்மாவைப் பார்க்க,


“என்னாடா ஆச்சு அந்தப் பையனுக்கு?...பாத்ரூம் போய்ட்டு வர்றேன்னு போனான்… திடீர்னு பாத்தா சொல்லாமக் கூட கிளம்பிப் போய்ட்டான்.”

மகேஷூக்கு மண்டையில் ஏதோவொன்று அழுத்தமாய் உரைக்க

“எந்த பாத்ரூம்ம்மா யூஸ் பண்ணச் சொன்ன?...”

”உன் ரூம்ல தாண்டா…”

மகேஷ் பதட்டத்தோடு ஓடிப்போய் அறையிலிருக்கும் லாப்டாப்பைக் கவனித்தான். மீடியா ப்ளேயர் அதேபோல் மினிமைஸ் செய்யப்படாமல் இருந்ததில்கிருந்து நடந்ததைப் புரிந்துகொண்டான். விரல் நடுங்கியது. தன்னை வதைக்கும் ஒரு அந்தரங்கம் இன்னொருவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் என்ன நினைப்பான்?.. இவ்வளவு நாட்களும் அதைப் பாதுகாத்து வைத்திருப்பது குறித்த ஆயிரம் கேள்விகளையும் அருவருப்பையும் யாரிடமாவது பகிர்ந்து கொண்டால்?... பிறரின் அருவருப்பையும் அந்தரங்கத்தையும் பார்த்த கண்கள் அமைதியாய் இருப்பதில்லை. ஓராயிரம் காதுகளுக்கு அந்த விசயம் போய்ச்சேர்ந்தாலும் ஒரு முறை பார்த்துவிட்ட பிறரின் அந்தரங்கம் ஒரு போதும் மறப்பதில்லை.


“நீ சாப்பிட வா மகேஷ்….”


அம்மா கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள். வயிற்றிலிருந்து தொண்டைவரை எல்லாவற்றையும் ஏதோவொரு உருண்டை அடைத்துக் கொண்டு விட்டதைப் போலிருந்தது. கிளம்பிப் போகும்போது வினோத் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்றிருக்கிறான்?... படம் பார்த்த தினம் சுயமைதுனம் செய்து கொண்டதைப் போலில்லாமல் இன்று இன்னும் வேறுமாதிரியாய் நினைத்து செய்வானோ?... ஒருவேளை இனி தான் இல்லாத நேரத்தில் அவன் வீட்டிற்கு வர நினைக்கக்கூடுமே?...

“என்னடா கூப்ட்டுட்டே இருக்கேன்… காதுல விழலயா?...’ அம்மா வந்து உலுக்கிய போதுதான் அவ்வளவு நேரமும் எங்கு கிடந்தோமென நினைப்பு வந்தது மகேஷூக்கு. அவசரமாய் மீடியா ப்ளேயரை மினிமைஸ் பண்னினான். இவனைக் கூப்பிட்ட அவசரத்திலும் அவன் பதட்டத்தை உணர்ந்த அம்மா ஏதோவொன்றைத் தன்னிடமிருந்து அவன் மறைக்கிறானெனப் புரிந்து கொண்டாள். சாப்பிட்டு முடிக்கும் வரை மகேஷ் தலையை உயர்த்தவே இல்லை. அம்மா எதையும் கேட்டுக் கொள்ளாமல் சாப்பிட்டு எழுந்து போனாள்.


பகல் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொடுமையானதாய் மாறிப்போனது, மகேஷ் அறையை விட்டு வெளியேறாது கிடந்தான். ஒவ்வொரு முறையும் டெலிபோஃன் மணியடிக்கும்போது அச்சத்தோடு அதனை எதிர்கொண்டான்.  மனம் முழுக்க நிறைந்திருந்த அம்மாவின் உருவம் பிம்பங்களாய் சேர்ந்து கொண்டிருந்தது. அந்த பிம்பங்களின் மீது கொண்டிருந்த காதல் அவனை பித்து கொள்ளச் செய்துவிட்டிருந்தது. அவனுக்கு வேறு எந்த பிம்பங்களின் மீதும் பிடிப்பில்லை, விருப்பமில்லை. வெளியே சென்றிருந்த அம்மா திரும்பி வந்திருந்தாள்.  மகேஷ் அப்படியும் அவனது அறையை விட்டு வெளியே வந்திருக்கவில்லை. ’ஹாய்’ சொன்ன அம்மாவிற்குப் பதிலாய் சிரித்தான். வாய்க் கோணிக் கொண்டு போன மகேஷின் முகம் முடிவுறாத புதிர்களின் முடிச்சுகளாய்க் கிடந்ததை இன்னொரு முறை அம்மா கவனித்தாள். அவனுக்குப் பிடிக்குமென மில்க்‌ஷேக் தயாரித்துக் குடுத்தாள். விருப்பமின்றி வாங்கிக் கொண்டவனின் கையைப் பிடித்துக் கொண்ட அம்மா


“அம்மா கிட்ட எதாவது பேசனுமாடா .”


மகேஷ் மெளனமாய்த் தலையைக் குனிந்திருந்தான். மில்க்‌ஷேக் பார்க்க அருவருப்பூட்டியது, குமட்டல், தலைசுற்றலென ஒரு நோயாளியின் உடல் நிலையில் மனமும். அவன் தலையை தடவிக் கொடுத்த அம்மா “எதப்பத்தியும் யோசிக்காம போய்க் குளி…. ஹீட்டர் போட்ருக்கேன்…” திரும்பி அந்த அறையின் கதவைச் சாத்திவிட்டுப் போன அம்மாவை அந்த அறையை விட்டு வெளியே போகும் வரை மகேஷ் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவளிடம் எல்லாவற்றையும் கேட்டுவிடலாமா?... உன் உடல் என்னை வதைக்கிறதெனச் சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வாள்?..என்னவானாலும் பரவாயில்லை. பேசிவிடலாம். எழுந்து அவளது அறைக்குப் போனான். பாதி திறந்திருந்த கதவை அவசரமாய்த் திறக்கையில் உடை மாற்றிக் கொண்டிருந்த அம்மா ஒரு நொடி பதட்டமாகி, மகேஷ் தான் என்றதும் ‘என்னடா செல்லம்… உள்ள வா?... ஏன் ஒரு மாதிரியாவே இருக்க?..” அவன் முன்னால் உடை மாற்றுவதை தவறானதொரு விசயமாகவே நினைத்திருக்கவில்லை.  பேச வந்த விசயங்கள் அவ்வளவும் மறந்து போனவனாய் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். வேகமாய்த் திரும்பி வெளியேறிப் போனவன் அறையைத் தாண்டும் போது ‘ஸாரிம்மா கவனிக்கல…’ அவன் குரல் பதட்டத்தில் தழுதழுத்தது. பதட்டத்தை மீறி அதில் தெரிந்த குற்றவுணர்ச்சியைப் அம்மா புரிந்து கொண்டாள்.


மகேஷின் அறை அவனது தீர்க்கமுடியாததொரு ரகசியத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிற கனத்திலிருந்தது. உடை மாற்றிவிட்டு அவனைப் பார்க்க அறைக்குள் சென்ற அம்மா  கோர்வையாய் சில விசயங்களை அசை போட்டாள். இந்த முறை அவன் வந்ததிலிருந்து நடந்து கொண்ட விதம், இன்று அவனது ஸ்னேகிதன் வந்து இந்த அறைக்குள் வந்ததும் சொல்லிக் கொள்ளாமல் போனது… ஆக இந்த அறைக்குள்ளாக ஏதொவொன்றை அடைத்து வைத்து அதை வெளியேற்ற முடியாமல் தவிக்கிறான் எனத் தெரிந்தது. அவள் பார்த்து பார்த்துக் கட்டின வீடுதான்… அந்த அறை இப்பொழுதும் ஒரு குழந்தைக்கான தன்மையோடுதான் இருந்தது. ஆனாலும் அந்தக் குழந்தையின் மனநிலை இப்பொழுது உழல்வது எதில்?... மகனின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்ள நினைப்பது அநாகரீகம் என்னும் உணர்விருந்தாலும் அவன் அந்த அந்தரங்கத்தால் வதைபடுகிறானென்பதால் அவனை மீட்டெடுக்க வேண்டியதைத் தனது கடமையாய் நினைத்தாள். ஒவ்வொன்றாய்த் தேடி அவன் லேப்டாப்பிற்கு வர அதிக நேரம் பிடிக்கவில்லை அவளுக்கு. முன்பைப்போல் அவன் இப்பொழுது அதிகமும் வீடியோ கேம்ஸ் விளையாடுவதில்லை,  இணையத்தில்தான் கிடக்கிறான். ஒருவேளை சமூக வலைதளங்களில் பெண்களிடம் பேசுகிறானோ?... எல்லாம் கேள்விகளாய் மட்டுமே இருந்தது. மேலோட்டமாகத் தேடிக் கொண்டிருந்தவள் தற்செயலாய் அவன் படம் பார்க்கும் மீடியா ப்ளேயர் ஹிஸ்டரியில் கடைசியாய்ப் பார்த்ததை எடுத்துப் போட்டாள். அந்தப்படம் ஓடத் துவங்கியது. பழைய நீலப்படம். கேமரா ஒரு பெண்ணின் பின்புறங்களையும் அதைத் தடவும் ஒரு ஆணின் கையையும் காட்டியது. அதனைத் தொடர்ந்து அவள் படுக்கையில் விழ அவள் முகத்திற்கு நேராக அவன் தனது ஆணுறுப்பை நீட்டிக் கொண்டிருந்தான். இப்பொழுது கேமரா அந்தப் பெண்ணின் முகத்திற்கு நெருங்கிய பொழுதுதான் அது தான் தானென்பதைப் பார்த்து அதிர்ந்தாள். இதுதான் அவன் மறைக்க நினைக்கும் அந்தரங்கமா?... சிஸ்டத்திலிருந்து எழுந்த அம்மா தனது அறையில் போய் கதைவை அடைத்துக் கொண்டாள். ஆம் அது அவள் தான். ஆனால் பணிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடித்த அல்லது படுத்த அந்தக் காட்சிகள் எப்படி இத்தனை ஆண்டுகள் தாண்டி தன் மகனின் கைகளுக்குக் கிடைத்தது. இந்த ஒரு படம் மட்டும்தானா? அல்லது தான் நடித்த எட்டு நீலப்படங்களும் அவனிடம் இருக்கிறதா?... இன்னும் எதையெல்லாம் தனக்குள் மறைத்துக்கொண்டு அவதிப்படுகிறான் அவன்?...


கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. தன் குழந்தையின் மனதையும் உடலையும் வதைக்க தானே காரணமாகியிருப்பதை நினைத்து துடித்தாள். அவன் முகத்தை எதிர்கொள்ளப் போகும் நொடிகளை நினைக்கையில் ஒவ்வொரு முறையும் இனி தான் நிர்வாணமாகத்தானே உணர முடியும்… முதல் முறையாய் அந்த வீடு கசந்தது. வீட்டை மறைத்து வளர்ந்த செடியாய் தன் மகனின் மனம் முழுக்க மறைத்து அழிக்கும்படி தனது நிர்வாணம் படர்ந்திருக்கிறது. இந்த உடலை என்ன செய்ய?...


இருவரும் தங்களின் அறைகளிலிருந்து வெளியே வரவில்லை. பேசிக்கொள்ளவும் இல்லை.  உடலில் பொங்கி வழிந்த பித்தம் இன்னுமொரு கசப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து குமட்டலெடுத்தது. அடிவயிறு கலங்க அவ்வளவையும் வாந்தியெடுத்தான், இதோடு சேர்ந்து அந்த நினைவுகளும் போய்விடக்கூடாதா?... அவன் வாந்தியெடுக்கும் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடிவந்த அம்மா அவன் தலையைப் பிடித்துக் கொண்டாள். கண்கள் சிவந்து போய் வாந்தியெடுத்துக் கிடந்தவனின் வாயைத் துடைத்துவிட்டு வாய்க் கொப்பளிக்க தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். களைத்துப்போய் படுத்தவனின் சட்டையைத் தளர்த்திவிட்டு அவனது நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள். கண்கள் சோர்ந்து போய் மூடிக் கொண்டிருந்தவன் அம்மாவின் கையிலிருந்த அன்பை பால்யத்திற்குப்பின் அழுத்தமாய் உணர்ந்தான். கண்கள் சூடாகி கண்ணீர் கசிந்தது. கண்ணீரைத் துடைத்துவிட்ட அம்மா அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் புரண்டு அம்மாவின் மடியில் படுத்தான். 

 

“எவ்ளோ நாளாடா?...”


நேரடியாய் அவள் கேட்டதில் பதிலற்றவனாய் அவள் இருக்கும் பக்கம் திரும்ப முடியாமல் அப்படியே எழுந்து ஓடிவிட நினைத்தான். எழுந்து போகப் போனவனின் கைகளைப் பிடித்து உட்காரவைத்தாள்.


“அம்மா அந்த மாதிரி  நடிச்சிருக்கேன்…ப்ச்.. இல்ல… படுத்திருக்கேன்….உண்மதான்…. உன்னக் காப்பாத்தனும் குடும்பக் கஸ்டம்னு எல்லாம் அந்த மாதிரி செய்யல… என் திமிர்… முட்டாள்த்தனம்… சினிமாவுல நடிக்கனும்னு ஆச.. அதுக்காக நிறையப்பேர நம்பினேன்.. பல பேர் பணத்த வாங்கிட்டு ஏமாத்தினாங்க…. சில பேர் இந்த மாதிரி இருந்தாத்தான் வாய்ப்பு கிடைக்கும்னு சொல்லி ஏமாத்தினாங்க…”

இதற்கு என்ன பதில் சொல்வது,

“ஆம், அவள் சினிமாவில் நடிக்கலாம்தான்… அவளுக்கு என்ன குறை?...

மகேஷ் அவள் இன்னும் ஏதாவது பேசட்டுமெனக் காத்திருந்தான். குனிந்து கிடந்த முகத்தில் அவனின் கண்களைத் தேடினாள். 


”இந்த விசயம் தெரிஞ்சதாலதான் அப்பா சூசைட் பண்ணிக்கிட்டாரு…”


அம்மாவின் குரல் தயக்கத்தோடு வர,

மகேஷ் இப்பொழுது அதிர்ச்சியுடனும் கண்ணீருடனும் தலையை உயர்த்திப் பார்த்தான்.

உடல் முழுக்க வெப்பம் புழுக்களாகி ஊர்ந்து அருவருப்பூட்டி கடிக்கத் துவங்க அந்த எச்சிலின் கசப்பை அருவருப்பை சகிக்க முடியாதவனாய் அந்த அறையிலிருந்து அம்மாவிடமிருந்து எழுந்து ஓடினான். தனது அறையின் கதவுகளை அடைத்துக் கொண்டு நீண்ட நேரம் அழுதவனுக்கு அம்மா அங்கே நொறுங்கிப் போனாள் என்பது தெரிந்திருக்கவில்லை.


இவனுக்கு என்ன தான் வேண்டியிருக்கிறது?... இந்த உடல் ஒன்றுமில்லை… இதைக் கடந்து போவென சொல்லவும் முடியாமல் இந்த உடலோடு சேர்த்துக் கொள்ளவும் முடியாமல் என்ன அவஸ்தை இது?...  அம்மாவை விட வேறு என்ன வைத்யம் இருந்துவிட முடியும். குழந்தைகளை அம்மாவை விட யாரும் புரிந்து கொள்ள முடியுமா என்ன?... அவன் அவளின் பிம்பத்தை மோகித்தான்.  உடலும் மனமும் சிதற கண்கள் கலங்கிப் போனது.  அவ்வளவு நேரமும் மெளனமாய் வழிந்த கண்ணீர் கதறலாய் வெளிப்பட தன் மீதான ஆத்திரத்தில் எதிரிலிருந்த லேப்டாப்பை எட்டி உதைத்தான். லேப்டாப்போடு சேர்ந்து  அதிலிருந்த பிம்பங்கள் அவ்வளவும் சிதறிப்போய் தூள் தூளானாது… அம்மாவின் பிம்பத்தைப் போலவே மகேஷூம் பிம்பமானான். பேரார்வமும் பெருங்காமமும் நிறைந்த பிம்பம். தாயின் பேரன்பில் தன்னை தனது உடலைக் கண்டுகொண்டு பிம்பத்திலிருந்து விடுவித்துக் கொண்டு மீண்டும் மனிதனானான்.

அந்த அறைக்குள்ளிருந்து வந்த சத்தம் கேட்டு பதறிப்போன அம்மா ஓடிவந்து பார்த்த போது அருவருப்பான பிம்பங்கள் அவ்வளவும் நொறுங்கிப் போயிருந்தன. அம்மாவுக்காக கசிந்த மகேஷின் கண்ணீரில் வருத்தமும் வேதனையும் கரைந்து போயிருந்தது.   அவனருகிலிருந்த அம்மா இப்போ புனித மேரியின் தூய்மையோடிருந்தாள். அவள் புன்னகை இத்தனை வருடங்களில் இல்லாத உயிர்ப்புடனிருந்தது. மார்போடு அணைத்துக் கொண்ட அவளின் மடியில் நீண்ட நாட்களுக்குப்பின் நிம்மதியாய் உறங்கினான்  மகேஷ்….

 

 ( 2012 ம் வருடம் சிற்றேடு இதழில் வெளியான சிறுகதை.)

 

 

 

 

 

 

 

 

378 views

Comments


bottom of page